உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கம் கண்ட காவலர்/குலோத்துங்கன் கோல்முறை

விக்கிமூலம் இலிருந்து

4. குலோத்துங்கன் கோல் முறை


தம் குடை நிழற்கீழ்ப் பரந்த பெரிய நாடுவந்து வாழ வேண்டும் என விரும்புவதைக் காட்டிலும், வேந்தர்கள், அக்குடைக் கீழ் வாழும் குடிமக்களின் நலம் பெருகுதல் வேண்டும் என்றே விரும்புதல் வேண்டும், என்ற செங்கோல் முறையைச் சிறக்க அறிந்திருந்தான் குலோத்துங்கன்:நாட்டு மக்களின் நலம் பெருக்குவதே குலோத்துங்கன் குறிக்கோள்; அரசு சிறிதேயாயினும், அந் நாட்டின் நலன் பெரிதாதல் வேண்டும். சிறுகக் கட்டிப் பெருக வாழ்வதே சிறந்த அரசியல் முறையாம். அப் பேருள்ளத்தைச் சிறக்கப் பெற்றிருந்தமையால், குலோத்துங்கன் ஆற்றிய அரசியல் செப்பங்கள் எண்ணற் றனவாம். அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுக் கண்டு செல்வோமாக.

அங்கிய நாட்டார்பால் அன்புடைமை: ஒரு நாட்டை அழித்து அடிமை கொள்வதால் ஆகும் ஆக்கத்தினும், அந் நாட்டின் பால் அன்புகாட்டி அணைத்துக் கொள்வதால் ஆகும் ஆக்கமே பெரிதாம் என்ற பேருண்மையை அறிந்தவன் குலோத்துங்கன், அவ்வுண்மையுணர்ந்து, கடல்கடந்த நாடுகளாகிய கடாரத்தோடும், காம்போசத் தோடும் அன்பு கொண்டு அந்நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டு அரசர்களின் நட்புறவு பெற்று மீண்டதை மூன்னரே கண்டோம், கடல் இடைபட்ட நாட்டவரின் நட்பை நாடா திருப்பனோ? காசிமா நகர்க்கு வடமேற்கில், 

ஐக்கிய மாநிலத்தில் உள்ள கன்னோசி நாட்டுக்காவலனை குலோத்துங்கன் தன் ஆருயிரனைய நண்பனாகப் பெற்றிருந்தான். கங்கையாறு பாயும் கன்னோசி நாட்டான், காவிரியாறு பாயும் கன்னித்தமிழ் நாட்டிற்கு வந்தான். குலோத்துங்கனின் கோநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்குத் தன் வருகையின் நினைவுச் சின்னமாய், நிவந்தங்கள் பல அளித்துக் குலோத்துங்கனைச் சிறப்பித்தான். வந்தானை வர வேற்று விருந்தளித்ததோடு அமையாது குலோத்துங்கன், சூரியனுக்குக் கோயில் கட்டி வழிபடும் கன்னோசி நாட்டாரின் வழக்கத்தைத் தமிழ்நாட்டிலும் வழங்கச்செய்து, சோணாட்டிலும் சூரியனுக்குக் கோயில் கட்டி, அதற்குக் குலோத்துங்க சோழ மார்த்தாண்டன் கோயில் எனத் தன் பெயரால் பெயர் சூட்டி, வழிபாட்டிற்கு வேண்டும் நிவந்தங்களையும் வழங்கினான்; சூரியனார் கோயில் என இக்காலத்தில் வழங்கப்பெறும் அக் கோயிலில், கங்கைக் கரைக் கடவுளாகிய விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மைக்கும் வடிவங்கள் சமைத்துவைத்து, வழிபாட்டிற்கு வழிவகுத்தும் வைத்தான். கங்கைக் கரையான்பால், காவிரிக் கரையான் காட்டும் நட்பின் பெருமை தான் என்னே!

சுங்கம் தவிர்த்தமை: கன்னிக் காவிரியின் பாய்ச்ச லால், சோணாடு பொன்னிவளநாடு என்னும் பேரும் புகழும் பெறும் வகையில் வளங் கொழித்தது என்றாலும், நெல் வளம் ஒன்றால் மட்டும் நாட்டின் செல்வநிலை சிறந்து விடாது; அந்நாட்டின் பொன்வளமும் பெருக வேண்டும் என அறிந்து, அப்பொன் வளம் தரும் வெளி நாட்டு வாணிக வளர்ச்சிக்காகவே, புகார் நகரைக் கண்டு, அதனால் பெருந்திருமாவளவன் எனும் புகழ்மிக்க ழன் வழியில் வந்தவன் குலோத்துங்கன். அதனால் வற்றாவளம் தரும் அவ்வாணி 

கத்தை வளர்க்கும் வழிவகைகளைக் காண்பதில் அவன் ஆர்வமிக்கிருந்தான்; ஒரு தொழிலின் வளர்ச்சி, அத் தொழிலின் மீது, அரசியலார் விதிக்கும் வரிகளைப் பொறுத்திருக்கும் என்ற வாணிக அறிவு வாய்க்கப் பெற்றவன் அவ்வளவர் கோன். வரி அதிகமாயின், தொழில் வளராது குன்றிவிடும்; அது குறைவாயின், வளர்ந்து பெருகும் என்பதை அறிந்திருந்தான். சோணாட்டுக் கடற்றுறைகளில், கலங்களில் ஏற்றி வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய பொருள்களும், வெளி நாட்டிலிருந்து தமிழகத்துப் பேரூர்களின் வாணிக நிலையங்களில் விற்பனையாதற் பொருட்டுக் கலங்களில் வந்த பொருள்களும் மலையெனக் குவிந்து கிடக்கும்; அப்பொருள்கள் அனைத்திற்கும், இதற்கு இவ்வளவு வரி என விதித்து, அதிற் சிறிதும் குறையாமல் வாங்கும் வரி முறையைச் சோழர் குல மன்னர்கள், கரிகாலன் காலத்திலிருந்தே மேற் கொண்டு வந்துள்ளனர். கடல் வாணிகப் பொருள்கள் மீது விதிக்கும் அவ்வரிக்குச் சுங்கம் என்பது பெயர்; அச் சுங்க வரியால் வாணிகத்தின் வளர்ச்சி ஓரளவு தடை யுற்றுளது என்பதைக் கண்டான் குலோத்துங்கன்; மேலும் சுங்க வருவாயை எதிர்நோக்க வேண்டா வகையில், சோணாட்டின் அரசியல் பண்டாரம், நிறைந்திருந்தது. அதையும் அறிந்திருந்தான் அவன், உடனே, வாணிகப் பொருள்கள் மீது, வழி வழியாக விதித்து வாங்கி வந்த சுங்க வரியை அகற்றி விட்டான்; ஆயிரம் ஆண்டுகளாகத் தாங்கி வந்த ஒரு பெருஞ்சுமையை இறக்கிவிட்ட குலோத்துங்கனைச் சோணாட்டு வணிக மக்களும், ஆங்கு வந்து தொழில் புரியும் வெளிநாட்டு, வாணிக மக்களும், வாயார வாழ்த்தினார்கள்; சுங்கம் தவிர்த்த சோழன் எனப் பெயர் சூட்டிப் பாராட்டினார்கள் மக்கள்; தஞ்சை மாநகரைச் சார்ந்திருந்த கருந்திட்டைக் குடிக்குச் சுங்கம் தவிர்த்த சோழ நல்லூர் என்றும், சோணாட்டில் ஒடிய ஒரு ஆற்றிற்குச் சுங்கம் தவிர்த்த சோழப் பேராறு என்றும் பெருமைதரும் அவன் பெயரால் 

பெயர் சூட்டி நினைவுச் சின்னம் நாட்டினார்கள் நாட்டு மக்கள். “சுங்கம் இல்லாச் சோழ நாடு” என்ற சிறப்புப் பெயர், சோணாட்டோடு வாணிகத் தொடர்புடைய தொலை நாடுகளின் தெருவெங்கும் சென்று வழங்கிற்று. குலோத்துங்கன் வெற்றி விளங்கப் பரணி பாடிய பெரும் புலவராகிய சயங் கொண்டாரும், மூவர் உலா பாடிய பெரும் புலவராகிய ஒட்டக் கூத்தரும், சுங்கம் தவிர்த்த அச்சிறப்பைத் தம் பாவிடை வைத்துப் பாராட்டியுள் ளார்கள். • -

"அவனி திருமகட்காக, மன்னர் அழிவந்த சுங்க

தவிர்த்தபிரான்”-பரணி.               

‘புவிராசராசர் மனு முதலோர் நாளில்

தவிராத சுங்கம் தவிர்த்தோன்”-உலா.

நிலம் அளக்கப் பெற்றமை; நிலங்கள் மீது விதிக்கும் வரிகள் தரும் வருவாயே, நாட்டின் வருவாயில் பெரும் பகுதியாம், அதுவே நிலையான வருவாயுமாம். ஆதலின், வரி விதிக்கலாம் நிலங்களின் பரப்பு யாது, அந்நிலங்கள் மீது விதிக்கும் வரியின் அளவு யாது என்பதில் வேந்தர்கள் அந்நாள் தொட்டே விழிப்புடையவராய் விளங்கினார்கள். கணக்கெடுப்பு முறையில் கரை கண்டு விளங்கும் இக் காலத்தில், நிலங்களின் பரப்பு, அந்நிலங்களிலிருந்து எதிர் நோக்கலாம் வரிகளின் வருவாய் இவை குறித்து ஐயமறத் தெரிவிக்கும் கணக்கினைப் பெற மாட்டாது கலங்கு கிறார்கள் நாடாளும் தலைவர்கள். அக்குறை ஓர் அரசையே அழித்து விடுமாதலின், அதில் விழிப்புணர்வோடு வாழ்ந்து வந்தான் குலோத்துங்கன். துங்கபத்திரை ஆற்றின் தென்கரை முதல், குமரிமுனை வரைப் பரவி யிருந்த ஒரு பேரரசில், நிலங்களின் அளவு, அரசியலார் அறிந்து கொள்ள முடியாத வகையில் அவ்வப்போது வேறுபட்டுப் போவது எளிதில் நிகழக் கூடிய தா தலின்,நிலங்கள் அவ்வப்போது அளக்கப் பெறுதல் வேண்டும், அதற்கேற்ப, அவற்றின் மீது விதிக்கும் வரிகளின் அளவும் அவ்வப்போது மாற்றப் பெறுதல் வேண்டும் என உணர்ந்தான் குலோத்துங்கன். தன் தாய்வழிப் பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனின் தந்தையாகிய இராசதிராசன் காலத்தில், சோணாட்டு நிலங்கள் ஒரு முறை அளக்கப் பெற்றன வேனும், அதற்குப் பிறகு மூன்று தலைமுறைக் காலம் கழிந்து விட்டமையால், தன் காலத்தில் ஒரு முறை அளக்கப் பெறுதல் வேண்டும் என்று உணர்ந்தான். அப்பணியைத் திருவேகம்பமுடையான், திருவரங்கத் தேவன் என்ற இரு அரசியல் அதிகாரிகள் பால் ஒப்படைத்தான். அவர்களும் அப்பணியை இரண்டாண்டுக் காலத்தில் செய்து முடித்தார்கள். அப்பெரும் பணியைக் குறைவற முடித்துக் கணக்கெடுத்த அவர்களுக்கு, முறையே, உலகளந்த சோழப் பல்லவரையன், உலகளந்தான் என்ற பட்டப் பெயர்களைச் சூட்டிப் பெரும்ை செய்தான் குலோத்துங்கன்.

கல்விச்சிறப்பு: குலோத்துங்கன், பரணி பாடிய பெரும்புலவரால், “பல்கலைத்துறை நாவில் உறைந்தவன்” என்றும், ‘அறிஞர் தம்பிரான் அபயன்” என்றும் பாராட்டுமளவு பேரறிவு படைத்தவனாவன். கலிங்கத்துப் பரணி என்ற பெயரால் தன் வெற்றியையும், குலோத்துங்க சோழ சரிதை என்ற பெயரால் தன் வரலாற்றையும் இரு பெரும் புலவர்கள் பாடிப் பாராட்டுமளவு புலமையுள்ளமும், புலவர் நட்பும் உடையவன் குலோத்துங்கன். குலோத்துங்கன், கல்விச் சிறப்போடு கலை உணர்வும் உடையான். ஏழிசை பயின்றவன் அவன்; அவ்வேழிசைக்கும் இலக்கணம் காணும் கதையறிவுடையவன், அவன் ஆக்கிய இசை நூலே, அக்கால இசை வல்லார் பின்பற்றிய இலக்கண நூலாம். அவன் இயற்றிய இசை நூலைக் கற்றுத் தேர்ந்து. அதை அவன் கேட்கப் பாடி, “ஏழிசை வல்லபி” எனப் பெயர் சூட்டப் பெற்றாள் குலோத்துங்கன் மனைவியருள் ஒருத்தி. தன்னைப் பாடிப் பரிசில் பெற வரும் பாணர்கள், பாட்டில் தாளப் பிழை

யும், கானப் பிழையும் இடம் பெறுமாயின், கண்டு கொள்வான் குலோத்துங்கன். அதனால் பிழையறக் கற்ற பாணர்களே, அவன் அவை வந்து பாடி நிற்பர் என்று கூறிக் குலோத்துங்கன் கலையுள்ளத்திற்குப் பாராட்டளிக்கிறது பரணி.

"தாளமும் செலவும் பிழையா வகை
தான்வகுத்தன தன்எதிர் பாடியே
காளமும் களிறும்பெறும் பாணர்தம்
கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே.”


சமயப் பொதுநோக்கு
: சமயப் போராட்டத்தால் சரிந்த பேரரசுகள் பல. அதனால், ஒரு பேரரசின் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவன் பால் அமைந்து கிடக்க வேண்டிய அரிய பண்புகளில், சமயப் பொறையும் ஒன்று. குலோத்துங்கன், தன் குல முன்னோர்களைப் போல், தில்லையில் நடம் புரியும் பெருமான் மீது பேரன்பு கொண்டு ‘திருநீற்றுச் சோழன்’ எனப் பெயர் பூண்டு சைவ சமய நெறி நின்றான். எனினும், அவன் பிற சமயங்களை வெறுத்தவன் அல்லன்; மாறாக, அவன் மனம், அச்சமயங்களிலும் ஆரா அன்பு கொண்டிருந்தது. வேங்கி நாட்டில் அவன் வாழ்ந்திருந்த போது, விஷ்ணு வர்த்தனன் எனும் வைணவப் பெயரையே விரும்பி மேற்கொண்டான். மன்னார்குடியில் இருக்கும் இராச கோபாலசாமி கோயில், குலோத்துங்கன் காலத்தில் எடுக்கப்பட்டதே; அது. அக்காலத்தில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என அவன் பெயரினாலேயே பெயர் சூட்டப்பட்டிருந்தது. தன் நண்பன், கடார்த்தரசன், நாகப்பட்டினத்தில், ஒரு புத்த விகாரம் அமைக்கவும், அதற்கு இராசேந்திர சோழப் பெரும்பள்ளி எனத் தன் பெயரைச் சூட்டவும் இசைவு தந்ததோடு அவ்விகாரத்திற்குச் சில ஊர்களை இறையி 

லியாக்கி அளித்த குலோத்துங்கன் செயல், புத்த சமயத்தின்பால் அவன் கொண்டிருந்த பற்றினைப் புலப்படுத்துவதாமன்றோ? இவ்வாறு கொற்றமும் கோலும் சிறக்க, ஒரு பேரரசை ஐம்பது ஆண்டு காலம் அளவும் கட்டிக் காத்த பெருமையுடையான், குலோத்துங்கன் ஒருவனே. வாழ்க அவன் குலப்புகழ்! வளர்க அவன் கோன் முறை!

口口口