மகாபாரதம்-அறத்தின் குரல்/7. தீயன செய்கின்றான்
சூதாட்டத்தினால் தருமனுக்கு விளைந்திருந்த அடுக்கடுக்கான தோல்விகளைக் கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கினார்கள். தோற்கடிக்க முடியாத பொருள்களைத் தாங்களே தோற்றுவிட்டது போன்ற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்குள் பலவாறு இரங்கிப் பேசிக் கொண்டார்கள்! “என்ன இருந்தாலும் பண்பிற் சிறந்தவனாகிய தருமன் இத்தகைய சூழ்ச்சி நிறைந்த சூதாட்டத்திற்கு இணங்கியிருக்கக் கூடாது!”
“இணங்கினால் தான் என்ன? இப்படியா தோல்விமேல் தோல்வியாக ஏற்பட்டு நல்ல மனிதனை மனங்கலங்கச் செய்ய வேண்டும்? விதிக்குக் கண்ணில்லையா? அறக் கடவுளுக்கு ஏன் இந்தப் பாராமுகம்?”
“எல்லாம் இந்த மாமனுடைய வஞ்சகச் செயல்கள். துரியோதனனும் அவனுடைய தந்தையும் பாண்டவர்கள் தங்களுக்கு உறவினர்களாயிற்றே! என்றெண்ணியாவது இந்த சூதாட்டத்தைத் தவிர்த்திருக்கலாம். தருமன் பொறுமை சாலிதான். அவனால் இந்தத் தோல்விகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்து விட முடியும். ஆனால் வீமன் கோபம் மிக்கவன். அருச்சுனனுக்கோ சினத்தால் கண்கள் இரண்டும் இப்போதே சிவந்து விட்டன. இதன் விளைவு என்ன ஆகுமோ?”
“தன் புதல்வர்கள் பாண்டவர்களுக்குச் செய்யும் தீமைகளைக் கண்டும் பேசாமல் இருக்கிறான் இந்தத் திருதராட்டிரன். நெருப்பைக் கைகளால் ஓங்கி அறைந்தால் கைகள் தாம் சுடும். பாண்டவர்கள் நெருப்பைப் போலத் தூயவர்கள். அந்த நெருப்போடு மோதுகிறார்கள் குற்றம் நிறைந்த இந்தக் கெளரவர்கள். இவர்கள் அழியப் போவது நிச்சயம்“ மேற்கண்டவாறு பலவிதமான பேச்சுக்கள் அந்தப் பெரிய அவையிலிருந்த மக்களிடையே நிலவின.
துரியோதனன் இறுமாப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். தருமதேவதை எங்கே இருக்கிறது என்று அப்போது தேடிப் பார்த்திருந்தால் அது மானசீகமாக அழுது கொண்டிருந்ததைக் கண்டிருக்கலாம். “தருமன் யாவற்றையும் எங்களிடம் தோற்றுவிட்டான். இது அவனுடைய போதாதகாலத்தைத்தான் காட்டுகிறது. அந்தத் தேவடியாள் திரெளபதி அன்று இந்திரபிரத்த நகரத்தில் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தாள். மனங்குமுறிப் பெரிதும் வருந்தினேன். இன்று, இதோ இன்னும் சிறிது நேரத்தில் அந்தத் தேவடியாளைக் கண்டு நான் ஏளனச் சிரிப்பு சிரிக்கப் போகிறேன். தருமனும் அவனுடைய தம்பியர்களும் கட்டுக்கடங்காத கர்வம் பிடித்துத் திரிந்தார்கள். இப்போது அவர்களுடைய கர்வம் ஒடுங்கும் நேரம் வந்து விட்டது.” அவையிலுள்ளோர் யாவரும் கேட்கும்படியாக இப்படி இகழ்ந்து கூறினான் துரியோதனன். வயது முதிர்ந்த சான்றோராகிய வீட்டுமரை இச்சொற்கள் பெரிதும் புண்படுத்தின.
“துரியோதனா! உங்களுக்குள் பகைமை, குரோதம் முதலிய வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் சகோதரர்கள். பலர் கூடியிருக்கும் அவையில் உடன் பிறப்பென்ற முறையையும் பொருட்படுத்தாமல் நாகரிக வரம்பையும் மீறி இப்படி இகழ்ந்து பேசுவது நல்லது அல்ல.” அப்போதிருந்த பகைமை வெறியில் வீட்டுமரின் இந்த அறிவுரையை அவன் பொருட்படுத்தவே இல்லை. விதுரனை அழைத்து, ‘'இந்தச் சூதாட்டத்தில் பாண்டவர்கள் நம்மிடம் தோற்ற பொருள்களை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றும் வேலையை நீ செய் அதோடு நாம் வெற்றி பெற்றிருக்கும் இந்த நல்ல நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்படி ஊராருக்கு அறிவிக்கச் செய்” என்றான்.
ஏற்கனவே மனங்கலங்கித் துயரத்தில் ஆழ்ந்திருந்த விதுரன் இந்த வார்த்தைகளைக் கேட்டும் கேட்காதவனைப் போல வீற்றிருந்தான். விதுரனுடைய அமைதியைக் கண்ட துரியோதனன் அவனை இன்னும் பெரிய துன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணியோ என்னவோ, “நல்லது! நீ இந்த வேலைகளையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. திரெளபதி இனிமேல் நமக்குச் சொந்தமானவள். அந்தப்புரத்திற்குப் போய் அவளை இங்கே கூட்டிக் கொண்டு வா. வர மறுத்தால் பலவந்தமாகவாவது அழைத்து வர வேண்டும்” என்று புதிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான். விதுரனுக்கு ஆத்திரம் வந்து விட்டது. தன் அமைதியைத் தானே மீறிக் கொண்டு பேசினான் அவன்.
“நீ எத்தகைய தீய சொற்களை வேண்டுமானாலும் பேசு! நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் திரெளபதியை இகழ்ந்து பேசாதே. அந்தப் பேச்சு என் ஆத்திரத்தைக் கிளரச் செய்கிறது. உங்களுக்கெல்லாம் அழிவுக்காலம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள். முற்பிறவியில் இராட்சதர்களாக இருந்தவர்கள் இப்போது மனித உருவில் பிறந்திருக்கின்றீர்கள். இப்போது அரக்கத்தனமான செயல்களைச் செய்யத் தொடங்கி உங்களை நீங்களே அழித்துக் கொள்ளப் போகிறீர்கள். என்னால் உங்களுக்குக் கூற முடிந்தது இதுதான். இதை நீங்கள் கடைப் பிடித்தால் நல்லபடியாக வாழலாம். உங்கள் போக்கின்படி சென்றாலோ அழிவுதான்” -கூறி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் விதுரன்.
“உனக்கு எப்போதும் எங்களைத் தூற்றுவதே வழக்கம். எங்களிடம் சோறு உண்டு சுகம் அனுபவித்து விட்டு பாண்டவர்கள் பக்கம் பரிந்து பேசும் நன்றி கெட்ட செயலைத்தான் நீ செய்வாய்! உன் பேச்சை இப்போது இங்கே எங்களில் யாரும் கேட்கத் தயாராயில்லை.” துரியோதன்னுடைய இதழ்களில் ஏளனச் சிரிப்பு நெளிந்தது. அவன் பிராதிகாமி என்ற பெயருடைய தேர்ப் பாகனை அழைத்தான். விதுரனுக்கு இட்ட அதே கட்டளை அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
“பிராதிகாமீ! இவர் நிறைவேற்ற மறுத்த கட்டளையை நீ நிறைவேற்ற வேண்டும். போ! திரெளபதியை இங்கே அழைத்துக் கொண்டு வா!” பிராதிகாமி அரசவை ஊழியன். நல்லதோ, கெட்டதோ, அரசன் கட்டளையை மறுக்க அவனுக்கு என்ன அதிகாரம்? அவன் கட்டளைக்கிணங்கித் திரெளபதியை அழைத்து வருவதற்காக அந்தப்புரம் நோக்கிச் சென்றான். சிந்தனையாற்றல் மிகுந்த அத்தேர்ப்பாகன் போகும் போதே இந்தத் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒருவழி கண்டுபிடித்தான். அந்தத் தந்திரமான வழி தோன்றியதும் மேலே போகாமல் அப்படியே அவைக்குத் திரும்பி விட்டான்.
“அரசே! நான் தங்கள் கட்டளையின்படி சென்று திரெளபதியை அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், என் கணவர் தம்மை தோற்பதற்கு முன்பே என்னை வைத்துத் தோற்றாரா? அல்லது தன்னை தோற்ற பின்பு என்னைத் தோற்றாரா? தெரிந்து வா; பின்பு வருகின்றேன் என்று கூறுகின்றாள்” என்பதாக ஒரு பொய்யைக் கற்பித்துத் துரியோதனனிடம் கூறினான்.
ஆராய்ந்து பார்க்கும் திறன் குன்றியவனான துரியோதனன் இதை உண்மை என்றே நம்பிவிட்டான். உடனே அவன் தன் தம்பீ துச்சாதனனை அழைத்து “தம்பி! இந்தத் தேர்ப்பாகன் பயந்த சுபாவமுள்ளவனாகத் தோன்றுகிறான். ஆகையினால்தான் அவள் இவனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள். இனிமேல் இவன் போக வேண்டாம். நீயே போ. துணிவாக அவளை இங்கே அழைத்து வா. நம்பிக்கையோடு உன்னை அனுப்புகின்றேன். அது குலைந்து போய் எனக்குச் சினம் உண்டாகாதபடி வெற்றியோடு திரும்பிவா” என்றான். தீய செயல்களைச் செய்யும் பொறுப்புத் தனக்குக் கிடைக்கிறது என்றால் அதை விட மகிழ்ச்சி தரக்கூடியது வேறொன்றும் இருக்க முடியாது துச்சாதனனுக்கு அவன் தமையனை வணங்கிவிட்டுச் சென்றான்.
அவன் திரெளபதி இருந்த அந்தப்புரத்தை அடைந்ததும் அவளுக்கு முன்கூசாமற் சென்று தீய சொற்களைக் கூறலானான், “உன்னுடைய கணவன் தருமன் தன் உடைமைகளை எல்லாம் இழந்து விட்டான். இறுதியில் தன் உடன் பிறந்த தம்பியர்களையும் உன்னையும் கூடச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்றுவிட்டான். இப்போது முறைப்படி எங்களுக்கு உரியவளாகி விட்டாய் நீ. உன்னை அரசவைக்கு அழைத்து வரச் சொல்லி என்னை இங்கனுப்பியிருக்கிறான் மன்னனும் என் அண்ணனும் ஆகிய துரியோதனன். மறுக்காமல் வந்துவிடு.” திரெளபதி இதற்கு மறுமொழி கூறாமல் நின்ற இடத்திலேயே குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.
“அன்று இராசசூய வேள்வியின் போது இந்திரப்பிரத்த நகருக்கு வந்திருந்த எங்கள் மன்னன் துரியோதனனைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்தாயே; அது நினைவிருக்கிறதா? அன்று சிரித்து இகழ்ந்த உன் வாயை இன்று அழுது கதறும்படியாகச் செய்கின்றோம் பார்.” திரெளபதி இதையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டாள்.
“ஏன் இன்னும் நின்றுகொண்டே இருக்கிறாய்? புறப்படு தாமதம் கூடாது, என் தமையன் காத்துக் கொண்டிருப்பான்” கூறிக்கொண்டே சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன். திரெளபதி தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டு அவன் பிடியிலிருந்து திமிறினாள். இந்தச் சமயத்தில் கெளரவர்களின் தாயாகிய காந்தாரி அங்கு வந்தாள். துச்சாதனன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஓடிய திரெளபதி காந்தாரியின் அருகே வந்து நின்று கொண்டாள். காந்தாரி தனக்கு அபயமளித்துக் காப்பாற்றுவாள் என்று எண்ணியிருந்தாள் திரௌபதி.
ஆனால் காந்தாரியோ அதற்கு நேர்மாறான எண்ணத்தோடு இருந்தாள். திரெளபதிக்கு அபயமளித்துக் காப்பாற்ற மறுத்ததோடல்லாமல் அவளைத் துச்சாதனனோடு செல்லும்படி வற்புறுத்தினாள் அவள். காந்தாரியின் கொடிய மனோபாவத்தைக் கண்டு திரெளபதி திகைத்தாள், மீண்டும் அவளை இறைஞ்சினாள்.
“உன்னைக் கூப்பிடுகிறவர்கள் உனக்கு விரோதிகள் அல்லவே? உன் மைத்துனன் தானே உரிமையோடு அழைக்கிறான். போனால்தான் என்ன?” என்று கூறினாள் கல்மனம் படைத்த காந்தாரி. தாயும் தன் பக்கம் பரிந்து ஆதரவாகப் பேசுகிறார் என்பதை அறிந்து கொண்டதும் துச்சாதனனுடைய துணிவு இரண்டு மூன்று மடங்கு பெருகி வளர்ந்து விட்டது. அவன் மீண்டும் பாஞ்சாலியைத் தொட்டு இழுத்தான். இம்முறை அவனுடைய முரட்டுக் கரங்கள் அவளது மென்மையான அளகபாரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தன. கூனிக்குறுகி நாணத்தால் ஓடுங்கி நின்ற அவள் கருங்குழல் அவிழ்ந்து மண்ணில் புரண்டு கொண்டிருந்தது. மயிர்கால்கள் இசிவெடுத்து வலிக்கும் படியாக அவளைக் கூந்தல் வழியே பிடித்து இழுத்தான் துச்சாதனன். இவ்வளவையும் பார்த்துக் கொண்டே பேசாமலிருந்தாள் காந்தாரி. ஓர் இளம் பெண் தன்னிடமுள்ள மிகக் குறைந்த வன்மையைக் கொண்டு முரட்டு ஆண் மகனோடு எவ்வளவு நேரந்தான் போராட முடியும்? உதவுகின்ற நிலையில் ஒரு பெண் பக்கத்தில் இருந்தாள் என்பதென்னவோ உண்மை. ஆனால் அவளும் உதவ விரும்பாத இராக்ஷஸ மனத்தை ஏற்படுத்திக் கொண்டவளாக இருந்தால் என்ன செய்வது?
துச்சாதனன் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். திரெளபதி தன்னைத் தப்பித்துக் கொள்ளும் வழியறியாமல் அவன் இழுப்புக்கு உட்பட்டுச் சென்றாள். ‘தான் போகிற இடத்தில் தன் கணவன்மார்களும் இருப்பார்கள்’ என்ற நம்பிக்கை ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல் அளித்தது. வீதியோடு வீதியாக அவளை அவன் இழுத்துக் கொண்டு சென்றபோது கண்டவர்கள் மனம் இரங்கினர். இளகிய உள்ளம் கொண்டவர்கள் இந்த அநீதியைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் உருகிக் கண்ணீர் சிந்தினர். சிலர் “காந்தாரி ஒருத்தி இருந்தும் தன் மகனால் தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு இந்த அநீதி நடக்கும்படி விட்டுவிட்டாளே” என்று குறை கூறினர்.
“ஐயோ! இதென்ன அக்கிரமம்? இந்த நாட்டில் எல்லோரும் பெண்களோடு கூடப் பிறந்தவர்கள் தாமே? பெண்ணுக்கு இந்த வஞ்சனை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே? காலம் எவ்வளவு கெட்டு விட்டது? இனிமேல் இவ்வூரில் குடியிற் பிறந்தவர்கள் கூடக் கண்ணியமான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது போலிருக்கிறதே!” பெண்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு மனம் கொதித்துப் பேசிக் கொண்டனர்.
“வீமனும் அர்ச்சுனனும் இந்த வஞ்சகச் செயலுக்குச் சரியானபடி பழிவாங்காமல் விடமாட்டார்கள்” என்றெண்ணித் திருப்தியுற்றனர் சிலர். இன்னும் சிலர் ‘இதெல்லாம் தருமனால் வந்த வினை அல்லவா?’ என்று அவனைக் குறை கூறினார்கள். சிலருக்கு அப்படியே குறுக்கே பாய்ந்து துச்சாதனனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம் போலத் தோன்றியது. தண்டனைக்கு அஞ்சிப் பேசாமல் இருந்தார்கள். அநியாயமான இந்த நிகழ்ச்சி ஊர் முழுவதும் பிரளய நெருப்புப் போல வேகமாக பரவிவிட்டது.