உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி முழக்கம்/18. நெருங்கிய துன்பம்

விக்கிமூலம் இலிருந்து
18. நெருங்கிய துன்பம்

கற்பொழுது ஒரு வழியாகப் பொய்கைக் கரையில் அந்த இலவம் புதரிடையே கழிந்துவிட்டது. அழற்குழம்பென மேல்வானம் சிவப்புற அந்திப் பொழுது மெல்ல வந்தது. பறவைகளெல்லாம் பல்வேறு ஒலிகளைச் செய்து கொண்டே தத்தம் கூடுகளை அடைந்தன. பக்கத்துப் பொய்கையில் கதிரவனுக்குக் கைகூப்பி விடை கொடுப்பன போல மலர்கள் குவிந்தன. வயந்தகன், உதயணனை நோக்கி மேலே என்ன செய்யலாம் என்பது பற்றிச் சில விவரங்களைக் கூறினான். “இருட்போது வந்துவிட்டதால், அந்தக் காட்டை அடுத்திருக்கும் உருமண்ணுவாவினால் ஆளப்படும் சயந்தி நகரத்துக்குக் கூடப் போவதற்கில்லை. இருளைப் பொருட்படுத்தாது சென்றால் பல துன்பங்கள் நேரும். தத்தையோ மிகவும் வலுவிழந்து காணப்படுகிறாள். ஆகையால் இப்போது செல்லுதல் நன்றன்று. யான் நாம் நண்பனாகிய இடவகனால் ஆளப்படும் புட்பக நகரம் சென்று, நமது உதவிக்கு ஒரு படையும் பிறவசதிகளும் பெற்றுக் காலையில் வருவேன். அதுவரை நீ இவர்களோடு இங்கேயே இரு” என்று வயந்தகன் கூறிவிட்டுச் சென்றான்.

புட்பக நகரம் புறப்படத் தன்னிடம் விடை பெற்றுக் கொண்ட வயந்தகனை நோக்கி உதயணன் சில கூறினான்: “இடவகனும் யானுமே அறிந்த அடையாளச் செய்தி ஒன்று உண்டு. அதைக் கூறினாலொழிய நின்னை அவன் நம்ப மாட்டான். நீ நம் நிலையையும் நிகழ்ந்த யாவற்றையும் இடவகனிடம் கூறிப் படையுதவியும் பிறவும் பெற்று வரல் வேண்டும். இந் நேரத்தில் நாம் உறுதியாக நாடு திரும்புவது இடவகனிடம் நீ பெற்று வரும் உதவியைப் பொறுத்தே இருக்கிறது” என்று இவ்வாறு உரைத்து, வயந்தகனிடம் அந்த அடையாளச் செய்தியையும் கூறினான் உதயணன். வயந்தகன் உதயணனை வணங்கிவிட்டுப் புட்பக நகரம் புறப்பட்டுச் சென்றான். வயந்தகன் புறப்படும்போது இரவு நேரம் ஆரம்பமாகி விட்டது. வயந்தகனை அனுப்பியபின் உதயணன் தத்தையையும் காஞ்சனையையும் இலவம் புதரின் உட்பகுதியில் நிம்மதியாகத் துரங்குமாறு கூறிவிட்டுத் தான் வெளிப்புறம் காவலாக நின்று கொண்டான். உள்ளே துயிலும் தத்தையின் எழிற் காட்சியில் தன்னுடைய துன்பங்களை யெல்லாம் மறந்தவனாகி இருந்தான் உதயணன். நீண்ட அந்த இரவு முழுதும் அவன் துரங்கவே இல்லை. வலக்கரத்தில் ஏந்திய வாளுடனே பொழுது புலரும்வரை காக்க வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. பொழுதும் ஒருவாறு புலர்ந்தது. இலவ மரத்துக் கிளையொன்றிலிருந்த மயில், பச்சோந்தி யொன்று தன்மேல் வாலைச் சுழற்றிக்கொண்டு வருவதுகண்டு கதறுவதுபோலக் கத்திக் கொண்டிருந்தது. கிழக்கே அடிவானம் சிவந்தது. உதயணன் கண்கள் தூக்கத்தால் சுழன்றன. தூக்கத்தை விடுத்துப் பொய்கையில் நீராடிக் காலைக் கடன்களைச் செய்யத் தொடங்கினான் அவன்.

காலைக் கடன்களை முடித்துவிட்டுத் தன் தனிமை நிலையையும் தனக்கு வரிசையாக நேரும் துன்பங்களையும் எண்ணியவாறே புட்பகநகர் போன வயந்தகனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் உதயணன். தத்தையின் சோர்ந்த நிலை கண்டு அவளைத் தேற்றிப் பேணுமாறு காஞ்சனைக்குக் கூறிவிட்டு, வழியோரமாக நகர்ந்து சற்றுத் தொலைவிலிருந்து எங்காவது வயந்தகனது படை வருகிறதா, என்று பார்க்கப் புறப்பட்ட உதயணனை ஒரு தீய நிமித்தம் தடை செய்தது. இலவ மரத்தின் உச்சியிலே அமர்ந்திருந்த வயவன் என்னும் பறவையொன்று பலமுறை கத்தியது. அது குரல் கொடுத்ததிலிருந்து விரைவில் எவரோ பகைவர் படை தன்னை நெருங்க இருக்கிறது என்றறிந்தான் உதயணன். முதன் முதலில் தான் பிரச்சோதனனால் வஞ்சக யானையின் மூலம் சிறைப் பிடிக்கப் படுவதற்கு முன்புங்கூட இதே பறவை கத்திய நிமித்தம் அவனுக்கு நினைவில் எழுந்தது. எதற்கும் முன்னேற்பாடாக இருக்க வேண்டுமென்ற கருத்தினனாய் வில்லைத் திருத்தி அதிற் பொருந்திய அம்புடன் இலவம் புதரின் முன்பு நின்று கொண்டான் உதயணன். இஃது இவ்வாறு இருக்கப் பத்திராபதி முன்பு இறந்து விழுந்து கிடந்த வழியோரமாக வந்த கொள்ளையடித்துத் துன்புறுத்தும் தொழிலையுடைய வேடர் சிலர் சந்தேகமுற்று நின்றனர். அந்தப் பகுதியில் மறைந்து வாழ்பவர்களாகிய அவர்கள் வழியிற் செல்லும் வணிகர் கூட்டங்களைக் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதுமே தொழிலாக உடையவர்கள். சவரர், புளிஞர் என்ற அந்த இருவகை இனத்து வேடர்களும் அன்று காலையில் பத்திராபதியின் அடிச்சுவடு கண்டு, அதைப் பின்பற்றியே பதுங்கிப் பதுங்கி வந்தனர். அடிச்சுவடு கண்டதும் அது ஏதோ ஒரு நாட்டுப் பிடியினுடைய அடிச்சுவடு என்பதும் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. அதில் சென்றோர் செல்வமிக்கவராக இருக்க வேண்டுமென்றும் அனுமானித்தனர். சுவடு பற்றி வந்த அவர்கள் பத்திராபதி வீழ்ந்து கிடந்த இடத்திற்கே வந்து சேர்ந்தனர். அங்கே ஆடவர் பெண்டிர் கால் அடிகளின் அடையாளங்களையும் கண்ட அவர்கள் சந்தேகம் உறுதிப் பட்டது. அங்ஙனம் சந்தேகந் தோன்றினாலும் யானையில் வந்தவர்கள் இதற்குள் வெகு தொலைவு சென்றிருக்க வேண்டும். ஆகையால் அவர்களிடம் கொள்ளை அடிப்பதற்கு இயலாமற் போயிற்றே என்று வேடர் வருந்தி உரைத்தனர். அவர்கள் கூற்றை மறந்து முதிய வேடனாகிய நிமித்திகன் ஒருவன், பறவை ஒன்றின் ஒலி நிமித்தத்தைக் கேட்டு “நீங்கள் நினைப்பது தவறு. இப் பிடியில் வந்தோர் இங்கேதான் பக்கத்தே ஒரிடத்திலே தங்கியிருக்க வேண்டும. நாம் விரைந்து சென்றால் அவர்களைக் காணலாம். பெரும் பொருள் கொள்ளையாகக் கிட்டும். ஆனால் வீரம் மிக்க ஆண் மகன் ஒருவனுடன் கடினமாகப் போரிட்டே அப் பொருளை நாம் அடைமுடியும்” என்று கூறினான். அவ்வாறு கூறி முடிக்கவும் நெஞ்சில் ஈவிரக்கமற்ற அந்த வஞ்சகர் கூட்டம் ஒன்றுகூடி எழுந்துவிட்டது. பிடிவீழ்ந்த இடத்திலிருந்து செல்லும் ஆடவர் பெண்டிர் அடிச்சுவடுகளை இடை விடாமல் பின்பற்றிய வேடர் இலவம் புதரை நெருங்கி விட்டனர். அங்கே சுற்றித் சுற்றித் தேடினர். அப்போது பொய்கைக்கு எதிரே இலவம் புதரின் வாயிலில் நின்று கொண்டிருந்த உதயணனைச் சிலர் பார்த்து விட்டனர். “அதோ அதோ, அகப்பட்டுக் கொண்டான்” என்ற கூக்குரலுடன் இலவம் புதரைச் சூழ்ந்துகொண்டு தாக்க ஆரம்பித்தனர் வேடர். உதயணன் தன்னை எதிர்த்துச் சூழும் பகைவரை வில் முனையில் அம்பு மழை பொழிந்து விரட்ட ஆரம்பிக்கும்முன் புதருக்குள் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். ஒன்றும் புரியாத கலவரத்துடனே கண்களில் அச்சம் ஒளிர நடுக்கத்தோடு வெளியே நோக்கிக் கொண்டிருந்த தத்தையைக் காக்கும்படி, உள்ளே உடனிருந்த காஞ்சனைக்குக் கூறிவிட்டு வில்லை வளைத்தான் உதயணன்.

எதிர்த்த வேடர், இது கண்டு திகைத்து நின்றனர். திகைப்பு ஒருபுறம் இருந்தாலும் எளிதாகக் கையில் சிக்கிய கொள்ளையை விட்டுவிட அவர்கள் விரும்பவும் இல்லை. தனியொருவனாக நின்ற உதயணனை நெருங்கி எதிர்த்து வெற்றி கொள்ள முயன்றார்கள். “யானை இறந்து போனதும் இங்கிருந்து தப்பி நாடு சென்றுவிடலாம் என்று கருதினாய் போலும்! நீ எப்படிப் போய்விட முடியும்? உன் உயிரை உண்ணாமல் உன்னை விட்டுவிட மாட்டோம். மரியாதையாக நீ யார் என்பதைச் சொல்லிவிடு” என்று கூறிக்கொண்டே அவனை வாட்ட ஆரம்பித்தது வேட்டுவர் கூட்டம்.

அவர்கள் செய்த வெந்துயர்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் உதயணன் வாய் திறந்து பதில் சொல்லவே இல்லை; அவன் கையிலிருந்த வில்லே விடை கூறிக் கொண்டிருந்தது. அந்த வீர வில்லிலிருந்து நொடிக்கு நொடி பறந்து கொண்டிருந்த அம்புகள் வேடரில் பலரை விண்ணுக்கு அனுப்பிவைத்தன. சமயமும் சூழ்நிலையும் எதிர்பாராத துன்பங்களைத் தரும்போது, எதிர்பாராத துணிவையும் மனிதனுக்குக் கொடுத்து விடுகின்றன. கொலைக் கொடுமைகளுக்குத் தன்நிகரற்ற காட்டு வேடர்களை ஒற்றை மனிதனாக நின்று எதிர்க்கும் ஆற்றலும் உதயணனுக்கு அப்படித்தான் ஏற்பட்டது. சுற்றி வளைக்கும் பலர்க்கு இடையில் உதயணன் ஒருவனே பலராக நின்று, பலரோடும் போரிட்ட விந்தையை நினைக்க நினைக்க எதிரிகளுக்கே வியப்பூட்டியது. தங்கள் சாமர்த்தியத்தைத் தவிரப் பிறர் திறமையை வியப்பதை வாழ்க்கையில் இழிந்த பண்பாகக் கருதுபவர் அக் காட்டு வேடர். ஆனால், உதயணனைக் கண்ட பின்னர், அந்தக் கொள்கையைத் தாங்களாகவே அவர்கள் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. இவன் வெறும் மனிதன்தானா? அல்லது கூற்றுவனின் வேற்றுருவமோ?’ என்று ஐயுறவு கொண்டனர். வில்லையும் அம்பையும் அவன் பயன்படுத்தும் முறைகளில் புதிய புதிய நுணுக்கங்கள் அவர்களுக்குப் புலப்பட்டன. ஒரு நொடியில் சூழ்ந்துள்ள பலருக்கும் அதிர்ச்சி உண்டாகும் வண்ணம் கண்கள் சுற்றிச் சுற்றிச் சுழன்று பறக்கும் படியாக அவைகளை உதயணன் எய்த முறையை வியவாத வேடர் இல்லை. உள்ளே தத்தை முதன் முதலாக உதயணனின் போர்த்திறத்தைக் கண்டு காதல் உரிமை கலந்த மகிழ்ச்சியோடு வியந்து கொண்டிருந்தாள். போரின் அவசியம் தன் பொருட்டென்ற துக்கமும் அவளுக்கு இருந்தது.

வேடர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கோபமாக மாற்றிக்கொண்டு, புள்நிமித்தம் கூறிய முதிய வேடன்மேல் அதைச் செலுத்தினார்கள். பகைவனிடத்தில் அரும்பெரும் திறனைக் காண்கின்ற ஒவ்வொருவனும் அதை அதிக நேரம் வியக்க முடியாது. சற்று நேரம் தன்னை மறந்த நிலையில் தோன்றும் அந்த வியப்புணர்ச்சி வெகுவிரைவில் மிகப் பெரிய அசூயையோடுகூடிய பொறாமையாக உருப்பெற்று விடும். இது உலக இயற்கை மனித சுபாவமுங் கூட இந்த இயற்கைக்கு அக் காட்டு வேடர்கள் விதி விலக்கா என்ன? இல்லையே! மிக விரைவில் தங்களை உணர்ந்து சமாளித்துக்கொண்ட வேடர்கள் புள்நிமித்தம் சொல்லி யவனை வைதுகொண்டே தாக்குதலை வலுப்படுத்துவதற்கு அறிகுறியாக உதயணனை மிக அண்மையில் நெருங்கி வளைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.