மகாபாரதம்-அறத்தின் குரல்/1. மூவர் தோற்றம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
1. மூவர் தோற்றம்

அந்தி மகள் மேலை வாயிலில் வந்து செவ்வண்ணக் கோலங்களைப் பரப்பி உலகை அழகு மயமாகச் செய்து கொண்டிருந்த அந்த இன்பமிக்க மாலை நேரத்தில் வீட்டுமன் மாத்திரம் சோர்ந்த மனத்துடன் கங்கைக் கரையில் அமர்ந்திருத்தான். கங்கைப் பிரவாகத்தின் நீல நிற நீர்ப் பரப்பில் மேலை வானின் செந்நிற ஒளி மின்னி விளங்கும் அழகை அவன் கண்கள் காணவில்லை. சுற்றுப் புறத்தின் கவின்மிக்க எந்தக் காட்சியும் அவனைக் கவரவில்லை! தன்னை மறந்து தான் வீற்றிருக்கும் இடத்தை மறந்து உள்ளத்தோடு சிந்தனையில் ஒன்றிப் போயிருந்தான் அவன். அப்படி அவன் மனதை வாட்டிய அந்தச் சோகம் முற்றிய சிந்தனைதான் எதுவாக இருக்கும்? பிரம்மசரிய விரதத்தால் கவின் கொண்டு மின்னும் அவனது ஒளிமிக்க உடலில் நுழைந்து உடலை அணுக எந்தக் கவலைக்கும் துணிவு இருக்க முடியாதே? பின் ஏன் அவன் கமல வதனம் வாடியிருக்கிறது? கண்களில் அழகொளி இலகவில்லையே? ஏன்? கொடிய நோயால் தம்பி விசித்திர வீரியனின் மரணத்தைக் கண்ட அவன் அந்தத் துன்பத்தைக் கூடப் பொறுத்தான். ஆனால், இரண்டு பெண்களை மணந்து கொண்டு சந்திர வமிசத்திற்குச் சந்ததியைப் படைத் தளிக்காமலே இறந்து போன அவன் தீயூழை நினைக்கிற போது தான் வீட்டுமனுக்குத் துயரம் தாங்கவில்லை. நித்திய பிரம்மசாரியாகிய தான் சந்திரவமிசத்திற்காக இனி எதுவும் செய்ய முடியாதாகையினால், சந்திர வமிசம் தன்னோடு அழிந்து போகுமே - என்பதை நினைக்கவும் முடியாமல் தவித்தான் அவன். சிறிய தாயாகிய பரிமளகந்தியும் மகன் வீட்டுமனைப் போலவே இந்தத் தவிப்பில் ஆழ்ந்து போயிருந்தாள். தன்னைப் போலவே அரண்மனையில் சிற்றன்னையும் சந்திர வமிசத்திற்கு நேர்ந்த இந்தப் பெருந்தீவினையை எண்ணிக் குமைத்து கொண்டிருக்கிறாள் என்பதை வீட்டுமன் நன்கு அறிவான். இளமை அழகு மாறாத நிலையில் கணவனை இழந்து மங்கலமின்றிக் கவல்கின்ற தம்பியின் மனைவியர்களான அம்பிகை, அம்பாலிகை இருவரையும் காண்கின்ற போதுகளில் எல்லாம் சந்திர வமிசம் குலக் கொழுந்தில்லாமல் ஏமாற்றப்பட்டு விட்டதே என்ற பயங்கர எண்ணந்தான் வீட்டுமனின் மனத்தில் உதிக்கும். வேதனையின் வடிவமே இந்த எண்ணந்தான்! அன்று காவையில் சிற்றன்னை அவனிடம் கூறிய வேறோர் முடிவு இடியோசை கேட்ட நாகம் எனத் திடுக்கிடச் செய்திருந்தது அவனை. தன் உயிரினும் சிறந்ததாக அவன் மேற்கொண்டிருந்த விரதத்தை அழித்துக் குலைப்பதாக இருந்தது அந்த முடிவு. கங்கையில் விழுந்து மாண்டாலும் மாளலாமே ஒழிய அதற்கு இணங்குவதில்லை என்று முடிவு செய்து விட்டான் அவன்.

“குலத்தைத் தொடரச் செய்வதற்கு மக்கட்பேறில்லாத நிலையில் மாண்டவன் மனைவியை அவனுடைய சகோதரன் மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொண்டு வமிசத்தை வளர்க்கலாம்! இதை வேதங்களும் நீதி நூல்களும் அங்கீகரிக்கின்றன. நீயும் இந்த முறைப்படி நடந்து கொண்டால் தான் சந்திர வமிசம் தழைக்க முடியுமப்பா” என்று அவனுடைய சிற்றன்னையாகிய பரிமளகந்தி அவனை வேண்டிக் கொண்டாள்.

“நீங்கள் கூறுகின்ற இந்தச் செயலைச் செய்ய முடியாத விரதமுடையவனாக நான் இருக்கிறேன் தாயே! ஆகவே இதை மறுப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்! இத்தகைய நிலையிலே கணவனை இழந்த பெண்டிர் முனிவர்களால் மக்கட்பேறு அடையலாமென்ற வேறோர் முறை பரசுராமர் காலத்தில் ஏற்பட்டுள்ளது! முனிவர்கள் மூலமாக வேண்டுமானால் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என்று அப்போதே சிற்றன்னைக்கு மறுமொழி கூறிவிட்டான் வீட்டுமன்.

“அப்படியானால் அதற்கும் ஒருவழி இருக்கிறது மகனே! பராசர முனிவரருளால் என் கன்னிப் பருவத்தில் நான் பெற்ற தெய்வீகப் புதல்வன் ஒருவன் இருக்கிறான்! அவன் இப்போது ‘வியாசன்’ என்னும் பெயருடன் நிகரில்லாத முனிபுங்கவனாக விளங்கி வருகிறான். அவனை அழைத்தால் நம் கருத்துப்படி செய்ய இசைந்து தன் அருள் வலிமையினால் விசித்திர விரியனின் மனைவியர் மக்கட்பேறு அடையும்படி செய்வான்! நீ என்ன நினைக்கிறாய்?..” என்று சிற்றன்னை மீண்டும் அவனைக் கேட்டாள்.

“நான் நினைப்பதற்கும் சொல்வதற்கும் இனி என்ன இருக்கிறது தாயே? வியாசர் திருவருளால் சந்திரவமிசம் வளர ஏதாவது வழி ஏற்படுமானால் அது நம்முடைய பெரும் பேறு ஆகும். தடையின்றித் தங்கள் கருத்துப்படியே செய்யுங்கள்” என்று வீட்டுமன் கூறினான்.

இதன் பின் மாலையில் கங்கைக் கரைக்கு வந்தபோது தான் மீண்டும் சிந்தனை அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அதையே தொடக்கத்தில் கண்டோம். உலகெங்கும் தம்முடைய அறிவு மனத்தைப் புனிதமான முறையில் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த மகாமுனிவர் அருள் புரிவார், என்ற நம்பிக்கையுடனே மாலைக் கடன்களை முடித்தான் வீட்டுமன். கடன்களை முடித்துக் கொண்டு அவன் அரண்மனைக்குப் புறப்படும்போது கங்கைக்கரை மெல்ல இருண்டு கொண்டிருந்தது. செல்லும் வழி மங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மனத்தில் மட்டும் நம்பிக்கைச் சுடர் சிறிது சிறிதாக ஒளி பெருக்கி வளர்ந்து கொண்டிருந்தது. பரிமளகந்தி வியாசரை அழைத்தாள். வியாசர் எல்லாப் பற்றுகளையும் துறந்த முனிவராயினும் பெற்றவள் அழைத்த அந்த அழைப்பை மறுக்கவோ, துறக்கவோ முடியவில்லை. அவர் பெற்றவளுக்கு முன் தோன்றினார். பரிமளகந்தி, சந்திரவமிசம் குலமுறையின்றித் தவிப்பதைக் கூறி அந்தத் தவிப்பு நீங்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு காலஞ்சென்ற விசித்திர வீரியனின் தேவியர்களாகிய அம்பிகை, அம்பாலிகை இருவரையும் அவர் வசம் ஒப்புவித்தாள் வியாசர் அருள் புரிந்தார் குருகுலக் கொழுந்து மூன்று தளிராகத் தழைத்து வளர்ந்தது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் என்று மூவரை வியாசரின் அருள் அளித்துச் சென்றது. திருதராட்டிரன் பிறவிக் குருடனாகவும் பாண்டு உடல் வெளுத்தவனாகவும் தோன்றியிருந்தனர், அறிவிலும் அழகிலும் சிறந்த புதல்வனாகத் தோன்றியவன் விதுரன் ஒருவனே! எவ்வாறானால் என்ன? ‘குரு குலக்கொடி வேரறுத்துப் போகவில்லை. தழைத்துப் படரத் தொடங்கி விட்டது - என்று திருப்தியுற்றனர் பரிமளகந்தியும் வீட்டுமனும்.

“காலம் வளர்ந்தது! வளர்ந்து வளர்ந்து பெருகியது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவரும் கவின்பெற்று விளங்கும் மூன்று மலைச்சிகரங்கள் போலப் புகழ்பூத்து வளரலாயினர். வீட்டுமன் கண்ணை காக்கும் இமை போல அந்த மூன்று குலக் கொழுந்துகளையும் போற்றி வளர்த்து வந்தான். கல்வி, கேள்வி, படைப்பயிற்சிகளில் அவர்களைத் தேர்ச்சி பெற்று வலிமையடையச் செய்வதற்காகத் தானே அவர்களுக்கு ஆசிரியனாக அமைந்தான். குருகுலத்தின் எதிர்கால நலம், எதிர்காலச் சிறப்பு ஆகிய யாவையும் அந்த மூவரால் தான் நிலை பெற்று வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு தான் வீட்டுமன் அவர்களை இவ்வாறு உருவாக்கலானான். இந்த உணர்ச்சிதான் தளர்ச்சியே குறுக்கிடாமல் அவனுக்கு ஊக்கமளித்த உணர்ச்சி. தகுந்த பருவம் வந்ததும் மூத்தவனாகிய திருதராட்டிரனுக்கு முடி சூட்டினான் வீட்டுமன். பாண்டுவை அவனுக்குச் சேனாதி பதியாக நியமித்தான். கடைசித்தம்பியாகிய விதுரனை அவனுடைய அறிவாற்றல்களுக்கேற்ற அமைச்சுத் தொழிலுக்குரியவனாக நியமித்தான். இவ்வளவும் செய்து முடித்தபின், திருதராட்டிரனுக்குத் திருமணத்தையும் விரைவில் முடித்துவிட்டால் நல்லதென்று தோன்றியது வீட்டுமனுக்கு. காந்தார நாட்டு மன்னன் மகள் காந்தாரியை அவனுக்கேற்ற மனைவியாகக் கருதித் தூதுவர்களை மணம் பேசி வருமாறு அனுப்பினான். திருதராட்டிரன் கண்ணில்லாதவன் என்ற உண்மை தெரிந்தவனாகையினால் காந்தார வேந்தன் அவனுக்குத் தன் மகளைக் கொடுப்பதற்குத் தயங்கினான். தன் தயக்கத்தை அவன் தன் மகளிடமே கூறியபோது, “கலங்காதீர்கள் அப்பா? விதி என்னை இந்த வழியில் தான் அழைக்கிறது போலும்! குருடராக இருந்தால் இருக்கட்டும்! நான் அவரையே மணந்து கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்!” என்று காந்தாரி மறுமொழி தந்தாள். ‘மணத்திற்குச் சம்மதம்’ என்று தூதுவர்களிடம் கூறியனுப்பினான், காந்தாரமன்னன். விரைவில் காந்தாரிக்கும் திருதராட்டிரனுக்கும் மணம் முடிந்தது. ‘கணவனுக்கு இல்லாத கண்கள்’ எனக்கு மட்டும் எதற்கு? என்று கூறினவளாய் மணமான அன்றே தன் கண்களையும் திரையிட்டு இறுகக் கட்டி மறைத்துக் கொண்டாள் காந்தாரி. அவளுடைய இந்தக் கற்புத் திறத்தைக் கண்டு வியக்காதாரில்லை. அதியற்புதமான அழகும் நற்குணங்களும் படைத்த இந்த யுவதிக்கு இவ்வளவு இளம் பருவத்திலேயே தியாகமும், கற்புணர்ச்சியும் செறிந்த இந்த உள்ளம் எப்படி அமைந்தது?’ - என்று நாடு முழுவதும் அதிசயித்தது! சாதாரணமாக எவராலும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்து காட்டுகின்றவரிடம் ஒரு விதமான தெய்வீகக் கவர்ச்சி இயற்கையாகவே ஏற்படுகின்றது. காந்தாரியின் தியாகமும் அவளுக்கு இத்தகையதொரு கவர்ச்சியை அளித்திருந்தது. திருதராட்டிரனுக்குத் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாண்டுவின் திருமணத்தைப் பற்றிய சிந்தனை வீட்டுமனுக்கு ஏற்பட்டது. குந்திபோசமரபில் சூரன் என்னும் அரசனின் மகளாகிய ‘பிரதை’ (குந்தி ) என்பவளைப் பாண்டுவுக்கு மணமுடிக்கலாமென்று கருதினான் அவன். அதற்கு முன்பாகவே ‘பிரதை’யின் கன்னிப் பருவத்து வரலாறு ஒன்றை நாம் கண்டு விடுவோம். கதைப் போக்கிற்கு அவசியமான வரலாறு ஆகும் இது.