மகாபாரதம்-அறத்தின் குரல்/10. கானகத்தில் நிகழ்ந்தது
அரக்கு மாளிகையிலிருந்து வெளியேறிய வீமன், சகோதரர்களுடனும் தாயுடனும் ஒரு கானகத்தின் இடையே வந்து சேர்ந்திருந்தான். சுரங்க வழியின் முடிவு அந்த வனத்தில் தான் அவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தான் வைத்த நெருப்பு எங்கும் பற்றிப் பரவி மாளிகையில் அழிவு உண்டாக்குவதற்கு முன்னால் சுரங்க வழியில் வெகு தொலைவு நடந்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தால் வீமன், தாய், சகோதரர் ஆகியோர்களோடு மிக விரைவாக நடந்து வந்திருந்தான். வழி நடந்த களைப்பும், இரவு நேரத்தின் உறக்கச் சோர்வும், அவர்களைப் பெரிதும் அலுத்துப் போகும்படியாகச் செய்திருந்தன. களைத்த நிலை தீர ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள். இரவின் அமைதியும் தனிமையும் எங்கும் நிறைந்து குடிகொண்டு இலங்கிற்று அவ்வனம். மெல்லிய காற்றும் காட்டினது இதமான சூழ்நிலையும் வீமனைத் தவிர யாவரையும் உறக்கத்தில் ஆழ்ந்து போகச் செய்திருந்தது. பலவிதமான குழப்பம் நிறைந்த சிந்தனைகளால் அவன் மனம் கலக்க முற்றிருந்த காரணத்தால் உடலில் களைப்பு இருந்தும் உறக்கம் அவனை நாடவில்லை, உறங்காமல் உடன் பிறந்தவர்களுக்கும் தாய்க்கும் காவலாக இருப்பதுபோல அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இவ்வாறு அவன் விழித்திருந்த போது அங்கே ஓர் வியப்புக்குரிய நிகழ்ச்சி நடந்தது! சிந்தனைப் போக்கில் இலயித்துப் போய் வீற்றிருந்த அவன், ‘கலின் கலின்’ என்று சிலம்புகள் ஒலிக்க யாரோ அடிபெயர்த்து நடந்து வரும் ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்தான். ஆச்சரியகரமான ஒரு காட்சியை அப்போது வீமன் தன் எதிரே கண்டான். அழகே வடிவான இளம் பெண் ஒருத்தி அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். மயிலின் சாயலும் அன்னத்தின் நடையும் விளங்க அவள் நடைபயின்று வந்து கொண்டிருந்த விதம் வீமனுடைய அடி மனத்தில் இனிய உணர்வையும் கவர்ச்சியையும் உண்டாக்கிற்று. வீமன் தலைநிமிர்ந்து தன்னை நோக்கியதும் அந்தப் பெண் சிரித்தாள். சிரிப்பா அது? முத்துப் போன்ற வெண்பற்களின் ஒளி அவன் கண் வழிப் புகுந்து இதய உணர்வைக் கரைத்தது. வீமனுடைய மனத்தைப் பற்றிக் கொண்டிருந்த கலக்கம் நிறைந்த சிந்தனைகள், அந்தச் சிரிப்பின் மோகனத்திலே ஐக்கியமாகி விட்டன.
அந்த அழகி சிறிதும் தயங்காமல் வீமனை நெருங்கினாள். “நீங்களெல்லாம் யார்? இந்த நள்ளிரவில் மனிதர்கள் நுழைவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் எவ்வாறு நுழைந்தீர்கள்? உங்களுக்கு இங்கு இந்நேரத்தில் என்ன வேலை?” -யாழிசை போன்ற மெல்லிய குரலில் சிறிதும் தயக்கமின்றி வீமனை நோக்கிக் கேட்டாள் அவள்.
அவளுடைய கேள்விக்கு உடனடியாக அப்போதே மறுமொழி கூறிவிடவில்லை அவன். ஆர்வம் ததும்பும் விழிகளால் அந்த இளங் கன்னிகையை ஏற இறங்க ஒரு முறை கூர்ந்து நோக்கினான். வீமனுடைய அந்தப் பார்வை அவளையும் அவள் உள்ளத்தையும் ஊடுருவியது. அந்த யுவதியின் கண் பார்வை தாழ்ந்து பிறழ்ந்தது. கன்னக் கதுப்புக்கள் சிவந்தன. கேள்வியிலிருந்த மிடுக்கு இப்போது இல்லை. தோற்றத்தில் நாணம் தென்பட்டது. மூடிய இதழ்களில் நகைக் குறிப்புப் புலப்பட்டது. இப்போது வீமன் கலகலவென்று சிரித்தான். எழுந்திருந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்று நின்று கொண்டான். அது சரி, நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? இந்தப் பயங்கரமான காட்டில் இரவு நேரத்தில் அழகே வடிவான வன தேவதை போலத் தோன்றும் உங்களுக்கு என்ன வேலையோ? மெல்லியலாராகிய தாங்கள் எவ்வளவு துன்புற்று இந்தக் காட்டிற்குள் நுழைந்தீர்களோ?” -வீமன் கேட்டான்.
அவன் சிரித்துக் கொண்டே கேட்ட இந்தக் கேள்வி அவளைத் திகைப்புக்குள்ளாக்கிவிட்டது. அவளுடைய திகைப்பில் நாணமும் கலந்திருந்தது. வீமனுடைய சிரிப்பும் பதிலுக்குப் பதிலாகக் கேட்கப்பட்ட குறும்புத்தனமான கேள்விகளும் அவள் இதயத்தைத் தழுவி இருக்க வேண்டும். அவளது வெட்கம் இந்த உண்மையை விவரித்தது. வெட்கத்தோடு வெட்கமாக அவள் தலையைக் குனிந்து கொண்டே கூறிய விடைதான் அவனைச் சிறிதளவு திடுக்கிடச் செய்தது. தான் அந்த வனத்தில் வசிக்கும் கொடிய அரக்கனாகிய இடிம்பன் என்பவனின் தங்கை என்றும், மனிதர்களைக் கொன்று தின்னும் இயல்பும், கொடுமைகளும் நிறைந்தவன் தன் தமையன் என்றும் மனிதர்கள் எவரோ வந்திருக்க வேண்டும் என்பதை அனுமானித்தே தன்னைத் தன் தமையன் அங்கு அனுப்பினான் என்றும் அந்தப் பெண் கூறினாள். வீமனுக்கு உண்மை புரிந்தது. அந்தப் பெண் இடிம்பனின் தங்கை இடிம்பி. அவன் ஏவலால் அவள் வந்திருக்கிறாள் என்ற செய்திகளை வீமன் தானாகவே உய்த்துணர்ந்து கொண்டிருந்தான். உண்மை நன்கு விளங்கியதும் இவன் திகைத்தான். ஆனால் அஞ்சவில்லை.
“அப்படியானால் உன் தமையனிடம் சென்று நாங்கள் இருக்குமிடத்தைச் சொல்லி எங்களைக் கொல்லும்படிச் செய்யேன்” - தன் திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்தவாறே இப்படிக் கேட்டுவிட்டு அவளை ஏறிட்டுப் பார்த்தான் வீமன். அவள் அனுதாபமும் அனுராகமும் ஒருங்கே வந்து திகழும் நோக்கு ஒன்றை அவன் மேல் செலுத்தினாள்.
“உங்களைத் தேடிக் கொண்டு வருகிறபோது கொல்ல வேண்டும் என்ற குருதி வெறியோடுதான் வந்தேன். ஆனால்... ஆனால்... இப்போது ...” அவள் தலை கவிழ்ந்தது. கால்விரல்கள் நிலத்தைக் கிளைத்தன.
“ஆனால் என்ன? இப்போது மனம் மாறிவிட்டதா?”
“ஆமாம்! ஆமாம்! என் மனத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். உங்களையும் அழைத்துக் கொண்டு இந்த வனத்தையும் இதில் ஏகபோகமாகக் கொடுங்கோல் ஆட்சிபுரியும் என் தமையனைவும் விட்டுவிட்டு எங்காவது ஓடிப் போய்விடலாம் போலிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் என் தமையன் இங்கே வந்துவிடுவான். அவன் வந்தால் உங்களையெல்லாம் உயிரோடு தப்பவிடமாட்டான். பேசாமல் என்னோடு புறப்பட்டு விடுங்கள். நாம் இருவரும் என் தமையனுக்குத் தெரியாமல் அருகிலுள்ள ஒரு மலைச்சிகரத்துக்கு ஓடிப் போய்விடலாம். உங்கள் அழகு அழிவதை என்னுடைய இந்தக் கண்களால் காண முடியாது! வாருங்கள் உடனே ஓடிவிடலாம்“ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக வீமனைக் கெஞ்சினாள் அவள்.
“நான் கோழையில்லை, பெண்ணே! இதோ உறங்கிக் கொண்டிருக்கும் என் சகோதரர்களையும் தாயையும் அனாதரவாக விட்டுவிட்டு உன்னோடு ஓடிவருவதற்கு என் அறிவு மங்கிப் போய்விடவில்லை. உன் தமையன் வரட்டுமே! அவன் கையால் நாங்கள் அழிகிறோமா அல்லது என் கையால் அவன் அழிகின்றானா என்பதை நீயே நேரில் காண்பாய்” - வீமன் ஆத்திரத்தோடு கூறினான்.
அவன் இவ்வாறு கூறி முடிக்கவில்லை. அந்தக் காடே அதிரும்படியாகக் கூக்குரலிட்டுக் கொண்டு தரை நடுங்க யாரோ அந்தப் பக்கமாக நடந்து வரும் ஒலி கேட்டது. வந்தது வேறெவருமில்லை! இடிம்பன்தான். அவனுடைய நெருப்புக் கங்கு போன்ற கண்களையும் யானைக் கொம்புகள் போன்ற பெரும் பற்களையும், மலை போன்ற உடலையும் வீமனைத் தவிர வேறு எவரும் பார்த்திருந்தால் நடுங்கி மூர்ச்சித்துப் போயிருப்பார்கள். ஆனால், வீமனோ தன்னைப் போருக்குச் சித்தம் செய்து கொண்டான். அளவற்ற துணிவுணர்ச்சி அவன் உள்ளத்திலும் உடலிலும் திரண்டு நின்றது. அங்கே வந்த இடிம்பனின் கண்களிலே முதலில் அவன் தங்கையே தென்பட்டாள். வீமனை நோக்கி நாணத்துடனே தலை குனிந்து தயங்கி நின்ற நிலையை அவன் விளக்கமாகப் புரிந்து கொண்டான். ஏற்கனவே சிவந்திருந்த அவன் விழிகள் இன்னும் சிவந்தன.
“இடிம்பி! பெண் புலி ஆண்மானின் மேல் பாய்வதை மறந்து காதல் கொள்ளத் தொடங்கிவிட்டதா? உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், உன் காதலனை நான் உயிரோடு விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! இதோ பார். உன் காதலன் எனக்கு உணவு என்றாக்குகிறேன்” -என்று கூறிக்கொண்டே வீமனை நோக்கிப் பாய்ந்தான் இடிம்பன். அந்தப் பாய்ச்சலை எதிர்பார்த்து அதைச் சமாளிக்கத் தயாராயிருந்தான் வீமன். இருவருக்கும் போர் தொடங்கியது.
“நான் ஆண் சிங்கம்! நீ வெறும் பூனை. ஒரே ஒரு நொடியில் உன்னை வானுலகுக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கே தேவமாதர்கள் உன்னைக் காவல் புரிவர். அரக்கனை எதிர்க்கிற துணிவும் உனக்கு உண்டா? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்!” -என்று தன் இடிக்குரலில் முழங்கிக் கொண்டே பாய்ந்து பாய்ந்து போர் செய்தான் இடிம்பன். இந்தக் கலவரமும் ஒலியும் பாண்டவர்களை எழுப்பிவிட்டது. குந்தியும் எழுந்து விட்டாள். சகோதரர்களும் குந்தியும் வியப்புடன் ஒரு புறம் நின்று போர்க் காட்சியைக் கண்டனர். இடிம்பியும் மற்றோர் புறம் நின்று கண்டாள். இடும்பனைப் போல் வாய் முழக்கம் செய்யாமல் போரில் தன் சாமர்த்தியத்தைக் காட்டி அவனைத் திணறச் செய்து கொண்டிருந்தான் வீமன். இடிம்பன் தன்னுடைய மதிப்பீட்டிற்கும் அதிகமான பலத்தை வீமனிடம் கண்டதனால் மலைத்தான். ஒரு புறம் தன் தமையன் தருகிறானே என்ற பாசமும் மறுபுறம் தன் உள்ளங்கவர்ந்தவன் நன்றாகப் போர் புரிகின்றானே என்ற ஆர்வமும் மாறி மாறி எழுந்தன, இடிம்பியின் மனத்திலே. வீமனிடத்தில் அவளுக்கு ஏற்பட்ட காதல் சகோதர பாசத்தையும் மீறி வளருவதாக இருந்தது. வீமன் தன் கைவன்மை முழுதும் காட்டிப் போர் புரிந்தான். மலைச்சிகரங்களிடையே கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் செங்காந்தள் பூக்களைப் போல இடிம்பனின் பருத்த மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. இடிம்பன் பயங்கரமாக அந்தக் காடு முழுவதும் எதிரொலிக்கும் படியாய் அலறிக் கொண்டே வேரற்ற மரம்போலக் கீழே சாய்ந்தான்.
வீமன் நிமிர்ந்து நின்றான். தன் புதல்வன் பெற்ற இந்த அரிய வெற்றி, குந்தியை மனமகிழச் செய்தது. சகோதரர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். இடிம்பி தன் தமையனின் உடலைக் கட்டிப் புரண்டு கதறியழுது கொண்டிருந்தாள். ஆயிரமிருந்தாலும் உடன் பிறப்பல்லவா? அவன் மார்பில் பீறிட்டு வழியும் அதே குருதி தானே அவள் உடலிலேயும் ஓடுகின்றது? ஆனால் அவள் அடிமனத்தின் ஆழத்தைத் தொட்டுப் பார்த்தால் ஓருண்மையினை அங்கே காணலாம். தன் தமையன் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஆண்மையும் ஆற்றலும் வந்தவுடனேயே தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனைச் சேர்ந்தது என்றெண்ணும் போதே ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அவள் அடிமனத்தின் ஆழத்திலிருந்த அந்த உண்மை. மகிழ்ச்சியும் சோகமுமாக இரண்டுணர்வுகளும் நிரம்பி வழியும் நெஞ்சுடன் பாண்டவர்களும் குந்தியும் அங்கிருந்து காண அழுது தவித்துக் கொண்டிருந்தாள் அந்த இளநங்கை.
அப்போது இரவு படிப்படியாகக் கழிந்து கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. வைகறையின் குளிர்ந்த காற்றும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் கதிரவன் உதிப்பதற்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை அறிவித்தன. நேரம் வளர வளரக் கிழக்கே அவன் வட்ட வடிவம் சிறிது சிறிதாக வளர்ந்து மேலே எழுந்தது. “பறவைகளே! இதோ கொடுமைக்கே இருப்பிடமாக இருந்த ஓர் அரக்கனின் பிணம் இங்கே கிடக்கிறது. நீங்கள் விருப்பம் போல் உண்ணலாம். நான் உங்களுக்கு விளக்காக இருக்கிறேன்” - என்று கூறிக்கொண்டே எழுவது போலிருந்தது கதிரவனுடைய தோற்றம், பொழுது விடிந்த பின்பும் வீமன் முதலியவர்களைக் விட்டுப் பிரிய மனமில்லாமல் தமையன் இறந்த துயரத்தையும் மறந்து அங்கேயே தயங்கித் தயங்கி நின்றான் இடிம்பி. அவள் உள்ளக் கருத்து வீமனுக்கும் தெரிந்தது. அந்தக் கருத்தை வரவேற்கும் கவர்ச்சியும் அனுதாபமுங்கூட அவனுக்கும் இருந்தது. என்றாலும் சந்தர்ப்பம், சூழ்நிலை முதலியவற்றை உத்தேசித்துத் தன் மறுமொழியைக் கடுமையாக அமைத்துக் கொண்டு கூறினான்; “பெண்மணியே! உன் உள்ளக் கருத்து எனக்கும் புரிகிறது. ஆனால், என் தமையன் திருமணமாகாதவன். இந்நிலையில் உன்னை நான் அங்கீகரிக்க இயலாமைக்கு வருந்துகின்றேன். தவிர இன்னோர் தடையும் உண்டு. நாங்களோ மானிடர்கள். நீயோ காட்டில் கொடிய வாழ்க்கையும் கடும் இயல்புகளும் கொண்டு வாழ்ந்தவனின் தங்கை!” -என்று கூறி இழுத்துத் தயங்கி நிறுத்தினான் வீமன்.
இடிம்பி கண்ணீர் விட்டு அழுதாள். ஏமாற்றம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. உடன் பிறந்தவனைப் பறி கொடுத்த துயரத்தை விட வீமனின் அன்பைப் பறி கொடுத்த துயரமே அவளைப் பெரிதும் வருத்தியது. அவள் குந்தியின் காலடியில் வந்து விழுந்தாள். தனக்குச் சரணளிக்குமாறு கெஞ்சினாள். குந்தி மனம் இரங்கினாள். தருமன் முதலிய சகோதரர்களும் இடிம்பியின் நிலைக்கு இரங்கினார்கள். சகோதரர்களும், குந்தியும் கூறிய பின் வீமன் இடிம்பியை ஏற்றுக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே அவளைக் காந்தர்வ விவாகம் புரிந்து கொண்டான். தருமனின் அனுமதி பெற்றே இந்த விவாகத்தை வீமனுக்குச் செய்வித்தாள் குந்தி.
இந்த மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தவர் போல அன்று பகலில் வியாசமுனிவர் அவர்களைக் காண வந்தார், “இந்தக் காட்டில் இனி மேலும் தங்காதீர்கள்” என்று கூறி அவர்கள் சென்று தங்குவதற்கு வேறிடம் கூறினார் அவர். பாண்டவர்களும் குந்தி, இடிம்பி ஆகியவர்களோடு அவர் கூறிய இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். வியாசருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள். புதிதாக அவர்கள் வந்த இடம் சாலிகோத்திர முனிவர் என்பவருடைய ஆசிரமம் இருந்த வேறோர் வனம் ஆகும். இந்த வனத்தில் அவர்கள் பல நாள் தங்கியிருந்தார்கள். வீமனுக்கு இடிம்பியிடம் கடோற்கசன் என்ற புதல்வன் ஒருவன் இந்த வனத்தில் பிறந்தான் மனம் ஒருமித்த காதலர்களாகிய வீமனும் இடிம்பியும் இங்கே ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது. ஆனால் மனோதிடம் வாய்ந்தவளாகிய இடிம்பி புதல்வன் கடோற்கசனின் அழகிய தோற்றத்தில் இந்தப் பிரிவை மறக்க முயற்சி செய்தாள். வீமன் விரும்பும்போது அவளை வந்தடைய உதவுவதாகக் கூறிவிட்டு இடிம்பியும் கடோற்கசனும் பிரிந்து சென்றனர். அவர்கள் பிரிவு வீமன் முதலியோர் மனத்தை வருத்தினாலும் தங்கள் கடமை களையும் துயரம் நிறைந்த சூழ்நிலைகளையும் எண்ணி மனத்தை ஆற்றிக் கொண்டனர்.
பின்பு அவர்கள் அந்தணர்கள் போல உருமாறிய தோற்றத்துடன் வேத்திரகீயம் என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்தணர்கள் நிறைய வசிக்கும் அவ்வூரிலே பாண்டவர்களுக்கும் குந்திக்கும் அன்பான வரவேற்புக் கிடைத்தது. ஊரார் போட்டியிட்டுக் கொண்டு பாண்டவர்களை விருந்தினர்களாகப் பேணினர். ஓர் நல்லியல்பு மிக்க அந்தணர் வீட்டில் அவர்கள் அங்கே தங்கி வசிப்பதற்கும் இடம் கிடைத்தது.