மகாபாரதம்-அறத்தின் குரல்/2. சிசுபாலன் போட்டி

விக்கிமூலம் இலிருந்து

2. சிசுபாலன் போட்டி

இராசசூய வேள்வி நிகழ்வதற்கு முன்னால் திக்கு விஜயம் செய்து முடிக்க வேண்டும் என்பது ஓர் மரபு, எல்லாத் திசைகளிலுமுள்ள எல்லா மன்னர்களையும் வென்று பணிவித்த தலைமையோடு அந்த வேள்வியைச் செய்தல் நலம். இதற்காகப் பாண்டவ சகோதரர்களும் திக்கு விஜயத்திற்குப் புறப்பட்டார்கள். வடதிசையை நோக்கி அர்ச்சுனனும் கிழக்குத் திசையை நோக்கி வீமனும் புறப்பட்டார்கள். தகுதி வாய்ந்த படைகளும் உடன் சென்றன. வடமேற்கு, தென்மேற்கு ஆகிய இவ்விரு திசைகளிலும் நகுலனும் தெற்குத் திசையில் சகாதேவனும் புறப்பட்டார்கள். சகோதரர்களை வாழ்த்தித் திக்கு விஜயத்திற்கு அனுப்பி விட்டுத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றார் கண்ணாபிரான். கிழக்குத் திசையிற் சென்ற வீமன், கலிங்கம் முதலிய தேசங்களையெல்லாம் வென்று அந்தந்தத் தேசத்து அரசர்கள் கொடுத்த திறைப் பொருள்களை மலையெனக் குவித்தான். வடக்குத் திசையில் சென்ற அர்ச்சுனன் விந்தமலை, ஏமகூடமலை முதலிய மலைகளைக் கடந்து சென்று அதற்கு அப்பாலுள்ள நாடுகளையெல்லாம் வெற்றிக் கொண்டான். இவ்வாறே மற்றத் திசைகளில் சென்றவர்களும் அங்கங்கே பெரு வெற்றிகளை அடைந்தனர். வென்ற நாடுகளிலெல்லாம் அரசர்கள் மனமுவந்து காணிக்கையாகக் கொடுத்த பொருள்கள் மலைகள் மலைகளாகக் குவிந்திருந்தன. எல்லோரும் தாம் தாம் சென்ற திசைகளிலிருந்து இந்திரப் பிரத்த நகரத்துத் திரும்பி வந்தார்கள். இராசசூய வேள்விக்கு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

துவாரகையிலிருந்து கண்ணபிரானை அழைத்து வருவதற்காக நாரத முனிவர் சென்றார். வேள்வி நடக்கப் போவதை அறிவித்து வெளிநாட்டு அரசர்களுக்கெல்லாம் தூதுவர்கள் மூலம் அழைப்புக்கள் அனுப்பப்பெற்றன. கண்ணபிரானும் பிற நாட்டு மன்னர்களும் இந்திரப் பிரத்த நகரத்தில் வந்து கூடினார்கள். மகாஞானியும் தபஸ்வியும் ஆகிய வேத வியாசரை உலூகன் சென்று அழைத்து வந்தான். இவர்கள் யாவரும் வந்து தங்கியிருப்பதனால் இந்திரப் பிரத்தம் ஒரு தனி அழகைப் பெற்று விட்டது போல் கோலாகலமாக விளங்கியது. மிகவும் சிறப்பான முறையில் வேள்வியை நடத்துவதற்குத் தக்கப்படி வேள்விச் சாலை அமைக்கப்பட்டது. அந்தணர்களும் மறையவர்களும் புனிதமான வேதகோஷங்களைச் செய்தனர். வேள்விச் செயல்களுக்குரிய மங்கல வேளை வந்தது. மூதறிஞராகிய வேதவியாசர் வேள்விக்குத் தலைவனாக தருமனையும் தலைவியாகத் திரெளபதியையும் நியமித்தார். ஏனைய சகோதரர்கள் தமையனின் ஆணை பெற்றுத் தத்தமக்குரிய பணிகளை ஏற்றுக் கொண்டனர். வேள்விக்கு வருகின்ற வர்களுக்கு உணவளித்து உபசரிக்க வீமன் பொறுப்பேற்றுக் கொண்டான். கஸ்தூரி, சந்தனம், பன்னீர், மலர் முதலிய அலங்காரப் பொருள்களை வழங்கும் பொறுப்பை அர்ச்சுனன் ஏற்றுக் கொண்டான். நகுல சகாதேவர்கள் வெற்றிலை பாக்கு முதலிய பொருள்களை வழங்கினர். தானம், பொருட்கொடை, சன்மானம் முதலியவற்றை வழங்கும் பொறுப்பு அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவனான கர்ணனிடம் ஒப்பிக்கப்பட்டது. பொருள்களையெல்லாம் நிர்வாகிக்கும் தலைமைப் பொறுப்பைத் துரியோதனன் ஏற்றுக் கொண்டான்.

தருமனும் திரெளபதியும் மங்கல நீராடி வேள்விக்குரிய ஆடை அணிந்து ஓமகுண்டங்களுக்கு முன்பு வீற்றிருந்தனர். இடம் வலமாக அவர்கள் வீற்றிருந்த தோற்றம் சிவபெருமானும் உமாதேவியாருமே முறை மாறி இடம் வலமாக வீற்றிருப்பது போலக் காட்சியளித்தது. தீக்கொழுந்துகளின் செந்நிற ஒளி திரெளபதியின் பொன்னிற மேனிக்கு மெருகு கொடுப்பது போலச் சுடர் பரப்பியது. ஏழு நாட்கள் கண்ணும் கருத்துமாக வேள்வியை நிகழ்த்தி நிறைவேற்றினார்கள்; அந்தப் புண்ணியத் திருச்செயல் முற்றியதும் தருமனும் திரெளபதியும் தான தர்மங்களைச் செய்தனர். வந்திருந்த அந்தணர்களுக்கும் மறையவர்களுக்கும் புலவர் பெரு மக்களுக்கும் அவரவர்கள் விரும்பிய பரிசில்களை மனமுவந்து அளித்தனர். விருந்தினர்கள் சிறப்பான முறையில் உபசரித்து அனுப்பப் பெற்றார்கள். வேள்வி முற்றிப் பூரணமடைந்ததும் வேள்வியைச் செய்தவர்கள் தக்க பெரியார் ஒருவருக்கு வழிபாடு செய்வது வழக்கம். அப்போது அங்கே இந்திரப் பிரத்த நகரத்து வேள்விச் சாலையில் பல பெரியோர்கள் கூடியிருந்ததனால் யாருக்கு முதல் வழிபாடு செய்வது என்று தருமனுக்குப் புரியவில்லை. அதனால் அவன் வீட்டுமனிடம் யோசனை கேட்கக் கருதினான். வீட்டுமனிடம் கேட்டான்.

வீட்டுமன் அங்கிருந்தவர்கள் யாவருக்கும் மூத்த வராயினும் அறிவிலே சிறந்த வியாச முனிவரை நோக்கி, “வழிபாட்டில் யாருக்கு முதன்மை கொடுக்கலாம்?” என்று கேட்டார். வியாச முனிவர் ‘அங்குள்ளோரில் முதல் வழிபாட்டைப் பெறத் தகுந்தவர் கண்ணபிரான் ஒருவரே’ -என்று கூறினார். வீட்டுமன் இணங்கினார். தருமனும் கண்ணனுக்கே முதல் வழிபாடு செய்ய உடன்பட்டான். அவ்வளவேன்? வேள்விக் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணபிரானையே வழிபாட்டுக்குரியவராகக் கொள்ள வேண்டுமென்பதில் கருத்து மாறுபாடின்றி மகிழ்ந்திருந்தார்கள். அங்கிருந்தவர்களில் ஒரே ஒருவனுடைய உள்ளம் மட்டும் பொறாமையால் குமுறிக் கொண்டிருந்தது. கண்ணபிரான் முதல் வழிபாடு பெறுகிறாரே என்ற நினைவால் நெஞ்சம் குமுறிக் குரோதம் கொண்டிருந்தான் அந்த உள்ளத்துக்குரியவன். அவன் தான் சேதி நாட்டு மன்னன் சிசுபாலன். தன்னைப் பற்றித் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளும் இயல்பு வாய்ந்தவன். அகங்காரத்தால் கொழுத்த உள்ளம் படைத்த சிசுபாலன் கண்ணபிரானையே எதிர்த்து இழிவான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். அவையிலிருந்த பெரியோர்கள் அவன் சொற்களைக் கேட்டு மனங் கூசி நாணினர்.

“அறிவு, திரு, ஆற்றல் மூன்றிலும் சிறந்த பேரரசர்கள் பலர் இந்த அவையில் கூடியிருக்கின்றனர். மன்னாதி மன்னர்களாகிய அவர்களுக்கு இல்லாத தகுதி கண்ணனிடம் எந்த வகையில் இருக்கிறது? கேவலம்! மாடு மேய்க்கின்ற குலத்திலே பிறந்த கண்ணன் முதல் வழிபாடு பெறுவதென்றால் அது நம்மை எல்லாம் அவமானப்படுத்துவது போல் அல்லவா தோன்றுகிறது? வழிபடும் முதன்மையோ, தகுதியோகண்ணனுக்கு இல்லை. ஆகவே கண்ணனுக்கு முதல் வழிபாடு செய்யக் கூடாது. செய்தால் என் போன்றவர்களின் கோபத்தைக் கிளறிவிடும் காரியமாகவே அது அமையும். அரச மரபிலே உயர்ந்தவர்களாகிய சூரிய வம்சத்தினரும் சந்திரவம்சத்தினரும் இங்கு நிறையக் கூடியிருக்கிறார்கள். அவர்களில் எவருமே இந்த வழிபாட்டிற்குத் தகுதியில்லா தவர்களா? கண்ணனுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது? இவன் தன் வாழ்வில் செய்திருக்கும் இழிந்த செயல்களை விரல் விட்டு எண்ண முடியுமா? ஆயர்பாடியில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வெண்ணையையும் நெய்யையும் பாலையும் தயிரையும் திருடி உண்டான். இளம் பெண்களுடன் தகாத முறையில் நெருங்கிப் பழகினான் தான் பிறந்த வேளையின் தீமையால் தன்னைப் பெற்றவர்களையே சிறைவாசம் செய்யும்படி ஆக்கினான். ‘கம்சன் தனக்கு மாமனாயிற்றே’ -என்றும் பாராமல் அவனைக் கொன்று அழித்தான். இன்னும் எத்தனையோ பேர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் இவன் செய்த தீமைகள் எண்ணற்றவை. இத்தகையவனுக்கா வழிபாட்டில் முதன்மை கொடுப்பது? இதில் நியாயத்திற்கு சிறிதும் இடமில்லையே!” சிசுபாலன் ஆத்திர வெறியினாலும் பொறாமையாலும் குமுறும் இதயத்திலிருந்து சொற்களை வாரி இறைத்தான்.

கண்ணபிரான் தன் கோபத்தைச் சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக வீற்றிருந்தார். அவருடைய இந்த அசாத்தியப் பொறுமையைக் கண்டு அவையோர் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். சிசுபாலன் பேசி நிறுத்தியதும் அதுவரை அடக்கமாகவும் அமைதி யாகவும் வீற்றிருந்த கண்ணபிரான் மெல்ல எழுந்து நின்றார். “சிசுபாலா? தகுதியைப் பற்றிய உன் பேச்சுக்களை இங்கே கூடியிருப்பவர்கள் முடிவு செய்வதற்குள் நாமே முடிவு செய்து கொண்டு விடுவது நல்லது. எங்கே? நீ இப்போது போருக்குத் தயார் தானே?” -இவ்வாறு கூறிக் கொண்டே யுத்தத்திற்குத் தயாராகத் தம் தேரில் ஏறி நின்றார் கண்ணபிரான்.

சிசுபாலன் திடுக்கிட்டுப் போனான், ‘கண்ணனிடம் மிருந்து போருக்கு அழைப்பு வரும்‘ -என்பதை இவ்வளவு விரைவில் அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் சமாளித்துக் கொண்டு தேரிலே ஏறித்தானும் போருக்குத் தயாராக நின்றான். அவையிலிருந்து வெளிப்புறம் போருக்கு வசதியான இடத்திற்குச் சென்ற பின் இருவருக்கும் போர் தொடங்கியது. வேள்விக்கு வந்திருந்தவர்களும் சூழ இருந்து போர் நிகழ்ச்சியைக் கண்டனர். சிசுபாலன் பேச்சிலேதான் வீரனாகத் தென்பட்டான். ஆனால் போரிலோ? நொடிக்கு நொடி கண்ணபிரானின் ஆற்றலுக்கு முன்னால் அவன் கை தளர்ந்து கொண்டே வந்தது ‘தகுதி யாருடையது?’ -என்று நிரூபிக்க விரும்புகின்றவரைப் போல முழு ஆற்றலோடு போரில் ஈடுபட்டிருந்தார் கண்ணபிரான். இறுதியில் தம் வலக்கரத்திலிருந்த திகிரியை (சக்ராயுதத்தை) அவன் கழுத்தைக் குறி வைத்துச் செலுத்தினார் அவர். திகிரி வேகமாகச் சுழன்று அவன் கழுத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் வியப்பு நிழலிடுகிற முகபாவத்துடன் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். திகிரி சிசுபாலனின் தலையை அரிந்து தலையைப் பிரித்ததும் மற்றோர் ஆச்சரியகரமான நிகழ்ச்சியும் நடந்தது.

உயிரிழந்து வீழ்கின்ற அவன் உடலிலிருந்து ஓர் ஒளிப்பிழம்பு புறப்பட்டு நேரே கண்ணபிரானின் திருவடிகளைச் சென்றடைந்தது. ‘ஆகா இது என்ன ஆச்சரியம்? இந்த மாதிரிக் கொடிய மனிதனின் சரீரத்திலிருந்து ஓர் ஒளி புறப்பட்டு இவரைச் சரணடைகின்றதே? இதற்கு என்ன அர்த்தம்?’ -என்று திகைத்து மலைப்புற்றனர் கூடியிருந்தவர் யாவரும். கூடியிருந்தவர்களின் இந்தத் திகைப்பைப் போக்கி உண்மையை விளக்கவியாசமுனிவர் முன் வந்தார். ‘சிசுபாலன் யார்?’ -என்பதை விவரிக்கலானார் அவர்.

“முன் ஒரு காலத்தில் முன் கோபத்தில் வல்லவரான துருவாச முனிவர் திருமாலைக் காண்பதற்காகச் சென்றார். திருமாலின் இருப்பிடமான வைகுந்தத்தில் வாயில் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் இருவரும் அவருடைய பெருமையை அறியாமல் அவரை உள்ளே விடுவதற்கு மறுத்துவிட்டனர். துருவாசர் அவர்கள் மேல் மிக்க சினங்கொண்டார். எனக்கு இழைத்த இந்த அவமானத்திற்குப் பதிலாக என் சாபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணமே நீங்கள் இருவரும் இவ்வாழ்வைத் துறந்து பூவுலகம் சென்று மானிடராய்ப் பிறந்து துன்பங்களை அனுபவிப்பீர்களாக, அவ்வாறு அனுபவித்தால் தான் உங்களுக்குப் புத்தி வரும்...” என்று கோபம் மேலிட்டுக் கூறினார். அதே சமயத்தில் வாயிற் காவலர்களுடனே யாரோ இரைந்து பேசிக் கொண்டிருக்கும் குரலைக் கேட்ட திருமால் தற்செயலாக வெளியே வந்தார். அங்கே துருவாச முனிவர் சினத்தோடு நிற்பதைக் கண்டதும் விஷயத்தை அனுமானித்துக் கொண்டார். முனிவரை அன்போடு இனிய சொற்களைக் கூறி வரவேற்றார். அவருடைய கோபம் மெல்லத் தணிந்தது.

“முனிவர் பெருமானே! அறியாமையினால் தவறு செய்து விட்ட இந்தக் காவலர்களுக்குத் தாங்கள் கொடுத்த சாபம் நீங்குவது எப்போது?...“ திருமால் கேட்டார்.

“எல்லாம் வல்ல இறைவனாகிய உனக்குப் பக்தர்களாக ஏழு பிறவி பிறந்து முடித்ததும் இவர்கள் மீண்டும் இப்போதிருப்பது போல் உன்னிடம் வந்து சேர்வார்கள். அல்லது உன்னைக் கடுமையாக எதிர்க்கும் விரோதிகளாக மூன்று பிறவிகள் பிறந்து மீட்சி பெறுவர். இவ்விரண்டு வழிகளில் இவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை மேற்கொள்ளலாம்” என்றார் துருவாசர்.

உடனே திருமால், “காவலர்களே! முனிவர் கூறிய இவ்விரண்டு வழிகளில் எதைப் பின்பற்றி நீங்கள் சாபமீட்சி பெறப் போகிறீர்கள்? உங்கள் விருப்பம் யாது?” -என்று தம் காவலர்களை நோக்கிக் கேட்டார்.

“கருணைக் கடலாகிய பெருமானே! உன்னைத் துறந்து ஏழு பிறவிகள் தனித்து வாழ எங்களால் இயலாது. உன் பிரிவை நாங்கள் ஆற்றோம். எனவே மூன்று பிறவிகள் பகைவர்களாகப் பிறந்தே உன்னை அடைவோம்.” காவலர்களின் மறுமொழி திருமாலைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

துருவாச முனிவரும் மூன்று பிறவிகளிலேயே அவர்களுக்குச் சாபமீட்சி கிடைக்கும்படி செய்தார். காவலர்கள் மண்ணுலகில் சென்று பிறந்தனர். முதற் பிறவியில் ‘இரணியன், இரணியாக்கன்’ என்ற பெயரிலும், இரண்டாம் பிறவியில் ‘இராவணன், கும்பகர்ணன்’ என்ற பெயரிலும் மூன்றாம் பிறவியில் ‘கம்சன், சிசுபாலன்’ என்ற பெயரிலும் முறையே இந்தக் காவலர்கள் மூன்று பிறவிகளிலும் திருமாலுக்குப் பகைவர்களாகத் தோன்றினர். சிசுபாலன் இறந்ததும் அவன் உயிர் கண்ணபிரான் திருவடிகளை ஒளியுருவிற் சென்று அடைந்ததற்குக் காரணம் இது தான்!” இவ்வாறு வியாசமுனிவர் விளக்கம் கூறி முடிக்கவும் திருமாலின் அவதாரமே இந்த கண்ணபிரான்‘ -என்றெண்ணி எல்லோரும் அவரைக் கைகூப்பி வணங்கினர். இவ்வளவும் நிகழ்ந்து முடிந்தபின் துன்பத்தை அனுபவித்துப் பெறுகின்ற இன்பத்தின் சுவையைப் போல இறுதியாகக் கண்ணபிரானை அமரச் செய்து அவருக்கே முதல் வழிபாடு செய்தான் தருமன். யாருடைய மறுப்புமில்லாமல் ஒருமித்த மகிழ்ச்சியுடனே நிகழ்ந்து நிறைவேறியது அந்த வழிபாடு. வழிபாடு முடிந்தபின் அந்தந்த நாட்டு மன்னர்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளையும் மரியாதைகளையும் செய்தார்கள். பெரியோர்களையும் முனிவர்களையும் வணங்கி அவர் களுடைய ஆசியைப் பெற்றார்கள் பாண்டவர்கள். தந்தை பாண்டுவின் விருப்பமாகிய இராசசூய வேள்வியை யாவரும் போற்றும்படியான முறையில் செய்து முடித்த திருப்தி அவர்கள் சிந்தையில் நிலவியது.

வேள்வி நிகழ்ந்த ஏழு நாட்களிலும் இந்திரனுடைய அமராபுரியைக் காட்டிலும் கோலாகலமும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்திரப்பிரத்த நகரம் யாவரும் விடை பெற்றுச் சென்றபின் விழா நடந்து முடிந்த இடத்தின் தனிப்பட்ட அமைதியைப் பெற்றது. வியாசர் முதலிய முனிவர்களும் கெளரவர்களும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றபின் இந்தத் தனிமையை இன்னும் நன்றாக உணர்ந்தனர் பாண்டவர்கள். இந்திரப் பிரத்த நகரின் வாழ்வும் தருமனின் ஆட்சியும் எப்போதும் போல் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தன. இராசசூய வேள்வியால் திக்குத் திகந்தமெல்லாம் பரவிய புகழ் அந்த வாழ்விற்கு ஒரு புதிய சிறப்பையும் அளித்திருந்தது.