உள்ளடக்கத்துக்குச் செல்

இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/வைக்கம் போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

வைக்கம் போராட்டம்


காந்தியாருடைய கொள்கைகளை ஈரோட்டு இராமசாமி தமிழ்நாடு முழுவதும் பரப்பினார். அவருடைய சொற்பொழிவுகள் நாட்டில் விடுதலை உணர்ச்சியை உண்டாக்கின. பேசுவதோடு நிற்காமல் அவரே அதைக் கடைப்பிடித்தார்.

பட்டுவேட்டி, பட்டுச்சட்டை எல்லாம் தூக்கி எறிந்தார். முரட்டுக் கதர்த் துணியை அணிந்து கொண்டார். தன் மனைவி நாகம்மையாரையும் கதர் சேலை அணியச் சொன்னார். அன்னை சின்னத்தாயம்மாளும் கூட மகன் சொன்னபடி கதர் உடுத்தினார். உற்றார் உறவினர், நண்பர் அனைவரும் அவரை மகிழ்விப்பதற்காக கதரே அணிந்தனர்.

இராமசாமி சிகரெட் குடிப்பதை * நிறுத்தி விட்டார். வெற்றிலைக்கும் விடை கொடுத்தார். நாட்டு விடுதலை விரைவில் வரவேண்டும் என்பதற்காக அவர் ஒயாமல் உழைத்தார். இராட்டினத்தில் நூல் நூற்பார். கதர்த் துணி மூட்டைகளை தோளில் சுமந்து சென்று விதிவீதியாக விற்று வருவார். மனிதனை மனிதன் தொடக்கூடாது. தெருவில் நடக்கக்கூடாது. கோயிலுக்குள் போகக்கூடாது. குளத்தில் தண்ணிர் எடுக்கக்கூடாது. கண்ணிலேயே படக்கூடாது. இப்படியெல்லாம். உள்ள வேற்றுமைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பவன் கடவுள் தானா. எத்தனை நாளைக்குத்தான் மனிதர்கள் அடங்கி ஒடுங்கிக் கிடப்பார்கள். கடவுள் இருந்தால் தீட்டு, தீண்டாமை உள்ள நாட்டை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்க வேண்டாமா?

தீண்டாமையைப் பற்றி, தீண்டாமை ஒழிய வேண்டியதைப் பற்றி புரட்சிகரமாகப் பேசுவார். காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள வைதீகர்கள் இவருடைய பேச்சைக்கேட்டு அதிர்ந்து போவார்கள்.

ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. ஆங்கிலேயர் தந்த பதவிகளை விட்டுவிட வேண்டும். பட்டங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கக் கூடாது. நீதிமன்ற வாசலில் மிதிக்கக் கூடாது. இவையெல்லாம் தீர்மானங்கள். நீதிமன்றத்திற்குப் போகக்கூடாது என்பதற்காக தனக்கு வரவேண்டிய கடனை வதுணிக்காமல் விட்டுவிட்டார் பெரியார். கள் விற்பனையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தோப்பில் இருந்த அய்நூறு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார் பெரியார்.

கள்ளுக்கடை மறியல் செய்ததற்காகப் பெரியாரை அரசாங்கம் சிறையில் அடைத்தது. உடனே நாகம்மையாரும் பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் மறியலை நடத்தின்ர்.

பம்பாயில் கூடிய ஒரு மாநாட்டில் தலைவர் மாளவியா காந்தியாரைப் பார்த்துப் பேசினார். மறியலை நிறுத்தி விட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தலாம் என்று காந்தியாரிடம் கூறினார். அதற்கு காந்தியார் மறியலை நிறுத்த எனக்கு அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது என்று கூறினார்.

மலையாள நாட்டில் வைக்கம் என்ற ஒர் ஊர் இருக்கிறது. அங்கு தெருவில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது அதுவரை அடங்கிக்கிடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சி அடைந்தனர். மலையாள காங்கிரஸ் தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடினார்கள். அறப்போர் நடத்திய தலைவர்களை திருவாங்கூர் அரசாங்கம் சிறையில் அடைத்தது. பெரிய பெரிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக போராட்டத்தில் குதித்தார்கள். அடுத்தடுத்து பத்தொன்பது தலைவர்கள் சிறைக்குச் சென்றார்கள். இதனால் போராட்டம் நின்றுவிட்டது. ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்ட நம்பூதிரி என்ற இரண்டு தலைவர்கள் பெரியாருக்குக் கடிதம் எழுதினார்கள். திருவாங்கூருக்கு வந்து வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அந்தக்கடிதம் வந்தபோது வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டு பெரியார் படுக்கையில் இருந்தார். அன்று. புத்தாண்டு நாள். பெரியார் எதையும் சிந்தித்துப் பார்க்கவில்லை. பயணத்திற்கு மூட்டை கட்டினார். நாகம்மையார் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"எனக்கு வயிற்றுவலி நின்றுவிட்டது. திருவாங்கூர் போய் வருகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார்.

வைக்கத்திற்கு ஈரோட்டு இரர்மசாமி வந்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தார் திருவாங்கூர் மன்னர். காவல்துறை ஆணையாளரைக் கூப்பிட்டு "இராமசாமி என் நண்பர். அவருக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுங்கள். நமது விருந்தானியாக நடத்துங்கள்" என்று கட்டளையிட்டார்.

காவல்துறையினர் வந்தவுடன் பொதுமக்கள் கூடிவிட்டார்கள். இராமசாமியாருக்கு அவர்கள் செய்த மரியாதைகளைப் பார்த்து மலைத்துப் போனார்கள். போராட்டத்தை நிறுத்துவதற்கு இது ஒரு புது வழியோ என்று நினைத்தார்கள். காவல்துறை அதிகாரிகள் பெரியாரைப் பார்த்து, "அரசர் உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்" என்று கூறினார்கள்.

"நான் உங்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட வந்திருக்கிறேன். விருந்தாளியாக வரவில்லை, மன்னிக்க வேண்டும்" என்று கூறிவிட்டார் பெரியார்.

வைக்கத்தில் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தினார். உடனே அதிகாரிகள் அவரைச்சிறையில் அடைத்தார்கள். தொடர்ந்து தோழர் அய்யா முத்து தலைமையேற்றார். அவரையும் சிறையில் அடைத்தார்கள். ஈரோட்டிலிருந்து நாகம்மையாரும் தோழர் எஸ். இராமநாதனும் வைக்கம் சென்றார்கள்.

தோழர் எஸ். இராமநாதன் கைது ஆனார். அடுத்து நாகம்மையார் போராட்டத்தை நடத்தினார். தமிழ்நாட்டுப் பெண்களும் மலையாளத்துப் பெண்களும் கூட்டம் கூட்டமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டர்கள். ஒருமாதம் சிறையில் இருந்த பெரியார் விடுதலை செய்யப்பட்டார். திருவாங்கூர் எல்லைக்கு அவர் வரக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டது.

பெரியார் இராமசாமி தடையை மீறினார். மீண்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாகம்மையாரும் தமிழ், மலையாளப் பெண்களும், தொடர்ந்து போராடினார்கள். கடைசியில் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் தெருவில் நடக்க உரிமை பெற்றனர்.

அதனால் தான் தந்தை பெரியார் 'வைக்கம் வீரர்' என்று திரு.வி.க.வால் பட்டம் சூட்டப்பட்டு, அழைக்கப்பட்டார்!