மகாபாரதம்-அறத்தின் குரல்/1. வேள்வி நிகழ்ச்சிகள்
பாண்டவர்களின் இந்திரப் பிரத்த நகரத்து வாழ்வு பிறருடைய குறுக்கீடற்ற முறையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஒற்றுமையாக வாழவேண்டிய தன் அவசியத்தை விவரிப்பதே போல விளங்கியது சகோதரர்கள் ஐவருக்கும் இடையே நிலவிய மாறுபாடில்லாத அன்பு. சொந்த வாழ்விலும் அன்பைச் செலுத்தி அன்பைப் பெற்று அன்பு வாழ்வு வாழ்ந்தார்கள். அரசியல் வாழ்விலும் அன்பால் ஆண்டு அன்பைப் பரப்புகின்ற சிறந்த நெறியை மேற்கொண்டார்கள். எத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டாலும் நன்றி மறவாத உள்ளம் சிலருக்கு இருக்கிறது. பிறர் தமக்குச் செய்த உதவியை எண்ணி எண்ணி அதற்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் அத்தகையவர்களது உள்ளம் தெய்வத்தை விட உயர்ந்தது. காண்டவம் தீப்பட்டு அழிந்த போது அர்ச்சுனனுடைய உதவியால் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன் என்பதை முன்பே அறிந்தோம். இந்தத் தேவதச்சனுக்கு ஓர் ஆவல் தன்னுயிரைக் காப்பாற்றி உதவியவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத கைம்மாறு ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதே அந்த ஆவல். ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று இவன் மனம் விரைந்தது. தன் விருப்பத்தை அர்ச்சுனனிடமும் மற்றப் பாண்டவர்களிடமும் கூற வேண்டுமென்று கருதி, இந்திரப் பிரத்த நகருக்குப் புறப்பட்டு வந்தான் அவன்.
தன் வேண்டுகோளைப் பாண்டவர்களிடம் வெளியிட்டான். “காண்டவத்தில் எரிந்து நீறாய் இறந்து போயிருக்க வேண்டிய என்னை உயிரோடு காப்பாற்றி உதவினீர்கள். கைம்மாறு செய்து திருப்தி கொள்ள முடியாத அளவு உயர்ந்தது உங்கள் உதவி. ஆனால், என் இதயத்துக்கு, நன்றியை நான் எந்த வகையிலாவது செலுத்த வில்லையானால், நிம்மதியும் திருப்தியும் இன்றி எனக்குள்ளேயே குழம்பும் படியாக நேரிட்டு விடும். உங்களைப் போலவே பிறரைப் பற்றியும் சிந்தித்து அவர்கள் நலனுக்காக உதவும் பண்புடையவர்கள் நீங்கள். சிற்பக் கலையில் நல்ல பழக்கமுள்ளவன் யான். கலைஞர்களெல்லாம் கண்டு அதிசயிக்கும்படியான ஓர் அழகிய மணிமண்டபத்தை உங்களுக்கு நான் கட்டித் தருகிறேன். எளியேனுடைய நன்றியின் சின்னமாக நீங்கள் அந்த மண்டபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்டபம் அமைப்பதற்குரிய பொருள்கள் யாவும் ஓர் இடத்தில் மறைந்து கிடக்கின்றன. முற்காலத்து அரசன் ஒருவனால் புதைக்கப்பட்டுள்ள பொருள்கள் அவை. ‘விடபருவன்’ என்ற அசுர குலத்துப் பேரரசன் ஒருவன் தனது அரும்பெரும் முயற்சியாலே ஈட்டிய பொருள்களை எல்லாம் எவரும் அறியாதவண்ணம் ‘பிந்து’ -என்னும் பொய்கையில் மறைத்து வைத்துள்ளான். அவன் இறந்த பிறகு அந்தப் பொருள்கள் எவராலும் பயன்படுத்தப் பெறாமல் அப்படியே மறைந்து கிடக்கின்றன. அந்தப் பொருள்களை எடுத்து வந்துவிட்டால் கட்டப் போகிற மணிமண்டபத்தை மிக உயர்ந்த முறையில் கட்டிவிடலாம். அவற்றை எடுத்து வருவதற்கு மட்டும் உங்கள் உதவி எனக்கு வேண்டும்.” மயனுடைய நன்றியுணர்ச்சியும் களங்கமற்ற அன்பும் பாண்டவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன.
“மணிகளையும், அருமையான பல பொருள்களையும் உள்ளடக்கிய விடப்பருவனின் மறைந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்குத் தங்கள் உதவி பூரணமாக உண்டு என்று வாக்களித்த தருமன் உடனே தகுந்த வீரர்களை அழைத்து வரச் செய்தான். ஆற்றலும் செயல் திறனும் மிக்க வீரர்கள் பலர் அழைத்து வரப்பட்டனர். “விட பருவனுக்குச் சொந்தமான ‘பிந்து’ என்னும் பொய்கையில் மறைந்திருக்கும் நிதிகள் யாவற்றையும் கண்டுபிடித்து விரைவில் கொண்டு வாருங்கள்” என்று தருமன் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். வீரர்கள் சென்றனர். மயனுக்குத் திருப்தி ஏற்பட்டது. கட்டளையை மேற்கொண்டு சென்ற வீரர்கள் மிக விரைவிலேயே பொய்கையில் மறைந்திருந்த பொருள்களையெல்லாம் திரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தனர். பொருள் வந்து சேர்ந்ததும் மயன் மண்டபம் கட்டுகின்ற வேலையைத் தொடங்கினான். அதிவேகமாக உயர்ந்த செளந்தரியங்களைச் சிருஷ்டிக்கும் திறன் படைத்த அந்தத் தெய்வீகக் கலைஞன் பதினான்கே நாட்களில் கண்ணைக் கவரும் அழகோடு மண்டபத்தைக் கட்டி முடித்து விட்டான். வீமனுக்கும் ஓர் கதாயுதத்தையும் அர்ச்சுனனுக்கு ஓர் வலம்புரிச் சங்கையும் மயன் தன் அன்பளிப்பாக அளித்தான். அவனுடைய நன்றி நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் பாண்டவர்களை வணங்கி விடைபெற்றுச் சென்றான் அவன்.
மயன் இவ்வாறு மண்டபத்தை அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்ற சில நாட்களில் நாரத முனிவர் இந்திரப் பிரத்த நகரத்துக்கு விஜயம் செய்தார். பாண்டவர்கள் ஐவரும் அவரை வரவேற்றுப் புதிய மண்டபத்தைக் காண்பித்தனர். சிறந்த அமைப்பினாலும் உயர்ந்த பொருள்களாலும் ஈடு இணையற்று விளங்கிய அந்த மண்டபம் நாரதரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. பாண்டவர்களையும் மயனையும் பெரிதும் பாராட்டினார் அவர். “பாண்டவ சகோதரர்களே! இந்த நிகரற்ற மண்டபத்தைப் பெற்ற நீங்கள் இதைக் களனாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்று உண்டு. உங்களைக் கொண்டு ‘இராசசூயம்’ -என்ற பெருவேள்வியைச் செய்ய வேண்டும் என்று உங்கள் தந்தையாகிய பாண்டு பல நாளாகக் கருதியிருந்தான். ஆனால் தீவினை வசத்தால் அந்தக் கருத்து நிறைவேறுவதற்குள்ளேயே அவனுக்கு மரணம் நேரிட்டு விட்டது. இப்போது நீங்கள் அமரரான உங்கள் தந்தையின் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி விட வேண்டும். உங்கள் தந்தையின் ஆன்மா திருப்தியடையும் படியாக நீங்கள் இந்தக் கணத்திலிருந்தே இராசசூய வேள்விக்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” -நாரத முனிவரின் வேண்டுகோளுக்கு ஒருங்கு இணங்கினர் ஐவரும்.
முனிவர் உவகையோடு சென்றார். நாரத முனிவருக்கும் பாண்டவர்களுக்கும் இந்த உரையாடல் நிகழ்ந்தபோது கண்ணபிரான் உடனிருந்தார். முனிவர் செல்கின்ற வரை அமைதியாகப் பேசாமலிருந்த கண்ணபிரான் அவர் சென்ற பின்பு பாண்டவர்களிடம் வேறு ஓர் யோசனையைக் கூறினார். வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னால் அதற்கு ஏற்படுகின்ற எதிரிகளை முன்பே உணர்ந்து தொலைக்க முயல வேண்டும். சராசந்தன் என்றோர் அரக்கர் குலமன்னன் இருக்கிறான். மனிதர்களைக் கொண்டு செய்யும் ‘நரமேத யாகம்’ என்ற வேள்வியைச் செய்வதற்காக ஒரு பாவமும் அறியாத அரசர் பலரைச் சிறையில் அடைத்து வைத்திருக் கிறான். ஆற்றல் மிக்க மன்னர்கள் கூட அவனுக்கு பயந்து அடி பணிகிறார்கள். அவ்வளவு பயங்கரமான அந்த அரக்கர் குலமன்னனை முதலில் நாம் அழிக்க வேண்டும். இல்லையென்றால் நமது வேள்விக்கு அவனால் பெரிய இடையூறு நேர்ந்தாலும் நேரலாம். கண்ணபிரான் இவ்வாறு கூறி நிறுத்தவும் தருமன் “அப்படியானால் அந்த அரக்கனைச் சாமர்த்தியமாகக் கொல்லும் வழியையும் தாங்களே கூறியருள் வேண்டும். தங்கள் யோசனையின்படி நாங்கள் நடப்போம்” -என்று வேண்டிக் கொண்டான்.
“தருமா! அவனை அழிப்பதற்கு எளிமையான வழியை ஏற்கனவே நான் கண்டுபிடித்து வைத்துள்ளேன். நானும், வீமனும், அர்ச்சுனனும், சராசந்தனின் கோட்டைக்கு மாறுவேடத்தில் அந்தணர்களைப் போலச் செல்கின்றோம்..”
“அவ்வளவு சுலபத்தில் முடிந்து விடுமா?”
“வீமன் ஒருவன் போதுமே, சராசந்தனைக் கொல்வதற்கு?”
“நல்லது! அப்படியால் போய் வெற்றியோடு திரும்பி வாருங்கள்” -தருமன் சம்மதித்தான். வீமன், அர்ச்சுனன், கண்ணபிரான் மூவரும் தோற்றத்தை மாற்றிக் கொண்டு புறப்பட்டனர். சராசந்தனின் தலைநகருக்குப் பெயர் கிரி விரசநகரம். வலிமையான அரண்களாலும் தகர்க்க முடியாத பாதுகாப்பினாலும் சிறந்தது அந்த நகரம். சூதுவாதறியாத அந்தணர்களைப் போலச் சென்றிருந்ததனால் சராசந்தனின் கோட்டைக்குள் சுலபமாக நுழைய முடிந்தது அவர்களால் அந்தணர்கள் மூவர் சந்திக்க வந்திருப்பதாக மெய்க் காவலர்கள் மூலம் சராசந்தனுக்குக் கூறி அனுப்பினர். தன்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தான் சராசந்தன். வீமன் முதலிய மூவரும் சென்றனர். சராசந்தன் அவர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்தான். அந்தணர்களை உற்றுப் பார்த்தான். ஆட்களை ஒரு முறை கூர்ந்து நோக்கியவுடனே அவர்களை இன்னாரென்று எடை போட்டு நிர்ணயித்து விடுகிற ஆற்றல் பொருந்தியவை அவனது கண்கள்!
வீமன் முதலியவர்கள் சராசந்தனை ஏமாற்றுவதற்காக வேற்றுருவில் வந்தார்கள். ஆனால், சராசந்தன் அவ்வளவு சுலபத்தில் ஏமாறிவிடுகிறவனா என்ன? அவனுடைய மத நுட்பம் அவனுக்கு உதவி செய்தது. எதிரே அமர்ந் திருப்பவர்கள் போலி அந்தணர்கள் என்பதை அவன் அறிந்து கொண்டு விட்டான். மூவரும் அந்தணர்களுக்குரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தோள்களில் தென்பட்ட வில் தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தணர்கள் தோளில் வில் தழும்பு இருக்க வேண்டிய அவசியமில்லையல்லவா? ‘இவர்கள் மூவரும் க்ஷத்திரியர்கள்! ஏதோ ஒரு சூழ்ச்சியின் நிமித்தம் இப்படித் தோன்றி நம்மை ஏமாற்றக் கருதியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் யார் என இப்போதே விசாரித்துவிட வேண்டும்’ சராசந்தன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.
“அந்தணர்களே! உண்மையில் நீங்கள் மூவரும் அந்தணர்கள் தாமா? உண்மையை ஒளிக்காமல் என்னிடம் சொல்லிவிடுங்கள்” -சராசந்தன் திடீரென்று தங்களை இப்படிக் கேட்டது வீமன் முதலிய மூவரையும் திடுக்கிடச் செய்தது. என்ன சொல்வதென்று தயங்கினர்.
“உண்மையை நீங்களாகச் சொல்லாவிட்டால் நானாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட நேரிடும்”
இனியும் தயங்குவதில் பயனில்லை என்பதை உணர்ந்த கண்ணபிரான் உண்மையைக் கூறிவிட்டார். “நாங்கள் மூவரும் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து வருகிறோம். உண்மையில் நாங்கள் ஷத்திரியர்கள்தாம்! நான் கண்ணன், வீமன், அவன் அர்ச்சுனன்! மூவரும் மாறுவேடத்தில் இவண் வந்திருக்கிறோம். உண்மை இது தான்.”
“என்ன காரியத்திற்காக இந்த மாறுவேடத்தில் இங்கே வந்தீர்கள்?”
“கிரிவிரச நகரத்தின் அழகைப் பற்றி கேள்விப் பட்டோம். பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.” கண்ணபிரான் தன்னைச் சமாளித்துக் கொண்டு இந்த மறுமொழியைக் கூறினார். சராசந்தன் இடி இடிப்பது போலத் கை கொட்டிச் சிரித்தான்.
“யாரை ஏமாற்றலாம் என்று இப்படிப் பேசுகிறீர்கள் நீங்கள்? உண்மையாக நகரைப் பார்க்க வந்திருந்தால் ஏன் இந்த மாறுவேடம்? நல்லது. நீங்கள் இங்கே வந்தது ஒரு காரியத்திற்கு நல்லதாகப் போயிற்று. வெகு நாட்களாகப் போருக்கு ஆளின்றித் தினவெடுத்துள்ளன என் தோள்கள். இப்போது உங்களுடன் போர் புரிவதன் மூலம் அந்தத் தினவைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களில் என்னோடு போர் புரியத் தகுதிவாய்ந்தவர்கள் யார்?”
“ஏன் நாங்கள் மூவருமே போருக்குத் தயாராக இருக்கிறோம்?”
“இல்லை! இல்லை! முடியாது. உங்களில் கண்ணன் என்னோடு பதினெட்டு முறைபோர் செய்து தோற்று ஓடியவன். அவனோடு போர் செய்ய நான் விரும்பவில்லை. அர்ச்சுனனோ வயதில் எனக்கு மிகவும் இளையவன். எனவே அவனோடு போர் புரிவதும் எனக்கு இழுக்கு. இங்கிருப்பவர்களில் வீமன் ஒருவன்தான் என்னோடு சரிநிகர் சமானமாக நின்று போர் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவன். இன்று என்னோடு போரிட்டுச் சாகப் போகின்ற பாக்கியத்தை வீமனுக்கே கொடுக்கிறேன்” -சராசந்தன் குரலில் ஆத்திரமும் வெறியும் தொனித்தன, வீமனும் தானும் செய்யப் போகின்ற ‘போரின் முடிவு என்ன ஆகுமோ?’ -என்று ஒருவகையான கலக்கமும் அவன் மனத்தில் நிலவியது. எதற்கும் முன்னேற்பாடாகத் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, அதன் பின் தான் போரில் இறங்குவதே நல்லதென்று தோன்றியது அவனுக்கு. அரசவையைச் சேர்ந்தவர்களையும் அமைச்சர் களையும் அழைத்து அப்போதே தன் புதல்வனுக்கு மணிமூடி சூட்டி அரியணையேற்றினான்.
வீமனுக்கும் சராசந்தனுக்கும் போர் தொடங்கியது. மலைச் சிகரங்களையொத்த தன் புயங்களைத் தட்டிக் கொண்டே வீமன் மேற் பாய்ந்தான் சராசந்தன். ‘உனக்கு நான் எந்த வகையிலும் இளைத்தவனில்லை’ என்று கூறுவது போல மதயானை என அவன் மேல் வீமனும் பாய்ந்தான். இருவருக்கும் போர் நிகழத் தொடங்கியது. போர் என்றால் சாமானியமான போரா அது? அண்ட சராசரங்களையும் நடுங்கி நிலைகுலையச் செய்யும் கோர யுத்தம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்தது. வெற்றி தோல்வி இன்னார் புறம் என்று நினைக்க முடியாதபடி இருந்தது போர் நிகழ்ச்சி. ஆற்றல், வீரம், சரீரபலம் ஆகியவற்றிலும் சமமான இந்த இரு வீரர்களின் போர் பதினைந்து தினங்கள் தொடர்ந்து நிகழ்ந்தது. போரின் முடிவு நேரம் நெருங்க நெருங்கச் சராசந்தன் கை தளர்ந்து வீமன் கை ஓங்கியது. சராசந்தனுடைய உடலை வீமன் இரண்டு மூன்று முறை கிழித்துப் பிளந்து எறிந்தான்.
ஆனால், என்ன விந்தை? சராசந்தனின் பிறந்த உடல் மீண்டும் மீண்டும் ஒன்றுகூடி உயிர் பெற்றெழுந்து வீமனோடு போர் புரிந்தது. அவனை எப்படித்தான் கொல்வதென்று வீமனுக்கு விளங்கவில்லை. என்ன செய்வது? சராசந்தனை எப்படிக் கொல்வது? -என்று தெரியாமல் அவன் திகைத்தான். நல்லவேளையாக அப்போது அருகிலிருந்த கண்ணபிரான் ஒரு சிறு துரும்பைக் கையிலெடுத்து அதை இரண்டாகப் பிளந்து மாற்றி வீமனுக்கு அதை அடையாளமாகக் காட்டினார். வீமன் கண்ணபிரானின் சூசகமான இந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டான். ‘சராசந்தனின் உடலைப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டால் அவன் உறுதியாக அழிந்து போவான்’ -என்று கண்ணபிரானின் குறிப்பு விளக்கியது. உடனே வீமன் முழு ஆற்றலோடு ஆவேசம் கொண்டு சராசந்தனின் மேல் பாய்ந்தான். மறுகணம் சராசந்தனின் உடலை இரண்டாகப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டான். சராசந்தன் இறந்தான்.
வீமன் வெற்றி முழக்கம் செய்தான். உடற் பிளவுகளை முறை மாற்றிப் போடுவதற்கு முன்பு பல முறை உயிர் பிழைத்தெழுந்த உடல் இப்போது மட்டும் உயிரற்று வீழ்ந்து விட்டதைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் வியப்பைக் கண்ணபிரானிடம் கூறினான். அவர் அவனுடைய வியப்பைத் தெளிவு செய்வதற்காகச் சராசந்தனின் வரலாற்றைப் பிறப்பிலிருந்து தொடங்கி அவனுக்குக் கூறினார்.
“அர்ச்சுனா! இந்தச் சராசந்தனின் வரலாறு ஆச்சரியகரமானது. அதை உனக்கு இப்போது சொல்கிறேன் தெரிந்து கொள். தேவர்களின் பகைக் குலமாகிய அரக்கர் குலத்தில் ‘பிருகத்ரதன்’ -என்றோர் அரசன் இருந்தான். அந்த அரசனுக்குப் பல நாட்களாகப் புத்திரப் பேறு இல்லை . மனம் கலங்கி வருந்திய அவன், ‘சண்ட கெளசிகன்’ என்னும் தவவலிமை மிக்க முனிவரை வணங்கி வழிபட்டுத் தனக்கு அருள் செய்யுமாறு வேண்டிக் கொண்டான். பிருகத்ரதனின் நிலைக்கு மனமிரங்கிய சண்ட கெளசிக முனிவர் அவனுக்கு உதவ வேண்டுமென்று எண்ணினார். அரிய மாங்கனி ஒன்றை அவனுக்கு அளித்து அதை அவன் மனைவிக்குக் கொடுக்கும் படிக் கூறினார். பிருகத்ரதன் முனிவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அரண்மனைக்குச் சென்றான். அவனுக்கு இரு மனைவியர். அதை அவன் முனிவரிடம் கூறவில்லை. முனிவர் கொடுத்த கனியை முழுமையாக ஒருத்திக்குக் கொடுக்காமல் இரண்டாகக் கூறு செய்து இருமனைவியர்க்கும் கொடுத்துவிட்டான் அவன்.
அறியாமையால் அவன் செய்த இந்தக் காரியம் விபரீதமான வினையை உண்டாக்கிவிட்டது. குழந்தை பிறக்கின்ற காலத்தில் இரு மனைவியரும் ஆளுக்குப் பாதி உடலாகத் தனித் தனிக் கூறுகளை ஈன்றெடுத்தனர். இம்மாதிரித் தனித்தனி முண்டங்களாகக் குழந்தை பிறந்தது என்ன விபரீத நிகழ்ச்சிக்கு அறிகுறியோ என்றஞ்சிய பிருகத்ரதன் இரவுக்கிரவே யாரும் அறியாமல் அவைகளை நகரின் கோட்டை மதிலுக்கு அப்பால் தூக்கி எறியும்படி செய்துவிட்டான். இரவின் நடுச்சாமத்தில் ‘சரை’ என்ற அரக்கி கோட்டை மதிற்புறமாக வரும் போது இந்த உடற்கூறுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் பார்த்திருக்கிறாள். என்ன அதிசயம்! உடல் ஒன்று சேர்ந்ததோடல்லாமல் குழந்தை உயிர்பெற்று அழத்தொடங்கியது. அவள் உடனே குழந்தையை மன்னன் பிருகத்ரதனிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். ‘சரை’யால் ஒன்று சேர்க்கப்பட்ட குழந்தையாகையால் சராசந்தன் என்ற பெயர் இவனுக்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவன் பட்டத்துக்கு வந்ததும் பேரரசர்களை எல்லாம் வெல்லும் மாவீரனாக விளங்கினான். இன்று வீமனால் அழிந்தான்.” கண்ணபிரான் இவ்வாறு சராசந்தனுடைய வரலாற்றைக் கூறி முடித்ததும் அவர்கள் சராசந்தனின் புதல்வனைக் கண்டு அந்த நாட்டை ஆளும் உரிமையை அவனுக்கே கொடுத்துவிட்டு இந்திரப் பிரத்த நகரத்துக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் இந்திரப் பிரத்த நகரத்தில் இராசசூய வேள்விக்குரிய ஏற்பாடுகளும் பூர்வாங்கமான நிகழ்ச்சிகளும் ஆரம்பமாயின.