மகாபாரதம்-அறத்தின் குரல்/6. தீமையின் முடிவு
சகோதரர்கள் நால்வரும் திரெளபதியும் உரோமேசரும் வனத்தில் நலமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வனத்திற்கு அருகேயுள்ள வேறு சில வனங்களில் தவமுயற்சியில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் பலர் ஒருநாள் அவர்களைக் காண வந்தனர். தருமன் அந்த முனிவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுப் பேணினான். முனிவர்கள் கூறினர்;
“தருமா! நீ அறத்தின் காவலன்! சத்தியத்துக்குத் துணைவன். உன்னிடம் நாங்கள் ஓர் உதவியை நாடி வந்திருக்கிறோம். மறுக்காமல் நீ அந்த உதவியைச் செய்வாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் வசிக்கும் வனப்பகுதிகளில், கரடி, வேங்கை, யானை, சிங்கம் முதலிய பயங்கர மிருகங்கள் அடிக்கடி தொல்லை விளைவித்து வருகின்றன. அவைகளை வேட்டையாடி எங்களைப் பாதுகாக்கும் உதவியை உன்னிடம் கோருகிறோம்" முனிவர்களின் வேண்டுகோளைக் கேட்ட தருமன் வீமனை அழைத்து அவர்களுக்கு உதவி செய்து விட்டு வருமாறு பணித்தான். வீமன் வேட்டைக்குரிய படைக்கலங்களோடு முனிவர்களை அழைத்துக் கொண்டு சென்றான். வீமன் சென்ற சிறிது நேரத்தில் மற்ற இரு சகோதரர்களாகிய நகுல சகாதேவர்களும் மாலையுணவிற்குத் தேவையான காய்கனிகளைக் கொண்டு வருவதற்காகச் சென்று விட்டனர். தருமன் ஒரு மரத்தின் கீழ் எதோ சிந்தனையில் இலயித்துப் போய் வீற்றிருந்தான்.
திரெளபதி தனியே இருந்தாள். இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள வந்தவனைப் போலச் சடாசுரன் என்ற அசுரன் ஒருவன் அங்கே வந்தான். அவன் ஆகாயத்தில் வேகமாகப் பறக்கிற ஆற்றல் படைத்தவன். திடீரென்று பாய்ந்து திரெளபதியைப் பலாத்காரமாகத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அவன் பறக்கத் தொடங்கினான். அந்த அரக்கனின் கொடிய கைகளில் சிக்குண்ட திரெளபதி பயந்து போய் அலறிக் கூச்சலிட்டாள். காடெல்லாம் எதிரொலித்த அந்தக் கூக்குரலின் ஒலியை நகுல், சகாதேவர்கள் கேட்டனர். குரல் திரெளபதியினுடையது என்று அறிந்து பதறி ஓடி வந்தனர். சடாசுரனை மேலே பறக்கவிடாமல் வழி மறித்துப் போரிட்டனர். அசுரன் தரையில் இறங்கித் திரெளபதியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நகுல சகாதேவர்களை எதிர்த்துப் போரிட்டான். போர் வெகுநேரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முனிவர்களோடு சென்றிருந்த வீமன் அன்று வேட்டையாட முடிந்த மிருகங்களை வேட்டையாடி விட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் தொலைவில் வருகிறபோதே நகுல சகாதேவர்களும் சடாசுரனும் போரிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டுவிட்டான். நிலைமையை ஒருவாறு தானாகவே அனுமானித்துக் கொண்டு ஓங்கிய கதையும் கையுமாகச் சடாசுரனை நோக்கிப் பாய்ந்தான்.
“அடே! அவர்களை விட்டுவிடும். இதோ உனக்குத் தகுந்த ஆள் நான் போரிட வந்திருக்கின்றேன். என்னோடு போருக்கு வா?” சடாசுரன் வீமனுடைய அறைகூவலை ஏற்றுக் கொண்டு அவனுடன் போரிடுவதற்கு முன் வந்தான். ஒரு கையில் கதாயுதமும் மற்றொரு கையில் ஒரு பெரிய மரக்கிளையுமாக வீமன் அசுரனைத் தாக்கினான். அசுரன் ஒரு பெரிய மலைப்பாறையை எடுத்துக் கொண்டு வீமன் மேல் எறிந்து நசுக்க முயன்றான் போர் குரூரமாக நடந்தது. ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு இருவரும் மல்யுத்தம் செய்தார்கள். வீமன் அசுரனின் கைகளை ஒடிக்க முயன்றான். அசுரன் வீமனுடைய மார்பைப் பிளந்தெறிய முயன்றான். ஒருவருக்கொருவர் இளைத்தவர்களாகத் தோன்றவில்லை; இறுதியில் வீமன் அசுரனது உடலை மேலே தூக்கி இரண்டு கைகளாலும் பற்றிக் ‘கர கர‘ வென்று சுற்றி வானில் உயரத் தூக்கி எறிந்தான். கீழே விழுந்து சிதைந்த அசுரனின் உடல் பின்பு எழுந்திருக்கவுமில்லை; மூச்சு விடவுமில்லை. தீமையின் அந்த உரு நிரந்தரமாக அழிந்துவிட்டது.
வீமன் சகோதரர்களையும் திரெளபதியையும் அழைத்துக்கொண்டு வெற்றி முழக்கம் செய்தவாறே தமையன் இருப்பிடம் சென்றான். நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டுத் தருமன் வியந்தான். இதன் பின் சில நாட்களில் பாண்டவர்கள் அந்தக் காட்டிலிருந்து புறப்பட்டுக் கயிலாய மலையின் மற்றோர் பகுதியிலுள்ள பத்ரிநாராயணம் என்ற திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்றார்கள். தெய்வீக இயல்பும் தீர்த்த விசேஷமும் பொருந்திய பத்ரிநாராயணத்தில் சில தினங்கள் தங்கியிருந்த பிறகு, அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த அஷ்டகோண முனிவர் அவர்களை வரவேற்றுத் தம்முடன் இருக்கச் செய்து கொண்டார். ஞானத்தைப் பெருக்கவல்ல நல்லுரைக் கதைகள் பலவற்றை அவர்கள் கேட்கும்படி கூறினார் முனிவர். நீண்ட காலம் பாண்டவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். வனவாசத் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் வரை கழிந்து விட்டிருந்தன.
ஒரு நாள் காலை திரெளபதி ரிஷிபத்தினிகளோடு வனத்திலுள்ள பொய்கையில் நீராடுவதற்காகச் சென்றாள். பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்போது முன்பொரு முறை கண்ட தெய்வீக மலரைப் போன்ற ஒரு மலர் நீரில் மிதந்து வரக் கண்டாள். முன்பு கண்ட பொற்றாமரை மலரைக் காட்டிலும் சிறந்த மணமும் நல்ல அமைப்பும் உடையதாக இருந்தது இம்மலர். பெண்களுக்கு மட்டும் ஒரு பொருளின் மேல் மனப்பற்று ஏற்பட்டு விடுமானால் அந்தப் பொருளை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். அடைந்தாலொழிய அந்தப் பற்றுத் தீராது. ஆசை பிறக்கும்போதே உறுதியும் பிறந்து விடுகின்றது அவர்களுக்கு. திரெளபதி மறுபடியும் வீமனை அணுகினாள். அவன் மறுக்க முடியாதபடி தன் ஆசையை வெளியிட்டாள். வீமன் மனம் நெகிழ்ந்து விட்டது. அன்பையெல்லாம் கொள்ளைக் கொண்ட பெண் கட்டளையிடுகிறாள். ஈரநெஞ்சுள்ளவன் மறுப்பதற்கு எப்படித் துணிவான்? மீண்டும் யாரிடமும் கூறாமல் அளகாபுரியை நோக்கிப் பிரயாணம் செய்தான்.
இப்போது அளகை நகரம் அவனுக்குக் கொல்லைப்புறத்து வீடு போல. யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் துணிவோடு அளகையிலுள்ள பூஞ்சோலையை நெருங்கினான். தனக்கு எதிரிகள் எவரும் இருக்கின்றனரோ என்று அந்த நகரத்தை நோக்கிக் கேட்கும் பாவனையில் சங்கை எடுத்து முழக்கம் செய்தான். நகரத்தையே கிடுகிடுக்கச் செய்த அந்தச் சங்கநாதம் அளகாபுரி முழுவதும் கேட்டது. பூஞ்சோலையைக் காவல் காத்துக் கொண்டிருந்தவர்கள் முன்போலவே போருக்கு ஓடிவந்தனர். ஆனால் அருகில் நெருங்கி நிற்கின்ற ஆளைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப்பின்வாங்கினர். அவ்வாறு பின்வாங்கியவர்களில் ஒரு வித்தியாதரன் ஓடோடிச் சென்று குபேரனின் சேனாதிபதியாகிய மணிமான் என்பவனிடம் செய்தியைக் கூறினான். தன் வீரத்தின் மேல் தேவைக்கு மீறிய நம்பிக்கை உடையவன் மணிமான், குபேரனிடம் தெரிவிக்காமலே வந்திருக்கும் மனிதனைக் கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். மணிமானும் அவன் ஆணைக்குக் கீழ்ப்பட்ட எண்ணாயிரம் படைத் தலைவர்களுமாக வீமனை எதிர்த்துப் புறப்பட்டார்கள்.
அந்தப் படைத்தலைவர்களுள் துடுக்குத்தனம் நிறைந்தவனும் முரடனுமாகிய சலேந்திரன் என்பவன் வீமனைப் பார்த்து, “அடே நீ உயிரோடு இங்கிருந்து பிழைத்துப் போக முடியாது. இறந்து போகப் போவது உறுதி. இறந்து போவதற்கு முன்பாவது நீ யார் என்பதைக் கூறி விடு” என்று அகம்பாவத்தோடு கேட்டான். வீமன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். “ஓகோ! நான் யார் என்பது உங்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டதா? முன்பு ஒரு முறை நான் இங்கு வந்து வீரர்கள் பலரை ஒருவனாக நின்று வென்று எனக்கு வேண்டிய மலரைப் பெற்றுச் சென்றேனே. மறந்து விட்டதானால் இந்தச் சோலையைக் காவல் காக்கும் வீரர்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்” என்று வீமன் அவனுக்கு மறுமொழி கூறினான்.
வீமனுக்கும் படைத்தலைவர்களுக்கும் போர் தொடங்கியது. முன்னணியின் நின்ற சாதாரணமான படைத்தலைவர்கள் ஒவ்வொருவராக ஆற்றலிழந்து தளரவே, செய்தியறிந்து மணிமான் வீமனுடன் நேருக்கு நேர் போருக்காக வந்து நின்றான். கண் கட்டி வித்தை செய்வது போல் மாயையான பல ஏமாற்றுப் போர் முறைகளை நன்கு அறிந்தவனாகிய மணிமான் தன் சாமர்த்தியத்தை எல்லாம் வீமனுக்கு முன் காட்டினான். ஆனால் மணிமானின் அந்த அதியற்புத சாமர்த்தியங்களைக் கூட வீமன் விட்டு வைக்கவில்லை. வில்லும் அம்புமாகிய ஓரே கருவியைக் கொண்டு மணிமானின் உடம்பைச் சல்லடையாகத் துளைத்தான். கடைசியாக ஓர் அம்பு மணிமானின் உயிரையும் வாங்கி விட்டு அவனது வெற்றுடலைக் குருதி வெள்ளத்திற்கிடையே தள்ளியது. வீமன் முன் போலவே வெற்றி முழக்கம் செய்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் முன்பொரு சமயம் செய்தது போலவே வீமனைத் தேடிக் கொண்டு தருமன், கடோற்கசனுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
தம்பியின் பேராற்றலால் குபேரனின் சேனாதிபதி இறந்து கிடப்பது கண்டு தருமன் மனம் வருந்தினான். “வீணாக ஒரு பெண்ணின் விருப்பத்தின் பொருட்டு அசட்டுத்தனமாகத் தேவர்களையெல்லாம் ஏன் பகைத்துக் கொள்கிறாய்?” என்று வீமனைக் கடிந்து கொண்டான்.
மணிமான் குபேரனுடைய சேனாதிபதி மட்டுமல்ல. குபேரனுக்கு ஆருயிர் நண்பனும் ஆவான். அவன் போரில் கொல்லப்பட்டான் என்ற செய்தி குபேரனுக்கு அறிவிக்கப் பட்டபோது அவன் வெகுண்டெழுந்தான். “இனியும் பொறுத்திருக்கமாட்டேன். என் ஆருயிர் நண்பனின் உயிரைப் பறித்துக் கொண்ட அந்த மனிதனைக் கொல்லாமல் திரும்பப் போவதில்லை” என்று வஞ்சினம் கூறியவாறு மலர் பொழிலுக்குப் புறப்பட்டு வந்தான் குபேரன். அவன் அவ்வாறு புறப்பட்டு வந்தபோது அவனுடைய மகன் உத்திரசேனன் சில காரணங்களைக் கூறித் தடுத்தான். அவன் ஏற்கனவே வீமனுக்கிருந்த வலிமையை நேரிற் கண்டு அறிந்தவன். ஆகையால் அவன் தடைக்குக் காரணமிருந்தது.
“அப்பா! இப்போது வந்திருக்கும் மானிடன் சாதாரணமானவன் அல்லன். முன்பு இந்திரர்களாக இருந்த ஐந்து பேர் சிவபெருமானுடைய திருவருளால் பாண்டவர்கள் என்ற பெயரில் மனிதர்களாகத் தோன்றியுள்ளனர், உலகில் நலம் பெருகச் செய்வது அவர்கள் கடமை. அவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன் இந்திரனால் வெல்ல முடியாதவர்களை எல்லாம் வென்று தேவர்கோனுடன் சரியாசனத்தில் அமரும் சிறப்பைப் பெற்றிருக்கிறான். மற்றொருவனாகிய வீமனே இங்கு வந்துள்ளான். இதே வீமன் முன்பொருமுறை இங்கு வந்து ஆயிரக்கணக்கான பொழிற் காவலர்களை அழித்தொழித்தது நாமறிந்த செய்தி அல்லவா? மனிதர்களாக இருந்தாலும் தேவர்களை விடச் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் சிலர் உள்ளனர். அவர்களை நாம் அடக்கி ஒடுக்கிவிட முயல்வது தூணில் வலியச் சென்று முட்டிக் கொள்ளுவதைப் போல ஆகும். மகாவிஷ்ணு இராவணனைக் கொல்ல மனித உருவமே கொண்டிருந்தார். மகாபலியை அடக்குவதற்குக் கண்டோர் இகழும் குள்ளனாக வடிவம் கொண்டார். மனிதத் தோற்றத்தால் அந்தத் தோற்றத்திற்குள் பொருந்தியிருக்கும் வீரத்தைத் தாழ்வாக மதிக்கக் கூடாது. மேலும் மணிமான் இறந்ததற்கு வீமனுடைய கை வில் ஒன்று மட்டுமே காரணமல்ல. மணிமானுக்கு இருந்த சாபமும் ஒரு காரணமாகும். முனிவர் ஒருவருக்கு மணிமான் துன்பம் மளித்ததும் அதனால் சினம் கொண்ட அம்முனிவர், ‘தேவர்களுள் ஒருவனாகிய உனக்கு சாதாரண மனிதன் ஒருவனாலேயே சாவு ஏற்படும்’ என்று சாபம் அளித்ததும் உங்களுக்குத் தெரிந்த செய்திகள் தாமே? தந்தையே! மணிமான் இறந்தது பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். வீமனுடன் போர் செய்யும் எண்ணமும் வேண்டாம். அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்துச் சமாதானமாக அனுப்பி விடலாம். இவ்வாறு உத்திரசேனன் குபேரனுக்குக் கூறிய அறிவுரையை அவன் கேட்கவில்லை,
“உன் சொற்களை நான் கேட்கப் போவதில்லை. என் உயிருக்குயிரான நண்பன் மணிமானை எப்பொழுது கொன்றானோ அப்பொழுதே மணிமானைக் கொன்ற அந்த மானிடன் எனக்குக் கொடிய விரோதியாகி விட்டான். நான் அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்” என்று குபேரன் வீமனோடு போருக்குப் புறப்பட்டுவிட்டான். தன் முயற்சி பலிக்காமற் போனதனால் உத்திரசேனன் தன் தந்தையை அவன் போக்கிலேயே விட்டுவிட்டான். மலர் பொழிலின் வாயிலில் நின்று கொண்டிருந்த தருமன், வீமன், கடோற்கசன், ஆகிய மூவரும் தொலைவில் ஆரவாரத்தோடு எழுச்சி பெற்று வரும் குபேரனின் படைகளைக் கண்டனர். தருமனும் கடோற்க்சனும் திகைத்தனர். வீமனோ மறுபடியும் ஊக்கத்தோடு போருக்குத் தயாரானான்.
வெறுப்பும் சினமும் தவழத் தருமனுடைய விழிகள் அவனை நோக்கின. அந்த விழிகளின் கூரிய நோக்கைத் தாங்க முடியாமல் வீமன் தலை குனிந்தான். போருக்குச் செய்த யத்தனங்களையும் நிறுத்தினான். தருமன் தனக்குள் ஏதோ முடிவுக்கு வந்தவன் போலக் குபேரனுடைய படைகளுக்கு எதிரே சென்றான். ஆத்திரமும் மனக்கொதிப்புமாகக் கனல்கக்கும் விழிகளோடு வந்து கொண்டிருந்த குபேரனுக்கு முன் சென்று நின்று கொண்டு மலர்ந்த முகத்தோடு புன்முறுவல் செய்தவாறு அவனைக் கைகூப்பி வணங்கினான். குபேரன் ஒன்றும் புரியாமல் பதிலுக்கு வணங்கி விட்டுத் தயங்கி நின்றான்.
“குபேரா நீ சற்றே நின்று யான் கூறுவனவற்றைக் கேட்க வேண்டும். உன் சினம் தணிக. நீ அளகாபுரிக்குத் தலைவன். பேரரசன். பெருந்தன்மையுடையவன். என் தம்பி இளைஞன். அறியாதவன் ஏதோ தவறு செய்து விட்டான். மனத்தை வெறுப்புக் கொள்ளச் செய்யும்படியான செயல் ஏதும் நடந்துவிடவில்லை, நான் தருமன், என் மொழிகளை நீ மறுக்க மாட்டாய் என்று நம்புகிறேன். சிறியவனாகிய என் தம்பியை மன்னித்து இந்தப் போர் முயற்சியைக் கை விட்டுவிடு“ தருமன் உருக்கம் நிறைந்த குரலில் வேண்டிக் கொண்டான். குபேரனுக்கு மனம் இளகி விட்டது. உணர்ச்சி வசப்பட்டவனாகி அப்படியே தருமனை மார்புறத் தழுவிக் கொண்டான். போர் முயற்சியைக் கைவிட்டு விட்டு வீமனைத் தன் மனப்பூர்வமாக மன்னிப்பதற்கும் இணங்கிவிட்டான்.
தருமனும் வீமனும் குபேரனுடைய விருந்தினர் களாயினர். குபேரனின் அன்பின் மிகுதி அவர்களைக் களிப்பில் மூழ்கடித்தது. தான் சமீபத்தில் தேவர்கோன் தலைநகருக்குச் சென்றிருந்ததாகவும், அங்கே அர்ச்சுனன் நலமாக இருப்பதாகவும், அங்கே அவன் பெருமை பரவியிருப்பதாகவும், விரைவில் அவன் பாண்டவர்களைச் சந்திக்க மண்ணுலகிற்கு வருவான் என்றும் குபேரன் தருமனிடம் கூறினான். தருமன் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான். தருமன், வீமன், கடோற்கசன் ஆகிய மூவரும் குபேரனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். குபேரன் அவர்களுக்குப் பல உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாக வழங்கினான்.
“விரைவில் உங்கள் சகோதரன் அர்ச்சுனன் உங்களோடு வந்து சேருவான். அதன் பின் உங்களுக்கிருந்த தீமைகளெல்லாம் அழிந்து நற்காலம் பிறக்கும். நீங்கள் ஐந்து பேரும் நலமாக வாழ்வீர்கள்” என்று குபேரன் வாழ்த்தினான். அவர்கள் மண்ணுலகை வந்தடைந்தனர். குபேரன் கூறியபடியே சில நாட்களில் அர்ச்சுனனும் வானுலகிலிருந்து அவர்களை வந்தடைந்தான். ஐவரும் ஒன்று கூடினர். கானகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையேயானாலும் எல்லோருமாக ஒன்று கூடி வாழ்கின்ற அந்த வாழ்கையில் தீமைகள் யாவும் அழிந்து நன்மைகள் யாவும் பெருகி விட்டாற் போன்ற ஒருவகை அமைதி நிலைத்திருந்தது.