மகாபாரதம்-அறத்தின் குரல்/8. நனவாகிய கனவு

விக்கிமூலம் இலிருந்து

8. நனவாகிய கனவு

துரோணரிடமிருந்து விடுதலை பெற்றுத் தன் நாடு சென்ற யாகசேனன் அமைதியிழந்த மன நிலையோடு வாழ்ந்து வந்தான். முன்பே கூறியவாறு, ‘துரோணரைப் பழிக்குப்பழி வாங்குதல் - அர்ச்சுனனைப் பாராட்டிப் போற்றுதல்’ - என்ற இவ்விரண்டு எண்ணங்களும் அவன் மனத்தில் இடையீடில்லாமல் சுழன்று கொண்டிருந்தன. இதனாலேயே வேள்வி செய்யக் கருதி முனிவர்களை அழைத்தனுப்பி யிருந்தான் அவன். முனிவர்கள் வந்தார்கள். யாகசேனன் தன் கருத்தை அவர்களிடம் விவரித்தான், வேள்வி செய்து மக்களைப் பெற வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். முனிவர்கள் வேள்வி செய்ய இசைந்து ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.

வேள்விக்குக் குறித்த மங்கல் நாளிலே வேள்வி தொடங்கி நிகழ்ந்தது. மறையொலி எங்கும் முழங்கி எதிரொலித்தது. தெய்வத் தன்மை பொருந்திய மணம் கமழும் வேள்வி நிலையத்திலே பாஞ்சால நாட்டுப் பெரியோர்கள் குழுமியிருந்தனர். வேள்வியில் பயன்படுத்தி மிகுந்த வேள்வி அமிழ்தமாகிய பிரசாதத்தை யாகசேனன் மனைவிக்கு அளிக்கவேண்டியது முறை. ஆனால், வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்த போதே அவள் தீண்டாமை எய்தி விலக்காக இருக்கவேண்டியதாயிற்று. எனவே, வேள்விப் பிரசாதத்தை அவளுக்கு அளிக்க இயலவில்லை. என்ன செய்வதென்று செயல் விளங்காமல் திகைத்த யாகசேனன் இறுதியில் ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தான். வேள்வியில் எஞ்சிய பிரசாதத்தை ‘இறைவன் விட்ட வழியில் முடியட்டும்’ என்றெண்ணிக் கொண்டு வேள்விக் குழியிலேயே இட்டான் அவன். வேள்விக் குழியில் அவன் நல்வினை விளக்கம் பெற்றது! கனவு நனவாகியது. தீயிலே பெய்த அமுதம் வீண் போகவில்லை. வேள்வியில் முதல்வரான உபயாச முனிவரின் மந்திர அருள் வலிமையினால் ஓமகுண்டத்தில் இட்ட பிரசாதம் உயிர் வடிவத்தை அடைந்தது. முதலில் ஓர் ஆண் மகன் அந்த வேள்வித் தீயிலிருந்து பிறந்து எழுந்தான். அவன் உடல் ஒளியும் அழகும் பெற்றுத் தோன்றியது. பொன்னொளிர் மேனியும் புன்னகை தவழும் நிலா முகமும் சுற்றியிருந்தோர்களைத் தன்பாற் கவர, வேள்விக் குழியிலிருந்து கிளம்பும்போதே தேரின் மீது நிற்கும் தோற்றத்துடனே கிளம்பினான் அம்மகன்.

சிரத்திலே மணிமுடி செவிகளிலே மகர குண்டலங்கள்! மார்பில் பொற் கவசம்! கரங்களில் வில்! - என்று இவ்வாறு தன் போக்கிலே வனத்தில் திரியும் சிங்கக் குரளையைப் போலக் காட்சியளித்தான் அவன். யாகசேனனது மனம் இந்தப் புதல்வனைக் கண்டு திருப்தியால் பூரித்தது. அவன் உபயாச முனிவரை வணங்கி நன்றி செலுத்தினான். ‘துரோணரைப் பழிவாங்கிக் கொள்வதற்குத் தகுதியான புதல்வன் பிறந்து விட்டான்’ என்று மகிழ்ச்சி வெறியால் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனம் புதல்வன் பிறந்ததற்காகக் கொண்டாடப் பெற்ற கொண்டாட்டம் அரண்மனையெங்கும் திருவிழாக் காட்சியை உண்டாக்கி யிருந்தது. மங்கல நிகழ்ச்சியைக் குறிக்கும் இன்னிசைக் கருவிகள் முழங்கின. ‘யாகசேனனுக்குப் புதல்வன் பிறந்துள்ளான்’ - என்ற நற்செய்தி அரண்மனைக்கு அப்பால் நாட்டு மக்களிடமும் களிப்பையும் ஆரவாரத்தையும் பரப்பியிருந்தது. புதல்வனுக்குத் ‘துட்டத் துய்ம்மன்’ என்று பெயரிட்டார்கள். இந்த நிலையில் யாகசேனன் உபயாச முனிவரை அணுகி மீண்டும் யாகத் தீயில் அமுதை இட்டு ஒரு பெண் மகளையும் தனக்கு அளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டான்.

முனிவர் வேள்விக் குழியில் மீண்டும் அமுதத்தை இடச் செய்தார். இந்த முறையும் இறைவன் அருள் துணை யாகசேனனுக்கு இருந்தது போலும்! முகில் கற்றைகளுக்கு இடையே வானில் மின்னும் மின்னலைப் போன்ற சிற்றிடையுடன் மதன கலைகளெல்லாந் திரண்ட வடிவழகு தன்னை அலங்கரிக்கத் திரெளபதி தீக் கொழுந்துகளுக்கு இடையே எழுந்து தோன்றினாள். அவளுடைய அழகிலே தெய்வீகம் கனிந்து இலங்கியது. வனத்திலே புதர் மண்டி வாளிப்பாகக் கருத்துச் செழிப்போடிருக்கும் பச்சை மூங்கில் போலப் பளபளக்கும் அழகான தோள்கள், சுழன்று மருளும் மான் விழிகள், மலர்வதற்கிருக்கும் வரிசையான முல்லை மொட்டுக்களைக் கோத்து வைத்தாற் போன்ற பல்வரிசை, திருமகளின் அழகில் எவ்வளவு கவர்ச்சி நிறைந்திருந்ததோ, அவ்வளவு கவர்ச்சி, காண்போர் வியக்குமாறு இத்தகைய தோற்ற நலங்களுடனே திரெளபதி வேள்விக் குழியிலிருந்து  யாகசேனனின் இரண்டாவது மக்கட் செல்வமாக வெளிப்பட்டாள்.

பேரரசர்களெல்லோரும் வியந்து புகழத்தக்க அர்ச்சுனனின் வீரத்திற்குக் கைம்மாறாக அளிக்க இவள் சரியான கன்னிகைதான் என்று விம்மி நிறைந்தது யாகசேனன் உள்ளம். தனக்குக் கிடைப்பதற்கரிய பேறாகக் கிடைத்த அந்தப் புனித சுன்னிகையைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் அதே சமயத்தில் ‘இத்தகைய கன்னிகைகள் சாதாரணமான செயலை நிறைவேற்றுவதற்காக உலகில் பிறப்பதில்லை! இவர்கள் அசாதாரணமான அழகும் பண்பும் கொண்டு பிறப்பதைப் போலவே அதிசயமான பெருஞ்செயல்களையும் நிறைவேற்றி முடிப்பார்கள். சீதை பிறந்தாள். இராவணன் முதலிய அரக்கர்கள் அழிந்தார்கள். இப்போது இவள் பிறந்திருக்கிறாள்! இவளால் எந்தத் தீமையை, எந்தத் தீயவர்களை அழிக்க வேண்டும் என்பது இறைவன் கருத்தோ?’ - என வேறோர் தெய்வீகக் குரலும் அவன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்தது. அர்ச்சுனன் தோள்களைத் தழுவி அவனை மணப்பதற்காகப் பாஞ்சாலியையும், தன்னைப் பெரிய அவமானத்திற்குள்ளாக்கிய துரோணரை அழித்து வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்குத் துட்டத்துய்மனையும் தனக்கு மக்களாக அளித்த விதியை வணங்கினான் பாஞ்சால மன்னன் யாகசேனன். கனவாக இருந்து மனத்தைக் குழப்பிய விருப்பங்கள், எண்ணங்கள் பலித்து விட்டால் அப்படிப் பலித்தவருக்கு ஏற்படுகின்ற மன அமைதி எதுவோ அதை யாகசேனன் அடைந்திருந்தான் இப்போது.