நித்திலவல்லி/முதல் பாகம்/4. செல்வப் பூங்கோதை

விக்கிமூலம் இலிருந்து

4. செல்வப் பூங்கோதை

“ஐயா! முனையெதிர் மோகர் படைக்கும் தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் இவ்வளவு உதவிகளைச் செய்யும் உங்களுக்குக் களப்பிரர்களால் எந்தக் கெடுதலும் வராமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை-” என்று உடன் நடந்துகொண்டே பெரிய காராளரிடம் கேட்டான் இளைய நம்பி. அதற்கு அவர் மறுமொழி கூறினார்:

“எனக்கு அப்படிக் கெடுதல் எதுவும் வர முடியாது. களப்பிரர்களின் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நான்தான் நெல் அனுப்புகிறேன். அதனால்

என்னைக் களப்பிரர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவன் என்று நம்பியிருக்கிறார்கள். தேசாந்திரிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், நாடோடி யாத்திரிகர்களுக்கும் உணவிடுவதற்குச் சத்திரங்களும், அறக்கோட்டங்களும், நடத்துவது போல் ஏற்பாடு செய்து அந்தச் சத்திரங்களிலும், அறக்கோட்டங்களிலும் நம்மவர்களுக்கு உணவளித்து வருகிறேன்.”

“அதாவது தேசாந்திரிகளாகவும், நாடோடிகளாகவும் வந்த களப்பிரர்களுக்கு வெளிப்படையாக உதவுகிறீர்! இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு உதவுவதைப் போலவும், நாடோடிகளுக்கு உதவுவதைப் போலவும் உதவுகிறீர்.”

“என்ன செய்யலாம்? இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படி மிகவும் தந்திரமாகத்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

“நான் உம்மைக் குறை சொல்லவில்லை காராளரே! விதியின் கொடுமையை எண்ணித்தான் கோபப்படுகிறேன். தேசாந்திரிகளாக வந்தவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடவும், இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் தேசாந்திரிகள் போல் சோற்றுக்கும் சுதந்திரத்திற்கும் அலையவும் நேர்ந்திருப்பதை எண்ணித்தான் நெஞ்சம் குமுறுகிறேன்.”

“உங்களைப் போன்றவர்களின் குமுறல் வீண் போகாது! ‘நாட்டு மக்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் ஆட்சியை அந்தக் கண்ணீரே படைகளாகி அழித்துவிடும்’ என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.”

‘யாருடைய கண்ணீரையும் பற்றிக் கவலைப்படாமல் இவ்வளவு காலம் களப்பிரர்கள் ஆண்டு விட்டார்களே?”

பேசிக்கொண்டே வேளாளர் திருவீதிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். வாழை மரங்கள், மாவிலைத் தோரணம், பச்சை நெற்கதிர்த் தோரணம் எல்லாம் கட்டி அலங்காரம் செய்திருந்த ஒரு பெரிய மாளிகையின் வாயிலில் அவனை அழைத்துச் சென்று நிற்கச் செய்திருந்தார் காராளர். “ஐயா! இதென்ன மங்கல அலங்காரங்கள்? நீங்கள் நாள் தவறாமல் உணவளித்துக் காப்பாற்றி வரும் எண்ணற்ற நாடோடிகளோடு ஒரு புது நாடோடியாக நானும் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன். நாடு களப்பிரர்களிடமிருந்து விடுபடுகிறவரை இப்படி அலங்காரம் செய்யும் மகிழ்ச்சியைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை.”

“அப்படியல்ல! தங்களை எப்படிச் சிறப்பாக வரவேற்க வேண்டும் என்று நல்ல வேளையாக நாங்கள் அறிந்திருக்கிறோம். நான் நடத்தும் அறக்கோட்டங்களில் வைத்து உங்களுக்கு நான் விருந்திடப் போவதில்லை. உங்களை என் இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். சற்றே இந்தச் செம்மண் கோலத்தில் நில்லுங்கள்! என் மனைவியும் மகளும் உங்களுக்கு மங்கல ஆரத்தி சுற்றிக் கொட்ட விரும்புகிறார்கள்...”

முதலில் காராளரின் மனைவியென அவனால் உய்த்துணர முடிந்த முதிய அம்மையாரை அடுத்துக் கையில் ஆரத்திப் பாத்திரத்துடன் வந்தவளைக் கண்டதும் அவன் கண்கள் வியப்பால் மலர்ந்தன. முதல் நாள் அந்தி மாலையில் கையில் விளக்கோடு கொற்றவை கோவில் வாயிலிலிருந்து அவனுக்கு வழிகாட்டிய பேரழகியே அவள்.

பெண்கள் இருவரும் தனக்கு ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தபோதே அவன் காராளரை நோக்கி,

“ஐயா! உங்கள் மகளுக்கு நான் நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் மகளுடைய உதவி கிடைத்திராவிட்டால், நான் நேற்று மாலை நம் பெரியவருடைய இருப்பிடத்தைக் கண்டு சென்றிருக்கவே முடியாது” என்று நன்றி பெருகச் சொன்னான். உடனே அவர் தன் மகளை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானார்;

“செல்வப் பூங்கோதை! இவர் சொல்வது மெய்யா? நீ என்னிடம் சொல்லவே இல்லையே? நேற்றே இங்கு நம் இல்லத்திற்கு இவரை அழைத்து வந்திருக்கலாமே? எனக்கு இவையெல்லாம் ஒன்றுமே தெரியாமற் போய்விட்டது. அப்படியானால் நம் சிறப்புக்குரிய இந்த இளம் விருந்தாளி

ஏற்கெனவே உனக்குத் தெரிந்தவராகி விட்டார் என்று சொல்...”

ஆரத்தி சுற்றிவிட்டுத் தலை நிமிர்ந்த அவள் இதற்கு ஒன்றும் மறுமொழி கூறாமல் அவரையும் அவனையும் பார்த்துப் புன்னகை செய்தாள். கையில் மஞ்சள் நீர் நிறைந்த அலங்காரத் தட்டுடன் நிமிர்ந்து பார்த்து நகைத்த அந்த வசீகரமான முகம் முதலில் இளைய நம்பியின் கண்களிலும், பின்பு மனத்திலும் அப்படியே சித்திரமாகப் பதியக்கூடியதாயிருந்தது.

‘செல்வப்பூங்கோதை’ என்று அவளுடைய இனிய பெயரை அவள் தந்தை அதே பாசக்குழைவுடன் இன்னொரு முறை கூப்பிட்டுக் கேட்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவனுக்கு. ஒளிபாயும் அந்த வெண்முத்துப் பற்களால் அவள் இன்னொரு முறை செவ்விதழ்கள் திறந்து சிரிப்பதைப் பார்க்க வேண்டும் போலவும் விருப்பமாயிருந்தது. இவளைச் சந்திக்கும் முன்பு வேறு எந்த இளம் பெண்ணைக் கண்டும் இவ்வளவு பெரிய தாபத்தையோ, தாகத்தையோ அவன் அடைந்ததில்லை.

“யாருடைய புன்சிரிப்பில் உன் மனத்தின் நெடுங்காலத்துக் கட்டுப்பாடுகள் எல்லாம் மெல்ல மெல்லத் தகர்கின்றனவோ அவள் இதற்கு முன்பும் பல பிறவிகளில் உன்னைப் பார்த்து எப்போதோ இப்படி நகைத்திருக்க வேண்டும். விட்டகுறை தொட்டகுறையாகத்தான் இப்படிப் புன்முறுவல் பிறக்கும். அப்படி முன்பிறவியில் என் முன் முதல்முதலாக மோகப் புன்முறுவல் பூத்த முதற் சிங்காரியை வீதிகளின் முகக் கூட்டங்களில் நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்! இது புரியாமல் பித்தன் என்றும் காமநோயாளன் என்றும் ஊரார் என்னை ஏளனம் செய்கிறார்களே’ என்பதாக இளம் வயதில் திருக்கானப்பேரில் தன்னோடு ஒரு சாலை மாணக்கனாகக் கற்று நல் வாலிபப் பருவத்தில் அவன் காதலித்த பெண்ணை அடைய முடியாமல் ஏமாறிப் பைத்தியம் பிடித்த ஓர் இளைஞன் இரவெல்லாம்

தெருவில் அரற்றிக் கொண்டு திரிந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் இளைய நம்பி. இந்தத் திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையும் தன்னை அப்படித் தெருவெல்லாம் அலைய விட்டுவிடுவாளோ என்றுகூட விளையாட்டாக நினைத்துப் பார்த்தான் அவன்.

அருமைத் தாயின் அணைப்பில் மகிழ்ந்த பருவமும், புதிய புதிய பொருள்களில் மகிழ்ந்த பருவமும், இலக்கண இலக்கியங்களையும், போர் நுணுக்கங்களையும் அறிவதில் மகிழ்ந்த பருவமும், எல்லாம் இன்று ஒரு கன்னியின் புன்முறுவலில் தோற்றுப் போய்விட்டாற் போலிருந்தது. அறிந்தவற்றை அறியாமற் செய்யும் சாமர்த்தியங்களை ஒரு பெண்ணின் அழகிற் சேர்த்து வைத்துவிட்ட படைப்புக் கடவுள் மேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.

‘தோளும் வாளும் நல்முதியோர் பன்னாள்
   துணையா யிருந்தளித்த கல்வியுடன்
ஆளும் பெருமிதமும் என் ஆசாரங்களும்
  அத்தனையும் விழியிரண்டாற் குறிவைத்தே
நாளும் கிழமையும் பருவமும் பார்த்தந்த
  நங்கை தொலைத்திட்டாள் தன் இள நகையால்
வாளும் வேலும் படையும் வென்றறியா என்
  வன்மையெலாம் சூறையிட்டாள் விந்தையிதே’


என்பதாக அந்தத் திருக்கானப்பேர்ப் பைத்தியம் அடிக்கடி பாடிக்கொண்டு திரியும் ஒரு பாடலும் இளைய நம்பிக்கு இன்று நினைவு வந்தது. இப்படி ஒர் அழகிய நளின கவிதை எழுத முடிந்த வாலிபனைப் பித்தனாக்கி விட்டுப் போனவள் யாரோ அவள் மேல் உலகிலுள்ள எல்லா வாலிப ஆண்களின் சார்பிலும் கடுஞ்சினம் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது.

இளைஞர்களின் கண்களில் வசந்த காலங்களாக அலங்கரித்துக் கொண்டு வந்து நின்று அவர்களின் ஆண்மையையும், வீரத்தையும் சூறையாடும் அத்தகைய மோகினிகளில் ஒருத்தியாகத்தான் இந்தச் செல்வப் பூங்கோதையும் இளைய

நம்பியின் பார்வையில் இன்று தோன்றினாள். முதல் நாள் அந்தி மாலைப் போதாக இருந்தாலும், பெரியவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவரைச் சந்திக்கப் போக வேண்டிய காரிய அவசரம் இருந்தாலும் தனக்கு வழிகாட்டிய இவளுடைய அழகை அவன் ஓரளவுதான் காண முடிந்திருந்தது. இப்போதோ மேகங்களே இல்லாத நீல நெடுங்குளம் போன்ற கோல வானத்திடையில் குதிபோட்டுவரும் முழுமதியை ஒத்துத் துள்ளித் திரிந்து ஒடியாடி விருந்துக்கான காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்த இவள் அழகை அவன் முழுமையாய்க் காணவும் சிந்திக்கவும் முடிந்தது. வேறெதையும் சிந்திக்கவும் முடியாமலிருந்தது.

இளையநம்பிக்குச் சித்திரத்தவிசு இட்டு அமரச் செய்து நீர் தெளித்து இடம் செய்து குமரி வாழை இலை விரித்து அலர்ந்த மல்லிகை பூப்போல் ஆவி பறக்கும் சாலியரிசிச் சோறு படைக்கப்பட்டது. இள மாதுளம் பிஞ்சுகளை நெய்யில் வதக்கி மிளகும், உப்பும் தூவிச் சுவை சேர்த்திருந்த கறியும், நெய் அதிரசங்களும், பிற பணியாரங்களும், காலையில் மதுராபதி வித்தகர் இந்த வீட்டு உணவைப் பற்றித் தன்னிடம் வருணித்திருந்தது ஒரு சிறிதும் மிகையில்லை என்பதை அவனை உணர வைத்தன. இலையிலமர்ந்து உண்ணும் போதும் அதன் பின் கூடத்தில் அமர்ந்து காராள ரோடு உரையாடிக் கொண்டிருந்தபோதும் காலணிகளின் பரல்கள்கலின் கலின் என்று இனிய ஒலியாய்க் கொஞ்ச அந்த வீட்டில் எங்கெங்கோ மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்த நடையைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது அவன் மனம்.

“வண்டிகள் மூன்றும் ஆயத்தமாயிருக்கின்றன. தாமரைப் பூக்கள்தான் இன்னும் பறித்து முடியவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டுவிடலாம். உண்ட களைப்பாறச் சற்றே ஓய்வு கொள்ளலாம் அல்லவா?” என்று காராளர் இருந்தாற் போலிருந்து அவனைக் கேட்டபோது அவனுக்கு முதலில் அவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே புரியவில்லை. அவன் அவரை வினவினான்: “என்னசொல்கிறீர்கள் ஐயா? நான் மதுரை மாநகருக்குப் புறப்படுவதற்கும் தாமரைப் பூக்கள் பறிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?”

“சம்பந்தம் இல்லாமலா சொல்கிறேன்? சம்பந்தம் இருப்பதால்தான் தாமதமாகிறது. ஆவணித் திரு அவிட்ட நாளில் இருந்தவளமுடையாருக்கும், அந்தரவானத் தெம் பெருமானுக்கும் ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை அர்ச்சிப்பதாக என் மகள் வேண்டிக்கொண்டிருக்கிறாள். இரண்டு வண்டிகள் நிறையத் தாமரை மலர்கள் பறித்து நிரப்பியாக வேண்டும். மற்றொரு வண்டியில் ஆட்கள் ஏறிக்கொள்ளலாம்.”

“ஏதேது? நானறிந்த வரையில் கணக்கிட்டுப் பார்த்தால் கூட இந்த வட்டாரத்தில் உங்கள் மகள் வேண்டிக் கொள்ளாத தெய்வங்களே மீதமிருக்க முடியாது போலிருக்கிறதே?” என்று அவரிடம் அவன் கேட்ட ஒலி அடங்கு முன்பாகவே,

“இந்த வேண்டுதல்கூடப் போதாமல் இப்போது இன்னொரு புதிய வேண்டுதலையும் எல்லாத் தெய்வங்களிடமும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறதென்று அவரிடம் சொல்லுங்கள் அப்பா!” என்று அவனுக்குப் பதில் சொல்வதுபோல் தன்தந்தையிடம் கூறியபடி அப்போது அவளுடைய அந்த முழு மதியே அங்கு உதயமாயிற்று. உடனே காராளர் சிரித்துக் கொண்டே சொன்னார்:-

“பார்த்தீர்களா? பார்த்தீர்களா? திருக்கானப்பேர்க் காரர்களுக்கு நாங்கள் சாதுரியப் பேச்சில் ஒரு சிறிதும் இளைத்தவர்கள் இல்லை என்று என் பெண் நிரூபிக்கிறாள்.”

“இந்த நாட்டில் இன்று நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வெறும் பேச்சில் இல்லை. அது விளங்காமல் தான் நாம் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறோம். களப் பிரர்களிடம் நிரூபிக்கப்பட வேண்டிய சாதுரியங்கள் வாள் முனைகளில்தான் இருக்கிறது. வெறும் வார்த்தைகளில் இல்லை.” “இருக்கலாம்! ஆனால் இந்தத் திருக்கானப்பேர் வீரருடைய பேச்சு சாதுரியத்தால்தான் நேற்று இவர் போக வேண்டிய இடத்துக்கு என்னிடம் இவருடைய வழியையே தெரிந்து கொள்ள முடிந்தது என்பதை இவருக்கு நினைவூட்டுங்கள் அப்பா!”

இதைக் கேட்டு அவன் சிரித்தே விட்டான். அவனது கடுமையைத் தன் சொற்களால் உடைத்தெறிந்திருந்தாள் அவள். வேறு விதமாக அவளை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

“திருமோகூர்க் கொற்றவை கோவிலுக்கு ஒரு மண்டலம் நெய்விளக்கு, நான் மாடக் கூடலில் இருக்கும் இருந்த வளமுடைய பெருமாளுக்கும், அந்தரவானத்து எம்பெருமானுக்கும் அவிட்டத் திருநாளில் ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்கள், வேண்டுதல்கள் இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதா என்பதைத் தயை கூர்ந்து உங்கள் திருக்குமாரியிடம் சற்றே கேட்டுச் சொல்ல முடியுமா காராளரே?”

“திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் தவப் பெயரர் பத்திரமாக நான்மாடக் கூடல் நகரை அடைந்து காரியங்களை வெற்றி பெற முடித்துக் கொண்டு சுகமாகத் திரும்ப வேண்டும் என்ற புதுப் பிரார்த்தனையையும் இப்போது சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள் அப்பா...”

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நேருக்கு நேராகவே அந்த முழுமதி முகத்தை ஏறிட்டுப் பார்த்து நன்றியோடு முகம் மலர்ந்தான் இளையநம்பி. அந்தப் பார்வையைத் தாங்க முடியாத நாணத்தோடு காலணிகளின் ஒலியை மட்டும் அவன் செவிகளுக்கு இசையாய் வழங்கி விட்டு அவள் உள்ளே ஓடிவிட்டாள். முதல் நாள் தன்னோடு கொற்றவை கோவிலுக்குச் செல்லும் வழியில் எல்லாம் சுபாவமாய்ப் பேசி வந்த அவள் இப்போது புதிதாய் நாணப்படுவது அவனுக்கு வியப்பை அளித்தது. பழகப் பழக நாணப்படுவதும், புரியப் புரிய வெட்கப்படுவதும், நெருங்க நெருங்க விலக

முயல்வதும் தான் அழகிய பெண்ணின் சுபாவங்களோ என்று சிந்தித்தான் அவன். பெண்களின் நாற்குணங்களில் ஒன்றாகிய பயிர்ப்பு என்பது இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது அவனுக்கு. ஆடவன் அறிய முயலும் போதெல்லாம் பெண் அறியாமையாகி விடுகிறாளோ என எண்ணினான் அவன். அந்த வேளையில் பெரிய காராளர் அவனுடைய நளின நினைவுகள் கலைந்துபோகும்படி வேறு புதிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.