மகாபாரதம்-அறத்தின் குரல்/3. கர்ணன் மூட்டிய கனல்

விக்கிமூலம் இலிருந்து

3. கர்ணன் மூட்டிய கனல்

இந்திரப்பிரத்த நகரத்தில் நடந்த வேள்விக்குச் சென்று விட்டுத் திரும்பிய கெளரவர்களின் நெஞ்சம் பொறாமையால் குமைந்து கொண்டிருந்தது. ‘ஒரு சாதாரணமான யாகத்தைச் செய்து அதன் மூலம் எவ்வளவு பெரிய புகழைச் சுலபமாக அடைந்து விட்டார்கள் இந்தப் பாண்டவர்கள்?’ -என்று மனம் குமுறினான் துரியோதனன். மனத்தில் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்த இந்தப் பொறாமை நெருப்பைத் தீயாக வளர்த்துவிட்ட ‘பணி’ கர்ணனுடையது. தானாகவே வளர்ந்து கொண்டிருந்த பொறாமையை வளர்ப்பதற்கு மற்றொருவரும் கூடிவிட்டால் கேட்க வேண்டுமா?

“இப்பொழுது நடந்த இந்த இராசசூய வேள்வியால் தருமனும் பாண்டவர்களும் அடைந்தாற் போன்ற புகழை வேறெவர் அடைய முடியும்? ஏற்கனவே சாந்த குணம் ஒன்றுக்காக மட்டும் அந்தப் பேதை தருமனைப் புகழ்ந்து கொண்டிருந்த இந்த உலகம் இனி அவனைத் தன்னிகரில்லாத் தலைவனாகக் கொண்டாடத் தொடங்கிவிடும். மன்னருலகில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற பெருமையை அவன் அடைந்து விடுவான். வீரத்திலும் ஆண்மையிலும் சிறந்தவர்களாகிய நாம் இனியும் தருமனின் புகழ் ஓங்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது” -கர்ணன் இவ்வாறு துரியோதனன் மனத்தில் நெருப்பை மூட்டினான். இந்தப் பொறாமை நெருப்பு அந்தத் தீயவன் மனத்தில் நன்றாகப் பற்றி எரியத் தொடங்கிற்று.

“கர்ணா! இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து திரும்பிய நாள் தொடங்கி என் மனமும் இதே சிந்தனையில்தான் அழுந்தி நிற்கிறது. பாண்டவர் புகழை இதே நிலையில் வளரவிட்டுக் கொண்டு போவது நமக்கு ஆபத்து. அவர்கள் வாழ்வின் சீரையும் சிறப்பையும் கெடுக்க ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து தான் ஆக வேண்டும்” என்று கர்ணனுக்கும் மறுமொழி கூறினான் துரியோதனன். இப்படிக் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட சகுனியும் தன் சொந்தப் பொறாமையை வெளிப்படுத்துவதற்கு அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். அவனும் அவர்கள் பொறாமையைப் பெருக்குவதில் பங்கு கொண்டான்.

“அரசே! இந்தப் பாண்டவர்கள் நம்மைவிடப் பலசாலிகளாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவர்களை அளவுக்கு மீறி உலகம் புகழ்வதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. சிங்கம் குகையிலே பதுங்கிக் கிடக்குமானால் மதயானை, அதனை மிக எளிதில் வென்றுவிடலாம். புகழ்மயக்கத்தில் பதுங்கிக் கிடக்கும் இந்தப் பாண்டவர்களை இப்போது நாம் வென்று விடுவது சுலபம்” -சகுனி இவ்வாறு கூறி முடிக்கவும் அவனருகில் நின்ற துரியோதனன் தம்பி துச்சாதனனுக்கும் துணிவு வந்தது.

“பாண்டவர்களின் இந்தப் புகழ் நிலா ஒளியைப் போல மென்மையானது. நம்முடைய ஆற்றலோ கதிரவனின் சக்தி வாய்ந்த கதிர்களை ஒத்தவை. பாண்டவர்கள் எவ்வளவு தான் சிறப்புற்றிருந்தாலும் நம் ஆற்றலுக்கு முன்னால் அது எம்மாத்திரம்?” -துச்சாதனனும் ஒத்துப் பாடினான். இந்த மூன்று பேருடைய பேச்சையும் கேட்ட துரியோதனனுக்குத் தன்னைப் பற்றிய கர்வம் அளவு கடந்து தோன்றிவிட்டது. நாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று இறுமாப்புக் கொண்டுவிட்டான் அவன். திருதராட்டினன், வீட்டுமன், விதுரன், துரோணன் முதலிய பெரியோர்களும் தன்னோடு அந்த அவையில் இருக்கிறார்கள் என்பதையே அவன் மறந்து விட்டான். அகங்காரம் அவனை மறக்கச் செய்துவிட்டது என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

“தருமன் திசைகள் நான்கையும் வென்று சிறப்புடன் ஓர் வேள்வியையும் செய்து அதற்குத் தலைவனானான். அவன் தம்பியர்களும் அவனும் ஆற்றலிற் குன்றாத சிறந்த வீரர்கள், பாண்டவர்களது ஆற்றவை இதற்கு மேலும் நாம் வளர விடுவோமானால் அவர்கள் நம்மையே வென்று விடவும் முயற்சி செய்வார்கள். முள்ளோடு கூடிய மரத்தை அது வளர்ந்து பெரிதாவதற்கு முன்பே கிள்ளி எறிந்து அழித்து விடுதல் வேண்டும். அந்த மரம் முற்றிவளரும் படியாக விட்டுவிட்டால் பின்பு கோடாரியால் கூட அதை வெட்டிச் சாய்க்க முடியாது. எனவே பாண்டவர்களை எல்லாமிழந்து தோல்வியுறச் செய்யும் முயற்சியில் நாம் இப்பொழுதே ஈடுபட வேண்டும். போர் செய்தோ, சூழ்ச்சி புரிந்தோ அவர்களை வெல்ல வேண்டும். பாண்டவர்கள் செல்வமிழந்து வாழ்விழந்து வெறுங்கையர்களாய் நிற்பதைக் கண்டு நான் மகிழ வேண்டும்...” பொறாமையும் ஆவேசமும் தூண்டியதனால் பண்பாட்டை மறந்து பேசினான் துரியோதனன்.

“ஆம்! இன்றே இப்போதே அதைச் செய்தாக வேண்டும். இந்திரப் பிரத்த நகரத்துப் பளிங்கு மண்டபத்தில் நமது மதிப்பிற்குரிய பெருமன்னர் (துரியோதனன்) நடந்தபோது தடுமாறியதைக் கண்டு திரெளபதி இகழ்ச்சி தோன்றச் சிரித்தாள். மன்னர் மன்னனை இகழ்ந்த அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நெருப்பாகக் கொதிக்கிறது. வேள்விக்குச் சென்று வந்தோமே அதில்தான் நமக்கொரு சிறப்பு, மரியாதை உண்டா? எத்தனையோ அரசர்கள் போனார்கள்! வந்தார்கள்! அவர்களில் நாமும் ஒருவராகப் போய் வந்தோம். உறவைக் குறித்தோ, உலகம் புகழும் பேரரசராயிற்றே என்றோ , நமக்கு ஏதாவது தனி மரியாதை செய்தார்களா? எந்தத் தகுதியும் இல்லாத கண்ணபிரானுக்கு அல்லவா அவர்கள் தனிச்சிறப்பும் முதன்மையும் கொடுத்தார்கள். எதிர்த்துக் கூறிய சிசுபாலனை அழித்துவிட்டார்கள். பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து இந்த உலகையே வென்று ஆளக் கருதியிருக்கிறார்கள். இந்தக் கருத்து வெற்றி பெற விடக் கூடாது. இன்றே படையெடுத்துச் சென்று பாண்டவர்களை வெல்ல வேண்டும்...” துச்சாதனன் மீண்டும் இவ்வாறு கூறினான்.

கர்ணன் பாண்டவர்களுக்கு எதிராகப் பொறாமைக்கனல் முட்டி விட்டிருந்தாலும் அவன் உள்ளத்தில் நேர்மை ஒருபால் வாழ்ந்தது. அதனால் அவன் “அரசே! பாண்டவர்களைப் போர் செய்து வெல்ல வேண்டியது தான் முறை, சூழ்ச்சி செய்து வெல்வது நமக்கு இழுக்கு, நம்முடைய ஆண்மைக்கு இழுக்கு. நாமும் வீரர்கள், நமக்கும் வீரமிருக்கிறது. சூழ்ச்சி செய்ய வேண்டியது ஏன்?” - என்று துணிவோடு துரியோதனனை நோக்கிக் கூறினான். ‘சூழ்ச்சி செய்து வெல்ல வேண்டும்’ -என்ற துரியோதனனின் கருத்தையே கர்ணன் துணிவாக எதிர்த்துப் பேசியது அங்கிருந்தோர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. கூடியிருந்தோர் கர்ணனின் நேர்மையை வியந்தனர். ஆனால் கர்ணனுக்கு நேர்மாறான குணம் படைத்த சகுனி, துரியோதனனுக்கு முன்னால் தன் சூழ்ச்சி வலையைச் சாதுரியமாக விரிக்கத் தொடங்கினான். நல்லவைகளை விடத் தீயவைகளைச் சீக்கிரமே புரிந்து கொண்டு செய்ய முற்படுகின்ற இதயப் பாங்குள்ள துரியோதனன் சகுனியின் சூழ்ச்சி வலையில் மெல்ல மெல்லத் தன்னையறியாமலே விழுந்து கொண்டிருந்தான். கர்ணன் ‘சூழ்ச்சி கூடாது’ -என்று சொல்லி முடித்த மறுவிநாடியே சகுனி பேசலானான்:

“இப்போது பேசிய கர்ணனானாலும் சரி, வானுலக வீரரானாலும் சரி! நேரிய முறையில் போர் செய்து பாண்டவர்களை வெற்றி கொள்வது என்பது நடக்க முடியாத காரியம். இன்று மட்டும் அன்று. இன்னும் ஏழேழுப் பிறவிகள் முயன்றாலும் நடக்க முடியாத காரியம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். திரெளபதிக்கு சுயம்வரம் நடந்தபோது அர்ச்சுனனோடு நாம் போர். செய்தோம். அவன் ஒருவன் நாமோ பலர். ஆனாலும், வெற்றி கொண்டவன் அவன்தான். அர்ச்சுனன் ஒருவனுடைய ஆற்றலுக்கு முன்னால் நாமெல்லோரும் தோல்வியடைந்தோம் என்றால் பாண்டவர்கள் எல்லோரையும் வெல்வது எப்படி? எனவே சூழ்ச்சி ஒன்று தான் பாண்டவர்களை நாம் சுலபமாக வெல்வதற்கு வழி, வேறெந்த வழியினாலும் இயலாது!”

“ஆம் ஆம் மாமன் சொல்வது தான் சரி. சூழ்ச்சி செய்து தான் பாண்டவர்களைத் தொலைக்க வேண்டும். வேறு வழியில்லை” -என்று துச்சாதனனும் இப்போது மாமனை ஆதரித்துப் பேசினான்.

தீமையை விரைவில் புரிந்து கொண்டு அதன் வழி நடக்கின்ற துரியோதனன் மனமகிழ்ச்சியோட சகுனியைத் தன் அரியணைக்கு அருகில் அழைத்தான். தன் யோசனைக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் சகுனி எழுந்து அருகில் சென்றான். “மாமனே! நீ கூறிய யோசனைக்கு என் இதயபூர்வமான நன்றி. சூழ்ச்சியால் தருமனையும் அவன் தம்பியரையும் வெல்லலாம் என்றாய் அப்படி வெல்வதற்கான திட்டங்களையும் நீயே எனக்குக் கூற வேண்டும்” -என்று துரியோதனன் அருகில் வந்த சகுனியிடம் கேட்டான்.

“அரசே! சூதாட்டத்தில் எத்தகையவர்களையும் வெற்றி கொள்ளும் திறன் எனக்கு இருக்கின்றது. பாண்டவர்களையும் இதே திறமையால்தான் வெல்ல வேண்டும். இந்த நகரில் இதுவரை அமையாத சிறப்புக்களோடு புதிய மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள். அந்த மண்டபத்தைக் காண வரவேண்டும் என்று பாண்டவர்களுக்கு அழைப்பு அனுப்பினால் அவர்கள் மறுக்காமல் வருவார்கள். மண்டபத் திறப்பு விழாநாளில் மண்டபத்தை அவர்கள் கண்டு முடித்த பின், “இப்படியே இந்தப் புதிய மண்டபத்தில் பொழுது போக்காகச் சிறிது நேரம் சூதாடலாம்” என்று சூதுக்கு அழைப்போம். தருமனுக்குச் சூதாட்டம் பிடிக்காது என்றாலும் அதற்கு அவனை இணங்கச் செய்வது கடினமான காரியம் இல்லை. முதலில் விளையாட்டுக்காக ஆடுவது போல ஆடுவோம். பின்பு பாண்டவர்களின் உடைமைகளை ஒவ்வொன்றாகக் கவர்ந்து கொள்ளலாம். அவ்வாறு அவர்கள் உடைமைகளைக் கவர்ந்து அவர்களை ஏழையாக்குவது என் பொறுப்பு” -என்றான் சகுனி. அவனுடைய திட்டங்களால் மனமகிழ்ந்த துரியோதனன் அவனை அன்புடன் மார்புறத் தழுவி நன்றி தெரிவித்தான். மாமன் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்ததும் “மாமனின் யோசனையைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?” என்று விதுரனைப் பார்த்துக் கேட்டான் துரியோதனன்.

“துரியோதனா! நீயும் சகுனியும் உங்களுடைய குறுகிய மனத்திற்குத் தகுந்த எண்ணங்களையே எண்ணுகின்றீர்கள். பாண்டவர்களுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்வதற்கு இவ்வளவு பெரிய சூழ்ச்சிகள் எதற்கு? நேரே தருமனிடம் சென்று “உன் அரசும் உடைமைகளும் எங்களுக்கு வேண்டும்” -என்று யாசித்தால் மறு பேச்சின்றி உடனே கொடுத்து விடுவானே! எதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சிகளைச் செய்து உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்திற்கும் களங்கத்தைத் தேடிக் கொள்கிறீர்கள்? இப்படிச் செய்தால் பிறநாட்டு மன்னர்களும் சான்றோர்களும் உங்கள் பண்பைப் பற்றி எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்? சூதாடி அடைகின்ற வெற்றி புகழுக்கும் பெருமைக்கும் மாசு அல்லவா? வேண்டாம் இந்தப் பழி! வேண்டாம் இந்த சூழ்ச்சி! பொறாமையைக் கைவிட்டு நேரிய வழியில் வாருங்கள்” -விதுரன் மனம் உருகும்படியான முறையில் துரியோதனனை நோக்கி இவ்வாறு அறிவுரை கூறினார். எரிந்து நீராய்ப் போன சாம்பலிலிருந்து சூடு, புகை தோன்றுவதில்லை. துரியோதனனுடைய நெஞ்சத்தில் அறிவு சூன்யம், பண்பும் சூன்யம். நேர்மை, நீதி, நியாயம் ஆகிய எண்ணமும் அவன் மனத்தில் தலைகாட்டியது இல்லை. விதுரனுடைய அறிவுரை இத்தகைய தீமை நிறைந்த ஒரு மனத்தில் எப்படி நுழைய முடியும்? உண்மையை எடுத்துரைத்த அந்த அறிவுரையை அவன் ஏளனம் செய்தான். அவனுடைய மனமும் ஏளனம் செய்தது.