மகாபாரதம்-அறத்தின் குரல்/15. “நான் தான் விசயன்!”
பாண்டிய மன்னனிடமும் சித்திராங்கதையிடமும் அர்ச்சுனன் அவ்வளவு சுலபத்தில் விடை பெற்றுக் கொண்டு விட முடியவில்லை. அரிதின் முயன்று மிகுந்த நேரம் மன்றாடித் தான் விடை பெற்றுக் கொள்ள முடிந்தது. கண்களில் நீரும் நெஞ்சில் துயரமும் மல்கத் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தாள் சித்திராங்கதை. மதுரை மாநகரிலிருந்து புறப்பட்ட பின் மற்றும் பல பாண்டி நாட்டுத் திருப்பதிகளுக்குச் சென்றான். அவைகளில் நீராடி வழிபாடு செய்தபின் மேற்குக் கடலில் நீராடச் சென்றான். மேற்குக் கடலருகில் ஐந்து சிறு சிறு பொய்கைகள் இருந்தன. கடலில் நீராடி விட்டு வந்த அவன் இந்த ஐந்து பொய்கைகளையும் கூடப் புண்ணிய தீர்த்தமாகக் கருதி இவற்றிலும் நீராட விரும்பினான். ஒவ்வொரு பொய்கையில் நீராடும் போதும் ஒவ்வோர் முதலையால் அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் அதன் விளைவு மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரக் கூடியதாக இருந்தது. ஒவ்வோர் முதலையும் அவனைக் கடிக்க வந்தபோது அவன் எதிர்த்துத் தாக்கிச் சமாளிக்க முயன்றான். ஆனால் அவன் கை முதலை மேல்படவேண்டியது தான் தாமதம்; ஒவ்வொரு முதலையும் ஓர் வனப்பு நிறைந்த நங்கையாக மாறிக் காட்சியளித்தது. எல்லா முதலைகளையும் தாக்கி முடித்தபின் ஆச்சரியம் திகழும் கண்களால் அவன் பார்த்தான். என்ன விந்தை! அவனைச் சுற்றி அழகிலும் பருவத்திலும் சிறந்த ஐந்து தேவகன்னிகைகள் நின்றார்கள். பின்பு “நாங்கள் இந்திரனால் இத்தகைய சாபத்தை அடைந்திருந்தோம்; தாங்கள் இங்கு வந்து நீராடியதால் எங்கள் சாபம் நீங்கிற்று” -என்று அந்தப் பெண்களே கூறியதனால் அவன் உண்மையைப் புரிந்து கொண்டான். அந்தப் பெண்கள் அவனை வணங்கி நன்றி செலுத்திவிட்டு வானுலகு சென்றனர்.
அங்கிருந்து திருக்கோகர்ணம் சென்று தோகர்ணத்து எம்பெருமானை வணங்கிவிட்டுக் கண்ணபிரான் முதலியோர் வசிக்கும் தெய்வீகச் சிறப்பு வாய்ந்த துவாரகாபதியை அடைந்தாள். துவாரகை நகரத்துக்குள் பிரவேசிக்கும் போதே சுபத்திரைப் பற்றிய இன்பகரமான உணர்வுகள் அவன் இதயத்தில் எழுந்தன. துறவி போன்ற கோலத்துடனே தான் வந்திருப்பதால் தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ள இயலாதென்று தோன்றியது அவனுக்கு. தான் வந்திருந்த ஆண்டின் கோவத்துக்கு ஏற்பத் துவாரகை நகரத்தின் கோட்டை வாசலில் இருந்த ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அவதாரமாகிய கண்ணபிரானை மனத்திற்குள் தியானித்தான். அன்பர்களின் நினைவைப் பூர்த்தி செய்தலையே தன் முக்கிய காரியமாகக் கொண்டுள்ள அந்தப் பெருமானும் அர்ச்சுனன் துவாரகைக்கு வந்து தங்கி இருப்பதை அறிந்து கோட்டை வாயில் ஆலமரத்தில் அமர்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் தோன்றினார்.
அவன் மனத்தில் யாரைப் பற்றிய இன்பகரமான நினைவுகளோடு எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் தம்முடைய ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டார். அர்ச்சுனனோடு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மறுநாள் அவன் அவா நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டுச் சென்றார் அவர். மறுநாள் துவாரகைக்கு அருகிலுள்ள மலை ஒன்றில் அந்நகரத்து மக்கள் இந்திரதேவனுக்காகக் கொண்டாடுகிற விழாவின் பொருட்டுக் கூடியிருந்தார்கள். கண்ணன், பலராமன், சுபத்திரை முதலிய ராஜ குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தார்கள். கண்ணபிரான் துறவிக் கோலத்திலிருந்த அர்ச்சுனனையும் அங்கே அழைத்து வந்திருந்தார். திருவிழாவுக்காக வந்திருந்தவர்கள் கபட சந்நியாசியாக வீற்றிருந்த அர்ச்சுனனை ‘சிறந்த சக்திகளைப் பெற்ற மாபெருந்துறவி இவர்‘ - என்றெண்ணி வலம் வந்து வணங்கினர். பலராமனும் சுபத்திரையும் கூட இந்த மாபெருந் துறவியின் சிறப்பைக் கேள்வியுற்று இவரை வணங்கிச் செல்வதற்காக வந்தனர். அப்போது அவர் - களுடனே கண்ணபிரானும் வந்தார். உடன் வந்தவர்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காகக் கண்ணனும் அர்ச்சுனனைப் பயபக்தியோடு வணங்குகிறவர் போல நடித்தார்.
“ஆகா!உலகமெல்லாம் வணங்கக் கூடிய சர்வேசுவரனும் என்னைக் கையெடுத்துக் கும்பிடும்படியான அபசாரத்தைச் செய்து விட்டேனே” -என்று மனத்திற்குள் தன்னை நொந்து கொண்டான் அர்ச்சுனன். “அண்ணா! இவர் பெரிய ஞானி. நம் தங்கை சுபத்திரையே கன்னிகை மணமாக வேண்டியவள். இவரைப் போன்ற ஞானியர்களுக்குக் கன்னிகைகள் தொண்டு செய்தால் விரைவில் நல்ல கணவனை அடையலாம். எனவே இந்த முனிவரின் தொண்டில் சுபத்திரை இன்றிலிருந்து இந்த விழா முடிகின்றவரை ஈடுபடுவது நல்ல பயனை அளிக்கும்” -என்று அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் குறும்புத்தனமாகப் பார்த்துக் கொண்டே பலராமனை நோக்கிக் கூறினார் கண்ணன்.
பலராமன், “அப்படியே செய்யலாம் தம்பீ!” என்று சம்மதித்தான். அர்ச்சுனன் உள்ளூரத் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிந்துவிடாதபடி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இந்த ஏற்பாட்டின் படி கபட சந்நியாசியாக இருந்த அர்ச்சுனனுக்கும் பணி செய்வதற்காகச் சுபத்திரையையும் அவளுக்குத் துணையாக ஒரு தோழிப் பெண்ணையும் அங்கே விட்டு விட்டுப் பலராமனும் கண்ணனும் தங்கள் காரியங்களைக் கவனிக்கச் சென்றார்கள். போகிற போக்கில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டி விட்டுச் சென்றார்.
அன்றிலிருந்து சுபத்திரையும் அவளுடைய தோழியும் துறவிக்கு பணிபுரிந்து மகிழ்ந்தார்கள். சுபத்திரை ஒரு நாள் முனிவரிடம் சில செய்திகளை விசாரித்து அறிய ஆசை கொண்டாள். “சுவாமி! தாங்கள் எந்த ஊரிலிருந்து யாத்திரை புறப்பட்டீர்கள்? தங்களுடைய சொந்த ஊர் எது?” என்று கேட்டாள் சுபத்திரை.
“அம்மா! எனக்கு யாதும் ஊர்தான். ஆனாலும் நீ, நான் பிறந்து வளர்ந்து பெரியவனான ஊரைக் கேட்கிறாய் போலும்! என் ஊரை ‘இந்திரப் பிரத்தம்’ என்று பெயர் சொல்லுவார்கள்.”
“சுவாமி! தங்கள் ஊர் ‘இந்திரப் பிரத்தம்’ என்று கேள்வியுற்று மிகவும் மகிழ்கின்றேன். இந்திரப்பிரத்த நகரத்தில் தருமன், வீமன், நகுலன், சகாதேவன் ஆகியவர்கள் நலமாக இருக்கின்றார்களா?”
“நல்லது பெண்ணே! பாண்டவர்களைத் தானே கேட்கிறாய்? அவர்களுக்கு நலத்திற்கென்ன குறைவு? ஆமாம், எனக்கொரு சந்தேகம். நீ பாண்டவர்களில் எல்லோருடைய நலத்தையும் விசாரித்தாய். அர்ச்சுனனைப் பற்றி மட்டும் ஏன் விசாரிக்கவில்லை? அவனை உனக்குப் பிடிக்காதா? இல்லை. அவன் மேல் உனக்கு அன்பில்லையா? என்ன காரணம்?” துறவியின் இந்தக் கேள்விக்கு மட்டும் சுபத்திரை விடை கூறவில்லை. அவளுடைய கன்னங்கள் நாணத்தால் சிவந்தன! கால் கட்டைவிரல் நிலத்தைக் கிளத்தது. உதடுகளில் நாணப் புன்னகை நெகிழத் தலைகுனிந்தாள் அவள்.
“சுவாமி! எங்கள் இளவரசி சுபத்திராதேவி அர்ச்சுனரை மணந்து கொள்ள வேண்டிய மணமுறை உரிமை கொண்டவள். ஆகையால் தான் வெட்கப்பட்டுக் கொண்டு அவரைப் பற்றி விசாரியாமலிருந்து விட்டாள்” - என்று அருகிலிருந்த தோழி விடை கூறினாள்.
“ஓகோ காரணம் அதுதானா” -என்று கூறிக்கொண்டே நிம்மதியாக மூச்சுவிட்டார் துறவி. “தவிரவும் அர்ச்சுனர் இப்போது தீர்த்தயாத்திரை போயிருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம் சுவாமி! தங்கள் ஞான திருஷ்டியால் அவர் இப்போது எங்கே தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருக் கிறார் என்று கூற முடியுமானால் கூறுங்களேன்” -தோழி மேலும் அவரைத் தூண்டினாள். கபட சந்நியாசி வேஷத்திலிருந்த அர்ச்சுனன் சிரித்துக் கொண்டே சன்னமாகக் குழைந்த குரலில் கூறலானான்.
“அம்மா? உங்கள் இளவரசியை மணந்து கொள்ளப் போகும் அந்த அர்ச்சுனர் இப்போது இதே இடத்தில் உட்கார்ந்து சந்நியாசியாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குச் சொல்லுங்கள்” - இவ்வாறு கூறிக் கொண்டே தன் சொந்தத் தோற்றத்தோடு அவர்களுக்கு முன்னால் நின்றான் அவன். தோழிப் பெண் திடுக்கிட்டு விலகிச் சென்றாள். சுபத்திரை அதே நாணமும் பயபக்தியும் கொண்டு எழுந்து நின்றாள். ஆர்வமிகுதியோடு அருகில் நெருங்கி அவள் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டு, “சுபத்திரை! நான் தான் விசயன். என்னைத் தெரிகின்றதோ?” -என்றான். சுபத்திரை இலேசாகச் சிரித்தாள். அவர்கள் ஒருவரையொருவர் அன்போடு நோக்கினார்கள். தோழி பதறிப் போய்ச் சுபத்திரையின் அன்னை தேவகியிடம் சென்று உண்மையைச் சொல்லி விட்டாள்.
தேவகி பரபரப்படைவதற்கு முன்னால் விஷயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவளை அமைதியாக இருக்கும்படி செய்தார். பின்பு பலராமன் முதலிய எவருக்கும் தெரியாமல் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் கண்ணபிரான். திருமணச் சடங்குகளை நடத்துவதற்கு வசிட்டர் முதலிய முனிவர்கள் வரவழைக்கப்பட்டனர். அர்ச்சுனனுக்குத் தாய், தந்தை முறையினராக இந்திரனும் இந்திராணியும் வந்தனர். “அர்ச்சுனா சுபத்திரையை மணந்து கொண்டு யாருமறியாமல் அவளோடு இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்றுவிடு! எவர் எதிர்த்தாலும் சரி அவர்களைத் தோல்வியுறச் செய்து மேலே செல்க” -என்று கூறி அவர்கள் இருவருக்கும் இரகசியமாகத் திருமணத்தை முடித்து வைத்தார் கண்ணபிரான், அவர் கூறியபடியே திருமணம் முடிந்தவுடன் ஓர் இரதத்தில் மணக்கோலத்தை நீக்காமலே சுபத்திரையுடன் இந்திரப்பிரத்த நகருக்குப் புறப்பட்டுவிட்டான் அவன்.
‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்கின்ற கதையாக அர்ச்சுனனையும் புறப்படச் சொல்லிவிட்டுப் “பலவந்தமாக அர்ச்சுனன் சுபத்திரையை மணம் செய்து கொண்டு போகிறான்” -என்று பலராமனிடமும் சொல்லி விட்டார் கண்ணபிரான். இதனால் அளவற்ற சினமும் ஆத்திரமும் கொண்டுவிட்ட பலராமன் படைகளைத் திரட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். சுபத்திரையைத் தேரில் வைத்துக் கொண்டு இந்திரபிரத்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அர்ச்சுனன் பின்னால் பலராமனின் படைகள் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். ‘தானும் போர் செய்து எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை’ - என்று உணர்ந்த அவன் சுபத்திரையைத் தேரோட்டும் சாரதியாக இருக்கச் செய்து விட்டுத் தான் வில்லேந்தித் துரத்திவரும் படையை எதிர்ப்பதற்குத் தயாரானான்.
“சுபத்திரை ! நீ பயப்படாதே! உன் அண்ணனுக்கோ அவனைச் சேர்ந்தவர்களுக்கோ, என் விற்போரால் ஒரு சிறு புண்ணும் ஏற்படாமல் போர் செய்து நான் தடுத்து விடுகிறேன்” - என்று கூறிவிட்டு எதிரிகள் பக்கம் திரும்பவில்லை நாணேற்றுவதற்குத் தொடங்கினான் அர்ச்சுனன். மிகக் குறுகிய நேரப் போரிலேயே பலராமனையும் படைகளையும் தடுத்து நிறுத்திவிட்டு வேறெந்தத் தடையும் இன்றி மேற் சென்றான் அவன். இந்திரப்பிரத்த நகரம் வருகின்ற வரை தேரை சுபத்திரையே சாரத்தியம் செய்தாள். இந்திரப்பிரத்தத்தில் சகோதரர்கள் அர்ச்சுனனையும் சுபத்திரையையும் மணக்கோலத்தில் கண்டு களிப்போடு வரவேற்றனர். அந்தப்புரத்தில் இருந்த திரெளபதி முதலிய மகளிர் சுபத்திரைக்கு மங்கல நீர் கரைத்துப் பாதங்களைக் கழுவி அன்போடு அழைத்துச் சென்றனர். தேர்க்குதிரைகளின் சுடிவாளத்தைப் பிடித்து இழத்துத் திறமையோடு சாரத்தியம் செய்து கொண்டு வந்த அவள் ஆற்றலை வியந்தனர்.
வில்லும் கையுமாகச் சுபத்திரையோடு தேரிலிருந்து இறங்கிய அர்ச்சுனனைக் குறித்து என்ன துன்பம் நேர்ந்ததோ என்று திகைத்தனர் சகோதரர்கள். பின்பு அவனே நடந்த நிகழ்ச்சிகளைக் கூறக் கேட்டு அறிந்து கவலை தவிர்த்தனர். இங்கு இவ்வாறு இருக்கும் நிலையில் கண்ணபிரான் படையெடுத்து வந்திருந்த பலராமனைச் சமாதானப்படுத்தி அவனிடம் உண்மையைக் கூறினார். பலராமனும் ஆர அமரச் சிந்தித்துப் பார்த்தபின் மன அமைதியுற்றுச் சீற்றம் தணிந்தான். அவ்வாறு சீற்றம் தணிந்த அவனையும் அழைத்துக் கொண்டு சுபத்திரைக் குரியனவும் அர்ச்சுனனுக்குரியனவுமாகிய மணப் பரிசில்களுடன் இந்திரப்பிரத்த நகரத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார் கண்ணபிரான். பலராமன் அர்ச்சுனனிடமும் சுபத்திரையிடமும் தன் ஆத்திரத்தை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டு பரிசில்களையும் அளித்தான். சில நாட்கள் அவர்களோடு தங்கியிருந்துவிட்டுப் பலராமன் துவாரகைக்குச் சென்றான். கண்ணபிரானோ பிரிய மனமின்றி அவர்களுடனேயே தங்கியிருந்தார். காலம் இன்ப வெள்ளமாகக் கழிந்து சென்று கொண்டிருந்தது. உரிய காலத்தில் அர்ச்சுனன் - சுபத்திரை இவர்களுக்கு ‘அபிமன்யு’ என்ற வீரப்புதல்வன் பிறந்தான். பாண்டவ புத்திரர்களாகத் திரெளபதிக்கு ஐந்து ஆண் மக்கள் பிறந்திருந்தார்கள். இவர்கள் வளர்ந்து நினைவு தெரிகின்ற பருவத்தை அடைந்தபோது குருகுல வாசம் செய்து அறிவுக் கலையும் போர்க் கலையும் கற்றுக் கொள்ள ஏற்ற ஆசிரியர்களை நியமித்தனர்.