மகாபாரதம்-அறத்தின் குரல்/4. பாண்டுவின் மரணம்

விக்கிமூலம் இலிருந்து
4. பாண்டுவின் மரணம்

தீவினை எவரை அணுகினாலும் சரி, சொல்லிக் கொண்டு அணுகுவதில்லை. கண்ணுக்குத் தோற்றாமல் விளைவு நெருங்குகிறது வினை. பாண்டுவின் வினையும் இப்படித்தான் அவனை நெருங்கியது. வினைக்கும் விதிக்கும் முன்னால் மனிதன் எம்மாத்திரம்? அப்போது வசந்தகாலம்! தபோவனத்தைச் சுற்றி வசந்த கால எழில் மனோரம்யமாகப் பரவியிருந்தது. மரங்களின் பசுமைப் பரப்பிற்கு நடு நடுவே செவ்வண்ண மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. தென்றல் மனோகரமாக வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சூழ்நிலை, பாண்டு மான் தோலை விரித்து அமர்ந்து கொண்டிருந்தான்.

ஆசிரம வாசலில் மாத்திரி நீராடி விட்டுக் கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் நின்று கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்த நிலை கண்டோர் காமுறத்தக்க கவர்ச்சியினதாக இருந்த்து. தவத்துக்காக அமர்ந்து கொண்டிருந்த பாண்டு, கண்கள் இமையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், நீராடி முடிந்த நிலையில் கடைந்தெடுத்தவை போன்ற அவளுடைய அங்கங்கள் ஓளி நிறைந்து தோன்றிக் காணும் கண்களை வசீகரித்தன. தோகை விரித்தாடும் இளமயில் போல் அவள் தன்னை மறந்த அவசத்துடன் கூந்தலைக் கோதிக் கொண்டேயிருந்தாள். பாண்டுவின் மனத்தில் அவளுடைய இந்த மோகனமான தோற்றம் ஆசைத் தீயை மூட்டியது. அங்குசத்தையும் பாகனையும் மீறிக் கொண்டு மதத்தால் கொழுத்து ஓடும் யானையைப் போலத் தவத்தையும் ஒழுக்கத்தையும் மீறிக் கொண்டு அவன் மனம் மோகவெறியில் ஆழ்ந்தது. மாத்திரியின் குமுதச் செவ்விதழ்களும், கொஞ்சும் கிளி மொழியும் அவன் தவத்தை அபகரித்தன. அவன் மான் தோலிலிருந்து எழுந்தான். தவத்தை மறந்தான். தணிக்க முடியாத ஆசை வெறியால் இந்த முனிவரின் சாபத்தையும் மறந்து மாத்திரியை அணுகினான் அவன். அடுத்த வினாடி மாத்திரி அவன் கையில் விளையாட்டுப் பாவையாக மாறினாள். அவன் கரங்கள் ஆசை தீர அவளைத் தழுவி முயங்கின. அதே நேரத்தில் சரியாகத் தொலைவில் எங்கோ ஓர் ஆந்தை பயங்கரமாக ஒரு முறை அலறி ஓய்ந்தது. முயங்கிய பாண்டுவின் கரங்கள் சோர்ந்தன. அவனுக்கு மூச்சுத் திணறியது. கை கால்கள் ஓய்ந்து கொண்டு வந்தன. சிறிது சிறிதாக உணர்வு ஒடுங்கிக் கொண்டே வந்தது. மாத்திரி ஒன்றும் புரியாமல் திகைத்தாள். அவள் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் உடல் வேரற்ற மரம் போலக் கீழே சாய்ந்தது! அந்த உடலிலிருந்து உயிர் நீங்கிவிட்டது.

முனிவரின் சாபத்திற்கு வெற்றி பாண்டுவின் ஆசைக்குத் தோல்வி! மாத்திரி கதறி ஓலமிட்டு அழுதாள்; அலறினாள்; அரற்றினாள். குந்தியும் புதல்வர்களும் அவள் அலறலைக் கேட்டு ஓடி வந்தனர். பாண்டுவின் திடீர் மரணம் அவர்களையும் கதறியழச் செய்தது. எல்லோரையும் அழவைத்த விதி எங்கோ தனிமையில் எவரும் காணாதபடி பாண்டுவை, தான் வென்றுவிட்டதாகச் சிரித்துக் கொண்டிருந்தது! இவர்கள் அழுதார்கள்! விதி சிரித்தது ! இவர்களுடைய அழு குரலைக் கேட்டுத் தபோவனத்தைச் சேர்ந்த மற்ற முனிவர்களும் வந்து கூடினார்கள். குந்தி, மாத்திரி, பாண்டவர்கள் ஆகியோர்க்கு அந்த முனிவர்கள் ஆறுதல் கூறினர். புதல்வர்களைக் கொண்டு பாண்டுவின் அந்திமக் கிரியைகளை நிறைவேற்றினர். கணவன் இறக்கத் தான் காரணமாகியதனால் மாத்திரி, தானும் ஈமச் சிதையில் விழுந்து கணவனுடனேயே விண்ணுலகு எய்தினாள்.

‘புதல்வர்களைக் காத்துய்க்க வேண்டும்’ என்ற கடமையை மேற்கொண்ட குந்தி மனத்தைக் கல்லாகச் செய்து பொறுத்துக் கொண்டவளாய் இவ்வுலகில் தங்கினாள். பாண்டவர்கள் ஐவரும் தாயாலும் காசிபர் முதலாகிய தபோவனத்து முனிவர்களாலும் ஆறுதலும் தேறுதலும் பெற்றுத் தந்தையிழந்த துயரத்தை மறந்து வந்தனர். பாண்டுவுக்கும் மாத்திரிக்கும், செய்ய வேண்டிய கிரியைகளை யெல்லாம் முடித்த பின்பும் குந்தியும் பாண்டவர்களும் துயரம் நிறைந்த வருத்தச் சின்னமாகத் தோன்றும் அந்த தபோவனத்தில் தங்கியிருப்பது நல்லதல்ல - என்று எண்ணினர் அங்கிருந்த மற்ற முனிவர்கள். வருத்தம் நிகழ்வதற்கு இடமாக அமைந்தது அந்தத் தபோவனம். இனியும் அங்கே தங்குவதனால் அவர்களுடைய வருத்தம் வளரலாமே தவிரக் குறைய முடியாது. ஆகையால் குந்தியும் பாண்டவர்களும் வருத்தத்தை மறந்து ஆறுதல் பெற வேண்டுமானால் தங்கள் உறவினர்களோடு அத்தினாபுரியிற் சென்று தங்கியிருப்பதே சிறந்தது என்று முடிவு செய்தனர் தபோவனத்தில் உள்ளோர்.

காசியர் முதலிய முனிவர்கள் குந்தியையும் பாண்டவர் களையும் தலைநகரமாகிய அத்தினாபுரிக்கு அழைத்துக் கொண்டு வந்து திருதராட்டிர மன்னனிடம் விட்டு விட்டுச் சென்றனர். திருதராட்டிரன் தம்பியின் புதல்வர்களையும் மனைவியையும் கண்டு அவன் மறைவிற்காகக் கண்ணீர் விட்டுக் கலங்கினான். தன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய தம்பியின் புதல்வர்களை மார்புறத் தழுவி மகிழ்ந்த காட்சி திருதராட்டிரனது பாசத்தை வெளிப்படுத்தும் இயல்பினதாக இருந்தது. பாட்டனாகிய ‘வீட்டுமன்’ சிறிய தந்தையாகிய விதுரன் முதலியோரும் பாண்டவர்களையும் ஆதரவும் ஆறுதலும் கூறிப் போற்றி வரவேற்றனர். ஐவரும் நூற்றுவரும் சகோதர பாசத்துடனே நெருங்கிப் பழகினர். ஒரே பொய்கையில் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் நெருக்கமாக மலர்ந்து கொழித்து வளர்ந்தாற் போலப் பாண்டவர்களும் கெளரவர்களும் அன்புடன் நேயம் பெருக்கி வாழ்ந்தனர். பெருகி வளர்ந்து வந்த இந்த நட்புப் பிற்கால வெறுப்பிற்குக் காரணமாக அமைந்ததுவோ என்னவோ?

பாண்டவர்களும் குந்தியும் இவ்வாறு அத்தினாபுரியில் தங்கியிருந்தபோது குந்திபோச நாட்டுச் சூரமன்னனுக்குத் தன் மகளின் நாயகனாகிய பாண்டு இறந்து போன செய்தி எட்டியது. தன் மகளுக்கு நேர்ந்த இந்த அமங்கல நிகழ்ச்சிக்காகப் பெரிதும் கலங்கினான் அவன். அவனும் குந்திபோசர்களைச் சேர்ந்த ஏனையோரும் பேரர்களாகிய பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறுவதற்காக அத்தினாபுரிக்கு வந்து சேர்ந்தனர். யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறைமைக்காகப் பலராமனும் கண்ணனும் கூட வந்து தங்கி ஆறுதலுரைத்தனர். தந்தையை இழந்து கவலையில் ஆழ்ந்து போயிருந்த பாண்டவர்கள் ஐவரும் இவர்கள் வரவால் பெரிதும் மனந்தேறினார்கள்.

பாண்டவர்கள் பெற வேண்டிய செல்வம், ஆட்சியுரிமை முதலியவற்றையும் அவர்களுக்கு முறைப்படி பகுத்தளிப்பதற்குரிய முயற்சியைக் கண்ணன், பலராமன், குந்தி போசகர்கள் முதலிய இவர்கள் மேற்கொண்டனர். தண்ணீர்ப் பெருக்கோடு தண்ணீர்ப் பெருக்கு ஒன்று பட்டுக் கலந்தது போல இவர்கள் யாவரும் ஒன்று பட்டு அத்தினபுரியில் உவந்திருந்த நிலை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களுக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றுப் போற்றிப் பேணுவதிலேயே நேரமெல்லாம் கழிந்தது. பாண்டவர்க்கு வாழ்நாள் முழுவதும் கண்ணபிரானுடைய அனுதாபமும் உதவிகளும் கிடைப்பதற்கு இந்த முதல் சந்திப்புப் பெரிதும் பயன்பட்டது. சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் குந்தி போசர்களும், கண்ணன், பலராமன் முதலியவர்களும் புறப்பட்டு விடை பெற்றுக் கொண்டு தத்தம் நாடு சென்றனர். கருடனுக்கு அஞ்சித் தளரும் பாம்புகள் போலப் பாண்டவர்களை நோக்கத் துரியோதனாதியர் தளர்ந்தவர்களாகத் தென்பட்டனர். பாண்டவர். கல்வியாலும் வீரத்தாலும் நாள்தோறும் சிறப்புற்று வாழத் தலைப்பட்டனர். அவர்கட்கு முன் கெளரவர், மதிக்கு முன் மின்மினி யாயினர்.