மகாபாரதம்-அறத்தின் குரல்/12. வெற்றி கிடைத்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12. வெற்றி கிடைத்தது

பிறந்து வளர்ந்து பேதையாய் வாழ்ந்த பருவம் முதல் நினைவு தெரிந்த நாளான அன்று வரை தான் அர்ச்சுனனை மணந்து கொள்வதற்கென்றே பிறந்தவள்’ - என்ற உணர்வைக் கொண்டிருந்தவள் திரெளபதி. சுயம்வர மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தோழியர்கள் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்த போதும் கூட இந்த எண்ணமே அவளுடைய இதயத்தை நிறைத்துக் கொண்ட ஏக உணர்வாக நின்றது. அவளுடைய அந்த உணர்வுக்கு விடை கிடைக்க வேண்டிய நாள் அன்றுதான். சுயம்வர மண்டபம் முழுவதுமே அரசிளங்குமாரர்களால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. திரெளபதி தோழியர்கள் புடைசூழச் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்தாள். அவள் தோற்றமும் அங்கே வீற்றிருந்த வேந்தர்களை அனலில் மெழுகென உருகி மயங்கச் செய்தது. சுயம்வரத்துக்குரிய நிபந்தனைகளைத் திரெளபதியின் தமையன் துட்டத் துய்ம்மன் எடுத்துரைத்தான். அவையிலிருந்த வேந்தர்களின் கவனம் திரெளபதியினிடமிருந்து அவன் பக்கம் திரும்பியது.

அவன் கூறினான் : “அறிவிலும் அழகிலும் கலையிலும் சிறந்த மன்னர்களே! இதோ இந்த மண்டபத்தின் மேலே சுழலும் இயந்திரப் பொறியைப் பாருங்கள். வட்ட வடிவிலும் சூழ ஆரங்கள் அமைந்திருப்பதாகிய இந்தச் சுழல் இயந்திரத்திற்குள் மீன் போன்ற அடையாளச் சின்னம் ஒன்று இருக்கிறது. இயந்திரத்திற்கு நேரே கீழே பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மஞ்சள் கரைந்த நீரில் தெரியும் பொறியின் நிழலைப் பார்த்துக் கொண்டே மேலே இயந்திரத்தோடு இயந்திரமாக அதனிடையே சுழலும் மீன் சின்னத்தை அம்பு எய்து வீழ்த்த வேண்டும். வில் இதோ இருக்கின்றது. இந்த அருஞ்செயலைச் செய்து நிறைவேற்ற வல்ல மன்னன் எவனோ அவனுக்கு என் தங்கை திரெளபதி மாலையிடுவாள். முடிந்தவர்கள் முன் வந்து செய்யலாம்.”

‘சுயம்வரம் என்றால் கழுத்தை நீட்டியவுடன் சுலபமாக மாலை விழுந்துவிடும்’ -என்று எண்ணிக் கொண்டு வந்திருந்த மன்னர்களைத் திடுக்கிட்டு அஞ்சுமாறு செய்தது இந்த நிபந்தனை. ஆனால் ஆசை என்ற அந்த உணர்வு பயம், வெட்கம் எவற்றையுமே அறியாததல்லவா? தங்களால் நிபந்தனையை நிறைவேற்ற முடியாது என்பதைத் தாங்களே உறுதியாக உணர்ந்து கொண்டிருந்த அரசர்கள் கூட வில்லை எடுத்து முயற்சி செய்யத் தொடங்கினார்கள். இப்படி மன்னாதி மன்னர்களெல்லாம் அவளுடைய அழகு மயக்கத்தில் ஆழ்ந்து நாணமின்றி வில்லேந்தி நின்றார்களே, அப்போது தான் திரெளபதி தன் தோழிகள் மூலம் அவையிலிருந்த அரசர்களைப் பற்றிய விவரங்களை மெல்லக் கேட்டு அறிந்து கொண்டாள். ‘அர்ச்சுனன் வந்திருப்பானோ? வந்திருக்க மாட்டோனோ’ என்ற இந்த உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

‘நான் எய்துகிறேன் பாருங்கள்!’ -‘இதை எய்து வீழ்த்தாவிட்டால் நான் ஆண்மை உடையவனில்லை’ - என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு வஞ்சினம் கூறிவிட்டுத் தோற்றுத்தலை குனிந்தனர் பலர். பெரும்பாலான அரசர்களுக்கு இதே கதிதான் ஏற்பட்டது. சல்லியன் கைதேர்ந்த விற்போர் வீரனாகிய வில்லாளன், பசுதத்தன், சராசந்தன், துரியோதனன் ஆகிய யாவர்களுக்கும் வெற்றி கிடைப்பது போலத் தோன்றி நெருங்கி வரும்போது அதுவே தோல்வியாக  முடிந்துவிட்டது. இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களில் ஒரே ஒருவன் தோல்விக்குத் தப்பி வெற்றி தனக்குத்தான் என்ற நம்பிக்கையோடு இருந்தான். அவன் தான் கர்ணன். அவன் மட்டுமென்ன? எல்லோருமே நம்பினார்கள் மகா வீரனாகிய கர்ணன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று. கர்ணன் சாமர்த்தியமாக வில்லை வளைத்து அதில் அம்பையும் பொருத்தி விட்டான். ஆனால், அம்பு வில்லிலிருந்து புறப்படுவதற்கு முன் யாருமே எதிர்பாராத விதமாக வில்லின் நாண் நிமிர்ந்து அவன் தலையிலே தாக்கி முடியையும் அவனையும் கீழே விழும்படி செய்துவிட்டது. கர்ணனுக்கு மட்டுமின்றி அவையிலே கூடியிருந்த எல்லோருக்குமே பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. கர்ணன் இறுதியாகச் சுயம்வரத்திற்கு வந்திருந்த அத்தனை மன்னர்களும் தோற்றாகிவிட்டது.

‘நிபந்தனைப்படி பார்த்தால் திரெளபதி இனிமேல் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான்’ -என்று துட்டத்துய்ம்மன் நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்த போது அவையில் அந்தணர்கள் வீற்றிருந்த பக்கத்திலிருந்து கணீரென்று எழுந்தது ஒரு கம்பீரமான குரல். துட்டத்துய்ம்மன் முதல் எல்லோரும் வியப்படைந்து அந்தணர்கள் வீற்றிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர். மாறு வேடத்திலிருந்த அர்ச்சுனன்தான் எழுந்திருந்து பேசினான். அவன் பேச்சு துட்டத்துய்ம்மனை நோக்கி எழுந்தது. ‘அரசர்களில் எல்லோருமே முயன்று பார்த்துத் தோல்வியடைந்து விட்டார்கள். அந்தணர்களாகிய எங்களிலிருந்து எவரேனும் முன்வந்து முயற்சியில் வெற்றி பெற்றால் நிபந்தனைப்படி திரெளபதியை மணம் செய்து கொடுப்பீர்களா?’ -கூட்டத்தில் ஏளனத்தைக் குறிக்கின்ற சிரிப்பொலி ‘கலகல'வென்று எழுந்தது.

‘அந்தணனுக்கு ஆசையைப் பார்! இத்தனை வீரதீரர்களான வேந்தர்களால் முடியாததை இந்த அந்தணனா செய்துவிடப் போகிறான்?’ -என்ற மாதிரிப் பலதரப்பட்ட இகழ்ச்சிக் குரல்களும் கேட்டன. துட்டத்துய்ம்மன் அவையை அமைதியடையுமாறு செய்துவிட்டு, மாறுவேடத்திலிருந்த அர்ச்சுனனின் கேள்விக்குப் பதில் கூறினான். ‘அந்தணர் திலகமே! உங்கள் கேள்வியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அந்தணர்களுக்கும் இதில் பங்கு கொள்ள உரிமையுண்டு, உங்களில் எவரேனும் நிபந்தனையை நிறைவேற்றினால், அவ்வாறு நிறைவேற்று பவருக்குத் திரெளபதியைத் தடையின்றி மணம் செய்து கொடுக்கிறேன். இது உறுதி’ -துட்டத்துய்ம்மன் மறு மொழியை முற்றிலும் கூறி முடிப்பதற்குள்ளேயே அர்ச்சுனன் வில்லும் பொறியும் அமைந்திருந்த மேடையை அடைந்து விட்டான்.

சுற்றி வீற்றிருந்த அரசர்களின் கண்களில் பொறாமையின் சாயையும் இகழ்ச்சியின் சாயையும் ஒருங்கே இலங்கின. ஆனால், அவர்களுடைய இகழ்ச்சியும் பொறாமையும் தூள் தூளாகச் சிதறிப் போகும்படியான காரியத்தை அடுத்த விநாடியிலேயே அவன் செய்து முடித்தான். வெகுநாள் பழக்கப்பட்டவனைப் போல எடுத்த வேகத்தில் அந்த வில்லை நாணேற்றிக் குறி தவறாமல் அம்பெய்து இயந்திரப் பொறியை அறுத்து வீழ்த்தினான். அப்போது இயந்திரப் பொறி மட்டுமா அறுந்து வீழ்ந்தது? இல்லை! இல்லை! அங்கே கூடியிருந்த மன்னர்களின் மனத்தில் இருந்த அலட்சியம் என்ற உணர்ச்சியும் அறுந்து வேரற்றுக் கீழே விழுந்தது. அவையிலிருந்த ஏனைய அந்தணர்களின் கூட்டம் தங்களில் ஒருவனுக்கு வெற்றி கிடைத்ததற்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது ‘கேவலம் ஒரு அந்தண இளைஞன் அரசர்களும் அடைய முடியாத வெற்றியை அடைந்து விட்டானே’ என்று கூடியிருந்த அரசு குலத்தினர் மனம் பொருமினர்.

கையில் வளைத்த வில்லுடன் பெருமிதம் விளங்க நின்று கொண்டிருந்தான் அர்ச்சுனன். திரெளபதி ஓரக் கண்களால் தொலைவில் நின்றவாறே அவன் அழகைப் பருகிக் கொண்டிருந்தாள். ‘ஒருவேளை அவனே அர்ச்சுனனாக இருக்கலாமோ? அந்தணனாக உருமாறி வந்திருக்கிறானோ?’ என்று சந்தேகம் இயற்கையாகவே அவள் மனத்தில் எழுந்தது. துட்டத்துய்ம்மன் அந்தணனுக்கு (அர்ச்சுனனுக்கு) மாலையிடுமாறு திரெளபதிக்குக் கூறினான். அவள் மெல்ல நடந்து வந்து விற்பிடித்த கையினனாக நிற்கும் அவன் கழுத்தில் மணமாலையை அணிவித்து விட்டு நாணத்தோடு அருகில் தலைகுனிந்து நின்று கொண்டாள். தாங்களெல்லாம் வீற்றிருக்கும் பேரவையில் திரெளபதி ஓர் அந்தண இளைஞனுக்கு மாலை சூட்டிய காட்சி துரியோதனன் முதலிய அரசர்களின் மனங்களைக் கொதிக்கச் செய்தது. அவனையும் அவையிலுள்ள மற்ற அந்தணர்களையும் போர் புரிந்து துரத்தினால் என்ன?... என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது அவர்கள் சிந்தனையின் கொடுமை. திடீரென்று அந்தணர்கள் மேலும் மணமாலையோடு நின்ற அர்ச்சுனன் மீதும் ஆவேசத்தோடு பாய்ந்தனர் அங்கே கூடியிருந்த வேந்தர்கள்.

சுயம்வர மண்டபம் ஒரு நொடியில் போர்க்களமாகி விட்டது. திரெளபதியும் தோழியர்களும் மனம் பதைத்து ஒதுங்கி நின்று கொண்டனர். அந்தணர்களுக்கும் அரசர் களுக்கும் யுத்தம் நடந்தது. அர்ச்சுனன் தனக்காகப் பரிந்து கொண்டு வந்த மற்ற வேதியர்களைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தானே தன் சகோதரர்களுடன் போரில் இறங்கினான். போர் உக்கிரமாக நிகழலாயிற்று. போரில் பல தேசத்து அரசர்கள் ஒன்று சேர்ந்திருந்ததனால் மிகச் சீக்கிரமே அர்ச்சுனன் அவர்களைச் சின்னாபின்னப்படுத்துவது சுலபமாக இருந்தது. எதிர்த்து வந்த மன்னர்கள் சிதறியோடினர். அர்ச்சுனனும் சகோதரர்களுமே இறுதியில் சுயம்வர மண்டபத்தில் எஞ்சினர். ‘மாறுவேடத்திலிருக்கும் இந்த ஐந்து அந்தணர்களும் பாண்டவர்கள் தாமோ?’ -என்ற சந்தேகம் தப்பி ஓடும் போது அரசர்களுக்கு ஏற்பட்டது. சுயம்வரத்திற்கு வந்த கண்ணபிரான் அரசர்களுடைய இந்தச் சந்தேகம் வலுத்து விடாமல் தடுத்து அவர்களைத் தங்கள் தங்கள் ஊர் திரும்பும்படி செய்து பாண்டவர்களைக் காப்பாற்றினார். மாறுவேடத்திலிருந்த பாண்டவர்கள் ஐவரும் சுயம்வரத்தில் அர்ச்சுனன் அடைந்த கன்னி திரெளபதியுடன் புறநகரில் குந்திதேவி தங்கியிருந்த குயவனின் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டு வாசலில் இருந்தவாறே, ‘தாயே! இன்று ஓர் பெறற்கரிய பொருளைப் பெற்று வந்திருக்கிறோம் நாங்கள்’ -என்று குந்தியின் செவியில் கேட்குமாறு கூறினார்கள் பாண்டவர்கள். உண்மை என்ன என்பதை வெளியே வந்து காணாத குந்தி, ‘அப்படியானால் அந்த அரும் பொருளை நீங்கள் ஐவருமே அனுபவித்து மகிழுங்கள்!’ என்று உள்ளே இருந்தவாறே மறுமொழி கூறிவிட்டாள். தாய்மொழியை மந்திரமாக மேற்கொள்ளும் பாண்டவர்கள் இந்த விபரீத நிகழ்ச்சி காரணமாக ஐவருமே திரெளபதியின் மேல் உரிமை கொண்டாடுமாறு நேர்ந்து விட்டது. வெளியே வந்து உண்மையைக் கண்டு அறிந்து கொண்டதும், ‘எல்லாம் விதியின் விளைவு!’ என்று கூறி மனம் வருந்தினாள் குந்தி. சுயம்வர நிகழ்ச்சியிலிருந்து போர் ஏற்பட்டதுவரை யாவற்றையும் தாயிடம் விவரித்துக் கூறினார்கள் பாண்டவர் கள் சுயம்வர மண்டபத்திற்குள்ளிருந்து பாண்டவர்கள் புறப்பட்ட போதே அவர்கள் மேல் சந்தேகங் கொண்ட துருபத மன்னன் பின்னாலேயே ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் மூலம் அந்தணர்களாக மாறுவேடத்தில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்றும், திரௌபதியினால் மணமாலை சூட்டப்பட்டவன் அர்ச்சுனனே என்றும் அவன் அறிந்து கொண்டான். உடனே தகுந்த மரியாதைகளுடன் பாண்டவர்களையும் குந்தி திரெளபதி ஆகியவர்களையும் அழைத்து வரச் செய்தான். திரெளபதிக்கும் அர்ச்சுனனுக்கும் திருமணத்தைச் சிறப்பாக நடத்தக் கருதினான். ஆனால் பாண்டவர்களோ திரெளபதியை ஐவரும் மணந்து கொள்ளும்படி நேர்ந்த சம்பவத்தைக் கூறி அப்படியே செய்ய வேண்டும் என்றார்கள்.

துருபதன் திடுக்கிட்டு மனங் கலங்கினான். அப்போது வியாச முனிவர் அங்கே வந்து துருபதனுக்கு ஆறுதல் கூறித் ‘திரெளபதியின் பழவினைப்படி அவள் ஐவரை மணக்க வேண்டியிருப்பதை’ -விளக்கினார். வியாசர் கூறிய விளக்கத்தைக் கேட்ட பின் துருபத மன்னனும் ஒருவாறு மனந்தேறித் திரெளபதியை ஐவருக்கும் மனைவியாக மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதித்தான். பின்பு ஒரு நல்ல மங்கல நாளில் தெளமிய முனிவர் தலைமையாளராக இருந்து பாண்டவர்கட்கும் திரௌபதிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தின் போது பாண்டவர்கள் தங்கள் உண்மை உருவத்தோடு விளங்கினர். இந்தச் செய்தி எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்துவிட்டது. சுயம்வரத்திற்கு அந்தணருருவில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்பதை அறிந்ததும் கெளரவர்களின் சினத் தீ பெருகி வளர்ந்தது. முன்பே இருந்த பகையும் ஒன்று சேர்ந்து கொண்டது. அவர்கள் பாண்டவர் மேல் படை எடுத்துப் புறப்பட்டனர்.