வெற்றி முழக்கம்/33. நளின நினைவுகள்

விக்கிமூலம் இலிருந்து

33. நளின நினைவுகள்

ன்னை நோக்கிப் ‘பதுமாபதி யார்?’ என்று இராசகிரிய நகரத்தில் இருந்துகொண்டே வினாவிய அந்தண இளைஞனுக்குரிய புனைகோலத்தை அயிராபதி ஒரு கணம் ஏற இறங்கப் பார்த்தாள். அவ்வாறு பார்த்தபின், ‘யாரோ ஓர் அந்தண இளைஞன் தானம் பெறும் வேட்கையால் வந்திருக்கிறான் போலும்’ என்று மனத்திற்குள் கருதியவாறே அவனுக்கு மறுமொழி கூறலானாள்: “இவள் இந் நகரத்து அரசன் தருசகனுடைய தங்கை, காசியரசன் புதல்வி. தருசகனின் சிற்றன்னையாகிய உதையையோடை என்பவள் இவளுடைய தாய். இவளுக்கு இதுகாறும் திருமணம் ஆக வில்லை. இப்போது காமன் திருவிழாவாகிய வசந்த விழாக் காலமாகையினால் ஏழு நாளும் இவள் இங்கே வழிபாடு செய்வதற்கு வந்து போவாள். விழா முடியும் இறுதி நாளன்று இவள் கையால் அந்தணர்களுக்கு மிகுந்த தானங்களைச் செய்வாள். நீயும் இருந்து உனக்கு வேண்டிய தானங்களைப் பெற்றுச் செல்வாயாக” என்று கூறி முடித்தாள் அயிராபதி. வண்டியில் வந்தவள் தத்தை அல்ல என்று உதயணன் மயக்கம் தெளிந்தான். உதயணனுக்கு மேற்கண்டவாறு மறு மொழி கூறிய அயிராபதி என்ன நினைத்துக் கொண்டாளோ, திரும்பிச் செல்லப் புறப்பட்டவள் உதயணனை நோக்கி, “உங்களைப் பார்த்தால் இந்த நாட்டைச் சேர்ந்தவர் போலத் தெரியவில்லையே! நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எவ்வூரினர்? உங்கள் பெயர் யாது? யான் இவற்றை அறிந்து கொள்ளலாமோ?” என்று ஐயத்தோடு கேட்டாள்,

இந்தக் கேள்விகளால் உதயணன் விழித்துக்கொண்டான். ஒரு நொடியில் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவளுக்குக் கூறவேண்டிய விடையையும் கற்பனை செய்து விட்டான், “யான் காந்தார நாட்டைச் சேர்ந்த இரத்தினபுரி என்னும் ஊரினன், அவ்வூரிலுள்ள சாண்டியன் என்னும் அந்தண வேதியர் புதல்வன். என் பெயர் மாணகன் என்பது. இந் நாட்டிலுள்ள எழில்வளங் காணும் ஆசையால் இங்கு வந்தேன்” என்று அவன் கூறிய விடையைக் கேட்டுத் திருப்தியடைந்த அயிராபதி, “நல்லது, நான் வருகிறேன்” என்று கூறி அவனிடம் விடைபெற்றுச் சென்றாள். மாலை நேரம் கழித்துச் சுற்றி இருள்படர ஆரம்பித்தது. கதிரவன் மேல் வானின் செம்மை வெளியில் மூழ்கிக் கொண்டிருந்தான், இங்கே உதயணன் மனம் பதுமையிடம் சென்று இருந்து கொண்டு அவளிடமிருந்து வர மறுத்தது. அவன் அவளைப் பற்றி எண்ணித் தாப நினைவுகளால் வாடித் தவித்தான்.

மரத்தின் உயர்ந்த கிளையில் தான் நிற்க ஒரு கொம்பை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டிருந்தவன், பிடி நழுவிக் கீழே விழும் நிலை ஏற்பட்டால், வேறு எந்தக் கொம்பு அவசரத்தில் கைக்கு அகப்படுகிறதோ அதை முன்னிலும் அழுத்தமான ஆசையோடு இறுகப் பற்றிக் கொள்வான். தத்தையும் ஆகியும் மறைந்த துன்பங்களைப் பதுமையைக் கண்ட போதிலிருந்து உதயணன் மறந்துவிட்டான். அவள் தத்தை அல்லள், பதுமாபதி’ என்று அயிராபதி கூற அறிந்து கொண்ட பின்னும் உதயணன் மனம் அவளை விட்டுப்பிரிய மறுத்தது. பதுமையின் தெய்வீக வனப்பே இதற்குக் காரணம் எனலாம், இந்தக் காதல் மயக்கத்துடனே அந்தி இருள் சூழத் தொடங்கிய நேரத்தில், காமன் கோட்டத்திலிருந்து தவப் பள்ளிக்குப் புறப்பட்டான் அவன்.

‘ஆடவர் பொருள் தேடிப் பிரியும்போது, அந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல் மனைப் பெண்டிர் கடமை. வினை காரணமாகவோ, பொருட்குறைபாடு காரணமாகவோ பிரிவதற்கு எல்லை இது என்றெல்லாம் மகளிர்க்குக் கூறுவதுபோலச் சோலையில் அப்போது முல்லை அரும்புகள் முறுக்கவிழ்ந்தன. இரவலர்க்கும் அறிஞர்க்கும் பொருள் வழங்காது மறுத்துக் கண் கவிழ்ந்து கதவடைக்கும் மன்னர் போலப் பொய்கையில் தாமரைகள் கூம்பின. முகமலர்ந்து பிறர்க்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வோர்போல மலர்ந்த மல்லிகைப் பூக்களில் வண்டுகள் விரும்பி நாட்டம் கொண்டன. இப்படிப்பட்ட அழகிய மாலைக் காட்சிகளையும் செந்நிறத்தில் விரித்த பட்டுப் பெருங்கம்பளம்போலத் தோன்றும் மேல் வானப்பரப்பையும் கண்டு மனம் இன்ப வேதனையில் ஆழ, உதயணன் தவப்பள்ளிக்குச் சென்றான். பதுமை தனக்குக் கழுநீர்மாலை கொடுப்பதுபோல ஒரு காட்சியும் அவனுடைய கனவு வெளியில் தோன்றியது. வெண்மேகக் கற்றைகளுக்கு நடுவே மதிமுகம் ஒளிரத் திகழும் வானவ மகளிர்போல வெண்பட்டுத் திரை காற்றில் விலக, அங்கே காட்சியளித்த பதுமையின் தோற்றத்தை மீண்டும் மானசீகமாகக் கண்முன் கொணர முயன்றான் உதயணன். வெங்கனலில் வீழ்ந்த வெண்ணெய்த் திரள்போலக் கலங்கிப் பேதுற்றது அவன் நெஞ்சம். பதுமாபதி அவன் நினைவுகளாகவும், நினைவு களின் இலட்சியமாகவும் இருந்தாள்.

மாலை நேரம் அவனுடைய வாட்டத்தை வளர்த்தது. உதயணனின் நிலை இவ்வாறிருக்க அங்கே இராசகிரிய நகரத்து அரண்மனையில் பதுமாபதியின் நிலையும் காதல் வேதனை சூழவே இருந்தது. புன்னை மரத்தடியில் மாதவிக் கொடியினைக் கையில் ஏந்தி நின்ற உதயணன் தோற்றம் அவள் கண்களை விட்டு அகலவே இல்லை. அவன் தன்னைத் தழுவிக் கொள்வதாகவும் பேசி மகிழ்வதாகவும் அவளுடைய கனவுவெளியில் காட்சிகள் தோன்றித் தோன்றி இன்பமுறச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறாகக் காதல் நோக்கத்தோடு ஒருவரை ஒருவர் கண்ட பின்பு இருவரும் கலக்கமடைந்து இருந்தனர். அவர்கள் கலக்கம், காதலோடு கூடிய கலக்கம்! கண்ட காட்சியால் தோன்றிய இந்தக் கலக்கம் தீர்வதென்பது, திருப்திக்குப் பின்புதானென்று இருவரும் நம்பினர்.

அன்று இரவு முழுவதும் இதே துயருடன் கழிந்தது. உலகிற்கு எல்லாம் குளிர் நிலவு பொழிந்து காக்கும் சந்திரன், அன்று இவர்கள் இருவருக்கும் உறக்கம் இல்லாமற் செய்த பாவத்தைப் பெற்றவனாக மறைந்தான். பொழுதுவிடியத் தொடங்கியது. அன்று காலை விடிந்தபோது உலகிற் கெல்லாம் விடிந்ததுபோல இன்பமாக உதயணனுக்கும் பதுமாபதிக்கும் விடியவில்லை. நெருப்பினால் புண்பட்ட இடத்திற் சந்தனக் குழம்பை ஊற்றியதுபோல் இரவுபட்ட கலக்கந் தீர ஒருவரை ஒருவர் காணலாம் என்ற ஆசையோடு காலை விடிந்தது.

காதல் மனோபாவம் என்பது மட்டுமே உலகளாவிய தனிப் பெருங்காயம் போன்றது. அதில் ஊடுருவித் தோன்றும் பல்வேறு விதமான இன்ப துன்ப உணர்ச்சிகளில் ஒரு வகையான செளந்தரியமும் கவர்ச்சியும் உண்டு. உதயணன்பதுமாபதி சந்திப்பிலும், அதன் பின்னர் வரும் கலக்கத்திலும் மேற்கூறிய காவிய அழகு தோன்றுகிறது.

தன் உள்ளங் கவர்ந்த கள்வனை அன்று காமன் கோவிலில் எவ்வாறேனும் காணலாம் என்ற ஆசையுடன், துக்கம் இல்லாமையால் கலங்கியிருந்த கண்களைக் கழுவிய பின், தெய்வத்தை வழிபட்டாள் பதுமாபதி. முதல் நாள் முழுவதும் இரவு உறக்கம் இழந்து சோர்ந்து போயிருந்த பதுமையை அந் நிலையிற் கண்ட தோழியரும் செவிலி முதலிய தாயர்களும் ஆதுரத்தோடு வினாவினர். “நேற்று வண்டியில் செல்லும்போது உடல் வருந்திய வருத்தமோ? காமன் கோவிலில் வேறு ஏதாவது துஷ்ட தெய்வங்கள் தீண்டி விட்டனவோ? கோவிலில் மாடத்தை வலம் வரும்போது கால்கொப்புளங் கொண்டதோ? பொய்கையில் நெடுநேரம் நீராடியதினால் கண்கள் சிவப்பேறித் தோள்கள் சோர்வடைந்தனவோ? நீ இவ்வாறு தளர்ந்திருக்கக் காரணம் யாது? இந்நிலையில் இன்றும் வண்டியில் ஏறிக் காமன் கோட்டம் செல்ல இயலுமா?” என்று அவர்கள் பதுமையைக் கேட்டனர்.

“விழா முடிகின்றவரை அரசனே மறுத்தாலும் நாம் கோவிலுக்குச் சென்று வரவேண்டுவது அவசியம்! இதை நீங்கள் என்னிடம் கேட்கவே வேண்டாம் இன்றும் விழாவுக்குச் செல்ல வண்டியைக் கொண்டு வருக” என்று பதுமை மறுமொழி கூறவும் விரைவாக வண்டியைக் கொணர்ந்து வாயிலில் நிறுத்தினர்.

உடனே முதல் நாள் போலவே தோழியர் புடைசூழப் பதுமாபதி வண்டியில் வந்து ஏறிக் கொண்டாள். ஆனால் இன்றைக்கு அவளிடம் தென்பட்ட அவசரத்தில் ஏதோ ஒரு பொருளைத் தேடும் ஆர்வம் இருந்தது. அப்படித் தேடிய பொருள் உதயணனின் அழகிய முகமாக இருந்தது.