உள்ளடக்கத்துக்குச் செல்

மகாபாரதம்-அறத்தின் குரல்/9. இரவிலும் போர்

விக்கிமூலம் இலிருந்து
9. இரவிலும் போர்

‘மாயமா? மந்திரமா? சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்தபின் திடீரென்று மீண்டும் சூரியன் தோன்றி ஒளிவந்தது எப்படி? இது என்ன சூழ்ச்சி? யார் செய்த சூழ்ச்சி?’ துரியோதனாதியர் திகைத்தனர். சயத்திரதனைக் கொல்வதற்காகவே பாண்டவர்கள் கண்ணனின் உதவியோடு இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்க வேண்டுமென்று துரியோதனன் அனுமானித்தான். “கண்ணா! உன் சூழ்ச்சி எனக்கு ஒன்றும் தெரியாதென்றா நினைத்துவிட்டாய்? உன்னுடைய சக்கராயுதத்தினால் சூரியனைத் தற்காலிகமாக மறைத்து விட்டாய். நாங்கள் மோசம் போனோம். சயத்திரதனைப் பறிகொடுத்தோம். இப்படியெல்லாம் வஞ்சகம் செய்கிறீர்களே, நீங்கள் உருப்படுவீர்களா? இது அநியாயம்! பெரிய பாதகம்” -என்று கண்ணனையும் பாண்டவர்களையும் பார்த்துக் கூப்பாடு போட்டான் துரியோதனன்.

“நீங்கள் செய்திருக்கும் சூழ்ச்சிக்கு இது ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. நியாயத்தையும் அநியாயத்தையும் தீர்மானிப்பதற்கு உன் போன்றவர்களா ஆட்கள்? அவை நல்லவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்லவா?” என்று அவனுக்குக் கண்ணன் சுடச் சுடப் பதில் கூறினான்.

“உங்கள் வஞ்சனைப்படியே இன்னும் சில நாழிகைப் பொழுது எஞ்சியிருக்கிறதல்லவா? இதற்குள் பாண்டவர்களாகிய உங்கள் ஐந்து பேரையும் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்புகிறேன். உங்கள் குலத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறேன். இதை என்னால் செய்ய முடியாது போனால் நானே இறந்து விடுகிறேன்” -என்று ஆத்திரமாகக் கூறிக்கொண்டே தன் படைகளை ஒன்று சேர்த்தான் துரியோதனன். அடுத்த விநாடியில் அவனுடைய படைகளும் அவனும் பாண்டவர்களை வளைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். பாண்டவர்களும் எதிர்த்துத் தாக்கினர். ஆயுதமில்லாமலே வீமன் துவந்த யுத்தம் செய்தான். அவனுடைய இரும்புப் பிடியில் சிக்கித் துரியோதனன் தம்பியர்கள் இருவர் உயிரிழந்தனர். வீமனின் செயலால் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அசுவத்தாமன் கோபம் கொண்டான். அவன் உடனே கடோற்கசனின் மகனை அடித்துக் கொன்றான். இதனால் ஆத்திரமடைந்த கடோற்கசன் வெகுண்டு அசுவத்தாமன் மேற் பாய்ந்தான். அசுவத்தாமனுக்கும் கடோற்கசனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போர் செய்து கொண்டிருக்கும் சமயத்திலேயே நடுவில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கடோற்கசனை ஓங்கி அடித்துக் கீழே தள்ளி விட்டான் அசுவத்தாமன். அப்படியே அவன் கீழே இருந்து எழுந்திருப்பதற்குள் அவனைக் கொன்று விடுமாறு கர்ணனின் காதருகில் இரகசியமாகக் கூறி அவனை ஏவினான் துரியோதனன். ஆனால் துரியோதனனுடைய கருத்துக்குக் கர்ணன் இணங்கவில்லை.

“அடிப்பட்டுத் தளர்ந்து தரையில் விழுந்திருப்பவனை வஞ்சகமாகக் கொல்வது போர் முறை ஆகாது” -என்று கூறிய பேசாமல் இருந்துவிட்டான். கர்ணன் தனது வார்த்தைக்கு இணங்காமற் போகவே துரியோதனன் முகம் வாடித் தொங்கிவிட்டது.

“துரியோதனா! கலங்காதே. இன்று பொழுது சாய்வதற்குள் அர்ச்சுனனைக் கொன்று தொலைக்கிறேன் பார்” - என்று ஜம்பமாகக் கூறினான் கர்ணன். அப்போது அருகில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருபாச்சாரியார், “கர்ணா! ஏன் இப்படி வீண் ஜம்பம் பேசுகிறாய்? உன்னால் அர்ச்சுனனைக் கொல்ல முடியுமா? நடக்க முடியாததை ஏன் பேசுகிறாய்?” என்று உடனே அவனைக் கேட்டார். கர்ணன் அவருக்குப் பதில் சொல்லவில்லை. அர்ச்சுனனை எதிர்த்துப் போர் செய்வதற்குப் போய்விட்டான். அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் நடந்த போரில் கர்ணன் தோற்றான். அந்தச் சமயத்தில் உண்மையாகவே சூரியன் அஸ்தமித்தான். எனவே இருசாராரும் போரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் துரியோதனனுக்கு அன்று இருட்டிய பின்பும் கூடப் போர் வெறி தணியவில்லை.

“ஏ! கண்ணா! சற்று நேரத்துக்கு முன் நீ பகலை இரவாக மாற்றிச் சூது புரிந்தாய். இப்போது நான் இரவைப் பகலாக மாற்றித் தொடர்ந்து நிறுத்தாமல் போர் செய்யப் போவதைப் பார்” என்று கூறிக்கொண்டே துரியோதனன் நூற்றுக்கணக்கான தப்பந்தங்களை ஏற்றிக் கொண்டு வருமாறு தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டான். துரியோதனன் ஏவற்படி அவன் படைகள் தீப்பந்தங்களைக் கொளுத்தி ஒளி உண்டாக்கின. தொடர்ந்து போரிடத் தயாராக நின்றன. எதிரிகள் தீப்பந்தங்களின் உதவியால் இரவிலும் போரிட்ட முற்படுவதைத் தருமன் கண்டான். உடனே, ‘நீங்களும் தீப்பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு தொடர்ந்து போரிடத் தயாராகுங்கள்“ - என்று அவனும் தன் படைகளுக்குக் கட்டளையிட்டான். போர் வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக, இரவிலும் அன்று போர் நடந்தது. தீப்பந்தங்களின் உதவியால் இருதரப்பினரும் ஆத்திரமும் சினமும் கொண்டு போரிட்டனர். அர்ச்சுனனுக்கும் . கர்ணனுக்கும் தொடர்ந்து நடந்த போரில் கர்ணன் இருமுறை தோற்றோடினான். கிருதவன்மனுக்கும் தருமனுக்கும் நேரடியாக நடந்த போரில் தருமன் வென்றான். சல்லியனைச் சதாநீகனும், அசுவத்தாமனைக் கடோற்கசனும், துரோணரைத் துட்டத்துய்ம்மனும் வென்றனர். இந்த வெற்றிகள் எல்லாம் பாண்டவர் பக்கமே நிகழ்ந்ததைக் கண்டு துரியோதனாதியர் மனங்குமுறினர். துரியோதனருக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த அலாயுதன் என்னும் அரக்கன் வீமனை எதிர்ப்பதற்காகத் தனது படைகளோடு புறப்பட்டு விட்டான்.

“துரியோதனருக்கு வெற்றியுண்டாக்குவதற்காகவே நான் வருகிறேன். உங்கள் படைகளை ஒரு நொடியில் புறமுதுகு காட்டச் செய்யவில்லையானால் என் பெயர் அலாயுதன் இல்லை” - என்று வீரம் பேசிக்கொண்டே களத்திற்குள் நுழைந்தான் அந்த அரக்கன். வீமனுக்கும் அவனுக்கும் போர் தொடங்கிற்று. வாய் பேசிய அளவுக்குக் கைபேசவில்லை அலாயுத அரக்கனுக்கு. வீமன் போர் புரிந்த வேகத்தில் அலாயுதனுடைய தேர் ஒடிந்தது; வில்லும் ஒடிந்தது, அம்பறாத்தூணி தூள் தூளாயிற்று. சினம் கொண்ட அந்த அரக்கன் கீழே கிடந்த பெரிய பெரிய கற்களை எடுத்து வீமன் மேல் வீசி எறிந்தான், வீமன் தன் கையிலிருந்த பெரிய கதாயுதத்தால் அந்தக் கற்களைத் தடுத்துக் கீழே தள்ளினான். தன் தந்தை அலாயுதனோடு போரிடுவதைத் தொலைவிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த கடோற்க்சன் வேகமாக ஓடி வந்தான். “நீங்கள் பேசாமல் ஒதுங்கி இருங்கள். இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்” - என்று வீமனிடம் கூறி விட்டு அலாயுதனை எதிர்க்க முற்பட்டான் கடோற்கசன். அலாயுதனுக்கும் கடோற்கசனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் அரக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களாகையினால் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைக்காமல் தொடர்ந்து போரைச் செய்யலாயினர். முதலில் அலாயுதனுக்கு உதவியாக வந்திருந்த வீரர்கள் ஒவ்வொருவராக எமனுலகு சென்றனர். அலாயுதன் ஒருவன் தான் எஞ்சியிருந்தான். கடோற்கசன் போர்க்களத்தில் மாயாஜாலப் போர் செய்தான். தான் ஒருவனே திடீர் திடீரென்று பலப் பல உருவங்களாக மாறிக்கொண்டு, எதிரி திணறும்படி போர் செய்தான். கடைசியாக மீதமிருந்த அலாயுத அரக்கனையும் கொன்று தீர்த்தபின் கடோற்கசன் வெற்றி முழக்கம் செய்தான். இதன் பின்பும் அவனை எதிர்க்கத் துரியோதனாதியர் படைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. சிறிதும் மலைக்காமல் அந்தப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டான். விநாடிக்கு விநாடி எண்ணிலடங்காத வீரர்கள் அவன் கையில் அகப்பட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள். தன் படைகளின் நடுவே புகுந்து அவற்றைக் கடோற்கசன் துவம்சம் செய்து கொண்டிருப்பதைக் கண்ட துரியோதனன் மனம் பதைத்தான். இந்தக் கடோற்க்சனை இப்படியே விட்டு விட்டால் நம்முடைய படைகள் எல்லாவற்றையும் இருந்த இடம் தெரியாமல் செய்து விடுவான் போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டே துரியோதனன் கர்ணனை அருகில் அழைத்தான்.

“கர்ணா! இந்தக் கடோற்கசனை இவ்விநாடியிலேயே அழித்துத் தொலைக்காவிட்டால் நமக்குத்தான் ஆபத்து. நீ இந்திரனிடம் வேண்டிப் பெற்றுள்ள சக்தி வாய்ந்த வேலாயுதத்தை அவன் மேலே எறிந்து அவனை இப்போதே கொன்றுவிடு” -என்று காதருகில் இரகசியமாகக் கர்ணனிடம் துரியோதனன் கூறினான். இதைக் கேட்ட கர்ணன் உடனே இதற்குச் சம்மதிக்கவில்லை. கொஞ்சம் தயங்கினான்.

“கர்ணா! ஏன் தயங்குகிறாய்? இப்போது இரவு நேரம். இந்த இருட்டில்தான் நம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ள முடியும். இப்படியே விட்டுவிட்டால் பொழுது விடிவதற்குள் கடோற்கசன் நம்முடைய இனத்தை முழுமையாகத் தொலைத்து விடுவானே!”

“துரியோதனா! இவன் அரக்கன். இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும். அப்போது இவனுடைய மாயாஜாலங்கள் பலிக்கமாட்டா. இவன் பொருட்டுச் சக்தி வாய்ந்த இந்த வேலை உபயோகிப்பது வீண் செயல். இந்திரனிடமிருந்து பெற்றுள்ள இந்த வேலை அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே வைத்துக்கொண்டிருக்கிறேன். இந்தச் சிறியவனின் உயிரைப் போக்குவதற்கு அவ்வளவு பெரிய ஆயுதம் வேண்டாம். சாதாரணமான அம்பு ஒன்றே போதும்.” - கர்ணன் இங்ஙனம் பலவாறு மறுத்தும் துரியோதனன் கேட்கவில்லை. எப்படியும் இந்திரனால் கொடுக்கப்பட்ட வேலைக் கடோற்க்சன் மேல் எறிந்து அவனைக் கொன்றேயாக வேண்டுமென்று வற்புறுத்தினான். கர்ணனும் அவனுடைய பிடிவாதத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. துரியோதனின் வேண்டுகோளை மறுக்கமுடியாமல் தனக்கு இந்திரன் கொடுத்த வேலை எடுத்துக் கடோற்கசனின் மார்பைக் குறிவைத்து எறிந்தான் கர்ணன். வலிமை வாய்ந்த அந்த வேல் கடோற்கசனுடைய மார்பைப் பிளந்து கீழே தள்ளியது. பயங்கரமாக அலறிக் கொண்டு மலைபுரண்டு விழுவது போல் கீழே விழுந்தான் அவன். அவனைக் கொன்று முடித்த பெருமிதத்தோடு அந்த வேல் இந்திரனிடம் சென்றது. கீழே விழுந்து துடிதுடித்த கடோற்கசனின் உடல் சிறிது நேரம் கழித்து உயிர் நீங்கி வெற்றுடம்பாகக் கிடந்தது. கடோற்கசன் இறந்த செய்தி பாண்டவர்களுக்கு எட்டியது. அவர்கள் அவன் மரணத்துக்குப் பெரிதும் வருந்திக் கண்ணீர் சிந்தினர். சர்வேசுவரனின் அம்சமாகிய கண்ணபிரானுக்கு மட்டும் ஒரே ஒரு வகையில் திருப்தி ஏற்பட்டது.

‘நல்லவேளை! கர்ணன் இந்திரனிடம் பெற்று வைத்துக் கொண்டிருந்த அந்த வேல் கடோற்கசனோடு போய் விட்டது. இல்லையானால் கர்ணன் அதை அர்ச்சுனனைக் கொல்வதற்காக உபயோகப்படுத்தி இருப்பான்” என்று கூறிப் பாண்டவர்களைத் தேற்றினான் கண்ணன். கடோற்கசன் இறக்கும்போதே இரவு வெகு நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அவன் இறந்ததும் சிறிது நேரம் இருதரப்புப் படைகளும் அமைதியாக இருந்தன. பின்பு மீண்டும் போர் தொடங்கியது. கடுமையாக நிகழ்ந்த அந்தப் போரில் பாண்டவர்கள் பக்கத்தைச் சேர்ந்த துருபத மன்னனையும், விராடராசனையும் துரோணன் கொன்று விட்டான். துருபத மன்னனின் புதல்வனும் மகாவீரனுமாகிய துட்டத்துய்ம்மன் துரோணரைப் பழிவாங்கக் கருதினான். ‘நாளைப் போரில் எப்படியும் துரோணரைக் கொல்லாமல் விடமாட்டேன்’ - என்று சபதம் செய்தான் அவன். ‘பின்பு அதே இரவில் தொடர்ந்து நடந்த போரில் அர்ச்சுனன் துரோணரை ஒரு முறை வென்றான். துரோணர் அவனுக்குத் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடினார். பாண்டவர்களின் உற்ற நண்பனான சாத்தகி துரியோதனனைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினான். அவ்வளவில் கிழக்கு வெளுத்து விட்டது! பொழுது புலரும் நேரம் நெருங்குவதை உணர்ந்து இருசாராரும் இரவு யுத்தத்தை நிறுத்தினர். இரவிலும் போர் செய்ய வேண்டுமென்று கூறிய துரியோதனனுக்கும் அவன் படைகளுக்கும்தான் அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு நிறைய அழிவை உண்டாக்கவே அவன் தீப்பந்தங்களைக் கொளுத்தி இரவுப் போர் செய்ய எண்ணினான். ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது. இரவுப் போர் முடிந்த சிறிது நேரத்திற்குள்ளேயே கதிரவன் உதித்துவிட்டதனால் பகற்போரையும் தொடங்கவேண்டியதாயிற்று. அவசர அவசரமாக நீராடிக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு இருசாராருடைய படைவீரர்களும் பதினைந்தாம் நாள் போருக்காகக் களத்தில் கூடினார்கள். முதல் நாள் இரவு முழுவதும் உறங்காமல் போர் செய்த அலுப்பு இருந்தாலும் உற்சாகத்தோடு போரில் ஈடுபட்டனர். பதினைந்தாம் நாள் போர் ஆரம்பமாயிற்று. அர்ச்சுனனுடைய வில்லிலிருந்து வேகம் நிர்ணயிக்க முடியாத சூறாவளிபோல் அம்புகள் பாய்ந்தன. எதிரிகள் சாவதற்காகவே வந்தவர்களைப் போல் ஒவ்வொருவராக முன் வந்து அவன் அம்புகளைத் தாங்கி இறந்து கொண்டிருந்தனர். துரியோதனாதியர் படையைச் சேர்ந்த பாலவீமன், சோமதத்தன், என்ற இரு சிற்றரசர்களும் அர்ச்சுனனுடன் போரிட்டு மாண்டனர். அவர்களைப் போலவே இன்னும் பல மன்னர்கள் அர்ச்சுனன் கணைகளால் இறந்தொழிந்தனர். கௌரவர்கள் பக்கம் படைத் தளபதியாக இருந்த துரோணர் தன்னுடைய வில்லாற்றலை முழுக்க முழுக்க வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரை எதிர்த்துப் போர் செய்ய எந்த அரசர்களாலும் இயலவில்லை. வலிமை வாய்ந்த தேர்ப்படைகளைக் கொண்டிருந்தவனும் பாண்டவர் படையைச் சேர்ந்தவனுமாகிய குந்தி போஜராஜன் ஒருவன் மட்டும் தைரியமாகத் துரோணரை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.