சேரமன்னர் வரலாறு/16. சேரமான் வஞ்சன்

விக்கிமூலம் இலிருந்து

16. சேரமான் வஞ்சன்

மலையாளம் மாவட்டத்தில் வயனாடு எனப்படும் வட்டத்திற்குப் பண்டை நாளில் பாயல் நாடு என்று பெயர் வழங்கிற்று. இப்போதுள்ள குடகு நாடும் இந்தப் பாயல் நாட்டில்தான் அடங்கியிருந்ததென்று அந் நாட்டு வரலாறு[1] கூறுகிறது. குடகு நாட்டுக் கல்வெட்டுகளும் மேற்கு மலைத்தொடரின் இப் குதியதைப் பாயல் மலையென்று குறிக்கின்றன எனக் குடகு நாட்டுக் கல்வெட்டறிஞரும்[2] எடுத்துரைக்கின்றனர். இப்போதும் மலையாளம் மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் நாடு வட்டத்தின் ஒரு பகுதி, பாயல் நாடு எனவே வழங்குகிறது. கி.பி. 1887-ல் ஆங்கிலேயராட்சியில் பாயல் நாட்டின் பகுதிகளான உம்பற்காடு, சேரன் நாடு என்பன நீலகிரி மாவட்டத்தோடு இணைக்கப்பெற்றன[3].

சேரவேந்தர் குடிவகையில் ஒருவகையினர் இப்பகுதியிலிருந்து ஆட்சி செய்தனர். அவருள் சேரமான் வஞ்சன் என்பவன் சிறந்து விளங்கினான். அவன் காலத்தில் திருவாங்கூர் நாட்டு ஆனைமுடிப் பகுதியும் அவனது ஆட்சியில் இருந்தது. பண்டை நாளை வஞ்சிக் களம் பிற்காலத்தே அஞ்சைக்களம் எனத் திரிந்தாற் போல், வஞ்சன் நாடு அஞ்சன் நாடு எனத் திரிந்து வழங்குகின்றது. இவ்வாறே வயனாடு வட்டத்திலுள்ள அஞ்சன்குன்று (அஞ்சன்குன்னு) என்பதும் வஞ்சன் குன்று என்பதன் திரிபாகும். இந்த அஞ்சன் நாடு கோடைக்கானற்கு மேற்கில் உளது. ஆகவே, வடக்கே வயநாடு முதல் தெற்கே கோடைக்கானல் வரையிலுள்ள மலைப்பகுதி சேரமான் வஞ்சனுக்கு உரியதாயிருந்தது என்றும் அதற்குத் தென்னெல்லை கண்ணன் தேவன் மலையென்றும் கொள்ளலாம்.

இவ்வாறு பரந்த மலைப் பகுதிக்குத் தலைவனாக விளங்கிய வஞ்சனது தலைமையான ஊர் இன்னது எனத் தெரியவில்லை. ஆனால், வஞ்சனைப் பாடிய திருத்தாமனார் அவ்வூரைப் “பெரும் பெயர் மூதூர்[4]” என்று குறிக்கின்றார். இதனால் அது வஞ்சனுடைய முன்னோர் வாழ்ந்து வந்த தொன்மையும் புகழும் உடைய ஊர் என்பது தெளிவாகிறது. அஞ்சனது பெரும் பெயர் மூதூர் இப்போதுள்ள நீலகிரி எனக் கருதுதற்கு ஏற்ற சான்றுகள் உள்ளன. இப்போதுள்ள குடகு, பாயல் நாட்டின் பகுதியாயிருந்த போது அதன்கண் அடங்கி யிருந்த அஞ்சனக்குன்று நீலகிரி என்று வடசொல்லாக மாறிற்று. அங்கு அஞ்சனகிரி என்ற ஒரு மாளிகையும் இருந்தது எனக் குடகு நாட்டில் கல்வெட்டாராய்ச்சியும் புதை பொருளாராய்ச்சியும் நிகழ்த்திக் கண்ட லூயி ரைஸ்[5] என்பார் குறித்துள்ளார். கோடைக்கானலின் பழைய வரலாறு, எவ்வாறு அஃது ஆங்கிலர் சென்று காண்பதற்கு முன்பே தமிழர் கண்டு வழங்கிய சிறப்புடையது என்பதைக் காட்டுகின்றதோ, அவ்வாறே நீலகிரியும் ஆங்கிலம் அறிந்த நகரமைக்கக் கருதியதற்கு முன்பே, தமிழர் அறிந்து வழங்கும் சால்புடைது என அறிஞர் அறிதல் வேண்டும். இதற்கு அந்த ஆங்கில மக்கள் நேர்மையோடு செய்து தந்த ஆராய்ச்சியே சான்றாவதையும் எண்ணுதல் வேண்டும். அஞ்சன் குன்று அஞ்னகிரியாகி நீலகிரியாயிற்று. அவ்வூரது காவலருமையும் வஞ்சனுடைய தோள் வன்மையும் தாமனாரது புலமைக்கு விருந்து செய்கின்றன. அவர் அவ்வூரைப் பெரும் பெயர் மூதூர் என்றும், வஞ்சனை, “வரையுறழ் மார்பின் புரையோன்” என்றும் புகழ்ந்து பாடுகின்றனர்.

ஒருகால், திருத்தாமனார் விடியற்போதில் கிணைப் பொருநரும் உடன்வர அவனது செல்வ மனைக்குச் சென்றார் முற்பக்கத்து நிலவு மறைய வெள்ளியாகிய மீன் தோன்றி விண்ணில் விளக்கம் செய்தது. கோழிச் சேவல் எழுந்து கூவத் தொடங்கிற்று. பொய்கைகளில் நெய்தல் முதலிய பூக்கள் மலரத் தொடங்கின. உடன் வந்த பாணர் யாழை இசைக்கத் திருத்தாமனார் அவனுடைய மனை முன்றிலில் பரிசிலர்க்கு என நிறுத்தப் பெற்றிருந்த பந்தரை அடைந்து அவன் மறபாண்பினைப் பாடலுற்றனர். அவ்விடம், பரிசிலர் குறுகுதற்கு எளிதேயன்றிப் பகைவர் புகமுடியாத அரிய காவல் பொருந்தியது. புலி துஞ்சும் மலை முழைஞ்சு, ஏனை விலங்கினங்கள் நுழைதற்கு அச்சம் விளைப்பதுபோல், அவனுறையும் மூதூர் பகைவர்க்குப் பேரச்சம் தந்து கொண்டிருந்தது.

தாமனார் பாடிய பாட்டைப் பாணரும் கிணைப் பொருநரும் கேட்போர் மனம் மகிழுமாறு யாழிசைத்தும் கிணைப்பறை கொட்டியும் பாடினர். பாட்டிசை சென்று உறங்கிக் கொண்டிருந்த வஞ்சனுடைய செவியகம் புகுந்து அவனைத் துயிலுணர்வித்தது. அவன் அப்பாட்டிசையைக் கேட்டு மனம் மகிழ்ந்தான். சொற் பெயரா வாய்மையும் தன்னையடைந்த இரவலர்பால் பெரருளும் உடையனாதலால், வஞ்சன் அவரது பாட்டு இசைக்கும் பொருளை நோக்கினான். இரப்புரை கலந்த அப் பாட்டு, “வேந்தே, நின்னை நினைந்து வரும் இரவலர்க்கு வேண்டுவன நல்கிச் சிறப்பிக்கும் வள்ளலாகிய நீ, எம்மைப் புறக்கணிக்காத மிக்க அருளுடையனாதல் வேண்டும்” என வேண்டிற்று.

அவன் உடனே எழுந்து போந்து திருத்தாமனாரை அன்போடு வரவேற்றான். அவர் பாடியது ஒரு சிறு பாட்டேயாயினும் அவனுக்கு அது நல்கிய மகிழ்ச்சியோ பெரிது. அதனால், அவன் முகம் மலர்ந்து அன்பு கனிய நோக்கி இன்னுரை வழங்கினான். வறுமைால் வாடி மாசு  படிந்திருந்த அவரது ஆடையை நீக்கிப் புத்தாடை தந்து புனைந்து கொள்ளச் செய்தான். இனிய தேறல் வழங்கப் பெற்றது. பின்பு தனக்கெனச் சமைக்கப்பெற்றிருந்த இனிய மான்கறியையும் சோற்றையும் தாமனார்க்கும் அவரோடு வந்த பாணர் முதலியோர்க்கும் நல்கினான்; தன் மார்பில் அணிந்திருந்த மணிமாலையையும் பூத் தொழில் செய்யப்பட்ட மேலாடையையும் தாமனார்க்குத் தந்து இன்புறுத்தினான்.

திருத்தாமனார் அவன் மனைக்கண்ணே சின்னாள் தங்கியிருந்த, அவன், தனக்கும் ஏனைப் பாணர் பொருநர் முதலிய பரிசிலர்க்கும் பெரும் பொருள் நல்கப் பெற்றுக் கொண்டு அவன்பால் விடைபெற்று ஊர் வந்து சேர்ந்தார்.

இச் சேரமான் வஞ்சனுடைய குடிமரபு பற்றியும் அவற்குப்பின் வந்த வேந்தரைப் பற்றியும் வேறு குறிப்பொன்றும் தெரியாமலே அவனது வரலாறு நின்று வற்றுகிறது.

  1. Imp. Gazett. Mysore & Coorg p. 278-9.
  2. Coorg. Ins. Int. p. 2.
  3. Malabar Series. Wynad. p.5.
  4. புறம். 398.
  5. R.L. Rice: Coorg. Ins. Vol. No. 10.