மகாபாரதம்-அறத்தின் குரல்/13. தருமன் முடி சூடுகிறான்

விக்கிமூலம் இலிருந்து

13. தருமன் முடி சூடுகிறான்

உலகத்தில் தாங்கள் எந்த இடத்தை நிலைக்களன்களாக கொண்டு தோன்றுகின்றனவோ அந்த இடத்தையே அழிக்கும் பொருள்கள் இரண்டே இரண்டு தாம் இருக்கின்றன. ஒன்று நெருப்பு மற்றொன்று பொறாமை தான் எந்தக் கட்டையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எரிக்கின்றதோ அதையே அழித்து விடுகிறது நெருப்பு. தான் எந்த மனத்தில் அளவை மீறி வளர்கின்றதோ அந்த மனத்தையே அழித்து விடுகிறது பொறாமை திரௌபதி சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன்! அவனோடு வந்தவர்கள் பாண்டவர்கள். துருபத மன்னன் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் திருமணம் நிகழ்த்தி விட்டான் என்று வரிசையாக இந்தச் செய்திகளை எல்லாம் அறிய அறியப் பொறாமையால் கொதித்தது கெளரவர் மனம். பாண்டவர்கள் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை மூலமற்றுப்போகும்படி அழித்து விட்டால் என்ன? என்று தோன்றியது துரியோதனன் முதலியோர்க்கு. இறுதியில் இந்தக் குரோதம் நிறைந்த எண்ணமே அவர்கள் உள்ளத்தில் வலுப்பெற்று வளர்ந்து விட்டது. படைகளைத் திரட்டிக் கொண்டனர். கொதிக்கும் உள்ளமும் குமுறும் அசூயையுமாகப் படைகளோடு மீண்டும் பாஞ்சால நகரத்துக்குப் புறப்பட்டனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு வருவார்கள் என்பதை உறுதியாக எதிர்பார்த்திருந்த துருபதன் புதல்வன் துட்டத்துய்ம்மன், பாஞ்சால நாட்டுப் படைகளோடு எதிர்ப்பதற்குத் தயாராக இருந்தான். பாண்டவர்கள் ஐவரும் கூடத் துட்டத்துய்ம்மனோடு போருக்குத் துணிந்து ‘வீர வேள்வியாக’ அதை எண்ணி வந்து காத்திருந்தனர். துரியோதனாதியர் ‘பாண்டவர்களை எளிதாக வென்று விடலாம்’ -என்றெண்ணி வந்தனர். ஆனால் விளைவு நேர்மாறாக முடிந்து விட்டது. வந்த வேகத்தில் பெருந்தோல்வி அடைந்து திரும்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது துரியோதனாதியர்களுக்கு. பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை விடத் தாங்கள் இவ்வளவு விரைவில் தோல்வி அடையும்படி நேர்ந்து விட்டதே என்ற வருத்தம் தான் அதிகமாக வாட்டியது அவர்களை

இந்த நிலையில் இவர்கள் படையெடுத்துச் சென்றதும் தோல்வியுற்று வந்ததுமாகிய நிகழ்ச்சிகள் திருதராட்டிரனுக்குத் தெரிந்தன. அவன் சிந்தித்தான். பாண்டவர்கள் அவனுக்குத் தம்பியின் புதல்வர்கள். அவர்களுக்கும் தன் மக்களுக்கும் இருக்கின்ற இந்தப் பகைமை, குரோதம் முதலிய உணர்ச்சிகளை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விடுவார்களானால் அது நன்றாக இராது என்றஞ்சியது அவன் உள்ளம்: எனவே பாண்டவர்களின் வழியில் தன் மக்கள் அடிக்கடி குறுக்கிட்டு அவர்களைத் துன்புறுத்த முடியாத படி ஒதுங்கி வாழும்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே முதல் வேலையாகப் பாண்டவர்களை அழைத்து வருமாறு தன் தூதுவர்களைப் பாஞ்சால நாட்டிற்கு அனுப்பினான், தூதுவர்கள் பாஞ்சால நாடு சென்று பெரிய தந்தையின் ஆணையைப் பாண்டவர்களிடம் தெரிவித்தனர். உடனே பாண்டவர்கள் துருபத மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு திரெளபதி, தாய் குந்தி ஆகியவர்களோடு அத்தினாபுரம் வந்து சேர்ந்தனர்.

திருதராட்டிரன் அவர்களை அன்போடு வரவேற்று “அருமைப் புதல்வர்களே! உங்களுக்கு அறிவும் நினைவும், பெருகிய திறன் வாய்ந்த வாலிபப் பருவம் கிட்டிவிட்டது. இனி உங்கள் தந்தைக்குரிய நாட்டின் பகுதியை உங்களிடமே ஆள்வதற்கு ஒப்பித்து விடலாம் என்று நினைக்கிறேன். அதனை செவ்வனே ஆளும் பொறுப்பும் கடமையுணர்ச்சியும் உங்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு” -என்று கூறிப் பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய உடைமைகளை முறையாகப் பிரித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டான். தருமன் முதலியவர்களும் தந்தைக்கு நன்றி செலுத்தி அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் ஒரு நல்ல நாளில் தன் அலையிலுள்ள சான்றோர்களைக் கொண்டு பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடி சூட்டினான் திருதராட்டிரன். பாண்டவர்கள் பகுதியாகிய அரசுக்குத் தருமன் அரசனானான், அத்தினாபுரமே பாண்டவர்கள் அரசுக்கும் தலைநகரமாக இருந்தது.

தொடக்கத்தில் சில நாட்கள் துரியோதனாதியர் பாண்டவர்களின் நலத்தை வெறுக்காமல் நாட்களைக் கழித்தனர். பின்பு நாளாக ஆகப் பாண்டவர்களுக்குத் தொல்லைகளைச் செய்யத் தலைப்பட்டனர். திருதராட்டிரனோ தன் மக்கள் செய்யும் குற்றத்தை அறிந்தும் அறியாதவன் போல் வாளாவிருந்தான். ‘தீயோர்களை விட்டு விலகி வாழ்வதே இன்பம்‘ -என்பதை நன்குணர்ந்திருந்த தருமன் தன்னுடைய தலை நகரத்தை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளக் கருதினான். இந்திரப் பிரத்தம், முன்னோர்கள் வாழ்ந்து சிறந்த நகரம். ஆனால் தற்போது வெறும் வெளியாக இருந்தது. தொன்மைச் சிறப்பு வாய்ந்த அந்த நகரத்தைத் திருத்தி அமைத்துத் தன் தலைநகரமாக ஆக்கிக் கொள்ளத் தீர்மானித்தான் தருமன். இந்திரப்பிரத்தமோ காண்டவப் பிரத்தம் என்னும் பாழடைந்த நகரத்துக்கு அருகில் இருந்தது. எந்த முக்கியமான செயலைச் செய்வதாக இருந்தாலும் கண்ணப்பிரானைக் கலந்து கொண்டே அதைச் செய்யும் வழக்கம் தருமனிடம் இருந்தது. இந்திரப் பிரத்த நகரத்திற்குப் புறப்படும்போது தன் சகோதரர்களுடனே கண்ணபிரானையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

இந்திரப்பிரத்தம், அப்போதிருந்த பாழ் நிலையைக் கண்ட கண்ணன் அதில் அந்த நிலையிலேயே பாண்டவர்கள் வசிக்க முடியாதென்பதை உணர்ந்தான். அருள் நிரம்பிய அவன் உள்ளம் மலைத்தது. தயங்கித் திகைத்தது. கண்ணபிரானே மனம் வைத்தால் நடக்காத துண்டா? பாண்டவர்களுக்கு நலம் புரிய வேண்டும் என்ற ஆர்வம் அந்த அடியார்க்கருளும் பண்புடைய மனத்தில் தோன்றி விட்டதானால் பின் என்ன குறை? வானவர் தலைவனாகிய இந்திரனும் வானுலகத் தச்சனாகிய விச்சுவகன்மா என்பவனும் கண்ணபிரானால் பாண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி வேண்டிக் கொள்ளப்பட்டனர். தேவர்களே உதவி புரிய முன் வந்தால் காரியம் வெற்றிகரமாக முடிவதற்குக் கேட்கவா வேண்டும்? காடும் புதருமாக மண்டிக் கிடந்த இடத்தில் கவின் மிக்க மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் எழுந்தன. எல்லா வகையான அழகுகளும் நிரம்பிய ஓர் நகரம் அங்கே உருவாயிற்று. ‘அமராபதியும் அளகாபுரியும் இதற்கு இணையாக இயலாது’ என்று மண்ணவர்களும் விண்ணவர்களும் கொண்டாடும் படியாக அவ்வளவு சீரும் சிறப்பும் கொண்டு இலங்கியது அந்தப் புதிய நகரம். அதன் பழமையை நினைத்து கண்ணபிரானே அதற்கு ‘இந்திரப் பிரத்தம்’ -என்றும் பெயர் சூட்டினார்.

பெரிய தந்தை தவறாக எண்ணிக் கொள்ளாதவாறு அவரிடமும் சகோதரர்களிடமும் ஏனைப் பெரியோர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு மங்கல நிறைவு செறிந்த ஓர் நல்ல நாளில் இந்திரப்பிரத்த நகரத்துக்குக் குடியேறினர். வனப்பிலும் அழகிலும் நிகரற்ற அந்த மகாநகரத்தைப் படைத்துக் கொடுத்தவனாகிய தேவதச்சன் நகரத்தின் அமைப்பையும் எழிலையும் பாண்டவர்கட்கும் மற்றை யோர்க்கும் விளக்கிக் கூறினான். நகரம் முழுவதையும் சுற்றிக் காண்பித்தான். தேவதச்சனாகிய விஸ்வகன்மா, இந்திரன், கண்ணபிரான் ஆகியவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படியே அந்த நகரத்தைப் பாண்டவர்க்காக உண்டாக்கிக் கொடுத்திருந்தான் என்றாலும் தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய முறையைக் கருதி அவனுக்குப் பெரும் பரிசில்களையும் அன்பளிப்புகளையும் வழங்கினார்கள் தருமன் முதலிய சகோதரர்கள். பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரைத் தங்கள் தலைநகரமாக அமைத்துக் கொண்டு சில நாட்கள் கழிந்தன. நகர் புகு விழாவுக்காக வந்திருந்த கண்ணபிரான் முதலிய விருந்தினர் பாண்டவர்க்கு நல்லாசி கூறி விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்கள் தலைநகரை அடைந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல அது புதுமையாகத் தோன்றிய நகரம் என்ற நினைவே மறந்து விட்டது. ஊழி ஊழியாக வாழ்ந்து பழகிப்போன நகரம் போன்ற மனோபாவம் பாண்டவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த மனோபாவத்தோடு மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

முடிசூடிக் கொண்டிருந்த தருமன் அறக்கடவுளே அரியணையில் அமர்ந்து முயன்று அரசாள்வது போலச் செம்மை பிறழாத ஆட்சியை நடத்தி வந்தான். ஒரு தாய் தன் அன்புக் குழந்தைகளைப் பேணிப் போற்றும் தன்மை போலத் தாய் ஒத்த அன்பும் தவம் ஒத்த பண்பும் கொண்டு தனக்குக் கிடைத்த நாட்டைத் தம்பிமார்களோடு நிர்வகித்து வந்தான். இந்நிலையில் இந்திரப்பிரத்த நகரத்து வாழ்வு கோலாகலமாகக் கழிந்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத நிலையில் இசைப் புலவரும் மூவுலகங்களிலும் சஞ்சரிக்கின்றவருமாகிய நாரத முனிவர் ஓர் நாள் (இந்திரப்பிரத்த நகருக்கு) அங்கே விஜயம் செய்தார். அவருடைய வரவை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் கொண்ட பாண்டவர்கள் அன்புடனும் ஆர்வத்துடனும் தக்க உபசாரங்கள் செய்து அவரை அரண்மனையில் வரவேற்றனர். ஏதாவது ஓர் இடத்திற்கு நாரதமுனிவர் வருகின்றார் என்றால் அவருடனே சிறப்புமிக்க செய்தி ஒன்றும் வருகின்றது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அன்றும் ஒரு செய்தியோடுதான் இந்திரப்பிரத்த நகரத்தில் பாண்டவர்களைக் காண்பதற்கு வந்திருந்தார் அவர். அது வெறும் செய்தி மட்டும் இல்லை. பாண்டவர் நலனில் அக்கறை கொண்டு கூற வந்த செய்தி. அதை அவர் சொல்லத் தொடங்கிய போது, ‘இவர் இப்போது எதற்காக இப்படி ஏதோ கதை கூறுவது போலக் கூறுகிறார்?’ -என்று திகைத்தனர் பாண்டவர். இறுதியில் தான் அவர்களுக்கு நாரதர் கூறவந்த கருத்து விளங்கியது.

“பாண்டவர்களே முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன். இது ஒரு பெண்ணின் காரணமாக இருவர் தங்களுக்குள் மாறுபட்டுப் பெறுவதற்கரிய தவத்தையும் இழந்து போன நிகழ்ச்சி அது. அதை நீங்கள் இப்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சுந்தன், உப சுந்தன் என்று இருவர் பிரம்மாவை நோக்கி இடைவிடாமல் தவம் செய்து கொண்டிருந்தனர். தவம் வளர வளர அதன் சித்தி அருகில் நெருங்கும் அல்லவா? சுந்தோப் சுந்தர்களுடைய தவமும் அதன் பயனை சித்தி வடிவில் பெற வேண்டிய காலம் வந்தது. அப்போது இறுதி முறையாக அவர்களுடைய தவத்தைச் சோதனை செய்யும் பொருட்டு வானுலகிலிருந்து திலோத்தமை அனுப்பப்பட்டாள். பிறரை மயக்கி மோகத்துக்கு மிக விரைவில் ஆளாக்கி விடும் சக்தி வாய்ந்த பேரழகி. அவள். ஈரேழு - பதிநான்கு புவனங்களிலும் வடிவமோகனத்தில் அவளுக்கு நிகரான பெண்ணைத் தேடிக் காண முடியாது.

அத்தகைய அழகி சுந்தோபசுந்தர்கள் தவம் செய்து கொண்டிருந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் பெண்ணாக மட்டுமா வந்தாள்? இல்லை! இல்லை. அவர்களுடைய வைராக்கியத்தைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பராக்கும் அகோர நெருப்பைப் போல வந்தாள். கண்டவர்களை வாரி விழுங்கும் அந்த அந்தகாரத்தின் அடியே தங்கள் தவத்தை, ஆழத்திற்கும் ஆழத்திலே அழித்துப் புதைக்க முற்பட்டு விட்டார்கள் சுந்தோபசுந்தர்கள். திலோத்தமை என்ற அந்த அழகியின் காரணமாகத் தங்களுக்குள்ளேயே ஒவ்வொருவர் சண்டையிடவும் தொடங்கிவிட்டனர். “அடே இவள் அருகில் நெருங்காதே! இந்த அழகி எனக்குத் தான்” என்றான் சுந்தன்.

“விலகி நில்! உன் அழகுக்கு இவள் ஒருத்திதான் குறை. இவளை அனுபவிக்கும் யோக்கியதை எனக்குத் தானடா இருக்கிறது” என்றான் உபசுந்தன். அவ்வளவு தான் இருவரும் கட்டிப் புரண்டார்கள், அவர்களுடைய தவமும் மண்ணில் விழுந்து புழுதியோடு புழுதியாகப் புரண்டது. இருவருடைய தவத்தையும் பாழாக்கிவிட்ட பெருமையில் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள் திலோத்தம்மை! -இந்த நிகழ்ச்சியைக் கூறி நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் நாரதர். அப்படி இருந்தபோது அவர் விழிகள் பாண்டவர்களை ஊடுருவின. பாண்டவர்கள் ஒன்றும் புரியாமல் திகைப்புடன் மலங்க மலங்க விழித்தனர். அப்போது நாரதர் தொடர்ந்து மேலும் கூறத் தொடங்கினார்:

“பாண்டவர்களே! இந்தப் பழைய நிகழ்ச்சியை இப்போது எதற்காக நினைவூட்டினேன் என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் நலனுக்காகத் தான் இதை நினைவூட்டினேன். திரெளபதியை நீங்கள் ஐவரும் மணம் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு அரசு, ஆட்சி, புது நகரம் என்று இப்படி எல்லாவிதமான நலன்களும் கூடி வருகின்ற நேரத்தில் அவள் காரணமாக ஒரு சிறு பூசல் ஏற்பட்டாலும் ஒற்றுமை அதிவேகமாகக் குலைந்துவிடும். இதனால் நீங்கள் ஐவரும் திரௌபதியோடு இல்வாழ்க்கை நடத்த வேண்டியது பற்றி நான் வகுத்துக் கொடுக்கும் வரன் முறையை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒருவர் வீதம் அவளோடு நீங்கள் ஐவரும் தனித்தனியே இல்வாழ்க்கை நடத்துங்கள். அவ்வாறு நடத்தும்போது ஒருவர் இல்வாழ்க்கைக் காலத்தில் உங்களில் அந்த ஒருவர் ஒழிய மற்றவர்கள் அவளைக் காணவே கூடாது. இந்தக் கட்டுப்பாடு மிகமிக அவசியமானது. தப்பித் தவறிக் காணும் படியாக நேர்ந்து விட்டால் அப்படிக் கண்டு விட்டதன் பரிகாரத்திற்காக ஓர் வருட காலம் கண்டவர் எவரோ அவர் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்படுத்திக்கொண்டால் திரெளபதி காரணமாக உங்கள் சகோதரத்துவத்திற்கு அழிவு ஏற்படாது.” நாரதர் இவ்வாறு கூறி முடித்ததும் பாண்டவர்கள் இந்த நிபந்தனைக்கு உடன் பட்டனர்.

தங்கள் ஒற்றுமைக்கு இந்த ஏற்பாடு நல்ல பாதுகாப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. நிபந்தனையின்படி அந்த ஆண்டில் தருமனோடு திரெளபதி இல்வாழ்வு நடத்த வேண்டுமென்று முடிவு செய்து கொண்டார்கள். நாரதர் தம்மால் ஒரு நல்ல காரியம் நிறைவேறிய திருப்தியுடன் விடைபெற்றுக் கொண்டு சென்றார். தங்கள் நலனில் அக்கறை கொண்டு அம்முனிவர் இந்திரப் பிரத்த நகருக்கு விஜயம் செய்து நல்லுரை கூறியதற்காக அவரை வணங்கி மரியாதை செலுத்தி நன்றியோடு விடை கொடுத்தனர். சுந்தோப சுந்தர்கள் திலோத்தமையின் மேல் கொண்ட மோகத்தால் தவத்தையும் தங்களையும் அழித்துக் கொண்ட வரலாறு அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது.