உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கம் கண்ட காவலர்/சாளுக்கியன், சோழர் அரியணையமர்தல்

விக்கிமூலம் இலிருந்து


2. சாளுக்கியன், சோழர் அரியணையமர்தல்


கரிகாலன் வழி வந்த சோழர் மரபு, கடைச்சங்க காலத்தோடு முடிவுற்றது என்றால், விசயாலயன் வழி வந்த சோழர் மரபு, கி.பி. ஆயிரத்து எழுபதாம் ஆண்டோடு முடிவுற்றது. அவ்வாண்டில் சோழர் அரியணையில் அமர்ந்த குலோத்துங்கன், சோழர் குலத்தில் பிறந்தவனல்லன். கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாவன். ஆனால், விசயாலயன் வழி வந்த சோழர் குலப் பேரரசனாகிய முதல் இராசராசன் மகள் குந்தவைப் பிராட்டியார், என்று கீழைச் சாளுக்கியர் குலத்தில் குடி புகுந்தனளோ, அன்றே, அச்சாளுக்கிய மரபில் வந்தாரிடையே, சாளுக்கியர் சாயல் மங்கிப் போக, சோழர் சாயல் மணக்கத் தொடங்கி விட்டது. சாளுக்கிய விமலாதித்தனுக்குச் சோழர் குலக் குந்தவையால் பிறந்த கோமகனுக்கு, அச்சாளுக்கியர் குடியின் முன்னோர் பெயரைச் சூட்டாது, இராசராச நரேந்திரன் எனத் தாய்ப் பாட்டனாகிய இராசராசன் பெயரைச் சூட்டி, அவனைச் சோழர் குலத்தவனாகவே மதித்தார்கள் அக்கால மன்னர்களும், மக்களும்.

- இம்மரபு மாற்றம், கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திர சோழ தேவன் மகள் அம்மங்கை தேவியார், அத்தை குந்தவையின் மகன் இராசராச நரேந்திரனை மணங் கொண்டமையால், மேலும் வலுப் பெற்று விட்டது. அவ்விராசராச நரேந்திர சாளுக்கியனுக்கும், சோழர் குல அம்மங்கை தேவியர்க்கும் பிறந்து, பிற்காலத்தில் சோழர் அரியணையில் அமருங்கால், குலோத்துங்கன் என்னும் பட்டப் பெயர் பூண்டவனுக்குப் பிறந்த போது, இராசேந்திரன் எனத் தாய்ப் பாட்டன் பெயர் சூட்டப்பட்டதே யல்லால், விமலாதித்தன் எனத் தந்தையை ஈன்ற பாட்டன் பெயர் சூட்டப்படவில்லை. இந் நிகழ்ச்சிகளால், குந்தவையை மணங் கொண்ட அந்நாள் தொட்டே, சாளுக்கியர் தங்களைச் சோழர் குலத்தவராகவே கருதிவிட்டனர் என்பது புலனாதல் அறிக.

மேலும், சோழர் குலக் கன்னியர்க்குப் பிறந்த சாளுக்கிய இளவரசர்கள், வடிவாலும் சோழர்களாகவே விளங்கினார்கள். குலோத்துங்கன் பிறந்த போது அவனைத் தாமரை மலர் போன்ற தம் கைகளில் ஏந்திக் கண்ணுற்ற, அவன் தாயை ஈன்ற பாட்டி, கங்கை கொண்ட சோழன் மாதேவி பெயரனின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கி, அவன் வடிவால் தன் கணவனை முழுவதும் ஒத்திருப்பது கண்டு, உளம் மகிழ்ந்து, “இவன் திங்களின் வழி வந்த, சாளுக்கியர் குடியில் பிறந்தவனேனும் ஞாயிற்றின் வழி வந்தோராகிய எம் சோழர் குலத்தவனே ஆவன்; சாளுக்கியனேனும், சோணாடாளும் உரிமையுடையான்” என உரிமை கொண்டாடினாள் என்றும், சாளுக்கிய குல தேவி அம்மங்கை வயிற்றில் வந்தவனேனும், சோழர் குல தேவி, அவனைத் தன் மகனாகவே ஆக்கிக் கொண்டாள் என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

அலர் மழைபோல் மழைபொழிய, அதுகண்டு
கங்கை கொண்ட சோழன்தேவி,
குலமகள்தன் குலமகனைக் கோகனக
மலர்க்கையால் எடுத்துக்கொண்டே,
அவனியர்க்குப் புரந்தரனாம் அடையாளம்
அவயவத்தின் அடைவே நோக்கி
"இவன் எமக்கு மகன்ஆகி இரவிகுலம்
பரிக்கத் தகுவன்” என்றே.

மக்கள் தாய் முறைப்படி, தந்தையின் மரபையே தன்னுடைய மரபாகக் கொள்ள வேண்டிய குலோத்துங்கன், மேற்கூறிய காரணங்களால், தன்னைத் தந்தை பிறந்த சாளுக்கிய மரபினனாகக் கருதாது, தன் தாயும், தன் தாய்வழி முதல் தலைமுறைப் பாட்டியும் , இரண்டாந் தலைமுறைப் பாட்டியும் பிறந்த சோழர் மரபினனாகவே கருதினான்.மேலும், தான் பிறந்தது.சோழ மண்டலத்தில், தாய்ப்பாட்டன் அரண்மனையில் ஆதலாலும், தன் இளமைப் பருவத்தின் பெரும் பகுதி சோணாட்டிலேயே கழிந்து விட்டமையாலும், தமிழ் மொழியையே தாய் மொழியாகக் கொண்டு, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களிலேயே. பயின்று விட்டமையாலும் தன்னை முழுக்க முழுக்கச் சோழர் குலத்தவனாக கருதி விட்டான்; அவன் கருத்தை வலியுறுத்தும் வகையில், சோணாட்டு அரியணையில் அமர்ந்து ஐம்பது ஆண்டுகள், அந்நாடாளும் பெரு வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்து. ஆகவே, சாளுக்கியர் குலக்குரிசிலைச் சோணாட்டுக் கோமகனாகவே கொண்டார்கள் வரலாற்று நூலாசிரியர்கள். நாமும் அவ்வாறே கொள்வோமாக. - - -

கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழர் அரண்மனையில் பிறந்த குலோத்துங்கன், தன்னை ஈன்ற தாய்ப் பாட்டி, கங்கை கொண்ட சோழன் மாதேவி பேரன்பு காட்டி வளர்க்க வளர்ந்து பிள்ளைப் பருவம் எய்தினான்; பேரரசு நடாத்தும் ஒரு பேரரசர் அரண்மனையில் வளர்ந்தமையால், அவர் பண்புகள் அனைத்தும் அவன் உடைமையாயின; இவன் மாமன்மார்களாகிய இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீர ராசேந்திரன் மூவரும் தன்னேரில்லாப் பெருவீரர்களாவர், அவர்கள் கண்ட போர்க்களங்களும், பெற்ற வெற்றிகளும் பற்பல. அவர்களிடையே வளர்ந்த குலோத்துங்கனும் ஆண்மை ஆற்றல்களில் அவரொப்பச் சிறந்து விளங்கினான். தங்கள் உடன்பிறந்தாளின் ஒரே மகனாகிய குலோத்துங்கனை அவர்கள் மூவரும் தத்தம் மக்களுள் ஒருவனாகவே மதித்து, மறம் மானம் முதலாம், மன்னர் மன்னர்க்கு மாண்பு தரும் பண்புகளை ஊட்டி வளர்த்தார்கள். தாங்கள் சென்ற போர்க் களங்களுக்கு அவனையும் உட்கொண்டு சென்று போர் முறைகளை யெல்லாம் புகட்டிப் பெருவீரனாக்கினார்கள். இம் முறைகளால், குலோத்துங்கனும் அரசர்க்கு அமையவேண்டிய அத்தனை பண்புகளையும் ஆரப் பெற்றான்; அம்மட்டோ தன் தாய்ப்பாட்டன் இராசேந்திரன் பெயரையே தன் பெயராக் கொண்ட தன் இரண்டாம் மாமன், இரண்டாம் இராசேந்திரனின் ஒரே மகள் மதுராந்தகியை மணந்து, தன் முன்னோர் முறைப்படியே, சோழர்குல மருமக னாகியும் மாண்புற்றான்.

இந்நிலையில், வேங்கி நாட்டில் அரசோச்சியிருந்த, குலோத்துங்கன் தந்தை, இராசராசசேந்திரன், தன் மகன் மறமாண்புகளில் சிறந்து, மண்ணாளும் தகுதி பெற்று விளங்குவதைக் கண்டான். அவனுக்கு இளங்கோப் பட்டம் சூட்டி மகிழ மனங்கொண்டான். சோணாட்டு அரண்மனையில் வாழ்ந்திருந்த அவனை வேங்கிநாட்டிற்கு வரவழைத்து, தங்கள் நாட்டு வழக்கப்படி, விஷ்ணு வர்த்தனன் என்னும் பட்டப்பெயர் சூட்டி இளவரசனாக்கினான்.

குலோத்துங்கன் வேங்கி நாட்டு இளங்கோவாகம் பட்டம் சூட்டப்பெற்ற சின்னாட்களுக்கெல்லாம், அவன் தந்தை இராசராச நரேந்திரன் இறந்துவிட்டான்;முறைப் படி, வேங்கி நாட்டு ஆட்சியுரிமை, குலோத்துங்கனுக்கே உரியதாகவும், அதை, தான் அடைய வேண்டும் என்ற ஆசை, அவன் சிற்றப்பன் விசயாதித்தனுக்கு இருப்பதை அவன் உணர்ந்தான். ஆண்டு முதிர்ந்த அவன் ஆசையை நிறைவேற்றி தன் வைப்பது கடன் என்ற நல் உள்ளம் குலோத்துங்கனுக்கும் இருந்தது. மேலும், பரந்தகன்ற பெரிய நாட்டில் பேரரசு செலுத்தும் சோழர்குலச் சிற்றரசர்களுக்கு நிகராகப் படைப்பயிற்சி பெற்றிருக்கும் தன்னால், அப்பேரரசிற்கு அடங்கிய சிறிய நாடாகிய வேங்கி நாட்டு அரியணையில், தன் ஆற்றலையும் ஆண்மையையும் அடக்கிக்கொண்டு அமர்ந்திருத்தல் இயலாது என்பதையும் உணர்ந்தான்; பருத்த பெரிய அவன் தோளாற்றல், களம் பல புகுந்து வெற்றி பல பெறும் வீரவாழ்வு பெறத் துடித்துக்கொண்டிருந்தது; மேலும், தன் மாமன் இரண்டாம் இராசேந்திரன், மேலைச் சாளுக்கியரோடு, துங்கபத்திரை ஆற்றங்கரையில் ஒயாப்போர் மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், தன் சிற்றப்பனோடு பகைகொண்டு போரிடுவது போர் முறையாகாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். இந்நிலைமைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, வேங்கி நாட்டு அரியணையில் விசயாதித்தனே இருந்து ஆளட்டும் என விடுத்து, வெற்றித் திருவுலா விரும்பி வேங்கி நாடு விட்டு வெளியேறினான்.

போர் விரும்பிப் புறப்பட்ட குலோத்துங்கன், நேரே சக்கர்க்கோட்டம் சென்றான், சக்கரக்கோட்டம், இன்றைய மத்திய மாகாணத்தில் உள்ள வத்ச நாட்டில் இருந்தது. இக்காலை, அது சித்ரகூட் எனும் பெயர் பூண்டுளது; அந்நாட்டை, தாராவர்ஷன் என்பான் அக்காலை ஆண்டு கொண்டிருந்தான்: வைரச் சுரங்கங்களும், வேழங்களும் மலிந்த வயிராகரம் எனும் நிலமும் அவன் ஆட்சிக்கீழ் இருந்தது. சக்கரக்கோட்டம் புகுந்த குலோத்துங்கன், வத்தவர்குல வேந்தன் தாராவர்ஷனை வென்றான்; அந்நாட்டை எரியூட்டி அழித்தான். தோற்ற வேந்தன் தாராவர்ஷன் வந்து அடிபணிந்தான். வ்யிராகரத்து விழுநிதியாகிய வ்ழங்கள் எண்ணற்றனவற்றயும் வகை வகையான பிற வளங்களையும் திறையாகத் தந்தான்; வத்தவநாட்டில் வெற்றித்திருமகளை மணந்து, செல்வத் திருமகளோடு வேறு நாடு நோக்கிச் சென்றான் குலோத்துங்கன்; குலோத்துங்கன் பெற்ற இக்கன்னிப், போர் வெற்றியைக் கலிங்கத்துப் பரணியும், அவன் மெய்க் கீர்த்திகளும் புகழ்ந்து பாராட்டுகின்றன. அம்மெய்க் கீர்த்திகளுள் ஒன்று இது: .


“விளங்கு சயமகளை இளங்கோப் பருவத்துச்
சக்கரக்கோட்டத்து விக்ரமத்தொழிலால்
புதுமணம் புணர்ந்து, மதவரையீட்டம்
வயிராகரத்து வாரி.”

குலோத்துங்கன், இவ்வாறு வெற்றிப்புகழ் வேட்கை மிக்கு வீரத்திருவுலா மேற்கொண்டிருக்கும் காலத்தில், சோணாட்டில், மனைவி மதுராந்தகியின் தந்தை, இரண்டாம் இராசேந்திரன் இறக்க, அவனுக்குப்பின் அரியணையேறிய தன் இளையமாமன் வீரராசேந்திரனும் மேலைச் சாளுக்கியரோடு மாளாப்போர் மேற்கொண்டிருந்தான்; அப்போரின் ஒரு பகுதியாய், அம்மேலைச் சாளுக்கிய மன்னனின் மக்களுள் ஒருவனாகிய விக்கிரமாதித்தன், வேங்கிநாடு புகுந்து, விசயாதித்தனைத் துரத்திவிட்டு, அந்நாட்டின் ஆட்சியைத் தன்னுடைய தாக்கிக்கொண்டிருந்தான். அஃதறிந்த வீரராசேந்திரன் வேங்கிநாட்டின் மீட்சியை முன்னித் துங்கபத்திரைக் கரையை விட்டு புறப்பட்டுவிட்டான்; மாமனுக்குத் துணை புரிய வேண்டி இல்லையாயினும் தன்நாட்டை மீட்க வேண்டியாவது வேங்கிநாடு நோக்கி விரைந்து செல்லவேண்டுவது தன் தலையாயகடன் என்பதை அவன் உணர்ந்தான், உடனே, அவனும் அவன் படையும், வேங்கிநாடு நோக்கிச்செல்லும் வீரராசேந்திரன் படை.யோடு சேர்ந்து கொண்டனர், இடைவழியில் வந்தெதிர்த்த, மேலைச்சாளுக்கிய தண்டத் தலைவர் மூவரையும், விசயவாடையில் வெம்போர்புரிந்து வென்று துரத்தினான். பின்னர்க் கோதாவிரியாற்றையும்

க-5 

ஏழ்கலிங்க நாட்டையும், சக்கரக் கோட்டத்தையும் விரைந்து கடந்து வேங்கிநாடு புகுந்து,விக்கிரமாதித்தனை விரட்டியடித்தான்; அரசிழந்த துன்பத்தோடு, மகனை இழந்த துன்பமும் வருத்த, வன்மை இழந்து கிடக்கும் சிறிய தந்தைபால், குலோத்துங்கனுக்குப் பற்றும் பாசமும் பெருகவே, வென்ற வேங்கிநாட்டு அரியணையில், விசயாதித்தனையே மீண்டும் அமர்த்தினான்:மாமன் வீர ராசேந்திரனும் மருமகன் விருப்பத்திற்கு மறுக்காது மனம் ஒப்பினான்.

தனக்குரிய நாட்டில் தன் சிறிய தந்தையை இருந்தாள விடுத்து, வீரராசேந்திரனோடு சோணாடு சென்ற குலோத்துங்கனை. ஆங்கே பெரிய வாய்ப்பு ஒன்று வரவேற்று நின்றது. தன்னினும் வலிய பகைவர் தன் நாட்டைக் கைப்பற்றிக்கொள்ள அரசிழந்த கடாரத்து அரசன் ஒருவன் சோணாட்டு அரசவையில் அடைக்கலம் புகுந்தான்; அவன் பகைவரை வென்று, அவர் கவர்ந்த கடார நாட்டு ஆட்சியுரிமையைத் தன்பால் அடைக்கலம் புகுந்தானுக்கு அளித்துவரும் பெரும் பணியை, வீரராசேந்திரன் குலோத்துங்க இளங்கோவிடம் ஒப்படைத்தான். தன் ஆற்றலைக் கடல்கடந்த நாடுகளில் வாழ் வாரும் அறிந்து பாராட்டத்தக்க ஒரு பெரும் பேற்றினைத் தனக்களித்த மாமன் வீரராசேந்திரனை வாழ்த்தி வணங்கி விடை கொண்டு, வங்கப்படை துணை செய்யக் கடாரம் நோக்கிப் புறப்பட்டான், கடாரம் புகுந்த குலோத்துங்கன் தன் நட்பரசன், நாட்டைவிட்டு ஓடிவரப் ப்ண்ணிய அவன் பகைவர்களை வென்று துரத்தினான்; வீரராசேந்திரன் பணித்தவாறே, அவனைக் கடார நாட்டுக் காவலனாக்கி ஏற்று வந்த கடமையை இனிது நிறைவேற்றினான். அந்நாள் முதல், அக்கடார நாட்டுக் காவலன், குலோத்துங்கனின் உற்ற நண்பனாயினான்; சோழர் அரியணையில் அமர்ந்திருந்த காலத்தில், அவ்வரசன் வேண்டுகோளை ஏற்று, நாகப்பட்டினத்தில் முதல் இராசராசன் காலத்தில், கடாரத்தரசன் சமைத்த, இராசராசப் பெரும்பள்ளிக்குச் சோணாட்டு அரசர்கள் அக்காலம்முதல் இறையிலி ஆக்கிவிட்ட ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து வழங்கினான்: குலோத்துங்கன் தனக்கு அரச வாழ்வளித்தும், தன் முன்னோர் அமைத்த ஆலயத்தின் அறத்தைக் காத்தும் உற்றது புரிந்து உயர்ந்தோனாகிய குலோத்துங்கனுக்கு நன்றி செலுத்தும் வகையில், சோழகுல வல்லிப்பட்டினம் எனும் சிறப்புப் பெயர் வாய்ந்த அந்நாகப்பட்டினத்தில், குலோத்துங்கன் பெயரால் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற புதிய புத்தவிகாரம் ஒன்றைக் கட்டிவைத்தான் கடாரத் தரசன்.

கடார நாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய குலோத்துங்கனின் பெருமை, அக்கடாரத்திற்கு அண்மையில் இருந்த நாடுகளிலும் சென்று பரவிற்று. சயாம் நாட்டிற்குக் கிழக்கேயுள்ளதும், இக்காலத்தில் கம்போடியா என்று அழைக்கப் பெறுவதுமாகிய காம்போச நாட்டின் காவலன், குலோத்துங்கனைத் தன்னாட்டிற்கு அழைத்துச் சிறப்புச் செய்தான்; கன்னித் தமிழ்நாட்டிற்கும் காம்போச நாட்டிற்கும் ஏற்பட்ட இந்நட்புறவின் நினைவுச்சின்ன பாய்த்தன்நாட்டு அரும்பொருளாகிய, கல் ஒன்றை காம்போச நாட்டான், குலோத்துங்கனுக்கு அளித்தான்; அவன் அன்போடு அளித்த அக்கல்லைக் குலோத்துங்கன் தன் குல முதற்கடவுள் கோயில் கொண்டிருக்கும் தில்லையில், சிற்றம்பலத்தைச் சார்ந்திருக்கும் திருவெதிரம்பத்தில் பலரும் காணும் இடத்தில் பதித்துவைத்துப் பெருமை செய்தான்

கடல்கடந்த நாடுகளில் பெற்ற இவ்வெற்றிச் சிறப்புகள் அளித்த கரைகாணா இன்பவெள்ளத்தில் மிதந்தவாறே தாய்நாடாம் தமிழ்நாடு வந்து சேர்ந்தான் குலோத்துங்கன். குலோத்துங்கன் கடாரத்தில் பெற்ற வெற்றி குறித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் விழாக்கொண் டாடினான் வீரராசேந்திரன். சோணாட்டுத் தலைநகரில் அலகாலம் வாழ்ந்திருந்த குலோத்துங்கன், ஆங்குத் தான் ஆற்றவேண்டிய அரும்பணி எதுவும் இல்லையாகவே வெற்றித் திருமகள் பால் மீண்டும் வேட்கை கொண்டு வீரத்திருவுலாவர வடநாடு நோக்கிச் சென்றுவிட்டான்.

குலோத்துங்கன், வடதிசை நாடுகளில் வாழ்ந்திருந்த காலை, சோனர்ட்டில் வீரராசேந்திரன் இறந்தவிட்டான். அவனுக்குப்பின், அவன் மகன் அதிராசேந்திரன் சோழர் அரியணையில் அமர்ந்தான்; ஆனால், ஆட்சியுரிமையை அவன் தானாகவே கைப்பற்றிக் கொண்டானல்லன்; மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனின் துணை பெற்றே அவன் அதை அடைந்தான்; சோணாட்டு அரியணையில், அந்நாட்டை ஆண்டவன் மகன் அமர, அச்சோழர்க்குலப் பகைவேந்தனாகிய விக்கிரமாதித்தனின் துணைவேண்டியிருந்தமைக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. தலைமுறை தலைமுறையாக நடைபெற்றும், சோணாட்டுப் படையின் பெரும்பகுதியை அக்களத்தில் அழியவிட்டும் முடிவுகாணாப்பெரும் போரால் விளங்கிய மேலைச் சாளுக்கிய போருக்கு ஒரு முடிவுகாண விரும்பிய வீரராசேந்திரன், அச்சாளுக்கியர்குல இளவரசனாகிய விக்கிரமாதித்தனுக்குத் தன் மகள் ஒருத்தியை மணஞ் செய்துவைத்தான்; ஆகவே, அவ்விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனன் அதிராசேந்திரனை அரியணையில் அமர்த்துவதில் ஆர்வம் இருந்தது. அதிராசேந்திரன் அரியனை அமரச் சோணாட்டில் தடையெழாதிருந்திருப்பின், அதற்கு விக்கிரமாதித்தன் துணைவேண்டியிருக்காது, ஆங்குத் தடையெழுந்தமையினாலேயே, விக்கிரமாதித்தன் வந்து துணைபுரிய வேண்டியதாயிற்று. அதிராசேந்திரன் ஆட்சிபெற முடியாதவாறு முன்னின்று தடைசெய்தவர் யாவர் என்பது குறித்துச் சோழர் கல்வெட்டுக்களோ, அவர் மெய்க்கீர்த்திகளோ, விக்கிரமாதித்தன் அவைக் களப் புலவராகிய பில்ஹணர் எழுதிய விக்கிரமாதித்தன் வரலாற்று நூலோ ஏதும் கூறவில்லை. ஆனால், வீரராசேந்திரனுக்கு முன் சோணாடு ஆண்ட அவன் முன்னோனாகிய இரண்டாம் இராசேந்திரனுக்கு ஆண் மக்கள் அறுவர் இருந்தனர்; சோணாட்டின் வீர வாழ்விற்குத் துணையாய் அவர்களும் போர் பல புரிந்துள்ளனர்; வெற்றிகொண்ட நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை, இராசேந்திரன் அவர்கள் பால் அளித்திருந்தான் என்று அக்காலக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. மூத்தோன் வழிவந்த அவர்கள் இருக்க, இளையோன் வழி வந்த அதிராசேந்திரன் ஆட்சிப்பீடம் ஏறுவது அரசியல் அறமாகாது என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழ, அதனால் தாய் உரிமைப் போர் தலைதூக்க விக்கிரமாதித்தன் இடைபுகுந்து, அவரை அடக்கி, அதிராசேந்திரனை அரியணையில் அமர்த்தி இருத்தல் கூடும்; அல்லது சோணாட்டில் தாய் உரிமைப்போர் எதுவும் தோன்றாதிருக்கவும், மூத்தோன் வழி மக்கள் அறுவர் இருப்பதால், அது தோன்றிவிடுமோ என்ற அச்சத்தால் அரியணையேறும் மைத்துனனுக்குத் துணைபுரியச் சோணாட்டிற்கு விக்கிரமாதித்தன் வந்திருத்தலும் கூடும். தன் தோள்வலியை வடநாட்டு வேந்தரெல்லாம் கண்டு வியத்தல் வேண்டும் என்பதில் இருந்த குலோத்துங்கன் வேட்கை, சோணாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வொட்டாது தடுத்துவிட்டது போலும்; அவன் ஆங்குச் சென்றிலன்; ஆனால், அவன் அப்போது சென்றிலனேனும், அது நிகழ்ந்த சின்னாட்களுக்கெல்லாம் செல்ல வேண்டிய நிலைமை தானாகவே வந்தடைந்தது.

மைத்துனன் மேலைச்சாளுக்கியப் பெருவீரன் விக்கிரமாதித்தன் துணையால் சோணாட்டு மன்னனாகிய முடிபுனைந்த அதிராசேந்திரன், சோணாட்டு அரியணையில் ஒரு சில திங்களே வீற்றிருந்தான்; அவன் ஆட்சி ஆறு திங்களே நடைபெற்றது: ஆறாம் திங்களில் அவன் இறந்துவிட்டான். அவன் இறந்தது குறித்துப் பலர் பற்பல முடிவை மேற்கொண்டுள்ளனர்; வடமொழிப் புலவர் பில்ஹணரின் விக்கிரமாதித்தன் வரலாற்று நூல், அதிராசேந்திரன் சோணாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று கூறுகிறது. உள் நாட்டுக் குழப்பம் ஒரு புறமும், அந்நாள்வரை சோழர் ஆணைக்கு அடங்கியிருந்த குறுநிலத் தலைவர்களின் கலகம் ஒருபுறமும் தலைதூக்கச் சோணாட்டில் அமைதி குலைந்துவிட்டது: அறநெறி ஆட்சி அழிந்துவிட்டது என்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப் பரணியும் கூறுவதால், வடமொழிப் புலவர் கூற்றில் உண்மையுளது என்று சில வரலாற்றாசிரியர் வாதிக்கின்றனர். அதிராசேந்திரனின் பெரிய தந்தையாகிய இரண்டாம் இராசேந்திரனுக்கு மக்கள் அறுவர் இருந்தனர்; அமர் புரிவதிலும், ஆட்சி நடத்துவதிலும் அவர்கள் வல்லவர் என்ற வரலாற்று உண்மை, அவ்வாதத்திற்குத் துணை புரிவதாகவும் உளது.

சோழர்குலக் கடவுளாம் அம்பலவாணன் அருள் நடம் புரியும் தில்லையில், சித்திரக்கூடத்தில் இருந்த திருமாலின் திருவுருவைப் பெயர்த்துக் கடலில் எறிந்தும், திருமால் அடியார்களைத் துன்புறுத்தியும் வைணவ மதத்தை வேர் அறுக்கப் பண்ணினான் அதிராசேந்திரன்; வைணவத்திற்கு அவன் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு கலங்கிய அம்மத ஆசிரியராகிய இராமாநுசர் தமிழகத்தை விட்டு வெளியேறி மைசூர் நாடு சென்று தலைமறைந்து வாழ்ந்தார்; அக்காலை, அவர் செய்த மாரண மந்திரத்தினாலேயே அதிராசேந்திரன் மாண்டான் என வைணவ நூல்கள் கூறுகின்றன. வடமொழிப் புலவரின் வரலாற்று நூலினும், இவ்வைணவ நூல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன என்ற கருத்து சில வரலாற்றாசிரியர்களிடத்தில் வலுப்பெற்று விளங்குகிறது.

அதிராசேந்திரன் இறந்தமைக்குச் சோணாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பமோ, வைணவமத விரோ தமோ காரணங்கள் ஆகா சோணாட்டு அரியணையில் அமர வேண்டும் மென்ற ஆசையால் குலோத்துங்கனே முன்னின்று கலகத்தீயை மூட்டி அதிராசேந்திரனைக் கொன்றான் என்ற கருத்துடைய வரலாற்றாசிரியர்க்ளும் சிலர் உளர்.

தமக்குப்பின் நாடாளும் தகுதியுடையான் யாவன் என்பதை நாட்டு மக்களும், நாட்டின் அரசியல் அதிகாரிகளும் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அரசியல் நெறியை அறிந்து, அவ்வினவரசனுக்குத் தம் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டுவதைச் சோழ மன்னர்கள் முறையாக மேற்கொண்டிருந்தனர்: அம்முறைப்படியே. வீரராசேந்திரனும் தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருந்தானாதலின், அவன் இறந்த பின், அதிராசேந்திரன் அரியனை அமர்வதை, அந்நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் மனம் உவந்து ஏற்றுக் கொண்டிருப்பாரே யலலது மாறுபட்டிருக்கமாட்டார், மேலும், அதிராசேந்திரன் ஆண்டது ஆறு திங்களே என்றாலும், அக்குறுகியகால ஆட்சியும், அறவழி ஆட்சியாய் அமைதி நிலவும் ஆட்சியாகவே விளங்கிற்று என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. மேலும் அதிராசேந்திரன் மெய்க் கீர்த்திகள், “வீரமும் தியாகமும் ஆரம் எனப் புனைந்து, மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பரகேசரிவர்மரான உடையார் ஶ்ரீ அதிராசேந்திர தேவர்” என அவனை. வாயார வாழ்த்துவதால், அன் தன்னாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டுப் பெரும்புகழோடு ‘அறநெறியில் அரசாண்டிருந்தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் நோக்கின், அதிராசேந்திரன் அரியனை அமர விக்கிரமாதித்தன் துணைபுரிந்தான்: ஆனால், ஆறு திங்கள் கழித்து அவன் கொல்லப்பட்ட போது வெகு தொலைவில் வாழ்ந்த விக்கிரமாதித்தனால் விரைந்து சென்று துணை புரிய முடியவில்லை என்று கூறும் பில்ஹணர் வரலாற்றுச் செய்தி உண்மை அன்று; அது தன் பாட்டுடைத் தலைவனாகிய விக்கிரமாதித்தனைப் புகழ்ந்து கூறவந்த வெற்றுரையே என்பது புலனாம் எனக் காரணங்கள் காட்டி, அரசியல் கலகக் கூற்றை மறுக்கின்றார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவக்கரைச் சந்திர மெளனீசுவரர் திருக்கோயிலுக்குள் இருந்த வரத ராசப்பெருமாள் கோயில், கருங்கல் கோயிலாகக் கட்டப் பட்ட நிகழ்ச்சி, அதிராசேந்திரன் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது என்ற செய்தியொன்றே இவன் வைணவ சமயத்தை வெறுப்பவன் அல்லன் மாறாக அதன் வளர்ச்சிக்குத் துணைபுரிபவன் என்ற உண்மையை நிலைநாட்டும். மேலும், இராமாநுசர் அதிராசேந்திரனுக்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தவர் என்பதற்கும், சித்திரகூடத் திருமால் வடிவத்தைக் கடலில் எறிந்தவன் இரண்டாம் குலோத்துங்கனாவன் என்பதற்கும் நிறைய சான்றுகள் உள. ஆகவே, அதிராசேந்திரன், வைணவ சமய வெறுப்பின் காரணமாகவே கொலை செய்யப்பட்டான் என்பது அடிப்படையற்ற பொய்யல்லது மெய்யாகாது என்று கூறி அதிராசேந்திரனின் அக்குற்றச் சாட்டையும் மறுக்கிறார்கள் அவ்வரலாற்றாசிரியர்கள்.

சோணாட்டு அரியணைக்கு உரியாரைக் கொன்று விட்டு, அதைத் தான் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்து குலோத்துங்கனுக்கு இருந்திருந்தால், அதிராசேந்திரன் அரியணையேறும் அக்காலத்திலேயே, நாட்டில் கலகத்தியை மூட்டித் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பான். குலோத்துங்கனின், தகுதி திறமைகளை அறிந்திருந்த சோணாட்டு மக்களும் அவனுக்குத் துணை புரிந்திருப்பரேயல்லது தடைகூறியிருக்கமாட்டார்கள்; ஆனால் அவன் அப்போது அது செய்திலன்: செய்திருந்தால் அதிராசேந்திரன் உள்நாட்டுக் கலகத்தில் உயிர் துறந்தான் எனக் கூறும் வடமொழிப் புலவர், அக் கலகத்திற்குக் குலோத்துங்கனே காரணமாவன் என்று கூறியிருப்பர்; விக்கிரமாதித்தன் அவைகளத்தில் அமர்ந்து: தம் அரசனைப் புகழ்ந்து பாராட்டியும், அவன் பகைவர்களை இழித்தும் பழித்தும் பாடுவதையே வழக்கமாகக் கொண்ட பில்ஹணர், தம் அரசரின் பெரும் பகைவனாகிய குலோத்துங்கன் செய்த அக்குற்றத்தைக்கூறாது. விட்டிரார்; அவர் அவ்வாறு கூறவில்லை. அது ஒன்றே: அதிராசேந்திரனின் கொலையில் குலோத்துங்கனுக்குப் பங்கில்லை; இவனுக்கு அவன் மீது பகையும் இல்லை என்பதற்குப் போதிய சான்றாகும் எனக்கூறி அக்குற்றச் சாட்டையும் மறத்துரைக்கிறார்கள் அவ்வரலாற்றாசிரியர்கள், நிற்க,

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூகூரில் கண்டெடுக்கப்பட்ட அதிராசேந்திரன் காலத்துக் கல்வெட்டொன்று, அவன் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றான் என்றும், அது தீர்ந்து அவன் உடல்நலம் பெறற்பொருட்டு, அவ்வூர். இறைவன் திருமுன் நாள்தோறும் இருமுறை தேவாரப்பாக்கள் ஒதப்பெற்றன என்றும் கூறுகிறது. அதிராசேந்திரன் அரசியல் குழப்பத்தாலோ, சமயச் சண்டைகளாலோ கொல்லப்பட்டவன் அல்லன்; அவன் நாட்டில் அவன் காலத்தில் அவ்விதக் குழப்பம் எதுவும் இடம் பெறவில்லை; மாறாக அவன் ஆட்சி, மக்கள் மனம் மகிழும் மாட்சிமையுடையதாகவே விளங்கிற்று; அவன் நோயுற்று இயல்பாகவே இறந்துபோனான் என்ற இவ்வுண்மைகள் அனைத்திற்கும் இக்கூர்க் கல்வெட்டு ஒன்றே, குன்றிடை விளக்கென நின்று விளக்கம் தருகிறது, என்று கூறிக் குலோத்துங்கனுக்குக் கொலைக் குற்றப் பழிசூட்டுவாரின் வாயடைத்து விடுவர். அவ்வரலாற்றாசிரியர்கள்.

அதிராசேந்திரன் எவ்வாறோ இறந்துவிட்டான். அவன் மறைவு இயல்பாக நிகழ்ந்ததோ அல்லது அரசியற் குழப்பத்தின் விளைவாய் அது நேர்ந்ததோ அறியோம்; ஆனால், சோணாடு அரசனை இழந்துவிட்டது. அரசிழந்த நாட்டில் அறம் அழிந்துவிட்டது என்பது மட்டும் உண்மை. அந்தணர் செந்தழல் அவிழ்ந்தது; மனு முறை ஆட்சி மாண்டது, ஆறு சாத்திரங்களும் மாறி மருண்டன; மறையொலி மங்கிற்று; உள்ளத்தான் ஒன்றி ஒரிடத்தே வாழ்ந்த பல சாதி மக்களும் பகை மிகுந்து போரிட்டு மடியலாயினர்; மக்கள் தங்கள் தங்களுக்கு உரிய ஒழுக்க நெறிகளைக் கைவிட்டுத் தகாவொழுக்கங்களைத் தலைமேற்கொண்டனர்; குற்றம் புரிவதில் சோணாட்டார் ஒருவரையொருவர் மிஞ்சினர்; கோயில்களில், சிறப்பும் பூசையும் சீர் குலைந்தன, செயல் இழந்தன; காரிகையரின் கற்பு நெறி கெட்டழிந்தது; ஊர்களைச் சுற்றி அமைந்த அரண்களும் அழிந்தன; உள்ளத்திற்கு அரண் அளிக்கும் அருங்குணங்களும் அழிவுற்றன; சோணாட்டின் இக்கொடுங்காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது கலிங்கத்துப் பரணி, காணக் கூசும் அக்காட்சியை நீங்களும் காணுங்கள்:


“மறையவர் வேள்விகுன்றி, மனுநெறி அனைத்தும்மாறித்
துறைகள் ஓர் ஆறும் மாறிச், சுருதியும் முழக்கம் ஓய்ந்தே;
சாதிகள் ஒன்றோடொன்று தலைதடுமாறி, யாரும்
ஒதியநெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்துபோயே;
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்தம் கோயில்சாம்பி
அரிவையர் கற்பின்மாறி, அரண்களும் அழிய ஆங்கே.”

தன்னைப் போற்றி வளர்த்த பெருநாடு, தன் தாயை ஈன்ற திருநாடு அரசிழந்து அல்லல் உறுகிறது என்பதைக் கேட்டான் குலோத்துங்கன்; இருநூறு ஆண்டுகளாக இறவாப் பெருநிறையில் வாழ்ந்த ஒரு பேரரசு வீழ்ந்து போவதை அவனால் வாளா பார்த்திருக்க முடியவில்லை. மேலும் கங்கை கொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் எனும் முறையால், அச்சோணாட்டு அரியணையில் அமரும் உரிமை தனக்கு இருப்பதையும் உணர்ந்தான், உடனே வடநாட்டு வாழ்வை வெறுத்து, விரைந்து தென்னகம் வந்து, கங்கைகொண்ட சோழபுரத்தில், சோணாட்டுக் காவலனாய் முடி புனைந்து கொண்டான்; அவனை அவன் இளமைப் பருவம் தொட்டே அறுந்திருந்த சோணாட்டு மக்களும் அவன் ஆட்சித் தலைமையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்; சாளுக்கியச் சிற்றரசன் சோழர்குலப்பேரரசனாம் பேற்றினைப் பெற்றான்; அவனுக்கு அப்பெரும்பேற்றினை அளித்த சோணாடு, அவன் வரவால் அமைதி நிலவும் நல்வாழ்வையும், அலை கடலுக்கு அப்பாலும் சென்று பரவும் வாழ்வையும் பெற்றுப் பெருமையுற்றது. சோணாட்டு மக்கள் பண்டைப் பெருவாழ்வு மீள மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

எட்டுத்திசைக் கொற்ற வேந்தர்களும் குலோத்துங்கன் குடைநிழற்கீழ் வந்து குவிந்தார்கள். நான் மறைகளும் நன்னெறி நிலவ நாடெங்கும் முழங்கின; சேரன், வீரக்கழல் ஒலிக்கும் குலோத்துங்கன் காலடியில் வந்து சேர்ந்தான்; மதுரை மன்னன் கடலிடைத் தீவுகளுக்குச் சென்று கரந்துறை வாழ்வு மேற்கொண்டான். புலவர்கள் பாடிப் பெறும் பரிசில் பொருள்களைச் சுமக்கமாட்டாது சுமந்து சென்றனர்; பொதிகாளைகள் பகையரசர்கள் வழங்கிய பகுதிப் பொருள்களைச் சுமந்து வரிசை வரிசையாக வந்து சேரலாயின; அவன் ஆணைக்கு அடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்து அவன் ஏவல் வழி அரசாளத் தொடங்கினர்; அவன் தோள்கள் ஆட்சிச் சுமை தாங்கும் ஆணவத்தால் பருத்துப் பெருமையுற்றன.


“நிழலில் அடைந்தன திசைகள்; நெறியில் அடைந்தன மறைகள்;
கழலில் அடைந்தனர் உதியர்; கடலில் அடைந்தனர் செழியர்;
பரிசில் சுமந்தன. கவிகள்; புகடு சுமந்தன திறைகள்;
அரசு சுமந்தன இறைகள்; அவனி சுமந்தன புயமும்.”