மகாபாரதம்-அறத்தின் குரல்/16. வசந்தம் வந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

16. வசந்தம் வந்தது

புதல்வர்களின் குருகுல வாசமும், பாண்டவர்களின் அமைதி நிறைந்த நல்வாழ்வுமாக இந்திரப்பிரத்த நகரத்தில் நாட்கள் இன்ப நிறைவுடனே கழிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மனோரம்மியமான வசந்த காலம் வந்தது. எங்கும் தென்றல் காற்று வீசியது. சோலைகள் தோறும் குயில்கள் தங்கள் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் இன்னிசைக் கீதங்களைப் பாடின. தீக்கொழுந்துகளைப் போல மாமரங்களில் செந்தளிர்கள் தோற்றின. பொய்கைகளின் குளிர்ந்த நீர்ப்பரப் பிற்கு மேல் பசிய இலைகளுக்கிடையே அல்லி தாமரை முதலிய மலர்கள் அழகு செய்தன. வசந்தகாலத் தலைவனாகிய மன்மதன் தென்றலாகிய தேரில் ரதியோடு பவனி வரத் தொடங்கியிருந்தான். வசந்த காலத்தின் இன்பத்தை நுகரும் ஆவலால் கண்ணபிரானும் அர்ச்சுனனும் தத்தம் தேவியர் களுடனும் உரிமை மகளிர்களுடனும் இந்திரப்பிரத்த நகருக்கு அருகிலிருந்த ஒர் பூஞ்சோலைக்குச் சென்று தங்கினர். சோலையில் மலர்ந்திருந்த பலவிதமான மலர்களைக் கொய்ய ஆரம்பித்தனர் பெண்கள். சோலையிலிருந்த குளிர்ப்பூம் பொய்கைகளில் நீராடி வெம்மையைத் தணித்துக் கொண்டனர். வேனிற் காலத்தில் தம் வெம்மையை உலகம் தாங்கொணாதபடி வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தான் கதிரவன். அவர்கள் தங்கியிருந்த பூஞ்சோலைக்கு வெளியே வெயில் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்ததால் எங்கும் கானல் பரந்து கொண்டிருந்தது. தரையில் ஈரப்பசை இன்றி வறண்டு போயிருந்தது. வெயிலின் கொடுமை தாங்காமல் சோலைக்குள்ளேயே ஓர் பெரிய மரத்தின் கீழ்க் குளிர்ந்த நிழலில் அர்ச்சுனனும் கண்ணபிரானும் உட்கார்ந்து பலவகையான செய்திகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தணர் ஒருவர் அவர்களுக்கு எதிரே வந்து ஏதோ கேட்க விரும்பும் பாவனையில் நின்றார். ‘தகதக’வென்று எரியும் தீக்கொழுந்து போன்ற நிறம், மார்பில் வெள்ளை நிறம் மின்னலைப் போலக் கண்ணைப் பறிக்க விளங்கும் முப்புரி நூல், செம்மை நிறத்தோடு பின்னிக் கிடந்து பிடரியில் புரளும் சடை, கம்பீரமான முகத்துக்கு மேலும் தனிச் சோபையை அளித்தான், அவர் செவியிலே அணிந்திருந்த மகர குண்டலங்கள். இத்தகைய தோற்றத்தோடு தங்கள் முன்னே வந்து நிற்கும் ‘அவர் யார்?’ என விளங்காமல் திகைத்தனர் அர்ச்சுனனும் கண்ணபிரானும். ஆனாலும் ‘அந்தணர்’ என்பதற்காக அவரை மரியாதையாக வரவேற்று வணங்கினார்கள். அந்தணர் மரியாதையையும் வணக்கத் தையும் ஏற்றுக் கொண்டு அருகில் அமர்ந்தார்.

“நான் அந்தணன்! உணவைக் கண்டு வெகு நாட்களாயிற்று. வெகு நாட்களாகப் பட்டினி என் பசி தீர உணவளிக்க வேண்டும்! நீங்கள் மறுக்காமல் அளிப்பீர்கள் என்று நம்பி வந்தேன்” -என்று குழிவிழுந்த கண்களால் நோக்கிக் கொண்டே அவிமணம் கமழும் வாயால் பரிதாபகரமான குரலில் வேண்டினார் அவர்.

“அந்தணச் செல்வரே! தங்களுக்கு உணவளிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்” - என்றனர் கண்ணபிரானும் அர்ச்சுனனும். அவர்கள் கூறி முடிக்கவில்லை ! எதிரே அந்தணன் அமர்ந்திருந்த இடத்திற்கு தேஜோமயமான தோற்றத்துடனே அக்னி தேவர் நின்றார். “அக்னி பகவானே! தாங்கள் தாம் அந்தணராக உருமாறி வந்தீர்களா?” என்று வியந்து கூறி அர்ச்சுனனும் கண்ணபிரானும் மீண்டும் அவரை வணங்கினர்.

“எனக்குத் தேவையான உணவை இப்போது கூறுகிறேன் கேளுங்கள். ‘காண்டவம்’ -என்றோர் பெரிய வனம் இருக்கிறது. அது இந்திரனுடைய பாதுகாப்புக்கு உட் பட்டது. அந்த வனம் முழுவதையும் என் தீ நாக்குகளால் எரித்து வயிறார உண்டு பசி தீர வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. இந்த ஆசையை நான் நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் இந்திரன் தடையாக இருந்து வருகின்றான். நான் வனத்தை உண்ணத் தொடங்கும்போதே மேகங்களால் மழையைப் பொழிந்து அவித்து விடுகின்றான் அவன் . இம் முறை அவன் அவ்வாறு அவிக்காமல் நீங்கள் எனக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்க வேண்டும்” -என்று தம் வேண்டுகோளை மேலும் விவரித்தார் அக்னி பகவான்.

“அந்தணரே! நான் கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறமாட்டேன். காண்டவ வனத்தை இப்போதே நீர் புகுந்து எரித்து உண்ணலாம். இந்திரன் உம்மை அவித்துவிட முடியாமல் நான் பாதுகாக்கிறேன் இது உறுதி” என்று அர்ச்சுனன் அவருக்கு மீண்டும் உறுதியாக வாக்களித்தான். அக்னி பகவான் மனமகிழ்ந்து நன்றி செலுத்தினார். அர்ச்சுனன் இந்திரனுடைய எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக அப்போதே போர்க்கோலம் கொண்டு புறப்பட்டான். தனக்கு உதவி செய்ய முன்வந்த அவனுக்கு வில் அம்பு முதலிய ஆயுதங்களை அக்கினி பகவானே அளித்தார். இந்திரன் தனக்குத் தந்தை முறை உடையவனாயினும் கனற் கடவுளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவனையும் எதிர்க்கத் துணிந்து விட்டான் அர்ச்சுனன்.

உறவு முறையை விடக் கடமை சிறந்தது அல்லவா? அர்ச்சுனன் வாக்களித்த மறுகணத்திலேயே காண்டவ வனத்தில் எங்கும் நெருப்புப் பற்றிக் கொண்டு பயங்கரமாக எரியலாயிற்று. வனத்திலே பிடித்த நெருப்பின் ஜ்வாலை பிரதிபலித்ததனால் எட்டுத் திசைகளும் தகத்தகாயமாகச் செந்நிறம் படியத் தொடங்கி விட்டது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசத் தொடங்கி விட்டதனால் நெருப்பிற்கு வசதி பெருகிவிட்டது. காட்டு மூங்கில்கள் தீயில் வெடிக்கும் ஒலியும் அங்கே வசிக்கும் விலங்குகள் தீயிலிருந்து தப்புவதற்கு வழி தோன்றாமல் வேதனையோடு கிளப்பிய துயர ஓலங்களுமாகக் காடெங்கும் கிடுகிடுத்தன. சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், பலவகைப் பறவைகள் எல்லாம் நெருப்பிலே சிக்கி நீறுபட்டுக் கொண்டிருந்தன. அசுரர், வேடர் முதலிய இனத்தவர்களாகிய மக்களும் தீக்கிரையாயினர்.

காண்டவம் தீக்கிரையாகும் செய்தி இந்திரனுக்கு எட்டியது. அடக்கமுடியாத ஆத்திரம் பொங்கியது அவன் உள்ளத்தில் தனக்கு மிகவும் வேண்டியதான தட்சகனென்னும் பாம்பு காண்டவ தகனத்தில் அழிந்து போய் விடுமோ என்றஞ்சியது அவன் மனம். காண்டவத்தில் பற்றி எரியும் நெருப்பை உடனே சென்று அவித்து நிர்மூலமாக்கும்படி தன் கட்டளைக்குட்பட்ட எல்லா முகில்களையும் ஏவினான் இந்திரன். முகில்களை முதலில் அனுப்பிய பின் தானும் சினம் பொங்கும் தோற்றத்தோடு படைகளுடன் ஐராவதத்தில் ஏறிப் புறப்பட்டான். கனற்கடவுள் காண்டவத்தைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்கும் போது மேலே கொண்டல்கள் திரண்டு மழை சோணாமாரியாகப் பிரளய வெள்ளமாகக் கொட்டு கொட்டென்று கொட்டத் தொடங்கிவிட்டது.

அக்னிபகவான் திடுக்கிட்டார். ‘ஐயோ! இம்முறையும் அர்ச்சுனன் நம்மைக் காப்பாற்ற முடியாமல் போய் இந்திரன் வென்று விடுவானோ?’ என்று அவர் உள்ளம் அஞ்சியது. நல்ல வேளையாக அர்ச்சுனன் தன் சாமர்த்தியத்தினால் காண்டவ வனத்திற்கு மேல் அம்புகளாலேயே ஒரு கூடாரம் சமைத்து ஒரு துளி மழைநீர் கூட உள்ளே இறங்க முடியாதபடி தடுத்து விட்டான். மேகங்களுக்கும் அவற்றை அனுப்பிய இந்திரனுக்கும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அவனும் அவனோடு வந்த மற்ற தேவர்களும், எப்படியாவது தட்சகனைக் காப்பாற்றிவிட வேண்டும்’ -என்று முயன்றனர். தட்சகனுடைய மனைவி தன் புதல்வனாகிய அசுவசேனன் என்னும் பாம்புடனே அர்ச்சுனனின் அம்புக் கூடாரத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றது. அர்ச்சுனன் இதைக் கண்டு விட்டான். ஓர் அம்பைச் செலுத்தி அந்தப் பாம்பின் தலையை அறுத்து வீழ்த்தினான். ஆனாலும் அசுவசேனன் என்ற தட்சகனின் மகன் தப்பித்துச் சென்றுவிட்டான். இந்திரனிடம் போய்ச் சேர்ந்த அசுவசேனனை அவன் நன்குப் பாதுகாத்தான். பிற்காலத்தில் இந்தப் பாம்புதான் கர்ணன் கையில் நாகாஸ்திரமாகப் பயன்பட்டுத் தன் தாயைக் கொன்றதற்காக அர்ச்சுனனைப் பழி வாங்க முயல்கிறது.

“தட்சகன் அழிந்து போய்விட்டான். காண்டவத்தில் பற்றிய தீயும் நின்றபாடில்லை. இவ்வளவுக்கும் காரணம் இந்த அர்ச்சுனன் தான். இவனுக்குச் சரியானபடி புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்த இந்திரன் தன் படைகளுடனே, தன்னந்தனியனாய் நின்ற அர்ச்சுனனோடு கடும் போர் தொடுத்தான். அர்ச்சுனன் ஓரே ஆளாக இருந்தும் அஞ்சாமல் இந்திரனையும் அவனுடைய பெரும் படைகளையும் சமாளித்தான். இந்திரனும் நிறுத்தாமல் போரை வளர்த்துக் கொண்டே போனான். ‘தட்சகன்’ இறந்திருக்க வேண்டும் என்று தவறாக அனுமானம் செய்து கொண்டதே அதற்குக் காரணம். அப்போது வானிலிருந்து “இந்திரா ! தட்சகனும் பிழைத்து விட்டான். அவன் மகன் இருப்பது தான் உனக்கே தெரியும். உன்னுடைய முயற்சியால் காண்டவ வனத்தை அக்னியிடமிருந்தோ, அர்ச்சுனனிடமிருந்தோ காப்பாற்றி விட முடியாது. உன் வீரத்திற்குக் கண்ணபிரானும் அர்ச்சுனனும் சிறிதும் இளைத்தவர்களில்லை. ஆகவே, போரை உடனே நிறுத்திவிட்டு அமராபதிக்குத் திரும்பிச் செல்” -என்று ஓர் தெய்வீகக் குரல் எழுந்தது. அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்ட இந்திரன் போரை நிறுத்திவிட்டு தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். இந்திரன் போரை நிறுத்தி விட்டுப் பின் வாங்கி விடவே அர்ச்சுனன் வெற்றி வாகை சூடினான்.

வெற்றிக்கு அறிகுறியாகத் திக்குத் திகாந்தங்களெல்லாம் அதிரும்படி சங்கநாதம் செய்தான். தனியொருவனாக நின்று வென்ற அவன் சிறப்பையாவரும் புகழ்ந்து பாராட்டினார்கள். காண்டவம் தீப்பற்றி எரியும் போது கண்ணபிரானுடைய சம்மதத்தாலும் தன் கருணையினாலும் சிலரை உயிர் தப்பிச் செல்லுமாறு விட்டிருந்தான் அர்ச்சுனன். அவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன், “பாண்டவர்கள் எந்த நேரம் எத்தகைய உதவியை விரும்பினாலும் செய்யக் காத்திருப்பேன்” என்று நன்றிப் பெருக்கோடு கூறி அர்ச்சுனனிடமும் கண்ணபிரானிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான் அவன் மயனைப் போலவே தட்சகன் மகனும் சில குருவிகளும் தீக்கிரையாகாமல் தப்பிப் பிழைத்தன. கனற்கடவுளுக்குத் தான் கொடுத்த உறுதிமொழியின்படியே காண்டவம் முழுவதையுமே விருந்தாக அளிக்க முடிந்ததே என்பதற்காகத் திருப்திப்பட்டான் அர்ச்சுனன். பலகாத தூரம் விரிந்து பரந்து கிடந்த அந்த மாபெரும் கானகத்தை உண்டு கொழுத்த வலிமையோடு கனற்கடவுள் அர்ச்சுனனுக்கும் கண்ண பிரானுக்கும் முன்னால் வந்து நின்றார்.

“இப்போது திருப்தி தானே?” என்றார் கண்ணபிரான் நகைத்துக் கொண்டே. “திருப்தி மட்டுமா? மட்டற்ற மகிழ்ச்சியும் கூட கைம்மாறு செய்ய முடியாத பேறுதவியை இன்று எனக்கு அளித்திருக்கிறீர்கள்...” - கனற் கடவுள் மறுமொழி கூறி இருவரையும் பாராட்டி வணங்கினார்.

“விருந்து கேட்டீர்கள்! அளிக்க வேண்டிய கடமையோடு அளித்தோம். தங்களுக்குத் திருப்தியானால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி” என்று அடக்கமாக அவருக்குப் பதில் கூறினான் அர்ச்சுனன். அவர் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார். கண்ணபிரானும் அர்ச்சுனனும் தாங்கள் தங்கியிருந்த பூம்பொழிலுக்கு வந்து உரிமை மகளிரையும் தேவியரையும் அழைத்துக் கொண்டு இந்திரப்பிரத்தம் திரும்பினர்.

முதலாவது ஆதி பருவம் முற்றும்.