மகாபாரதம்-அறத்தின் குரல்/11. பாஞ்சாலப் பயணம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11. பாஞ்சாலப் பயணம்

ஓர் நாள் காலைப் பொழுது விடிவதற்கு இரண்டு நாழிகை இருக்கும்போது தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் எவரோ பலமாகக் கதறியழுகின்ற ஒலியைக் கேட்டுக் குந்தி திடுக்கிட்டாள். முன்பின் அறியாத தாங்கள் வேத்திரகீய நகருக்கு வந்ததுமே தங்களை நம்பி வீட்டில் இடம் அளித்த அவர்களுக்கு எதுவும் துன்பம் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணிக் கலங்கியது குந்தியின் நெஞ்சம். அவள் மெல்ல அரவமின்றிப் படுக்கையில் இருந்து எழுந்து சென்று அழுகை வந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தாள். அந்த மங்கலான நேரத்தில் தங்களுக்கு ஆதரவளித்த அந்தணரின் மனைவி உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டாள் குந்தி. நன்றி உணர்ச்சியால் நிறைந்திருந்த அவளுடைய இதயம் பதைபதைத்தது. அன்போடு அவள் அந்தப் பார்ப்பனியை நெருங்கி அழுகைக்குரிய காரணத்தை விசாரித்தாள். பார்ப்பனி தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை விரிவாக எடுத்துக் கூறினாள்:-

“அம்மா! இன்று நான் என்னுடைய ஓரே மகனை உயிருடனே பறிகொடுக்க வேண்டிய தீவினைக்கு ஆளாக இருக்கிறேன். இந்த வேத்திரகீய நகரை அடுத்திருக்கும் காட்டில் எவராலும் வெல்லமுடியாத ‘பகாசுரன்’ என்னும் அரக்கன் ஒருவன் இருக்கிறான். அவனால் இந்த ஊரும் இதில் வசிக்கும் மனித ஜீவன்களும் இதற்குள் என்றோ ஒரு நாள் அழிந்து போயிருக்க வேண்டியவை. ஆனால் அவ்வாறு அழிந்து போகாவண்ணம் இந்த ஊர் முன்னோர்கள் அந்த அரக்கனோடு ஓர் உடன்படிக்கை செய்து வைத்துக் கொண்டார்கள். அந்த உடன்படிக்கையினால் அரக்கன் ஊர் முழுவதையும் மொத்தமாக அழித்துக் கொல்ல இருந்த பயங்கரம் தவிர்க்கப்பட்டது. ஆனால் உடன்படிக்கையின் படி நாள்தோறும் இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டினராக முறை பகிர்ந்து கொண்டு அந்த அரக்கனுக்கு உணவாக ஒரு வண்டி சோறு கறிகளும் ஒரு முழுமையான மனிதனின் சரீரமும் கிடைக்கச் செய்ய வேண்டும். இன்று வரை இவ்வூரில் முறைப்படி இந்த ஏற்பாடு தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்த வீட்டின் முறை வண்டியோடு அனுப்ப என் ஒரே மகன்தான் பயன்பட வேண்டும். அவன் உயிர் தான் பலியாக வேண்டும். இந்தக் கொடுமையை எண்ணித் தான் நான் அழுகிறேனம்மா! வேறு ஒரு வழியும் இல்லை. ஒரே மகன் என்று பார்க்காமல் பெற்ற பிள்ளையை வண்டியோடு பகாசுரனிடம் அனுப்ப வேண்டியது தான்.”

“வேண்டாம்! உங்கள் ஒரே மகனை அனுப்ப வேண்டாம். நானாயிற்று அவனைக் காப்பாற்றுவதற்கு. எனக்கு ஐந்து புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனை வண்டியோடு அனுப்பி விடுகிறேன்” -என்றாள் குந்தி.

முதலில் பார்ப்பனி அதை மறுத்தாலும் பின்பு குந்தியின் வற்புறுத்தலின் மிகுதியால் அதனை ஒப்புக் கொண்டாள். வீமனைச் சோற்று வண்டியோடு அனுப்ப வேண்டுமென்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் குந்தி. வீமன் எப்படியும் பகாசுரனை வென்று அவன் கொட்டத்தை அடக்கிவிட்டு வருவான் என்பது அவள் நம்பிக்கை. ஆனால் அவள் அதை வெளிப்படையாக எவரிடமும் கூறிக் கொள்ளவில்லை. வீமனை அணுகித் தன் ஏற்பாட்டைக் கூறினாள் குந்தி.

“தாயே! உறுதியாக என்னையே அனுப்புங்கள். அந்த அரக்கனைத் தொலைத்துவிட்டு வருகிறேன். இந்த நகரில் நாம் தங்கியதற்கு அடையாளமான ஓர் நல்ல காரியமாக இருக்கட்டும் இது” -என்று தாயின் கருத்தை வரவேற்று ஆமோதித்தான் அவன்.

குறிப்பிட்ட நேரத்தில் சோற்று வண்டியோடு காட்டுக்குப் புறப்பட்டான் வீமன். கறிவகைகளும் சோறும் மலைப் போலக் குவிந்திருந்தது வண்டியில். கொஞ்சங்கூட அச்சமில்லாமல் உல்லாச யாத்திரை புறப்படுபவன் போன்ற மகிழ்ச்சியை மனத்திற் கொண்டிருந்தான் வீமன். காட்டை யடைந்ததும் பகாசுரனது குகை இருந்த இடத்தை, அங்கே சிதறிக் கிடந்த எலும்புக் குவியல்களால்தானே அனுமானித்துக் கொண்டு விட்டான். குகையைச் சுற்றி ஒரே கழுகுக் கூட்டம். நரிகளும் அலைந்து கொண்டிருந்தன. நிண நாற்றம் மூக்கைத் துளைத்தது. குகைக்கு இப்பால் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்திக் கொண்டு வீமன் தானே சோற்றையும் கறிவகைகளையும் காலி செய்யத் தொடங்கினான். பகாசுரனோடு யுத்தம் செய்வதற்கு வலிமை நாடியும் அவனைச் சண்டைக்கு இழுக்க ஒரு வழி தேடியும் தான் அவன் இதைச் செய்தான். வண்டியிலிருந்த சோற்றையும் கறி வகைகளையும் வீமன் ரசித்துச் சாப்பிட்டதினால் நேரம் கழிந்து கொண்டிருந்தது. வழக்கமாக உணவு வரும் நேரத்திற்கு அன்று உணவு வராததால் பகாசுரன் ஆத்திரத்தோடு குகையிலிருந்து வெளியே கிளம்பினான். குகைக்கு எதிரே மரத்தடியில் வண்டியில் தனக்காக உணவு வந்திருப்பதையும், யாரோ ஒருவன் அதை வேகமாகத் தின்று கொண்டிருப்பதையும் கண்டு அவன் கண்கள் சிவந்தன. பற்களைக் கடித்துக் கொண்டே மரத்தடியை நோக்கித்தாவிப் பாய்ந்து ஓடி வந்தான் அவன். வீமனோ அசுரன் வருகிறான் என்பதை அறிந்ததும் அறியாதவனைப் போலச் சாப்பாட்டி லேயே கவனமாக ஈடுபட்டிருந்தான்.

“புலிக்கு வந்த உணவைக் கேவலம் ஒரு பூனை தின்று கொண்டிருக்கிறது. இந்தப் பகாசுரன் யார் என்பதை அந்தப் பூனைக்குப் புரிய வைக்கிறேன்” -பகாசுரன் கர்ஜித்துக் கொண்டே வண்டியை நெருங்கினான். அடுத்த விநாடி உண்டு கொண்டிருந்த வீமனுடைய முதுகிலும் பிடரியிலும் விண்விண்ணென்று சரமாரியாகக் குத்துக்கள் விழுந்தன. வீமனோ அந்தக் குத்துக்களைச் சிறிதும் பொருட்படுத்தாது வண்டியில் கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த சோற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். சோறு தொண்டையிலே விக்கிக் கொள்ளாமல் முதுகிலே மென்மையாகத் தட்டிக் கொடுத்தது போலிருந்த பகாசுரனின் குத்துக்கள். வண்டியிலுள்ள எல்லா உணவுப் பொருட்களையும் சாப்பாட்டு முடிந்தபின் மலை எழுந்திருப்பது போல ஏப்பம் விட்டுக் கொண்டே எழுந்திருந்து பகாசுரன் மேல் பாய்ந்தான் வீமன்.

“நீ அரக்கன். நான் வெறும் மனிதனே. போரில் என்னை வெல்ல முடியுமானால் தைரியமாகப் போர் செய்! இடும்பனுக்கு ஏற்படுத்திய இறுதி முடிவையே உனக்கும் ஏற்படுத்துகின்றேன்” - வீமன் சிங்க ஏறு போல் முழங்கிக் கொண்டே கைகளைப் புடைத்தான். இருவரும் கைகலந்தனர். குன்றோடு குன்று கட்டிப் புரள்வது போலப் போர் நடந்தது. திடீரென்று அருகிலிருந்த மரக்கிளை ஒன்றை முறித்துக் கொண்டு வீமனை அடிக்கப் பாய்ந்து வந்தான் பகாசுரன். அதே வேகத்தில் வீமனும் ஒரு மரக்கிளையை முறித்துக் கொண்டு அதை எதிர்த்தான். பகாசுரன் கீழே கிடந்த பாறைக் கற்களை வீமன் மேல் உருட்டிவிட்டு நசுக்குவதற்கு முயன்றபோது, வீமனும் கற்களை உருட்ட முற்பட்டான். எந்த வகையிலும் அரக்கனால் அடக்கிவிட முடியாததாக இருந்தது வீமனுடைய போரும் வீரமும் அசுரனுக்கு அது பசி வேளை. உடல் சோர்ந்து தள்ளாடியது. ஆனாலும் தன் கையால் வீமனைக் கொல்லாமல் விடுவதில்லை என்ற உறுதியோடு போர் புரிந்தான். வீமனுடைய குத்துக்கள் சரியான மர்ம ஸ்தானங்களில் விழுந்து பகாசுரனைத் தள்ளாடச் செய்தன. பகாசுரன் தீழே மல்லார்ந்து விழுந்தான். வீமன் “அது தான் அவனை தொலைக்கச் சரியான நேரம்” என்று அவனுடைய மார்பிலே தாவி ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனை எழுந்திருக்க முடியாமல் முழங்கால்களால் அழுத்திக் கொண்டு அவன் கழுத்தைத் திருகிக் கொன்றான். பகாசுரன் கதை அதோடு முடிந்தது.

வீமன் சோறு கொணர்ந்த வண்டியிலேயே பகாசுரனின் பிணத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு வேத்திரகிய நகரின் இடுகாட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான். இடுகாட்டில் அவனது பிணத்தை இட்டுவிட்டு அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனைக் கால்வாயில் நீராடியபின் நகருக்குள் புகுந்தான். வீமன் பகாசுரனைக் கொன்று விட்டு உயிரோடு திரும்பி வந்த செய்தி ஒரு நொடியில் வெத்திரகீய நகரம் முழுவதும் பரவி விட்டது. அந்தச் செய்தி வேத்திரகீயத்து மக்களை நம்ப முடியாத பேராச்சரியத்தில் மூழ்கச் செய்தது. தங்களை நிரந்தரமான பயங்கொள்ளிகளாகச் செய்து வந்த அரக்கனின் இறந்த சடலத்தை இடுகாட்டில் சென்று கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். பாண்டவர்களும் குந்தியும் தங்கியிருந்த வீட்டு அந்தணனும் அவன் மனைவியும் காலில் விழுந்து வீமனை வணங்கினர். நகரெங்கும் வீமனுடைய புகழ் எழுந்து ஓயாமல் ஒலித்த வண்ணமிருந்தது. வேத்திரகீயத்தின் வழியாடு கடவுளாயினர் வீமனும் குந்தியும் உடன் பிறந்தோர் பிறரும்.

இங்கு இவர்கள் நிலை இவ்வாறிருக்கும்போது பாஞ்சால நாட்டில் யாக்சேன மன்னன் தன் தவமகள் திரெளபதிக்குச் சுயம்வரம் நடத்த நன்னாள் குறித்து ஓலை போக்கினான். பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனனே தன் மகளை மணந்து கொள்ள வேண்டும் என்பது அவன் தன் பழம் பெரும் ஆசை ஆசை அவ்வாறு இருந்தாலும் முறைப்படியே அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று கருதிச் சுயம்வர ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

‘பாண்டவர்கள் அரக்கு மாளிகைத் தீ விபத்தில் இறந்து போனார்கள்’ -என்று பரவியிருந்த போலிச் செய்தியை எல்லோரையும் போல அவன் நம்பவில்லை. ‘அவர்கள் எவ்வாறேனும் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி உயிரோடு மறைவாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்’ -என்று அனுமானித்து, அந்த அனுமானத்தை உறுதியாக நம்பவும் நம்பினான். இந்த நம்பிக்கையினால் பாண்டவர்கள் எங்கிருந்தாலும் சுயம்வரச் செய்தியை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றெண்ணி எங்கும் பரவச் செய்தான். ‘அர்ச்சுனனைத் தவிர வேறு எவரும் திரெளபதியை மணந்து கொள்ளக்கூடாது; மணந்து கொள்ள முடியவும் முடியாது!’ - என்ற நம்பிக்கை யாகசேன மன்னன் மனத்தில் தளராமல் இருந்தது. இங்கே பாஞ்சால நகரத்திலிருந்து தற்செயலாக வேத்திரயம் சென்றிருந்த பார்ப்பனன் ஒருவன் மூலம் பாண்டவர்கள் திரெளபதியின் சுயம்வர ஏற்பாட்டை அறிந்து கொண்டனர், அந்தணர்களாக உருமாறி வாழ்ந்து வந்த அவர்கள் தம் வேடத்திற்கேற்ப அவ்வூர் வேதியர்கள் சிலரோடு பாஞ்சால நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திரெளபதியின் சுயம்வர நினைவே தேராக, ஆசை என்ற கடிவாளத்தை இட்டுத் தங்களைத் தாங்களே செலுத்திக் கொள்வது போல் அமைந்தது, அவர்களது பாஞ்சாலப் பயணம். மீண்டும் வியாச முனிவர் அவர்களைச் சந்தித்தார்.

“இரவு பகல் என்று பாராமல் பிரயாணம் செய்து விரைவில் பாஞ்சாலத்தை அடையுங்கள். சுயம்வரத்தில் உங்கள் பக்கம் வெற்றி ஏற்பட்டு, ‘நீங்கள் யார்?’ என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் அச்சமின்றி ஆண்மையோடு நீங்கள் பாண்டவர்கள் என்பதை வெளிக் காட்டிக் கொள்ளுங்கள். இது தான் நான் உங்களுக்குக் கூற வேண்டிய செய்தி ஆசி! சென்று வாருங்கள். யாவும் நலமே நிகழும்” -என்றார் அவர்.

பாண்டவர்கள் அவரை வணங்கி மேலே சென்றனர். அர்ச்சுனன் கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு வழி காட்டியதனால் இரவிலும் அவர்கள் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. ஓர் இடத்தில் அவர்கள் கங்கையாற்றைக் கடந்து மேலே செல்லும்படி வழி நடுவே கங்கையாறு குறுக்கிட்டது. அப்போது கங்கையாற்றில் சித்திரரதன் என்னும் பெயருடைய கந்தருவன் ஒருவன் தன் மனைவியோடு நீராடிக் கொண்டிருந்தான். இரவின் தனிமையை நாடி மனைவியோடு வந்திருந்த அவனுக்குப் பாண்டவர்கள் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு அவ்வழியாக வந்தது இடையூறாக இருந்தது. அவன் சினம் அடைந்தான். கங்கையாற்றினது பெரிய நீர்ப்பரப்பில் இருளில் ஓர் ஆணும் பெண்ணும் நீரில் விளையாடிக் கொண்டிருப்பது அந்தச் சிறிய தீப்பந்தத்தின் ஒளியில் பாண்டவர்களுக்கு எவ்வாறு தெரியும்? எனவே அவர்கள் ஆற்றைக் கடந்து செல்வதற்காக இறங்கி விட்டார்கள். ஒரு பெண் தன் கணவனோடு தனிமையில் நீராடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டிருந்தாலும் பாண்டவர்கள் தண்ணீரில் இறங்கத் தயங்கியிருப்பார்கள். அல்லது அவர்களை ஒதுங்கிக் கொள்ளுமாறு தொலைவிலிருந்து எச்சரித்து அவர்கள் ஒதுங்கிக் கொண்ட பின் இறங்கியிருப்பார்கள். ஆனால் சித்திரரதனோ அவர்கள் தண்ணீரில் இறங்கித் தன் மனைவியுடன் நீராடிக் கொண்டிருந்த இடத்திற்கு வருகின்ற வரை பேசாமல் இருந்து விட்டான். தன் அருகே வந்ததும் இரைந்து திட்டிக் கொண்டே அர்ச்சுனனை வம்புக்கிழுத்தான் சித்தரரதன்.

அர்ச்சுனன் அமைதியாக, ‘நீங்கள் நீராடிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாது! தெரிந்திருந்தால் வேறு வழியாகப் போயிருப்பேன்’ என்று கூறிப் பார்த்தான். ஆனால் சித்திரரதனோ மனக்கொதிப்புத் தணியாமல் அர்ச்சுனன் மேல் போருக்குப் பாய்ந்தான். இவ்வளவு நடந்த பின்பும் பொறுமையைக் கடைப்பிடிக்க அர்ச்சுனன் பைத்தியக்காரனா என்ன? அவனும் தீப்பந்தத்தைச் சகோதரர்களிடம் கொடுத்து விட்டுச் சித்திரரதனோடு போர் செய்ய முற்பட்டான். இருவருக்கும் பயங்கரமான போர் நிகழ்ந்தது. சித்திரரதனுடைய அகம்பாவத்திற்கு அர்ச்சுனன் சரியான புத்தி கற்பித்தான். தோல்வியடைந்த பின்புதான் அவனுக்குப் புத்தி வந்தது. அவன் பாண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தான். சித்திரரதனின் பேதமையை எண்ணித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டே கங்கையின் அக்கரையிலிருந்து தெளமிய முனிவரின் ஆசிரமத்தை யடைந்தனர் குந்தியும் பாண்டவர்களும். அப்போது பொழுது புலர்கின்ற நேரமாகியிருந்தது. ஆசிரமத்தில் இருந்த தெளமிய முனிவர் தாமும் பாஞ்சால நகரத்துக்கு உடன் வருவதாகக் கூறி அவர்களோடு புறப்பட்டார். அவர்கள் பாஞ்சால நகருக்குச் செல்லும் வனவழியிலே வீசிய மலர்களின் மணத்தோடு கூடிய இனிய தென்றற் காற்று இரவெல்லாம் நடந்து வந்த களைப்பைப் போக்குவதற்கென்றே வீசியது போலிருந்தது. வழி நடையின் போது அவர்கள் அங்கங்கே கண்ட சில காட்சிகள் சுயம்வரத்தில் அர்ச்சுனனுக்கே வெற்றி கிட்டும் என்பதற்கேற்ற நல்ல நிமித்தங்களாக அமைந்தன.

கதிரவன் நன்கு வெளிப்போந்து ஒளி பரவத் தொடங்கியிருந்த நேரத்தில் அவர்கள் பாஞ்சால நகரத்தின் ஊரெல்லைக்குள் பிரவேசித்தனர். பொற்கலசங்களின் மேல் கொடிகள் வீசிப் பறக்கும் கோபுரங்களுடனே கூடிய மதில்களையும் மாடங்களையும் கம்பீரமான கட்டிடங் களையும் பாண்டவர்கள் ஊரெல்லையிலேயே தொலைவுக் காட்சியாகக் கண்டுகளித்தனர். கோட்டைச் சுவர்களிலே வீசிப் பறந்த கொடிகள் பாண்டவர்களை ‘நீங்கள் வர வேண்டும், வரவேண்டும்’ -என்று கைகாட்டி அழைப்பது போல விளங்கின. நகரத்தின் புறமதிலை அடைந்த பாண்டவர்கள் அங்கே இருந்த ஒரு குயவனுடைய இருக்கையில் தங்கள் தாயைத் தங்கச் செய்துவிட்டுத் தெளமிய முனிவரோடு திரெளபதியின் சுயம்வரம் நடந்து  கொண்டிருந்த அரண்மனை மண்டபத்தை நோக்கி விரைந்தார்கள். அப்படிப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவர்கள் முன்பிருந்த அந்தணர் உருவிலேயே இருந்தனர். ‘சந்தர்ப்பமும் வெற்றியும் ஏற்பட்டாலொழிய ‘நீங்கள் யார்?’ என்பதை வெளிபடுத்திக் கொள்ள வேண்டாம்’ -என்று வியாசரின் அறிவுரையை அவர்கள் சிறிதும் மறந்து விடவில்லை. எனவே, அரண்மனைக்குள்ளும் ‘அந்தணர்களாகவே’ நுழைந்தார்கள் அவர்கள்.