உள்ளடக்கத்துக்குச் செல்

நித்திலவல்லி/முதல் பாகம்/34. மணக்கும் கைகள்

விக்கிமூலம் இலிருந்து

34. மணக்கும் கைகள்

மாளிகையில் எல்லாரும் உறங்கிவிட்ட நிலையில் தனியாக இரத்தினமாலையோடு மேல் மாடத்திற்குச் சென்றான் அவன். தன்னை மேல் மாடத்திற் கொண்டு போய் விட்டுவிட்டு, அவள் உடனே திரும்பி விடுவாள் என்று நினைத்தான் இளையநம்பி. அவளோ மேல் மாடத்தில் இருந்த பள்ளியறையை ஒட்டி அமைந்த நிலா முற்றத்தில் நின்று அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள். “தென்றல் பொதிகை மலையில் பிறக்கிறது. ஆனால் மதுரைக்கு வரும் போது அது இன்னும் அதிகச் சிறப்படைகிறது. அதிகப் புகழ் பெற்று விடுகிறது.”

“அதாவது மதுரைத் தென்றல், தமிழ்த் தென்றலாக வீசுகிறது என்றுதானே சொல்கிறாய்? ஆம். ஒரு தென்றல் இன்னொரு தென்றலுடன் இங்கே கூடுகிறது. மொழிகளிலே தென்றலாகிய தமிழ் காற்றின் இளவரசியாகிய மந்தமாருதத்தைச் சந்திக்கும் இடம் இந்த நான்மாடக்கூடல் நகரம்தான்.”

“நீ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் இரத்தினமாலை! ஆனால் ஒரு சிறு பாடபேதம். இந்த இடத்தில் இப்போது இரண்டு தென்றல்கள் இருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால் மூன்று தென்றல்கள் இங்கு சூழ்ந்து கொண்டு குளிர்விப்பதை இப்போது நான் காண்கிறேன்.”

“அது எப்படி?”

“பொதியமலைத் தென்றலாகிய மந்தமாருதம்! மதுரைத் தென்றலாகிய தமிழ் அழகுத் தென்றலாகிய நீ!”

இதைக் கேட்டு அவள் தலை குனிந்தாள். அவளது வலது கால் கட்டை விரல் தரையில் மனத்தின் உணர்வுகளைக் கோலமிட்டுப் பார்க்க முயன்றது. ‘நீ வென்று கொண்டிருக்கிறாய், வென்று கொண்டிருக்கிறாய்’ என்று அவளுடைய மனம் அவளை நோக்கி உள்ளேயே குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘உன் வெற்றியை உன் முன் தோற்றுப் போய்க் கொண்டிருப்பவனுக்கே புரிய விடாமல் அவனே வென்றிருப்பது போல் உணரச் செய்!'- என்றும் அவள் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்ச்சிகளால் மிகவும் நெகிழ்ந்து, மலர்ந்து, தளர்ந்து பலவீனமான அனிச்சம் பூப் போல் ஆகியிருந்தாள். தன்னால் அழகுத் தென்றல் என்று புகழப்பட்ட அந்த மந்த மாருதம் தன்னுடைய தோள்களையும் மார்பையும் தழுவி வீசிக் குளிர்விப்பதை இளையநம்பி உணர்ந்தான். இனிமையாக யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பட்டாற் போன்ற அவளுடைய மெல்லிய நீண்ட பொன் விரல்களைத் தன் விரல்களோடு இணைத்துக் கொண்டான் அவன். இணைப்பிற்கும் அணைப்பிற்கும் ஆளான கைகளை விட்டுவிடாமல்,

“இந்தக் கைகளில் சந்தனம் மணக்கிறது பெண்ணே!'-- என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே கூறினான் அவன். பொன்னாற் செய்த பேரியாழ் போன்ற அவள் உடல் இப்போது இளையநம்பியின் அரவணைப்பில் இருந்தது. அவள் இனிய குரலில் அவன் கேட்க உழற்றினாள்:-

“இந்தப் பரந்த மார்பிலும், தோள்களிலும் என் கைகளினால் அள்ளி அள்ளிச் சந்தனம் பூச வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது அன்பரே!”

“சந்தனத்திற்கு வேறெங்கும் போக வேண்டாம் இரத்தின மாலை! உன் கைகளே சந்தனத்தால் ஆகியவைதான். உன் கைகள் மணக்கின்றன. மணக்க வேண்டிய கைகள், இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது.”

“எங்கே, அந்த வார்த்தைகளை என் செவி குளிர இன்னொரு முறை சொல்லுங்களேன்.”

“மணக்க வேண்டிய கைகள், இப்படித்தான் மணக்கும் போலிருக்கிறது!...” ஓரக் கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன். ‘உனக்குத் தோற்றுவிட்டேன்'- என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பு. அவன் அவளைக் கேட்கலானான்:-

“இந்த மாளிகையில் நுழைந்த முதற் கணத்திலிருந்து நீ என்னை அதிகமாகச் சோதனை செய்திருக்கிறாய் பெண்ணே! நான் உன் மேல் காரணமே புரியாத வெறுப்போடு இங்கே வந்தேன். காரணம் புரியா வெறுப்பு, எல்லையற்ற அன்பாக முடிவதும், காரணம் புரியாத அன்பு, எல்லையற்ற வெறுப்பாக முடிவதும், ஏனென்றே விளங்காத உலகம் இது! உன்னைப் போல் பெண்களின் விழிகளைக் கவிகள் வேல் நுனிக்கு உவமை சொல்லுவார்கள். இத்தனை ஆண்டுகளாக நான் கட்டிக் காத்த உறுதியையும், ஆணவத்தையும், ஆசாரங்களையும் உன் கண்களாகிய வேல்கள் இன்று கொலை செய்துவிட்டன.”

“நீங்கள் மட்டும் நிரம்ப நல்லவர்போல் பேசி முடித்து விடவேண்டாம்! இங்கு வந்ததிலிருந்து என்னைக் கொல்வது போன்று நீங்கள் எத்துணை வார்த்தைகளைக் குத்திக் காட்டிப் பேசியிருக்கிறீர்கள்.-”

“உன் பங்குக்கு நீயும் என்னிடம் அப்படிப் பேசியிருக்கும் சமயங்களை மறந்துவிடாதே பெண்ணே!”

“இருவருமே மறக்க வேண்டியவற்றை மறந்துவிட்டவற்றை நீங்கள்தான் இப்போது மீண்டும் எடுத்துக்காட்டி நினைவூட்டுகிறீர்கள்.”

“போகட்டும்! எல்லாவற்றையும் மறந்துவிடலாம். இப்போது, இந்த நிலையில் அழகன் பெருமாளோ, தேனூர் மாந்திரீகனோ, குறளனோ நம்மைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் இரத்தினமாலை?”

“எதுவும் வேறுபாடாக நினைக்கமாட்டார்கள். மனமார வாழ்த்துவார்கள். வந்த நாளிலிருந்து குறளன் அறைத்துக் குவிக்கும் சந்தனத்துக்கு இன்று பயன் கிடைக்கிறதே என்று அவன் மகிழ்ச்சி அடையக்கூடும். வந்த நாளிலிருந்து நீங்கள் காரணமின்றி என்னை வெறுப்பதை மன வருத்தத்தோடு கண்ட அழகன்பெருமாள் உங்கள் மன மாற்றத்தை விழாக் கண்டதுபோல வரவேற்கலாம்!”

“பொய்! அவ்வளவும் பொய்.. வேண்டும் என்றே அழகன்பெருமாளைத் தேனூர் மாந்திரீகனுக்கருகே உறங்கச் செய்து நான் மேல் மாடத்தைத் தேடி உன்னோடு வரச் சதி செய்திருக்கிறாய் நீ! உண்மையா, இல்லையா?”

“காதல் சம்பந்தமான சதிகள் செய்யப்படுவதில்லை. அவை பெரும்பாலும் நேர்கின்றன.”

“செய்து திட்டமிடும் சதிக்கும், நேரும் சதிக்கும் வேறுபாடு என்ன இரத்தினமாலை?”

“திட்டமிட்டசதி இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னை வெறுக்க முயன்றது. நேரும் சதி முடிவில் நான் உங்கள் அன்பை அடைந்தது.”

“என் கட்டுப்பாட்டை நீ சதி என்று வருணிக்கிறாய்! அது தவறு.”

“தேரை வடத்தால் கட்டவேண்டும்! பூக்களை நாரால் கட்டவேண்டும் அதுதான் முறையான கட்டுப்பாடு. நீங்களோ தேர்களை நாராலும், பூக்களை வடத்தாலும் கட்டுகிற வராயிருக்கிறீர்கள்! ‘நார் என்ற பதத்திற்குத் தமிழில் நுண்ணிய அன்பு’ என்று ஓர் அர்த்தமிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.”

“நார் எதற்கு? இந்தப் பூவைக் கைகளாலேயே கட்டலாமே!"- என்று கூறியபடியே மீண்டும் இரத்தின மாலையின் பொன்னுடலைத் தழுவினான் அவன்.

“இந்தக் கட்டுப்பாட்டில் நான் மலராகிறேன். மணக்கிறேன். மாலையாகிறேன்.”

“போதும்! உன் உடல் அழகிலேயே நான் மயங்கித் தவிக்கிறேன். சொற்களின் அழகையும் தொடுத்து என்னைக் கொல்லாதே இரத்தினமாலை! உன் பார்வையே பேசுகிறது. இதழ்களும் பேசினால் இரண்டில் நான் எதைக் கேட்பது?” என்றான் அவன்.

அவள் அவன் நெஞ்சில் மாலையாய் குழைந்து சரிந்தாள். “இப்போது இது சிறையா, பாதுகாப்பா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்...” என்று அவனை வம்புக்கிழுத்தாள். புது நிலவும் பொதிகைத் தென்றலும் மதுரைத் தென்றலும் அழகுத் தென்றலும் வீணாகாத அந்த மேன்மாடத்து நல்லிரவுக்குப் பின்விடிந்த வைகறையில் ஒரு புதிய செய்தியோடு புதிதாக அங்கு வந்து சேர்ந்திருந்தவனோடும் இளையநம்பியை எதிர்க்கொண்டான் அழகன்பெருமான்.