நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/8. எடுத்தேன்; சுட்டேன்!

விக்கிமூலம் இலிருந்து

8. எடுத்தேன்; சுட்டேன்!

“சின்னப்பா எம்.ஜி.ஆர் எல்லாம் இருந்த ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யோடு நான் தொடர்பு கொண்டது சென்னையிலேதான்....”

“சொல்லுங்கள் சொல்லுங்கள், அதைப் பற்றி அப்புறம் சொல்வதாகச் சொல்லியிருந்தீர்களே ?

சொல்றேன் மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபாவை நான் விட்டாலும் அது இன்னும் என்னை விட்டிபாடில்லையே!”

“அதைத்தான் அய்யர் கலைத்துவிட்டதாகச் சொன்னீர்களே ?”

அய்யர் விட்டாலும் அவர் மகன் ராமசுப்பய்யர் அதை விடறதாயில்லே ‘நான் தொடர்ந்து நடத்திறேன்’ னார். அப்பா அதற்குச் சம்மதிக்கல்லே, ‘தான் தமாஷா வரிக் கணக்குக் கேட்கிற முனிசிபாலிடிக்காரனுக்கு அடிமையாயிருக்க விரும்பலேன்னா, என்மகன் அடிமையாயிருக்கிறதை மட்டும் விரும்புவேனா? அது முடியாது, நடக்காது’ ன்னு சொல்லிட்டார்...”

“பிடிவாதக்கார மனுஷராயிருந்திருப்பார் போலிருக்கிறதே ?”

“நீங்க எந்தப் பெரிய மனுஷரை வேணும்னாலும் பாருங்க, அவங்க பிடிவாதக்காரராய்த்தான் இருப்பாங்க... காந்தியார் மாதிரி வேறே ஒரு பிடிவாதக்காரர் இருக்க முடியுமா? ஆச்சாரியார் மாதிரி வேறே ஒரு பிடிவாதக்காரர் இருக்க முடியுமா ? ஏன், பெரியார் மாதிரிதான் வேறே பிடிவாதக்காரர் இருக்க முடியுமா ?”

“கரெக்ட் ...அப்புறம் ?”

“நாகலிங்கச் செட்டியார்னு ஒருத்தர்...”

“அவர் வேறே நாடகக் கம்பெனிக்காரரா?”

“இல்லே; அவர்தான் ஜகந்நாதய்யர் கம்பெனியை விலைக்கு வாங்கி, அந்தக் கம்பெனிக்கு அவர் மகன் ராமசுப்பய்யரை மானேஜரா வைச்சிக்கிட்டவர்...”

“அய்யர் இதற்கு ஒன்றும் சொல்லவில்லையா?”

“அவர் சொல்றதைச் சொல்லத்தான் சொன்னார்; மகன் கேட்கல்லே. அப்பன் பேச்சைக் கேட்காத பிள்ளைங்க அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் மட்டும் இல்லே, ராமாயண காலத்திலேயே இருந்திருக்கும்போல இருக்கே இல்லேன்னா, ராமன்னு ஒருத்தனும், அவனை வைத்து ஒரு கதையும் இங்கே பொறந்திருக்குமா?”

“ராமனை விடுங்கள்; முருகனையே ‘தறுதலை தகப்பன் சாமி என்றல்லவா சொல்கிறார்கள் ?”

“சும்மா சொல்லக் கூடாது; ராமசுப்பய்யர் அந்த அளவுக்கு மோசமில்லே. அவர் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்டதும் சிதறிப் போன நடிகர்களையெல்லாம் ஒண்ணு சேர்க்க ஆரம்பிச்சார். அவங்களிலே ரெண்டு பேரு சென்னைக்கு வந்து, என்னையும் மதுரைக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க... பழையபடி நாங்க ‘பதி பக்தி’ நாடகம் போட்டோம். அப்பத்தான் புது நாடகம் எழுதிக் கொடுக்கக் கந்தசாமி வாத்தியார் வந்து சேர்ந்தார்.”

“எந்தக் கந்தசாமி வாத்தியார் ?”

“அவர்தான் எம்.கே.ராதாவின் அப்பா...”

“ஜெமினி சந்திரலேகா, அபூர்வ சகோதரர்களிலே நடித்தாரே, அவரா?" "அவரேதான்!”

“பழைய வாத்தியார்கள் ‘பாடம்’ என்றதும் அகராதியைத் தூக்கி உங்கள் கையிலே கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னீர்கள்; புது வாத்தியார் எப்படி?”

“அவர்களைவிடமோசம்; என்னைக் கண்டதும் புத்தகத்தை மூடிக் கீழே வைச்சிடுவார். என் தலை மறைஞ்சப்புறந்தான் அதை எடுத்துப் பிரித்து மத்தவங்களுக்குப் பாடம் நடத்துவார்!”

“குருவைக் கண்டு சீடன் பயப்படுவதற்குப் பதிலாகச் சீடனைக் கண்டு குருவே பயந்தார் போலிருக்கிறது!”

“பயப்படறவன் குரு, சீடனைப் பார்த்து மட்டும் இல்லே; யாரைப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் பயந்துக்கிட்டுத்தான் இருப்பான்!”

“எம்.கே.ராதா ?”

“அவரையும் என்னுடன் சேர்ந்து நடிக்கவிடமாட்டார் அவருடைய அப்பா. அப்படியே நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் ‘பத்திரம், பத்திரம்’னு சொல்லிக்கிட்டு அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார்...இந்த மாதிரி ஆளுங்க பயம் எதிலே போய் முடிஞ்சதுன்னா, எனக்கு எதிரா போடிநாயக்கனூரானைக் கெளப்பி விடறதிலே போய் முடிஞ்சது...”

“அது யார் அந்தப் போடிநாயக்கனூரான் ?”

“அவன் ஒரு ஸ்டண்ட் நடிகன்; என்னை விடக் கொஞ்சம் பலசாலி. நாடகத்திலே வர சண்டைக் காட்சியிலே அவன் என்னோடு கட்டிப் புரண்டு சண்டை போடுவான். அதை வைச்சிக் கம்பெனியிலே எனக்கு எதிரிங்களாயிருந்த சில பேரு ஒரு சூழ்ச்சி செய்தாங்க...”

“என்ன சூழ்ச்சி ?" "நாடகத்திலே சண்டை போடறப்போ, என்னைக் கீழே தள்ளி ஒரே அமுக்கா அமுக்கிடச் சொல்லி போடிநாயக்கனூரான்கிட்டே சொல்லி வைச்சிருந்தாங்க. இந்த விஷயம் என் காதுக்கு எட்டிச்சி. அப்படியா சமாசாரம்?’னு நான் ஒரு வேலை சேஞ்சேன்...”

“அது என்ன வேலை ?”

“சி.ஐ.டி. வேஷம்னா கையிலே துப்பாக்கி இல்லாமலிருக்குமா? அதுக்காக என் கையிலே ஒரு துப்பாக்கி கொடுத்து வைச்சிருந்தாங்க... நெஜத் துப்பாக்கியில்லே; வெத்துவேட்டுத் துப்பாக்கிதான். அந்தத் துப்பாக்கியிலே ‘பால் பேரிங்’ எஃகு ரவைகளைப் போட்டு, அதுக்கு மேலே பஞ்சை அடைச்சி வைச்சுக்கிட்டேன்...”

“இந்த விஷயம் அவர்கள் காதுக்கு எட்டவில்லையா?”

“எட்ட விடுவேனா? அந்த மாதிரி அஞ்சாம் படை ஆளையே நான் எப்பவுமே என்னோடு சேர்த்துக்கமாட்டேன். அன்னிக்கு ராத்திரி நடந்த நாடகத்திலே அந்தப் போடிநாயக்கனூரான் எப்பவும் போல என்னோடு சண்டை போட வந்தான்... சண்டைக்கு நடுவே நான் வழக்கம்போலத் துப்பாக்கியை எடுத்தேன்; ஆனா வழக்கம்போல நாடகக் கொட்டாயின் கூரையைப் பார்த்துச் சுடல்லே; அவன் விலாவைப் பார்த்துச் சுட்டேன்... அவ்வளவுதான்; ‘அம்மாடியோவ்’னு அலறிக் கிட்டே அவன் கீழே விழுந்தான். என்னடான்னு குனிஞ்சி பார்த்தா, என் துப்பாக்கிக்குள்ளே போட்டிருந்த அத்தனை குண்டுகளும் அவன் விலாவுக்குள்ளே பாய்ஞ்சிருந்தது!”

“ச்சுச்சூ!”

“எனக்கும் வருத்தமாய்த்தான் இருந்தது...ஏன்னா, என் நோக்கம் அவனைச் சும்மா மிரட்டி வைக்கணுங்கிறதுதான்; குண்டு இப்படிப் பாயும்னு நானும் எதிர்பார்க்கல்லே....”

“அப்புறம்?" "ஒரே கூச்சல், கலாட்டா, ‘என்ன, ஆக்ஸிடெண்ட்டா ? ன்னு கேட்டுக்கிட்டே ஆடியன்ஸிலே கூடச் சில பேரு மேடைக்கு வந்துட்டாங்க. எனக்கு ஒண்னும் புரியல்லே, ‘ஆமாம்’னு சொல்வி வைச்சேன்...நல்ல வேளையா அன்னிக்கு ராத்திரி எனக்கு வேண்டிய ரத்தின சிங் நாடகம் பார்க்க வந்திருந்தார்...”

“அது யார் அந்த ரத்தின சிங்?”

“அவர்தான் டி.வி.எஸ். காரர்களுக்கு முந்தி மதுரையிலே பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்திக்கிட்டிருந்தவர்; நான் மோட்டார் மெக்கானிசம் கத்துக்கிட்டதுகூட அவர்கிட்டேதான்...”

“அவர் வந்து என்ன செய்தார் ?”

“போடிநாயக்கனூரான் விலாவிலே பாய்ஞ்சிருந்த குண்டுகளையெல்லாம் பக்குவமா வெளியே எடுத்தார். அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காம வீட்டிலேயே வைச்சி, வேண்டிய சிகிச்சையும் சேஞ்சார்...”

“போலீசார் இதில் தலையிடவில்லையா ? வெற்று வேட்டுத் துப்பாக்கிக்குள்ளே குண்டு எப்படி வந்தது என்று கேட்கவில்லையா ?”

“நாமா போய்ப் புகார் செய்யாத வரையிலே அவங்களாத்தான் எந்த வம்புக்கும் வரமாட்டாங்களே . ‘ஏன் ?’ ன்னு கேட்கிறீங்களா ?...சொல்றேன்... நீதி எப்பவும் தூங்கிட்டிருக்கு: நாம் போய் எழுப்பினாத்தான் அது கொட்டாவி விட்டுக்கிட்டே எழுந்து வந்து, ‘என்ன ?ன்னு கேட்குது...இது தெரியாம சில பேரு நீதி தூங்காது, நீதி தூங்காது'ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க!”

“அது துங்கும்போது அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்; அப்புறம்?”

“கம்பெனியிலே எனக்கு இருந்த எதிரிங்க அதிகமாயிட்டாங்க, “ராதா இருந்தா நாங்க நடிக்க மாட்டோம்னு அவங்க முதலாளிகிட்டே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!”

“அந்த அளவுக்குப் போய்விட்டதா?...முதலாளி என்ன செய்தார் ?”

“அவர் முழிச்சார். எனக்காக மத்தவங்களை விடவும் அவர் தயாராயில்லே; மத்தவங்களுக்காக என்னை விடவும் அவர் தயாராயில்லே...” -

“கடைசியில் என்னதான் ஆயிற்று ?”

“எம்.எஸ்.முத்துகிருஷ்ணன்கிட்டே எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்திலேயே பெருமதிப்பு உண்டு. அவர் எல்லாரையும் கூப்பிட்டு விசாரிச்சு, ஒரு வழியா சமாதானம் சேஞ்சி வைச்சார்.”

“நல்ல வேளை, ‘ராதாகிருஷ்ணனான உங்களைப் போலவே அந்த ‘முத்துகிருஷ்ணனும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாயிருந்திருந்தால் இப்படி ஒரு சமாதானமே சாத்தியமாயிருந்திருக்காது, இல்லையா?”

“என்ன செய்வது ? நானாக யார் வம்புக்கும் போகமாட்டேன்; யாராவது வம்புக்கு வந்தாலும் விட மாட்டேன். இது என் சுபாவமாப் போச்சு!”

“பிறகு ?”.

“ஈரோட்டுக்குப் போனோம். அங்கே எங்க கம்பெனி நாடகங்க நடந்துகிட்டிருந்தப்போ, சக நடிகர்களிலே சில பேரு பச்சை அட்டை போட்ட ‘குடி அரசு’ பேப்பரை மறைச்சு வைச்சிகிட்டுப் படிக்கிறதைப் பார்த்தேன். ‘அது ஏன் ?’ ன்னு எனக்குப் புரியல்லே, நண்பர் பொன்னையாவைக் கேட்டேன். அது ராவணன் பத்திரிகை; அப்படித்தான் படிப்பாங்க. இல்லேன்னா, ஊர்ப் பெரியவங்க கட்டி வைச்சி உதைப்பாங்கன்னு சொன்னார். ராவணன் பத்திரிகை கூட நடத்துவானா ?ன்னேன். நடத்துவான், நடத்துவான். அந்த ராவணனை இன்னிக்கு நான் பார்க்கப் போறேன், நீயும் வேணும்னா வறியா ?ன்னார்...அவ்வளவுதான்; கதையிலே கேட்ட ராவணனை நேருக்கு நேராப் பார்க்க தான் அப்பவே தயாராயிட்டேன் ...பத்துத்தலைகள், கோரைப் பற்கள், இருபது கைகள் ... இதை நினைக்க நினைக்க என் ஆசை அளவு கடந்து போயிடிச்சி..."இப்பவே போவோமா, இப்பவே போவோமா ?ன்னு அவரை நச்சரிக்க ஆரம்பிச்சுட்டேன்...’ இரு, போவோம்; இரு, போவோம்’னு அவர் மத்தியானம் வரையிலே காலத்தைக் கடத்திட்டு, அதுக்கு மேலே என்னை ராவணன் வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போனார்...அங்கே போனா, பத்துத் தலைகளும் இல்லே, கோரைப் பற்களும் இல்லே... இருபதுகைகளையும் காணோம்’..தாடியும் மீசையுமா யாரோ ஒரு சாமியார் நாலைந்து இளம் விதவைகளோடு உட்காந்து ஏதோ பேசிக்கிட்டிருந்தார்.... எனக்குச் ‘சப்'பென்று போய்விட்டது; ‘பூ, இந்தச் சாமியாரா ராவணன் ?ன்னு உதட்டைப் பிதுக்கினேன். ‘ஒரு வேளை மாரீசனை முன்னாலே அனுப்பி வைச்சிட்டு, சீதையைத் தூக்கிக்கிட்டு வரதுக்காக இவர் சாமியார் வேஷத்திலே இருக்காரோ ?ன்னு குழம்பினேன். என் குழப்பம் பொன்னையாவுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் போல இருக்கு. அவர் என்னை ஒரு தினுசாப் பார்த்துக்கிட்டிருந்தார்..."