இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/குருகுலப் போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

குருகுலப் போராட்டம்

ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் கிறித்துவமதம் பரப்பப்பட்டது. அங்கே படிக்கச்சென்ற மாணவர்கள் நம்நாட்டுப் பண்பை மறந்து ஆங்கில மோகத்தில் இருந்தனர். ஆகவே, நமது நாட்டிற்கு ஏற்ற முறையில் பள்ளிக்கூடங்கள் அமைய வேண்டும் என்று நாட்டுத் தலைவர்கள் எண்ணினார்கள்.

வ.வே. சுப்பிரமணியன் அய்யர் என்ற தலைவர் தேசியத் தைப் புகுத்த குருகுலம் ஒன்றைத் தொடங்கினார். சேரன் மாதேவி என்ற ஊரில் அந்தப் பள்ளிக்கூடம் அமைந்தது.

நாட்டு விடுதலையில் ஆர்வமுள்ள தொண்டர்கள், தலைவர்கள் எல்லாரும் தங்கள் பிள்ளைகளை அந்தப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார்கள்.

பல செல்வந்தர்கள் நன்கொடை கொடுத்தார்கள். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தது. அப்போது பெரியார் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்தார்.

பரத்வாஜ குருகுலம் என்ற அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா சாதிப் பிள்ளைகளும் சமமாக நடத்தப்படவில்லை.

சாதி வேற்றுமை, மதவேற்றுமை கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை, ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு போடும் இடத்தில் பார்ப்பனப் பிள்ளைகள் தனி அறையில் சாப்பிட்டார்கள். மற்ற பிள்ளைகள் வேறு அறையில் உணவுண்டார்கள். இது வெளியில் தெரிந்தபோது, பல தலைவர்கள் கண்டித்தார்கள். எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் ஒரே மாதிரி சாப்பாடு போடவேண்டும் என்று கூறினார்கள்.

சுப்பிரமணிய அய்யர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. காந்தியார் வந்து அறிவுரை சொல்லியும் அய்யர் கேட்கவில்லை.

பெரியார் இராமசாமி இதைக்கண்டித்தார். படிக்கும் பிள்ளைகளிடையே சாதி வேற்றுமை காட்டக் கூடாது என்று எடுத்துரைத்தார். குருகுலத்தில் சமபந்தி உணவு நடத்த வேண்டும் என்று ஒரு போராட்டமே. நடத்தினார். இதனால் விழிப்படைந்த தமிழ்மக்கள் குருகுலத்தை வெறுத்தனர். குருகுலம் மூடப்பட்டது.

நேர்மையற்ற எந்தச் செயலும் நிலைபெறாது. என்பதற்கு இந்தக் குருகுலம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

குருகுலப் போராட்டத்தின் மூலம் தமிழ்மக்கள் ஒரு கருத்தைத் தெரிந்து கொண்டார்கள். பெரும்பாலான பார்ப்பனத் தலைவர்கள் சாதி ஒற்றுமையை விரும்புவதில்லை. தாங்கள் என்றென்றைக்கும் உயர்ந்த சாதியாராகவே இருக்க வேண்டும். மற்ற சாதிக்காரர்கள் கீழானவர்களாகவே இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்ட பெரியார் இராமசாமி பார்ப்பனர் அல்லாத தமிழர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும் என்று முடிவு செய்தார்.

ஒவ்வொரு வகுப்பாரும் முன்னேற வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அவர் தொண்டு புரிந்தார்.