மகாபாரதம்-அறத்தின் குரல்/தோற்றுவாய்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தோற்றுவாய்

உலகம் என்ற ஒன்று தோன்றிய நாளிலிருந்து அறம், மறம் என்னும் இரண்டு மாறுபட்ட பேருணர்ச்சிகளும் தோன்றிப் போராடித்தான் வருகின்றன. காலந்தோறும் வாழ்க்கை தோறும் மனித சமுதாயத்தின் உயர்நிலை தாழ்நிலை ஆகிய நிலைகள் தோறும் தர்ம அதர்ம யுத்தம் என்கிற இந்தச் சத்திய அசத்தியப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாகரிக வளர்ச்சியோ இதயப் பண்பாடோ, அல்லது சமூக முன்னேற்றமோ, எந்த ஒரு புதுமையின் முயற்சியாலும் உலகின் அழியாப் போராகிய இந்தப் போரை நிறுத்தவே முடியவில்லை. மண்ணும் விண்ணும் மண்ணையும் விண்ணையுங் கொண்டு வாழும் உயிரினங்களும் உள்ள வரை இந்தப் போரும் நித்தியமாக நிலைத்து நின்று நிகழும் என்பதை மறுக்க முடியாது. இதை வற்புறுத்துவது போலக் காலமும் கவிகளின் உள்ளமுமாக இணைந்து கொடுத்த எண்ணற்ற பல காவியங்களின் தொகுதி நம் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.

காவியங்களைக் கற்கும் போதும் ‘இது என்றோ நடந்தது; அல்லது கற்பனை செய்யப்பட்டது’ என்னும் நினைவு நமக்கு எழலாம். மெய்தான்! அப்படி எழுகின்ற நினைவு மனித மனத்திற்கு இயற்கையே. ஆனால் கால முற்பாடும், ‘கற்பனையோ?’ என்ற நினைவும் ‘காவியங்களில் அறப்பண்புகளும் மறப்பண்புகளும் மோதுகின்றன. இறுதியில் வெற்றி தோல்வியும் ஏற்படுகின்றது’ - என்ற நமக்குத் தேவையான உண்மையைச் சிறிதளவும் பாதிக்க முடியாதல்லவா? உண்மைக்கும் வாய்மைக்கம் நிகழ்ந்த போர் அரிச்சந்திரன் கதையாக நிலவுகிறது. விதிக்கும் தனி மனிதனுக்கும் நிகழ்ந்த போர் சிலப்பதிகாரக் கதையாகத் திகழ்கின்றது. கடமையைக் காக்க வேண்டுமென்று நேர்மைக்காக வந்து போராடிக் கொடுமையை அழித்த கடவுட் பிறப்பின் கதை இராமவதாரமாகக் காட்சி தருகின்றது. கட்டியங்காரன் என்ற ஒருவனின் மனத்தில் முளைத்த தீமை வித்து மெல்லக் கருகி அழிந்து சீவகன் என்ற திறமையாளனின் நல்மனம் நல்லன எண்ணி நல்லன செய்து நன்மை பெறும் மேன்மையைச் சீவக சிந்தாமணி தெரிவிக்கிறது. இன்னும் வளர்ப்பானேன்? வாழ்க்கையில் மட்டும் அல்ல, வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டிருக்கும் காவியம், கலை, கற்பனை ஆகிய இவைகளிலும் கூட அறவுணர்ச்சிகளும், மறவுணர்ச்சிகளும் வந்து கலகமிடுகின்றன. மென்மையும் வன்மையுமான இந்த நேர்மாறான இரு துருவங்கள் போன்ற உணர்ச்சிகள் கொடிய முறையில் காக்கும் போது எளிய முறையில் மென்மையாக இயற்றப்பட வேண்டிய காவியங்களின் தாய்ச் சரக்கு என்னும் மூலப் பொருள் கிடைக்கிறது. உலகின் நாற்றிசைகளிலுமுள்ள உயிரிணம் முழுதுமே அறச் சார்புடையதாய், நேர்மை ஒன்றே நோக்கமாக வாழும் வழி எப்போதோ, எப்படியோ ஏற்பட்டு விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அன்று தொடங்கி வாழ்க்கையில் - உலக வாழ்க்கையில்தான் - சுவை, ஆர்வம், விரைவு என்ற இந்த அவசியமான அம்சங்கள் செத்துப் போகும். கலை, கற்பனை, காவியம் இவைகளும் மூலப் பொருளான தாய்ச் சரக்கு இல்லாமல் ஏங்கி நிற்க வேண்டியது தான்! எனவே அறத்தின் பெருமை, என்ற இந்த மாபெரும் ஒளி விளக்கமுற்று இலங்குவதற்கு வாழ்க்கையிலும் சரி, காவியத்திலும் சரி, மறத்தின் தீமை என்ற புலையிருள் பொதிந்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

காவியப் பண்பு

அறுசுவையில் கைப்பு என்ற ஒன்று, பெரும்பான் மையாக - ஏன் முற்றிலுங்கூட உலகில் எவராலும் விரும்பப் படுவதில்லை. அதற்காக அந்த சுவையிலும் அதைச் சார்ந்த பொருள்களிலும் நாம் குரோதங்கொண்டு அழித்து விடவா செய்கிறோம்? அல்லது அவைகளாகவே அழிந்து விடத்தான் செய்கின்றனவா? இரண்டும் இல்லையே? வாழ்க்கையிலும் மறத்திற்கு இத்தகைய விலக்க இயலாத ஓர் இடம் ஏற்பட்டு இருக்கின்றது. கைப்பு என்றோர் சுவை இருப்பதனால்தானே இனிப்பின் பெருமை விளங்குகின்றது. அதுபோல, மறம், பாவம், தீமை என்ற இந்த விலக்கப்பட்ட குணங்களுக்கும் வாழ்வில் நிற்குமிடம் நிலைத்தவையாக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அறம், ஒழுக்கம், நேர்மை என்ற இந்த விதிக்கப்பட்ட குணங்களுக்கு உலக வாழ்வில் ஒளியும் பெருமையும் நிலைத்திருக்கின்றன. கைகேயியின் இரக்கமின்மையாலேயே இராமனுடைய பரந்த புகழ் என்னும் அமுதம் உலகுக்குப் பருகக் கிடைத்ததாகக் கம்பன் கூறுகின்றான். பகைப்புலனாக நிற்கவல்ல எதிர்மறைப் பண்பு ஒன்றினால்தான் காவிய குணமாகிய உடன்பாட்டுப் பண்பு ஒன்றை நிலை நிறுத்திக் காட்டுவதற்கு இயலும். இதிகாச காவியங்களாகிய இராமாயணம், பாரதம், முதலியவற்றின் கதைப் போக்கில் பகைப்புலனின் பண்பாலேயே காவியம் கூறக் கருதும் பொருளை வற்புறுத்தும் நிலையைக் காணலாம். காவியத்தில் எந்தச் சில பாத்திரங்களின் சார்பாக, அவற்றின் வெற்றி நோக்கிக் கதையாகச் சித்திரித்துச் சொல்லப்படுகின்றதோ, அந்தச் சில பாத்திரங்களின் வாழ்வே அந்தக் காவியம் முழுவதும் ஊடுருவி நிற்கின்றது எனக் கொள்ளலாம். இதிகாச காவியங்களைப் பொறுத்த வரையிலோ இது பெரிதும் பொருத்தமான மெய்யாகத் தோன்றுகிறது.

யாருடைய காவியம்?

மகாபாரதம் பெயரளவைக் கொண்டு நோக்கும் போது பாரத யுத்தத்தைப் பற்றிய கதை என்ற பொருளைத் தருமானாலும் உண்மையில் பாண்டவர் ஐவரின் வெற்றியை அறத்தின் வெற்றியாகச் சித்திரிப்பதே பாரதத்தின் தாத்பரியம். துரியோதனாதியர், கண்ணன் முதலியவர்களுக்கும் பாரதக் கதைக்கு இன்றியமையாத பாத்திரங்கள் என்பதை இங்கே மறுக்க வில்லை. ஆனால் பாரதம் என்ற இந்த மாபெரும் காவியம் காட்டுகின்ற வாழ்க்கை துரியோதனாதியருடையதும் அன்று, கண்ணனுடையதும் அன்று, முற்றிலும் ஐவருடைய வாழ்க்கையே, துரியோதனாதியர், கண்ணன் என்னும் இவர்கள் இடையிடையே இக்காவியத்தில் வருகின்றார்கள் எனினும் பாண்டவர்களாகிய ஐவருக்கே வாழ்வுரிமை கொடுப்பது தான் இக்காவியத்தின் நிலைக்களன் ஆகும். தருமன், வீமன், விசயன், நகுலன், சகாதேவன் என்னும் இவர்கள் ஐவருடைய வாழ்க்கையில் அறத்திற்கு ஏற்பட்ட சோதனைகளும் இறுதியிலே அறம் வெற்றி பெற்றதும் ஆகிய இவற்றின் முழுவடிவமே பாரதம். இஃது அறத்தின் காவியம்; அறச்சார்போடன்றி வாழலாகாது என அறவாழ்விற்காகப் போரிட்ட ஐவர்கள் காவியம். அறமும் மறமும் மோதி முரண்பட்டுப் போராடும் போது நேர்மையையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ முயன்ற ஓர் ஐந்து சகோதரர்கள் அடைந்த இன்னல்களையும் முடிவில் தருமத்தின் வெற்றியை இவர்கள் வாழ்வின் வெற்றியாக விளக்கிப் பேசுவதையும் தனதாகக் கொண்டு சொல்லும் ஒரு நெடுங்கதைதான் மகாபாரதம். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதக் கதை அன்றே தமிழ்நாட்டில் மக்கள் விருப்பத்திற்குரிய பெருங்கதையாகத் திகழ்ந்து வந்ததை அறிகிறோம். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியம் முதலிய நூல் வகைகளில் ஆங்காங்கே பாரதக் கதையைச் சிறப்பித்தும், சான்றாக எடுத்தாண்டும் போற்றியிருக்கக் காண்கிறோம். இதைத் தவிரப் பாரதக் கதைக்கு வேறோர் சிறப்பும் அமைந்துள்ளது. இராமாயணம் என்ற இதிகாச காவியத்தைத் தமிழில் இயற்றும் சிறந்த நோக்கம் கம்பர் ஒருவருக்கே ஏற்பட்டது. ஆனால் பாரதத்தையோ சங்க காலத்துப் பெருந்தேவனாரிலிருந்து நேற்றைய பாரதியார் வரை ஒவ்வொரு புலவரும் தமிழ்க் காவியமாக ஒவ்வொரு நோக்குடன் அமைக்க ஆசையுற்றிருக்கின்றனர். இந்தக் கருத்துடனே காணும் போது இராமாயணத்தைக் காட்டிலும் பாரதம் தமிழ்ப்புலவர்களை மிகுதியாகக் கவர்ந்திருக்கின்றதென்ற உண்மை புலப்படும். கடவுள் மனிதனாக அவதரித்து அறத்தைக் காப்பதற்கு முயன்ற கதை இராமாயணம் என்றால், மானிடர்களாக உடன் பிறந்த ஐந்து சகோதரர்களின் வாழ்க்கையில் அறத்தைக் காக்க முயன்ற கதையே பாரதம். இராமன் என்ற அவதார புருஷன் சிலரையும் பலரையும் இயக்கி நிகழ்த்தின அவதார நாடகமே இராமாயணம். ஆனால் பாரதம் அவ்வாறில்லாமல் ஐவர் வாழ்க்கையில் அவரவர் இயக்கத்தைக் காட்டும் காவியம். இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங்களுக்கும் இடையிலுள்ள இந்த வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாரதக் கவிஞர்கள்

தமிழில் தோன்றிய முதல் பாரத காவியமாகிய பெருந்தேவனார் பாரதம் இப்போது கிடைக்கவில்லை. சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவராகிய இந்தப் பெருந்தேவனார் தவிர ஒன்பதாம் நூற்றாண்டின்ராகிய மற்றோர் பெருந்தேவனார் பாரத காவியத்தை வெண்பாக்களால் இயற்றினார். இப்பாரத வெண்பாவின் பெரும் பகுதி இப்பொழுது கிடைக்கின்றது. அச்சிட்டும் வெளியிட்டிருக்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக விரிவான முறையில் பெருங்காப்பிய அமைப்புடன் தமிழில் பாரதக் கதையை இயற்றிய ஒரே ஓர் ஆசிரியர் வில்லிப்புத்தூரார் தாம். நாலாயிரத்து முந்நூற்று முப்பத்தொன்பது பாடல்களால் வில்லி பாடிய அதே காவியத்தை வில்லிக்குப் பிற்பட்டவராகிய நல்லாப்பிள்ளை என்பவர் பதினையாயிரத்து முந்நூறு பாடல்களாகப் பெருக்கி அமைத்தார். வில்லியின் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம் பாடல்களும், நல்லாப்பிள்ளை அவற்றுடன் கலந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களும் சேர்ந்த மொத்தத் தொகுதிக்கே நல்லாப்பிள்ளை பாரதம் என்று பெயர். நல்லாப்பிள்ளையின் ஒருசாலை மாணாக்கராகிய முருகப்பிள்ளை என்பவர் பாடிய பாடல்களும் இதில் கலந்துள்ளன என்பது சிலர் கருத்து. இவர்களுக்கெல்லாம் பிற்காலத்திலே நம்முடைய தலைமுறையில் வாழ்ந்து மறைந்த வரகவியாகிய பாரதியார் முற்றிலும் புதியதொரு நோக்குடன் பாரதத்தின் ஒரு பகுதியைக் காவிய அமைப்புடன் தமிழில் படைத்தார். சூதாட்டம், அதில் திரெளபதியையும் தன்னையும் தம்பியரையும் தன் உடைமைகளையும் தருமன் இழந்து போவது ஆகிய இந்நிகழ்ச்சிகளே குருட்சேத்திர யுத்தத்துக்குக் கால்கோளென்பதை நன்கறிந்தவராகிய பாரதியார் ‘பாஞ்சாலி சபதம்’ என்று தம் காவியத்திற்கு மகுடமிட்டுக் கொண்டார். பாஞ்சாலியின் சபத மொழியையே தமது புதுக்காவியத்தின் மையப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் கவியரசர் பாரதியார். வில்லி பாரதத்தில் சபாபருவத்தில் விவரித்த செய்திகளையும் பாரதக் கதையின் இயற்கையான முடிவையும் இணைத்து இடப்பட்ட தலைப்பிற்கும் பொருத்தமாகப் பாஞ்சாலி தன் சபதத்தை நிறைவேற்றிக் கூந்தலை முடித்துக் கொள்வதோடு காவியத்தை முடிவு செய்து விடுகின்றார். சுருக்கமான காவிய அமைப்பாலும், பாரதியாரது ஆற்றொழுக்குப் போன்ற தமிழ் நடையும் காவியப் பாத்திரங்களின் குணசித்திர வரம்பும் சிறந்து விளங்குவதாலும், தமிழிலுள்ள பாரதக் கதைகளில் தனக்கென ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுவிட்டது பாஞ்சாலி சபதம். பாரதம் ஐவராகிய பாண்டவர்களின் வாழ்க்கையை பேசும் காவியம் என்று கண்டோம். இதில் ஒரு சிறப்பான ஒற்றுமை இயற்கையாகவே அமைந்து சிறப்பளிக்கிறது பாருங்கள். பாரதத்திற்கு பாண்டவர் ஐவரே போலத் தமிழில் பாரதக் கதையை இயற்றிய காவிய ஆசிரியர்களும் ஐவர்தாம். சங்க காலத்தினரான பெருந்தேவனார் முதல் இருபதாம் நூற்றாண்டினரான பாரதியார் வரை ஐந்து காவிய கர்த்தாக்களையே பாரதம் கவர்ந்திருக்கின்றது. எனவே, ஐவர் காவியம் என்ற தலைப்பு இரண்டு வகையாலும் பொருத்தமானதாகவே அமைந்து விடுகிறது. தருமன் முதல் சகாதேவன் இறுதியாகவுள்ள காவியப் பாத்திரங்களும் ஐவரே. பெருந்தேவனார் முதலாகப் பாரதி இறுதியாக உள்ள பாரதம் பாடிய புலவர்மணிகளும் ஐவரே. இஃது ஐவருடைய காவியம் மட்டுமன்று; தமிழில் ஐவரால் பாடப்பெற்ற காவியமும் ஆகும்.

இந்தத் தொடர்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற சங்ககாலத்துப் புலவர் ஒருவரைத் தவிர ஏனைய புலவர்களின் காவியங்களே பாரதத்தைப் பற்றி இப்போது நமக்குக் கிடைக்கின்றன என்பதை முன்பே அறிந்தோம். ஐவர் காவியம் என்ற இத்தொடரின் நோக்கம். தமிழிலுள்ள பாரதக் கதைகள் - அனைத்தையும் காவிய ஒப்புநோக்கு முறையில் எளிய இனிய கதைத் தொடராக விமர்சிக்க வேண்டும் என்பதே ஆகும். பாரதக் கதையைப் பற்றி தமிழில் இந்த நூற்றாண்டில் எண்ணற்ற உரைநடை நூல்கள் எழுந்துள்ளன. தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் பெருந்தகையாராகிய இராஜாஜி அவர்கள் வியாச பாரத காவியத்தை ‘வியாசர் விருந்து’ என்ற அரும்பெரும் கலை விருந்தாக அளித்துள்ளார்கள். ஆனால் வில்லி, நல்லாப்பிள்ளை, பாரதி, பெருந்தேவனார் (ஒன்பதாம் நூற்றாண்டு) என்னும் இவர்கள் ஒவ்வொருவரும் இயற்றிய காவியங்களைத் தழுவி அவற்றின் எளிய விமர்சனமாக அமைக்கப்பட்ட பாரத உரைக் கோவை இன்றுவரை எவராலும் எழுதப்படவே இல்லையென்று துணிந்து கூறலாம். தமிழில் இந்த முயற்சி புதுமையும் இனிமையும் பொருத்திய ஒன்றாக அமைவதற்குத் தடையே இல்லை.

பாரதமும் பாத்திரங்களும்

பாரதக் கதையின் பாத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, வாழ்க்கைக்குத் தேவையான நன்மைப் பாற்படுகின்ற உடன்பாட்டுக் குணங்களையும் வாழ்க்கைக்குத் தேவையற்ற தீமைப் பாற்படும் எதிர்மறைக் குணங்களையும் ஒருங்கே அறிந்து கொள்ளுகின்றோம். ‘அறமே குறிக்கோள்' என்று நிற்போரையும் அங்கே காண்கின்றோம். ‘ஆண்மையே யாவும் - என்று பேசுவோரையும் அங்கே காண்கின்றோம், ‘மறமும், தீமையும், சூதும், வஞ்சகமுமே வாழ்வு’ என்று மயங்கித் தவறான வழிகளால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளுபவர்களையும் காண்கின்றோம். மனித வாழ்க்கையில் என்றுமே நிலைத்த அமைப்போடு இடம் பெற்றிருக்கும் உத்தம், அதம், மத்திய குணங்கள் பாரதக் கதையின் போக்கிலேயே முற்றிலும் முழுமையாக அமைந்திருக்கின்றன. பாத்திரங்களின் மூலமாக அந்தக் குணங்களைப் புரிந்து தெளிவு கொள்கின்ற காவிய நேயர் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையிலே ‘கடைப்பிடிக்க வேண்டிய குணங்கள் யாவை? நீக்க வேண்டிய குணங்கள் யாவை?’ என்பதை நன்றாக உணர்வதற்கு முடிகின்றது. இத்தகைய பயன் கனிந்த பேருணர்வை உண்டாக்குவதுதான் உன்னதமான காவியம் ஒன்றின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். பாரதம் ஓர் உன்னத காவியமாகையால்தான் அதன் குறிக்கோளும் இவ்வாறு பொருந்தியிருக்கிறது. இப்பொருத்தத்தைச் சற்றே விளக்கமாகக் காண்போம். ‘தருமன்’ - என்று ஒரு பாத்திரம் பாரதக்கதையின் உயிர்நாடி. அன்பு, அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் என இவ்வாறு வரும் மேனிலைப் பண்புகளாலேயே படைக்கப்பட்ட பாத்திரம், தன் வாழ்வைச் சுற்றி எழுகின்ற எண்ணத் தொலையாத சூழ்ச்சிகளையும் சோதனைகளையும், மனத்திற்குத் தோன்றியபடி வெல்ல வேண்டும் என்றெண்ணாமல், அறத்திற்காகத் தாங்கி நிற்கும் பொறுமையைத் தருமனிடம் காண்கின்றோம். 'இரும்பை இரும்பால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற அரசியற் கருத்துள்ள பழமொழிகளை அறியாதவன் அல்லன் தருமன். ‘வில்லும், வாளும் ஏந்திப் போர் செய்யும் திறனும், அரசியலை எப்படி நடத்தவேண்டும் என்ற சூழ்ச்சியைக் கற்பிக்கும் அரசியல் நூல்களும், தனக்குத் தெரியாதவை என்ற பலவீனம் தருமனிடம் இல்லை. ‘வாழ்க்கையில் ஒருமையான சட்டம் அறம். அதை மீறியோ, விலகியோ, வாழ்வது பிழை’ என்ற உயரிய நோக்கு அவனுக்கு இருந்தது. அந்த நோக்கு ஒன்றினால்தான், ‘மற்றைய வழிகள் அவனுக்குப் புலப்படவில்லையோ?’ - என்று நாம் ஐயுறுகின்ற அளவிற்கு அறம் பழுத்த வாழ்வாக விளங்கிற்று அவனுடைய வாழ்வு. இதயம் பண்பாட்டுக் கனிந்த நிலை அடைந்திருந்தால் ஒழிய இப்படிப்பட்ட வாழ்வு சாத்தியமில்லை. கைகுவித்து வணங்க வேண்டிய கடவுள் வாழ்க்கை அல்லவா இது? பீமனை நோக்கினால் ‘வாழ்ந்தால் ஆண்மைக்காக வாழவேண்டும்’ என்ற நோக்கு அவனுக்கு அமைந்திருந்ததை உணர்கிறோம். தருமன் அறத்தின் பெயரால் பொறுமை கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் வீமன் ஆண்மையின் பெயரால் குமுறுவதைக் கண்டு இருவருக்குமுள்ள பண்பு வேறுபாடு புலனாகிறதைத் தெளியலாம். ஆண்மை ஒன்றே கொழித்து வளர்வதற்கு ஏற்றபடி வீமனுக்கு உடலும் உள்ளமும் மென்மை விரவாத தனி வலிமையினால் ஆகியிருந்தன. இந்த ஆண்மையும் தீமை கலந்த ஆண்மை அன்று, தீமையைக் கண்டு பொறுக்க முடியாமல் குமுறுகின்ற நேரிய ஆண்மையே. தருமனுக்கு இருந்த 'பொறுமையுள்ளம்’ வீமனுக்கு இல்லை. வீமனுக்கு இருந்த ‘தீமை கண்டு சீறும் ஆண்மை நெஞ்சம்’ தருமனுக்கு இல்லை.– இதுதான் இவர்களிருவருக்கும் இடையேயுள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு இல்லை என்றால் காவியத்தில் சுவையும் விறுவிறுப்பும் எப்படி இருக்க முடியும்? அருச்சுனனுடைய வாழ்வோ, காதல், வீரம் உணர்ச்சி ஆகிய மூன்று வேறு பண்பு நிலைகளிலும் மாறி மாறித் திகழ்கிறது. மென்மையும் வன்மையும் சம அளவில் விரவி இணைந்த வாழ்வு அது. தருமனுக்கு அடுத்த நிலையில் உள்ளப் பண்பாட்டினால் எய்தும் பெருமை அருச்சுனனுக்கே கிட்டுகிறது. வீமனைப் போலத் தீமையைக் கண்டு குமுறிக் கொதிக்கும் உணர்ச்சி மயமான உள்ளம் அருச்சுனனுக்கு இல்லை என்றாலும் தீமை கண்டபோது, அதை அழிக்க வேண்டும் என்ற இயற்கையான உணர்வும், வில்லைத் தேடி விரையும் கரங்களும் இருந்தன. இதேபோல அழகையும் மென்மையையும் நுகரவேண்டும் என்ற கலையுணர்வும் அவனுக்கு இருந்தது. அவற்றைக் காதலித்து நுகரவேண்டும் என்ற மன ஆர்வமும் அவனுடைய உள்ளத்திற்கு இருந்தது. வில்லைப் பிடித்த கைகளுக்கு மலர் மாலைகளை ஏந்தவும் தெரிந்திருந்தது. சுருங்கக் கூறினால் வீரத்துடனே அழகு உணர்ச்சியும் அருச்சுனனிடம் நிறைந்திருந்தது. இது தருமனுக்கும் வீமனுக்கும் இடைப்பட்ட ஒருவகைக் குணச்சித்திரமாக அமைந்து சிறப்பை அளிக்கின்றது. நகுல், சகாதேவர்களுடைய குணங்கள் தெளிவாக விளங்கும்படியான முறையில் பாரதக் கதையைப் பற்றி நிகழும் எந்த ஒரு காவியமும் அவர்களுடைய குணங்களைச் சிறப்பாக வரையறுத்துக் கூறக் காணோம். பாரதக் கதையில் மிகச் சாதாரணமான துணைப் பாத்திரங்களைப் போலவே இவர்கள் எப்போதாவது வந்து போகின்றனர். இவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளோ மிகச்சில இடங்களிலேயே குறுகிய முறையில் கூறப்பட்டுள்ளன. ஆகையால் நகுல சகாதேவர்களின் குணங்களை மிக உன்னதமாகவோ, இழிவாகவோ, எந்த வகையிலும் தெளிவு செய்து ஒப்பிடுவதற்குரிய வாய்ப்பு நமக்கு இல்லை. பாண்டவ சகோதரர்களில் அவர்களும் இக்காவியமாகிய பெருவாழ்வில் இடையிடையே வந்து போகும் இருவர் என்ற முறையிலும் அவர்களைப் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம், அதுவே இப்பொழுதுக்கு இங்கே பொருத்தமாக ஏற்பது. இதுவரை பகைப் புலனுக்கு நேர் எதிரிடையாகவும் காவியக் கருத்துக்கு உடன்பாடாகவும் நின்ற பாத்திரங்கள் ஐந்தைக் கண்டோம். இனிக் காவியக் கருத்துக்கு எதிரிடையாகவும் பகைப்புலனுக்கு உடன்பாடாகவும் நிற்கும் துரியோதனன் முதலிய பாத்திரங்களைப் பற்றிக் குண அமைப்பு முறையை அறிந்து கொள்ள முற்படுவோம். இருளில் கொண்டு போனால் தானே விளக்கு ஒளியைக் கொடுக்கும். வேறோர் விளக்கு இருக்கும் இடத்திற்கோ, அல்லது பகல் நேரத்திலோ, விளக்கின் ஒளி எடுத்துத் தோற்றாது அல்லவா? இதே போலத்தான் காவியத்தில் நேர்புலனும், பகைப்புலனும். இரண்டுமே நேர் புலனாக இருந்துவிடுமானால் ஒளிக்கு முன் ஒளிபோல விளக்கமிழந்து போகும். பாண்டவர்களைப் போலவே கெளரவர்களையும் படைத்திருந்தால் பின் ‘பாரதம்’ என்ற இந்தக் காவியந்தான் ஏது? கதைதான் ஏது? பாண்டவர்களுக்கு நேரிய அறத்தையும் வீரத்தையும் குணமாக்கிக் கௌரவர்களுக்குப் போலி வீரத்தையும், பொய்மையையும் குணமாக்கியதனால்தானே பாரத காவியத்தை அடைய முடிந்தது? துரியோதனனை அறிவும் சிந்தனை வளமும் உடைய ஒருவனாகக் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. தீயவனாயினும் அறிவும் சிந்தனை உள்ளவனாக இருந்திருக்கலாம் அல்லவா? தெளிவற்ற அறிவோடு தகுதியற்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காத ஒரு மனநிலையை அவனிடம் காண்கின்றோம். பிறர் காட்டும் தவறான வழிகளில் சென்று விடுகின்ற அளவு பலவீனமுடையது அவன் அறிவு. இல்லையென்றால், சகுனி முதலியவர்கள் கருத்தை அப்படியே ஏற்று அதன்படி நடக்கின்றவரை சிந்திக்கும் திறமின்றிக் கழிந்திருக்குமா அவன் மனம்? சூழ்ச்சியும், வஞ்சகமும், தீமையும் புரிகின்ற இறுக்கமான மனத்திடமும் சொந்தமாக அவனிடம் இல்லை. சூழ்ச்சி முதலிய தீய பண்புகள் அவனை ஒரு வெறுங்கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு பாண்டவர்களைத் துன்புறுத்தின என்றே கூறுதல் தகும். சகுனி முதலிய தீயோர் அதை வற்புறுத்தித் தூண்டும் துணைக் கருவிகளாக இருந்தார்கள். ஆகவே அறிவுத் தெளிவற்ற சிந்தையும் சூழ்நிலையும் துரியோதனனைத் தீயவைகளைக் கூசாமற் செய்பவனாக ஆக்கியிருந்தன எனலாம். கர்ணன், அவனைப் பொறுத்தமட்டில் தனி நிலையில் சிறந்த வீரனாகத் தோன்றினாலும் பொறாமை, ஆத்திரம், அளவிறந்த மானம் என்னும் இம்மறைக் குணங்களால் கெளரவர்களைப் போலவே தானும் ஒரு தீயவனாகவே தோற்றம் பெற நேரிடுகின்றது. கொடையும், குன்றா வீரமும் ஆகிய இருபெரும் பண்புகளைப் பெற்றிருந்தும் அவன் எந்த ஒரு நல்ல பண்பையும் பெற முடியாத கெளரவர்களில் தானும் ஒருவனாக விளங்க வேண்டியதாகின்றது. சகுனியோ கல்மனமும் தீமைப் பண்புகளுமே முற்றிய கொடியவனாகச் சித்திரிக்கப்படுகின்றான். துச்சாதனன் முதலிய மற்றையோரையும் இந்த வகையிலேயே சேர்க்க நேரிடுகின்றது.

திருதராட்டிரன் குண அமைப்பு அநுபவமும் முதுமையும் பொருந்திய ஓர் அரசனுக்கு ஏற்ற இயல்பான முறையில் பெரும்பகுதி நன்மைக் கூறுபாடும் சிறு பகுதி தீமைக் கூறுபாடும் உடையதாக வரையறுக்கபட்டிருக்கிறது. விதுரன், வீட்டுமன், துரோணன் முதலிய சான்றோர்கள் சான்றாண்மைக்குரிய குணக்குன்றுகளாகவும் கடமை வீரர்களாகவும் இக்காவியத்தில் ஒளியுற்று இலங்குகின்றனர். இனி பாண்டவர், கெளரவர், இருசாரார்க்கும் ஆதி காரணமாய் நின்று பாரதக் கதையை நிகழ்த்திச் செல்லும் கண்ணனும் இக்காவியத்தில் ஒரு பாத்திரமே. இறைமையின் பேராற்றல்கள் யாவும் நிறைந்த இறையம்சத்திற்குரிய தலை பெரும் பாத்திரமாக வருகின்றான் கண்ணன். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே தூதுவனாகச் செல்லும் நிலையிலும் போர்களத்திலும் தயக்கமுற்ற அருச்சுனனைத் தேற்றிப் 'போர் செய்யலாம்’ என்று அறிவுரை கூறும் நிலையிலும் கண்ணனின் இறைமைக் குணங்கள் நுணுக்கமான முறையில் விளங்குகின்றன. பரம்பொருளின் சாயையான மனிதனாக உலாவினாலுமே காண்போர்க்கு அங்கங்கே எண்ணத்தால் வியப்பும் அருள் நிறை அன்பும் நல்கும் பாத்திரம் கண்ணனே. பாரதகாவியத்தில் ஆடவர் என்னும் பிரிவிலடங்கும் பாத்திரங்கள் இங்கு மேலே விவரித்த இவ்வளவோடு அமையாமல் இன்னும் பலராக எண்ணற்றுப் பரந்து கிடக்கின்றனர். ஆனால் பாரத காவியத்தின் இன்றியமையாத ஆண் பாத்திரங்கள் என்ற முறையில் இங்கு மேலே விவரித்த சிலரே அமைகின்றனர்.

ஆகையால் அவர்களைப் பற்றிய செய்தியை இவ்வளவில் நிறுத்திவிட்டு இனி மேலே சில பெண் பாத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள முற்படுவோம். பாண்டவர்களின் தாய் குந்திதான் வரிசை முறைமையாலும் தகுதியாலும் பாரதத்தின் முதற்பெண் பாத்திரமாக இலங்குகின்றாள். பாண்டவர்கள் பிறப்பதற்கு முன்பும் பாண்டுவை மணந்து கொள்வதற்கு முன்பும் முனிவர்க்கும் பெரியோர்க்கும் தொண்டு செய்து கழித்த இவளுடைய கன்னிப் பருவம் கள்ளங்கபடமற்ற முறையில் தூயதாகத் தோற்றுகிறது. கதிரவன் அருளால் கர்ணன் பிறந்தபோது பயமும் குழப்பமும் அடைந்து, அவனைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடும்போது இத்தகைய நிலைகளில் இயல்பாக ஓர் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மன நிலையையே குந்தியிடமும் காணமுடிகிறது. அரக்கு மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்று வேத்திரகீயத்தில் ‘ஐந்து புதல்வர்களோடு தனிமை வாழ்க்கை நடத்தும் போதும், பிற்காலத்தில் போர்க்களத்தில் கர்ணனைத் தனியே சந்தித்துத் தான் அவனுக்குத் தாய் எனவும், பாண்டவர்கள் அவனுக்குச் சகோதரர்கள் எனவும் கூறி அவனைப் பாண்டவர் பக்கம் சேருமாறு கேட்கும் போதும், குந்தியின் மாசு மறுவற்ற தாய்மையுணர்ச்சி தெளிவாக அமைந்து விளக்கம் பெறுகிறது. இக்காவியத்தில், குந்திக்கு அடுத்தபடியாக இங்கே குணவிளக்கம் பெறுவதற்கு உரியவள் பாஞ்சாலி. பல்வேறு நிலைகளிலும் அவ்வவற்றிற்கேற்பப் பாஞ்சாலியின் குணப்போக்குச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. திருமண ஏற்பாடு, சுயம்வரம், இவைகளுக்கு முன் இருந்து கன்னிப்பெண் பாஞ்சாலிக்கும், துரியோதனன் தருமனுடனே சூதாடி உன்னை வென்றான், என்றபோது ‘தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா? தன்னை இழப்பதற்குமுன் என்னை இழந்தாரா?’ என்று உரிமைக் குரல் கொடுத்து உணர்ச்சியோடு கேள்வி கேட்கும் பாஞ்சாலிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு பாருங்கள்! துரியோதனன் அவையில் தான் இழிவு செய்யப்பட்டபோது, ‘இனி மனிதர் துணையால் நம் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது’ என்று உணர்ந்து தோன்றாத் துணையாகிய பரம்பொருளின் உதவியை நாடும் நிலையிலும் இவளுடைய அறிவுத் திறனையே காண்கிறோம். குந்தியைக் காட்டிலும் சிறப்பான வேறு ஒரு தகுதியும் பாஞ்சாலிக்கு எய்துகின்றது. குந்தியைப் போல் காவியத்தில் அங்கங்கே வந்து போகும் பாத்திரமாக இராமல் காவியம் முழுதும் 'தலைவி' என்ற இடத்தைப் பெறும் பேறு இவளுக்கு இருக்கிறது, பாரதம் பாண்டவர்களாகிய ஐவர்கள் காவியம் என்றால் பாஞ்சாலிதானே அதன் தலைவி? இந்த நோக்கில் பாஞ்சாலியின் குணசித்திர அமைதி பற்றி எவ்வளவு விவரித்தாலும் ஏற்கும். ஆனால் இது சுருக்கமான அமைப்புடைய முன்னுரை என்பது பற்றி இவ்வளவில் நிறுத்த வேண்டியிருக்கிறது. கெளரவர்களுக்குத் தாயாகிய காந்தாரியைப் பற்றிக் காவியத்திலிருந்து பொதுவாக அறிந்து கொள்ள முடிகின்றதே அல்லாமல் குணசித்திரம் என்ற முறையில் தெளிவாக விளங்குவதற்குரிய அவ்வளவிற்குப் பெரும் பங்கு இவளுக்கு இக்காவியத்தில் இல்லை. எனவே, குந்தியைப் போல ஒரு பெரும் பாத்திரமாகக் கொண்டு காந்தாரியைப் பற்றி விளக்குவதற்கு விவரங்கள் எவையும் இங்கே கிடையா. துரியோதனன் மனைவியாகிய பானுமதியைப் பற்றிச் சிறிதளவு கூறலாம். பாஞ்சாலியைப் போல வாழ்க்கைச் சோதனைகளையும் துயரங்களையும் அனுபவிக்கும் சந்தர்ப்பம் ஒன்றாயினும் இவளுக்கு நேரவில்லை. ஆகையால்தான் குணங்களால் தீமையற்ற, நன்மகளாக இருந்தும் இவளுடைய குணம் சிறப்பாகத் தோன்றுவதற்குரிய வாய்ப்பு இல்லாமலே கழிந்துவிட்டது. வஞ்சகக் கலப்பில்லாத தூய்மையான வெள்ளையுள்ளமும், பிறருக்குத் தீமை நினையாத எண்ண நலமும் பெற்றிருந்தும் இவளுடைய நலம் பெரிதும் பாராட்டிச் சித்திரிக்கப்பட படாமைக்கு இதைத் தவிர வேறெந்தப் பெரிய காரணமும் கூறுவதற்கில்லை. எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் காணலாம். துரியோதன மன்னன் அரண்மனையில் இல்லாத ஒரு பொழுதில் அவன் மனைவி பானுமதி துரியோதனனுக்கு நெருங்கிய நண்பன் என்ற முறையுரிமை கொண்டு கர்ணனோடு சொக்கட்டான் விளையாடிக் கொண்டி ருந்தாள். விளையாட்டில் தன்னை மறந்து இலயித்துப் போய் ஈடுபட்டிருந்த கர்ணன் சிறிது நேரத்தில் துரியோதனன் அங்கே வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை . ஆனால் துரியோதனன் உள்ளே வருவதை அவன் மனைவி பானுமதி கண்டு கொண்டாள். கண்டவுடன் கணவனுக்குச் செய்ய வேண்டிய மரியாதை முறைப்படி எழுந்து நின்றாள். திடீரென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு அவள் எழுந்து நின்றது கண்ட கர்ணன் அவள் எதற்காக எழுந்து நிற்கிறாள் என்ற காரணம் விளங்காமல் மனத்தில் தவறாக எண்ணிக்கொண்டு அவளை உட்காரச் செய்யும் கருத்துடன் விளையாட்டு வெறியில் அவளைத் தொட்டு மேகலையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்து விட்டான். துரியோதனன் இதற்காகக் கர்ணனை மன்னித்து விட்டதோடு இதை ஒரு பெருங்குற்றமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதைப் பாரதம் விவரிக்கிறது. இந்நிகழ்ச்சியில் துரியோதனனுடைய பெருந்தன்மைக்கும் மேற்பட்ட பெருந்தன்மையாகப் பானுமதியின் சிறந்த கற்பு நிலையே விளக்கம் பெறக் காண்கின்றோம். இன்னும் சுபத்திரை, சித்திராங்கதை, இடிம்பி முதலிய வேறு பல பெண் பாத்திரங்களும் அக்காவியத்தின் ஓரோர் பகுதியில் பயின்று செல்கின்றனர். அருச்சுனனைக் காணாமலே அவனை எண்ணி எண்ணிக் காதலுணர்வு பெற்றுத் துறவியாக உருக்கொண்டு வந்திருக்கும் அவனிடமே, ‘அருச்சுனர் நலமா?’ - என்று கேட்கும் பேதமை நிறைந்த சுபத்திரையின் காதலிலும் ஒரு வகை அழகு இருக்கத்தான் இருக்கிறது. பாண்டியன் மகளாகப் பிறந்து பார்த்தனை மணந்து இன்புற்ற நிலையிலும் அவனைப் பிரிந்து துன்புறுகின்ற நிலையிலும் ஆகிய இரண்டு மாறுபட்ட நிலைகளிலுமே சித்திராங்கதையின் பற்றும் மெய்ம்மையும் பிறழாத காதலில் மனோ திட்டத்தின் கனிந்த நிலையைக் காண்பதற்கு முடிகின்றது. அரக்கியாகப் பிறந்து அரக்கனுக்குத் தங்கையாக வாழ்ந்தும் அண்ணனாகிய அரக்கனைக் கொன்ற பீமன் மேல் அன்புள்ளத்தோடு காதல் கொள்ளும் இடும்பியினுடைய குணப்போக்கு ஒரு தனி விந்தை. வன்மையும், கொடுமையும் உள்ள அன்பற்ற அரக்கி ஒருத்தி மென்மையும் காதலும் கொண்டு அன்பு செலுத்துபவளாக மாறும் விசித்திர நிலையை இடிம்பி இக்காவியத்தில் நமக்கு அளிக்கிறாள். பாரதக் கதையின் பரப்பை நோக்கினால் சாதாரணமான ஒரு சிறிய பாத்திரமே இடும்பி. ஆனாலும் தன்னுடைய சிறந்த குணசித்திரத் தோற்றத்தினால் மறக்க முடியாத ஓர் இடத்தை இக்காவியத்தில் அவள் பெற்றிருக்கின்றாள். ஆடவர், பெண்டிர் என்று இருவகையிலும் பாரதம் என்னும் காப்பியக் கடலிற் பயிலும் பாத்திர முத்துக்கள் எண்ணிலடங்காதவை. எண்ணிலடங்காத அந்த முத்துகளில் எல்லாவற்றையும் குளித்தெடுத்துக் கொணர்ந்து காட்டுவதற்குரிய வாய்ப்பும் விரிவும் இந்தச் சிறிய முன்னுரைக்குப் போதாது. மேலே தொடர்ந்து விவரிக்கப்படவிருக்கும் கதையின் விரைவான வசனப் போக்கிற்கு ஒரு முன் விளக்கமாக அமைந்தால் போதும் என்ற நோக்கத்தோடுதான், இந்தச் சிறு முன்னுரையும் கூட இங்கே எழுதப்பட்டது. பொன்னை, பொருளை, உணவை, உடையை, அனுபவிக்கப் பிறந்தவர் களைக் காட்டிலும் காவியத்தைச் சுவைக்கும் அனுபவத்திற்கு உரியவர்களாகப் பிறந்தவர்களே பெரும் பாக்கியசாலிகள். உலகின் வேறெந்த மகாபாக்கியங்களும் இந்த ஒரேயொரு பாக்கியத்திற்கு ஈடாக முடியாது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இத்தகைய உறுதிப் பொருள்களை விளக்கி இவை பற்றிய உணர்வை உண்டாக்குவதுதான் ஒவ்வோர் சாதாரணமான காவியத்துக்கும் நோக்கம் என்றால் பாரதம், இராமாயணம் போன்ற பெரிய இதிகாச காவியங்கள் இந்த உணர்வை உண்டாக்கத் தவறிவிடப் போவதில்லை. பிற காவியங்கள் உறுதிப் பொருளுணர்வை எவ்வளவு உண்டாக்க முடியுமோ அவ்வளவிற்கும் ஒருபடி விஞ்சி நின்று பாரதம் முதலியவை அதே வகை உணர்வை உண்டாக்குமே ஒழியக் குன்றிப்போகமாட்டா. இதிகாச காவியங்களின் உயர்ந்த குறிக்கோளே இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும் உண்டாக்க வேண்டும் என்பதே ஆகும். ஒரு நாட்டு மக்கள் பொருள் துறையில் வளம் பெற வேண்டுமானால் விளைவு, தொழில் முதலியவற்றைப் பெருக்கி உழைப்பை வளர்த்தால் போதும். வெளியாருடன் இதயங்கலந்து பழகுவது போலப் பழகாமற் பழகுகின்ற நாகரிக வளம் பெற வேண்டுமானால் சாதாரணமான பொது அறிவு மட்டும் பெற்றால் போதும். ஆனால் உள்ளத்தின் பண்பாடு வளம் பெற வேண்டும் என்றாலோ காவியங்கள் வேண்டும், கவிதைகள் வேண்டும், அவைகளை உணர முற்படும் உள்ளங்கள் வேண்டும். உணரத் தயங்காத உணர்வுகள் வேண்டும். அற நூல்களும் நீதி நூல்களும் உண்டாக்குகின்ற இதயப் பண்பாட்டினும் விரைவாகப் பெருகிய அளவில் காவியங்களே இதயப் பண்பாட்டை வளர்ப்பதற்கு முடியும். இது அனுபவம் மலரச் செய்கின்ற பேருண்மை. ‘பொய் சொல்லாதே பொய் சொல்லாதே!’ என்று சிறு குழந்தைக்கு நூறு முறை வாய் உபதேசம் செய்யும் வறண்ட முறையைக் கைவிட்டு ஒரே ஒரு முறை அரிச்சந்திரன் கதையை உருக்கமான முறையில் உள்ளத்தில் பதியும்படியாகச் சொன்னால் ‘பொய் பேசல் தீது’ என்ற உணர்வை எளிமையான முறையில் அழுத்தமாக ஏற்படுத்திவிட முடியும். இது உறுதி. இந்த உணர்வுதான் காவியத்தின் தலைசிறந்த குறிக்கோளாம். ‘ஐவர் காவியமாகிய’ பாரதக் கதையை எத்துணையோ முறை எழுத்திலும் பேச்சிலும் கண்டு அனுபவித்தவர்கள் தாம் நாம். பாரதமும், இராமாயணமும் பாரத நாட்டின் பரம்பரையான அநுபவச் செல்வங்கள் . இதிகாசமாக அலர்ந்த இணையற்ற இலக்கிய வடிவங்கள். அவற்றை எத்துணை முறைகள் எழுதினாலும் பேசினாலும் சுவையோ, உண்மைகளோ, நயங்குன்றப் போவதில்லை. வாடாத செந்தளிர்க் கற்பகத்தின் வைப்புகள் அவை. இங்கே விரியும் இந்த ஐவர் காவியம் இதயப் பண்பாட்டை மலரச் செய்ய வேண்டும் என்ற தூய குறிக்கோளின் விளைவு. இந்த விளைவுக்கு ஏற்படும் பயன்மிகுந்தால் அதுவே இத் தொடரின் மாபெரும் வெற்றி. பாரதத்தின் தருமனைப் போல் இல்லாவிடினும் வாழ்வில் ஒல்லும் வாய் எல்லாம் அறத்தைக் கைவிட்டு விடாமல் காக்கும் நல்ல உள்ளம் பெறுமாறு எல்லோரையும் தூண்டிச் செயற்படுத்தும் தூய பண்பையாவது இது நல்கியே தீரும்.