மகாபாரதம்-அறத்தின் குரல்/8. சயத்திரன் சாகின்றான்
அதுவரை தன்னுடன் நேருக்கு நேர் போருக்கு வராத துரியோதனன் அன்று களத்தில் வந்து நிற்பதைக் கண்ட அர்ச்சுனனுக்கு வியப்பாக இருந்தது. ‘இவன் உண்மையில் தன் சொந்தத் தைரியத்துடன்தான் நம்மை எதிர்க்க வருகிறானா? அல்லது ஏதாவது பக்கபலம் பெற்று அதனால் வருகிறானா?’ என்று அர்ச்சுனன் கண்ணனைக் கேட்டான், “அர்ச்சுனா! உன் சந்தேகம் சரிதான். சொந்தத் தைரியத்தோடு அவன் உன்னை எதிர்க்க வரவில்லை. துரோணனால் அளிக்கப்பட்ட தெய்வீக சக்தி வாய்ந்த கவசமொன்று அவன் உடலை மூடியிருக்கிறது. அந்தத் தைரியத்தினால்தான் அவன் உன்னுடன் போருக்கு வந்திருக்கிறான். நீ செய்யவேண்டிய முதல் வேலை அந்தக் கவசத்தைப் பிளந்து எறிவதுதான்” என்றான் கண்ணன். துரியோதனனோடு கிருபன், அசுவத்தாமன், சகுனி முதலியவர்கள் அர்ச்சுனனை எதிர்த்தார்கள். முதலில் அவர்களை முறியடித்துத் துரத்திவிட்டு அதன் பின் துரியோதனனுடைய கவசத்தைப் பிளக்கும் முயற்சியில் இறங்கினான் அர்ச்சுனன். ஆனால் அவன் மேல் எத்துணையோ அம்புகளை எய்து பார்த்தும் அவற்றில் ஒன்றாவது அர்ச்சுனன் எதிர்பார்த்தது போல் கவசத்தைத் தீண்டவுமில்லை. பிளக்கவுமில்லை. கவசத்தில் மோதிய அம்புகள் முறிந்து முறிந்து கீழே விழுந்தன. தோல்வி அர்ச்சுனனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஏமாற்றம் பொறுக்க முடியாமலும் எப்படியாவது துரியோதனனுடைய கவசத்தைப் பிளந்து விட வேண்டுமென்ற வெறியினாலும் ஒரு பெரிய வேலாயுதத்தை எடுத்துக் குறிவைத்து வீசி எறிந்தான். அர்ச்சுனன் இவ்வாறு துரியோதனன் மேல் வேல் எறிவதைப் பார்த்துக் கொண்டே இருந்த அசுவத்தாமன், திடீரென்று குறுக்கே இன்னொரு வேலை எறிந்து அதைத் தடுத்துக் கீழே தள்ளிவிட்டான். தனது கடைசி முயற்சியும் அசுவத்தாமனால் தடை செய்யப்பட்டு விட்டதைக் கண்ட அர்ச்சுனன் மனம் உடைந்து போய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் தளர்ந்து நின்றான். தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணபிரான் மின்னல் வெட்டும் நேரத்திற்குள் அர்ச்சுனனுடைய தளர்ச்சியைப் புரிந்துகொண்டான்.
“அர்ச்சுனா! மலைக்காதே. இந்தா, இன்னொரு வேலை எடுத்துக் கொள். கையில் வைத்துக் கொண்டிரு. நான் சைகை காட்டும்போது துரியோதனனுடைய கவசத்தைக் குறி வைத்து எறிந்துவிடு. இப்படிச் செய்தால் அவன் கவசம் நிச்சயம் உடைந்துவிடும்! இதோ அதற்கு நான் ஒரு தந்திரம் செய்கிறேன் பார்” என்று அர்ச்சுனன் கையில் வேலைக் கொடுத்துவிட்டுத் தனது சங்கை எடுத்து யாவரையும் மயக்குகின்ற இனிய ஒலி உண்டாகுமாறு அதை ஊதினான். கண்ணனுடைய அற்புதமான சங்க நாதத்தைக் கேட்டு மகுடியோசைக்குக் கட்டுப்பட்ட நாக சர்ப்பங்களைப் போல யாவரும் தம்மை மறந்து தம் நிலையை மறந்து நின்று கொண்டிருந்தனர். கண்ணன் ஒருவன் தான் விழிப்புடனிருந்தான். துரியோதனன், அவனைச் சுற்றியிருந்த படைகள், அர்ச்சுனன் முதலிய யாவருமே அந்த இனிய சங்க நாதத்தில் இலயித்துப் போயிருந்தனர். இதுதான் சமயமென்று கண்ணன் அர்ச்சுனன் பக்கமாகத் திரும்பி மெல்ல அவனுக்குச் சைகை காட்டினான். சைகையை அறிந்து தன் நிலை உணர்ந்த அர்ச்சுனன் துரியோதனனின் கவசத்தைக் குறிவைத்து வேலை வீசி எறிந்துவிட்டான். யாரும் தடுக்கவில்லை. வேல் துரியோதனனுடைய உடற்கவசத்தை இரு கூறாகப் பிளந்து கீழே தள்ளிவிட்டது. கவசம் கீழே விழுந்த பின்பே தான் ஏமாந்துவிட்டதைத் துரியோதனன் உணர்ந்து கொண்டான். கவசம் உடைந்து விழுந்ததோ இல்லையோ, துரியோதன னுடைய மனத்தில் பயம் பிடித்துக் கொண்டது. இனி நாம் இங்கே நின்றால் அர்ச்சுனன் நம்மை என்ன செய்வானோ என்று பயந்து அங்கிருந்தே ஓடிவிட்டான் அவன். அவனோடு நின்ற மற்றவர்களும் அதுபோலவே அவனைப் பின்பற்றி ஓடிவிட்டார்கள். இங்கு இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் போர்க்களத்தின் வேறோர் பகுதியிலிருந்த தருமன் கண்ணன் ஊதிய சங்கின் ஒலியைக் கேட்டு என்னவோ, ஏதோ, என்று பயந்து போய்விட்டான். “அர்ச்சுனனுக்கு ஏதோ பெரிய துன்பம் ஏற்பட்டிருக்கிறது போலும். அதனால்தான் கண்ணன் இப்படிச் சங்கு முழக்கி அதை நமக்கு அறிவிக்கிறான்” என்று அனுமானித்துக் கொண்டான். தன் பக்கத்திலிருந்த ‘சாத்தகி’, என்பவனை அழைத்து, “அர்ச்சுனனுக்கு என்ன துன்பமோ தெரியவில்லை. கண்ணன் சங்கு ஊதுகின்றான். நீ போய்ப் படைகளோடு அவனுக்கு உதவி செய்” என்று அனுப்பினான் தருமன். “அப்படியெல்லாம் அர்ச்சுனனுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. நீங்கள் வீணாகப் பயப்படாதீர்கள்” என்று அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான் சாத்தகி.
அர்ச்சுனன் இருக்கும் இடத்தை அடைவதற்குள் போகிற வழியில் பலரை எதிர்த்து வெல்ல நேர்ந்தது. கிருதவர்மன், சலசந்தன் முதலியவர்களை வெற்றி கொண்டு சாத்தகி மேலே சென்றான். துரியோதனனுடைய தம்பிமார்கள் நான்கு பேர் அவனை எதிர்த்து வழி மறித்துக் கொண்டு போர் செய்தனர். அவர்களைத் தோற்கச் செய்து விரட்டியபின் துரோணர் பெரும் படைகளுடனே வந்து சாத்தகியை வழிமறித்துக் கொண்டார். துரோணர் அந்தணர். சாத்தகி க்ஷத்திரியன். “துரோணரே! நீர் வேதியர் குலத்தைச் சேர்ந்தவர். உம்மோடு போர் புரியும் தகுதி எனக்கு இல்லை. ஆகவே எனக்கு வழியை விட்டுவிடும்” என்று அவருடன் போர் செய்ய மறுத்தான் சாத்தகி. “அதெல்லாம் இல்லை. இப்போது உன்னோடு போர் செய்யாமல் விடமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே போரை ஆரம்பித்து விட்டார் துரோணர். சொல்லியும் கேட்காமல் துரோணர் போரைத் தொடங்கவே வேறு வழியின்றிச் சாத்தகியும் அவரோடு போர் செய்யவேண்டியதாயிற்று. துரோணருக்கும் சாத்தகிக்கும் நீண்ட நேரம் போர் நிகழ்ந்தது. வெற்றியுமின்றித் தோல்வியுமின்றி இருவருமே களைத்துப் போனார்கள். இருவர் கைகளும் அலுத்து ஓய்ந்துவிட்டன. துரோணர் போரை நிறுத்திச் சாத்தகிக்கு வழிவிட்டு விட்டார். சாத்தகி விரைவாகச் சென்று அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைந்தான். அர்ச்சுனனுக்கு உதவி செய்வதற்காகச் சாத்தகியை அனுப்பிய தருமன் அவ்வளவில் மனத்திருப்தி அடைந்து விடவில்லை.
“அர்ச்சுனனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. வீமா! நீயும் புறப்பட்டுச் செல்” என்று வீமனையும் அனுப்பினான். முன்பு சாத்தகியை வழி மறித்தது போலே வீமனையும் பலர் வழிமறித்து நிறுத்தினார்கள். வீமனா சும்மா விடுவான்? அவர்களை நிர்மூலப்படுத்திவிட்டு மேலே சென்றான். சாத்தகியை எதிர்த்தது போலவே வீமனையும் எதிர்க்க வந்தனர். துரியோதனுடைய தம்பியர்கள். ஐம்பதுக்கு மேலுமிருந்த அவர்கள் தொகையில் ஏறக்குறைய முப்பத்தைந்து பேரை அப்போது அங்கேயே நமனுலகுக்கு அனுப்பி விட்டான் வீமன். எஞ்சிய சகோதரர்கள் நமக்கு உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர். இவர்களெல்லாம் ஓடிப் போனபின் துரோணர் சாத்தகியோடு போர் செய்த களைப்பெல்லாம் தீர்ந்து வீமனுக்கெதிரே வந்து வில்லை வளைத்தார். வீமன் அதைக் கண்டு திடுக்கிட்டான்.
“நீங்கள் என் மதிப்பிற்குரிய ஆசிரியர். உங்களோடு நான் போர் செய்யலாமா? வேண்டாம். தயவு செய்து என் வழியை எனக்கு விட்டுவிடுங்கள்” என்று கைகூப்பி வணங்கி அவரிடம் இறைஞ்சினான். ஆனால் துரோணர் அவனுடைய சொற்களையோ, வணக்கத்தையோ, இணக்கத்தையோ பொருட்படுத்தவில்லை.
“ஆசிரியன், மாணவன் என்ற அந்த உறவை எல்லாம் இப்போது நினைக்காதே. மறந்துவிடு. நீயும் நானும் இப்போது பகைவர்கள்” என்று கூறிக்கொண்டே அவனுடன் போர் செய்தார். துரோணருக்கும் வீமனுக்கும் கடுமையான விற்போர் ஏற்பட்டது. போர் தொடர்ந்து நடந்தது. ஆசிரியர், கெளரவிக்கத் தக்கவர் என்ற மரியாதைகளெல்லாம் மறைந்து துரோணர் மேல் வீமசேனனுக்கும் கோபம் ஏற்பட்டுவிட்டது. வீமன் தன் தேரை விட்டுக் கீழே இறங்கித் துரோணருடைய தேரை நோக்கி நடந்து சென்றான். குபீரென்று பாய்ந்து துரோணரது தேரை அப்படியே அந்தரத்தில் வாரித் தூக்கி எறிந்தான். தேரிலிருந்து தூக்கி எறியப்பட்ட துரோணர் உடல் ஒரு மூலையில் போய் விழுந்தது. அப்போது சில எலும்புகள் கூட நொறுங்கிவிட்டன. துரோணருடைய தேர் தூள் தூளாக ஒடிந்தது. அதில் வீற்றிருந்த தேரோட்டி கீழே வீழ்ந்து நசுக்குண்டு இறந்தான். கீழே விழுந்த துரோணருக்குத் தன் நினைவு இல்லை. வீமன் மேலும் முன்னேறிச் சென்றான். அவன் துரோணருடைய தேரைத் துவம்சம் செய்துவிட்டு மேலே செல்லுவதைத் தொலைவிலிருந்த துரியோதனாதியர் படையைச் சேர்ந்த பூரி, அவந்தி ராஜன் முதலியவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே அவர்கள் ஆயுதமும் கையுமாக வந்து வீமனை வளைத்துக் கொண்டனர். துரோணரையே வென்று வீழ்த்திய வீமனுக்கு அவர்களா பிரமாதம்? சில விநாடிகளிலேயே அவர்களை வென்று துரத்திவிட்டு அர்ச்சுனனும் கண்ணனும் இருந்த இடத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அப்போது கர்ணன் வந்தான். கர்ணனும் வீமனும் போர் செய்தார்கள். துரோணருடைய தேரைத் தூக்கி எறிந்து ஓடித்தது போலக் கர்ணனுடைய தேரையும் ஒடித்து விட்டான் வீமன். ஆனால் அது கர்ணனுக்கு ஒருவிதமான சேதத்தையும் உண்டாக்கவில்லை. அருகிலிருந்த கர்ணனின் புதல்வன் தன்னுடைய தேரை உடனே தகப்பனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான். மகனுடைய தேரில் ஏறிக் கொண்ட கர்ணன் ஆத்திரத்தோடு மீண்டும் வீமனோடு போர் செய்தான். ஆனால் வீமன் இப்போதும் அவனுக்குத் தோல்வியையே கொடுத்தான். கர்ணனும் வீமனிடம் தோற்றதைக் கண்ட துரியோதனன் தானே தன்னுடைய தம்பிமார்களில் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான். துரியோதனன் தம்பியர்களுடன் வருவதைப் பார்த்த வீமன், ஆரவாரம் செய்து கொண்டே தோள் கொட்டினான். முதலில் துரியோதனனோடு வந்த அவன் தம்பியரிருவரையும் விண்ணுலகுக்கு அனுப்பிவிட்டுத் துரியோதனனோடு நேரடிப் போரைத் தொடங்கினான். வீமனுக்கும் துரியோதனனுக்கும் நிகழ்ந்த போரில் ஆரம்பத்தில் துரியோதனனுடைய கை ஓங்கியிருந்தாலும் முடிவில் வீமன் கையே வென்றது. துரியோதனன் சகோதரர்களில் ஒருவனான துன்முகன் வீமனை எதிர்க்க முயன்று மாண்டான். வீமன் இவ்வாறு மேலும் மேலும் வென்று கொண்டே போவதைப் பார்த்த கர்ணன் தான் முன்பு வீமனுக்குத் தோற்றவன் என்பதையும் மறந்து ஒரு பெரிய கைவேலாயுதத்தை எடுத்து வீமன் மேல் எறிந்தான். வீமனோ அம்புகளால் அந்த வேலாயுதத்தைத் தடுத்துக் கீழே விழச் செய்துவிட்டான். இதன் பிறகு உயிரோடு மீதமிருந்த துரியோதனனின் தம்பிமார்களில் இன்னும் ஓர் ஆறு பேர் வீமனுக்கு முன்னால் வந்து அவனோடு போர் செய்து மாண்டனர். இறுதியில் துரியோதனனின் உடன் பிறந்தவர்களுக்குள் நல்லவனாக விகர்ணன் என்னும் இளைஞன் வீமனோடு போருக்கு வந்தான். விகர்ணனின் மாசு மறுவற்ற உள்ளத்தையும் நற்பண்புகளையும் வீமன் ஏற்கெனவே அறிந்தவனாகையினால் அவனோடு போர் செய்வதற்குத் தயங்கினான். ஆனால் அவனோ கண்டிப்பாக வீமனைப் போருக்கழைத்தான்.
“என் அண்ணனும் அவனைச் சேர்ந்தவர்களும் தீயவர்களாக இருக்கலாம். ஆனாலும் நான் உண்ட சோற்றுக்குக் கடன் கழித்தாக வேண்டுமே? அதற்காகத்தான் உன்னோடு போர் செய்ய முற்படுகிறேன்” என்றான் விகர்ணன். இதன் பின் வீமனும் வேண்டா வெறுப்பாக அவனோடு போர் செய்து அவனைக் கொன்றான். நல்லவனாகிய அந்த இளைஞனைத் தன் கையாலேயே கொல்ல நேர்ந்ததற்காக வீமன் உண்மையாகவே வருந்தினான். விகர்ணனுக்குப் பிறகு அவனை எதிர்க்க எவரும் முன் வரவில்லை. அவன் தன் தேரிலேறி அர்ச்சுனனிருக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தான். முன்பே தருமனால் அங்கு அனுப்பப்பட்டிருந்த சாத்தகியும் வீமனோடு அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைந்திருந்தான். இப்போது அர்ச்சுனனுக்கு இருபுறமும் இரண்டு பலமான துணைகள் ஏற்பட்டுவிட்டன. பகைவர் படைகளுக்கு நடுவில் இருந்த மூன்று பேர் இப்படி அகப்பட்டுக் கொள்ளவும் பூரிசிரவன் முதலிய பகைவர்கள் இவர்களை வளைத்துக்கொண்டு எதிர்த்தும் போர் புரியத் தொடங்கினார்கள்.
“அர்ச்சுனா! இந்தப் பூரிசிரவன் ஒரு பயங்கரமான எதிரி முதலில் இவனைக் கொன்று தீர்த்துவிடு” என்று கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறினான். அக்கூற்றின்படியே பூரிசிரவனின் மேல் அம்பு எய்து அவனைக் கொன்றவன் அர்ச்சுனன். பூரிசிரவன் இறந்த செய்தி துரியோதனனுக்கு எட்டவே அவன் அங்கு விரைந்து ஓடிவந்தான். “இப்படி மூன்று பேராகச் சேர்ந்து கொண்டு ஒருவனைக் கொல்வது வஞ்சகம். இந்த மாதிரி அநியாயப் போர் கூடாது” என்று அர்ச்சுனனை நோக்கிக் கூப்பாடு போட்டான் துரியோதனன்.
“நீங்கள் நேற்று அபிமன்யுவைக் கொன்றதும் அதற்கு முன் முதல் நாள் போரில் சிவேதனைக் கொன்றதும் நியாயமான போர் முறையானால் இதுவும் நியாயமான போர் முறைதான்!” என்று அவனுக்குச் சுடச் சுடப் பதில் கூறினான் கண்ணபிரான். பேச வாயின்றித் தலை குனிந்து கொண்டு திரும்பினான் துரியோதனன். அர்ச்சுனனும் சாத்தகியாக வீமனும், மேலும் மேலும் முன்னேறிச் சயத்திரதனைக் கண்டு நெருங்குவதைப் பார்த்த கெளரவர்கள் திகைத்தனர். எவ்வாறேனும் சயத்திரதனைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையினால் தரையிலேயே சுரங்கம் மாதிரி ஒரு பள்ளம் உண்டாக்கிச் சயத்திரதனை அதனுள் இறங்கச் செய்து மறைத்துவிட்டனர். சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிய அர்ச்சுனன் ஏமாற்றமடைந்து நின்றான். சயத்திரதன் உருவமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை. ‘கண்மூடித் திறக்கும் நேரத்தில் இங்கே நின்று கொண்டிருந்த சயத்திரதன் எவ்வாறு மறைந்திருக்க முடியும்? என்று மயங்கினான் அவன். ‘இதில் அடங்கியுள்ள சூது என்ன? என்று யோசித்தான் கண்ணன். வேண்டுமென்றே அருகிலுள்ள ஏதோ ஓர் இடத்தில் சயத்திரதனை எதிரிகள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று உண்மை கண்ணனுக்குப் புரிந்துவிட்டது.
“அர்ச்சுனா! கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டுத் தன் வலது கையிலிருந்த சக்கராயுதத்தை வானத்தில் செலுத்திக் கதிரவன் மறையும்படி ஒரு மாயம் செய்தான் கண்ணன். முன்னவனே முன் நின்றால் முடியாத சூழ்ச்சியும் உண்டா? கண்ணன் செய்த மாயத்தினால் திடீரென்று அந்தி இருள் கவிந்தது. கெளரவர்கள் இதைக் கண்டு உண்மையாகவே கதிரவன் மறைந்து விட்டான் என்றெண்ணிக் கொண்டு, “அர்ச்சுனன் இனிமேல் போர் செய்யமாட்டான். இருட்டுவதற்குள் சயத்திரதனைக் கொல்வதாகத்தானே சபதம் செய்தான்? இப்போதோ நன்றாக இருட்டி விட்டது. இனி அர்ச்சுனன் தன் சபதம் நிறைவேற்றாததால் தீயில் விழுந்து உயிர்விட வேண்டியது தான்!” என்று மகிழ்ச்சியாக ஆரவாரித்தார்கள். சயத்திரதன் வெளியே வந்தாலும் நிபந்தனை நேரம் கழிந்து விட்டதனால் அர்ச்சுனன் அவளை ஒன்றும் செய்ய முடியாது என்றெண்ணிக் கொண்டே கெளரவர்கள் சுரங்கப் பள்ளத்திற்குள் மறைந்திருந்த அவனை வெளியே கொணர்ந்து நிறுத்தி விட்டனர்.
“அர்ச்சுனா! இதுதான் நல்ல தருணம். இதோ சயத்திரதன் வெளியே நிற்கிறான். கீழே விழாமல் அவன் தலையை அம்புகளால் கொய்து அப்படியே சமந்த பஞ்சகமடுவில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கும் அவன் தகப்பன் கையில் போய் விழுமாறு செய். இவன் தலை கீழே விழுந்தால் வீழ்த்தியவர்களுக்குத் துன்பம் நேரிடும்” என்று கண்ணன் இந்தச் சமயத்தில் கூறினான்.
“ஐயையோ! இருட்டி விட்டதே? என் சபதப்படி வேண்டும்? இனிக் கொல்வது முறைகேடல்லவா?” என்று பதறினான் அர்ச்சுனன்.
“பதறாதே! நான் சொல்வதைக் கேள். அவனைக் கொல் பொய் இருட்டை நீயுமா நம்புகிறாய்?” என்றான் கண்ணன். உடனே உண்மையைப் புரிந்து கொண்ட அர்ச்சுனன் வில்லை வளைத்துச் சயத்திரதன் கழுத்துக்குக் குறிவைத்து அம்புகளை எய்தான். மறுகணம் சயத்திரதன் தலையைத் தனியே அறுத்தெடுத்தான். அப்படியே அத்தலை சமந்தபஞ்சக மடுவில் மாலை நேர வழிபாடு செய்து கொண்டிருந்த சயத்திரதனின் தகப்பன் கையில் போய் விழுமாறு செய்தான். சயத்திரதனின் தந்தை தன் மகன் இறந்த துயரம் பொறுக்காமல் தானும் அந்த மடுக்கரையிலேயே உயிரை விட்டான்.
“ஆ! இதென்ன அநியாயம்? நிபந்தனையை மீறி இருட்டிய பிறகு சயத்திரதனை எப்படிக் கொல்லலாம்?” என்று கௌரவர்கள் ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே கண்ணனுடைய தேரை நெருங்கினார்கள். கண்ணன் தன் சக்கரத்தைத் திருப்பி எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். உடனே வானில் சூரியன் பிரகாசித்தான். அதைக் கண்டு கெளரவர் திகைத்து வாயடைத்துப் போயினர்.