மகாபாரதம்-அறத்தின் குரல்/4.விதுரன் செல்கிறான்
நல்லவர்கள் உள்ளன்போடு கூறினாலும் அந்த அறிவுரை தீயவர்களின் மனத்தோடு பொருந்துவதில்லை. தண்ணீரில் எண்ணெய் கலப்பதில்லையல்லவா? விதுரன் கெளரவர்களுக்குக் கூறிய அறிவுரையும் இதே கதியைத்தான் அடைந்தது. அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அதைக் கூறிய விதுரன் மேல் அவன் அளவற்ற ஆத்திரம் அடைந்தான். “நீ சிறிதும் நன்றியில்லாதவன்! கெளரவர்கள் ஆதரவில் வாழ்ந்து கொண்டே பாண்டவர்களுக்காகப் பேசுகிறாயே? ‘அரசாட்சியைக் கொடு’ -என்று தருமனிடம் கேட்டு வாங்க முயன்றால் தயங்காமல் கொடுத்து விடுவான் என்கிறாய்! அப்படிக் கேட்டு வாங்குவது எங்களுக்கல்லவா இழிவைக் கொடுக்கும்? இந்த மாதிரிப் பயனற்ற வழிகளைத்தான் எங்களுக்காக நீ கூறுவாய்! உனக்கு வேறென்னதான் கூறத் தெரியும்?” என்று துரியோதனன் விதுரனை இவ்வாறு வாயில் வந்த வண்ணமெல்லாம் பேசியதைக் கேட்டு அவையிலிருந்த சான்றோர்கள் தலைகுனிந்தனர்.
விதுரனும் சற்றே பொறுமை இழந்தான்; “துரியோதனா! மொழி வரம்பு கடந்து பேச வேண்டாம். உங்கள் நன்மைக்காகத்தான் இந்த அறிவுரைகளைக் கூறினேன். இதில் எனது சுயநல நோக்கம் சிறிதும் இல்லை. விருப்பமிருக்குமானால் கேட்டு அதன் படி செய்யுங்கள். இல்லையானால் வீண் வார்த்தைகளை ஏன் பேசுகிறீர்கள்?” -என்று ஆத்திரத்தோடு கூறிவிட்டான் விதுரன். அடிக்க அடிக்க அதைப் பொருட்படுத்தாமல் மேலும் படத்தைத் தூக்கி கொத்த வரும் பாம்பைப் போல இவ்வளவு கூறிய பின்பும் மேலும் விதுரனைத் தூற்றிச் சில வார்த்தைகளைச் சொன்னான் துரியோதனன். ‘இனியும் இந்த அரசவையில் நாம் உட்கார்ந்து கொண்டிருப்பதில் பயன் இல்லை, அர்த்தமும் இல்லை’ -என்பதை உணர்ந்து கொண்ட விதுரன் அமைதியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
இந்த மட்டிலாவது நம்முடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் தடை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு மனிதன் இங்கிருந்து வெளியேறினானே! -என்ற மகிழ்ச்சி துரியோதனனுடைய உள்ளத்தில் ஏற்பட்டது. இறுதியில் சகுனியைக் கொண்டாடி அவனுடைய ஆலோசனையையே ஏற்றுக் கொண்டான் துரியோதனன். பாண்டவர்களைச் சூதுக்கு அழைப்பதற்காக மண்டபம் கட்ட ஏற்பாடு செய்ய முற்பட்டனர் கௌரவர்கள். சித்திர வினைஞரும், சிற்ப வித்தகர்களும், தச்சர்களும் உடனே அவைக்கு அழைத்து வரப்பட்டனர். “கண்டவர்கள் அதிசயித்து வியக்கத்தக்க அழகான மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள்” என்ற கட்டளை பிறந்தது. துரியோதனனின் ஆணைக்குட்பட்ட குறுநில மன்னர்கள் மண்டபப் பணிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கினர். மண்டப வேலை மிகவும் துரிதமாக வளர்ந்து வந்தது. தீய எண்ணங்களும் அவற்றின் விளைவுகளும் எப்போதுமே இது போல் அசாத்தியமாக வேகத்தோடு வளர்வது தான் வழக்கம். ஆனால், ‘வேகமான வளர்ச்சிக்கு எல்லாம் வேகமான அழிவும் தொடர்கிறது’ -என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்து அழகெல்லாம் கூடி ஒன்று திரண்டு விட்டதோ என்று சொல்லுமாறு மண்டபம் உருவாகி முடிந்தது. தன் வஞ்சகத்தின் முதல்படியாகிய அந்த மண்டபத்தைக் கண்கள் நிறையக் கண்டு மகிழ்ந்தான் துரியோதனன். பின்பு கர்ணன் சகுனி முதலிய தன் தோழர்களை அழைத்துக் கொண்டு தந்தை திருதராட்டிரனைப் பார்த்து அவனுடைய சம்மதத்தைப் பெறுவதற்காகச் சென்றான். சகுனி, கர்ணன் ஆகியோர் இடையிடையே விளக்கம் கூறத் துரியோதனன், ‘பாண்டவர்களை மண்டபம் காண அழைக்க வேண்டும் - அப்படியே அவர்களைச் சூதினால் வெல்ல வேண்டும்’ என்ற கருத்தைத் தன் தந்தைக்குக் கூறினான். திருதராட்டிரனுக்கிருந்த சிறிதளவு கருணையையும், நல்ல உள்ளத்தையும் கூட அந்த மூவருமாகச் சேர்ந்து போக்கிவிட்டார்கள். புறக்கண்களை மட்டும் இழந்திருந்த அவன், அவர்களுடைய வஞ்சகம் நிறைந்த பேச்சால் அகக் கண்களையும் பறி கொடுத்தான். பாண்டவர்களை மண்டபம் காண அழைப்பது போல் அழைத்துச் சூதாடி வெல்ல வேண்டும் என்ற சூழ்ச்சிக்கு அவனும் இணங்கினான். பெருமைக்குணம் படைத்த தந்தை சிறுமைக்குத் தலையசைத்தான்.
“மகனே! சரியான காரியம் செய்தாய்? படை திரட்டிப் போர் முனையில் நேருக்கு நேர் நின்று எதிர்த்தாலும் பாண்டவர்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாது. எனவே சூதாட்டத்தினால் வெல்வதே முடியும். இந்த அரிய திட்டத்தைச் சகுனிதான் உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சகுனிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!” என்று இவ்வாறு வாழ்த்தினான் திருதராட்டிரன்.
இந்த நல்ல சமயத்தைக் கைவிட விரும்பாத துரியோதனன், “தந்தையே! பாண்டவர்களை இந்திரப் பிரத்த நகரத்திலிருந்து மண்டபம் காண அழைத்து வர வேண்டும் அல்லவா? அந்த அழைப்பை மேற்கொண்டு செல்லத்தக்க தூதுவர் விதுரர் தாம் ! ஆகவே அவரையே தூதுவராக அனுப்பிவிடுங்கள்!” -என்றான்.
விதுரனுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் அவனை ஈடுபடுத்தி, துன்புறுத்திப் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை ! அந்த ஆசையும் அடுத்த விநாடியிலேயே நிறைவேறியது. திருதராட்டிரன் ஒரு பணியாளைக் கூப்பிட்டு விதுரனை அழைத்துக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். சில நாழிகைப் போதில் விதுரன் திருதராட்டிரனுக்கு முன்பு வந்து வணங்கி நின்றான்.
“விதுரா ! இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்று இங்கே கட்டியிருக்கும் புதிய மண்டபத்தைக் காண்பதற்காகப் பாண்டவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு உன்னைத் தூதுவனாக அனுப்புகிறேன்!” -திருதராட்டிரனின் இந்தச் சொற்கள் நெருப்புக் கங்குகள் போல விதுரன் செவியிற் புகுந்து மனத்தைச் சுட்டன. அவன் மிகவும் வெறுத்த சூழ்ச்சி எதுவோ அதை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவனே கருவியாக இருப்பதா? மனச்சான்று வதைத்தது. இதற்கு இணங்காமலிருந்து விட்டால் என்ன?’ -என்று நினைத்தான். ஆனால் திருதராட்டிரன் அழைப்பையும் தூதுத்திரு முகத்தையும் எழுதிக் கையில் கொடுத்தபோது விதுரனால் மறுத்துப் பேச முடியவில்லை. பேசாமல் இருந்து விட்டான். துரியோதனனுக்கு இருப்பதைப் போல, கூசாமல் பெரியோர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் தனக்கும் இல்லாமல் போய் விட்டதே என்ற விநோதமான ஏக்கம் அவனுக்கு இப்போது உண்டாயிற்று. மனத்தையும் அதன் எண்ணங்களையும் மறைத்துக் கொண்டு இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கித் தூது புறப்பட்டான் அவன்.
‘பாண்டவர் நலனில் அக்கறை கொண்ட தானே அவர்களைச் சூழ்ச்சியில் மாட்டி வைக்கலாமா?’ என்றெண்ணும்போது, ‘நாம் என்ன செய்யலாம்? கடமைக்காகத்தானே தூது செல்கிறோம்!’ என்ற சமாதானமும் அவன் மனத்திலேயே உண்டாகும். விதுரன் தூது புறப்பட்டு வருகின்ற செய்தி பாண்டவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது. சிறிய தந்தை முறையினராகிய அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இந்திரப்பிரத்த நகரத்தின் அழகையும் செல்வ வளத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கொண்டே நகருக்குள் பிரவேசித்தான் விதுரன்.
‘இந்த அழகிய நகரத்திற்குரியவர்களின் நலம் நிறைந்த வாழ்வு இன்னும் சில நாட்களில் என்ன கதியை அடையப் போகிறதோ? விதியின் போக்கை என்னவென்று சொல்வது?’ -என்று அவன் தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். பாண்டவ சகோதரர்கள் ஐவரும் விதுரனை அன்போடும் உவகையோடும் வரவேற்று உபசரித்தனர். விதுரன் திருதராட்டிர மன்னனின் திருமுகத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு உங்களை அத்தினாபுரிக்கு அழைத்து வருமாறு உங்கள் பெரிய தந்தை திருதராட்டிர மன்னர் என்னை இங்கே தூதுவனாக அனுப்பினார்’ என்று வந்த காரணத்தைக் கூறினார் விதுரன் கொடுத்த திருமுகத்தைப் படித்து முடித்த தருமன், “இந்த அழைப்பின் அந்தரங்கமான நோக்கம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை” - என்றான். துரியோதனன், சகுனி முதலியவர்கள் செய்திருக்கும் சூழ்ச்சி நிறைந்த தீர்மானத்தைப் பாண்டவர்களிடம் தெளிவாகக் கூறிவிடலாமா? வேண்டாமா? -என்று ஒரு கணம் தனக்குள் யோசித்தான். கூறி விடுவதனால் எந்தத் தவறும் இல்லையென்று முடிவு செய்து கொண்டபின் கூறிவிடுவது என்றே துணிந்தான்.
“தருமா! திருதராட்டிரன், உங்களுக்குக் கொடுத்துவிட்டிருக்கும் திருமுகத்தில் என்னவோ ‘மண்டபம் காண்பதற்காக வரவேண்டும்’ -என்று அழைத்திருக்கிறான். வெளிப்படையான இந்த அழைப்பில் வேறோர் சூழ்ச்சியும் மறைந்திருக்கிறது. நீங்கள் மண்டபம் காணச் செல்லும் போது சகுனியின் துணைக் கொண்டு துரியோதனன் உங்களைச் சூதாடுவதற்கு அழைப்பான். நீங்கள் இணங்கினால் உங்களோடு சூதாடி உங்களுடைய எல்லா உடைமைகளையும் கவர்ந்து கொள்ள வேண்டுமென்று கெளரவர்கள் சூழ்ச்சி செய்துள்ளார்கள். உங்களை அழைத்திருப்பதின் அந்தரங்கமான நோக்கம் இது தான்.”
விதுரன் கூறியவற்றைக் கேட்டதும் தருமனுக்கு உண்மை தெளிவாக விளங்கிற்று. ‘சூதாட்டத்திற்காகத் தன்னை அழைக்கிறார்கள்’ -என்று எண்ணும் போதே தருமன் உள்ளம் புண்பட்டது. ‘ஒரு மனிதனின் எல்லாவிதமான சிறப்புகளும் அழிவதற்குச் சூது காரணமாக அமைய முடியும். அறிவு, சத்தியம், ஆண்மை முதலிய உயரிய குணம் நலன்களெல்லாம் சூதாடத் தொடங்குகிறவனிடமிருந்து ஒவ்வொன்றாக நழுவி விடுகின்றன. கள், காமம், சூது என்று இவை மூன்றையும் விலக்கப்பட வேண்டிய குணங்களாக அறிஞர்கள் கூறுவார்கள். இந்த மூன்றிலும் கூட இறுதியிலுள்ள சூது மிகவும் பயங்கரமான ஒன்றாகும். எத்தனையோ மன்னாதி மன்னர்களையும் நற்குடிப் பிறந்தவர்களையும் கெட்டழிந்து போகச் செய்திருக்கிறது இந்தச் சூது கள்ளும், காமமும் மனிதனுடைய உடலைப் பேரளவிலும் அறிவைச் சிற்றளவிலும் தான் பாதிக்கின்றன. ஆனால் சூதோ மனிதனுடைய ஒழுக்கம், சத்தியம், அறிவு எல்லாவற்றையுமே பாதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ‘சத்தியம், தருமம்’ -என்னும் இவை இரண்டை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்னையும் இந்தச் சூது பாதிக்கும்படியாக விடலாமா? இல்லை! ஒருபோதுமில்லை. ‘சூதாட்டத்தினால் தருமபுத்திரனுடைய வாழ்க்கையில் மிகப்பெரியதோர் களங்கம் புகுந்து விட்டது’ -என்று நாளைய உலகில் இப்படி ஓர் அவச் சொல் எழும்படியாக விடலாமா? கூடாது! கூடவே கூடாது’ -தருமனுடைய மனத்திற்குள் ஒரு சிறு போராட்டம் நிகழ்ந்து ஓய்ந்தது.
திருதராட்டிரனுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதா? புறக்கணிப்பதா? என்று போராடி முடிவு காண இயலாமல் நின்றது அவன் மனம். அரசவையைச் சேர்ந்த பெரியோர் களிடமும், விதுரனிடமும், தன் சகோதரர்களிடமும் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்த பின்பே ஒரு முடிவுக்கு வரலாமென்று தோன்றியது அவனுக்கு
“உலகில் நாமெல்லாம் எண்ணுகின்ற எண்ணங்களைக் காட்டிலும் விதியின் எண்ணம் வலிமை வாய்ந்ததாக இருக்கின்றது. நம் எண்ணப்படி. விதி நம்மை வாழ விடுவதில்லை. விதியின் எண்ணத்தையோ நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சிறிய தந்தையே! கெளரவர்கள் எங்களை எதற்காக அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்ற மர்மம் எங்களைக் காட்டிலும் உங்களுக்கு நுணுக்கமாக விளங்கியிருக்கிறது. எனவே நீங்கள் தான் இதைப் பற்றி எங்களுக்கும் பயன்படும் படியான யோசனையைக் கூற முடியும் நாங்கள் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? அருள் கூர்ந்து உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்”... என்று தருமன் விதுரனை வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோளில் பணிவும் குழைவும், சிறிய தந்தை என்ற உறவுரிமையும் நன்கு வெளிப்பட்டன
“தருமா! உரிமையும் அன்பும் கலந்த உன்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நான் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன், கேட்டுக் கொள்!”
“சொல்லுங்கள்! கேட்கிறேன்.....”
“சூதாட்டத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இப்போது நீ என்னவெல்லாம் சிந்தித்துப் பதறுகின்றாயோ அவற்றையெல்லாம் துரியோதனனுடைய அவையில் தானே கூறினேன். ‘சூதாட்ட நினைவு கூடாது’ -என்று சொல்லித் தடுப்பதற்கு முயன்றேன். ஆனால் என் சொற்களை அங்கே யாராவது பொருட்படுத்திக் கேட்டால் தானே? பிறருடைய சிந்தனையினால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டு கவலைப்படக்கூடாது’ -என்று அன்றிலிருந்து ஒரு சங்கல்பம் எனக்கு உண்டாகியிருக்கிறது. எனவே உன் பெரிய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பதை நீயே சிந்தித்து உன் மனத்தில் தோன்றும் முடிவின்படி நடந்து கொள்வதுதான் நல்லது! இவை தவிர இப்பொழுது நான் வேறொன்றும் சொல்வதற்கில்லை’என்று பற்றில்லாத முறையில் அமைந்து விட்டது விதுரனின் பதில்.
இந்தப் பதிலைப் பற்றித் தருமன் தனக்குள் சிந்திக்க ஆரம்பிக்கு முன் வீமன் குறுக்கிட்டுப் பேசினான். “அண்ணா! பொறுமையையும் உறவு முறையையும் நம்பி வீண் போக இனியும் நாம் பேதையர்களில்லை. எந்த வகையிலாவது நம்முடைய வாழ்க்கையைக் கெடுக்கவேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் கௌரவர்கள். நாம் இளைஞர்களாக இருந்த காலத்திலிருந்து துரியோதனாதியர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மை அழித்து விடுவதற்கு முயன்று வருகின்றார்கள். இப்போது நம்மை மறைமுகமாகச் சூதாட அழைப்பதன் நோக்கம் தான் என்ன? நம்முடைய அரசுரிமையையும், உரிமைக்குட்பட்ட சகல விதமான உடைமைகளையும் பறித்துக் கொள்ள வேண்டுமென்பது தானே அவர்களது எண்ணம்? விஷவிருட்சத்தைப் போன்ற இந்தத் தீய எண்ணத்தை வளரவிடாமல் உடனடியாகக் - களைந்தெறிய நாம் முயல வேண்டும்’ உடன் பிறந்தவர்கள் என்ற உறவைப் பார்க்காமல் உடனே அவர்கள் மேல் படையெடுக்க வேண்டும். படையெடுத்து அவர்களை நிர்மூலமாக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் நாம் ஆண்மையுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்புவதில் அர்த்தமே இல்லை.” என்று தன் உள்ளத்தில் கவிந் திருந்த ஆத்திரத்தையெல்லாம் கொட்டி விட்டான் வீமன்.
மனுடைய ஆவேசப் பேச்சு முடிந்ததும் அர்ச்சுனன் தன் கருத்தைக் கூறினான். “நம்பத் தகுந்தவர்களை நம்பாமலிருப்பதும், நம்பத்தகாதவர்களை நம்புவதும் கூடாது. நமக்குப் பலவிதத்திலும் பகைவர்களாக இருப்பவர்களை நம்முடைய உறவினர் என்றெண்ணி அவர்களுடைய தீமைகளுக்கு இரையாவது பேதைமை. பொது உலகத்தின் தர்ம நெறிகள் வேறு. அரசியல் - உலகத்தின் தர்ம நெறிகள் வேறு. எனவே, துரியோதனாதியர்கள் அழைப்பை மிகுந்த சிந்தனைக்குப் பின்பே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அர்ச்சுனனைத் தொடர்ந்து நகுல, சகாதேவர்களும் இதே கருத்தைத் தருமனிடம் வற்புறுத்திக் கூறினார்கள். துரியோதனாதியர் சூழ்ச்சியை எண்ணி அவர்கள் மனங்குமுறுகிறார்கள் என்பது அவர்கள் சொற்களிலிருந்தே புலப்பட்டது. அவர்கள் யாவரும் கூறிவற்றைப் பொறுமையாக இருந்து கேட்ட தருமன் தன் எண்ணத்தைக் கூறத் தொடங்கினான்.
“துரியோதனாதியர்களின் போக்கு நாம் மனம் ஒப்பிப் பழகக்கூடிய விதத்தில் இல்லை என்பது உண்மைதான்! அதற்காகப் பெரிய தந்தையின் அழைப்பை நாம் எப்படி மறுக்க முடியும்?”
“நம்மைச் சூழ்ச்சியினுள்ளே புதைய வைப்பதற்கு அழைப்பவர்கள் யாராயிருந்தால் என்ன? நாம் போகக்கூடாது” என்று வீமன் கூறினான்.
“போகாமல் இருப்பதுதான் நல்லது!” -என்று அர்ச்சனனும் அதையே கூறினான்.
“இல்லை! இல்லை! போகாமல் இருக்கக்கூடாது! அப்படிச் செய்வது பெரிய தவறு ! இன்ப துன்பங்களை விலக்கவும் அனுபவிக்கவும் நாம் யார்? விதி நம்முடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதில்லையே! கெளரவர்களோடு சூதாட வேண்டும் என்று இருந்தால் அது நடந்து தான் தீரும். நீங்கள் நால்வரும் எனக்குத் தம்பியர்களானால் என்னுடன் பிறந்தவர்களானால் நான் கூறுகிறபடி கேளுங்கள். பெரிய தந்தை திருதராட்டிரனின் அழைப்பை மேற்கொண்டு அத்தினாபுரிக்குப் போகத்தான் வேண்டும். புறப்படுவதற்குரிய ஏற்பாடுகளைக் செய்க. சத்தியமும் தர்மமும் சாமானியர்களின் வெற்றுச் சூழ்ச்சியால் அழிவதில்லை! அழியாது” -தருமன் இவ்வளவு ஆணித்தரமாகக் கூறிய பின்பு அவனை எதிர்த்துப் பேச இயலாமல் சகோதரர்கள் சம்மதிக்க வேண்டியதாயிற்று.
‘பாண்டவர்கள் திருமுகத்தை ஏற்றுக்கொண்டு வருவதற்கு இசைந்துவிட்டார்கள்’ -என்ற செய்தியைக் கூறுவதற்காகத் தூதுவனாக வந்திருந்த விதுரன் முன்பே புறப்பட்டுச் சென்றான். அரண்மனையிலும் தருமனுக்கு அடங்கிய குறுநில மன்னர்கள் நடுவிலும் பாண்டவர்களின் பயணச் செய்தி விரைவில் பரவியது. பயணத்திற்கு தேவை யான ஏற்பாடுகளும் துரிதமாக நடக்க தொடங்கியிருந்தன.