மகாபாரதம்-அறத்தின் குரல்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
முன்னுரை

காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. புதிய கதைகள், புதிய புதிய காவியங்கள், புதிய புதிய உண்மைகள், யுகத்துக்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை ஆண்டுக்கு ஆண்டு தோன்றிக் கொண்டே இருக்கின்றன. கதைகளும் அவை அமைக்கப்பட்ட காலச் சூழ்நிலையும், சம்பவங்களும் நாளடைவில் வலுக்குறைந்து நம்பிக்கைக்கு அளவுகோலான நிகழ்கால வரம்புக்கு நலிந்து போகலாம். கதையும் கற்பனையும்தான் இப்படி அழியும். அழிய முடியும். அழிக்க முடியும்.

ஆனால் சத்தியத்துக்கு என்றும் அழிவில்லை ! தர்மத்துக்கு என்றும் அழிவில்லை ! கதையும் கற்பனையும் சரீரத்தையும் பிரகிருதியையும் போல வெறும் உடல்தான். சத்தியமும் தர்மமும் ஆன்மாவையும், மூலப்பிரகிருதியையும் போல நித்தியமானவை. காலத்தை வென்று கொண்டே வாழக் கூடியவை. இதை மறுப்பவர் எவருமில்லை. எங்கும் இல்லை என்றும் இல்லை.

மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம். தமிழில் இந்தக் காவியத்தைப் பாடியவரும் ஐவர்; காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர். எனவே, இரு வகையாலும் ‘ஐவர் காவியம்’ என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாக விளங்குகிறது மகாபாரதம்.

நெருப்பைத் தொட்டவர்களுக்குத்தான் அது சுடுகிறது. நெருப்புக்குச் சுடுவதில்லை. தருமமும் இப்படி ஒரு நெருப்புத்தான். அறியாமையினாலோ, அல்லது அறிந்து கொண்டே செருக்கின் காரணமாகவோ, தருமத்தை அழிக்க எண்ணி மிதிக்கிறவர்கள் அந்தத் தருமத்தாலேயே சுடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தண்ணீரில் உப்பு விழுந்தால் தண்ணீரா கரைகிறது? உப்புத்தானே சுரைகிறது. நன்மையைத் தீமை நெருக்கினால் நன்மை அழிவதில்லை. தீமைதான் அழிகிறது.

துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்ற தீயவர்களையும் இந்தக் கதையில் காண்கிறோம். விதுரன், வீட்டுமன், தருமன், விகர்ணன், அர்ச்சுனன் போன்ற நல்லவர்களையும் காண்கிறோம். கர்ணனையும், வீமனையும் போலப் பலசாலிகளைக் காண்கிறோம். குந்தியையும், காந்தாரியையும் போலத் தாய்மார்களையும், திருதராட்டிரன், பாண்டு போன்ற தகப்பன்மார்களையும் காண்கிறோம். திரெளபதி, சுபத்திரை, சித்திராங்கதை போன்ற பெண் திலகங்களையும் இந்த மகாகாவியத்தில் தான் சந்திக்கிறோம். எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிக்கொண்டே ஒன்றுமறியாத பாமரன் போல் சிரித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவான கண்ணன் இதயத்திலிருந்து மறைவானா? அழகு மிளிரும் வாலிபப் பருவத்திலேயே போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த அபிமன்யுவுக்காக நாம் கண்ணீர் சிந்தாமல் இருப்போமா? எல்லா இன்னல்களுக்கும் அப்பால் குருஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த யுத்தத்திற்குப்பின் பாண்டவர்கள் மூலமாக உண்மையும், அறமும் வெற்றி பெற்றனவே. அதற்காக தம்முடைய இதயம் விம்மிப் பூரிக்காமல் இருக்குமா?

மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக்கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப் போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு மன அமைதியோடு கீழே இறங்கி வருவோம். இப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவது போல் முழங்கும் எண்ணம் யாது?

தர்மத்துக்குத்தான் வெற்றி
சத்தியத்துக்குத்தான் வெற்றி!
நேர்மைக்குத்தான் வெற்றி!
தியாயத்துக்குத்தான் வெற்றி!

இந்த எண்ணம்தான் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல் முழங்குகிறது. முழங்கிக்கொண்டே இருக்கட்டும். ‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ கேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! அப்படிக் கேட்பவர்களுக்கு நாம் இந்தப் பதிலைச் சொல்லுவோம்.

நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாத்தில் எதுவும் இல்லை.

நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது. அதை நாமும் நம்புவோம்; நம்பி வாழ்வோம்!

இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும் கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறேன். இந்த அறத்தின் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காலத்தை வென்று நிற்கப் போகிற தெய்வீகக் கதாபாத்திரங்கள். எனக்கு முன்பே வியாசர் முதல் வில்லிபுத்தூரார் வரை புனைந்து புகழ்ந்து கவிதையில் வனைந்து அழகு படுத்தப் பெற்ற பாத்திரங்களை நானும் தரையினாலாகிய இந்த நவீனத்தில் இயன்றவரை ஆக்கி அறிமுகப்படுத்துகிறேன். இந்த அறத்தின் குரலுக்குத் தமிழ்ப் பெருமக்கள் செவிசாய்ப்பார்களென்ற நம்பிக்கை யோடு இந்தச் சுருக்கமான முன்னுரையை முடிக்கிறேன்.

14-9-64 அன்பன்
சென்னை நா. பார்த்தசாரதி