உள்ளடக்கத்துக்குச் செல்

இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/இந்தி எதிர்ப்புப் போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

இந்தி எதிர்ப்புப்
போராட்டம்

1937ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. அது இந்தி எதிர்ப்புப் போராட்டம். பெரியார் தலைமையில் தமிழ் மக்கள் யாவரும் ஒன்று கூடி இந்தியை எதிர்த்தார்கள்.

காங்கிரஸ் காரர்கள் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்கள். இதனால் மற்ற தாய்மொழிகள் வளர்ச்சி குறையும். அந்த மக்கள் பின் தங்கியவர்கள் ஆவார்கள். இதை காந்தியார் போன்றவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. திரு ராசகோபாலச்சாரியார் அவர்கள் சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது. இந்தியைக் கட்டாயம் எல்லாரும் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். இதைத் தமிழ்நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் எதிர்த்து வந்தார்கள்.

திருச்சியில் பெரிய இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. நாவலர் பாரதியார் தலைமையில் அந்த மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டில் பெரியார் தலைமையில் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றாகி இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்யப் பட்டது. பள்ளிக் கூடங்களின் முன் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளியிலிருந்து 100பேர் இந்தியை எதிர்க்கப் புறப்பட்டு வந்தார்கள். அவர்களை வழியனுப்பி வைத்து பிறகு பெரியார் தாமும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னைக் கடற்கரையில் எழுபதினாயிரம் தமிழ் மக்கள் ஒன்று கூடினார்கள். பல தலைவர்களும், பெரியாரும் இந்தியைப் புகுத்துவதைக் கண்டித்தும், அதனால் ஏற்படும் கேடுகளை விளக்கியும் பேசினார்கள்.

பெரியாருடைய பேச்சு தமிழ் இளைஞர்களை ஆவேசங்கொள்ளச் செய்தது. இந்தியை எதிர்த்துப் போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்டிட்டார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறிதும் அச்சம் கொள்ளாமல் சிறைப்பட்டார்கள்.

தாளமுத்து - நடராசன் என்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இறந்து போனார்கள். அதனால் இந்தி எதிர்ப்பு வேகம் கொண்டது.

தமிழ்நாட்டுப் பென்கள் மாநாடு ஒனறு சென்னையில் நடந்தது. அதன் தலைவர் நீலாம்பிகை அம்மையார் அவர்கள் தமிழ்த்தலைவர் மறைமலையடிகளின் மகள் ஆவார். திருமதி நீலாம்பிகையார் தலைமையில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில் தான் ஈரோட்டு இராமசாமி அவர்களை, 'நமது பெரியார்' என்ற பட்டத்தினை அளித்து நீலாம்பிக் கையம்மையார் முதன் முதலாகக் கூறினார்கள். அன்று முதல் எல்லோரும் பெரியாரைப் பெரியார் என்றே குறிப்பிட்டார்கள்.

தமிழ் மக்கள் இந்தியை எதிர்த்துப் போராடத் தூண்டியதற்காக பெரியாரை அரசாங்கம் சிறையில் அடைத்தது.

அந்த நேரத்தில் மற்ற தலைவர்கள் ஒன்று கூடி தமிழர் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். பெரியார் சிறையில் இருந்தமையால் மாநாட்டில் அவர் படம் ஒன்றை வைத்து அவர் தலைமையில் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பன்னிர்ச்செல்வம் அந்தக்காலத்தில் இருந்த மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். அவர் மக்கள் தனக்குப் போடவந்த மாலைகளை வாங்கிப் பெரியார் படத்துக்கு அணிவித்தார். பெரியார்தான் நம் தலைவர் அவருடைய தலைமையில் நாம் போராடுவோம்! வெற்றி பெறுவோம்! என்று முழக்கமிட்டார்.

சிறையில் இருந்த பெரியாருக்கு நோய் உண்டாயிற்று. அதனால் அரசாங்கம் அவரை விடுதலை செய்தது. ஒயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் நோய் வராது. உழைக்காவிட்டால்தான் நோய் உண்டாகும். தமிழர்களுக்காக உழைத்து வந்த பெரியார் சிறைக்கம்பிக்குள் அடைபட்டு இருந்ததால் நோய் உண்டாயிற்று. வெளியில் வந்ததும் உழைக்கத் தொடங்கியதால் அவருடைய நோய் மறைந்து விட்டது. ஊர் ஊராகச் சென்று இந்தியை எதிர்த்தும், தன்மானக் கொள்கைகளை விளக்கியும் சொற்பொழிவாற்றினார். வெள்ளம் பாயாமல் இருப்பதில்லை. நெருப்பு பரவாமல் இருப்பதில்லை. அதுபோல் பெரியாரின் புரட்சிப் பேச்சும் எங்கும் பரவியது. இளைஞர்களுக்கு வீரம் ஊட்டியது. இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். சாதியை எதிர்த்துப் போராடினர். மதத்தையும் கடவுளையும் அகற்றப் பாடுபட்டனர். இவையெல்லாம் பெரியார் தமிழ் இளைஞர்களுக்குக் கொடுத்த பணிகள் ஆகும். அதை அந்தக்காலத்து இளைஞர்கள் சிறப்பாகச் செய்தார்கள்.