கலிங்கம் கண்ட காவலர்/குலோத்துங்கன் கொற்றம்

விக்கிமூலம் இலிருந்து
3. குலோத்துங்கன் கொற்றம்

வடக்கே வேங்கிநாடு முதல், தெற்கே கடல் கடந்த ஈழ நாடு வரை பரவியிருந்த ஒரு பேரரசைக் கட்டிக் காக்கும் பொறுப்பு, கொற்றம் மிக்க குலோத்துங்கனுக்கு அரசியல் சுமையாகத் தோன்றவில்லை; குலோத்துங்கன் மூவேந்தர் குடியில் வந்தவனல்லன்; தமிழ்நாட்டில் பிறந்து, தமிழர்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு தமிழனாகவே வாழ்ந்தான் எனினும், அவன் தமிழ் நாட்டான் அல்லன்; இக்காரணங்களால், தமிழரசர்களாகிய சேரனும் பாண்டியனும் அவன் ஆட்சித் தலைமையை வெறுக்கத் தலைப்பட்டார்கள். தம் அண்டை நாட்டில் அரசோச்சும் சோழர் தலைமையையே வெறுத்து வந்த ஈழ நாட்டார், நனிமிகச் சேயநாட்டினனாகிய சாளுக்கியன் தலைமை கீழ் வாழ விரும்புவரோ? அவர்கள் உள்ளத்திலும் வெறுப்புணர்வு வளர்ந்துகொண்டிருந்தது. தன் மைத்துனன் அதிராசேந்திரன் இருந்து ஆண்ட அரியணையில், தன் தாயத்தவனும் தன்குலப் பகைவனுமாகிய குலோத்துங்கன் அமர்வதையும், அவன் தலைமையில், வேங்கிநாடும், சேர, சோழ, பாண்டிய நாடுகளும் அடங்கிய ஒரு பேரரசு வருவதையும் மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்த மாவீரன் வெறுத்தான்; இத்தகைய சூழ்நிலையில் சோணாட்டு அரசுரிமையை ஏற்றுக்கொண்ட குலோத்துங்கன், எத்தகைய தாக்குதலையும் தாங்கி அழிக்கவல்ல வீரமும் விழிப்புணர்வும் உடையனாய் விளங்கினான். ஆண்மை ஆற்றல்களில்; சோணாட்டு அரியணையில் அமர்ந்து ஆண்ட அரசர்கள் அனைவரினும் குலோத்துங்கன் சிறந்து விளங்கினான் என்றாலும், அக்குல முன்னோர் போல் சென்று தாக்கும் போரில் சிந்தை 

செலுத்தினானல்லன்; அப்போர் முறை ஒரு பேரரசிற்கு ஆக்கத்தினும் அழிவையே அளிக்கும். என அறிந்திருந்தமையால், எந்நாட்டின் மீதும் வலியச் சென்று போர்த் தொடுப்பதை அவன் விரும்பினானல்லன்; ஆனால் தன் நாட்டின் மீது போர் தொடுப்பவரையும், தன் தலைமையை வெறுத்து விடுதலை பெற விரும்பும் வேந்தர் களையும் வென்று பணி கொள்வதில் அவன் காட்டிய வீரமும் விரைவும் அம்மம்ம! வாய்விட்டுக் கூறமாட்டா விழுச்சிறப்புடையவாம். இவ்வகையால் குலோத்துங்கன் புகுந்த போர்க்களங்கள் சிலவற்றையும், அக்களங்களில் அவன் பெற்ற வெற்றிகள் சிலவற்றையும் கண்டு செல்வோமாக.

மேலைச்சாளுக்கியரொடு மேற்கொண்ட போர்: குலோத்துங்கனோடு முதன் முதலில் எதிர்ந்து போரிட வந்த மன்னன், மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தனே ஆவன். சோணாட்டு அரசியலில் தன்கை தாழ்ந்து போகக் குலோத்துங்கன் கை ஓங்கிவிட்டதை வெறுத்த விக்கிரமாதித்தன், குலோத்துங்கன் கொற்றத்தைக் குலைப்பதில் கருத்தைப் போக்கினான். குலோத்துங்கன் பேராண்மையையும் படைப்பெருமையையும் அறிந்திருந்த அவன், அவற்றை அழித்தொழிக்கும் ஆற்றல் பெரும் அளவு, தன் படைப் பெருமையைப், பெருக்குவதில் சில ஆண்டுகளைக் கழித்தான். ஐந்து ஆண்டுகளாக அரும்பாடுபட்டுப் படையைப் பெருக்கினான்; மேலைச்சாளுக்கியனின் மனக்குறிப்பைக் குலோத்துங்கனும் அறிந்திருந்தான்; அதனால், அவன் படையெதிர்ப்பை எதிர் நோக்கித் தன் படையையும் பெருக்கிக் கொண்டே வந்தான். மேலும், மேலைச்சாளுக்கியர்க்குரிய குந்தள நாட்டரசியலில் குழப்பநிலை நிலைபெறுவதையுணர்ந்து, அதைத் தனக்கு ஆக்கநிலையாக ஆக்கிக் கொள்வதிலும், தன் அரசியல் திறத்தைப் பயன் கொண்டான். குந்தள நாட்டின் ஒரு பகுதி விக்கிரமாதித்தன் ஆட்சிக்கீழ் இருக்க, மற்றொருபகுதி அவன் முன்னோன் சோமேசுவரன். ஆட்சிக்கீழ் இருந்தது; இருவரும் உடன் பிறந்தவர்களேனும் அவர்களிடையே, அக்காலை ஒற்றுமை குலைந்து பகையுணர்வு தலைதூக்கி நின்றது. அஃதறிந்த குலோத்துங்கன் சோமேசுவரனைத் தன் துணைவனாக ஆக்கிக்கொண்டான். “தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்; இத்துணையாக் கொள்க அவற்றின் ஒன்று” என்ற போர் நெறியுணர்ந்து குலோத்துங்கன் மேறகொண்ட இம்முடிவு கண்டு விக்கிரமாதித்தன் வெஞ்சினம் கொண்டான்; இனியும் காலங்கடத்தின் தனக்குக் கேடாம்; குலோத்துங்கன் வெற்றிக்குத் தானே வாய்ப்பளித்தது போலாம் என உணர்ந்தான்; உடனே, தம்பி துணைவர, ஐந்து ஆண்டுகளாகத் திரட்டி வைத்துள்ள பெரும்படையோடு தென்னாடு நோக்கிப் புறப்பட்டான்.

விக்கிரமாதித்தன், சோழ அரசின் வடவெல்லை நாடாகிய மைசூர் நாட்டுக்குள் புகுந்துவிட்டான் என்பதை அறிந்த குலோத்துங்கன் வடதிசை நோக்கி விரைந்தான்; வாக்களித்தவாறே, விக்கிரமாதித்தனின் முன்னோனாகிய சோமேசுவரன் சோழன் பக்கம் நின்று போரிட்டான், ஹொய்சள எரியங்கன், கடம்பகுல சயகேசி, பாண்டியன் திருபுவன மல்லன், யதுகுல சேஷணன் முதலிய சிற்றரசர்கள் விக்கிரமாதித்தனுக்குத் துணையாக வந்தார்கள். இருதிறப் படையினர்க்கும் போர் தொடங்கிவிட்டது; மைசூர் நாட்டு மண்ணில் மாண்டவர் தொகையை மதிப்பிடல் இயலாது; பல பேரூர்கள் போர்க்களங்களாயின; வெற்றி தோல்வி காணாவகையில் வீரர்கள் வெஞ்சமர் புரிந்தார்கள். இறுதியில், கோலார் மாவட்டத்தில் உள்ள நங்கிலி நகர்க்கு அணித்தாக நிகழ்ந்த போரில் குலோத்துங்கன் வெற்றி கொண்டான்; ஆங்குத் தோற்ற விக்கிரமாதித்தன் துங்கபத்திரையாற்றைக் கடந்து அக்கரையடையும்வரை அவனை விடாது துரத்திச் சென்றான் சோணாட்டுக் காவலன், அங்ஙனம் சென்ற சோழர் படைவாளா செல்லாது வழியிடை நகள்களாகிய மணலூரிலும், அளத்தியிலும், மேலைச்சளுக்கியர் படையை மடக்கி நிறுத்தி நிறுத்தி, மண்டமர் புரிந்து வெற்றி பல கண்டவாறே சென்றது; மைசூர்நாட்டு நவிலையிலும், அளத்தியிலும் விக்கிரமாதித்தன் நிறுத்தி வைத்த வேழப்படைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது, குலோத்துங்கன் நவிலையில் பெற்ற களிறுகள் மட்டும் ஆயிரத்துக்கு மேலாகும். இறுதியில் துங்கபத்திரைப் பேராற்றங்கரையில் நடைபெற்ற போரில், விக்கிரமாதித்தனும் அவன் தம்பியும் சோழர் படையின் எதிர் நிற்கமாட்டாது களம் விட்டகன்று கரந்து கொண்டனர்; இப்போர்களின் பயனாய்க் கங்க மண்டலமும், கொண் கானமும் குலோத்துங்கன் உடைமைகளாயின; இவ்வாறு மேலைச்சளுக்கிய நாட்டில் வெற்றி பெற்ற குலோத்துங்கன், ஆங்குத்தான் கைப்பற்றிய கணக்கிடமாட்டாக் களிறுகளோடும், பெரும் பொருட்குவியலோடும், எண்ணிலாப் பெண்களோடும், கங்கைகொண்ட சோழ புரம் வந்து சேர்ந்தான்.

பாண்டியரொடு மேற்கொண்ட போர்: தமிழரசர் மூவேந்தருள், பழமையானவர், தமிழ் வளர்த்தவர் என்றெல்லாம் பாராட்டப் பெறும் பெருமையுடையவர் பாண்டியர்; விசயாலயன் வழிவந்த சோழர் பேரரசு தோன்றுவதற்கு முன்னர்த் தமிழகத்தில் பேரரசு நடத்தியவர்கள்; அத்தகையர் பிறிதொரு பேரரசின் கீழ் அடங்கி வாழும் அடிமை வாழ்வை விரும்புவரோ? பராந்தகனும் இராசராசனும் அவர்களை வென்று, அவர்கள் நாட்டில் சோழ அரசை நிலைநாட்டினர் என்றாலும், பாண்டியர்கள் காலம் வாய்க்கும்போதெல்லாம் சோழ அரசை அழித்துத் தனியரசு பெறும் முயற்சியை விடாது மேற்கொண்டே வந்தனர்; அதனால் சோழ மன்னர்கள், பாண்டி நாட்டு மண்ணில் ஓயாயப்போர் மேற்கொண்டே 

அந்நாட்டைக்காத்துவந்தனர்; பாண்டி மன்னர்களின் இம் மறவுணர்வை அறிந்துகொண்டமையால் கங்கைகொண்ட சோழன். தன் மக்களையும் பேரன்மார்களையும், பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையிலேயே இருந்து ஆளும் முறையை மேற்கொண்டான். அதனால் பாண்டி மன்னர்களின் விடுதலை முயற்சி ஒருவாறு அடங்கியிருந்தது. இந்நிலையில் சோணாட்டில் வீரராசேந்திரனுக்குப் பிறகு அரியணை ஏறிய அவன் மகன் ஆறு திங்கள் கூட இருந்து ஆளாது இறந்து விட்டான். அரசுக்கு உரியாரைப் பெற மாட்டாது சோணாடு சில திங்கள் அல்லற்பட்டுக் கிடந்தது; இந்நிலையை இனிய வாய்ப்பாகக் கொண்டு, பாண்டி மன்னர் மரபில் வந்த அரசிளங்குமரர் ஐவர், சோணாட்டுப் படைகளைத் துரத்திவிட்டுப் பாண்டி மண்டலத்தை ஐந்து பகுதியாகப் பிரித்துக்கொண்டு அரசாளத் தொடங்கிவிட்டார்கள்.

சோழ அரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிபுனைந்து கொண்ட குலோத்துங்கன் பாண்டிநாட்டு நிலையை அறிந்தான்; ஆயினும் வடவெல்லையில், விக்கிரமாதித்தன் பெரும் படையோடு காத்திருக்கும் காலத்தில், தென்னாட்டின் மீது படைகொண்டு செல்வது போர் முறையாகாது என அறிந்த குலோத்துங்கன், பாண்டியர்களை, அவர்கள் போக்கில் சிலகாலம் விட்டுவைத்தான் ; வடவெல்லைப் போரை முடித்துக்கொண்டு, விக்கிர்மாதித்தனை வென்று திரும்பியதும் பாண்டிநாட்டின் மீது அவன் பார்வை சென்றது. ஆயினும் பாண்டி நாட்டுப் போரை அப்போதே தொடங்க அவன் விரும்பவில்லை, ஒரு பெரும் போரில் ஈடுபட்டுத் தன் படை பெரிதும் வலி யிழந்து கிடக்கிறது; ஆனால் பாண்டியர்களோ, இந்த இடைக் காலத்தில் தம் படைகளைப் பெருவாரியாகப் பெருக்கி வைத்திருந்தனர்; அதை உணர்ந்திருந்த குலோத் துங்கன், தன் படை பலம் பண்டேபோல் பேராண் மையும், பேராற்றலும் வாய்ந்ததாகுக என ஐந்தாண்டு காலம் காத்திருந்தான். எப்படையையும் எதிர்த்தழிக்க வல்ல ஆற்றல் உடையதாகிவிட்டது என்பதை அறிந்து கொண்ட அக்கணமே, குலோத்துங்கன் பாண்டிநாடு நோக்கிப் புறப்பட்டுவிட்டான்; பாண்டியர் ஐவரும் ஒன்று கூடி வந்து குலோத்துங்கனை எதிர்த்தனர்; பல ஆண்டுகளாகத் திரட்டி வைத்திருந்த பாண்டியப் படையும், உரம்மிக்கு உரிமைப் போர் நடத்திற்று; ஆயினும் குலோத்துங்கன் கொற்றத்தின் முன் அவை எம்மாத்திரம்? சோழர் படையின் தாக்குதலைத் தாங்கமாட்டாது சோர்ந்து விட்டது; பாண்டிய மன்னர்கள், படைகளைக் கைவிட்டுப் புறங்காட்டி ஓடிக் காட்டுக்குள் புகுந்து மறைந்துவிட்டார்கள். வாகை சூடிக் கள வேள்வி நடத்திய குலோத்துங்கன், பாண்டிநாடு முழுவதும் வெற்றித் தூண்களை நாட்டினான். பாண்டியர்க்குப் பெருமை அளிக்கும் முத்து கிடைக்கும் கடற்றுறைப் பட்டினங்களையும், சந்தனம் வளரும் பொதியிற் கூற்றத்தையும், காவிரி பிறக்கும் சைய மலையையும், குமரி முனையையும் கைப்பற்றிக்கொண்ட கொற்றத்தோடு கங்காபுரி வந்தடைந்தான்.

சேரருடன் மேற்கொண்ட போர்: தங்கள் நாட்டில் சோழர் ஆட்சி நடைபெறுவதை வெறுப்பதில், சேரர்கள் பாண்டியர்க்குச் சிறிதும் குறைந்தவரல்லர்; சோழ அரசை அழித்துத் தம் அரசு அமைத்து ஆள்வதில் ஆர்வம் மிக்க சேரர்களும், பாண்டியர்களைப் போலவே, அதிராசேந்திரன் இறந்தமையால் சோணாட்டில் தலை தூக்கிய அமைதியின்மையையே பயன்கொண்டு கலகம் விளைவித்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர்; அவர்கள் ஆட்சியும் ஆங்குச் சிலகாலம் நடைபெற்றது. இறுதியில் பாண்டியரை வெற்றிகொண்ட குலோத்துங்கன் சேர நாடு சென்று சேர்ந்தான். மேலைக்கடற்கரையைச் சார்ந்த வீழிஞம், குமரிமுனைக் கோட்டாறு, காந்தளூர்ச்சாலை முதலான ஊர்களில் பெரும்போர் நடைபெற்றது,

க-6 மலைநாட்டு மக்கள் மறங்கொண்டு போராடினார்கள்; ஆயினும் எண்ணற்றோர் உயிர் இழந்தனர். காந்தளூர்ச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேரரின் கடற்படை இருமுறை அழிக்கப்பட்டது. கோட்டாற்றை எரியூட்டி அழித்தார்கள். சேரமன்னன் செருக்களம் விட்டோடி வந்து சோழ மன்னன் அடிபணிந்தான்; அவன் ஆட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டான்.

பாண்டியநாட்டுப் போரிலும், சேரநாட்டுப் போரிலும் வெற்றி பெற்ற குலோத்துங்கன், அந்நாடுகளில், இவை போலும் போர்க் கிளர்ச்சிகள் இனியும் தலைதூக்கி விடக்கூடாது; அதற்கு வழியாது என ஆராய்ந்தான்; பாண்டியர்க்கும், சேரர்க்கும் படைதிரட்டும் வாய்ப்புக் கிட்டுவதினாலேயே இத்தகைய கிளர்ச்சிகள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. அவ்வாய்ப்புக் கிட்டாமல் செய்துவிட்டால் இவை இடம் பெறா என உணர்ந்தான். அவ்வுணர்வின் பயனாய்த் தமிழகத்தின் தென்கோடி முனையிடை ஊராகிய கோட்டாறு முதலான பகை நாட்டுப் பேரூர்கள் ஒவ்வொன்றிலும், சோணாட்டின் நிலைப் படைகளை நிறுவி, அப்பகைவர்கள் படையெடாவாறு பார்த்துக் கொள்ளப் பணித்துவிட்டுப் பழையாறை நகர் வந்து சேர்ந்தான்.

தென் கலிங்க வெற்றி : தன் சிறிய தந்தை விசயாதித்தன் மாண்ட பின்னர் வேங்கிநாட்டு ஆட்சி உரிமையைக் குலோத்துங்கன் ஏற்றுக்கெண்டான்; தந்தை வழிவந்த தர்ய்உரிமை நாடாதலின், வேங்கி நாட்டில் இருந்தாள வேண்டுவது தன் நீங்காக் கடமை ஆயினும், வடகோடி நாடாகிய வேங்கிநாட்டிற்குத் தான் வந்து விட்டால், தாய்வழி பெற்ற சோழர் பேரரசை இழக்க வேண்டிவரும் என அறிந்த குலோத்துங்கன், வேங்கி. நாட்டு வாழ்வை விரும்பினானல்லன்; ஆயினும் அந்நாட்டு உரிமையை அறவே கைவிடவும் அவன் விரும்பவில்லை; அதனால் அதன் ஆட்சிப் பொறுப்பைத் தன் . 

மூத்தமகன் விக்கிரமசோழன்பால் ஒப்படைத்து, அவனை ஆங்கு அனுப்பியிருந்தான். வேங்கிநாட்டு வெண் கொற்றக்குடைக்கீழ் வீற்றிருப்பவன் கொற்றம் மிக்க குலோத்துங்கன் அல்லன்: விளையாடற் பருவத்தனாகிய விக்கிரமனே என்ற அறியாமை உணர்வால் அறிவிழந்து போனான். வேங்கி நாட்டின் அண்மை நாடாகிய தென் கலிங்க நாட்டுக் காவலன் வீமன், அன்று வரை வேங்கி நாட்டு வேந்தர் க்கு அடங்கிய சிற்றரசனாய் வாழ்ந்திருந்தவன் அவ்வீமன், அவனை அறியாமை இருள் சூழ்ந்து கொள்ளவே, தனியரசு அமைத்துக் கொள்ள ஆசை கொண்டு தன் நாட்டில் ஆரவாரம் செய்யத் தலைப் பட்டான்; அஃதறிந்தான் வேங்கிநாட்டு வேந்தன் விக்கிரமசோழன். உடனே பெரும் படையோடு தென் கலிங்கம் புகுந்து போரிட்டு, வீமனை வென்று பண்டே போல் தனக்குப் பணிந்து ஒழுகும் சிற்றரசாய்ப் பணி கொண்டு மீண்டான். மகன் பெற்ற இவ்வெற்றி தந்தை பெற்ற வெற்றியே ஆதலின், தென்கலிங்க வெற்றியைக் குலோத்துங்கன் வெற்றியாகவே மதித்தார்கள் மக்கள்.

வடகலிங்க வெற்றி : சோழர் பேரரசின் உள் நாடுகளுள் ஒன்றாகிய தொண்டை நாட்டின் தலைநகர் காஞ்சி, பல்லவர் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் லிருந்தே, வடவெல்லைத் தலைநகராக விளங்கிய அந், நகரைக் குலோத்துங்கனும், தன் தலைநகர்களுள் ஒன்றாகக் கருதி, வாழ்நாளின் ஒரு பகுதியை அந்நகரிலும் கழிக்கத் திருவுளங்கொண்டு, அவ்வப்போது அந்நகர் வந்து தங்கிச் செல்வான். அவ்வாறு ஒரு முறை ஆங்குச் சென்றிருந்த குலோத்துங்கன் ஒரு நாள், அமைச்சர், அவைக்களப் புலவர், அரசர்குல ஆசிரியர், பெரும் படைத் தலைவர் பலரோடும் பேரவையில் வீற்றிருந்தான்: அரசவைக்கு அணிகலன்களாகிய ஆடலும், பாடலும், வாழ்த்தும், வணக்கமும் முடிவுற்ற பின்னர், திருமந்திர ஒலைநாயகன் கோமகன் திருமுன் வந்து சோழர் 

பேரரசிற்கு அடங்கி அரசோச்சும், பெருநில வேந்தர்களும், குறுநில மன்னர்களும், மண்டலத் தலைவர்களும், தத்தம் திறைப்பொருள்களுடன், அரசவையின் கடைவாயிற்கண் காத்திருக்கின்றனர் என அறிவித்தான்; அவர்கள் அரசவை வருக எனக் குலோத்துங்கன் பணிக்க, வந்து வணங்கிய பின்னர்த் தாம் கொணர்ந்த வகை வகையான பொருள்களைக் குலோத்துங்கன் காண வரிசை வரிசையாக வைத்து நின்றார்கள் அவ்வேந்தர்கள். மணி ஆரங்களும், முத்தாரங்களும், நவமணிகோத்த ஏக வடங்களும், பொன் அணிகளும், பொன் முடிகளும், பொற்பெட்ட கங்களும், மணிகள் இழைத்த மகரக் குழைகளும், மகளிர் அணியும் நெற்றிப் பட்டங்களும், வேறு பல பொன்னணிகளும், நவமணிக் குவியல்களும், பொற் குவியல்களும் அரசவையில் உள்ளார் கண்ணும் கருத்தும் கூசும் வகையில் காட்சி அளித்தன. அம்மட்டோ! அவர் கள் அளித்த களிறுகள் கணக்கில; கடல் அலையெனத் தாவிக் காற்றென விரையும் குதிரைகள் கணக்கில; ஒட்டகங்களும், உயர்வகைப் பிடியானைகளும் பற்பல. திறைபெறும் அவ்வினை முடிவில், குலோத்துங்கன் திருமந்திர ஓலைநாயகத்தை நோக்கித் திறை தரா அரசர் எவரேனும் நம் ஆட்சிக் கீழ் உளரோ?” என்று வினவி னான்; ஒலைநாயகம் அரசனை வணங்கி, ஆம் அரசே! வடகலிங்க நாட்டுக் காவலன் அனந்தவன்மன், திறை தர இருமுறை வந்திலன்” என்று விட்ையளித்தான்.

அது கேட்டான் குலோத்துங்கன் கடுஞ்சினம் கொண் டான்; தன் அருகில் வீற்றிருக்கும் பெரும் படைத் தலைவன் கருணாகரத்தொண்டைமானை நோக்கிப் படைத்தலைவ! வடகலிங்கக் காவலன் வன்மை இல்லாதவன் ; அவன்மீது போர் தொடுப்பது நம் பேராண்மைக்கு இழுக்காகும்; ஆனால் நம் அடிபணிய மறுக்கும் அவனை வாளாவிடுவது அரச முறை ஆகாது. ஆகவே வடகலிங்கம் நோக்கி இன்றே புறப்படு; அவ்வடகலிங்கம், வலிய மலை யரணால் சூழப்பெற்றது. அம்மலைகள் பொடிபடும்படி பெரும்படையை உடன்கொண்டு செல்; கலிங்க நாட்டுக் களிறுகள் களப்போர் புரிவதில் திறமை வாய்ந்தன; அக்களிறுகள் எண்ணற்றவற்றைக் கைப்பற்றிக் கொணர்க; அந்நாட்டுக் காவலனையும் சிறை செய்து தருக” எனப் பணித்தான்.

சோழ மண்டலத்தில் குலோத்துங்க சோழ வள நாட்டில், திருநறையூர் நாட்டில், வண்டை நகரில் வந்தோனாகிய கருணாகரத் தொண்டைமான், குலோத்துங்கன் பணித்த பணியை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டான்; “வடதிசை அரசர்களை அறவே அழிப்பேன்; வேந்தே! விடைகொடு” என்று வேண்டிக்கொண்டான்; வேந்தனும் விடை கொடுத்தான்; அவ்வளவே. அடுத்த கணமே, போர் முரசு ஒலிக்க, சோழர் பெரும்படை வடநாடு நோக்கிப் புறப்பட்டு விட்டது; வழியறிந்து செல்லற்காம் பகலில் நடந்தும், இரவில் இருந்து இளைப்பாறியும் சென்ற அச்சேனை, பாலாறு, குசைத்தலையாறு, பொன் முகரியாறு, கொல்லியாறு, வடபெண்ணையாறு, மண்ணாறு, குன்றியாறு, கிருஷ்ணைப் பேராறு, கோதா வரியாறு, பம்பையாறு, கோதமையாறு, கோடிபலி ஆறு என்ற சிற்றாறுகளும் பேராறுகளுமாகிய ஆறுகள் பன்னிரண்டையும் வரிசையாகக் கடந்து வடகலிங்கம் அடைந்தது.

கலிங்கம் புகுந்த சோழர் பெரும்படை அந்நாட்டு நகரங்களைக் கொள்ளையடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் அழித்தவாறே அனந்தவன்மன் அரணை நோக்கி விரைந்து சென்றது. சோழர் படைவரவையும், அப்படையாலாம் அழிவுகளையும் கண்டு கலங்கிய கலிங்க நாட்டு மக்கள், உடல் பதற, உடை அவிழ ஓடி, அனந்தவன்மன் அடி வீழ்ந்து, “அரசே! சோழர் பேரரசிற்குத் தர வேண்டிய திறையைத் தர மறுப்பது தகாது எனக் கூறிய எம் சொற்களைக் கேட்டிலை; அதனால் சினங்கொண்ட சோழர் படை நம் கலிங்க நாட்டில் புகுந்துவிட்டது. அதன் வரவால் மதில்கள் இடிகின்றன; பதிகள் எரிகின்றன; எங்கும் புகை எழுகின்றது; மரச்சோலைகள் மடிகின்றன; குடி மக்கள் கெடுகின்றனர்; சோழர் படையோ மேலும் மேலும் வந்து குவிகின்றது; கடல் பொங்கி எழுந்தால் புகலிடம் எங்கே கிடைக்கும்; கடல் போலும் சோழர் பெரும்படை பொங்கி எழுந்தால், நம்மை அழியாமல் காக்க வல்ல அரண் எங்கே உளது?” என உரை குழற முறையிட்டனர்.

மக்கள் முறையீட்டைக் கேட்டும், அவர் நிலையைக் கண்டும், அனந்தவன்மன் அறிவு வரப் பெற்றானல்லன் “கலிங்க நாடு, கான் அரனும், மலை அரணும் உடையது; அதனால் அழிக்கலாகா ஆற்றல் மிக்கது என்பதை அறிய மாட்டாமையால் சோழர் படை புகுந்து விட்டது; புகுந்த படை படும் பாட்டை இனிக் காண்போம்; பாராளும் பேரரசன் குலோத்துங்கனையே பணிய மறுக்கும் யான், அவன் படைத் தலைவனைப் பணிவனோ? அத்துணை எளியவனோ யான்?” என இகழந்து கூறினான்; வந்துள்ள சோழர் படையின் பெருமையையும்; கலிங்க நாட்டுக் காவலனின் சிறுமையையும் கண்ணுற்ற அமைச்சன் எங்கராயன், அரசன் முன் வந்து, “வேந்தே! வந்த படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமானின் பேராற்றலை நீ அறிவாய்; பாண்டியர் ஐவர் அழிந்ததும்,சோழர் படைத் தலைவனால் அல்லது, சோழர் குலக் கோமகனால் அன்று; சோழர் படை கண்டு சேரர் பட்ட பாட்டினை நீ அறிவாயோ? நவிலையில் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றியதும் சோணாட்டுப் படையே; அளத்தி அழிந்ததும் அப்படையால்; வத்த நாட்டை வென்றதும் அவன் படையே; சோழர் படைத் தலைவரால் தம் அரசிழந்த அரசர்களை எண்ணிக் கூறல் இயலுமோ? ஆகவே, வேந்தன் வந்திலன்; படைத் தலைவனே வந்துளான் எனப் பழிப்பது பொருந்தாது? புடைத் தலைவன் பெருமையை இன்று பழிக்கும் நீ, நாளை அமர்க்களத்தில் நீயே அறிந்து கொள்வாய்; ஆகவே, கொடுக்கத் தவறிய திறைகளைத் தந்து பணிந்து போவதே நன்று” என அரசியல் முறைகளை எடுத்து ஓதினான்.

அமைச்சன் கூறிய அறிவுரைகளை அனந்தவன்மன் ஏற்றுக் கொண்டானல்லன். மாறாக, அமைச்சன் அறிவுரை கூறக்கூற அவன் சினம் அளவிறந்து பெருகிற்று; அமைச்ச! என்னுடைய தோள்வலியும், என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது, பிறர் போல் உன்னுடைய பேதைமையினால் இவ்வளவும் உரைத்தாய்; பிழையுரை புகன்று பிழை புரிந்துவிட்டாய்;. என் நலன் குறித்துக் கூறும் உன் அறிவுரை, என் பெருமையை அழிப்பதாக அமைவது அறிவுடைமையோ? சிங்கக் குட்டி வாழும் குகை முன்சென்று களிறொன்று பிளிறினால் அச்சிங்கக்குட்டி அஞ்சி அடங்கி விடுமோ? அறிவுரை கூறுவதை விடுத்து, அரணகத்துப் படைகளை உடனே போர்க்களம் புகவிடுக; நாடெங்கும் போர்ப்பறை முழங்கட்டும், நால்வகைப் படை வீரரும், விரைந்து களம் புகட்டும்” என ஆணையிட்டு அமர்மேற் கொண்டான்.

கலிங்கப்படை களம் புகுந்தது; இருபெரும் கடல்கள், எதிர் எதிர் நின்று போரிட்டன; படைக் கலங்களை எடுங்கள்; பரிகளைப் பாய விடுங்கள்; களிறுளைக் களம் நோக்கிப் போகவிடுங்கள்” என்னும் ஒலிகள், கடல் ஒலி போல் ஓவென ஒலித்தன. வில் நாணை இழுத்து விடுந்தொறும் எழும் ஒலியும், வீரர்களின் ஆரவாரப் பேரொலியும் காதுகள் செவிடுபடும்படி சென்று ஒலித்தன; காலை கழிந்து மாலை வரவர கலிங்க வீரர்களிடையில் சோர்வு தலை தூக்கிற்று; அந்நிலையில் கருணாகரனும் களம் புகவே, கலிங்கப்படை அறவே அழிய எஞ்சிய சிலரும் பிழைத்தோடத் தலைப்பட்டார்கள். பிழைத்தால் போதும் எனப் புதரிடைப் புகுந்து ஓடியபோது,

அப்புதரிடைச் சிக்குண்டு அரை ஆடை கிழிந்து போகத் தலைமயிர் பறிப்புகண்டு போக, நின்ற சில மயிரையும் நீக்கிவிட்டு, “அமணர் நாங்கள்; அடித்து அழிக்காதீர்கள்” என்று கூறிச் சில கலிங்கர் பிழைத்துச் சென்றனர்; வில் நாணை முந்நூலாக மார்பில் அணிந்து “அந்தணர் யாம்; கங்கை ஆடப் போந்து அகப்பட்டுக் கொண்டோம்” என உரைத்து உயிர் பிழைத்தார் ஒரு சிலர். குருதிக் கறை, படிந்து காவி நிறம் பெற்ற கொடிச் சீலைகளால் உடலை மறைத்துக் கொண்டு, “சாக்கியச் சந்நியாசிகள் யாம்: எம் ஆடை அதை உமக்கு அறிவிக்கவில்லையோ” எனக் கூறியவாறே களத்திலிருந்து மறைந்து விட்டார்கள் மற்றும் சிலர். யானை மணிகளைக் கையிற் கொண்டு, “பாடிப் பிழைக்கும் பாணர்கள் யாம். களக்கொடுமை கண்டு கலங்கி நிற்கின்றோம்” எனக் கூறிப் பிழைத்தார் கணக்கற்றோர். கலிங்கப் படையின் நிலை இது.

படை புற முதுகிட்டு ஓடி விட்டது எனக் கேட்ட கலிங்கக் காவலன், சோணாட்டுப் படைவீரர் புக மாட்டா இடம் சென்று ஒளிந்து கொண்டான்: கருணாகரன் கலிங்க நாட்டார் களத்தில் விட்டுச் சென்ற வேழ வரிசைகளையும், விரைந்தோட வல்ல குதிரைக் கூட்டத்தையும், நெடிய பெரிய தேர்களையும், உயர்ந்த ஒட்டகங்களையும், நவநிதிக் குவியல்களையும், நங்கையர் திரளையும் கைப்பற்றிக் கொண்டான். இவ்வாறு களப்போரில் வெற்றி கொண்ட பின்னர், குலோத்துங்கன் படைத் தலைவன், அனந்தவன்மன் அடங்கியிருக்கும் மலையைச் சூழ, வில்லாலும், வாளாலும் அரண் அமைத்து, விடியும் வரைக் காத்திருந்து, காலை வந்துற்றதும், அக்கலிங்கனைக் கைப்பற்றிச் சிறை செய்து கொண்டு சோணாடு வந்து சேர்ந்தான். வெற்றி பெற்று வந்த வண்டையர் கோவுக்கு, குலோத்துங்கன் வரிசைகள் பல வழங்கி வாழ்த்தினான். பாடற் பொருளாகக் கொண்டு, “பரணிக்கோர் சயங் கொண்டார்” என்ற பாராட்டினுக் குரிய பெரும் புலவராகிய சயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடிக் குலோத்துங்கனைப் பெருமை செய்தார். கலிங்க வெற்றியின் சிறப்புக்களை விளங்க உணர விரும்புவார், அப்பரணியின் துணை பெறுவாராக.

ஈழநாட்டுப் போர் : குலோத்துங்கன் பெற்ற வெற்றிகளுள், வடகலிங்க வெற்றியே பெருவெற்றியாம். எனினும், அதுவே அவன் பெற்ற இறுதி வெற்றியுமாகும்; கலிங்கப் போருக்குப் பின்னர் அவன் புகுந்த களங்களிலெல்லாம் வெற்றி பெறுவதற்கு மாறாகத் தோல்வியே கண்டான். சோழராட்சிக்கு உட்பட்டிருந்த ஈழ நாட்டில், உரிமைப் போர் உணர்ச்சி குலோத்துங்கன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே உருப்பெற்று விட்டது; ஈழ நாடாண்ட இறுதிச் சோழன் அதிராசேந்திரனே எனத் துணிந்து சொல்லலாம். சோழர் குலப் பகைவர்களாகிய சேர பாண்டியரோடு நட்புறவு மேற்கொண்டிருந்த சிங்களவர், அவர்களைப் போலவே தனியாட்சி மேற்கொள்வதில் தணியா வேட்கையுடையராய் விளங்கினர்; அதற்கு ஏற்ற காலத்தை எதிர் நோக்கியிருந்த அவர்கள், சோணாட்டில் அதிராசேந்திரன் இறக்க, அரசியல் குழப்பம் தலையெடுத்ததும், உரிமைப் போருக்கு உரிய காலம் அதுவே என உணர்ந்து, ரோகண நாட்டில் தலை மறைந்து வாழும் தங்கள் வேந்தன் விசயபாகுவைக் கொணர்ந்து, ஈழ நாட்டின் கோமகனாக முடி சூட்டி மகிழ்ந்தார்கள்; அவன் அனுராதபுரத்திலும், பொலன்னருவாவிலும் இருந்த சோழர் படைகளை வென்று துரத்தினான். தன் படை தோல்வியுற்றது எனக் கேட்ட குலோத்துங்கன், மற்றொரு பெரும் படையை ஈழ மண்டலத்திற்கு அனுப்பினான்; ஆனால் அப்படையும் தோல்வியே கண்டதும், அனுராதபுரமும், பொலன்னருவாவும் ஈழவரின் உடைமைகளாயின; விசயபாகு ஈழ நாடு முழுமைக்கும் மன்னனாய் முடி புனைந்து கொண்டான், தன் பகைவன் மதுரை மன்னனுக்கு இருக்க இடம் தந்தனர் 

என்ற காரணத்தால் பராந்தகன் வென்று கைக்கொண்ட ஈழநாட்டைக் குலோத்துங்கன் இழந்துவிட்டான்: ஈழத்தைக் காத்திருந்த சோழர் படை சோணாடு வந்தடைந்தது. கடல் கடந்த நாட்டிலும் சோழர் ஆணை நடைபெற்றது என்ற புகழ் குலோத்துங்கன் காலத்தில் அழிந்து விட்டது.

கங்கபாடிப்போர்: ஈழ நாட்டை ஆட்சித் தொடக்கத்தில் இழந்துவிட்ட குலோத்துங்கன் கங்கபாடி நாட்டைத் தன் ஆட்சியின் இறுதியில் இழந்துவிட்டான். மைசூர் மாநிலத்தின் தென்பகுதியும், சேலம் மாவட்டத்தின் வட பகுதியும் உள்ளடங்கிய கங்கபாடி, முதல் இராசராசன் காலத்தில், சோழர் தலைமையை ஏற்று, சோணாட்டின் வடமேற்கு எல்லையைக் காத்து வந்தது; தழைக்காட்டைத் தலைநகராகக் கொண்ட அந்நாட்டின் ஆட்சிப் பொறுப் பைத் தகடுர் அதிகமான் மரபில் வந்தாரிடையே ஒப் படைத்திருந்தான் இராச ர்ாசன், அந்நாள் முதல், சோழர்க்குப் படைத்துணை அளிக்கும் அதியமான்களே, இந்நாட்டை ஆண்டு வந்தனர்; அந்நல் வாய்ப்பும் குலோத்துங்கனுக்கு இல்லையாயிற்று. போசள வேந்தன் பிட்டிக விஷ்ணுவர்த்தனன், தன் தண்ட நாயகன் கங்கராசன் துணை கொண்டு அதிகமானைத் தழைக் காட்டிலிருந்து வென்று துரத்திவிட்டான். தமிழர்கள், கங்கபாடியைக் கைவிட்டுச் சோணாடு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் தென்கோடி எல்லையில் தோல்வி கண்ட குலோத்துங்கன், அந்நாட்டின் வடமேற்கிலும் தோல்வி கண்டான்; சோழர் பேரரசின் எல்லை சுருங்கத் தொடங்கி விட்டதுபோலும்!

வேங்கிநாட்டுப் போர் தான் ஏற்றுக்கொண்ட சோழர் பேரரசிற்கு உட்பட்ட நாடுகளாகிய ஈழத்தையும், கங்க பாடியையும் இழந்ததோடு குலோத்துங்கன், தன் தந்தை யிருந்து ஆண்டதும், தனக்கே உரியதுமாகிய வேங்கிநாட்டையும் இழந்துவிட்டான். வேங்கிநாட்டு அரியணையில் தன் சிறியதாதையை அமர்த்திவிட்டுச் சோணாட்டு 

அரியணையில் அமர்ந்த குலோத்துங்கன், சிறிய தந்தை மாண்டபிறகு, வேங்கிநாட்டின் ஆட்சிப் பொறுப்பைத் தன் மக்கள் பால் ஒப்படைத்திருந்தான். குலோத்துங்கன் மக்களாகிய, இராசராச மும்முடிச் சோழன், வீரசோழன், இராசராச சோழ கங்கன், விக்கிரம சோழன் என்ற இந் நால்வரும், நாற்பத்திரண்டு ஆண்டு காலம், அந் நாட்டு அரியணையில் ஒருவர் பின் ஒருவராய் அமர்ந்து ஆட்சி புரிந்து வந்தனர். அக்காலத்திலேயே, வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்து மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் உள்ளத்தில் கருப் பெற்று வளர்ந்து வந்தது. குலோத்துங்கனுக்குப் பிறகு சோணாடு ஆண்ட விக்கிரமன் ஆங்கிருக்கும் வரை, அவனுக்கு அவ் வாய்ப்புக் கிட்டவில்லை. தனக்கு முதுமை வந்தடைந்து விட்டது, மன்னர் மன்னனாய், இனி நெடுங்காலம் வாழ்வது இயலாது என்ற உணர்வு வரப்பெற்ாதும், குலோத்துங்கன், வேங்கி நாட்டில் வாழும் விக்கிரமனைச் சோணாட்டிற்கு வருவித்து இளவரசுப்பட்டம் சூட்டி உடன் வைத்துக் கொண்டான். வேங்கி நாட்டைக் காக்கும் பணியை, வெல. நாண்டுத் தெலுங்குச் சோழர் வழி வந்தானொருவன்பால் ஒப்படைத்திருந்தான்.வேங்கி நாட்டில் விக்கிரமன் இல்லை என்பதை அறிந்துகொண்ட விக்கிரமாதித்தன், போரிட்டு அதைத் தன்னுடையமையாக்கிக் கொண்டான். சோழர் பேரரசின் வடகிழக்கு எல்லையில், வலுவுள்ளநாட்டாரின் துணை வேண்டும் என அறிந்து, இராசராசன், தன் மகளை மணம் செய்து கொடுத்து உறவுகொண்ட வேங்கி நாட்டை அந்நாட்டின் உரிமை பெற்ற கொற்றவனாகிய குலோத்துங்கனே இழந்து விட்டான்.

கலிங்கம்கொண்டவன், கடாரம் வென்றவன் என்ற பாராட்டிற்குரிய பெருவீரனாகிய குலோத்துங்கன், ஈழத்தையும், கங்கபாடியையும், வேங்கியையும் இழந்தமைக்கு இறங்கினானல்லன்; அவற்றை மீட்கும் உள்ளுரம் அவனுக்கு உண்டாகவில்லை என்பது விந்தை 

யிலும் விந்தையே, குலோத்துங்கனின் அரசியல் முறை யினை அறிந்திருப்பார்க்கு அது, விந்தையாகத் தோன்றாது. அது, அவன் ஆழ்ந்த அரசியல் அறிவின் வெற்றி யாகவே தோன்றும், மாமன்மார் மூவரும், மேலைச் சாளுக்கிய மன்னர்களோடு துங்கபத்திரை ஆற்றங்கரையில் மேற்கொண்ட நீண்ட பெரும்போரை நேர் நின்று கண்டவன் குலோத்துங்கன், துங்கபத்திரை ஆற்றின் வடகரைக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் தம் அரசு நடைபெற வேண்டும் என்ற ஆரா ஆசை காரணமாக மேற்கொண்ட போரில் மாண்ட சோணாட்டு வீரர்களும், சோழர்குல அரசிளங்குமரர்களும் எண்ணற்றோராவர், அத்துணைப் பேரழிவிற்குப் பிறகும், ஆங்குச் சோழர் ஆட்சியை அமைக்க முடியவில்லை; மேலைச் சாளுக்கிய நாட்டு மக்களும், மாநகர்களும் அழிவுற்றதே கண்ட பயன்; மாமன்மார்களுக்குத் துணையாய் அப்போர்களில் கலந்துகொண்ட குலோத்துங்கன், அம்முயற்சி, பய னற்றது; பேரழிவிற்குத் துணை நிற்பது என்பதை அப் போதே கண்டு கொண்டான்; அதனால், தன் படை பலத்தால் அடக்கி ஆளமாட்டாத் தொலைநாடுகளை வென்றடக்கும் வீண் முயற்சிகளைக் கைவிடவேண்டும் என்ற கருத்தைக் குலோத்துங்கன், அந்நாள் தொட்டே வளர்த்து வந்தான்; அம்முயற்சிகளில், மக்களையும், மாநிலங்களையும் அழிப்பதை விடுத்து, நாட்டில் அமைதி நிலவும் நல்லாட்சியை நிலைநாட்டுவதே அரசியல் முறையாம், ஆக்கம் பெருக்கும் வழியாம் என்பதையும் அறிந்திருந்தான். ஆகவே, குலோத்துங்கன், அந்நாடுகள் தன் கை விட்டுப் போனதைத் தோல்வியாகக் கொள்ளாது, வெற்றியாகவே கொண்டான்; வரலாற்றாசிரியர்களும் அதைக் குலோத்துங்கனின் கொற்றமாகவே மதித்து, அவனை மனதாரப் பாராட்டுவாராயினர்.