மகாபாரதம்-அறத்தின் குரல்/7. பொழுது புலர்ந்தது

விக்கிமூலம் இலிருந்து

7. பொழுது புலர்ந்தது

பதினான்காம் நாள் வைகறை பொழுது மட்டுமா அன்றைக்குப் புலர்ந்தது? அர்ச்சுனனுடைய சபதம் நிறைவேற வேண்டிய ஒரு நல்ல 2 நிமித்தமும் பொழுதோடு சேர்ந்து தான் புலர்ந்தது. அர்ச்சுனன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்ற முடியுமோ, முடியாதோ, என்று தருமருடைய உள்ளத்தில் ஒரு சந்தேகமும் புலர்ந்தது. எல்லாவிதமான எண்ணங்களுக்கான முடிவும் அன்று மாலைக்குள் புலர்ந்து தானே ஆக வேண்டும்? போர் முரசங்கள் பேரொலி செய்து இருதரப்புப் படைகளையும் போருக்கு அழைத்தன. போர் தொடங்க வேண்டிய நேரத்தில் இருபக்கத்துப் படைகளும் களத்தில் எதிரெதிரே கூடிவிட்டன. சயத்திரதன் அர்ச்சுனன் கையில் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக அவனை நடுவில் நிறுத்திச் சுற்றிலும் யானை, குதிரை, தேர், காலாள் என்ற நால் வகைப் படைகளையும் நிறுத்திவிட்டார் துரோணர். வீரமும் வல்லமையும் மிகுந்த பல அரசர்களைத் துரோணர் சயத்ரதனைச் சுற்றி ஆயுத பாணிகளாக நிறுத்தி வைத்தார். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட அரசர்களுக்குத் தலைவனாக முதல் நாள் இரவு சபதம் செய்தவர்களுள் ஒருவனான துன்மருஷ்ணன் என்பவன் நிறுத்தப்பட்டான். அர்ச்சுனன் சத்திரதனை நெருங்கக்கூட முடியாது என்று பிரமிக்கும்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் அவ்வளவு வன்மையாக இருந்தன. விற்போரில் வல்ல வில்லாளர்களை ஒன்று திரட்டிப் படைகளுக்கு முன்னால் நிற்கச் செய்தார்கள். சகுனி, சல்லியன், கர்ணன் ஆகியவர்களை வியூகத்தின் முகப்பில் காவலாக நிறுத்தினார்கள். துரோணர் சயத்திரதனை மையமாக அமைத்து வகுத்த அந்த வியூகம் மிக அருமையாக அமைந்திருந்தது. விண்ணவரும் அதைக் கண்டு வியந்தனர். போர் தொடங்கிய போது முதன் முதலாக அர்ச்சுனன்தான் எதிர்த்திடுவதற்கு முன் வந்தான். அர்ச்சுனனுக்கு அருகில் உத்தமோசன், உதாமன் ஆகிய வீரர்கள் புடைசூழ்ந்து இருந்தனர். துரோணரால் மிகுந்த நெருக்கமாகவும் அரிய முறையிலும் அமைக்கப்பட்டிருந்த வியூகத்தின் மேல் அர்ச்சுனன் தன் தாக்குதலை ஆரம்பித்தான். ஓராயிரம் வில்கள் பலமுறை பொழிய வேண்டிய அவ்வளவு அம்புகளையும் அவனுடைய ஒரு வில்லே மாறிமாறிப் பொழிந்தது. ஒவ்வொரு முறையும் அவனுடைய வில்லின் நாணிலிருந்து எழும்பும் போது பகைவர்களுடைய நெஞ்சம் அதிர்ந்தது. கைகள் நடுங்கின. உள்ளங்களில் பயமும் சோர்வும் பிறந்தன. படையின் முன்புறம் நின்ற வீரர்கள் ஒவ்வொருவராகப் பின் நோக்கி ஓடத் தலைப்பட்டனர். ஆயிரக்கணக்கான குதிரை வீரர்களோடு எதிர்ப்பதற்கு முன்வந்த திருதவர்மன் நிலைகுலைந்து ஓடினான். யானைப் படைகளெல்லாம் கூட்டிக் கொண்டு எதிர்க்க வந்த துச்சாதனன் மிரண்டு போய்ப் பின் வாங்கினான். துரோணர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு முன்னால் இருந்த படைவரிசைகளைச் சிறிது சிறிதாக அழித்து விட்டான் அர்ச்சுனன். மகாவீரரும் வில்லாசிரியருமாகிய துரோணரே அதைக் கண்டு திடுக்கிட்டார். அடுத்து நிகழவேண்டிய போர், அர்ச்சுனனும் துரோணரும் ஒருவரையொருவர் எதிர்த்துச் செய்யவேண்டியதாக வாய்த்தது. துரோணருக்கு அருகில் நேர் எதிரே அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டு போய் நிறுத்தினான் கண்ணன். அந்த நிலையில் துரோணருக்கும் அர்ச்சுனனுக்கும் விற்போர் தொடங்கிற்று.

இருவரும் விரைவில் போரை நிறுத்துகிற வழியாகத் தோன்றவில்லை. துரோணருடன் அர்ச்சுனன் நீண்ட நேரம் போர் செய்து நேரத்தைக் கழித்துவிடக்கூடாது என்பது கண்ணன் ஆசை. மாலைக்குள் சபதப்படி சயத்திரதனைக் கொன்றாக வேண்டும். ‘எதிரே வந்தவர்களுடன் எல்லாம் நீண்ட நேரம் போர் செய்து நேரத்தை வீணாக்கிவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அர்ச்சுனன் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே?’ என்பது கண்ணனின் பயம். இதனால் தேர் துரோணரைக் கடந்து மேலே செல்லும்படி அடுத்த வியூகத்திற்குள் வேகமாகச் செலுத்தினான் கண்ணன். தேர் தன்னைக் கடந்து சத்திரதன் இருந்த பக்கமாக உட்புறத்தில் முன்னேறுவதைப் பார்த்து துரோணர் திடுக்கிட்டு வில்லை வளைத்து அர்ச்சுனன் தேரைப் போகவிடாமல் மறித்து மேலும் போருக்கு அழைத்தார்.

“சுவாமி! என்னை விட்டு விடுங்கள். நான் உங்களுடனேயே முழு நேரமும் போர் செய்து கொண்டிருந்தால் என்னுடைய சபதத்தை எப்போது நிறைவேற்றுவது? தவிரவும் நீங்கள் ஆசிரியர். நான் உங்கள் மாணவனாக இருந்தவன். உங்களோடு போரிட்டு என்னால் வெல்வதற்கு முடியுமா? எனது சபதம் நிறைவேற உங்கள் சிறிய உதவி இந்த அளவிலாவது சேரக்கூடாதா?” என்று புன்முறுவல் பூத்த முகத்தோடு துரோணரைப் பார்த்து மனங்குழையக் கேட்டான் அர்ச்சுனன். அவனுடைய குழைந்தப் பேச்சும் இதயத்தைக் கவ்வும் புன்முறுவலும் துரோணர் மனத்தை எப்படித்தான் மாற்றினவோ தெரியவில்லை. மந்திர சக்தியால் கட்டுண்டவர் போல் துரோணர் அப்படியே நின்று விட்டார். தன்னை மறித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு தடையும் மறைந்து விடவே அர்ச்சுனனுடைய தேர். சுலபமாக இரண்டாவது வியூகத்திற்குள் புகுந்து விட்டது. அர்ச்சுன்னுடைய தேர் புகுந்த இரண்டாவது வரிசையில் காம்போஜம் முதலாகிய பெரிய பெரிய நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி எதிர்த்தனர். அவன் சிறிதும் மலைக்காமல் அவர்களோடு விற்போரைச் செய்தான். அவர்கள் மனம் தளர்ந்து தோற்றுப் பின்வாங்கினர். சயத்திரதன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் பாசப்படை என்று ஓர் படைப்பிரிவைச் சேர்ந்த படை வீரர்கள் அவனைச் சுற்றிக் கயிறு பிணித்தது போலப் பிணித்துக் கொண்டு நெருங்கி நின்றனர். அர்ச்சுனனுடைய தேர் அந்தப் பாசப்படை வீரர்களுக்கு முன்னால் போய் நின்றது. நின்ற அளவில் அவனுக்கும் அந்த வீரர்களுக்கும் போர் உண்டாயிற்று. போர் செய்து கொண்டே மெல்ல அவனுடைய தேர் உள்ளே சென்றது. உட்புறம் கர்ணன் தன்னைச் சேர்ந்தவர்களோடு முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேர் நுழைவதைப் பார்த்ததுமே கர்ணன் போருக்குத் தயாராகி விட்டான். உடனே அர்ச்சுனன், முன்பு துரோணருக்கு முன்னால் போர் செய்யும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு வந்தது போல் இங்கும் செய்ய வேண்டாம். இங்கே கர்ணனோடு நான் அதிக நேரம் போர் செய்ய ஆசைப்படுகிறேன்” என்று கண்ணனிடம் காதோடு காது வைத்தாற்போல் இரகசியமாகக் கூறினான். “உன் விருப்பம் அதுவானால் அப்படியே செய்யலாம்” என்று அதற்கு இணங்கினான் கண்ணன்.

கர்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நிகழ்ந்தது. ஆனால் அர்ச்சுனன் ஆசைப்பட்டது போலக் கர்ணனோடு நீண்ட நேரம் போர் செய்வதற்கு முடியாமல் போயிற்று. காரணம்? அவன் மிக விரைவிலேயே தோற்று ஓடிப் போனான். கர்ணன் தோற்றோடிய பிறகு வருணராஜன் புதல்வனான கதாயு என்ற வீரமன்னனுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் ஏற்பட்டது. சுதாயுவுக்குக் கருங்கல்லைப் போல இறுகிய பலமான உடல் வாய்த்திருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்றுகூட அவன் உடலில் தைக்கவில்லை. எல்லா அம்புகளும் முறிந்து முறிந்து விழுந்தன. பல நூறு அம்புகளை ஒரே சமயத்தில் பாய்ச்சக்கூடிய மிகப்பெரிய வில் ஒன்றை வளைத்துச் சுதாயு மேல் அம்புகளைக் கொட்டினான் அர்ச்சுனன். ஆனால் சுதாயு அவற்றையும் தடுத்து விட்டான். தான் எப்படிப் போர் செய்தாலும் சுதாயு அவற்றை முற்றிலும் சமாளித்து விடுவதைக் கண்டு அர்ச்சுனன் கண்கலங்கினான். ஆத்திரமடைந்த அவன் மனம் சுதாவை எப்படியாவது தொலைத்துவிட வேண்டுமென்று துடிதுடித்தது. வில்லை வளைத்துச் கதாயுவின் நாணை அறுத்துவிட முயன்றான். பலமுறை முயன்ற பின் அர்ச்சுனன் தன் முயற்சியில் வெற்றி பெற்றான். சுதாயுவினுடைய வில் நாணறுந்து கீழே விழுந்தது. தன் வில்லை அர்ச்சுனன் ஒடித்து வீழ்த்தியதைக் கண்டு அளவற்ற கோபம் கொண்ட சுதாயு எவரையும் எப்போதும் கொல்லத் தவறாத வலிமை வாய்ந்த ஓர் கதாயுதத்தை அர்ச்சுனனுடைய மார்பைக் குறிவைத்து வீசினான். அவன் வைத்த குறி தவறாமல் அது மட்டும் அர்ச்சுனனுடைய மார்பில் பட்டிருக்குமானால் அவன் அப்போதே அங்கேயே இறந்து விழுந்திருப்பான். சுதாயுவின் கதாயுதம் தன்னால் அழிக்கப்பட முடியாத தெய்வீகத் தன்மை பொருந்திய யாராவது ஒருவர் மேற்பட்டால் அப்போது சுதாயுவே அழிந்து இறந்து போக நேரிடும். கண்ணன் நிலைமையைப் புரிந்து கொண்டான். அர்ச்சுனன் மார்பில் மோத வேண்டிய கதாயுதத்தை எதிர்பாராத விதமாகத் தன் மார்பிலேயே தாங்கிக் கொண்டான். கதை கண்ணனுடைய மார்பை அணுகிற்றோ இல்லையோ சுதாயு தன் தேரிலிருந்து கீழே விழுந்து நெருப்பிற்பட்ட புழுப்போலத் துடிதுடித்து இறந்தான். தன் ஆற்றலுக்கு மீறிய தெய்வீக சக்தி உடையவனை மோதும் போது அந்த ஆயுதத்தை ஏவியவனே இறக்க வேண்டுமென்பது அதன் நியதியாயிற்றே! ஆனால் அர்ச்சுனனுக்கு இந்தத் தந்திரம் எதுவுமே புரியவில்லை. “சுதாயு ஏவிய கதை ஏன் தன் மார்பிலே பாயவில்லை? திடீரென்று அவன் தேரிலிருந்து கீழே விழுந்து இறக்கக் காரணமென்ன?” -என்று திகைத்தான், தன் திகைப்பைத் தெளிவிக்குமாறு கண்ணனிடமே கேட்டான்.

“அர்ச்சுனா! உன் சந்தேகமும் திகைப்பும் நியாயமானவைதான். உனக்கு இவனைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறேன் கேள். இவனுடைய தாயின் பெயர் பன்னவாகை. தந்தையின் பெயர் வருணராஜன். தந்தையின் வலிமையால் அவனிடமிருந்து சில ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய மந்திர தந்திரங்களையும் இவன் கற்றுக் கொண்டிருந்தான். இவன் எய்கின்ற ஆயுதங்கள் வேறு படைக்கலங்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேலே பட்டால் அவர்களை நிச்சயமாக கொன்றே தீரும். ஓர் ஆயுதமும் இல்லாத வெறுங்கையர்கள் மேல் பட்டாலோ இவனே இறக்கும்படி நேரிட்டுவிடும். இவனைப் பற்றிய இந்த இரகசிய உண்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இவன் உன்மேல் ஏவிய கதாயுதத்தை நான் இடையில் தடுத்து என் மார்பிலேயே தாங்கிக் கொண்டு இவனைக் கொன்று முடித்தேன்” என்று கண்ணபிரான் சுதாயுவின் கதையை அர்ச்சுனனுக்குக் கூறி முடித்தான். சுதாயு இறந்ததைக் கண்டு அவன் தம்பியாகிய சதாயு என்பவன் தன் படைகளோடு அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். மற்றும் பல அரசர்களும் தேர்களும் ஓடி வந்து அவனை எதிர்த்தனர். சகசிரபாகு என்ற அரசனும் எதிர்த்தான். சதாயு, சகசிரபாகு, இவர்கள் இருவரிடமுமே படைகள் நிறைய இருந்தனவே ஒழியச் சொந்த வலிமை சிறிதும் இல்லை. எனவே அர்ச்சுனன் இவர்களிருவரையும் விரைவில் தோற்கச் செய்துவிட்டு மேலே சென்றான். அவனுடைய தேர் பலவகையிலும் முயன்று வியூகத்தை உடைத்துக் கொண்டு சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது கண்ணபிரான், “அர்ச்சுனா! குதிரைகள் தண்ணீர்த் தாகத்தால் மிகவும் களைத்து ஓய்ந்து போய் விட்டன. இந்த விநாடியே குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினால் ஒழிய இவை மேலே ஓர் அடிக்கூட நகரமாட்டா! இப்போது இந்த நட்டநடுப் போர்க்களத்திலே தண்ணீருக்கு எங்கு போவது?” -என்று மனம் வருந்திக் கேட்டான். கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தை எடுத்தான். சிவபெரு மானைத் தியானித்துக் கொண்டே அந்த அஸ்திரத்தை, ஆழப்பதியுமாறு தரைக்குள்ளே செலுத்தினான். மறுகணம் அஸ்த்ரம் தரையைத் துளைத்தது. அதன் மாயாசக்தியால் போர்க்களத்தின் நடுவே அவர்களுடைய தேருக்கு அருகில் ஒரு மாயப் பொய்கை உண்டாயிற்று. பேரளவாக நீர் நிறைந்து பரந்து தோன்றிய அந்தப் பொய்கையில் இறங்கிக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினான் கண்ணன். பின்பு அவர்கள் இருவருமே குளத்தில் இறங்கி அதுவரை போர் செய்த களைப்பும் வியர்வையும் தீரும்படியாகக் கைகால் முகங்கழுவிக் கொண்டு தண்ணீர் பருகினர். அங்கேயே குதிரைகளை விட்டுவிட்டுச் சிறிது நேரம் களைப்பைப் போக்கி ஓய்வு கொள்ள விரும்பித் தங்கினார்கள். அர்ச்சுனனும், கண்ணனும் பலரை வென்று முன்னேறி போர்களத்தினிடையே மாயப் பொய்கை உண்டாக்கி ஓய்வு கொண்டிருக்கும் செய்தியை போர்க்களத்து ஒற்றர்கள் துரியோதனனிடம் போய்க் கூறிவிட்டார்கள். துரியோதனருக்கு ஒரேயடியாகப் பயம் தோன்றிவிட்டது. ‘அர்ச்சுனன் முன்னேறிக் கொண்டு வருகிற விதத்தைப் பார்த்தால் எப்படியும் இன்று மாலைக்குள் சத்திரதனுடைய தலை பிழைப்பது அருமை என்றல்லவா தோன்றுகின்றது?’ -அவன் சயத்திரதனின் உயிர்மேல் இவ்வளவு அக்கறை கொண்டதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. துரியோதனனுடைய தங்கையாகிய துச்சளை என்பவள்தான், சயத்திரதனுடைய மனைவி. சத்திரதன் இறந்துவிட்டால் தன் அருமை தங்கை கணவனை இழக்க நேரிட்டு விடுமே என்று அஞ்சியே இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவன் செய்திருந்தான். இப்போது கண்ணனும் அர்ச்சுனனும் பொய்கைக் கரையில் இளைப்பாறுகிறார்கள் என்று அறிந்தவுடன் துரியோதனன் விஷயத்தைக் கூறி அவர்களை எதிர்ப்பதற்காகத் துரோணரைத் தேடிக்கொண்டு சென்றான். துரோணரைக் கண்டதும் அவரிடம் சினத்துடனே பேசலானான்:

“துரோணரே! அர்ச்சுனனை இவ்வளவு தூரம் முன்னேற விட்டீர்களே? நமது படைகளெல்லாம் எங்கே போயின? சத்திரதனை அர்ச்சுனன் கொன்றுவிட்டால் என் தங்கையின் கதி என்ன ஆவது? நேற்றிரவு நம்முடைய பாசறையில் கடோற்கசனுக்கு முன் அர்ச்சுனனைக் கொல்வதாகச் சபதம் செய்தவர்கள் எல்லோரும் எங்கே ஓடிப் போனார்கள்? அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்ய அவர்களுக்கெல்லாம் பயந்தோன்றிவிட்டதா? அவர்கள் எல்லோரும் வெறும் வாய்ப் பேச்சில்தான் வீரர்கள் போலிருக்கிறது. இதிலிருந்து எனக்கு என்ன எண்ணம் உண்டாகிறது தெரியுமா? உண்மையாகப் பார்க்கப் போனால் அர்ச்சுனனோடு எதிர்த்துப் போர் செய்யக்கூடிய அவ்வளவு ஆற்றல் படைத்தவர் ஒருவர்கூட நமது பெரும் படையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இனி வேறு வழியும் இல்லை. நான் மற்றவர்களை நம்பிப் பயனும் இல்லை. நானே போர்க்களத்தில் இறங்கி அர்ச்சுனனோடு நேருக்கு நேர் போர் செய்ய வேண்டியதுதான்.” துரியோதனனுடைய ஆத்திரத்தைக்கண்டு துரோணருக்குச் சிரிப்புத்தான் வந்தது. சந்தர்ப்பத்தை உத்தேசித்து அந்தச் சிரிப்பு வெளிப்பட்டு விடாமல் அடக்கிக் கொண்டார் துரோணர்.

“துரியோதனா! படைவீரர்கள் அர்ச்சுனனை எதிர்க்கவில்லை என்று நீ என்னிடம் வந்து ஆத்திரப்படுகிறாய். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அர்ச்சுனனும் கண்ணனும் வெற்றியோடு முன்னேறுகிறார்களே என்று நாம் அவர்கள் மேல் பொறாமைப்பட்டு என்ன பயன்? அவர்களுடைய சக்தி பெரிது. மேலும் அர்ச்சுனன் சிவபெருமானைச் சென்று வணங்கி உயரிய அஸ்திரங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றான். ஈரேழு பதினான்கு புவனங்களையும் படைத்த பிரம்மாவே முன் வந்தாலும் அர்ச்சுனனை வெற்றி கொள்வது முடியாத காரியம் ஆயிற்றே? அவ்வாறு இருக்க நாம் வெல்லுவதாக நினைக்கவும் முடியுமா? தவிரவும் கண்ணன் வேறு அவனுக்குத் தேர் செலுத்துகின்றான். உலகத் தேரையே ஓட்டிவரும் பரம்பொருளாற்றலைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் கண்ணனே தேரைச் செலுத்துகின்றபோது அர்ச்சுனன் தோற்பது எங்ஙனம்? ஆகவே அர்ச்சுனனை வெல்வதென்பது நாம் கனவிலும் நினைக்கக்கூடாதது! அன்பிற்குரிய துரியோதன மன்னா! இப்போது இந்த நெருக்கடியான நிலையில் இன்னொரு விஷயத்தையும் உனக்கு நான் நினைவுபடுத்திவிட எண்ணுகிறேன். உடன் பிறந்தவர்களைப் பகைத்துக் கொள்வது என்றைக்கும் இம்மாதிரித் தொல்லையைத்தான் கொடுக்கும் அன்றே விதுரன் உனது அவைக்களத்தில் இந்த அறிவுரைகளை உனக்குக் கூறினான். நீ கேட்கவில்லை. அவனைக் கோபித்துக் கொண்டாய் பழித்துப் பேசினாய். உன் செயலால் உன்மேல் வெறுப்படைந்த அவன் தன் வில்லை ஒடித்து எறிந்து விட்டுத் தீர்த்த யாத்திரை சென்றுவிட்டான். அவன் இங்கே இப்போது இருந்தாலாவது போரில் உனக்குப் பேருதவியாக இருப்பான். அவன் முயன்றால் அர்ச்சுனன், வீமன் ஆகியோரைக் கூட எதிர்த்துப் போர் செய்ய முடியும். நடக்காததை நினைத்து வீண்பேச்சுப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம். நீ நினைக்கிறதைப் போல் சத்திரதன் பிழைப்பதும் பிழைக்காததும் நம் கையிலோ, நமது படைகள் கையிலோ இல்லை. அது அவனுடைய தலைவிதியின் கையில் இருக்கிறது. நீயே அர்ச்சுனனை எதிர்த்து நேருக்கு நேர் போர் செய்யப் போகிறேன் என்று சொல்லுகிறாய்! நல்லது. செய்துதான் பாரேன். இதோ என்னிடம் ஓர் அருமையான கவசம் இருக்கிறது. இதை மார்பிலும் உடலிலுமாக அணிந்து கொள்கின்றவர்களுக்குக் காயங்கள் ஏற்படாது. இந்தக் கவசத்தை முன்பு இந்திரன் பிரம்மாவிடமிருந்து பெற்றான். இந்திரனிடமிருந்து அங்கீரசன் பெற்றான். அங்கீரசனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நீ அர்ச்சுனனுடன் போரிடப் போவதாகச் சொல்வதனால் இந்தப் பெருமை வாய்ந்த கவசத்தை உனக்கு அணிந்துவிடுகின்றேன். பின்பு நீ உன் விருப்பப்படி அர்ச்சுனனோடு போர் செய்யலாம்” என்று கூறித் தன்னிடமிருந்த கவசத்தைத் துரியோதனனுக்கு அணிவித்தார் துரோணர். கவசமணிந்து கொண்ட துரியோதனன் அர்ச்சுனனோடு போருக்குச் சென்றான்.