மகாபாரதம்-அறத்தின் குரல்/9. ஒற்றுமை குலைந்தது!
தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது குறித்து ஏற்கனவே பொறாமை கொண்டிருந்த துரியோதனன், தந்தையைச் சந்தித்துத் தனக்குச் சுதந்திரமான அரச போகங்களும் உரிமைகளும் வேண்டுமென்று வற்புறுத்தினான் அல்லவா? அது திருதராட்டிரன் மனத்தைக் கலக்கமடையச் செய்திருந்தது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் மனம் மயங்கினான். திருதராட்டிரன், வீடுமன், விதுரன் முதலியோர்களை அழைத்து ஆலோசனை செய்தான். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடுவே அசூயை, பொறாமை, பகைமை. ஆகிய தீய உணர்வுகள் தோன்றியதனால் ஓற்றுமை குலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்பதை விளக்கினான். இந்த ஒற்றுமைக்குலைவைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் அவர்களை வினவினான். “உறவு நெருக்கமாக இருந்தால் இவர்களுக்குள் பொறாமையும் பகைமையும் உண்டாவது இயற்கைதான். எனவே பாண்டவர்களும் ‘இவர்களும்’ தனித்தனியே விலகியிருந்து வாழுமாறு செய்து பார்ப்பது நல்லது. பிறந்ததிலிருந்தே ‘இவர்கள்’, ஐவர் மேல் அசூயை கொள்வது இயற்கையாகி விட்டதனால் நாம் அழைத்து அறிவுரை கூறினாலும் கேட்கமாட்டார்கள். இந்த ஒற்றுமைக் குலைவும் குரோதமும் உண்டாக்கப் போகின்ற தீய விளைவுகளை நுகர்ந்து துன்புற்றாலொழிய இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. எனவே இவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம்...” - என்று வீடுமன் முதலியோர் மனக் கசப்போடு கூறிவிட்டுச் சென்றனர்.
“மனம் என்பது விந்தையானது! போட்டி, பொறாமை, வஞ்சகம் முதலிய உணர்வுகள் புகமுடியாத நல்ல மனத்திலும் சூழ்நிலை காரணமாக அவை புகுந்து விடுவது உண்டு. பாதுகாப்பு நிறைந்த வீட்டிலும் அஜாக்கிரதையால் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டால் நாய்கள், திருடர்கள், நுழையும்படி நேர்ந்து விடுகிறதல்லவா? மனத்தின் அஜாக்கிரதையினால் இப்படிப்பட்ட தீய குணங்களும் இடம் பெற்று விடும். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களின் அசூயையும், பொறாமையும் தவறானவை’ என்று அஞ்சி மனம் பதறிப் பதைத்த திருதராட்டிரனது பண்புகூட நாளடைவில் மாறுபட்டது. தன் புதல்வர்கள், பாண்டுவின் புதல்வர்களென்று வேறுபடுத்திப் பாராத அவனே துரியோதனனின் துர்ப் போதனையாலும் தன்னலத்தினாலும் மனம் மாறி வஞ்சகமாக நினைக்கத் தொடங்கி விட்டான். கர்ணன், சகுனி, துர்ச்சாதனன் முதலியவர்களும் சேர்ந்து பொறாமை பேசிப் பேசி அவன் மனத்தையும் அதன் வண்ணமாக மாற்றி விட்டார்கள். நல்லாசிரியராகவும், பாண்டவர்கள் கௌரவர்கள் ஒற்றுமையில் அக்கறை கொண்டவராகவும் இருந்த துரோணர் இந்த ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்திருக்கலாம். ஆனால், அவரோ அப்போது துட்டத்துய்ம்மனுக்குக் கல்வி, கலைகளைக் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரிடமே தன் மகனைக் கற்கச் செய்து அவரையே பழி வாங்கத் திட்டமிட்டிருந்தான் யாகசேனன். உயரிய நோக்கமும் கொள்கையினாற் பரந்த உள்ளமும் படைத்தவராகிய துரோணர் ‘கலை’ என்ற ஒன்றை மட்டும் தன்னைக் கொல்லவரும் அரசகுமாரனுக்கும் கற்பிக்கத் தயாராக இருந்தார். துட்டத்துய்ம்மன் அவரிடம் வந்து ‘தனக்கு வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்க வேண்டும்’ - என்று பிரார்த்தித்தபோது அவன் இன்னானுடைய மகன் என்றும் இன்ன விதத்தில் தனக்கு வைரி என்றும் நன்கு தெரிந்திருந்தும் கூடத் துரோணரால் அவன் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. தன் உயிருக்கு எமனாக எவன் வளர்ந்து வருகிறானோ அவனுக்கே தாம் ஆசிரியனாக இருந்து உள்ளன்போடு கற்பிக்க ஒப்புக் கொண்டார் துரோணர். ‘சான்றோர்கள் பகைவனுக்கும் அருள் புரிகிற பண்பட்ட மனமுடையவர்கள்’ - என்னும் உண்மையை நிதர்சனமாக்கிக் காட்டியது துரோணரின் கருணை மிக்க இக்காரியம்.
இதனால் துரோணர் கூடத் திருதராட்டிரனையோ கெளரவர்களையோ சந்தித்து ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு வழியின்றிப் போயிற்று. தந்தை திருதராட்டிரனையும் தங்களது வஞ்சகக் கருத்துக்கு ஏற்றபடி மாற்றிவிட்ட துரியோதனாதியர், புரோசனன் என்னும் பெயரினனான தீய அமைச்சன் ஒருவனைத் தங்கள் கருத்துக்குத் துணையாக வைத்துக் கொண்டனர். புரோசனனும், சகுனி, கர்ணன், துரியோதனாதியர், ஆகியோரைப் போலப் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டவன் தான். புரோசனனும் துரியோதனாதியர்களும் கூடிச் சிந்தித்துப் பாண்டவர்களை அழித்தொழிக்க ஒரு வழி கண்டுபிடித்தனர். ‘வாரணாவதம் என்ற ஊரில் பாண்டவர் களைத்தனியே ஓர் அரக்கு மாளிகையில் வசிக்குமாறு தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் அந்த அரக்கு மாளிகையில் வசித்து வரும்போது ஒருநாள் இரவில் மாளிகைக்குத் தீ வைத்து விட வேண்டும்’ - இது தான் அவர்களது சிறுமை நிறைந்த உள்ளங்களுக்குத் தோன்றிய வழி.
இந்த எண்ணத்தை அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சென்று திருதராட்டிரனிடம் கூறினார்கள். புறக் கண்களை இழந்து போய்க் குருடனாயிருந்த அந்தப் பெருவேந்தன் அகக் கண்களையும் இழந்து போனானோ என்றெண்ணும்படியாக அதற்கு இசைந்து அரக்கு மாளிகை கட்டவும் ஏற்பாடு செய்து விட்டான். இந்த ஏற்பாடு விதுரனுடைய மனத்தில் மட்டும் சந்தேகத்தை நுழையச் செய்தது. அரக்கு மாளிகை கட்டி முடிந்தவுடன் திருதராட்டிரன் பாண்டவர்களை அழைத்து விவரத்தைக் கூறினான். தருமன் அவன் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டான். “நீங்களும் கெளரவர்களும் இங்கு ஒரே இடத்தில் தங்கியிருந்தால் அது ஒருவருக்கொருவர் போட்டியும் பொறாமையும் வளர்வதற்குக் காரணமாகிவிடும். ஆகவே நீங்கள் வாரணாவத நகரத்தில் தனியே வசித்து உங்களது ஆட்சியை நடத்துவதே நல்லது. உங்களுக்கு வேண்டிய படைகளையும் மற்ற வசதிகளையும் கொடுத்துத் துணையாக இருப்பதற்குப் புரோசனன் என்னும் அமைச்சனையும் கூட அனுப்புகிறேன். உங்கள் ஒற்றுமைக் குலைவைத் தவிர்ப்பதற்கு இது தான் சரியான வழி -என்று திருதராட்டிரன் கூறினபோது தருமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் சகோதரர்களுடனும் தாய் குந்தியுடனும் வாரணாவத நகரத்திற்குப் புறப்பட்டான்.
இவ்வாறு திருதராட்டிரன் பாண்டவர்களை வாரணா வதத்திற்கு அனுப்பியது தெரிந்ததும் துரியோதனாதியர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீமைக்கு மகிழ்வது தானே சிறுமையின் இயல்பு? வாரணாவத் நகரில் தங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த அரக்கு மாளிகையிற் குடியேறி வசிக்கத் தொடங்கிய போது பாண்டவர்கள் கௌரவர்களின் சூழ்ச்சி எதையும் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக வாரணாவத் நகரில் தங்களை வசிக்குமாறு செய்ததில் ஏதோ சூது அடங்கியிருப்பதை உணரத் தலைப்பட்டனர். தங்களோடு உடனிருக்கும் மந்திரி புரோசனன் படைகளின் நிர்வாகத்தையும் வேறு சில முக்கிய நிர்வாகப் பொறுப்பு களையும் தானே வைத்து அதிகாரம் புரிந்து கொண்டு வந்ததைக் கண்டு அவன் மேல் சந்தேகம் கொண்டனர் பாண்டவர்கள். புரோசனனின் அளவுக்கதிகமான பணிவும் வணக்கமும், அவர்களை ஐயம் கொள்ளச் செய்தன. அவனுடைய சில மர்மமான நடத்தைகள், தங்களை ஆதரிப்பது போல் கேடுகளைச் செய்வனவாய் அமைவதையும் அவர்கள் நுட்பமாகக் கவனித்துக் கொண்டே வந்தார்கள். இவைகளுக்கெல்லாம் மேல் தங்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மாளிகை முழுவதும் அரக்கினாலேயே கட்டப்பட்டிருந்தது எதற்காக என்பது அவர்கள் சிந்தனையில் சந்தேகத்துக்குரிய வினாவாகப் பற்றி நின்றது.
இதை அறிந்து கொள்ளும் முயற்சியில் வீமன் ஈடுபட்டான். மாளிகை ஏன் அரக்கினால் கட்டப்பட்டிருக்கின்றது என்ற புதிருடன் வேறோர் பயங்கர உண்மையும் விடுபட்டது. அந்த அரக்கு மாளிகையைக் கட்டிய தச்சர்களில் முதன்மை வாய்ந்த ஒருவன் விதுரனுக்கு நண்பன். அவன் வீமனைத் தேடி வந்தான். அவனிடமிருந்து கெளரவர்களின் எல்லாச் சூழ்ச்சிகளையும் வீமன் அறிந்து கொண்டான். “இந்த அரக்கு மாளிகையை தீக்கு இரையாக்கி உங்களை அழிக்க வேண்டும் என்பது அந்தச் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணம். இதை அறிந்த விதுரர் நான் இந்த மாளிகையை அமைக்கும்போதே, ‘பாண்டவர்கள் தப்பிச் செல்ல உள்ளே இரகசியமாக ஒரு சுரங்கம் அமைத்து விடு’ - என்று என்னிடம் கூறினார். நானும் அவ்வாறே ஒரு சுரங்கம் இங்கிருந்து காடுவரை போக வசதியாக அமைத்திருக்கிறேன். ஆபத்து ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - என்று கூறி அந்தச் சுரங்கம் ஒரு பெரிய தூணுக்கு அடியில் கீழே அமைந்திருப்பதையும் விளக்கிவிட்டுச் சென்றான். வீமன் அவனைப் பாராட்டி நன்றி செலுத்திப் பரிசு பல கொடுத்தனுப்பினான் அவனுக்கு.
இதன் பின் வெகு விரைவிலேயே ஒருநாள் வீமன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விபத்து ஏற்பட்டது. ஆனாலும் அவன் முன்னேற்பாடுடனே தயாராக இருந்தான். அன்று பாண்டவர்கள் மிகுந்த நேரம் வனத்திலேயே வேட்டையாடி அலைந்த களைப்புடனே மாளிகைக்குத் திரும்பியிருந்தார்கள். அவர்கள் ஓய்வாக உறங்கப் போகும் நேரத்தில் புரோசனன் என்னும் அமைச்சன் வந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் வேறோர் புறத்தில் துரியோதனாதியர்களால் ஏவப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயாகிய வேட்டுவச்சி ஒருத்தியும் அந்த அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைப்பதற்காக ஒளிந்து கொண்டிருந்தார்கள். இது வீமனுக்கு மட்டும் முன்பே தெரியும். பேசிக் கொண்டே இருந்த மற்ற நால்வரும் அமைச்சன் புரோசனனையும் உறங்கச் சொல்லிவிட்டுத் தாங்களும் உறங்கி விட்டனர், நெருப்பு வைப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தவர்கள் எங்கே தங்கியிருந்தார்களோ, அங்கே முதலில் அவர்களை முந்திக் கொண்டு தானே நெருப்பை வைத்துவிட்டுத் தூண்டியிலிருந்த சுரங்கத்தைத் திறந்தான் வீமன், மாளிகையில் வேகமாகத் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. அது தான் வெளியேறுவதற்குச் சரியான சமயம் என்று தன் சகோதரர்களையும் தாயையும் சுரங்க வழியாக வெளியேற்றிக் கொண்டு வீமன் கிளம்பினான். பாண்டவர்களும் குந்தியும் பிழைத்தனர். புரோசனனும், வேட்டுவர்கள் ஐவரும் அவர்கள் தாயும் தீக்கிரையான மாளிகைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்க வழியாகவே வெகு தொலைவு நடந்து காட்டுக்குள் வந்து சேர்ந்தனர் பாண்டவர்களும் குந்தியும்.
ஆனால் உலகறியாத இரகசியம் இது! மறுநாள் பொழுது விடிந்ததும் இறந்து கருகிப்போன வேட்டுவர், வேட்டுவச்சி பிணங்களைப் பாண்டவர்களும் அவர்கள் தாயும் இறந்தவர் என்றெண்ணி வருந்தியது உலகம். விதுரன், வீட்டுமன் முதலியவர்கள் கூடப் ‘பாண்டவர்கள் அழிந்தனரோ’ -என்றெண்ணி வேதனை கொண்டனர். விதுரன் தச்சன் மூலமாக உதவி செய்திருந்தாலும் என்ன நடந்ததோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கத் தான் செய்தது. ஊரோடு தாங்களும் அழுது வருந்துபவர்களைப் போலத் துரியோதனாதியாரும் வருத்தப்பட்டுப் பொய்யாக நடித்தனர். ‘பாண்டவர்களை அறம் காக்கும்! அவர்கள் உறுதியாக இறந்திருக்க மாட்டார்கள்!’ -என்று வேறு சிலர் நம்பினர். விதுரன் மெய்யாகவே பாண்டவர்களைக் காக்க வழி கூறியிருந்ததனால் இந்த நம்பிக்கையால் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் இந்தச் சம்பவத்தால் குலைந்து இடிந்து விழுந்த அரக்கு மாளிகை போலவே குருகுலத்தின் ஒற்றுமையும் ஒடுங்கிக் குலைந்து போய்விட்டது.