வெற்றி முழக்கம்/6. நருமதையின் மறுப்பு

விக்கிமூலம் இலிருந்து

6. நருமதையின் மறுப்பு

யந்தகன் கூறியதைக் கேட்ட நருமதையின் நற்றாய், "உதயணன் மனத்துள் என் மகள் விரும்பப் பெற்றாள் என்றால் அது எங்களுக்கு மிகச் சிறந்த பேறாகும். அதனால் நாங்கள் பெருமைப்பட வேண்டும்" என்று உதயணனைப் பிணித்தற்குரிய மொழிகளைத் தூண்டில் நுனியில் இரைகோத்து அதனால் மீனைப் பிடிப்பதைப்போலக் கருதிக் கூறினாள். உதயணன் இவ்வாறு தங்களுக்குப் பெருமை கொடுத்தும் தங்கள் வீடுதேடி வராதது ஒரு சிறு குறை என்ற கருத்தும் அவளுக்குச் சிறிதுண்டு. இவர்கள் இவ்வாறு இங்கே உரையாடிக் கொண்டிருக்கும்போது நருமதையும் உள்ளிருந்து வந்து சேர்ந்தாள். உடனே நருமதையின் தாய் அவளுக்கு உதயணன் பெருமைகளை எடுத்துரைக்கலாயினள். "பரத்தையர் ஒழுக்கத்தை நினைத்தும் அறியாதவன் அவன். இழுக்கற்ற தூய வாழ்க்கையை உடையவன். சூது முதலியவைகளைக் கனவிலும் நினைப்பது இல்லாதவன். கொடையுள்ளம் படைத்தவன். அப்படிப்பட்டவன் உன்னை விரும்புகிறான் என்றால் அது உன் நல்வினைப் பயனே ஆகும். இதோ உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் இவருடன் (வயந்தகன்) உதயணன்பாற் சென்று சேர்ந்து அவன் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக!” - என்று நற்றாய் நருமதையை நோக்கிக் கூறினாள். நருமதையின் முகம் சிவந்தது. புருவங்கள் நெரிந்தன. கண்கள் செவிகள் வரை நீண்டு அளவு செய்துவிட்டு மீண்டன. முன்னே வைக்கப்பட்டிருந்த பொன் மாசைகளைத் தன் சினத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அவள் தாறுமாறாக எடுத்துச் சிதறினாள். வயந்தகனும் தன் தாயும் கேட்கும் படியாகக் கொடிய மொழிகளால் மறுப்பைக் கூறத் தொடங்கினாள். “சிறைப்பட்டுக் கைதியாக எங்கள் நாட்டுக்கு வந்த அந்தக் குறுநில மன்னனை, அவன் வீடு தேடிச் சென்று விரும்பியதைச் செய்து நான் மகிழ்ச்சியூட்டுவேன் என்று நினைப்பதுகூட முடியாது. இதற்கு ஒரு பொழுதும் சம்மதிக்கவே மாட்டேன்” என்று தன் குலத்திற்குச் சிறிதும் பொருந்தாத மொழிகளைக் கூறத் தொடங்கி இகழ்ந்தாள்.

நருமதையின் தாய் எவ்வளவோ சொல்லியும் அவள் கண்டிப்பாக மறுத்து விட்டாள். நருமதையின் தாயப்பெண்டிர் அவளுக்குப் பலவகைக் காரணங்களை எடுத்துக் காட்டி உதயணனை மறுப்பது சரியல்ல என்பதைக் கூறினர். “தவ வினை நன்றான காலத்துத் திருமகள் கூடுமாறு போலப் பொருள் கிடைத்த விடத்துக் கூடியும், தவ வினை தீதாகி நல்வினை நீங்கிய காலத்துத் திருமகள் நீங்குமாறுபோல் பொருள் இல்லாவிடத்து நீங்கியும் இட்டதையுண்ணும் நிலம் போல நம்மைச் சேர்ந்தோர் பொருளையுண்டும் அவர் வயமாய் ஒழுக வேண்டிய நமக்கு மறுத்தல் வெறுத்தல் முதலியவை தகாதன” என்று பலவிதமாகக் கூறியும் நருமதை வயந்தகனுடன் போக மறுத்தாள். நருமதையின் தாய்க்கு இது அளவு கடந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. வயந்தகனை நோக்கி, “நருமதையை நினது அடிமைபோலக் கருதி வலிதில் தேர்மிசைக் கொண்டு உதயணனிடம் செல்க. அவள் இறுமாப்பை அடக்க அதுதான் சரியான வழி” என்று அவள் வெகுளியுடன் கூறினாள். வயந்தகன் அவ்வாறே அவளைப் பலவந்தமாகக் கைப்பற்றித் தேர்மேலேற்றி ஊரறிய பெரிய வீதிகள் வழியாக உதயணன் மாளிகைக்குக் கொண்டு சென்றான். நருமதை தெருவில் போவோர் வருவோரை நோக்கி, “உதயணன் என்னை வலிதிற் கொண்டுசெல்கிறான். இந்த அநியாயத்தைக் கேட்போரில்லையா?” என்று கதறிக் கொண்டே சென்றாள். போகும் வழியெல்லாம் பெருங்கூட்டம்கூடி வேடிக்கை பார்த்தது. நருமதை உதயணன் பெயரைச் சொல்லிப் பழிப்பதையும் எல்லாரும் கேட்டனர்.

நருமதையின் அரற்றுரைகளைக் கேட்ட மக்களிற் சிலர் அவளுக்கு இரங்கி உதயணனைப் பழித்தனர். வேறு சிலர், ‘இவள் எதற்கு இந்த வேஷம் போடுகிறாள்?’ என்று நருமதையைப் பழித்தனர். ‘அழகிற் சிறந்த உதயணனால் விரும்பப்பட இவள் முற்பிறப்பில் தவம் செய்திருந்தாலும் முடியாது. அப்பேறு எளிதில் எய்தப் பெற்ற இவளுக்கு ஏன் துயர்? ஒருவேளை இவள் பெண் தன்மையே இல்லாதவளோ?’ என்று மற்றொரு சாரார் பேசினர். உதயணன் குல ஒழுக்கம் கெட்டதென்றனர் நல்லோர். பலரும் பலவிதமாக வம்பளந்தனர். எங்கும் இந்தச் செய்தி பரவிவிட்டது. உதயணனைப் பற்றிய நல்லெண்ணம் பலருக்கு மாறியது. விரைவில் வயந்தகன் தேரில் நருமதையுடன் உதயணனை அடைந்தான். ஊர்முழுதும் உதயணனைப் பற்றிய வம்பு மொழிகள் கிளம்பின. திருமகள், மழை, மகளிர் மனம் இந்த மூன்று பொருள்களும் ஒரு நிலையில் நில்லாதன என்ற உண்மையைப் பிரத்தியட்சமாகப் பலர்கண்டு அறிந்து கொண்டார்கள்.

உதயணனும் வயந்தகனும் சேர்ந்து செய்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. எந்தப் பழிமொழி எழவேண்டும் என்று அவர்கள் சூழ்ச்சியிலே நினைத்தார்களோ, அதுவே எழுந்தது. அதனால் வாசவதத்தைக்கும் அவனுக்குமிடையே ஏற்பட விருந்த பெரும் பழி நீங்கிற்று. ஒரு பழியை நீக்க வேறு ஒரு பெரும் பழியை மேற்கொண்டான் உதயணன். தத்தைக்காகவும் தன்னைப் பிறர் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் உதயணன் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மறுநாள் பொழுது விடிந்ததும் ஒரு துன்பமுமின்றி நருமதை திருப்பி அனுப்பப்பட்டாள். உதயணன் மாளிகையில் ஒரிரவு அவள் தங்கினாள். ஆனாலும் உதயணன் அவளிருந்த பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. ஊரிலே தன்னைப் பற்றிய பழியான மொழிகள் பரவுவதை அறிந்து உதயணன், மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போன்ற மனவுணர்ச்சியை அடைந்தான். எனினும் தத்தை பொருட்டு அதைப் பொறுத்தான் உதயணன். இதற்குள் அவன் எதிர் பார்த்தபடி இந்த விவரம் ஒற்றர்களால் பிரச்சோதன மன்னனுக்கும் அறிவிக்கப்பட்டது.