மகாபாரதம்-அறத்தின் குரல்/1. கர்ணன் தலைமையில்

விக்கிமூலம் இலிருந்து

கர்ண பருவம்

1. கர்ணன் தலைமையில்

யானைமேல் வீற்றிருந்தபடியே காசியரசன் வீமனையும், வீமன் காசியரசனையும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். வீமன் வில்லை வளைத்து அம்புகளை ஏவினான். காசியரசனால் அம்புகளைத் தடுக்க முடியவில்லை. வீமன் மேல் கோபம் கொண்ட அவன் ஒரு வேலாயுதத்தை எடுத்து வீமன் மேல் எறிந்தான். ஆனால் வீமனோ அந்த வேலையும் தன் அம்புகளால் முறித்துக் கீழே தள்ளி விட்டான். தன் வேல் முறிவதைக் கண்டு திகைத்த காசியரசன் அடுத்து வீமனுடைய அம்புகள் தன் யானையின் உடலில் தைப்பதையும் கண்டான். வீமனுடைய அம்புகளால் காசியரசனின் யானை உடலெங்கும் அம்புதுளைக்கப் பெற்று வலிதாங்க முடியாமல் அலறிக்கொண்டே கீழே விழுந்தது. காசியரசன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு வீமனை எதிர்த்தான். உடனே வீமனும் தன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு காசியரசனை, எதிர்த்துப் போர் புரிந்தான். வீமனுடைய கதாயுதம் காசியரசனைப் புடைத்த போதெல்லாம் அவன் மிரண்டு அலறினான். அவன் வஜ்ராயுதம் வீமனை ஒரு முறைகூடத் தாக்க முடியவில்லை. இறுதியில் வீமன் தன் கதாயுதத்தினாலேயே காசியரசனை அடித்துக் கொன்றான். காசியரசன் போர்க்களத்தில் இறந்து விழுந்ததும் அவனுடைய படைகள் சிதறி ஓடிவிட்டன. அதைப் பார்த்த படைத் தலைவனாகிய கர்ணன் அப்படைகளுக்கு ஆறுதல் கூறி அவைகளை மீண்டும் ஒன்று திரட்டிப் போருக்கு அனுப்பினான். மீண்டும் போர்க்களத்தில் முறையான போர் ஆரம்பித்து நடந்தது. இரு திறத்தாரும் உயிரைத் துச்சமாக மதித்துப் போர் இட்டனர். கர்ணனுக்கும் நகுல சகாதேவர்களுக்கும் நேரடிப்போர் நடந்தது. நகுலன் வசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல குதிரைப் படைகள் இருந்தன. அவன் விருப்பத்துக்குக் கேடு விளைவிக்காமல் அறிவுள்ள மனிதர்களைப் போலவே கட்டளைக்கு அடங்கிப் போரைச் செய்தன அந்தக் குதிரைகள். போர் மேலும் மேலும் வளர்ந்த போது நகுலனும் கர்ணனும் ஒருவருக்கொருவர் நேர் எதிரெதிரே நின்று போரைச் செய்தார்கள். கர்ணன் வயதானவன். அதோடு முரட்டுத்தனமாகப் போர் செய்வதற்குப் பழகியவன். நகுலனோ இளையவன். போர் அனுபவம் குறைந்தவன். எனவே நகுலன் கர்ணனைச் சமாளிக்க முடியாமல் அடிக்கடி தளர்ச்சி அடைந்தான். நகுலன் தளர்ந்தபோதெல்லாம் கர்ணன் கை ஓங்கியது. கர்ணன் நினைத்திருந்தால் நகுலனை ஒரேயொரு அம்பினால் கொன்று தீர்த்திருக்க முடியும். ஆனால் கர்ணன் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவன் குந்தி தேவிக்குக் கொடுத்திருந்த வாக்குத்தான். ‘உன் மக்களில் அர்ச்சுனனைத் தவிர வேறெவரையும் கொல்ல முயல்வதில்லை’ என்று முன்பு குந்திக்கு வாக்குக் கொடுத்திருந்தான் அவன். நகுலனுடன் துணைக்கு வந்திருந்த விடதரன், மகதராசன் முதலியவர்களையெல்லாம் அஞ்சாமல் கொன்ற கர்ணன் நகுலனை மட்டும் அவ்வாறு செய்ய நினைக்கவும் இல்லை. நகுலன் விரைவில் கர்ணனுக்குத் தோற்றுவிட்டான். மேலும் இளைஞனாகிய நகுலனைத் துன்புறுத்த விரும்பாத கர்ணன் தன் படைகளையும் தேரையும் அர்ச்சுனன் இருந்த பக்கமாகத் திருப்பி அவனை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினான்.

தன் தம்பியாகிய நகுலனைத் தோல்வியுறச் செய்து விட்டு வருகிறான் கர்ணன் என்று தெரிந்ததும் அர்ச்சுனன் அவன் மேல் கோபமடைந்தான். சரிசமான வீரமுடைய அவர்கள் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகளில் இரண்டு கர்ணனுடைய மார்புக் கவசத்தைப் பிளந்து கொண்டு தைத்தது. அம்புகள் தைத்த வலி தாங்காமல் வேதனையுற்ற கர்ணன் கை சோர்ந்து பேசாமல் நின்று விட்டான். அவன் மார்பிலிருந்து இரத்தம் ஒழுகி வடிந்து கொண்டிருந்தது. அவனுடைய வேதனை நிறைந்த நிலையை உணர்ந்த அர்ச்சுனன் அவனோடு மேலும் போர் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டான். சிறிது நேரம் தங்கி நின்ற கர்ணன் பின் மீண்டும் பழைய துணிவை அடைந்து சேர மன்னனோடு போரிட்டான்! போர்க்களத்தின் பிற பகுதிகளிலும் இருசாராருக்கும் போர் விறுவிறுப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது. சகுனி பாண்டிய மன்னனோடும், சகாதேவன் துச்சாதனனோடும் அசுவத்தாமன் வீமனோடும், கேகய மன்னன் சுகுதகீர்த்தியோடும், கிருத வன்மன் சிகண்டியோடும், துட்டத்துய்ம்மன் கிருபாச்சாரியனோடும் போர் புரிந்து கொண்டிருந்தார்கள். போரில் அழிந்தவர்களின் சடலங்களும் அறுபட்ட கைகால் உறுப்புக்களும் குருதியும் சிந்திக் கிடந்ததனால் அங்கங்கே கவந்தங்களும் கூளிப் பேய்களும் கூடித் தென்பட்டன. வெற்றிக்குத் தோல்வியா, தோல்விக்கு வெற்றியா என்று காணமுடியாதபடி இருந்த அந்தப் போர்க்களத்தின் நிலை பயங்கரமாக ஒழுங்கற்ற சோகத்தின் உருவத்தில் மூழ்கிக் கிடந்தது. அர்ச்சுனன் கைவில்லினால் சாவதற்கென்றே வரம் பெற்றவர்களைப் போல் எதிரிகள் மடிந்து கொண்டிருந்தார்கள். துரியோதனனுக்கு மிகவும் வேண்டிய வீரர்கள் பலரை விண்ணுலகுக்கு அனுப்பினான் அவன். மீதமிருந்தவர்கள் பயந்து துரியோதனன் இருந்த இடத்தை நோக்கி ஓடினர். தன்னுடைய எல்லாப் படைவீரர்களையும் அர்ச்சுனன் துரத்தி அடிப்பதைப் பார்த்த துரியோதனன், தானே ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு அவனை எதிர்க்க முன் வந்தான். ஆனால் துரியோதனனும் அவன் திரட்டிக் கொண்டு வந்த படைகளும் அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைவதற்குள்ளேயே நடுவில் தருமன் வந்து மடக்கிக் கொண்டான்.

தருமனுக்கும் துரியோதனனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் கடுமையாகப் போர் புரிந்தார்கள். ஒருவர் மேல் ஒருவர் ஆத்திரத்தோடு அம்புகளை ஏவிக்கொண்டார்கள். இருவர் படைகளிலும் குதிரைகளும், யானைகளும், காலட்களும் கணக்கின்றி இறந்து விழுந்தனர். போர்க்களம் ‘இது இரத்தசமுத்திரமோ?’ எண்றெண்ணி அஞ்சும் அளவிற்குப் பயங்கரமாக மாறிவிட்டது. தருமன் துரியோதனனுடைய வில்லை அறுத்துத் தேரை அச்சு முறிந்து விழச் செய்தான். தேரோட்டியையும் கொன்று விட்டான். துரியோதனன் கையில் ஆயுதமின்றி நிற்கத் தேர் இன்றித் தரையில் அனாதரவாக நின்றான். அங்கே இங்கே ஓடிவிட முடியாமல் தருமனும் தருமனுடைய படை

“துரியோதனா! வெறும் சதுரங்கக் காய்களை வைத்துக் கொண்டு விளையாடும் சூது விளையாட்டு அன்று இது. இங்கே சூழ்ச்சியும் வஞ்சகமும் பலிக்க மாட்டா. உண்மையான வீரம் இருந்தால்தான் இங்கே வெற்றி பெற முடியும். உன்னைப் போன்றவர்களுக்கு உண்மையான வீரம் இருக்குமென்று நான் நம்பவில்லை. இதோ அனாதையைப் போல் எனக்கு முன்னால் நிற்கிறாய். நான் நினைத்தால் ஒரேயொரு அம்பினால் உன்னைக் கொன்றுவிட முடியும். ஆனால் நான் உன்னைக் கொன்றுவிட்டால் ஏற்கெனவே உன்னைக் கொல்வதாக என் தம்பி வீமன் செய்திருக்கும் சபதம் வீணாகப் போய்விடும். அதற்காகத்தான் இப்போது உன்னை உயிருடன் விடுகிறேன். போ! ஓடிப்போய் விடு. இனி இந்தப் போர்க்களத்தில் என் முகத்தில் விழிக்காதே,’ தருமன் கூறியதைக் கேட்காமல் திரும்பவும் ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டு படைகளுடன் அவனை எதிர்க்க வந்தான் துரியோதனன். தருமனோ தொலைவிலிருந்தே அம்புகளைக் சரமாரியாகத் தொடுத்துத் துரியோதனனையும், அவன் படைகளையும் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்து விட்டான். அந்தச் சமயத்தில் துரியோதனன் மட்டும் ஓடாமல் நின்றிருந்தால் தருமனுடைய அம்புகள் நிச்சயம் அவன் உயிரைப் பறித்திருக்கும்.

தருமனிடம் தோற்றுப் படைகளோடு பதறியடித்துக் கொண்டு ஓடிவரும் துரியோதனனைக் கர்ணன் கண்டான்! உள்ளூர அவனுக்கு வெட்கமாக இருந்தது. “துரியோதனா பயப்படாதே இப்போது நானும் கூட வருகிறேன். நாம் இருவருமாகச் சேர்ந்து கொண்டு தருமனை எதிர்த்து அழிப்போம்” - என்று கூறி அவனையும் அழைத்துக்கொண்டு தருமனை எதிர்க்கச் சென்றான் கர்ணன். அப்போது அசுவத்தாமனும் அங்கு வந்து சேர்ந்தான். “என் தந்தை சாவதற்குக் காரணமாக இருந்த அந்தத் தருமனை எதிர்ப்பதற்கு நானும் உங்களுடன் துணைக்கு வருகிறேன்” -என்று அவனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இவர்கள் மூன்று பேரும், இவர்களுடைய படைகளும் போதாதென்று கிருபாச்சாரியனும், சல்லியனும், வேறு தங்கள் படைகளோடு இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். ஆகவே, துரியோதனன், கர்ணன், அசுவத் தாமன், கிருபாச்சாரியன், சல்லியன், என்ற ஐந்து பேர்களும் சேர்ந்து கடல் போன்ற படைகளுடனே திரண்டு சென்று தருமனை வளைத்துக் கொண்டு போரிடுவதற்கு முற்பட்டார்கள், தருமனுக்கு ஏற்பட்ட இந்த அபாயத்தை அர்ச்சுனன் முதலியவர்கள் கண்டனர். உடனே அவர்களும் படைகளோடு ஒன்று திரண்டு தருமருக்கு உதவியாக வந்து நின்று கொண்டார்கள். நல்ல சமயத்தில் தருமன் காப்பற்றப்பட்டான்.

தருமனைச் சுலபமாக வென்றுவிடலாம் என்றெண்ணிக் கொண்டு வந்திருந்த துரியோதனன், கர்ணன் முதலியவர்கள் அர்ச்சுனன் உதவிக்கு வந்ததைக் கண்டதும் திடுக்கிட்டனர். இருவருக்கும் போர் ஆரம்பமாயிற்று. நீண்ட நேரம் போர் நடந்த பிறகு துரியோதனனுடைய படைவீரர்கள் மிரண்டு ஓடத் தலைப்பட்டனர். படைகள் ஓடிவிட்டதும் கர்ணன் முதலியவர்களும் புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர். தருமனின் வெற்றி சத்தியத்தின் வெற்றியாக நின்றது. அந்த நிலையில் பதினாறாவது நாள் போர் நிகழ்ச்சிகள் முடிவதற்குரிய நேரமும் வந்தது. ஆகையால் அன்றைய போர் நிகழ்ச்சிகள் அவ்வளவில் நின்றன. பதினேழாம் நாள் காலை விடிந்த பொழுது வெறும் பொழுதாக விடியவில்லை. ஆத்திரம் நிறைந்த பொழுதாக விடிந்தது. முதல் நாள் அடைந்த தோல்வியை எண்ணிக் கொதிக்கும் உள்ளத்தோடு மறுநாள் போருக்குத் தயாரானார்கள் கௌரவர்கள். பாண்டவர்களோ, அன்றையப் போரிலும் வெற்றியைத் தாங்களே அடைய வேண்டுமென்று ஆர்வத்தோடு புறப்பட்டிருந்தார்கள். கர்ணன் அன்று போருக்குப் புறப்பட்ட போது மிக அற்புதமான அலங்காரத்துடன் கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளித்தான். நிர்மலமான ஒளிநிறைந்த அவன் முகம் காண்போரைக் காந்தம் போலக் கவர்ந்து இழுத்தது. அணையப் போகிற தீபம் சுடர்குதித்து எரிகின்ற மாதிரி விளங்கிற்று அந்த அழகு. அன்று அந்தப் பதினேழாவது நாள் அவனுடைய வாழ்வை நிர்ணயிக்க வேண்டிய நாள். மனத்தினுள் அன்று காரணம் புரியாத ஒருவிதக் கலக்கம் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு முடிவினால் எங்கோ ஓர் இடத்திற்குப் போகப் போவது போன்ற கலக்கம். அது தானாகவே அவனைப் பீடித்தது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தன் அறிவையெல்லாம் ஒன்று திரட்ட முயன்றான் அவன். முடியவில்லை. தயங்கும் உள்ளமும் தயங்காத கால்களுமாக அவன் பதினேழாவது நாள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டான்.

துரியோதனனுடைய மனத்தில் கர்ணனுக்கு ஏற்பட்டிருந்ததைப் போலக் கலக்கம் எதுவும் ஏற்படாவிட்டாலும் போரில் யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி என்று உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்திருந்தது. இந்த மாபெரும் போரில் எத்தனையோ பல உறவினர்களைக் கொன்றான். அதே போலப் பாண்டவர்கள் வில்லுக்குப் பலரைப் பலிகொடுக்கவும் செய்தான். இவ்வளவும் செய்த பின்னும் வெற்றி இதுவரை அவனுக்குக் கிட்டவில்லை. இது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது அவனுக்கு. துரியோதனன் கர்ணன், இவர்கள் இருவர் மனத்தில் மட்டுமில்லை, ஒவ்வொரு கெளரவ வீரனிடமும் அந்திமகாலத்தின் நம்பிக்கையற்ற ஆசைச் சிதறல்கள் தெளிவில்லாத முறையில் குமுறிக் கொண்டிருந்தன. அந்தப் பதினாறு நாட்களாக ஏற்படாத குமுறல் அன்றைக்கு மட்டும் ஏற்படுவானேன்? முடிவு நெருங்கும் போது ஆற்றமாட்டாத இதயத்தின் அவலம் அப்படித்தான் குமுறுமோ, என்னவோ? துட்டத்துய்ம்மன், தருமன், வீமன், கண்ணன், அர்ச்சுனன் முதலியவர்களும் போருக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்களுக்கு எதிரே நின்று கொண்டிருந்த கெளரவ சேனையிலுள்ள ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு அரசனும் முதல்நாள் புறமுதுகு காட்டி அஞ்சி ஓடியவர்கள் தாம். ஆனாலும் வெட்கமின்றி மீண்டும் போருக்கு வந்திருக்கிறார்கள்.

“கண்ணா! உன்னை ஒன்று கேட்கிறேன், இந்த உலகத்தில் அறிய முடியாததும் ஏதாவது இருக்கிறதா? இந்தப் போர் இப்படியே எவ்வளவு நாளைக்குத்தான் நடந்து கொண்டிருக்கும்? என்றாவது ஒருநாள் முடிவு தெரிந்துதானே ஆகவேண்டும் இருபக்கமும் பதினாறு நாட்களாக எவ்வளவு உயிர்கள் மடிந்திருக்கும்? கர்ணனுடைய முடிவு எப்போதோ?” என்று தருமன் கண்ணனை நோக்கிக் கேட்டான். தருமனுடைய கேள்வியில் இலட்சியம் நிறை வேறத் தாமதமாகும் போது ஏற்படும் தயக்கமும் ஏக்கமும் தொனித்தன்.

“தளராதே தருமா! உன் ஆசை நிறைவேறும் காலம் நெருங்கி வந்து கொண்டுதான் இருக்கிறது. நாளைக்கு மறுநாள் அஸ்தினாபுரியின் அரியணையில் பாண்டவர்களின் ஏகப் பிரிதிநிதியாக நீ அரசு வீற்றிருக்கப் போகிறாய். இன்று போர் முடிவதற்குள் கர்ணனின் காலமும் முடிந்து விடும். அர்ச்சுனன் கைகளால் கர்ணனுக்குச் சாவு நேரும். நாளைக்குப் போர் முடிவதற்குள் வீமன் கைகளால் துரியோதனனுக்குச் சாவு நேரும்” கண்ணன் சிரித்துக் கொண்டே கூறினான். வெறும் சிரிப்பா அது? காலத்தையே வென்று கபளீகரம் செய்யும் சிரிப்பு அப்போது கண்ணன் சிரித்த சிரிப்பு. கண்ணனின் பேச்சும், சிரிப்பும், தருமனுக்கு நிறைய ஆறுதலை அளித்தன. நன்றிப் பெருக்கால் தருமன் கண்ணனைக் கைகூப்பி வணங்கினான். தழுதழுக்கும் குரலில் அவனைப் பாராட்டினான்.

“மாயாவதாரனே! எங்களையும் எங்கள் நலனையும் காப்பாற்றுவதற்காகவே நீ பிறந்தாய் போலிருக்கிறது. இன்று வரை நீ எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளை எவ்வாறு அளவிட்டு எண்ணுவது? கங்கை நதியில் துரியோதனன் நட்டிருந்த கழுக்களிலே பாய்ந்து செத்திருக்கவேண்டிய எங்களை அன்று நீதான் காப்பாற்றினாய். எங்கள் மானத்தைப் பறித்தது போதாமல், அவை நடுவில் திரெளபதியின் மானத்தைப் பறிக்க முற்பட்ட நேரத்தில் சத்திய வடிவான தோன்றாத்துணையாக வந்து காப்பாற் றினாய் துருவாச முனிவன் துரியோதனனால் ஏவப்பட்டுப் பசி வெறியோடு எங்களைச் சோதிக்க வந்தான். அட்சய பாத்திரத்திலிருந்து பருக்கையை உண்டு துருவாசரைப் பசி தணிவித்து எங்களை வாழ்த்திவிட்டுச் செல்லுமாறு செய்தாய். எல்லாரையும் யாவற்றையும் ஏவி வாழும் நீ என் ஏவலை மேற்கொண்டு கெளரவர்களிடம் எனக்காகத் தூது சென்றாய் விதுரன் எங்களுக்கு எதிரியாகாமல் வில்லை முறித்தெறிந்துவிட்டு யாத்திரை போகுமாறு ஏற்பாடு செய்ததும் நீதான் . உனது மாயங்களின் மகிமையை அளவிட நான் யார்? இந்தப் போர் தொடங்கியதிலிருந்து ஒவ்வோர் விநாடியும் நீ எங்களுக்குச் செய்திருக்கும். உதவிகளுக்கு நன்றி செலுத்த நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் காணாது” - தருமன் சாஷ்டாங்கமாகக் கண்ணனுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். கண்ணன் தருமனை அன்போடு எழுப்பி மார்புறத் தழுவிக் கொண்டான்.

“பாண்டவர்களாகிய உங்கள் ஐவரையும் காப்பாற்றி, வாழ்விப்பதற்குத் தானே நான் வாழ்கிறேன். உங்களுடைய சகல சுக துக்கங்களையும் நான் ஒருவனே தாங்குகிறேன். கவலைப்படாதீர்கள்” என்று தருமனுக்குப் பதில் கூறிவிட்டுக் கண்ணன் துட்டத்துய்ம்மன் பக்கம் திரும்பினான்.

“துட்டத்துய்ம்மா! இதுவரை தருமனும் நானுமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டோம். நீயும் மற்றவர்களும் கூட அதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டீர்கள். போருக்கு நேரமாகிவிட்டது. அதோ எதிரிகளைப் பார்! அவர்கள் தயாராகிவிட்டார்கள். நீயும் படைகளை அணிவகுத்து நிறுத்து” துட்டத்துய்ம்மன் உடனே படைகளை அணிவகுத்து வரிசை வரிசையாக நிறுத்தினான். தருமன் முதலியவர்களும் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டனர். எதிர்த் தரப்பில் கர்ணன் சல்லியனைத் தன்னுடைய தேர்ப்பாகனாக அமர்த்திக் கொண்டான். அர்ச்சுனனுக்குச் சூழ்ச்சியும் வல்லமையும் மிகுந்த கண்ணன் தேரோட்டியாக அமைந்திருப்பதனால் தனக்கும் அத்தகைய தேர்ப்பாகன் ஒருவன் வேண்டுமென்று துரியோதனனிடம் அனுமதி பெற்றே சல்லியனைத் தேர்ந்தெடுத்து நியமித்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தால்தான் உன்னிடம் நான் பெற்றிருக்கும் உதவிகளுக்கு நன்றி செலுத்திய திருப்தி எனக்கு ஏற்படும். துரியோதனா! நீ துணிவு கொள். அஞ்சாதே! இந்த கர்ணன் உயிருடன் இருப்பதற்குள் சகல சாம்ராஜ்யங்களையும் வென்று உன் காலடியில் குவிக்கப் போகிறான். அப்படிச் செய்யாவிட்டால் அவனுடைய செஞ்சோற்றுக்கடன் எப்படிக் கழிவது?” - என்று கர்ணன் பெருமையாக வீர மொழிகளைப் பேசிக் கொண்டான்.