மகாபாரதம்-அறத்தின் குரல்/7. பகைமை பிறக்கிறது

விக்கிமூலம் இலிருந்து
7. பகைமை பிறக்கிறது

தன்னினும் இளம் பருவத்தினான அர்ச்சுனனின் திறமை அங்கே புகழ் பெற்று ஓங்குவதைக் கண்டு கர்ணன் மனங் கொதித்தான். ‘இவனுடைய ஆற்றலை எவ்வாறேனும் மங்கச் செய்து என் புகழை இங்கே நிலை நாட்டுவேன்’ - என்று எண்ணிக் கொண்டு அவையில் தன் கலைத்திறனைக் காட்டுவதற்குத் தயாராக எழுந்து நின்றான். சினத்தோடு பாய்ந்து எழுகின்ற சிங்கத்தைப் போலத் தன் குரலை முழக்கிக் கலைச் செயல்களைச் செய்து காட்டத் தொடங்கினான். அர்ச்சுனனுடைய திறமையை முற்றிலும் மங்கச் செய்து விட வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அவனை வம்புக்கு இழுத்தாவது மட்டந்தட்டி விட வேண்ட மென்ற எண்ணத்துடனே, “தனியாக உன் திறமையைக் காட்டினாய்! நீ உண்மையான திறமையும் வீரமும் உள்ளவன் ஆனால் என்னோடு இந்த அவையில் போர் செய். உன் தலையைக் கிள்ளி எறிந்து காட்டுகிறேன்!” - என்றான் கர்ணன்.

“போருக்கு அழைப்பது சரிதான் என்னோடு சரி நிகராக நின்று போர் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” - என்று அவனைத் தன் கேள்வியால் மடக்கினான் அர்ச்சுனன். இவர்களுடைய இந்தப் பகைமையும் மனக் கொதிப்பை வெளிக்காட்டுவன போன்ற சொற்களும் சுற்றியிருந்த வர்களை விளைவு என்ன ஆகுமோ?’ என்று அஞ்சும்படி செய்தன. இதற்குள் வயது முதிர்ந்தவரும் சிறந்த கலைகளின் ஆசிரியருமாகிய கிருபாச்சாரியார் எழுந்து அர்ச்சுனனின் கேள்வியைத் தழுவி ஆதரித்துப் பேசினார்.

“விசயன் கூறுவது ஒரு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி தானே? அரசகுமாரனாகிய அர்ச்சுனனுடன் எதிர்நின்று சமமாகக் கருதிப் போர் செய்வதற்குத் தேர்ப்பாக சூதநாயகனின் வளர்ப்பு மகனாகிய கர்ணனுக்கு என்ன தகுதி இருக்கிறது? கர்ணன் விசயனைப் போருக்கு அழைப்பதே முறையும் பொருத்தமும் இல்லாத ஒன்றாயிற்றே?” - என்றார் அவர். கர்ணனைத் தன் உயிர் நண்பனாக எண்ணி வந்த துரியோதனன் கிருபாச்சாரியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். அவர் பேசிய விதம் பாண்டவர்களுக்கு ஆதரவளிப்பதைப் போல இருந்ததனால் அவனுக்கு முன்பே பாண்டவர்கள் மேல் இருந்த பகைமை உணர்ச்சியும் முதிர்ந்து எழுந்தது. இப்போது அவ்வளவு கோபமும் கிருபாச்சாரியார் மேலே திரும்பியது.

“கல்வியினால் பிறரைக் காட்டிலும் உயர்நிலை பெற்றவர்கள், அழகினால் கவர்ச்சி நிறைந்து விளங்குபவர்கள். பிறருக்குக் கொடுத்து மகிழும் கொடைப் பண்பு பூண்டவர்கள், இவைகள் போன்ற தகுதியுடையவர்களுக்குச் சராசரி உலகம் நிர்ணயிக்கும் சாதாரணமான பொருத்தங்களும் தகுதிகளும் அவசியமில்லை. பிறவியும் செல்வ நிலையும் கொண்டு மனிதர்களை இழிவு செய்து பேசுவது நேரியதாகாது. கிருபாச்சாரியார், அர்ச்சுனனோடு போர் செய்யும் தகுதி கர்ணனுக்கில்லை என்கின்றார்! என் உயிர் நண்பனாகிய கர்ணனுக்கு நானே அந்தத் தகுதியை உண்டாக்கிக் கொடுக்கிறேன். என் ஆட்சியைச் சேர்ந்த அங்க நாட்டிற்கு மன்னனாக இன்றே இப்போதே இந்த அவையிலேயே கர்ணனுக்கு முடி சூட்டுகின்றேன். பின்பு கர்ணன் அரசன் என்ற தகுதியை அடைந்து விடுவான்” - என்று துரியோதனன் கூறினான். கூறியபடியே கர்ணனை அப்போதே அவ்விடத்திலேயே அங்க நாட்டு வேந்தனாக முடிசூட்டிப் பிரகடனம் செய்தான். அரசவையில் கூடியிருந்த பெரியோர்களனைவரும் திடீரென்று துரியோதனன் கர்ணனுக்குச் செய்த இந்தச் சிறப்பைக் கண்டு திகைத்தனர். வியப்புக்குரிய முறையில் கர்ணனுக்கும் அவனுக்கும் இடையே அமைந்திருந்த நட்பின் அழுத்தம் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியது.

‘முடியளித்து ஒருவனை அரசனாக்கி விடுவது என்பது எவ்வளவு பெரிய காரியம் ? அதை இவன் இவ்வளவு எளிமையாக வாயாற் கூறிய மாத்திரத்திலேயே நிறைவேற்றி விட்டானே?’ - என்பது தான் அவையினரின் வியப்புக்குக் காரணம். கர்ணனுக்கு முடிசூட்டியவுடன் அவனைத் தன் அருகில் தன் அரியணையோடு சரிசமமாக இடப்பட்டிருந்த அரியணை ஒன்றில் அன்போடு தழுவி அமரச் செய்தான் துரியோதனன். துரியோதனன் எவ்வளவோ வழிகளில் தீயவன் ஆனாலும் நட்பு என்ற இந்தப் பண்பில் மட்டும் அவன் வழி உயரியதாகவே சென்றது. கர்ணனின் நட்புக்காக அவன் செய்த இந்தப் பேருதவியே அதற்குச் சான்று, அரங்கேற்று விழா இவ்வாறாக முடிந்தது.

தம்முடைய மாணவர்களின் திறமை துரோணரின் மனத்தை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அரங்கேற்றத்திற்குப் பின் மாணவர்களைத் தனியே அழைத்து ஒன்றுகூற விரும்பினார் அவர். இளமைப் பருவத்தில் தனக்கு அரசாட்சியில் பாதி தருவதாகக் கூறிவிட்டுப் பின் மறுத்து அவமானப்படுத்திய யாகசேனனைப் பழிவாங்கும் நினைவு அவருக்கு அப்போது எழுந்தது. “நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய ‘ஆசிரியர் காணிக்கை’ பொன்னோ, பொருளோ அல்லது வேறு பல செல்வங்களோ அல்ல. குருகுலத்து இளைஞர் செல்வங்களே! ‘இளம் பருவத்தில் யாகசேன மன்னன், தான் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து என்னைப் பிற்காலத்தில் அவமானப்படுத்தி விட்டான். அந்த யாகசேனன் இப்போது பாஞ்சால நாட்டு மன்னனாக இருக்கின்றான். அவனை வென்று கைதியாகச் சிறைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும். இதுதான் நீங்கள் என்னிடம் கற்ற கல்விக்காக எனக்கு அளிக்க வேண்டிய ஆசிரியர் காணிக்கை! என்னுடைய இந்த விருப்பத்தை எப்படியும் நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும். அது உங்கள் கடமை.” - என்று தனியே அழைத்துச் சென்று தன் மாணவர்களிடம் கூறினார்.

குருகுலத்துச் சிங்கக் குருளைகளான அந்த மாணவர்கள் அத்தனை பேரும் துரோணரை வணங்கி அவருடைய  வேண்டுகோளைத் தங்கள் உயிரை ஈந்தாவது நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்களித்தனர். துரோணர் உள்ளம் குளிர்ந்தார். தங்களுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் குருபக்தி அதிகம் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பிய வர்களைப் போல் கௌரவர்கள் உடனே நால்வகைப் படைகளையும் திரட்டிக் கொண்டு பாஞ்சாவநாட்டை நோக்கி வேகமாகப் புறப்பட்டு விட்டார்கள். பாண்டவர்கள் ஆர அமர நின்று நிதானித்துப் படைகளுடன் புறப்பட்டனர். அர்ச்சுனன், வீமன் முதலியோரிடம் நிகரற்ற வீரப்பண்பு சிறந்திருந்ததைப் போலவே எதையும் சிந்தித்துப் பார்த்து நன்மை தீமை ஆராயும் பண்பும் நிறைந்திருந்தது. ஆனால் துரியோதனாதியர்களிடமோ இந்த இரண்டு விதமான பண்புகளுமே இல்லை. ஆத்திரப்படுகின்றவர்களுக்கு அறிவு குறைவு என்று சொல்லுவார்கள். அறிவுக் குறைவினால் வெற்றி எங்காவது விளையுமா? வேகமாகப் படைகளோடு யாகசேனனை எதிர்த்து வந்த துரியோதனாதியர் கதியும் இந்தப் பழமொழியின் கருத்தையே நிரூபணம் செய்தது. பேரரசனான யாகசேனன் கெளரவர்களது படையெடுப்பை முன்கூட்டியே அறிந்து கொண்டு தன் படைகளைச் சரியான படி எதிர்முனையில் அணிவகுத்து நிறுத்தியிருந்தான். துரியோதனாதியரும் படைகளும் களத்தில் நுழையவும் யாகசேனனும் அவன் படைகளும் அவர்கள் மேல் பாயவும் சரியாக இருந்தது. யாகசேனனின் மின்னல் வேக எதிர்ப்பினாலும் தாக்குதலினாலும் சிதறிப்போன கெளரவர்களும் பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓட வேண்டியதாக நேர்ந்து விட்டது.

நல்லவேளையாகக் கெளரவர்கள் பின்வாங்கித் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் அர்ச்சுனன் தன் படைகளோடு களத்துக்குள் புகுந்தான். யாகசேனனின் படைகளுக்கும் அர்ச்சுனனின் படைகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. துரியோதனாதியரைத் தாக்கி ஓடச் செய்தது போல் அர்ச்சுனனையோ அவனது படை வீரர்களையோ சுலபமாக அவர்களால் பின் வாங்குமாறு செய்வதற்கு முடியவில்லை. அதற்கு நேர்மாறாக யாகசேனனையும் அவனுடைய படைவீரர்களையும் அர்ச்சுனன் தன் வில் வலிமையாலும் போர்த்திறமையினாலும் தளர்ந்து பின் வாங்கும்படி செய்திருந்தான். நொடிக்கு நொடி அர்ச்சுனன் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு யாகசேனனே பயந்து கலக்கமடையும் நிலையாகிவிட்டது. அர்ச்சுனனின். வில்லுக்கும் விற்பிடித்த கைகளுக்கும் ‘வெறி’ பிடித்து விட்டது. அன்றைக்கு அம்புமழை பொழிந்தது அவன் வில். ஆண்மை மழை பொழிந்தது அவன் நெஞ்சம். வெகு நேரம் போர் நிகழ்ந்தது. முடிவில் பாஞ்சால நாட்டு மன்னன் யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன் ஆயுதங்களின்றித் தலைகுனிந்து வெறுங்கையனாகி நிற்கவேண்டிய நிலை வந்து விட்டது. படைகளில் பெரும் பகுதி அழிக்கப்பட்டன, விசயனின் கணைகளால் சிறு பகுதி அஞ்சி ஓடிவிட்டன. எஞ்சி நின்றவன் யாகசேனன் ஒருவனே . வயதிலும் அனுபவம், ஆற்றல் முதலியவற்றிலும் அர்ச்சுனனைக் காட்டிலும் மூத்தவனான யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன்னால் கைதியைப் போல் நின்றான்.

துரோணரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக வெறுங்கையனாய் நின்ற யாக்சேனனைச் சிறைப்பிடித்துத் தன் தேர்க்காலில் இழுத்துக் கட்டினான் அர்ச்சுனன், யார் யாரையோ வென்று வாகை சூடிப் பேரரசனாக விளங்கும் தன்னைக் கேவலம் ஓர் இளைஞன் போர்க்களத்தில் சிறைப்பிடித்துத் தேர்க்காலில் கட்டியது யாதசேனனுக்கு மலைப்பைக் கொடுத்தது. இது அவனுக்கு விந்தையும் புதுமையும் நிறைந்த அனுபவம். வாழ்விலேயே அழிக்க முடியாதபடி அவனுக்குக் கிடைத்த தோல்விக் கறை இது ஒன்றுதான். அர்ச்சுனன்தான் ஆசிரியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகச் சிறைப் பிடித்த யாகசேனனை அவருக்கு முன் கொண்டு சென்றான். துரோணர் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து பார்த்தார்.  தன்னை அவமானப்படுத்திய யாகசேனன் தன் முன் தலைகுனிந்து உடல் கூசி ஒடுங்கிப்போய் நின்று கொண்டிருந்தான். அவனைச் சிறை செய்துகொண்டு வந்த களிப்போடு வில்லேந்திய கையனாய் அர்ச்சுனன் அருகில் நின்று கொண்டிருந்தான்.

இளமையில் தன்னுடன் கற்ற ஒரு சாலை மாணாக்கனும் பின்பு அரசனாகிய கர்வத்தின் மமதையினால் தன்னை மறந்து அவமானம் செய்தவனுமாகிய யாகசேனன் இப்போது தன் முன் கைதியாக நிற்பதை நோக்கித் துரோணர் மெல்ல நகைத்தார். அமைதியான நீர்ப்பரப்பில் காற்றினால் உண்டாக்கிய சிற்றலைகளைப் போலத் துரோணர் செய்த இந்த நகையை யாகசேனனும் கேட்டான். அவன் செவி வழிய புகுந்த அந்தச் சிறுநகை உள்ளத்தை வாட்டி அனலாகிக் கொதிக்கச் செய்தது. ஆனால் இந்தப் புன்னகையை விட அதிகமான வேதனையைச் செய்த துரோணர் கூறிய சொற்கள். “பாஞ்சால நாட்டுப் பேரரசரே வருக! நீங்கள் என் இளம் பருவத்து நண்பர் யாகசேனனல்லவா? அதனால் தான் இவ்வளவு அன்போடு தங்களை வரவேற்கிறேன். நல்லது, யாக்சேனா! அன்றைக்கு உன் அவையில் நான் உனக்கு நண்பனேயில்லை’ என்று கூறி என்னைப் பொய்யனாக்கி அவமானப்படுத்தினாய், குலத்திலே அந்தணன் நான். வேதத்தின் வழியே வாழ்கிறவன் நான். மன்னன் நீ. அரசின் பெருமைக்கேற்ப உன் பெருமையை வளர்த்துக் கொள்கிறவன் இதோ, உன்னைச் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் கைதியாக நிறுத்தியிருக்கும் இந்த இளைஞனைப்பார்! இவன் என் மாணவன் அர்ச்சுனன்! இந்திரகுமாரன் மிகச் சிறியோனாகிய இவன், பெருமை பொருந்திய உன்னைச் சிறை செய்து விட்டான்! மமதையில் இல்லை வாழ்வின் நேர்மை, அன்பில் இருக்கிறது அது! தெரிந்து கொள். நீ ‘எனக்குத் தருகிறேன்’ என்று கூறியிருந்த பாதியரசாட்சி மட்டுமில்லை; உன் முழு அரசாட்சியுமே இப்போது என் கையில் இருக்கிறது. ஆனால், அது எனக்கு மிகை. நீயே இப்பொழுது என் கைதி என்றால் அரசு எம்மாத்திரம்? எனக்கு நீ கூறியிருந்த அளவு பாதி அரசு போதுமானது! உனக்கு இரங்கி மற்றோர் பாதியரசை உன்னிடமே அளித்து உன்னையும் விடுதலை செய்து அனுப்புகிறேன் நான் பறித்துக்கொள்ள முடியும் உன் வாழ்வை. ஆனால் உன்மேல் கருணை கொண்டு அதை உனக்கே தருகிறேன். போய் வா... அர்ச்சுனா! இவனை விடுதலை செய்து அனுப்பு... பாவம்... அரசவாழ்வை மீண்டும் அடையட்டும்!” என்று துரோணர் கூறினார்.

அர்ச்சுனன் துரோணரை வணங்கி யாகசேனனை விடுதலை செய்தான். அவன் ஒன்றும் பேசாமல் மெளனமாகக் குனிந்த தலையோடு நடந்து சென்றான். அவன் நடந்து சென்ற நடையில்தான் அமைதியிருந்தது. அவன் உள்ளமோ பொங்கிப் புரண்டு அலைபாய்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. கிரகணத்திற்குப் பின் வெளிப்பட்ட சந்திரனைப் போன்ற கலங்கிய நிலை அவன் மனத்தில் நிலவியது. ஓர் இளைஞனால் தன்னை அவமானப்படுத்திப் பழிக்குப்பழி வாங்கிவிட்ட துரோணரின் செயல் அவனை வதைத்தது. அதே சமயத்தில் தன்னையும் வென்று சிறைப்படுத்திவிடும் அளவிற்கு வீரனான அர்ச்சுனனின் சாமர்த்தியத்தில் அவனுக்கு ஒரு வகையான கவர்ச்சியும் பற்றும் ஏற்பட்டன. அத்தினாபுரியிலிருந்து விடுதலை பெற்று அவன் பாஞ்சால நாட்டிற்கு வந்த பின்பும் துரோணரின் அவமானச் செயலையும் அர்ச்சுனனின் வீரமும் அழகும் விவேகமும் கலந்த சிறப்பையும் அவனால் மறக்கவே முடியவில்லை. துரோணரைப் பற்றி நினைவு எழும் போதெல்லாம் குரூரமான பகைமையே அவன் உள்ளத்தில் பிறந்தது. அர்ச்சுனனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ‘அந்த இளைஞனின் மெய்யான வீரத்தைப் பாராட்டி அதற்கு நன்றி செலுத்த வேண்டும்’ என்ற ஆசையே அவன் உள்ளத்தில் அலைமோதியது. ஒன்று பழிவாங்கும் ஆசை! மற்றொன்று பாராட்டும் ஆசை துரோணரைக் கொன்று பழிவாங்கு வதற்காக ஒரு மகன்; அர்ச்சுனனைப் பாராட்டி அவன் வீரத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்க ஒரு பெண். ஆக இரு மக்கள் தனக்கு வேண்டும் என்ற விநோதமான எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

இந்த எண்ணமே நாளடைவில் தவிர்க்க முடியாத ஆசையாகவும் வளர்ந்துவிட்டது. இரவு பகல் எந்நேரமும் இந்த ஆசையைத் தழுவி இழையோடிய எண்ணங்கள் இடைவிடாமல் அவன் உள்ளத்தை ஏக்கங்கொள்ளும்படி செய்தன. மக்களைப் பெறுவதற்கு ஓர் வேள்வியைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து முனிவர்களை அழைத்தனுப்பினான் யாகசேனன். இங்கே நிலைமை இவ்வாறிருக்க அத்தினாபுரியில் பாண்டவர்கள் மேல் துரியோதனாதியரது பொறாமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போயிற்று. சிறு வயதில் விளையாடும் போதும் குருகுலவாசம் செய்யும்போதும் பாண்டவர்கள் மேலே இயற்கையாகவே இவர்கள் நெஞ்சங்களில் பகைமை உணர்ச்சி கருக்கொண்டிருந்தது. அப்படிக் கருக்கொண்டிருந்த அந்தப் பகைமை உணர்ச்சி இப்போது வெளிப்படையாகவே பிறந்து சொல்லாலும் செயலாலும் புலப்பட்டது. இந்தச் சமயத்தில் வீட்டுமன், திருதராட்டிரன், விதுரன் முதலிய பெரியோர் தங்களுக்குள் ஒன்று கூடிச் சிந்தனை செய்து தருமனைத் தகுதியுடையவனாகத் தேர்ந்தெடுத்து இளவரசுப் பட்டம் கட்டிவிட்டனர்.

தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுதற்கு முன்னும் கட்டும்போதும் பேசாமல் இருந்துவிட்ட துரியோதனன் பின்பு மனம் குமுறிப் புழுங்கினான். “நம்மை ஒரு பொருட்டாக மதித்து நமக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் தருமனுக்குக் கட்டுவதற்குத் தந்தை மனம் இசைந்திருக்கிறாரே!” என்றெண்ணி அசூயை கொண்டான். கர்ணன், சகுனி முதலிய தோழர்களும் துச்சாதனன் முதலிய பண்பற்ற தம்பிமார்களும் அவனுடைய இந்த அசூயையைப் பெருகச் செய்தார்கள். துரியோதனன் பொறுக்க முடியாத ஆத்திரத்துடன் தன் தந்தையாகிய திருதராட்டிரனை அணுகினான்.

‘தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது முறையில்லை’ என்று அவன் தன் தந்தைக்கே அறிவுரை கூறத்தொடங்கிவிட்டான். “தந்தையாக இருந்தும் நீங்கள் உங்கள் புதல்வனாகிய எனக்குத் துரோகமே செய்ய நினைக்கிறீர்கள்!” என்று திருதராட்டிரனைப் பழித்துக் கூறினான். “பாண்டு என் தமையன்! அவன் இறந்து போய்விட்டதனால் அவனுடைய மக்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடிசூட்டி இளவரசுப் பட்டமும் கட்டி விட்டேன். ஆகவே நீ சினம் கொள்வது எந்த வகையால் பார்த்தாலும் பிழையான செயலாகும்” என்று அவனுக்கு அறிவுரை கூறினான் திருதராட்டிரன்.

ஆனால் துரியோதனனோ தந்தையினுடைய இந்த அறிவுரையைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “பாண்டவர்களை எனக்குச் சிறிதளவும் பிடிக்கவில்லை. அவர்களோடு நட்புக் கொண்டு வாழ இனியும் என்னால் முடியாது! சகோதரர்களும் சகுனி முதலியோர்களும் என் பக்கம் துணையாக இருக்கிறார்கள். எனக்குத் தனியான உரிமைகளும் வேண்டும்” என்று பகைமை கொழுத்த நெஞ்சத்துடனே துரியோதனன் தன் தந்தையிடம் வேண்டிக் கொண்டான்.