உள்ளடக்கத்துக்குச் செல்

இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/தன்னாட்சிக் கொள்கை

விக்கிமூலம் இலிருந்து

தன்னாட்சிக் கொள்கை

காந்தியாரின் கொள்கைகளில் நம்பிக்கை தத்தை பெரியார் வைத்து பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் தலைமை இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களே இருந்தனர். பார்ப்பனர்கள் அதிகாரத்தை எதிர்த்த கட்சி ஒன்று இருந்தது. அது நீதிக் கட்சி, நீதிக் கட்சி மக்களுக்கு நன்மைகள் பலவற்றைச்செய்தாலும் வெள்ளையர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது. அதன் தலைவர்களும் பெரிய செல்வர்களாக இருந்தனர். எனவே காங்கிரஸ் கட்சியைப்போல நீதிக் கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை.

மக்கள் நன்மைக்காக பெரியார் தன்மான இயக்கத்தைத் தோற்றுவித்தார். தன்மான இயக்கம் அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கம் என்று அழைக்கப்பட்டது.

மக்களிடையே இருந்த வேற்றுமைகளை அடியோடு ஒழிக்கப் பாடுபட்டது. சாதி, மதம் ஆகியவை மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டதை ஏற்கனவே பல பெரியோர்கள் உணர்ந்திருந்தனர். ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் பெரியார்தான் அவற்றின் அடிவேர் என்ன என்பதைக் கண்டுபிடித்தார்.

சாதிகளுக்கு ஆதாரமாய் இருப்பது மதம். மதத்திற்கு ஆதாரமாய் இருப்பவை வேதம் புராணம் சாத்திரம் ஆகியவை. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாய் விளங்குவது கடவுள்.

கடவுளை அல்லது கடவுள் மீது உள்ள நம்பிக்கையை அகற்றிவிட்டால் மனிதனுக்குத் தெளிவு பிறந்துவிடும். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியார் வேலை செய்தார். பெரியாருடைய கொள்கைகளை ஆதாரமாக வைத்து தன்மான இயக்கம் நடைபெற்றது.

நம்நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும். ஏற்கனவே பல அரசுகளாகப் பிரிந்திருந்தது. சிறிய சிறிய அரசர்கள் சிறிய சிறிய பகுதிகளை ஆண்டு வந்தார்கள். அதனால் அயல்நாட்டிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் எளிதாக நாட்டைப் பிடிக்க முடிந்தது. இந்தியாவின் மேல் பல அன்னியப் படையெடுப்புகள் நிகழ்ந்தன. அது தவிர, உள்நாட்டுக்குள்ளேயே அரசர்கள் ஒருவர் மீது ஒருவர் பகை கொண்டனர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டேயிருந்தன. இதனால் மக்கள் வாழ்க்கை அமைதியற்றதாய் விளங்கியது. கடைசியாகப் படையெடுத்து வந்த ஆங்கிலேயர்கள் எல்லா நாடுகளையும் சிறிதுசிறிதாகப் பிடித்து விட்டனர். அவர்களுக்கு அடங்கிக் கப்பம் கட்டிய சிற்றறசர்களை மட்டும் ஆட்சி செய்ய அனுமதித்தனர். மற்றபடி இந்தியா முழுவதையும் கைப்பற்றி ஒரே அரசாக ஆக்கி விட்டார்கள்.

எல்லா மக்களும் சமமாக நடத்தப்பட்டால் ஒரே நாடாக இருப்பது நல்லதுதான். ஆனால் வடநாட்டில் இந்து மதத்தவர்களும், முஸ்லீம் மதத்தவர்களும் வேற்றுமையை வளர்த்துக் கொண்டனர். அதனால் ஒற்றுமையாக இருக்க முடியாது என்ற நிலைமை தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் இந்தியா பிரிந்தது. வடநாட்டார் தென்நாட்டாரை இழிவாக நடத்தியதாலும், பொருளாதாரத்தில் வேற்றுமைப் படுத்தியதாலும், பெரியார் தனிநாடு கேட்டுப் போராடினார். இந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.

நாடு விடுதலை அடைந்த பிறகும், மத்திய அரசு அதிகாரங்களையெல்லாம் தன் கையில் வைத்துக்கொண்டது. மாநில அரசுகளுக்கு அதிகாரம் மிகக்குறைவாக உள்ளது. அதிகாரத்தைச் சமமாக்க வேண்டும். அல்லது மாநிலங்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் உரிமையைத் தரவேண்டும் என்று பெரியார் தொடர்ந்து போராடினார். அவருடைய போராட்டம் இதுவரை வெற்றி பெறவில்லை. என்றாலும் விரைவில் மாநிலங்கள் தன்னாட்சி பெறும்.

பெரியாருடைய தன்னாட்சிக் கொள்கைக்காக இன்றைய தமிழ்மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் பணியை திராவிடர் கழகம் செய்து வருகின்றது.

தன்னாட்சி பெறுதல், மூடநம்பிக்கைகளை ஒழித்தல், சாதி, மதவேற்றுமைகளை அகற்றல், ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், எல்லா மக்களும் சமம் என்ற நிலையை உருவாக்குதல், இவை திராவிடர் கழகத்தின் கொள்ககைகள். பெரியாரைப் பின்பற்றி திராவிடர் கழகம் செய்து வரும் இந்த தொண்டு நல்ல தொண்டு, இதற்கு எல்லா மக்களும் முழுக்க முழுக்க ஒத்துழைக்க வேண்டும்.