நித்திலவல்லி/முதல் பாகம்/33. அடிமையும் கொத்தடிமையும்
தாகத்தோடு பருகுவதற்குக் கையில் எடுத்த நீரைப் பருக முடியாமல் மறித்துப் பறித்தது போல் அரிய செய்திகள் அடங்கிய ஓலையைப் படிப்பதற்குள் விளக்கு அவிந்ததன் காரணமாக அவர்களது ஆவலும் பரபரப்பும் அதிகரித்திருந்தன. பணிப்பெண் அவிந்த கைவிளக்கை உள்ளே எடுத்துச் சென்று ஏற்றி வந்தாள். விளக்கு மீண்டும் அவிந்து விடலாகாதே என்ற கவலையில் அனைவரையும் விலகி நிற்குமாறு வேண்டிய பின் ஓலையில் எழுதப்பட்டிருந்த இரண்டாவது வாக்கியத்தைப் படிக்கலானான் இளையநம்பி:-
‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் சிறை மீட்க எல்லா வகையிலும் முயலுக!’
இந்த இரண்டாவது வாக்கியத்தின் பொருளை இதிலுள்ள சொற்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது என்னும் சூழ்நிலை புரியவில்லை.
மூன்றாவது வாக்கியத்தோடு அந்த ஓலையில் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் முடிந்து விட்டன. மூன்றாவது வாக்கியம்: ‘திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று தன்னைப் பற்றியே இருந்ததனால் அதை அவன் வாய்விட்டுப் படிக்கவில்லை. அப்படியே ஓலையை அழகன் பெருமாளிடம் கொடுத்து விட்டான். அவன் வாக்கியங்கள் மூன்றும் முடிந்த பின் செய்திகளை நம்புவதற்கு ஒரு நல்லடையாளமாகக் கயல் என்றும் அதில் கீழே எழுதியிருந்ததை அவன் காணத் தவறவில்லை. அந்த ஓலையை அழகன் பெருமாள் படித்த பின்பு இரத்தினமாலையிடம் கொடுத்தான். இரத்தினமாலையும் படித்த பின்பு மீண்டும் அது இளைய நம்பியின் கைகளுக்கே வந்து சேர்ந்தது. திருத்துழாய் நறுமணம் கமழும் அந்த ஓலையை இரண்டாவது முறையாகவும் படித்தான் அவன். கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட பின் பல நாட்களாக அந்தக் கணிகை மாளிகையிலேயே இருந்து விட்டதினால், ஓலையில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலைகளை உணரவும் அநுமானம் செய்யவும் முடியாமல் இருந்தது.
‘பெரியவர் மதுராபதி வித்தகர் ஏன் இப்போது மோகூரில் இல்லை? அவர் எங்கே இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் நாங்கள் ஏன் ஈடுபடலாகாது?’
‘தென்னவன் மாறனையும் திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனையும் யார் எப்போது எதற்காகச் சிறைப் பிடித்தார்கள்?’
ஒன்றும் விளங்காமல் மனம் குழம்பினான் இளைய நம்பி. அப்போது இரத்தினமாலை சிரித்த முகத்தோடு அவனைக் கேட்டாள்:-
“பார்த்தீர்களா? திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்த ஓலையும் எங்களுக்கு நினைவூட்டுகிறது. அன்றொரு நாள் கோபித்துக் கொண்டு புறப்பட்டது போல் இனி நீங்கள் இங்கிருந்து எங்கள் பாதுகாப்பை மீறி எங்கும் புறப்பட முடியாது!”
“என்னைப் பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கறை பற்றி மகிழ்ச்சி. ஒருவரைப் பாதுகாப்பதற்கும், சிறை வைப்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும். சில சமயங்களில், நீயும் அழகன் பெருமாளும் செய்கிற காரியங்கள் மூலம் நான் பாதுகாக்கப் படுகிறேனா, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகிறது.”
“பாதுகாப்பதும் கூட ஒரு வகைச் சிறைதான்! பாதுகாக்கிறவர், பாதுகாக்கப்படுகிறவர், இருவரில் யாருடைய அன்பு அதிகம், யாருடைய உரிமை அதிகம், என்பதைப் பொறுத்தே சிறையா இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இங்கே நாங்கள் உங்கள் மேல் உயிரையே வைத்து அன்பு செலுத்துகிறோம். நீங்கள் பதிலுக்கு எந்த அளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பதை எதிர்பாராமலும் கணக்கிடாமலுமே உங்கள் விருப்பம் போல் பழக உரிமைகள் அளித்திருக்கிறோம். இப்போது சொல்லுங்கள் இது சிறையா அன்புப் பாதுகாப்பா?”
“அன்பு என்பது நிறுவைக்கும், அளவைக்கும் அப்பாற்பட்டது இரத்தினமாலை! இப்போது அதை நிறுக்கவும் அளக்கவும் நீ விரும்புவதாகத் தெரிகிறது...”
“அல்லவே அல்ல, செய்வதையும் செய்து விட்டுக் குற்றத்தை என் தலையில் சுமத்தாதீர்கள்! நான் பாதுகாக்கப் படுகிறேனோ, சிறை வைக்கப்பட்டிருக்கிறேனோ, என்று முதலில் வினாவியதே நீங்கள்தான். நீங்கள் வினாவியதற்கு நான் மறுமொழி கூறினால் என்னையே குறை சொல்கிறீர்களே?”
இரத்தினமாலையின் இந்தப் பேச்சுக்கு இளையநம்பி மறு மொழி எதுவும் கூறவில்லை என்றாலும் குறும்பாகவும் அங்கதமாகவும்[1] தான் கூறிய ஒரு பேச்சு அவள் மனத்தின் உணர்வுகளை இவ்வளவு பாதித்திருக்கும் என்றும் அவன் எதிர்பார்க்கவோ, நினைக்கவோ இல்லை.
சிறிது நேர மெளனத்துக்குப் பின்னர் அவர்கள் உரையாடல், ஓலையில் கண்டிருந்த பிற செய்திகளைப் பற்றித் திரும்பியது. இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கி வினவினான்:-
“இந்த ஓலையின் இரண்டாவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் தென்னவன் மாறனையும், திருமோ கூர்மல்லனையும் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, அழகன் பெருமாள் அவர்கள் எப்படிச் சிறைப்பட்டிருப்பார்கள், எவ்வகையில் மீட்க வேண்டும் என்றெல்லாம் நீ தான் முடிவு செய்ய வேண்டும்...செய்வாய் அல்லவா?”
“நம்மைப் போல் அவர்களும் களப்பிரர் ஆட்சியை எதிர்ப்பவர்கள். பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைக் குத்தலை வணங்குகிறவர்கள். தென்னவன் மாறன் சிறு மலைக்காட்டில் இருப்பவன். மல்லன் திரு மோகூர்ப் பெரிய காராளரின் அறக்கோட்டத்தில் இருப்பவன். எல்லோரும் நம்மவர்கள். பாண்டிய மரபு சிறப்படையப் பாடுபடுகிறவர்கள். அவர்களைச் சிறை மீட்பது பற்றிய காரியங்களை நானே செய்கிறேன். உங்கள் ஒத்துழைப்பும், உறுதுணையும் எனக்கு இருந்தால் போதும் ஐயா!” என்றான் அழகன் பெருமாள். அவ்வளவில் இரத்தினமாலை அவர்களை உண்பதற்கு அழைத்தாள். இரவு நெடுநேரமாகி யிருந்ததனால் உண்ணும் வேளை தவறியிருந்தது. நிலவறைக் காவலுக்காகச் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்த குறளனுக்கும் இரத்தக் காயங்களுடன் கட்டிலில் கிடந்த தேனூர் மாந்திரீகனுக்கும் பணிப் பெண்கள் அங்கேயே உண்கலங்களில் உணவு எடுத்துச் சென்று படைத்தனர்.
இளையநம்பியையும், அழகன் பெருமாளையும் அமரச்செய்து இரத்தினமாலையே பரிமாறினாள். இளையநம்பி போதும் போதும் என்று கைகளை மறித்த பின்னும் நெய் அதிரசங்களை அவன் இலையில் படைத்தாள் இரத்தின மாலை.
“இரத்தினமாலை! இதென்ன காரியம் செய்கிறாய்? அதிரசங்களை நான் உண்ண வேண்டுமா? அல்லது அதிரசங்கள் என்னை உண்ண வேண்டுமா? வீரர்கள் உண்பவர்கள் மட்டும்தான்; உண்ணப்படுபவர்கள் இல்லை! வீரர்கள் வாழ்வதற்காக உண்ணுகிறார்கள். மற்றவர்களோ உண்பதற்காகவா வாழ்கிறார்கள். இந்த உலகில் உணவை உண்ணுகிறவர்களும் உண்டு; உணவால் உண்ணப்படுகிறவர்களும் உண்டு. இப்படிக் கலத்தில் மிகையாகப் படைப்பதன் மூலம் நீ என்னைப் பாராட்டுகிறாயா, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறாயா என்பது புரியவில்லை.” “வீரர்கள், முனிவர்களைப் போல் உண்ணக் கூடாது. முனிவர்களைப் போல் பழகக் கூடாது.” அவள் இந்தச் சொற்களின் மூலம் குறிப்பாகத் தனக்கு எதையோ புலப்படுத்த முயல்வது போல் இளையநம்பிக்குத் தோன்றியது. இந்தச் சொற்களைச் சொல்லி முடிந்த உடனே அவள் முகத்தையும் கண்களையும் பார்க்க முயன்றான் அவன். அவளோ சொற்களால் கூறியதை முகத்தினாலும், கண்களாலும் அவனிடமிருந்து மறைக்க முயலுகிறவள் போல் வேறு புறம் பார்த்துக் கொண்டு நின்றாள். அழகன் பெருமாள் இந்த நாடகத்தைக் கண்டும் காணதவன் போல் உண்பதில் கவனமாயிருந்தான். உள்ளுற அவனுக்கு ஒரு வகை மகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ‘பெண்களின் கைகளை அழகு பார்த்துச் சொல்லும் காரியத்துக்காக நான் இங்கே வரவில்லை’ என்று இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாளில், முதல் சந்திப்பின்போது எந்த இளைஞன் சினங் கொண்டு பேசியிருந்தானோ, அதே இளைஞன் இந்த வளைக்கரங்கள் ‘கிணின் கிணின்’ என்று ஒலிக்கத் தன் இலையில் பரிமாறும் அழகை இரசிப்பதை, இன்று இந்தக் கணத்தில் அழகன் பெருமாள் தன் கண்களாலேயே காண முடிந்தது. இந்த மாறுதல் தனக்கும் இரத்தினமாலைக்கும் மிகப் பெரிய வெற்றி என்பது அழகன் பெருமாளுக்குப் புரிந்திருந்தாலும் அந்த வெற்றிப் பெருமிதத்தை வெளிப்படையாக்கிவிட விரும்பவில்லை அவன்.
உலகில் வென்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. தோற்றவன் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றிகளும் உண்டு. இது வென்றவர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய வெற்றி வகையைச் சேர்ந்தது. தான் தோற்றுப் போயிருக்கிறோம் என்று தோற்றவனைப் புரிந்து கொள்ள விடாமல் வென்றவர்கள் கொண்டாடும் வெற்றியில் தோற்றிருப்பவனும் கூடக் கலந்து கொள்ள முடியும், அப்படியின்றி நீ தோற்றதால் ஏற்பட்ட வெற்றிதான். இது!” என்று தோற்றவனுக்கும் அவன் தோல்வியைப் புரிய விடுவதால் அவன் மற்றொரு போருக்குக் கிளர்ந்தெழும் நிலைமை உருவாகி விடும் அபாயமும் ஏற்படலாம். அழகன் பெருமாளைவிட இரத்தினமாலை இந்த அபாயத்தை மிக நன்றாக உணர்ந்திருந்தாள். பெண் தன்னை வென்றவனுக்கு அடிமையாகிறாள் என்றால், அறிந்தோ அறியாமலோதனக்குத் தோற்றவனுக்குக் கொத்தடிமையாகவே ஆகிறாள். ஆனால் தோற்றிருப்பவனுக்கு அவன் தோற்றிருக்கிறான் என்பது தோன்றவே விடாமல் பார்த்துக்கொள்ள அவள் எவ்வளவிற்குத் தேர்ந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்தே இந்த வெற்றியின் முடிவான பயன்களை அவள் அடைய முடியும். அவன் அந்த மாளிகைக்குள் வந்த முதல் நாளன்று அவனுடைய திரண்ட தோள்களையும், பரந்த மார்பையும் கண்டு மனம் தோற்ற கணத்தில், அவள் அவனுக்கு அடிமை யாவதற்கு மட்டுமே ஆசைப்பட்டாள். இன்றோ அவனுக்குக் கொத்தடிமையாவதற்கே ஆசைப்பட்டாள். மெல்லியபட்டு நூலிழை போன்ற இந்த வெற்றிப் பிணைப்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் அழகன் பெருமாளைவிட விழிப்பாயிருந்தாள் இரத்தினமாலை. ஒருமுறை ஏற்கெனவே இந்த விழிப்பு உணர்ச்சி இல்லாத காரணத்தால் தவறு செய்திருந்தாள் அவள். எனவே மறுமுறையும் அப்படித் தவறு நேர்ந்துவிடக்கூடாது என்பதில் அவள் மிகமிகக் கவனமாயிருந்தாள். அரண்மனை அந்தப்புரத்துக்குத் தான் சென்று திரும்பியிருந்த தினத்தன்று அழகன் பெருமாளுக்கும், இளைய நம்பிக்கும், தனக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடலின் போது, ‘பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் இங்கே ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் பரிதாபம்’ என்று இளையநம்பி சினங் கொண்டு கூறியவுடன், ‘ஆண்கள் செய்யமுடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது'- என்று தான் சுடச்சுட மறுமொழி கூறியதன் மூலம் அவன் கோபித்துக் கொண்டு வெளியேறி விட இருந்ததை நினைவு கூர்ந்து இப்போதும் அப்படி நேர்ந்து விடாமல் கவனமாக இருந்தாள் இரத்தினமாலை.
உண்டு முடித்தபின் தேனூர் மாந்திரீகன் படுத்திருந்த கட்டிலருகே அமர்ந்து திருத்துழாய் மாலையில் வந்த ஓலையை வைத்துக்கொண்டு மேலே என்னென்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள் அவர்கள். நீண்ட நேரம் சிந்தித்தும் எதையும் திட்டமிட முடியவில்லை. அழகன் பெருமாள் செங்கணானின் கட்டிலருகே இருந்த மஞ்சத்தில் உறக்கச்சென்றான்.
அன்று செங்கணான் புதிதாக வந்திருந்ததனால் இளைய நம்பிக்குத் தான் எந்தக் கட்டிலில் படுத்து உறங்குவது என்ற தயக்கம் வந்தது. செங்கணானுக்கு அருகிலிருந்த கட்டிலில் அவனுக்குத் துணையாயிருக்கும் எண்ணத்தோடு அழகன் பெருமாள் படுத்துவிட்டதால் அவனை அங்கிருந்து எழுப்பு வதற்கு இளைய நம்பி விரும்பவில்லை. அவனது தயக்கத்தைக் குறிப்பறிந்த இரத்தினமாலை, “இந்த மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு சயனக்கிருகம் இருக்கிறது, நிலாவின் தண்மையையும், தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவித்த படி உறங்கலாம் அங்கே...” என்றாள். அவன் மறுக்க வில்லை... அவள் அவனை மேலே அழைத்துச் சென்றாள்.
- ↑ குத்தலாகவும்