நித்திலவல்லி/முதல் பாகம்/32. வித்தகர் எங்கே?
இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்புகிற வரை அங்கிருந்த அவர்கள் மூவரும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவே இல்லை.
“நீண்ட நாட்களாகக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. அந்துவனைச் சந்தித்து விட்டு இரத்தினமாலை திரும்பி வந்ததும் ஏதாவது விவரம் தெரியும் என்று நம்புகிறேன்” என்று இடையே அழகன் பெருமாள் பேசியபோது கூட,
“இப்படி நமக்குள் பொதுவாக நம்பவும், செயலாற்றவும் காரியங்கள் இருப்பதால்தான் நாம் ஒரு குழுவாகச் சேர்ந்திருக்கிறோம் அழகன் பெருமாள்!” என்று மறுமொழி கூறிவிட்டு, மீண்டும் சிரித்தபடியே அவன் கண்களில் மின்னும் உணர்ச்சிகளை ஆழம் பார்த்தான் இளையநம்பி. அழகன் பெருமாளும் விட்டுக் கொடுக்காமல் பதிலுக்கு முக மலர்ந்து சிரித்தானே ஒழிய, இளையநம்பியின் சொற்களில் இருந்த குத்தலைப் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.
இருந்த வளமுடைய விண்ணகரத்தில் அர்த்த சாம வழிபாடும் முடிந்த பின்பே இரத்தினமாலை திரும்பினாள். பல்லக்கிலிருந்து இறங்கி வந்ததும் வராததுமாக, “உன் முகம் மலர்ச்சியாயிருப்பதைப் பார்த்தால் இருந்த வளமுடைய பெருமாள் பரிபூரணமாகத் திருவருள் புரிந்திருப்பார் என்றல்லவா தோன்றுகிறது?” என்று கூறி அவளை வரவேற்றான் இளையநம்பி. அவள் முகமும் அவனை நோக்கி மலர்ந்தது. அவள் அவனிடம் கூறினாள்:
“திருவருளுக்கு எதுவும் குறைவில்லை! ஆனால் என்ன தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன் என்பது எனக்கே புரியாமல், எதையோ தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.”
“அப்படியானால் போன காரியம் ஆகவில்லையா?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.
“இனிமேல்தான் தெரிய வேண்டும்!” என்று கையோடு திரும்பக் கொண்டு வந்திருந்த பூக்குடலையைக் காண்பித்தாள் அவள். குடலை நிறைய அடர்த்தியாகத் தொடுத்த திருத்துழாய் மாலை ஒன்று பொங்கி வழிந்தது. திருத்துழாய் நறுமணம் எங்கும் கமழ்ந்தது.
அவள் கூறியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளே மேலும் தொடர்ந்து கூறலானாள்:- “அகநகரின் நிலை மிகமிகக் கடுமையாகி இருக்கிறது! என்னுடைய பணிகளைப் பாராட்டி அரண்மனை அந்தப்புர மகளிர் மூலம் நான் பெற்றிருக்கும் முத்திரை மோதிரத்தைக் கையில் அணிந்து சென்றதனால் தான், நானே பாதுகாப்பாக இருந்த வளத்துக்குச் சென்று திரும்ப முடிந்தது. எங்கும் ஒரே பரபரப்பும் பதற்றமும் நிறைந்து அகநகர வீதிகளும், சதுக்கங்களும் அமைதி இழந்திருக்கின்றன. சந்தேகப்படுகிறவர்களை எல்லாம் இழுத்துப் போய்க் களப்பிரர்கள் கழுவேற்றுகிறார்கள். எல்லாரையும் பயம் பிடித்து ஆட்டுகிறது. நான் இருந்த வளமுடையார் கோவிலுக்குப் போய் யானைக் கொட்டாரத்தை அடைந்த போது அந்து வனைக் கொட்டாரத்தின் வாயிலிலேயே பார்த்தேன். அவன் வேறு சில யானைப் பாகர்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தான். ஆனால் என்னைப் பார்த்த பின்பும் அவன் என்னோடு பேசவோ தெரிந்தவன் போல் முகம் மலரவோ இல்லை. மற்ற யானைப் பாகர்களோடு பாலி மொழியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன். நிலைமையை நான் விளங்கிக் கொண்டேன். எதையும் தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. ஏமாற்றத்தோடு, ஆலயத்திற்குள்ளே சென்று நான் கொண்டு போயிருந்த மாலைகளைச் சாற்றச் செய்து, இருந்த வளமுடையாரையும், அந்தரவானத்து எம் பெருமானையும் வழிபட்டு வணங்கித் திரும்பும் போது, மீண்டும் அந்துவனைக் காண முயன்று வெகு நேரம் காத்திருந்தேன். அர்த்த சாம வேளை கூட நெருங்கி விட்டது. என்ன முயன்றும், அந்துவனைக் காண முடியவில்லை. வந்த காரியத்தை இறைவனிடம் விட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்த மனத்துடன் குடலையும் கையுமாகப் பணிப் பெண்ணோடு நான் திரும்புவதற்கு இருந்தேன். அப்போது விண்ணகரத் திருக்கோயிலைச் சேர்ந்த நந்தவனத்து மாலை கட்டி ஒருவன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கைகளில் ஒரு பெரிய திருத்துழாய் மாலையோடு என்னை நோக்கி வந்தான்.
"இருந்த வளமுடைய பெருமாளின் திருவருள் இந்த மாலையில் நிரம்பியிருக்கிறது! தாங்கள் நினைப்பதை அருளும் தெய்வீகப் பயனை இந்தத் திருத்துழாய் மாலை தங்களுக்குத் தரும்’ என்று அந்துவனார் கூறினார். அவருடைய வேண்டுகோளின்படி இந்தத் திருத்துழாய் மாலையைத் தங்களிடம் சேர்க்க வந்தேன்’ என்று கூறி மாலையை உடனே என் கையிலிருந்த குடலையில் திணித்துவிட்டு அந்த மாலை கட்டி விரைந்து நந்தவனப் பகுதியில் புகுந்து மறைந்து விட்டான். அவனை ஏதாவது கேட்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் மின்னலாக மறைந்து விடவே எனக்குத் திகைப்பாயிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. கோயிலிலிருந்து வெளியே வந்ததும், பல்லக்கில் அமர்ந்து மாலையைக் கை விரல்களால் நன்கு ஆராய்ந்தும், எதுவும் புலப்படவில்லை. இந்த மாலையைக் கொடுத்து அனுப்பியதன் மூலம் அந்துவன் நமக்கு என்ன தெரிவிக்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. மாலை இதோ இருக்கிறது” என்று அந்த மாலையை அவள் எடுத்து நீட்டுவதற்கு முன்பே விரைந்து அதைத் தன் கைகளில் ஏற்றான் அழகன்பெருமாள். மாலையை மேலிருந்து கீழாகத் தொங்கவிட்டபோது ஒரு பெரிய தேங்காயளவு அதன் நுனியில் தொங்கிய திருத்துழாய்க் குஞ்சம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.
அழகன்பெருமாள் நிதானமாகக் கீழே தரையில் அமர்ந்து, மாலையை மடியில் வைத்துக் கொண்டு அதன் குஞ்சத்தை மெல்லப் பிரித்தான். எல்லார் விழிகளும் வியப்பால் விரிந்தன.
என்ன விந்தை? அந்தக் குஞ்சத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒடியாமல் சுருட்டப்பட்டு நாரால் கட்டியிருந்த ஒலைச்சுருள் ஒன்று வெளிப்பட்டது. எல்லார் கண்களிலும் மலர்ச்சி தெரிந்தது.
“பெருமாளின் திருவருள் இதோ கிடைத்து விட்டது! அந்துவன் பொய் சொல்ல மாட்டான்” என்று கூறியபடியே அந்த ஓலைச்சுருளை எடுத்துப் பிரித்தான் அழகன் பெருமாள். ஒடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கு முற்றிக்
காய்ந்த ஒலையைப் பயன்படுத்தாமல் ஓரளவு ஈரமுள்ள பதத்து ஒலையைப் பயன்படுத்தி அதில் எழுதியிருந்ததால் எழுத்துக்கள் ஓலையில் நன்கு பதியவில்லை. கீறினாற்போல் ஏதோ மங்கலாகத் தெரிந்தது. அதை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாமல் அழகன் பெருமாள் சிரமப்பட்டான். கைத்தீபத்தின் அருகே நெருக்கமாகப் பிடித்துப் படிக்க முயன்றும் முடியவில்லை.
“என்னிடம் கொடு அழகன்பெருமாள்!” என்று அதை வாங்கிக்கொண்ட இளையநம்பி இரத்தினமாலையின் பக்கம் திரும்பி, “நீ கண்ணுக்குத் தீட்டிக் கொள்ள மை சேர்த்து வைத்திருப்பாயே அந்த மைக் கூண்டைக் கொண்டு வா!” என்றான். உடனே அவள் பணிப்பெண்ணுக்குச் சைகை செய்தாள்.
பணிப்பெண் உள்ளே ஓடினாள். சிறிது நேரத்தில் மைக்கூண்டுடன் திரும்பி வந்து அதை இளையநம்பியிடம் கொடுத்தாள். ஓலையைப் பளிங்குத் தரையில் வைத்து அதன் ஒரு முனையை அழகன் பெருமாளும், மறுமுனையை இரத்தினமாலையும் கட்டை விரல்களால் அழுத்திக் கொள்ளச் செய்தபின் அது சுருண்டு விடாமல் இருந்த நிலையில் அதன்மேல் மென்மையாக மையைத் தடவினான் இளைய நம்பி. எழுத்துக்களாகக் கீறப்பட்டிருந்த இடங்கள் ஓலைப்பரப்பில் பள்ளமாகி இருந்ததால் அந்தப் பள்ளங்களில் மை ஆழப் பதிந்திருந்தது. அப்படிப் படிந்ததன் காரணமாக ஓலையில் எழுதியிருந்த வாக்கியங்கள் இப்போது தெளிவாகத் தெரியலாயின.
‘பெரியவர் மதுராபதி வித்தகர் இப்போது திருமோகூரில் இல்லை. அவரைத் தேடும் முயற்சியைச் செய்யவேண்டும்’-- என்ற அந்த முதல் பகுதி எழுத்துக்களை இளையநம்பியே வாய்விட்டுப் படித்ததும், மற்றவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் எல்லா விழிகளும் விளக்கொளியின் துணை யுடன் ஒலைக்கருகே தணிந்து பார்க்க விரைந்தன. பலருடைய மூச்சுக்காற்று ஒரே திசையில் பாயவே எதிர்பாராத விதமாக அந்த விளக்கே அணைந்து போய்விட்டது.