வெற்றி முழக்கம்/23. யூகியின் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

23. யூகியின் பயணம்

ங்கே சயந்தி நகரில் உதயணன் வாசவதத்தை முதலியோர் இவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில் இவர்களைப் பிடியேற்றி அனுப்பிய பிறகு அங்கே உஞ்சை நகரில் யூகி என்ன செய்தான் என்பதைக் காண்போம். உதயணனைப் பிடியில் ஏற்றி அனுப்பிய பின்பு யூகி, சாதகன் என்னும் குயவனின் குடிலில் சாங்கியத் தாயைச் சந்தித்து மேலே நிகழ்த்த வேண்டிய சில திட்டங்களைப் பற்றிச் சிந்தித்தான் என்பது முன்பே கூறப்பட்டுது. உதயணன் நலமாக வாசவதத்தையுடன் நகர் அடைந்திருப்பான் என்பது தெரியினும், இங்கே உஞ்சை நகரில் தன்னையும் உதயணனையும் தன்னோடு தொடர்புடைய மற்றவர்களையும் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளாதபடி சில பொய்ச் செய்திகளைப் பரப்பிவிட்டுப் பின்புதான் நகர் திரும்ப வேண்டுமென்று கருதினான் யூகி. மலையில் ஓரிடத்தில் ஒரு மரக் கிளையில் விளைந்த தேனும் நாட்டில் ஒரிடத்தில் ஒரு பசுவினிடம் கறந்த பாலும் வேறுவேறு இடங்களில் தோன்றிய பொருள்கள்தாம். ஆனால் அவை ஒன்றுபட்டாலும் பிரிந்திருந்தாலும் ஒரே இன்சுவை உடையவையாகவே இருக்கின்றன. யூகியைப் பொறுத்தவரையில் தனக்கும் உதயணனுக்கும் உள்ள நட்பை, அத்தகையதாகவே எண்ணியிருந்தான். அரசியல் தொடர்புள்ள செயல்களிலும் சூழ்ச்சியோடு கூடியவற்றை மாறுபடாமல் செய்து முடிப்பதிலும் முற்றித் தேர்ந்த யூகி, நட்புணர்ச்சியில் இவ்வளவு அருமையான பிணைப்பு உடையவன்.

பாழ்பட்டு இடிந்து, சில பகுதிகள் மட்டுமே எஞ்சி யிருந்த மாகாள வனத்துக் காளி கோயிலைத் தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் மறைவான வாழ்விடமாகக் கொண்டிருந்த யூகி, மாறுவேடங் கொண்டு உஞ்சை நகரக் கோட்டை வாயிலுக்குள் சென்று நகரில் புகுந்தான். அங்கே பற்பல இடங்களில் பலரும் அறியும்படியாகத் தான் கூறக் கருதியிருந்த பொய்ச் செய்திகளைப் பரப்பினான். “பிரச்சோதன மன்னன், உண்மையான அன்பு பூண்டு உதயணனைத் தன் மகள் தத்தைக்கு யாழ் கற்பிக்கச் செய்தான். புதல்வர்களுக்கும் அவனைக்கொண்டு படைக்கலப் பயிற்சி அளித்தான். உதயணனை விரும்பி அவனுக்குத் தன் மகளை மனமாற அளித்தே பிரச்சோதன மன்னன் இருவரையும் பிடியேற்றி அனுப்பினான். தத்தையும் உதயணன்மேல் மிக்க காதல்கொண்டே அவனுடன் சென்றனள். பிரச்சோதனன் வெகுண்டெழுந்து படையோடு உதயணனைப் பின்பற்றாதிருத்தலே இதற்குச் சான்று” என்று யூகி ஏற்ற காரணத்தோடு இணைய செய்திகளைப் பலரும் அறியப் பொதுஇடங்களில் எடுத்து உரைத்தான்.

‘பிரச்சோதனன், சாலங்காயனுடைய அறிவுரையாலும் தன் மனஅமைதியாலும் உதயணனைப் பற்றி அவ்வளவாகச் சினங் கொண்டிருக்கமாட்டான்’ என்ற முடிவு யூகிக்கு அப்போது நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவேதான் இந்தப் பொய்ச் செய்திகளைச் சில சிறிய உண்மைக் கலப்புடன் முற்றும் மெய்யேபோலப் பரப்புவதில் அவனுக்குத் தடைகள் எவையும் ஏற்படவில்லை. பொது மன்றங்கள், கோயில் முன்றில்கள், யானைச்சேரிகள், படைஞர்வீதிகள், பெருந்தெருக்கள் எங்கும் எவரும் அறியப் பரவிவிட்டது யூகியின் செய்தி, அங்கங்கே அறிந்த பலர், அறியாத சிலருக்குத் தாமே எடுத்துரைத்தனர். உஞ்சை நகரில் யூகி செய்ய வேண்டிய வேலை அநேகமாக நிறைவேறியது. அன்றிரவு மாகாள வனத்துக் காளிகோயில் அதுவரை காணாத பலரைக் கண்டது.

உஞ்சை நகருக்கு அப்பால் வெளியே அமைந்துள்ள பயங்கரமான அந்தக் காளிகோயிலின் சிதைந்துபோன சுவர்களுக்கு நடுவே பலர் கூடியிருந்தனர். இடிந்துபோன சுவர் ஒன்றின்மீது பெரிய தீவட்டி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யூகி அவர்களுக்கு முன் நின்று மனம் உருகும் வகையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். தீவட்டியின் மங்கலான ஒளியில், கோவிலின் சிதையாமலிருந்த உட்புறத்தில் காளிதேவியின் பயங்கரமான பெரிய சிலை தெரிந்து கொண்டிருந்தது. ஏறக்குறையக் கற்பனை உயரம் அமைந்திருந்த பிரம்மாண்டமான அந்தக் காளிதேவியின் சிலைக்கு முன்னால் நின்றுதான் யூகி பேசிக் கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள் அதுவரை உஞ்சை நகரில் அவன் செய்த பல சூழ்ச்சிமிக்க செயல்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாறுவேடத்தோடு கூடிய அவன் மனிதர்கள். உதயணன், பிரச்சோதனனாற் சிறைப்பட்டது கேட்டு, தான் இறந்ததாகப் பொய்யைப் பரப்பிவிட்டு உஞ்சைக்கு மாறு வேடத்தில் யூகி வந்தபோது அவனுடன் வந்தவர்கள்தாம் அத்தனை பேரும்.

உதயணன் பிடியில் ஏறித் தத்தையுடன் தப்பிச் செல்லுகிறவரை யூகிக்கு வெற்றிகரமான செயலாற்றல் ஏற்பட ஒவ்வொரு நொடியும் உதவி புரிந்த பெருமை அவர்களுக்கே உரியது ஆகும். அவர்களிற் பலர் அரண்மனையில் மாறுவேடத்தோடு பணிபுரிந்து அவ்வப்போது வேண்டிய செய்திகளை யூகிக்கு அனுப்பியவர். வேறு சிலர் வாணிகர்களாக வேடம் பூண்டு தக்க உதவிகளைச் செய்தவர். இன்னும் சிலர் முனிவர்போல அமைதியாக இருந்து சமயங்களில் வேண்டிய வேலைகளைச் செய்தவர் இறுதியில் உதயணன் புறப்பட்டுச் சென்றபோது அத்தனை பேரும் படை வீரராக மாறி, எதிர்த்தோரைப் போரில் வென்று உதயணனை நலமாகச் செல்லவிட்ட செயல் என்றும் மறக்க முடியாத நன்றிக்குரியது. அந்த நன்றியையும் ஊருக்குத் திரும்பிச் செல்லும் முறையையும் பற்றித்தான் யூகி அப்போது அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். “நம்முடைய அரசன் சென்ற வழியிலேயே எல்லோரும் கூட்டமாகக்கூடிய நாடு செல்லுதல், பிறர் ஐயப்படுதற்கு ஏதுவாகும். நாட்டு வழியாகவோ, காட்டுவழியாகவோ, மலை வழியாகவோ பலப்பல மாறு வேடங்களில் தனித்தனியே பிரிந்து நாடு செல்லுங்கள். உஞ்சை நகரில் இது காறும் உலாவிய இன்னார் இன்னாரை இன்று காணோம். திடீரென்று அவர்கள் அத்தனை பேரும் மாயமாக எங்கே மறைந்தனர் என்ற ஐயப்பாடு இங்கே யாருக்கும் எழாதபடி சிறிது சிறிதாக உங்கள் செலவு அமையவேண்டும். இயல்பினாலும் குணத்தினாலும் உருவினாலும் வேறுபட்ட மனிதர்களைப் போன்ற நடிப்போடு நம் மன்னவன் உள்ள இடம் சென்று அடையுங்கள்” என்று கூறிவிட்டுத் தான் அங்கே சில வேலைகளைச் செய்து முடித்தபின் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதாகச் சொன்னான் யூகி. கூட்டத்தினர் கலைந்து விடை பெற்றனர்.

ஊர் திரும்புகிற நண்பர்களுக்கு நன்றி கூறியபின் அறிய வேண்டிய வேறு சில செய்திகளையும் கூறி அனுப்பிவிட்டு, முனிவர் தவப்பள்ளிகள் இருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான் யூகி. சில பல தவப்பள்ளிகளில் முனிவர்களாகவும் முனிவர்களுக்குப் பணிவிடை புரிபவர்களாகவும் இருந்த தன்னைச் சேர்ந்தவர்களுக்குக் கூற வேண்டியவற்றை யெல்லாம் குறிப்பாகக் கூறிவிட்டு, அங்கே இருந்த முற்றுந் துறந்த தூயமுனிவர்களிடம் சமயங்களைப் பற்றிப் பேசிவிட்டுப் புறப்பட்டால் தன்னைப் பற்றி அவர்கள் ஐயுற இடமிருக்காது என்றெண்ணினான் யூகி. மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணங்களாலும் பரிசுத்தமான அவர்கள் உள்ளத்தில் ஐயமுறச் செய்வது துன்பத்தை வலிய தேடிக் கொள்வது போலாகும். ஆகையால் அவர்களோடு அன்றைய நேரத்தையும் மறுநாள் பகற் பொழுதையும் சமய விசாரம் செய்து கழித்தான் யூகி. பின்னே எப்போதும் அறிமுகமே இல்லாத வேற்று மனிதர்களைப் போல் மீண்டும் தமக்குள் குறிப்பால் பேசிக் கொண்டனர் யூகியும், நண்பரும். அதற்கு அப்பால் மாலையில் யூகி, சாதகன் என்னும் குயவன் வீட்டிற்குச் சென்றான்.

உதயணன்பால் மெய்யன்பு கொண்ட சாதகன், அவனை மீட்க உதவி புரிவதற்காகவே யூகியோடு உஞ்சை நகருக்கு வந்தவன். அன்பும் நன்றியும் உள்ளவன். பரம்பரை பரம்பரையாக உதயணனுடைய நாட்டில் முன்பே அரண்மனைக் குயவராக இருந்தவர்களைப் பெற்ற குடியில் தோன்றியவன் சாதகன். கோசாம்பி நகரத்துக் குயக்குடியிலேயே, அவர்கள் குடி உயர்ந்த குடி. அரண்மனைக் குயவனாக இருந்ததனால் மட்டுமல்ல; இயற்கையிலேயே நாகரிகப் பண்புகள் படைத்தவன் சாதகன். உதயணன் சிறைப்பட்டது அறிந்து, வைசாலி நகரத்தில் இருந்த யூகி உஞ்சைக்குப் புறப்பட்ட போது, உதயணனுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் வலியத் தானே வந்து யூகியுடன் சேர்ந்து கொண்டான், நன்றி மிக்க அந்தக் குயமகன். உஞ்சை நகரில் கோட்டைப் புறத்தில் ஒரு குயவனாகக் குடியேறிச் சிறு வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த அவன், அந்த வாழ்க்கை முழுவதையுமே உதயணன் நலத்திற்காகப் பயன்படுத்தியதை யூகி நன்கு அறிவான். நகரின் கோட்டைப் புறத்தில் அவன் இருந்ததால் யூகியின் சூழ்ச்சித் திறத்தில் உருவாகிய எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவோ வசதியாக இருந்தது. முன்னொரு முறை இதே குயவன் வீட்டில்தான் உதயணனை நகருக்கனுப்பியபின் சாங்கியத்தாயை யூகி சந்தித்துப் பேசினான். நகரின் உள்ளே இருந்து செய்திகளை அறிந்து யூகிக்குத் தெரிவிக்கவும், யூகி கூறிய செய்திகளை நகருக்கு உள்ளே தக்கவருக்குச் சொல்லி அனுப்பவும் அவன் செய்த உதவி அளக்க முடியாதது.

யூகிக்கு அவ்வப்போது மந்திராலோசனைக் கூடமாகவும் பயன்பட்டிருக்கிறது அவன் மனை. அத்தகைய குயவனுடைய வீட்டிற்குத்தான் தவப் பள்ளியிலிருந்து யூகி வந்து சேர்ந்தான் இப்போது. அங்கே அவன் எதிர்பார்த்தது போலவே சாங்கியத் தாய் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவளை வரவேற்று முகமன் கூறியபின் யூகி நிகழ்ந்தவற்றை அவளுக்கு விரிவாகச் சொன்னான். அவளும் நகர் திரும்ப விரும்புவதாகக் கூறினாள். பசியையும் வெம்மையையும் போக்கும் மருந்துக் கலப்புடன் கூடிய ஒரு வகை அவற் பொதியையும் நீருண்பதற்கு நீர்க்கரகத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு அதற்குரிய விவரங்களை யூகி அவளுக்குக் கூறினான். சாங்கியத் தாய் அவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். தாங்கள் புறப்பட வேண்டிய நாளையும் அதற்கான ஏற்பாடுகளையும்கூட யூகி விவரித்தான். சாதகனும் சாங்கியத் தாயும் யூகியின் மதிநுட்பத்தை வியந்தவாறே கேட்டனர். யூகி, சாங்கியத் தாய், சாதகன் மூவருமே உதயணன்பால் நன்றி மிக்கவர்தாம். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக அதை வெளிக்காட்ட முடிந்தது. வெற்றி பெற்ற உதவி, மன நிறைவை அளித்திட அவர்கள் புறப்பட முற்பட்டார்கள்.

சாதகன் மனையில் சாங்கியத் தாயிடமும் சாதகனிடமும் விடை பெற்றுக்கொண்டு நேரே யவனப்பாடியை நோக்கிச் சென்றான் யூகி. சாதகனைப் போலவே உதயணன்பால் நன்றியுணர்வு மிக்கவனாகிய ஒருவன் யூகியோடு வந்திருந்து, யவனக் கம்மியர்கள் நிறைந்த யவனப்பாடியில் தங்கி வேலை பார்ப்பவன்போல நடித்து, அவசியமானபோது யூகிக்கு உதவி செய்து வந்தான். அவனைக் காணவே யூகி சாதகன் மனையிலிருந்து யவனப்பாடி சென்றான். அவனைச் சந்தித்துத் தான் சாங்கியத் தாயுடன் நகருக்குச் செல்வதை அவனுக்குக் கூறி, தம்மவரில் அங்கேயிருந்து புறப்பட வேண்டியவர்கள் எல்லோரையும் அனுப்பிய பின்னே அவன் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பதையும் அவனுக்குத் தெளிவு செய்தான் யூகி. பூட்டி இழுக்க எருதுகளின் உதவியில்லாமலே, முற்றிலும் பொறிகளினால் இயங்கவல்ல ஒர் எந்திர வண்டியை, யவனப்பாடி நண்பன் யூகிக்கு அளித்தான். யூகி அதைப் பெற்றுக்கொண்டு அவனைப் பாராட்டி வாழ்த்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டான். சாங்கியத் தாயை அந்த எந்திர வூர்தியில் புட்பக நகர எல்லைவரை அழைத்துப் போகலாம் என்று கருதினான் யூகி. சாதகனை வேறு வழியாக நடந்து வருமாறு கூறியிருந்தான். அவற்பொதியுடனும் நீர்க்கரகத்துடனும் குறித்த இடத்தில் சாங்கியத் தாயை அந்த எந்திர வண்டியின் உட்புரத்திற் அமரச் செய்து, அதைச் செலுத்தினான் யூகி.

அந்திமயங்கி மாலை நேரமாகி இருந்தது அப்போது. வானத்திலிருந்து இறங்கிப் பூமியின்மேல் ஒடும் ஒரு வையமேறிச் செல்லவிரும்பி அவ்வாறே ஏறிச்செல்லும் இந்திரகுமரன்போல யூகி சென்றான். எந்திர வையம் சற்று நேரத்தில் புறநகரத்தைக் கடந்தது. பூந்துறைகள், பொய்கைகள் இவைகளை யெல்லாம் கடந்து வண்டி வேகமாகச் சென்றது. நகர எல்லை முடிந்தது. கான்யாறுகளும் மணல் வெளிகளும் உயர்ந்த மலைச்சரிவுகளுமாகத் தோன்றிய புட்பக நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் இப்போது சென்று கொண்டிருந்தனர். நாட்டு வழியும் வளமிக்க காட்டு வழியுமாக மாறிமாறிப் பயணம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடையாற்றலற்ற, சிள்வண்டுகள் அரற்றும் காட்டுப் பாதையாகச் சில போதும், குறும்பர்கள் வாழும் வழியிற் சில போதுமாக வையம் சென்றது. புட்பக நகர எல்லைக்கு இப்பால் ஒரு சிற்றுாரில் சாங்கியத் தாயை இறக்கி வழி விவரங்களைத் தெளிவாகக் கூறிய யூகி, அவளை அங்கிருந்தே பிரிந்து செல்லுமாறு அனுப்பிவிட்டான். தான் மட்டும் தனியாக வையத்தில் பயணம் செய்தபடியே புட்பக நகரத்திற்கு நானுற்று நாற்பது எல்லைத் தொலைவிற் சென்று, எந்திர வண்டியை ஓரிடத்தில் ஒளிந்து வைத்துவிட்டு நடந்தே புட்பக நகருக்குள்ளே போனான். முதல் நாள் உஞ்சையிலிருந்து புறப்பட்ட அதே இருள் படரும் அந்தி மாலை நேரத்தில் இன்று புட்பகத்தின் கோட்டை வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவன். அரண்மனைக்குள் தன்னை இன்னாரென்று கூறியனுப்பிய யூகியைக் காவலர்கள் திரும்பி வந்து மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.