மகாபாரதம்-அறத்தின் குரல்/5. விதியின் வழியில்

விக்கிமூலம் இலிருந்து

5. விதியின் வழியில்

மறுநாள் காலையிலேயே பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து புறப்பட்டுவிட்டனர். பரிவாரங்களும் படைகளும் உடன் வரும் சிற்றரசர்களுமாகப் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ஐந்து ஒளிமிகுந்த தேர்களில் ஏறிச் சென்றனர். தருமன் நடுநாயகமாகவும் மற்றவர்கள் சூழவும் சென்ற நிலை, நட்சத்திரங்களுக்கிடையே சந்திரன் பவனி வருவது போலத் தோன்றியது. திரெளபதியும் அந்தப்புரத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் அழகிய சின்னஞ்சிறு பல்லக்குகளில் பிரயாணம் செய்தனர். நிமித்திகர், கணிகர் முதலிய அரண்மனைப் பணியாளரும் வழக்கப்படி உடன் சென்றனர். இந்திரப் பிரத்த நகரிலிருந்து சில நாழிகைகள் பயணஞ் செய்து ஒரு காட்டுப் பகுதியை அடைந்தபோது, அங்கே சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பல்லிகள் தீமைக்கறிகுறியான குரல் கொடுத்ததையும், செம்போத்து என்னும் பறவைகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்துக்குச் சென்றதையும் செல்லும் வழியை மறித்துக் கொண்டு ஆண் மான்கள் கொம்புகளை ஆட்டிச் சண்டை செய்ததையும் கண்டு நிமித்திகர்கள் மனம் வருந்தினர். இந்த நிமித்தங்களால் ஏற்படக் கூடிய தீய பலன்களை உடனே தருமனிடம் கூறவும் கூறினர். அப்படிக் கூறியபோது தருமன் அவர்களுக்குக் கூறிய பதில் அவர்களையே திகைக்கச் செய்தது.

“நிமித்திகர்களே! தீமை நிகழப் போகிறது என்பதை உங்கள் சகுன பலன்களால் மட்டுந்தானா தெரிந்துகொள்ள முடியும்? அதற்கு முன்பே என் மனத்திற்குத் தெரிகிறதே! உங்கள் நிமித்தம், நிமித்த பலன் இவைகளைக் காட்டிலும் விதி சக்தி வாய்ந்தது. அந்த விதி வகுத்த வழியின் மேலே தான் இப்போது நான் என் தம்பியர்கள்; ஏன்! நாம் எல்லோருமே சென்று கொண்டிருக்கிறோம். அதை மீற எவராலும் முடியாது. அதன்படியே எல்லா நிகழ்ச்சிகளும் நிகழும்”. இந்த பதில் மொழிகளைக் கேட்டபின் நிமித்திகரும் ஏனையோர்களும் பேசாமல் இருந்தனர்.

நீண்ட நேரப் பிரயாணத்திற்குப் பின்பு வழியருகில் தென்பட்ட ஓர் குளிர்ந்த சோலையில் அவர்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். சோலைக்கு நடுவே ஒரு பொய்கை இருந்தது. மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் யாவரும் அதில் நீராடினர். பல வகை மலர்களைக் கொய்து மகளிர்கள் தத்தம் கருங்குழலில் கவர்ச்சிகரமாகச் சூடிக் கொண்டனர். அங்கே தங்கியிருந்த நேரம் யாவருக்கும் களிப்பை அளித்து விட்டுக் கழிந்தது. சோலையிலிருந்து புறப்பட்ட பின்னர் வரிசையாக மருதம், குறிஞ்சி, நெய்தல் நிலங்களைக் கடந்து சென்றனர். வயலும் ஊர்களும் சூழ்ந்த பிரதேசமாகிய மருத நிலத்தில் வெண்ணெய், தயிர், பால் முதலியவற்றை அந்நில மக்கள் அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்து கொடுத்தனர். மலைச்சிகரங்களின் பசுமை கலந்த கம்பீரமான அழகையும், கடலின் எல்லையற்ற நீலநிற நீர்ப்பரப்பையும் முறையே குறிஞ்சி, நெய்தல் நிலங்களில் கண்டுகளித்தவாறே அவர்கள் சென்றனர்.

பாண்டவர்கள் துரியோதனாதியர் தலைநகரமாகிய அத்தினாபுரியை நெருங்கும்போது அந்தி மயங்கி இருட்டு கின்ற நேரமாக இருந்ததனால் ஊருக்கு வெளியே புறநகரிலிருந்த சோலையொன்றில் இரவு நேரத்தைக் கழித்துவிட்டு மறுநாள் காலை நகருக்கு பிரவேசிக்கலாம் என்று தீர்மானித்தனர். பிரயாண அலுப்புத் தீர அந்தக் சோலையில் இரவைக் கழித்தனர். கீழ்த்திசை வெளுத்து அருணோதயமாகப் போகின்ற சமயம் தருமன் விழித்துக் கொண்டான், தம்பியர்களையும், திரெளபதியையும் எழுப்பினான். யாவரும் அங்கேயே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நகருக்குள் கிளம்பினர். படைகளும் பரிவாரங்களும் மட்டும் தருமன் கட்டளைப்படி அதே சோலையில் இருந்தன. தம்பிமார்களோடும், மனைவியோடும் நகரத்துக்குள்ளே புறப்பட்டுச் சென்ற தருமன் நேரே பெரிய தந்தை திருதராட்டிரனின் மாளிகைக்குச் சென்றான். காவலர்கள் மூலம் திருதராட்டிர மன்னனுக்குத் தாங்கள் வந்திருப்பதைச் சொல்லியனுப்பினான்.

உள்ளே சென்று வந்த காவலர்கள் தருமன், திரெளபதி, தம்பியர்கள் ஆகிய யாவரையும் அழைத்துக்கொண்டு போய்த் திருதராட்டிர மன்னனுக்கு முன்னால் நிறுத்தினார்கள். உடனே பாண்டவர்களும் திரெளபதியும் தங்கள் வரவைத் தந்தைக்கு அறிவிக்குமுகமாக அவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். திருதராட்டிரன் அன்போடு தன் தம்பியின் மக்களைத் தழுவிக் கொண்டு நிறை நெஞ்சுடனே அவர்களுக்கு ஆசி கூறினான். நீண்ட நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த பின்பு “நீங்கள் வீடுமன், காந்தாரி முதலியவர்களை இன்னும் சந்தித்து வணங்கி ஆசிபெற வில்லையே?” என்று கேட்டான், “இல்லை! இனிமேல் தான் அவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றான் தருமன். “அப்படியானால் சென்று அவர்களைச் சந்தித்து விட்டு வாருங்கள். சகோதரர்கள் திருதராட்டிரன் சொற்படியே செய்யக் கருதி அவனை வணங்கிப் புறப்பட்டனர். காந்தாரியை வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் புறப்பட்டபோது திரெளபதி மட்டும் அங்கேயே தங்கினாள். அறிவிலும் வீரம், விரதம் முதலியவற்றிலும் தனக்கு இணையற்ற மூதறிவாளராகிய வீட்டுமனைக் கண்டு வணங்கியபோது, “எல்லா நலங்களும் பெறுவீர்களாக!” என்று வாழ்த்தினார் அவர். இவர்களைச் சந்தித்து வணங்கி முடித்தபின் தங்களுக்கு அந்தரங்க முடையவரும் சிற்றப்பனும் ஆகிய விதுரனின் அரண் மனைக்குச் சென்றனர், அவர்கள் அங்கே செல்லும் போது. இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். விதுரன் மாளிகையிலேயே இருந்தான். மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு இரவு உணவை அங்கேயே உண்டனர். உணவுக்குப்பின் அவர்கள் சற்று நேரம் நிலா முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். காந்தாரியுடன் தங்கியிருந்த திரெளபதியும் விதுரன் மாளிகைக்கே அழைத்து வரப்பட்டிருந்தாள். தம்பியர்கள், திரெளபதி, விதுரன் இவர்களெல்லோரும் உறங்குவதற்குச் சென்ற பின்பும் தருமன் மட்டும் அப்படியே நிலா முற்றத்தில் உட்கார்ந்து ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

‘வாழ்க்கையில் எந்தவிதமான சோதனைகளெல்லாம் ஏற்படுகின்றன? மெய்ம்மையையும் அறத்தையும் காப்பதற் காக எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கின்றது?’ -தருமனுடைய எண்ணங்கள் சுழித்துச் சுழித்து வளைந்தன. அதுவரை மேகக் கூட்டங்களின் கருமைப் பிடியில் சிக்கியிருந்த சந்திர பிம்பம் மெல்ல வெளிப்பட்டது. அந்த முழுமதி வடிவத்தையும் அதனிடையே தென்பட்ட சின்னஞ்சிறு களங்கத்தையும் தருமன் ஊன்றி நோக்கினான், ‘ஆகா! என் வமிசத்தைச் சேர்ந்த துரியோதனன், எண்ணற்ற தீமைகளையும், சூழ்ச்சிகளையும் செய்யப்போகிறான். அவனைத் தடுக்க நான் எழுந்துள்ளேன்’ என்று அந்தச் சந்திரபிம்பம் வாய் திறந்து பேசுவது போலிருந்தது. இன்னும் என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபின் தருமன் உறங்கச் சென்றான்.

விதிக்கு வெற்றியும் பாண்டவர்களுக்குச் சோதனையும் எடுத்துக் கொண்டு வருவது போல மறுநாளும் வந்தது. பாண்டவர்கள் நீராடல் முதலியவற்றைச் செய்து முடித்துக் கொண்ட பின் துரியோதனாதியரின் புதிய மண்டபத்தைக் காணச் சென்றனர். செல்வதற்கு முன்னால் அறம் செய்வதையே தன் இயற்கைக் குணமாகக் கொண்ட தருமன், ஏழை எளியவர்களுக்குப் பலவகைத் தான தருமங்களைச் செய்திருந்தான். இதற்குள் துரியோதனனே பாண்டவர்களை அழைத்து வருவதற்காகப் பிராகாமி என்ற தேர்ப்பாகனை அனுப்பி விட்டான். அவனுக்கும் கர்ணன், சகுனி முதலியவர்களுக்கும் “எப்படியும் இன்று பொழுது மறைவதற்குள்ளே பாண்டவர்களை வெறுங்கையர் களாக்கிவிட வேண்டும்” என்ற வைராக்கியம், தீமை நிறைந்த இந்த வைராக்கியத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அன்று காலை விரைவாகவே அரசவைக்கு வந்திருந்தனர் அவர்கள். மண்டபம் காணச் செல்வதற்கு முன்னால் திரெளபதியைக் காந்தாரியிடம் போய் இருக்குமாறு அனுப்பிவிட்டனர் பாண்டவர்கள். துரியோதனாதியர்களும் மற்றவர்களும் புதிய மண்டபத்திலேயே வந்து கூடியிருந்தனர். பாண்டவ சகோதரர்கள் மண்டபத்திற்குள் நுழைந்ததும் திருதராட்டிரன், வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களை வணங்கினர். மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க அவர்களை அழைத்துச் சென்றனர். துரியோதனன் முதலியோர். எல்லா வகையிலும் உயர்ந்த பொருள்களைக் கொண்டு உயர்ந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் அழகு பாண்டவர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. தருமன் அதனைப் புகழ்ந்து கெளரவர்களிடம் கூறி அவர்களைப் பாராட்டினான்.

மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தபின் எல்லோரும் அங்கு இருந்த அவையில் வந்து முறைப்படி அமர்ந்தார்கள். அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் துரியோதனன் ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ - என்றெண்ணியவனாகத் தன் சூழ்ச்சி வலையை விரித்தான்.

“உணவு கொள்வதற்கு இன்னும் மிகுந்த நேரமாகும். அதுவரை நாம் இங்கே பொழுது போகாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டுதானே இருக்கப் போகின்றோம்! பொழுது போக்காக கொஞ்ச நேரம் சூதாடினால் என்ன?” என்று துரியோதனன் தருமனைப் பார்த்துக் கேட்டான்.

“அறநெறிக்கு முரண்பட்ட குணங்களில் இந்தச் சூது மிகக் கொடியது. ‘இதனைப் பொழுதுபோக்காக விளையாடலாம்’ என்று நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். வேண்டாம்! என்னால் உங்களுடைய இந்த வேண்டுகோளுக்கு இணங்க முடியாது. சூதாடி அதில் வெற்றி பெற்று அதன் மூலம் என்னிடம் எந்தப் பொருளை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை இப்போதே கேளுங்கள். சிறிதும் தயங்காமல் கொடுத்து விடுகிறேன்” -என்றான் தருமன். தீமைக்கு இணங்க மறுக்கும் உறுதியும் ஆவேசமும் அவனுடைய கம்பீரமான குரலிலிருந்து வெளிப்பட்டன. துரியோதனன் தனக்குள், ‘தருமன் சம்மதிக்காமல் போய் விடுவானோ?’ என்று அஞ்சினான். ஆனால் மறுகணமே சகுனியின் பேச்சு அவனுடைய பயத்தைப் போக்கியது!

‘தருமா! நீ கூறுவது போலச் சூதாட்டம் என்பது அவ்வளவு பயங்கரமான ஒன்று அல்ல. ஆனாலும் நீ ஏனோ இதற்கு இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றாய்? சூதுக்காய்களின் முடிவுப்படியே ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் ஏற்படுகின்றன. வேறெந்தவிதமான சூழ்ச்சிக்கும் இதில் இடமில்ல. உனக்குச் சூதாடுவதற்கு வேண்டிய திறமை இல்லையென்றால் அதற்காகச் சூதாட்டத்தை ஏன் குறை சொல்கிறாய்?”

தருமன் சகுனிக்கு மறுமொழியே கூறவில்லை. மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். சகுனி இந்த மெளனத்தைப் பொருட்படுத்தாமலே மேலும் பேசத் தொடங்கினான்.

“நான் கூறுவதைக் கேள்! ஒருவரை ஒருவர் நம்பி விருப்பத்தோடு சூதாடப் போகிறோம் நாம். நான் தோற்றால் நீ வெற்றி அடைவாய் நீ தோற்றால் நான் வெற்றி அடைவேன். இவ்வளவுதானே? வேண்டுமானால் உனக்காக இரண்டு மடங்கு பந்தயப் பொருளை நான் கொடுக்கிறேன். எனக்கு நீ ஒரு பங்கு பந்தயப் பொருளைக் கொடுத்தால் போதும். சூதாடத் தயங்குகிறாயே நீ? உன்னிடம் செல்வம் இல்லையா? நீ ஏழையா?... பின் ஏன் தயங்குகின்றாய்? பசுவதை செய்துவிட்டுப் பின்னர், ‘ஐயோ, மாபெரும் பாவத்தை செய்து விட்டோமே! என்ன விளைவு நேருமோ?’ என்று நடுங்குகிறவர்களைப் போல நீயும் நடுங்குகிறாயே ஏன்? சூதாடுவதற்குக் கூடத் தைரியமில்லாமல் அஞ்சினால் உன் ஆண்மையைப் பற்றி இங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?” -என்று தன்னுடைய முழுச் சாமர்த்தியத்தையும் பயன் படுத்தித் தருமனை இணங்கச் செய்வதற்கு முயன்றான் சகுனி. ‘தான் அப்போது தன் வழியில் சிந்தித்துத் தன் போக்கில் நடக்கும் நிலையில் இல்லை! விதியின் வழியில் சுழன்று கொண்டிருக்கிறோம்’ -என்பதை உணர்ந்திருந்த தருமன் முன் போலவே அமைதியாக இருந்தான்.

‘தருமனின் அமைதி தங்கள் சூழ்ச்சிக்குத் தோல்வியாகி விடுமோ’ -என்று படபடப்பும் ஆத்திரமும் கொண்டு விட்டான் கர்ணன். அந்த ஆத்திரத்தில் ‘என்ன பேசுகிறோம்? நம் பேச்சு யார் யாருக்குக் கோபத்தை உண்டாக்கும்’ -என்ற சிந்தனையே இன்றிப் பேசி விட்டான் கர்ணன். “தருமா! நீ வீரமுள்ள ஓர் ஆண் மகன் தானா? விளையாட்டாகச் சிறிது நேரம் சூதாடுவதற்கு அழைத்தால் அதற்கு இவ்வளவு தூரம் நடுங்கிப் பதறுவானேன்? கேவலம் சூதாட்டத்திற்கே நீ இவ்வளவு நடுங்கினால் போர்களத்தில் போர் செய்வதற்கு இன்னும் எவ்வளவு நடுங்குவாயோ? நீயும் உன் சகோதரர்களும் வெட்கமுள்ளவர்களாக இருந்தால் இப்போதே உங்கள் இந்திரப்பிரத்த நகரத்திற்கு திரும்பி ஓடிப்போய்க் கோட்டைக் கதவுகளைத் தாழிட்டு விட்டு ஒளிந்து கொள்ளுங்கள்.” கர்ணன் இப்படிச் சொல்லி வாயை மூடவில்லை!

படீரென்று ஒரு சப்தம் கேட்டது. வேறொன்றுமில்லை! வில்லை நாணேற்றுகின்ற சப்தம்தான். அவையிலுள்ள அத்தனை பேரும் தர்மன் உட்படத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். கனல் கக்கும் விழிகளோடு கர்ணனின் வாயைக் குறி வைத்து வில்லை நாணேற்றி அம்பைத் தொடுக்கத் தயாராகிவிட்டான் அர்ச்சுனன். இன்னும் ஒரு கணம்!.. ஒரே ஒரு கணம் கழிந்திருந்தால் அர்ச்சுனனின் அம்பு கர்ணனின் வாயை உதடுகளோடு அறுத்துக் கீழே வீழ்த்தியிருக்கும்.

“இந்த மண்டபத்தை கட்டியதும், இதைப் பார்ப்பதற்காக என்று எங்களை வரவழைத்ததும், இப்போது ‘பொழுது போக்காகச் சூதாடலாம்’ என்று சூழ்ச்சியில் மாட்டி வைக்க முயல்வதும் உங்கள் வஞ்சகத் திட்டத்தின் விளைவுகள். எங்களுக்கு எல்லாம் தெரியும்! ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இதோ, இந்தக் கர்ணன் பொறுமையே உருவான எங்கள் தமையனைப் பார்த்து அருவருக்கத்தக்க முறையில் இழிந்த சொற்களைப் பேசுகிறான். தகுதியுணர்ந்து பேசத் தெரியாத இவன் நாவுக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போகிறேன்” என்று அர்ச்சுனன் மீண்டும் நாணை இழுத்து அம்பைக் குறி வைத்து செலுத்த முயன்றான். அவையிலிருந்தவர்கள் ஒன்றும் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். கர்ணனும், அர்ச்சுனனை எதிர்க்கத் தோன்றாமல் செதுக்கி வைத்த சிலையைப் போல நின்று கொண்டிருந்தான். அவன் வாயை அம்பு துளைப்பதும் நாவு அறுபடுவதும் தவறாது என்றே எல்லோரும் எண்ணி விட்டனர்.

இந்த இக்கட்டான நிலையில், “தம்பீ பொறு” என்று ஒரு சாந்தம் நிறைந்த குரல் அர்ச்சுனன் செவியில் நுழைந்தது. குரல் கேட்டதை அடுத்து சினத்தினால் விம்மித் தணிந்து கொண்டிருந்த அவனது பருத்த தோள்களில் மெல்லியதோர் அன்புக்கரம் விழுந்தது. அர்ச்சுனன் கையை வில்லிலிருந்து எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். தருமன் அவனருகில் நின்று கொண்டிருந்தான். வில் அவனுடைய கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. நெருப்பை அணைக்கும் நீரைப் போலத் தன் பார்வை ஒன்றினாலேயே அர்ச்சுனனின் ஆத்திரத்தைப் போக்கி விட்டான் தருமன். ‘தன் வாய் அறுந்து விழுவது உறுதி‘ -என்று நடுநடுங்கியவாறே நின்று கொண்டிருந்த கர்ணனுக்கு இப்போது தான் நடுக்கம் நின்று நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அர்ச்சுனன் சினம் தணிந்து தன் இடத்தில் அமர்ந்து விட்டான். இதை அடுத்துத் தருமன் கூறிய சொற்கள் தாம் யாவரையும் பேராச்சரியம் கொண்டு மலைத்துப் போகும்படி செய்தன.

“கர்ணா! சினம் கொண்டு விட்டால் ‘இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசலாம். இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசக் கூடாது’ என்ற வரம்பே இல்லாமல் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசிவிடலாமா? ‘போர் செய்யத் தெரியாத கோழை’ என்றாய் என்னை. வீரமும் போரும் தெரிந்த மெய்யான ஆண்மையாளர்களுக்கு உன்னைப் போலத் தற்புகழ்ச்சி செய்யத் தெரியாது. நான் போர் செய்ய அஞ்சுகிறவனில்லை, என்னோடு போர் செய்ய எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த எதிரியையே நாடுவேன். தெரிந்து கொள். இன்னொன்று உங்கள் சூதாட்டத்திற்கு நான் சம்மதிக்கிறேன். வரச்சொல் சகுனியை! ஆடிப் பார்க்கிறோம். முடிவுகள், விதியிட்ட வழி ஏற்படட்டும். நான் தயார். உங்கள் பொறுமையையும், மிகக் குறைவான அறிவையும் இனி இதற்கு மேலும் நான் சோதிப்பதற்கு விரும்பவில்லை” -என்று தருமன் முடித்தான்.