உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கம் கண்ட காவலர்/மௌரியர் மரபு

விக்கிமூலம் இலிருந்து

5.மௌரியர் மரபு


"மறந்தும் மழைமறா மகத நன்னாடு”
"மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்”

எனப் பண்டைப் பெரும் புலவர்களால் பாராட்டப் பெறும் பெருமை வாய்ந்தது மகதநாடு. ஆயிரம் மைல்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்த பெரும் புலவர்கள் அறிந்து பாராட்டுமளவு அனைத்துலக நாடுகளினும் உயர்ந்து விளங்கிய சீரும் சிறப்பும் வாய்ந்தது மகத நன்னாடு. வட இந்தியாவில், கங்கை பாயும் வளம் மிக்க நிலத்தில் விளங்கிய விழுச் சிறப்புடையது அம்மகத நாடு. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, பேரரசாய் விளங்கிய பெருமை வாய்ந்தது. அந்நாடு. அந் நாட்டை அக்காலத்திலேயே ஆண்ட மன்னர் மன்னர் எண்ணற்றவராவர். தான் பிறந்த கிரேக்க நாட்டில் தொடங்கிய தன் வெற்றித் திருவுலாவைச் சிந்து நதியைக் கடந்த பின்னரும் கைவிடக் கருதாத கிரேக்கப் பெருவீரன் அலெச்சாந்தரின் ஆசைக் கனலை அவித்து வெற்றி கண்ட விழுச் சிறப்புடையது அம் மகதம்.

மாண்புமிக்க அம்மகத நாட்டிற்குத் தலைநகராகும் தனிச்சிறப்பு வாய்ந்தது பாடலிபுத்ரம்.கங்கைப் பேராறும், சோணையும் கவக்கும் இடத்தில் அமைந்திருந்த அந்

நகரையும், அந்நகரின் பொன் வளத்தையும், அந்நகராண்ட நந்த மன்னர்களின் நீணிதிப் பெருக்கையும்,பேராசைப் பேயனாகிய அக்குலக் கோமகன் ஒருவன் பெரும் பதுமம் என்று பேரெண் அளவு ஈட்டிய தன் மாநிதியைத் தான் அல்லது பிறர் எவரும் அறிதலோ அடைதலோ ஆகாது எனும் அழிவுள்ளம் கொண்டு, கங்கைக்கு அடியில் சுருங்கை அமைத்து, அதில் வைத்துக் காத்து வாருங்கால், கங்கையின் போக்கு திடுமென மாற, அம்மாநிதி வைத்த இடம் அறியாவாறு மறைந்து போன மானக் கேட்டையும், நம் பழந்தமிழ்ப் புலவர்கள் அறிந்திருந்தார்கள். தாம் அறிந்த அச்செய்திகளைத் தம் பாக்கள் வழியே நமக்கும் புலப்படுத்தியுள்ளார்கள்:

"வெண்கோட்டு யானை சோனைபடியும்”
பொன்மலி பாடலி,”
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்."

பழந்தமிழ்ப் புலவர்களால், பாடலி எனப் பெயரிட்டு அழைக்கப் பெறும் அப்பேரூர், பாடலிபுத்ரம், புஷ்பபுரம், குசுமபுரம் என்றெல்லாம், அக்கால மக்களாலும், அந்நாட்டு மக்களாலும் அழைக்கப் பெற்றது. மலர் நகரம் என்ற மாண்புமிக்க பொருள் தரும் பெயரைத் தாங்கி நிற்கும் அப்பேரூர், கி.மு. 500-ல், மகத நாட்டின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்ட அஜாதசத்ரு என்ற ஆற்றல் மிக்க பெருவீரனால், கங்கைக்கும் வடக்கில் விளங்கிய நாடுகளைக் கட்டிக் காக்கும் கருத்தையுட் கொண்டு, கங்கையும் சோணையும் கலக்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அவன் காலத்தில் ஒரு சிற்றர ணாகத் தோற்றுவிக்கப்பட்ட பாடலியை, அவன் பெயரன், புகழ் மிக்க பேரூராக மாற்றி மாண்புற்றான். பாடலி, பாடலிபுரத்தில் எனப் பண்டு பெயர் பெற்றிருந்த அந்நகர்க்கு இக்கால மக்கள் இட்டு வழங்கும் பெயர்கள் பாட்னா, பங்கிபூர் என்பனவாம்.

கி. மு. 500-ல் தோற்றுவிக்கப்பட்ட பாடலி, கி. மு. 600-லும் பெருமை குன்றாமலே விளங்கிற்று. மகத நாடாண்ட மௌரிய மன்னர்களின் அரசவைக்குக் கிரேக்க நாட்டுக் காவலன், கி. மு. 300-ல் அனுப்பிய நல்லெண்ணத் தூதுவன் மெகஸ்தனிஸும், இந்நாட்டுச் சமய நிலைகளை நேரில் கண்டறிய, கி. பி. 400-ல் இந் நாட்டிற்கு வந்திருந்த முதற் சீனப் பெருமகனாகிய பாகியானும், அப்பெரு நகரில் பல காலம் வாழ்ந்து, அதன் பல்வேறு நலங்களையும் கண்டு களித்து, தாம் கண்ட அந்நலங்களை நம்மனோரும் கண்டு களிக்க, விரிவாக எழுதி வைத்துச் சென்றார்கள்.

பாடலிபுத்ரம், கங்கையும் சோணையும் ஒன்று கலக்கும் கூடற்கண், சோணையாற்றின் வடகரையில், கங்கைக்குச் சில கல் தொலைவில் தோற்றுவிக்கப்பட்டது. கங்கையின் போக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மாறி, ஏறக்குறைய பன்னிரண்டு கல் தொலைவிற்கு அப்பால் ஒடத் தொடங்கி விட்டது. பண்டு கண்ட பாடலி இப்போது இல்லை; கங்கை வெள்ளத்தில் அது அழிந்து விட்டது போலும். புதையுண்டு போன பழைய பாடலியின் மீதே, இக்கால பாட்னா நகரம் பெருமிதமாக வீற்றிருக்கிறது. பழைய பாடலி, ஒன்பது கல் நீளமும், ஒன்றரைக் கல் அகலமும் கொண்ட, நீண்ட சதுரப் பேரூராக நின்று காட்சி அளித்தது. அது பெருமரத் துண்டுகளால் ஆகி, அகன்று உயர்ந்த மதில்களால் வளைப்புண்டு கிடந்தது. குடைந்து அமைத்த அறுபத்தினான்கு வாயில்களும், மணி முடியென, வானுற உயர்ந்து விளங்கும் ஐந்நூற்று எழுபது கோபுரங்களும் அரண் மதில்களுக்கு அணி செய்து கிடந்தன. அரணைச் சூழ, ஆழ்ந்து அகன்ற அகழி வெட்டி, அதில் சோணையாற்றின் நீரைத் தேக்கித் தலைநகரைக் காத்து வந்தார்கள். அழகிய மரஞ்செடி கொடிகள் அணி அணியாக வளர்ந்து நிற்க, வண்ணத்தாலும், வடிவாலும் வனப்பு காட்டும்

மீன்கள் வாழும் நீர் நிலைகள் நிறைந்திருக்க, அகன்ற பெரிய பூஞ்சோலை நாற்புறமும் சூழ்ந்து கிடக்க, இடையில், கண்ணையும் கருத்தையும் கவரும் கவின் ஊட்டி, பொன் மலர்க் கொடிகள் சுற்றிக் கிடப்பன போலவும், வெள்ளிப் பறவைகள் வீற்றிருப்பன போலவும் வனையப்பட்ட தூண்களை வரிசை வரிசையாக நாட்டிக் கட்டிய கோமகன் கோவில் கொலு வீற்றிருந்தது.

பாடலியைத் தலைநகராகக் கொண்டு மகதத்தை ஆண்ட மன்னர்கள், மௌரிய குல மன்னர்களுக்கு முன்னரும் சிலர் இருந்தனர். என்றாலும், அன்னார் மரபு மாசுடையது எனக் கூறப்படுதலான், மகத நாடாண்ட முதல் மன்னர் மரபினர் மௌரியரே என்று வரலாற்று நூலாசிரியர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். மௌரியருக்கு முன். அந்நாடாண்டவர் நந்த குலத்தவராவர். மகத நாடாண்ட மன்னன் ஒருவன் மனைவி, அந்நாட்டு அம்பட்டன் ஒருவன் பால் காதல் கொண்டாள்; அக்கள்ளக் காதலர் இருவரும் தங்கள் காதலுக்குத் தடையாய் இருந்த மன்னனைக் கொன்று விட்டார்கள், மன்னன் மறைந்த பின்னர், அவன் மக்களைக் காக்கும் கடமை மேற் கொண்டுள்ளேன் எனக் கூறிக் கொண்டு, அரசியின் அந்தப்புரத்தை விட்டு, அரசியலில் காலடியிட்ட அரசியின் கள்ளக் காதலன், சின்னாட்களுக்கெல்லாம் மன்னன் மக்களையும், மற்றும் உள்ள மன்னர் குலத்தவரையும் கொன்று விட்டு, மகத நாட்டிற்குத் தானே மன்னன் என மணி மகுடம் சூட்டிக் கொண்டான். தனக்கும் தன் காதலி அரசமாதேவிக்கும் பிறந்த தன் மகனை, மகத நாட்டின் இளங்கோவாக்கி முடி சூட்டி வைத்தான்; இது நிகழ்ந்து கொண்டிருக்குங்கால், அம்மகத நாட்டு மன்னர் மரபில் வந்தான் ஒருவன், முரா என்ற பெயர் உடைய ஓர் இழிகுல மங்கையை மணந்து கொண்டான்; அவர்களுக்கு மகனாகப் பிறந்து சந்திரகுப்தன் எனும் பெயர்

பூண்டு வளர்ந்த இளைஞன், உலகியல் உணர்வு வரப் பெற்றதும், தன் மரபினர் சூட வேண்டிய மணி முடியை, மன்னர் குலத்துக்கு மாசூட்டிய ஒருவன் சூடியிருப்பதை அறிந்து உளம் கொதித்தான்; சந்திரகுப்தன் பிறப்பையும்,அவன் உள்ளத்தில் உருவெடுக்கும் அரசியல் புயலையும் கண்டு கொண்டான் அரியணையில் வீற்றிருக்கும் அக்கள்ளக் காதவன்; உடனே சந்திரகுப்தனை நாடு கடத்தி விட்டான்.

நாடு கடத்தப்பட்ட சந்திரகுப்தன், பஞ்சாப் சென்று வாழ்ந்திருந்தான். ஆங்குத் தலை மறைந்து வாழ்ந்திருந்த சந்திரகுப்தன், அக்காலை ஆங்குப் படையெடுத்து வந்த கிரேக்க வீரன் அலெக்சாந்தரைக் கண்டான். கண்டு “மகதநாட்டு அரியணையில் வீற்றிருப்பவன், அரசர் வழியில் வராதவன்; அம்பட்டர் வழியில் வந்தவன். அதனால் மக்கள் அவன்மீது மாளா வெறுப்புக் கொண்டுள்ளனர்; ஆகவே இந்நிலையில் என்னோடு வந்தால், மகத நாட்டை வெற்றி கொள்ளலாம்; வருக” என வேண்டுகோள் விடுத்தான். இருநூறு ஆயிரம் வீரர்களையும், இருபதாயிரம் குதிரைகளையும், இரண்டாயிரம் தேர்களையும் நாலாயிரம் யானைகளையும் கொண்டிருந்த மகத நாட்டின் படைவலி கண்டு அஞ்சியோ, உள்ள அரசழித்துத் தான் ஆள எண்ணும் சந்திரகுப்தன் ஆசை அடாதது என எண்ணியோ அலெக்சாந்தர் அவ்வழைப்பை ஏற்றுக் கொண்டிலன். மேலும் சில ஆண்டுகள் சென்றன.

மாவீரன் அலெக்சாந்தர் தன் தாய் நாட்டிற்குத் திரும்பிவிட்டான். அவன் கால்கள் இந்திய மண்ணிலிருந்து மறைந்துவிட்டன என்ற செய்தி அறிந்ததும், அதுகாறும் அவன் ஆண்மை ஆற்றல்களுக்கு அஞ்சி அடங்கியிருந்த அரசரெல்லாம், அயலார் ஆட்சித் தலைமையை வெறுத்து, தத்தம் ஆட்சியை நிறுவத் துணிந்து முன் வந்தார்கள். இங்கு இவ்வுரிமையுணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில், அலெக்சாந்தர் இடை வழியில் இறந்து போனான் என்ற செய்தியும் 

வந்து சேரவே, அடங்கியிருந்த அரசர்கள் விடுதலைபெற வீறுகொண்டு எழுந்து விட்டார்கள். அப்புரட்சிப் படைக்குத் தலைமை தாங்கினான், இருபத்தைந்து ஆண்டு நிரம்பாத இளையோனாகிய சந்திரகுப்தன். வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கொள்ளையடித்துக் குடியோம்பும் குடியில் வந்த வீரம் மிக்க இளைஞர்களைக் கொண்ட ஒரு பெரிய படைக்குத் தலைவனாய் தகுதி பெற்றிருந்த சந்திரகுப்தன் பஞ்சாப் மாகாணத்தில் பாராண்டிருந்த கிரேக்க நாட்டுக் காவலனைக் கொன்று, அவனுக்குத் துணைநின்ற படைகளை அழித்து அம்மாகணத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.

வடமேற்கு எல்லையில் வெற்றி கண்டதும், அவ்வீர இளைஞன் உள்ளம் தான் பிறந்த, மகதநாட்டு மண்ணின் மீது சென்றது; உடனே தன் துணைவரோடு மகதநாடு சென்று சேர்ந்தான்; அக்காலை அந்நாட்டு அரியணையில், அரசியாரின் கள்ளக் காதலால் பிறந்த கான்முளை அமர்ந் திருந்தான். அவனைப் பெற்றவன் பால் பொருந்தியிருந்த அத்தனை இழி பண்புகளும் அவன்பாலும் பொருந்தியிருந்தன. பொருளாசையில் பெற்றவனையும் மிஞ்சியிருந்தான் அவன் வரிமேல் வரியென விதித்து, நாட்டு மக்களை வாட்டி வருத்தினான், ஒழுக்கம் என ஒரு பொருளும் உலகில் உளதோ?’ என்று கேட்குமளவு உயர்ந்திருந்தது அவன் செயல், அதனால் நாடனைத்தும் அவனை வெறுத்தது, அவன் ஆட்சி அழிவுறும் நன்னாளை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தார்கள் மகத நாட்டு மக்கள். ஆனால் தங்கள் அண்டை நாட்டு அரியனைபில், அறிவிழந்து அழிசெயல் புரிவான் ஒருவன் அமர்ந் திருப்பது தம் ஆக்கத்திற்கு வழியாகுமேயல்லது. சந்திர குப்தன் போலும் ஆற்றல்மிக்க அடலேறு ஒருவன். அமர்வது, தம் ஆக்கத்திற்கு வழியாகாது. மாறாகத் தம் அழிவிற்கே அது துணைபுரியும் என உணர்த்த மகதத்தின் அண்டை நாட்டு மன்ன்ர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு, மகதத்தில் சந்திரகுப்தன் எழுப்பிய புரட்சிப்போர் வெற்றி

பெறாதிருக்கப் பெரும்பாடுபட்டனர். ஆனால், அரசியல் புரட்சியை வெற்றி பெற நடத்த வல்ல உற்ற துணைவன் ஒருவன், சந்திரகுப்தனுக்குக் கிடைத்திருந்தான். அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல அவன் ஓர் ஆரியன். சாணக்கியன், கெளடல்யன், விஷ்ணு குப்தன் எனப் பல பெயர் இட்டு அழைக்கப் பெறும் அவன் அறிவின் பெருந்துணையோடு, பிறந்த நாட்டில் புரட்சிக் கொடியேந்திய சந்திர குப்தன், விரைவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டான். அரியணையில் வீற்றிருந்த, அவ்விழி குலத்தான் கொல்லப் பட்டான். அதைத் தொடர்ந்து அவனுக்கு உறவுடையார் அனைவரும் அறவே அழிக்கப்பட்டனர். சந்திரகுப்தன் மகத நாட்டின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்டான். தான் பிறந்த குடிக்கு மௌரியர் குடி எனத் தன்னை ஈன்ற தாயின் பெயரால் பெயர் நாட்டி, அவளுக்கு அழியாத நினைவுச் சின்னம் அமைத்து, அன்பு வழிபாடாற்றினான்.

மௌரிய மரபின் முதல்வனாகிய சந்திர குப்தன், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதும், ஒரு சிறிதும் ஒய்வு கொண்டிலன். நந்த அரசனிடமிருந்து கைப்பற்றிய மகத நாட்டுப் படையைப் பெருக்கினான். அது ஆறு நூறாயிரம் வீரர்களையும் முப்பாதாயிரம் குதிரைகளையும், ஒன்பதாயிரம் களிறுகளையும், எண்ணித் தொலையாத் தேர்களையும் கொண்ட பெரும் படையாய் மாறிற்று. அப்பெரும் படையும், அந்தணன் சாணக்கியனின் அரசியல் சூழ்ச்சித் திறனும் துணைவரைப் போர் மேற்கொண்டு புறப்பட்ட அவன் விரைவில் வடநாட்டரசுகள் அனைத்தையும் வென்று அணைத்துக் கொண்டான். இமயப் பெருவரையின் அடிமுதல், தருமதையாற்றின் கரை வரையும் பரவி. பிருந்த வடதிச்ை நாடுகள் பலவும் அவன் ஆணைக் கீழ் வந்து அடைந்தன. மேற்கில் அரபிக் கடலும், கிழக்கில் வங்கப்பெருங் கடலும் அவன் நாட்டின் இருபுற எல்லைகளாய் நின்று காத்தன. இந்தியாவின் வரலாறு கண்ட

முதற் பேரரசன், மன்னர் மன்னவன், அரசர்க்கு அரசன் எனும் அழியாப் புகழ் அவனை வந்தடைந்தது.

சந்திரகுப்தன் வென்ற நாடுகளில் அமைதியை நிலை நாட்டி, ஆங்கு தன் ஆணை அழிக்கலாகாவாறு நடை பெறுதற்காம் வழிவகைகளை மேற்கொண்டிருக்குங்கால், வடமேற்கில் ஒரு பெரும்பகை உருவெடுத்தது. மாவீரன் அலெக்சாந்தர் மாண்ட பின்னர் அவன் வென்ற மேற்கு ஆசிய நாடுகளுக்கும், மத்திய ஆசிய நாடுகளுக்கும் செல்யூகஸ் என்பவன் தலைவனாக வந்து சேர்ந்தான். கிரேக்க வீரர்கள் வெற்றி கொண்ட இந்திய நாடுகளிலும், தன் ஆட்சி செல்ல வேண்டும் என அவன் விரும்பினான். தன் முன்னோன் வழி காட்டிய முறைப் படியே சிந்து நதியைத் தாண்டி, கங்கைச் சமவெளியுள் புகுந்து போரிட்டான்; ஆனால் அந்தோ! ஆங்கு அவன் வரவை எதிர் நோக்கிக் காத்திருந்த சந்திரகுப்தன் படை தன் படையைக் காட்டிலும் பன்மடங்கு பெருமை வாய்ந்திருந்ததை அறியாது போனான்; அதனால் வெற்றி தேடிப் புறப்பட்ட அவனுக்கு ஆங்கு தோல்வியே காத்திருந்தது. மகத நாட்டு மன்னன் மாபெரும் வெற்றி பெற்றான், சிந்து நதிக்குக் கீழ்ப்பால் உள்ள நாடுகளையும் ஆள வேண்டும் என்னும் ஆசை கொண்டு வந்த கிரேக்கக் காவலன், போர் முடிவில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பயனாய், அந்நதிக்கு மேற்பால் உள்ள தன் நாட்டிலும் பெரும் பகுதியை இழக்க வேண்டியதாயிற்று. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட நாட்டில்; இந்தியப் பேரரசின் ஆணை செல ஆண்ட முதல் மன்னன் என்னும் மங்காப் புகழ் மகத நாட்டானுக்குக் கிட்டிற்று; ஆப்கானிஸ்தானமும், அதை யொட்டிய சிறு நாடுகள் சிலவும் சந்திர குப்தன் உடைமைகளாயின. இமயப் பெருமலையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைய இடமளிக்கும் நுழைவாயிலாய் விளங்கிய கைபர் கணவாய், சந்திர குப்தன் காவற் கீழ் வந்துற்றது. இந்தியாவின் வடவெல்லைக் காவற் கூடற்களுள் தலை 

சிறந்தது என மதிக்கப் பெற்று, இன்றும் பெரும்படை நிறுத்திக் காக்கப் பெறும் அக்கணவாயை, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காத்து நின்றான் சந்திரகுப்தன் என்ற சிறப்பு அவனுக்கு வாய்த்தது. மகதத்தின் மன்னன் மாற்றானுக்குரிய மண்டலங்களைப் பெற்றதோடு நின்றானல்லன். அம்மாற்றான் பெற்றெடுத்த மகள், மாசிடோனியா நாட்டின் மங்கை, மகத நாட்டின் மாதேவியாய்ப் பாடலி வந்து சேர்ந்தாள். மகளை மணம் செய்து தந்த செல்யூகஸுக்கு, மன்னன் ஐந்நூறு ஆண் யானைகளை அளித்து, அவன் படை பெருகத் துணை புரிந்தான். மேலைநாட்டு மன்னனோடு மகதத்தின் காவலன் மேற்கொண்ட மணத் தொடர்பால் ஏற்பட்ட நட்பு, மகத நாட்டு அரசவையில் வந்து தங்கிய கிரேக்கத் தூதுவன் மெகஸ்தனிஸால் மேலும் வளர்ந்து வலுப் பெற்றது. மௌரியர் அரண்மனையில் வாழ்ந்திருந்த அவ்வரசியல் தூதுவன், மகத நாடு, அந்நாட்டின் தலை நகர் பாடலி, மகத நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், அந்நாட்டின் ஆட்சி முறை ஆகிய அனைத்தைப் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளான். அவன் அன்று எழுதி வைத்த அதுவே மௌரிய அரசைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்றும் நின்று துணை புரிகிறது. நிற்க,

தன் தோளாற்றலாலும், தன் படைத் துணையாலும் அடைந்த பேரரசில், தனக்கு அரசியல் வழிகாட்டியாய் விளங்கிய ஆரிய நண்பன் சாணக்கியன் துணையால், அமைதி நிலவும் நல்லாட்சி நிலவச் செய்தான் சந்திர குப்தன். நாகரிக நெறி நிற்கும் நல்லரசு என இக்கால வரலாற்றுப் பேராசிரியர்களாலும் வாழ்த்த வல்ல விழுமிய அரசாய் விளங்கிற்று சந்திரகுப்தன் கண்ட அம்மௌரியப் பேரரசு..

மகத நாட்டு மன்னன் கோயிலில், பொன்னும் நவ மணியும் மண்டிக் கிடந்தன: ஆறு அடி அகலம் வாய்ந்து, 

பொன்னாலும் வெள்ளியாலும் வனையப்பட்ட வண்ணக் கிண்ணங்களும், நுண்ணிய சித்திர வேலைப்பாடமைந்த அரியணைகளும், அரசு கட்டில்களும், செம்பால் செய்து, நவமணிகள் வைத்திழைக்கப்பெற்ற வகை வகையான கலங்களும், கண்ணைப்பறிக்கும் வண்ணம் ஊட்டிப் பொன்னிழை இட்டு நெய்த ஆடைகளும், அழகிய சட்டைகளும், மன்னன் கோயிலிலும், மன்னனுக்கு நிகரான மக்கள் தலைவர்களின் மாடங்களிலும் மலிந்துகிடந்து, அக்காலச் செல்வச் சிறப்பிற்குச் சான்று பகர்ந்தன. பெற்ற வெற்றி குறித்தும், பிறந்த நாள் குறித்தும் எடுக்கும் விழாக்காலங்களில், கருஞ்சிவப்புப் பட்டும், மஞ்சள் நிறப் பொன்னிழையும் கலந்து நெய்த கரையினைக் கொண்ட நுண்ணிய மெல்லிய மஸ்லின் துணியால்மூடி, முத்துச்சரங்கள் நாலவிட்ட பொற்பல்லக்கில் அமர்ந்து, அரசன் உலா வருவன். விழா நிகழ் இடங்களில், காளைச்சண்டை, ஆட்டுக்கிடாய்ச் சண்டை, யானைச்சண்டை, காண்டாமிருகச் சண்டைகளை,மன்னனும் மக்களும்கண்டு மனங்களிப்பர். வீரர்கள் மேற்கொள்ளும் வாட்போர், விற்போர் விளையாட்டுகளும், அவ்விழாக் களங்களில் நிகழ்வதுண்டு. இக்காலக் குதிரையோட்டப் பந்தயம் போல் காளைகளை ஒடவிட்டுப் பந்தயம் கட்டும் வழக்கத்தில், அக்காலத்தில் அரசர்களும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். இவ்விளையாட்டுக்களைவிட , நகர் நடுவே அமைத்த வேலிகளுக்கு இடையே வேட்டை விலங்குகளை விடுத்து, அவ்வேலியின் ஒரு கோடியில் அமைக்கும் உயர்ந்த மேடை மீது நின்று மன்னன், அவ்விலங்குகளை வேட்டையாடி மகிழும் விளையாட்டையே வேந்தர்கள் மிகவும் விரும்பினார்கள். அதற்கேற்ப, அவ்விளையாட்டு விழா ஏனைய விளையாட்டு விழாக்களைக் காட்டிலும் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

அமைச்சர் முதலாயினோர் சூழ, அரசவையில் அமர்ந்து முறையளிக்கவும், குறைபோக்கவும், காடு 

புகுந்து வேட்டையாடவும், களம்புகும் போர்புரியவும் புறம் போவதல்லது, பிற்காலங்களில் அரசன் அரண்மனைப்புறம் வருதல் இல்லை. அரண்மனைக்குள் மெய்க்காவலர் சூழ, அவன் அடங்கியிருத்தல்வேண்டும் என்றே அக்கால அரசியல் நூல்கள் அறிவூட்டின. ஆயினும் ஒரு நாளில் ஒரு முறையாவது, மன்னன் அரியணையில் அமர்ந்து, காட்சிக்கு எளியனாய் இருந்து, தம் முறையீடுகளை நேரில் கேட்டு நீதி வழங்கவேண்டும்; குறைபாடுகளைக் கேட்டறிந்து அது தீர்க்கவேண்டும் என மக்கள் விரும்பினார்கள்,

மகதப் பேரரசை அளித்து, அதன் அரியணையில் அசைக்கமுடியாதவாறு தன்னை அமர்த்திய தன் நாற் படையைப் பெருமளவில் பெருக்குவதிலும், அப்படைக்கு வேண்டும் படைக்கலங்களை அளித்து, அணிசெய்து பேணிக் காப்பதிலும் விழிப்புடையனாய் விளங்கினான் சந்திரகுப்தன். படையைப் பேணிப் புரக்கும் பொறுப்பு ஐவர் அடங்கிய ஆறு ஆட்சிக் குழுவினர் பால் ஒப்புடைக்கப்பட்டிருந்தது. முதற்குழு கடற்படைத் தலைவன் துணைகொண்டு கடற்படை நிலையங்களைக் கண்காணித்தது. இரண்டாங்குழு படை செலவு, படை யுணர்வு, படைக்கலம் வழங்கல் ஆகிய பொறுப் பேற்றிருந்தது. மூன்றாவது குழுவினர் காலாட் படையையும், நான்காவது குழுவினர் குதிரைப் படையையும், ஐந்தாவது குழுவினர் தேர்ப்படையையும், ஆறாவது குழுவினர் காற்றுப் படையையும் கண்காணித்து வந்தனர்.

பாடலிபுத்ரம், தட்சசீலம், உச்சைனி போலும் மகத நாட்டு மாநகர்கள், ஆறு ஆட்சிக் குழுவினராகப் பிரிந்து பணிபுரியும் முப்பது உறுப்பினர்களால் ஆன நகராட்சி மன்றத்தால் ஆளப்பட்டு வந்தன. முதற்குழு கைத் தொழில் வளர்ச்சியில் கருத்துன்றியிருந்தது. வேலைக்குத் தகுந்த கூலி கெர்டுக்கவேண்டும்; கூலிக்குத் தக்க

வேலை செய்தல் வேண்டும்; ஆக்கப்படும் பொருள்கள் கலப்பற்று, கைத்திறம் விளங்கும் உயர்வுடையவாதல் வேண்டும்; நுண்கலைத் தொழில் வல்லார்க்கு, மன்னர்க்கு நிகரான மதிப்பளிக்க வேண்டும்; அவர்க்கும், அவரால் ஆக்கப்பட்ட அரும் பொருளுக்கும் கேடு விளைப்பவரின் கையையும் கண்ணையும் போக்கும் கடுந்தண்டம் அளிக்க வேண்டும் என்ற அரச ஆணைகளைச் செயற்படுத்துவது அக்குழுவின் அலுவலாம். இரண்டாங்குழு கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்து வாழ்பவரின் நல்வாழ்க்கையில் நாட்டம் செலுத்திற்று. வெளி நாட்டார்க்கு வாழ்விடம் தேடித் தருவதும். வழித்துணையளிப்பதும், நோயுற்றால் அது தீர மருந்தளிப்பதும், இறந்து போவார் உடலை உரிய முறையில் அடக்கம் செய்வதும், அவர் உடைமைகளைக் காத்து உரியவார் பால் ஒப்படைப்பதும் அக்குழுவின் கடமைகளாம். மகத நாட்டு மக்களின் பிறப்பு இறப்புக்களை மறவாமல் பதிவு செய்யும் பணியை மூன்றாங்குழு மேற்கொண்டிருந்தது. நாட்டிற்குத் தேவையாம் பொருள் அளவையும், நாட்டு மக்களிடத்திலிருந்து பெறக்கூடிய வரியளவையும் அறியத் துணை புரிவது இக்குழுவினர் காட்டும் கணக்கே ஆதலின், அதன் அலுவல் அரசாட்சிக்கு இன்றியமையாது வேண்டப்பட்டது. தம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர் ஒவ்வொருவரைப் பற்றியும் குறித்து வைக்க வேண்டுவது நகரக் காவலரின் நீங்காக் கடமையாம்; ஆண் அல்லது பெண், இளைஞன் அல்லது முதியோன், சாதி, இயற் பெயர், குடிப்பெயர், செய்தொழில், ஆண்டு வருவாய், ஆண்டுச் செலவு, உள்ள கால்நடைச் செல்வம் ஆகிய இவை குறித்த விளக்கங்களை ஒன்று விடாமல் குறித்து வைப்பர். அது மட்டுமன்று; தம் ஆட்சி எல்லைக்குள் வருவோர் போவோரின் எண்ணிக்கையையும் குறித்து வைக்கக் கடமைப்பட்டவராவர்; மக்கட் கணிப்புக் குறித்துப் பொய்க் கணக்கு அளிப்பவர், திருட்டுக் குற்றம் புரிந்தவர் போல் உறுப்புக் குறைபடும் கடுத்தண்டத் 

திற்கு உள்ளாக்கப்பட்டனர். வாணிக வளர்ச்சி நான்காம் குழுவினர் பால் இருந்தது. விற்பனையை ஒழுங்கு செய்வது முத்திரையிட்டபடி, படிக்கல் முதலா அளவுக் கருவிகளை வழங்குவது, வாணிகம் புரிவார்க்கு வாணிக உரிமைச் சீட்டு வழங்கி அதற்கான கட்டணம் தண்டுவது ஆகிய இவை அக்குழுவின் பணிகளாம். வரி தண்டலை எளிமையாக்குதற்கு பொருட்டு பொருள்களை அவை தோன்றும் இடங்களிலேயே விற்பனை செய்தல்கூடாது பொருளணைத்தும் வாணிக நிலையங்களுக்கு வந்தே விற்பனையாதல் வேண்டும்; விற்கும் பொருள் ஒவ் வொன்றின்மீதும் வரிபெற்றமையைக் காட்டும் அரச இலாஞ்சனை இடப்பெற்ற பின்னரே அவற்றை விற்றல் வேண்டும் என்பனபோலும் விதிமுறைகள் வகுக்கப் பெற்றிருந்தன. வெளிநாடுகளிலிருந்து வாணிகம் கருதி வந்து குவியும் பொருள்களுக்கு, ஐந்தில் ஒரு பங்கு விலை, சுங்கமாக வசூலிக்கப் பட்டது. பழங்கள், காய்கறிகள் போலும் எளிதில் கெடக்கூடிய பொருள்களுக்கு ஆறில் ஒரு பங்கே வரியாக விதிக்கப் பெற்றது. பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப் பெறும் உணவுப் பொருள் வகையும் சில இருந்தன. பொன்னும் நவமணியும் போலும் விலை யுயர்ந்த பொருள்களுக்கு விதிக்க் வேண்டிய வரியளவை, அப்பொருள்களின் தரம் அறியவல்லார், அவ்வப்போது அறிந்து விதித்தனர். தொழிற்சாலைகள் ஆக்கி அளிக்கும் பொருள்களின் தரம் குறையாதபடி பார்த்துக் கொள்வதும், அவற்றை அவற்றின் தரத்திற்கேற்பப் பிரித்து வகை செய்வதும்; புதுப் பொருளும் பழம் பொருளும் கலந்து விடாதபடி கண்காணிப்பதும், கலப்பவர்க்குக் கடுந்தண்டம் விதிப்பதும் ஐந்தாங்குழு ஆற்றவேண்டிய பணிகளாம்.வாணிகப் பொருள்களின் விலையில் பத்தில் ஒரு பகுதியை வாணிக வரியாக வாங்குவதும், வரி தர மறுப்பவர்க்கும், விலைகளை மறைத்து விற்பவர்க்கும் கொலைத் தண்டம் கொடுப்பதும் ஆறாங் குழுவின் நீங்காக் கடமைகளாம்.

நகராட்சிக் கழகத்தின் செயல் முறைகள் செந்நெறியில் நடைபெறச் செய்யும் பொறுப்பேற்ற ஆணையாளர் ஒருவர், ஒவ்வொரு நகரிலும் இருந்து வந்தார். நகரின் நல்வாழ்விற்கு அவரே முழுப் பொறுப்பு உடையவராவர். நகராட்சி மன்றத்தின் நடைமுறைகளில் நாட்டம் செலுத்துவதோடு, வாணிக நிலையங்கள், வழிபாடிடங்கள், வங்கம் வந்து தங்கும் கடற்றுறைகள், இவை போலும் பிற பொதுவிடங்கள் ஆகியவற்றைக் காக்கும் கடமையும் அவருக்கிருந்தது. -

மகதப் பேரரசு நான்கு பெரு மாநிலங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. தலைநகர் பாடலியைச் சூழ்ந்து கிடந்த மத்திய மாநிலம், அரசனுடைய நேரிடை ஆட்சிக் கீழ் இருந்தது. தலைநகர்க்கு வெகு தொலைவில் இருந்த மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பு. அரசகுடியில் வந்த அரசப் பிரதிநிதிகள் பால் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வட மேற்கு மாநிலம் அல்லது தட்சசீல மாநிலத்தின் தலைநகராகத் தட்சசீல நகரும், மேற்கு மாநிலம் அல்லது மாளவ மாநிலத்தின் தலைநகராக உச்சைனி நகரும், கூர்ச்சரமும், கத்தியவாரும் உள்ளடங்கிய தெற்கு மாநிலத்தின் தலைநகராகக் கிரைனார் நகரும் விளங்கின. நகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்ணிமை மூடாது கண்காணித்து, அவ்வப்போது அரசர்க்கு அறிவிக்கும் ஒற்றர்கள் மகத நாடெங்கும் மறைந்து திரிந்து செய்தியறிந்து வந்தார்கள்.

பாடலிபுத்ரத்திற்கும், மகத நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகர்களுக்கும் இடையே அகன்று நீண்ட பெரு வழிகள் பல அமைந்திருந்தன, ஏறக்குறைய ஒன்பது பர்லாங்கிற்கு ஒன்றாக நாட்டப்பட்ட உயர்ந்த கல்தூண்கள், வழியளவையும், வழி மாற்றங்களையும் வழி வருவார்க்குக் காட்டி நின்றன. பாடலியிலிருந்து, வடமேற்கு

க-8

எல்லை வரையும் ஆயிரத்து ஒரு நூறுகல் நீளம் உள்ள, படைபோகு பெருவழி ஒன்று போடப்பட்டிருந்தது.

நிலங்களை அளந்து மதிப்பிட்டு, விளைபொருள்களில் நாலில் ஒன்றை வரியாக வாங்கி வந்தார்கள். வரி வழங்கத் தவறிய நிலங்களை விற்று வரி பெறும் வழக்கமும் ஆட்சியில் இருந்தது. நிலவரி வாங்கிய அவ்வரசு, அந்நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் வளம் தருவதிலும் கருத்துன்றியிருந்தது. ஆங்காங்கே பெரிய பெரிய ஏரிகளை அமைத்தும், கால்வாய்களை வெட்டியும், நீர் போகு மதகுகளைக் கண்காணித்தும் நீர்வளம் கண்டார்கள். கத்தியவார் மாநிலத்தைச் சந்திரகுப்தன் அரசப் பிரதிநிதியாய் இருந்து ஆண்ட புஷ்யகுப்தன், ஆங்குச் “சுதர்சன ஏரி” என்ற பெயரில் எடுத்த ஏரியை வரலாற்று நூல்கள் வாயாரப் புகழ்கின்றன. .

மகதநாட்டு மக்கள், மனம் மொழி மெய்களால் தூய்மையுடையவர்களாகவே வாழ்ந்தார்கள். முறை கெட நடப்பவர்களைக் கண்டு ஒறுப்பதில், அக்கால ஆட்சியாளர் சிறிதும் பிறழாது நின்றனர். நீதிமன்றங்கள் நடுநிலை நின்று முறை வழங்கின. அரசியற் சட்டங்கள் சிறிதும் புறக்கணிக்கப்படுதல் கூடாது என்பதில் அரசனும், அவன் குடிகளும் ஒத்த கருத்துடையவராய்க் காணப்பட்டார்கள். குற்றம் நிகழ்ந்து விட்டால் கொடிய தண்டம் விதிக்கப் பெற்றது. ஒருவரை அடித்துப் புண் படுத்தினவரை அதே போல் அடித்துப் புண்படுத்துவதோடு அடித்த அவர் கைகள் குறைக்கப்படும்; அடியுண்டு புண்பட்டவர், அரண்மனையில் பணிபுரியும் நுண் கலைத் தொழில் வல்லுநராயின், குற்றம் புரிந்தவர்க்குக் கொலையே தண்டமாம். பொய்ச் செய்தி புகன்றவரின் உடலுறுப்புகளைக் குறைத்து உருவிழக்கப் பண்ணுவர். கட்வுட்டின்மையுடையவாகக் கருதப் படும் காவல் மரங்களுக்குக் கேடு விளைத்தவரும், நகராட்சிக்கு நல்க

வேண்டிய வரியை ஏமாற்றியவரும், அரசன் உலா வருங் கால் ஊடறுத்து ஓடியவரும் கடுந்தண்டம் பெற வல்லக் கொடுங் குற்றம் புரிந்தவராவர்.

இத்தகைய பார் புகழும் பேரரச வாழ்வில் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்து இன்புற்ற சந்திரகுப்தன் கி. மு. 297-ல் மண்ணுலகை விட்டு மறைந்து விட்டான். சமணச் சார்புடைய சில நூல்கள், அவன் தன் இறுதி நாளில் முடி துறந்து, முனிவனாய், மைசூர் நாட்டுச் சிராவண பெலகோலா அடைந்து அரிய தவம் ஆற்றி அழியாப் பெருநிலை அடைந்து விட்டான் என அறிவிக்கின்றன.

சந்திரகுப்தனுக்குப் பிறகு அவன் மகன் பிந்துசாரன் மௌரிய ஆட்சியை ஏற்று நடத்தினான். தன் தந்தை மேற் கொண்ட திருமணத்தால் ஏற்பட்ட கிரேக்க நாட்டாரின் நட்பை இவனும் போற்றி வளர்த்து வந்தான். மகஸ்தனிஸை அடுத்து, மற்றொரு கிரேக்க அரசியல் அறிஞன், மகத நாட்டிற்குத் தூதுவனாய் வந்து பாடலியில் பல்லாண்டு வாழ்ந்திருந்தான். செல்யூகஸுக்குப் பிறகு மாசிடோனிய மன்னனாய் மகுடம் புனைந்து கொண்டானைப் பதம் பண்ணப் பெற்ற அத்திப் பழங்கள், கொடி முந்திரிப் பழத்திலிருந்துபிழிந்தெடுத்த இனிய நறவு ஆகிய பொருள்களையும், வாதிட வல்ல ஒரு பேராசிரியனையும் அனுப்பும் படி பிந்துசாரன் வேண்டியிருந்தான். கிரேக்க நாட்டு அரசியல் சட்டம் அறிஞரை விற்கத் தடை விதிக்கிறது என்று கூறிப் பேராசிரியனை ம்ட்டும் தந்து உதவாது, ஏனைய இரு பொருள்களை மட்டும் அளவின்றி அனுப்பி வைத்தான் அந்நாட்டு அரசன். அக்காலை எகிப்தின் மன்னனாய் விளங்கிய இரண்டாம் தாலமியும், தன் நாட்டு அரசியல் தூதுவன் ஒருவனைப் பாடலி அரசவைக்கு அனுப்பி வைத்திருந்தான். மேனாட்டு இவ்வரசியல் தூதுவர் இருவரும் தம் முன்

னோரைப் போலவே, தாம் வந்து வாழும் நாட்டைப் பற்றிய செய்திகளை விரிவாகக் குறித்து வைத்தார்கள். பிந்துசாரனின் வெளிநாட்டு உறவால், மகத நாட்டின் வாணிகம் பெரிதும் வளர்ந்து வளங்கொழித்தது. -

பிந்துசாரனுக்குப் “பகையரசர் குலகாலன்” எனும் பட்டப்பெயர் சூட்டிப் பாராட்டியுள்ளார்கள் கிரேக்கர்கள். மகதப் பேரரசை நிறுவிய சந்திர குப்தனுக்குப் பெருந் துணை புரிந்த சாணக்கியன், பிந்துசாரன் காலத்திலும் வாழ்ந்து, அவனுக்கு அரசியல் வழிகாட்டியாய் விளங்கினான். அவன் துணையால், பிந்துசாரன், மகதப் பேரரசை முன்னிலும் பன்மடங்கு பெரிதாக்கிப் பெருமையுற்றான்.

‘ஆரிய மஞ்சூரி மூல கல்பம்” என்ற புத்த சமய நூலின் ஆசிரியர், “நனிமிக இளைஞனாய் அரியணை அமர்ந்து, ஆண்மை, ஆற்றல், இனிய சொல்வன்மை போலும் நற்பண்புகளை நிறையக் கொண்ட பிந்துசாரன் காலத்திலும், அவ்வரசியல் அந்தணன் தோண்டாற்றினான்” என்று கூறுகிறார். சமண சமயப் பேராசிரியராகிய ஹேமச்சந்திரரும், அவ்விருவர் தம் நட்புறவினை நாவாரப் பாராட்டியுள்ளார். அவ்வந்தண நண்பனின் அருந்துணையால், பித்துசாரன் தன் பேரரசின் தென் எல்லையை விந்திய மலையிலிருந்து, வேங்கடத்திற்குக் கொண்டு சென்றான். வடமேற்கு மாநிலத்தில் சிந்து நதிக்கரையில் வந்து அரசமைத்து வாழ்ந்திருந்த வெளி நாட்டாரை வென்று துரத்தவும், மகதத்தின் அரியணையில் அமர்ந்திருந்த இழிகுலத்தானை இறக்கி விட்டு, அதில் தான் அமரவும்,வென்று கைப்பற்றிய நாட்டில் தோன்றிய கலகங்களையும், குழப்பங்களையும் அடக்கி அமைதி நிலை நாட்டவுமே சந்திரகுப்தனுக்குக் காலம் போதவில்லை. ஆதலின், அவன் விந்தியத்திற்கு வடக்கிலேயே நின்று விட்டான். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பிந்துசார்னுக்கு வடநாட்டில் வேலையில்லை. ஆட்சி அமைதியுற, அசைக்க மாட்டா வன்மையோடு நடைபெற்று வந்தது.

ஆகவே அவன் சிந்தனை, விந்தியத்திற்கு அப்பால் உள்ள நாடுகள் மீது சென்றது. அவன் இளமைத் துடிப்பும், தோளாற்றலும், அவன் உள்ளத்தில் போர் வெறியைப் புகட்டின. உடனிருக்கும் அந்தண நண்பனும் அதற்குத் துணை நின்றான். ஆகவே நெடிய பெரிய தேர்ப்படைகளோடு கூடிய மகதப் பெரும் படை தென்திசை நோக்கிப் புறப்பட்டு விட்டது. தம் தேர்ப் படை செல்லாதபடி இடை நின்று தடுத்த மலைகளையெல்லாம் வெட்டியெறிந்து வழி செய்து கொண்டு விரைந்து சென்று, பல நாடுகளை வென்று கைப்பற்றியது வடநாட்டுப் படை. தமிழகமும், தென் கலிங்கமும் நீங்கலாக உள்ள இந்தியப் பெரு நிலம் எங்கும், பாடலிபுத்திரக் கொடி பெருமிதத்தோடு பறந்தது. தாரநாதன் என்ற திபேத்திய நாட்டு வரலாற்று நூலாசிரியர் “பிந்துசாரன் பதினாறு நாடுகளை வென்றான்; அவன் ஆட்சி குணகடல், குடகடல் என்ற இரு கடல்களுக்கும் இடைப்பட்ட ஒரு பெரு நாட்டில் இனிது நடைபெற்றது” என்று கூறுகிறார்.

வேங்கடம் வரை பரவிய ஒரு பெருநாட்டை வென்றும், பிந்துசாரன் போர் வேட்கை தணியவில்லை. அம்மலையை வடவெல்லையாகக் கொண்ட தமிழகத்திலும் தன் ஆணை செல்ல வேண்டும் என்று விரும்பினான். உடனே, வேங்கடத்தை அடுத்து வாழ்ந்திருந்த வடுக வேந்தனின் துணையோடு தமிழகம் புகுந்தான். வடுகப்படை முன் நடந்து வழி காட்ட வழியிடை மலைகளைக் குறைத்து வழி செய்து கொண்டு தமிழகம் புகுந்த மௌரியப் பெரும் படைக்கு, ஆங்கு வெற்றிக்கு மாறாகத் தோல்வியே காத்திருந்தது. மௌரியப் படை தமிழகம் புகுந்த காலை, மோகூரில், பழையன் எனும் பெயர் பூண்ட ஒரு பெரிய வீரன் வாழ்ந்திருந்தான். பாண்டியர் படைத் தலைவனாய்ப் பணி புரியும் அவன் கீழ், ஆற்றல் மிக்கவராய கோசர்களைக் கொண்ட ஒரு பெரும் படையும் இருந்தது. தமிழகத்தில் வெற்றிகாண வேண்டுமேல், இப்பழையனை 

முதலில் வெற்றிகொள்ள வேண்டும் என்று அறிந்த வட நாட்டுப்படை. மோகூர் அரணைத் தாக்கி அருஞ்சமர் புரிந்தது. தேர்ப்படையோடு கூடிய வடநாட்டுப் படையாலோ, அதற்குத் துணைவந்த வடுகபடையாலோ, மோகூர் மன்னனைப் பணி கொள்ள முடியவில்லை. மாறாக, அவன்தன் கீழ்ப்பணி புரியும் கோசர் படைத் துணையால், வந்த வடநாட்டாரை வென்று துரத்தினான். தமிழகத்தில் வெற்றி காணமாட்டாமலே, பிந்து சாரன் வடநாடு திரும்பிவிட்டான். தமிழகத்தில் அவன் கண்ட பெருந்தோல்வி,தென்கலிங்கநாட்டையும் மறக்கச் செயது விட்டது, அதை வெல்லக்கருதிய கருத்தையும் கை விட்டுத் தலைநகர் சென்று சேர்ந்தான்.

வடுகர் துணை செய்யவந்த மௌரியர் படை யெடுப்பை முறியடித்த தமிழகத்தாரின் தன்னேரில்லாப் பேராற்றலைத் தமிழ்ப்புலவர்கள் தாம் பாடிய சங்கச் செய்யுள்களில் வைத்து வாயாரப் பாராட்டி வாழ்த்தியுள் ளார்கள். அவை இவை;

வென் வேல் - விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த்திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாம்”

              -கள்ளில் ஆத்திரையனார்: புறம் 175.

கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை முரண்மிடு வடுகர் முன்னுற, மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு.” “வெல் கொடித் துனைகால் அன்ன புனைதோக் கோசர், தொன்முது ஆலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பிடித்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலை வந்த மாகெழுதானை வம்பமோரியர்.” .

                    -மாமூலனார் :அகம் 28 1, 251,