உள்ளடக்கத்துக்குச் செல்

இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பொது வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

பொது வாழ்க்கை

வெங்கட்டர் தன் மகன் பொறுப்புள்ளவன் ஆக வேண்டும் என்பதற்காக சில ஏற்பாடுகளைச் செய்தார். முதலில் தன் கடையின் பெயரைத் தன் மகன் பெயருக்கு மாற்றினார். வெங்கட்ட நாயக்கர் மண்டி என்ற பெயர் இராமசாமி நாயக்கர் மண்டி என்று மாறியது. ஊர்க்கோயில் நிர்வாகம், அரசு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள். மற்ற பொது நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தனக்குப் பதிலாக தன் மகனையே ஈடுபடுத்தினார். மகனுக்குப் பொறுப்பு வரவேண்டும். கடவுள் பக்தி உண்டாக வேண்டும். என்றெல்லாம் எண்ணி, இந்த ஏற்பாடுகளைச் செய்தார்.

பொது நிகழ்ச்சிகளில் ஈடுபட்டபிறகு இராமசாமி தன் முரட்டுத் தனங்களைக் கைவிட்டார். பெருந்தன்மையுள்ள மனிதராக மாறிவிட்டார். தான் ஈடுபட்ட பொதுப் பணிகளில் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார். எந்தச் செயலையும், சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் செய்வதில் இவர் வல்லவர். திருக்கோயில் ஆட்சிக் குழுவில் இவர் தலைவர் ஆகும் முன் பணம் இல்லை. பல ஆண்டுகள் தலைவராக இருந்து இவர் விலகும் பொழுது 45,000 ரூபாய் இருப்பு வைத்திருந்தார். எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்வதோடு சிக்கனமாகவும் செய்ததால் எல்லாச் செயல்களும் நன்றாக நடந்தன.

ஈரோட்டுக் கடைக்காரர்கள் இவரையே தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். வணிகர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகளை இவரே தீர்த்து வைப்பார். பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து படிக்காவிட்டாலும் கணக்கில் வல்லவராக இருந்தார். எவ்வளவு பெரிய கணக்கையும் மனக்கணக்காகவே போடும் திறமையுள்ளவர்.

நகரசபைத் தலைவராகப் பெரியார் பல ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் அந்தப் பதவியை உதறித்தள்ளினார். சிறப்பு நீதிபதியாகவும் 12 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

பொது வாழ்க்கையில் இவர் எப்போதும் மக்களுக்கு நன்மைதரும் செயல்களையே செய்து வந்தார். தனக்கு என்னதுன்பம் ஏற்பட்டாலும் அதை நினைக்காமல் மக்கள் நன்மையே. எண்ணிச் செயல்படுவார். ஒருமுறை ஈரோட்டில் பிளேக் நோய் வந்தது. பிளேக் என்பது ஒரு தொற்று நோய். அந்த நோய் ஏற்பட்டவர்கள் உடனே இறந்து போவார்கள். இந்த நோய்க்குப் பயந்து ஏராளமானவர்கள் ஊரை

விட்டே ஒடிவிட்டார்கள் இறந்து போனவர்களின் பிணங்களை எடுத்துப் புதைக்கக்கூட ஆட்கள் கிடைக்கவில்லை. தனக்கு அந்த நோய் தொற்றக் கூடும் என்று தெரிந்திருந்தும் அவர் அஞ்சவில்லை. இறந்து போன பிணங்களை அவரே தனியாகக் தூக்கிக் கொண்டு போய், புதைக்க வேண்டிய இடத்தில் புதைத்து விட்டு வந்தார்.

நகர் மன்றத் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பார்ப்பனர்கள் சிலரின் தூண்டுதலால் எதிர்ப்பு ஏற்பட்டது. இவர் முரடர் என்றும், பொறுப்பில்லாதவர் என்றும் சிலர் மனுக் கொடுத்தார்கள். ஆனால் இவருடைய செல்வாக்கையும் செயல்செய்யும் திறனையும் அறிந்த அதிகாரிகள் அந்தப் பொய் மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டனர். அவரே நகரசபைத் தலைவர் என்று அறிவித்தனர்.

பெரியார் ஈரோட்டு நகரசபைத் தலைவராக இருந்த காலத்தில் இராஜாஜி சேலத்தில் நகரசபைத் தலைவராக இருந்தார். அப்போது அவர்களிடையே நட்பு உண்டாயிற்று.

இராஜாஜியின் மூலம் டாக்டர் வரதராஜலு நாயுடு, நண்பரானார். திரு.வி.கவும் நண்பரானார்.

1920-ம் ஆண்டு காந்தியார் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். காந்தியார் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர். வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும். இந்தியா விடுதலை பெற வேண்டும். அதற்காக இந்தியர்கள் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கக் கூடாது. இதற்காக காந்தியார் பல போராட்டங்களை நடத்தினார். இராஜாஜியும், வரதராஜலுநாயுடுவும், பெரியார் இராமசாமியைக் காங்கிரஸ் கட்சியில் சேர அழைத்தார்கள்.

இந்தியா விடுதலைபெற காந்தியார் வகுத்துக்கொடுத்த திட்டங்களை தேச பக்தர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர்.

பெரியார் இராமசாமி காந்தியாரின் திட்டங்களை நிறைவேற்றி வந்தார்.

இந்தியா விடுதலைபெற கதர் கட்டவேண்டும், அயல்நாட்டுத்துணிகளை ஒதுக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு பெற குடியை ஒழிக்க வேண்டும். எல்லாரும் ஒற்றுமையாக இருக்க தீண்டாமையை ஒழிக்க வேண்டும். மத வேற்றுமைகள் பாராட்டக்கூடாது. இவையெல்லாம், காந்தியாரின் வழிகள்.

இவற்றையெல்லாம் இராமசாமி அப்படியே ஏற்றுக் கொண்டார். சிற்சிலவற்றால் மாறுபட்டார்.