வெற்றி முழக்கம்/31. இராசகிரிய நகரம்

விக்கிமூலம் இலிருந்து

31. இராசகிரிய நகரம்

.ன்பச்சூழ்நிலையாக இயற்கை காட்டும் எழிற் காட்சிகளைத் துன்பத்தில் ஆழ்ந்து போனவன் கண்டால் அவை அவனுக்குத் துன்பத்தையே மிகுதியாகக் கொடுக்கும். அந்த நிலையில்தான் உதயணன் அப்போது இருந்தான். காண நேர்ந்த காட்சிகள் எல்லாம் அவனைப் பித்தனாக்கி விட்டன. ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் அரற்றிக்கொண்டு வந்தான். ஆண்மான் காவல் செய்யக் குட்டிகளைத் தழுவிக் கொண்டு திரியும் பெண்மானைக் கண்டு தவித்து, தத்தையின் விழிகளை நினைவு கூருவான். உடனே அப்பெண் மானை நோக்கித் “தத்தை சென்ற உலகை நீ அறிவாயோ? அறிந்தால் எனக்கும் கூறு; யானும் அங்கே செல்வேன்” என்பான்.

“அழகிய தோகை விரித்தாடும் ஆண்மயில்கள் பக்கத்தே இருக்க, நடைபழகிக் கற்கும் மயிற் பேடைகளே இறந்து போன தத்தை எங்கே? அவள் எவ்வாறு மாறிப் பிறப்பு எய்தியிருக்கிறாள்? இதை நீங்கள் ஆராய்ந்து கூறினால் உங்களுக்குக் குற்றமும் உண்டோ?” என்று மயில்களை நோக்கிக் கேட்பான். வெண் சிறகுகளையும், சிவந்த சிறுகால்களையும், நுண்ணிய புள்ளிகளையும் உடைய அழகிய ஆண் புறாக்களைக் கண்டு, “தத்தை இருக்கும் இடத்தைச் சொன்னால் நான் எனது ஆசை தீர அங்கே செல்வேன். சொல்ல வில்லையானால் உங்கள் பேடையுடன் சேரப்பெறாத துன்பத்தை நீங்களும் அடைவீர்களாக!” என்று கூறுவான். “தத்தை இருக்கும் இடத்தை அறிந்தால். மலர்கள் பொருந்திய அவள் கூந்தலில் உங்களுக்குத் தேன் விருந்து கிடைக்கும். எனக்கும் இன்ப விருந்து கிடைக்கும். நீங்கள் அதைச் செய்தால் அது எனக்குக் கைமாறு நிகராகாத பேருதவியாக அமையும்!” என்று வண்டுகளைப் பார்த்து இரங்கிக் கூறுவான். “முகிற் கணங்கள் தழுவி விளையாடும் பொதிகை மலையில் பிறந்து நறுமண மலர்களை மலரச் செய்து உலா தொடங்கும் தென்றலே! நீ என் மேனியைத் தீண்டிச் சென்ற இதே உணர்ச்சியுடன் தத்தை உள்ள இடத்தை நாடிச் சென்று அவள் பொன்மேனியையும் தீண்டுவாயாயின் அது நின் பெருந்தகைமையைக் காட்டும்” என்று வீசும் தென்றற் காற்றை விளித்துப் பேசுவான்.

இவ்வாறே மகதநாடு செல்லும் வழியில் அங்கங்கே கண்ட தோற்றங்களால் துயர் நிறைந்த சித்தப் பிரமை யடைந்து மேற்கண்டவாறு பேசாதவற்றோடு எல்லாம் பேசிக் கொண்டு பிதற்றியவாறே சென்றான் உதயணன். மகத நாட்டு எல்லையை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர். உதயணனை இனியும் அவ்வாறு பிதற்றவிடுவது கொண்டிருக்கும் மாறுவேடத்திற்கும் காண்போர்க்கும் பொருந்தாது என்பதை உணர்ந்த நண்பர், அவனை ஆற்றித் தன்நிலைக்குக் கொணர்ந்தனர். உதயணனும் தன் நிலையுணர்ந்து, துயரங்களை அடக்கிக் கொள்ள முயன்றான். சூழ்ந்திருந்த இடம் அவனை அவ்வாறு செய்யத் தூண்டியது.

மகத நாட்டின் எல்லைக்குள் புகுந்தபின் உதயணன் முதலியோர் எல்லோரும் கூட்டமாக ஒரே வழியிற்செல்லாது தனித்தனியே பிரிந்து சென்றனர். முடுக்கு வழிகளில் மறைந்து செல்வது ஐயப்படுவதற்குரிய செயலாகும் என்றுணர்ந்து அவர்கள் அகன்ற பெருஞ்சாலைகளின் வழியாகவே நடந்து போயினர். அங்கனம் போகும்போது இடையிடையே உதயணனைத் தேற்றுவதற்காக எவ்வளவோ கற்பனைகளைக் கூறி நாடகமாக நடித்து அவனைத் தளர்வடையாமல் அழைத்துச் சென்றனர் நண்பர்கள். மகத நாடு இயற்கை வளஞ் சிறந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்குரிய நிலங்களும் அங்குண்டு. வீட்டுலகத்தைப் போன்ற பழமையும் சிறப்பும் பொருந்தியது மகதநாடு. ஒழுக்கத்தால் மேம்பட்ட தவத்தோர் பலரை யுடையது. என்றும் குன்றாத புகழும் பெருமையும் படைத்தது. உலகிற்கு ஒரு திலகம் போன்றது என அதனைப் புகழ்ந்து கூறுவது வழக்கம். அந்நாட்டில் செல்வக் குடிகள் மிகுந்திருந்தன. வறுமையாளரைத் தேடினாலும் அங்கே காணமுடியாது. இத்தகைய மகத நாட்டிற்குத் தலைநகரமாக விளங்கியது இராசகிரிய நகரம். ஆறும் குளமும் பொய்கையும் அருமையான பூஞ்சோலைகளுமாகக் காணப் பசுமை கொழித்து விளங்கியது இராசகிரிய நகரம். பல விண்மீன்களுக்கு நடுவே திங்களைப் போல மகத நாட்டிலுள்ள மற்ற ஊர்களுக்கெல்லாம் நடுமையாக நின்று முதன்மை வகித்தது அந் நகரம். காவல்முறை வழக்கப்படி ஒரு நாட்டின் தலைநகருக்குத் தேவையான எல்லா இலட்சணங்களும் அதற்கு இருந்தன. தெருக்கள், வீதிகள் ஆகியவற்றின் அமைப்பு, பல பேரிதழ்களையும் சிற்றிதழ்களையும் கொண்ட ஒரு மலர்போலக் காட்சி அளித்தது. கோட்டை மதில், படைச்சேரி, கணிகையர் தெரு, வேளாளர் தெரு, வாணிகர் தெரு, அந்தணர் தெரு, அமைச்சர் தெரு என இவை முறையே வட்ட வட்டமாகச் சுற்றியிருக்க அரசர் அரண்மனை இவற்றிற்கு நடுமையாக அமைந்திருந்தது. இதனால் இத்தகைய அமைப்பு இந்திரனின் அமரர்பதிக்கும் கிடையாது என்று எட்டுத்திசையும் தன்னைப் போற்றுமாறு பிராபல்யம் அடைந்திருந்தது அந்த நகரம். மகத நாட்டின் கோநகராகிய அதற்குள் புகுந்தபோது உதயணனும் நண்பரும் வியந்தனர். ஆனால் உதயணன் மனத்தில் ஏற்பட்ட வியப்பு மீண்டும் மீண்டும் துயர நினைவுகளையே அடையச் செய்தது. வாசவதத்தையின் இதயத்தோடு கலந்து பழகிய அவன் காதல் உள்ளம் அவ்வளவு எளிதாக அவளை மற்ற நினைவுகளில் மறந்துவிட முடியவில்லை. உஞ்சை நகரில் புனலாடு துறையிலிருந்து தத்தையோடு தன் நாடு மீண்ட அன்று, அவள் யானைமேல் தன் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த இதே நிலையில் அரிட்ட நகரத்தைக் கண்டு வியந்த வியப்பும் அந்த அவசரமயமான இன்ப நினைவும், அவன் மனத்தில் தோன்றிவிட்டன போலும் இடைவிடாமல் பற்றி வாட்டும் அந்தப் பழைய எண்ணங்களில் துயரமிருந்தாலும் மற்றோர் புறம் துயரத்தோடு கலந்த ஒரு வகையான இன்பமும் தோன்றி மறைந்துகொண்டு தானிருந்தது. மற்றவர்கள் இராசகிரிய நகரின் அழகான காட்சிகளில் இலயித்து வியந்து கொண்டிருந்தபோது உதயணன் உள்ளம் மட்டும் இப்படி ஒர் இன்னல் மண்டிய நிலையில் அவனைக் கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது. மீண்டும் மீண்டும் வாசவதத்தையையே நினைக்கச் செய்தது.

திட்டமிட்டுக் கருதியவாறு மகத நாட்டிற்கு வந்து இராசகிரிய நகரத்தையும் அடைந்தாயிற்று. நண்பர் இதுவரை உதயணனைத் தங்கள் ‘நாடகத்'திற்கு ஏற்றவாறு நடிக்கச் செய்து ஆறுதலளித்து விட்டனர். மகத நாட்டிற்கு வந்து அதன் தலைநகராகிய இராசகிரிய நகரத்தை அடைந்து விட்டாலும், அங்கே யாரும் ஐயம் கொள்ளாத வகையில் தாம் தங்குவதற்கு ஏற்ற இடம் தேடும் கவலை இப்போது நண்பர்களுக்கு ஏற்பட்டது. பல்வேறு வகை நாட்டினரும், குடியினரும், தொழிலினரும் தனித்தனியே வசிக்கும் அநேகக் குடியிருப்புகள் நிறைந்தது இராசகிரிய நகரம்.

படைவீரர்களும் யவன நாட்டு வீரக்குடி மக்களும் குடியேறி வசிக்கும் தனித்தனிச் சேரிகளே நூற்றுக்கணக்கில் அங்கே இருந்தன. சித்திர சாலைகளும் கட்டடக் கலைஞர் வாழும் இடமும் அறவுரை மன்றங்களும், புதிதாகப் பிடித்து வந்த யானைகளைப் பயிற்றும் பயிற்சி வெளியும், வருவோர்க்கு வரையாது சோறிட்டு மகிழும் அட்டிற்சாலைகளும், இன்னும் எண்ணற்ற பல பொதுஇடங்களும் அந்நகரில் பார்க்க உண்டு. தேவகோட்டங்களும், கடவுட் பள்ளிகளும் மிகுந்து விளங்கின. பூங்காக்கள் சூழ நடுநடுவே அலங்கார மேடைகளும், சிறுசிறு பூம்பொய்கைகளும் சுற்றி அழகு செய்யத் தோன்றும் காமன் கோவில்தான் அந்த நகரிலேயே அதிக எழில் அமைந்தது. இந்தக் காமன் கோவில் புறநகரில் இடம் பெற்றிருந்தது. இதன் வடபுறம் பூஞ்சோலையை ஒட்டிப் படியும் துறைகளுமாகக் கவின்கொண்டு காணும் கட்டுக் குளம் ஒன்றுண்டு. அதற்கு அப்பால் பசும் போர்வை போர்த்த நிலமகள் மேனிபோலப் பரந்த வயல் வெளி காணப்படும். இக் குளத்தின் கரையில் முனிவர்களும் அந்தணர்களும் தங்கிவாழும் தாபதப் பள்ளி ஒன்றும் அமைந்திருந்தது.

காமதேவன் கோவிலும் தாபதப் பள்ளியும் ஒன்றுக்கொன்று மிகச் சமீபத்திலேயே இருந்தன. இரண்டையும் இணைக்கும் சோலைக்கு நடுவே போய் வருவதற்கு ஏற்ற விரிந்த வழியும் உண்டு. அங்கங்கே புன்னை, கமுகு, தென்னை முதலிய வளர்ந்த மரவகைகளும், நிலத்தில் தங்கியுள்ள நீரின்மேல் நெருப்பே மலராக விரிந்ததுபோலத் தாமரைத் தடாகங்களும், வயல்வெளியில் மேலே வெண்பட்டுக் கொடிகள் போலப் பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களுமாக, இவ்விரண்டும் அமைந்திருந்த சூழ்நிலை மனத்தைக் கவரக் கூடியதாக இருந்தது. எனவே உதயணனும் நண்பர்களும், ஊருக்கு ஒதுங்கிப் புறநகரில் ஒரு பகுதியாக அமைந்திருந்த இந்தத் தாபதப் பள்ளியைத் தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தங்குமிடம் பற்றிய கவலை அவர்களுக்கு இப்போது நீங்கிற்று. அங்கும் கூட மற்றவர்களுடைய பழக்கம் மிகுதியாக இல்லாத ஒரு பகுதியையே தங்களுக்கு உரிய இடமாக அமைத்துக் கொண்டனர். இங்கே தங்கியபின்பும் உதயணனின் துயரவேகம் தணிந்தபாடில்லை. இசைச்சன் கூறிய வார்த்தைகளை எண்ணி அவற்றில் அவன் நம்பிக்கை வைத்திருந்ததால், அந்த நம்பிக்கை அழிந்துவிடாமல் இருப்பதற்காகவாவது நண்பர்கள் சூழ்ச்சிசெய்ய வேண்டியிருந்தது.

தவ ஒழுக்கத்தால் தெய்வீக ஒளிபெற்று அழகுடனே விளங்கும், ‘காகதுண்டக முனிவர்’ என்னும் முனிவரிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்துத் தாங்கள் செய்திருக்கும் தந்திரத்துக்கு ஏற்ப உதயணனிடம் நடந்துகொண்டு, அவனுக்கு நம்பிக்கையூட்டுமாறு நண்பர் வேண்டிக்கொண்டனர். அதன்படியே அந்த முனிவர் உதயணன்பால் வந்து, “இரண்டு மாதகாலம் விரத ஒழுக்கத்தை மேற்கொண்டு தத்தையைப் பற்றிய துயர நினைவுகள் மனத்தில் எழவும் செய்யாதபடி, ஐம்புலன்களையும் காத்து ஒழுகினால் இறந்து போன அவளை நீ பெறுவது எளிது” என்று வற்புறுத்திக் கூறிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு உருமண்ணுவா முதலிய நண்பர், “எத்தனையோ பல அருஞ்செயல்களை மந்திர வலிமையால் செய்து காட்டுபவர்களைக் கண்டும் கேட்டும் இருக்கிறோம். ஆனால், செத்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தையை மந்திரத்தால் நிகழ்த்துவோரைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஏதோ நம்முடைய புண்ணிய வசத்தாலோ என்னவோ? இம்முனிவர் நமக்குக் கிடைத்தார். நிச்சயமாக இவர் தத்தையை உயிருடன் அளிப்பார் போலத் தெரிகிறது” என்றனர். இவ்வாறு கூறி ஆறுதலை வலுப்படுத்தினர். நண்பர்கள் திட்டம் உதயணனை ஏற்றபடி தேற்றி எவ்வாறேனும் மகத நாட்டின் கோநகரில் இன்னும் பல நாள் தங்கச்செய்து அதன் மூலமாக மகத நாட்டுப் பேரரசனாகிய தருசகனுக்கு மிகவும் வேண்டிய உறவினனாக்கி விடுதல் வேண்டும் என்பதே. இதற்காகவே உதயணனை அவன் போக்கில் செல்லவிட்டுச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிப் புற நகரில் ஒதுக்கமான பகுதியாகிய அத் தவப் பள்ளியில் அவர்கள் வசித்து வரலாயினர்.