உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கம் கண்ட காவலர்/அரியணை ஏறிய அசோகன்

விக்கிமூலம் இலிருந்து
6. அரியணை ஏறிய அசோகன்

கதத்தின் அரியணையில் மௌரிய மரபின் இரண் டாவது மன்னனாய் அமர்ந்து அரசாண்ட பிந்துசாரன், தன் வாழ்நாட் காலத்தின் இறுதியில், தன் மக்களுள், தனக்குப் பின் ஆட்சிக்கு வரத் தக்கான் ஒருவனைத் தேர்ந்து இளங்கோவாக்க விரும்பினான். அவனுக்கு மக்கள் பலர் இருந்தனர் என்றாலும், அவர்கள் அனைவரிலும் அசோகனே, ஆளப் பிறந்தவர் பால், அமைய வேண்டிய அரும் பண்புகளை ஆரப் பெற்றிருந்தான். ஆகவே, அவனுக்கே இளங்கோப் பட்டம் சூட்டித் தன் அரசியல் துணைவனாய் ஆக்கிக் கொண்டான்.

இளங்கோப் பட்டம் பெற்ற அசோகன், காஷ்மீரத்தையும், பஞ்சாபையும உள்ளடக்கிய வடமேற்கு மாகாணத்தின் அரசப் பிரதிநிதியாய்ச் சென்று, தன் இளமைப் பருவத்தின் பெரும் பகுதியை ஆங்கே கழித்துக் கொண்டிருந்தான். அம்மாகாணத்தின் தலைநகராய்த் திகழ்ந்த தக்ஷசீலம், அக்காலப் பல்கலைக் கழக நகராய்ப் பெருமையுற்றிருந்தது. கீழ்த் திசை நாடுகளில் சிறந்து விளங்கும் பேரூர்களுள் ஒன்று என்னும் புகழ் பெற்ற அந்நகர், இந்து சமய சாத்திரங்களின் கலைக் கூடமாகவும் காட்சி அளித்தது. அந்தணர், அரசர், அரசர்க்கு நிகராய் அருநிதி படைத்தோர். வணிகர் போலும் வளமார் குடியில் வந்த இளைஞர்கள், இந்திய நுண்கலைகளிலும், விஞ்ஞானத் துறையிலும், சிறப்பாக மருத்துவத் துறையிலும் பயிற்சி பெற, அக்காலத்தில் அப்பேரூர்க்கே செல்வர். அத்தகைய பெருமை வாய்ந்த பேரூரில் பல்லாண்டு இருந்து ஆளும் வாய்ப்பினை இளமைப் பருவத்திலேயே பெற்ற அசோகன். அவ்வருங்கலைகளை ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்து

சிறந்த கலைஞனாய் விளங்கினான். அதனாலேயே மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழையக் கருதும் வெளிநாட்டாரை தடுத்து நிறுத்தி, வென்று துரத்தும் படைத்தலமாய் விளங்கிய தக்ஷசீல மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பு அத்துணை இளைமைப் பருவத்திலேயே அவன் பால் ஒப்படைக்கப்பட்டது,

அசோகன் ஆட்சி நலத்தால், வடமேற்கு மாகாணத்தின் அச்சம் அகன்று அமைதி நிலவுகிறது என்பதை அறிந்து கொண்டதும், பிந்துசாரன், அவனை மேற்கு மாகாணத் தலைநகர்க்கு அனுப்பினான். தக்ஷசீலம் எல்லைப்புறக் காவல் நிலையமாய்ச் சிறப்புற்றது என்றால், மேற்கு மாகாணத் தலைநகராகிய உச்சைனி, பெருவாணிக நிலையமாய்ப் பெருமையுற்றது. மேலைக் கடற்கரைக்கண் உள்ள பெரிய துறைமுகப் பட்டினங்களில் வந்து குவியும் வெளிநாட்டுப் பொருள்களின் வாணிக நிலையமாய் விளங்கியது அவ்வுச்சைனி நகரே. மேலும் சமயச் சிறப்பு வாய்ந்த ஏழு பேரூர்களுள் அதுவும் ஒன்று என்ற பெருமையும் அதற்கு இருந்தது. அதனால் வாணிக வளர்ச்சி குறித்தும், வழிபாட்டுப் பயன் கருதியும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மக்கள் திரள் திரளாக அந்நகர்க்கு வருவாராயினர். இவ்வாறு இரு வகையாலும் பெருமையுற்ற அவ்வூரின் ஆட்சிப் பொறுப்பையும் இளங்கோ அசோகனே ஏற்றல் வேண்டும் என்று விரும்பினான் பிந்துசாரன். அரசன் ஆணையை ஏற்று அசோகன், தக்ஷசீலம் விட்டு, உச்சைனி அடைந்து, அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

அசோகன் உச்சைனியில் வாழ்ந்திருந்தான். சில ஆண்டுகள் கழிந்தன. பிந்துசாரன் உடல்நலம் குன்றினான். அது கேட்டுத் தலைநகர்க்கு விரைந்து வந்து சேர்ந்தான் அசோகன். வந்த சின்னாட்களுக்கெல்லாம், மகத

மன்னன் மாண்டு விட்டான். மன்னனால் இளங்கோவென மதிக்கப் பெற்ற அசோகன், முறைப்படி மகதப் பேரரசின் மன்னனாய் மணி முடி புனைந்து கொண்டான். நிற்க,

பிந்துசாரனுக்குப் பதினாறு மனைவியர் இருந்தனர் என்றும், அவர்கள் வழியாக அவனுக்கு ஆண்மக்கள் மட்டும் நூற்றொருவர் இருந்தனர் என்றும், பிந்துசாரன் இறந்ததும் அவர்களிடையே ஆட்சியுரிமைப் போர் தலை தூக்கிற்று என்றும், அவர்களுள், ஒரு தாய் வயிற்றில் பிறந்த தன் இளவலாகிய திஸ்ஸன் ஒருவனைத் தவிர்த்து ஏனைய உடன் பிறந்தார் அனைவரையும் கொன்று அசோகன் அரசைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும், அவ்வாட்சியுரிமைப் போர் காரணமாகவே, அசோகன் முடிசூட்டு விழா, மன்னன் மாண்டு நான்காண்டுகள் கழிந்த பின்னர் நடை பெற்றது என்றும் மகாவம்சம் என்ற ஈழ நாட்டு வரலாற்று நூல் கூறுகிறது.

அசோகனுக்குக் கொலைக் குற்றம் சாட்டும் மகாவம்சம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகும். அசோகனுக்குப் பிறகு ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகள் கழித்துக் தொகுபட்ட அது கூறும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கன அல்ல; மேலும், அசோக வரலாறு கூறும் அது அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறந்த நிகழ்ச்சியாகிய கலிங்க வெற்றி குறித்து வாய் மூடிக் கிடக்கிறது; அவன் ஆட்சி முறை குறித்தும் அது ஏதும் அறிவிக்கவில்லை; இவ்வாறு குறைபட்ட ஒன்று கூறும் சான்றைக் கொண்டு அசோகனைக் குற்றவாளியாக்கி விடுவது கூடாது; மேலும் இளமையில் அவ்வளவு கொடியவனாய் வாழ்ந்தவனே, முதுமையில் அறவழி காட்டும் ஆன்றோனாய் மாறி மாண்புற்றான் என அவன் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்ட புத்த மத வாழ்வைச் சிறப்பிப்பதற்காக அவன் இளமை வாழ்க்கை அவ்வாறு பழிக்கப்பட்டதேயல்லது, அதில் சிறிதும் உண்மையில்லை; மேலும் அரசன்

ஒருவனுக்குப் பதினாறு மனைவியர் இருத்தனர்; அவர்கள் வழியாக நூறறுவர்க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர் என்பன நம்பத் தக்கன ஆகா. அது மட்டுமன்று. அண்ணனும் தம்பியும், தங்கையும் தமக்கையுமாக உடன் பிறந்தார் பலர் சூழ அசோகன் அரசாண்டான்; அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதில் அவன் ஆர்வம் காட்டியிருந்தான் என்ற வரலாற்றுச் செய்திகளும் உள்ளன. மேலும், அசோகனின் பாட்டனாகிய சந்திர குப்தன். இளமையில் வறுமையில் வாழ்ந்தான்; நாடு கடத்தப்பட்டு நலிவுற்றான்; அவ்வாறு அமைதியற்ற வாழ்வில் வாழ்ந்திருந்தவன், அரண்மனை வாழ்க்கையில் அடியிடத் தொடங்கியதும், தனககுக் கேடு செய்பவர் என்று ஐயுற்றவர்களையெல்லாம் கொன்று குவித்ததில் நேர்மை நின்றது; அவனைப் போல் அலலாமல், இரு தலைமுறைகளாக அமைதி நிலவும் நல்லாட்சி நடாத்தும் ஒரு குடியில் பிறந்து, தந்தையால் பலர் அறிய இளங்கோப் பட்டம் சூட்டப் பெற்ற அசோகனை, அவன் அரியணை அமருங் காலத்தில் தடை செய்வார் எவரும் இருந்திரார்; ஆகவே அவனுக்கு அத்தகைய அச்சம் உண்டாகக் காரணம் இல்லை. ஆகவே அவன் மீதும் குற்றத்தைச் சாட்டுவது குற்றமாம் என்று கூறி மகாவம்சம் கூறும் அச்செய்தியை மறுக்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள்.

தர்ம அசோகன் எனப் பிற்காலத்தில் பாராட்டப் பெற்ற அசோகன் இளமையில் ஆற்றவும் கொடியோனாய். வாழ்ந்து, அதன் காரணமாய் அதர்ம அசோகன் எனும் இழிபெயர் இட்டுப் பழிக்கப்பெற்றுளான் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் உள. அசோகன் தன் இளமைப் பருவத்தில், குருதிப் பலி விரும்பும் துர்க்கையை வழி படும் சைவ சமய நெறி நின்று, உயிர்களைச் சிறிதும் தயங்காது கொன்று குவித்தான். அரண்மனையின் ஒரு வேளை விருந்திற்காக வேண்டி ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறான். புலால் தின்னும்,

புலையனாய் வாழ்ந்தான்; விலங்குகளுக்கு வேதனையைத் தரும் வேட்டையை விளையாட்டாகக் கருதிக் கொடுமை செய்தான்; மது உண்பதிலும், மங்கையர் ஆடல் பாடல்களில் அகமகிழ்வதிலும் ஆர்வம் காட்டினான்; இவ்வாறு அறத்தைக் கை விட்டு வாழ்ந்த அக்காலத்தில் அசோகன் அரியணை ஏறும் ஆர்வத்தில், அதற்குத் தடையாய் நின்றாரைத் தயங்காது கொன்றேயிருப்பான்; பிந்துசாரனுக்கு அத்துணை பெரிய குடும்பம் இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளத் தகாத ஒரு கட்டுக் கதையன்று; கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருந்த பர்மா நாட்டு மன்னன் ஒருவன் தன்னுடைய எழுபத்தைந்தாவது ஆ ண் டி ல், நூற்றிருடத்திரண்டு மக்களையும் இருநூற்றெட்டுப் பெயரன்மார்களையும் விட்டுப் பிரிந்து விண்ணுலகடைந்துள்ளான். ஆகவே அது வரலாற்றோடு ஒட்டிய ஒர் உண்மை நிகழ்ச்சியேயாகும்; அசோகன் அரியணையேற்றம் அமைதியாகவே நிகழ்ந்தது என்று கூறும் அவர்கள், அது அவன் தந்தை இறந்து நான் காண்டுகள் கழிந்த பின்னரே நடைபெற்றமைக்குக் காரணம் ஏதும் காட்டினாரல்லர்; அல்லது அதை மறுத்தவருமல்லர். அதற்கு மகத நாட்டு அரண்மனையில் நிகழ்ந்த ஆட்சி உரிமைப் போர், அல்லது பொருந்தும் காரணம் பிற யாதாய் இருக்க முடியும் என்று வாதிட்டு அசோகன் கொலைக் குற்றத்தை உறுதி செய்வார்கள், சில வரலாற்றாசிரியர்கள்.

அரசிளங் குமரர்களைக் கொன்றோ, அல்லது அமைதியாகவோ அசோகன் அரியணையில் அமர்ந்து விட்டான். மகதப் பேரரசின் உரிமை பெற்ற மன்னனாய் மணி முடி சூட்டு விழாவும் நடைபெற்று விட்டது. வட மேற்கு இந்திய எல்லைக்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தானம், பலுஜிஸ்தானம் முதல், தமிழகத்தின் வடவெல்லையாகிய வேங்கடம் வரை பரவிய ஒரு பேரரசின் காவலனாய்ப் பொறுப்பேற்ற அசோகன், தன் ஆட்சியின்

தொடக்க ஆண்டுகள் பன்னிரண்டை, அந்நாட்டில் அமைதியை நிலை நாட்டும் அரும்பணிக்கே செலவிட்டான். அவற்றுள் ஒரு சிலவே தன் பாட்டன் சந்திரகுப்தனால் கைப்பற்றப்பட்டன; எஞ்சிய நாடுகளெல்லாம் அவன் தந்தை பிந்துசாரன் ஆட்சியில் இறுதி நாட்களிலேயே வென்று கொள்ளப் பட்டனவாதலின் அந்நாட் டு மக்களை மகதத்தின் ஆணைக்கு அடங்கியவர்களாக ஆக்க அத்தனை ஆண்டுகளைச் செலவிட வேண்டியதாகி விட்டது; அதைத் திறம்பட முடித்து வெற்றி கண்ட அசோகன், பாடலிபுரத் தலைநகரில் தன் அரண்மனையின் மேன்மாடியில் நின்று, தன் தாள் பணிந்து கிடக்கும் தன் பேரரசைத் தலை நிமிர்ந்து நோக்கினான். உமையொரு பங்கன் வீற்றிருக்கும் இமயப் பெருவரையின் அடி முதல், மாலவன் வீற்றிருக்கும் வேங்கடத்தின் முடிவரை பரந்து கிடக்கும். அதைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்; ஆனால் அந்தோ! அம்மகிழ்ச்சி சிறிது நாழிகைக்கெல்லாம் மறைந்து விட்டது; இவ்வாறு பரந்து அகன்ற ஒரு பெரு நாட்டை ஆளும் தனக்கு அடங்காது தன்னரசு செலுத்தும் சின்னஞ்சிறு தமிழகமும், தென்கலிங்கமும் அவன் கண்ணில் பட்டு அவன் கருத்தைக் குருடாக்கின; என் பேரரசின்முன் இவை தனியரசு செலுத்துவதா என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான். அவற்றையும் தன் ஆணைக் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்று துணிந்தான்.

அசோகன் போர்க் கண்கள் தமிழகம், தென்கலிங்கம் ஆகிய இரண்டின் மீதும் ஒரு சேரவே வீழ்ந்தன என்றாலும், கலிங்க வெற்றியையே முதலில் கருதினான். தமிழகம் தன் அரசின் எல்லைக்கு அப்பால் தனித்துக் கிடக்கிறது, மேலும், அது தன் தந்தை கொண்டு சென்ற மௌரியப் பெரும் படையை வென்று துரத்த வல்ல தோளாற்றல் பெற்றுளது. மேலும், மததத்தின் அரியணையில் தந்தையினும் ஆற்றல் மிக்க தான் அமர்ந்திருப்பதை அறியும் அது.

தான் மீண்டும் படையெடுத்தலும் கூடும் என்ற எண்ணங் கொண்டு முன்னிலும் பன்மடங்காக அதன் படை பலத்தைப் பெருக்கி வைத்திருத்தலும் கூடும்; ஆகவே, முதலில் தமிழக வெற்றியில் தலையிடல் கூடாது; கலிங்கம் அத்தகையதன்று, ஒருபுறம் மட்டும் கடல் எல்லையாக, ஏனைய மூன்று புறங்களிலும் தன் ஆட்சி நில்வும் நாடுகளே எல்லையாக அமைந்து கிடக்க நடுவில் நின்று தன் ஆண்மையை, ஆற்றலை எள்ளி நகைப்பது போல் காட்சியளிக்கிறது. மேலும் தமிழகத்தையும் வெல்ல வேண்டும்: அதிலும் தன் ஆணை செல்ல வேண்டும் என்று விரும்பி அதன் மீது போர் தொடுத்துச் செல்லும் போது தன் படைக்குப் பின்னே கலிங்கம் போலும் தன் கட்டுக்கடங்கா ஒரு நாட்டை விட்டு வைப்பது போர் முறையாகாது. ஆகவே, தன் கன்னிப் போர்க்களமாகத் தென்கலிங்க நாட்டைத் தேர்ந்து கொண்டான்.

விண்ணைத் தொடும் கொடியும், வெண் கொற்றக் குடையும் கட்டிய நெடிய பெரிய தேர்களைக் கொண்ட மௌரியப் பெரும்படை தென்கலிங்கம் புகுந்து பாடி கொண்டது. கலிங்கம் வந்து கண்ட கங்கைக் கரையான், தான் எதிர் பார்த்ததுபோல் கலிங்கம் படை பலத்தால் குறைந்திருக்கவில்லை என்பதைக் கண்டான். அறுபதினாயிரம் வாள் வீரர்களையும், ஆயிரம் குதிரை வீரர்களையும், எழுநூறு போர் யானைகளையும் கொண்ட பெரும்படை, அசோகன் வரவை எதிர் நோக்கி ஆங்கு காத்து நின்றது. அது அசோகன் சினக் கனலைச் சிறக்க மூட்டி விட்டது. ஒரு பேரரசின் காவலனாகிய தான் தன் பெரும் படையோடு வந்திருப்பதை அறிந்தவுடனே ஓடி வந்து அடிபணிய வேண்டிய ஒரு சிறிய நாடு, தன்னோடு பகைத்துப் படை கொண்டு நிற்பதா என்று எண்ணிச் சினந்தான். அவ்வளவே அவன் பெரும் படை தென்கலிங்கப் படை மீது பாய்ந்து விட்டது. அறம் அருள் என எண்ணிப் பாராமல் கலிங்க நாட்டின் காவற் சோலைகளைக் கவினிழக்கப்

பண்ணிற்று. விளைபயிர்களுக்கு எரியூட்டிற்று. உண்ணு நீர்க் குளங்களையும், தண்ணீர் நிறைந்து வழியும் ஏரிகளையும் இடித்துப் பயனிலவாக்கிற்று; மாடங்கள் மண் மேடாயின, பொதுவில்லங்கள் மக்கள் வழங்கலாகாப் பாழிடங்களாயின, மகதப் படை இவ்வளவு அழிவு செய்தும் கலிங்கப் படை கலங்காது போரிட்டது. ஒரு நூறாயிரம் வீரர் உயிர் இழந்தனர். அவர் மேலும் ஒன்றரை மடங்கு வீரர் சிறை பிடிக்கப்பட்டனர். இவ்வளவு பேரழிவிற்குப் பிறகும், சின்னஞ்சிறு கலிங்கம் மகதப் பேரரசை எதிர்த்து நிற்றல் இயலுமோ? இறுதியில் கலிங்கம் பணிந்து விட்டது, வெள்ளையாடையின் இடையே கரும் புள்ளி போல், பரந்த மகதப் பேரரசின் நடுவே தனியரசு செலுத்திய கலிங்கத்தின் ஆட்சி அழிந்து விட்டது. அசோகன் கனவு நனவாகி விட்டது. - கலிங்கம் பணிந்து விட்டது. அசோகன் மேற்கொண்ட முதற்போர் அது. அதில் அவன் பெருவெற்றி பெற்று விட்டான். ஆனால், அதுவே, அசோகன் வாழ்வில் கண்ட கடைசிப் போராகவும் முடிந்தது. கலிங்கத்தில் வெற்றி கண்ட மகதக் காவலன், களக் காட்சியைக் கண்டான், அவ்வளவே, அவன் அகக்கண் திறந்து கொண்டது. களத்தில் மாண்டு கிடக்கும் மறவர்களின் தொகையை மதிப்பிட்டுப் பார்த்தான், வீழ்ந்து கிடக்கும் வேழங்கள் எத்தனை ஆயிரம்? காற்றெனப் பாய்ந்தோடும் குதிரைகளில் கொலையுண்டு போயின எத்தனை ஆயிரம்? உருக்குலைந்து கிடக்கும் தேர்கள் எத்தனை? இப்பேரழிவுக்குக் காரணம் தான் ஒருவனே அல்லவோ? தன்னொருவன் ஆசையை நிறைவேற்றவோ இத்தனை உயிர்களின் அழிவு? இதுவும் ஒரு வெற்றியா? என்னே என் அறியாமை! என்று எண்ணி எண்ணி இடர் உற்றது அவன் உள்ளம். அந்நிலையில், மகதப் படைகள் கலிங்க நாட்டில் விளைத்த கேட்டின் பயனாய்க் கலிங்க நாடு வளம் இழந்து போய் விட்டது, மக்கள் வறுமைக்குள்ளாயினர். பசியால் வாடிய அவர்கள்

வாடிய அவர்கள் பிணியுற்று உழல்கின்றனர், கொள்ளை நோயால் உயிரிழந்தவர் எத்தனை ஆயிரவர் என்று எண்ணிக் கூறுவது இயலாது என்ற செய்தி தொடர்ந்து வரத் தொடங்கி விட்டது. உகிர்ச்சுற்றின் மேல் உலக்கை விழுந்தது போலவும் லெந்த புண்ணில் வேல் நுழைந்தது போலவும் ஆகி விட்டது அசோகனுக்கு. போரின் துணையால் பெறலாகும் வெற்றிப் புகழில் அவன் கொண்டிருந்த ஆர்வம் அறவே மறைந்து விட்டது, ஆற்றல், ஆண்மை என ஒயாது ஒலித்திருந்த அவன் உள்ளத்தில் அன்பு, அருள் என்ற இன் ஒலி எழுந்து விட்டது, போர் வெறி தணிந்து விட்டது, பேரருள் சுரந்து விட்டது, முற்றிலும் புதியவனாகி விட்டான் அசோகன, கன்னிப் போராய் விளங்கிய கலிங்கப் போரே அவன் கண்ட கடைசிப் போராகவும் ஆகி விட்டது, போர் நினைப்பை இழந்து புத்த நெறியில் புகுந்துவிட்டான் அப்ப்ோர் வீரன்!


æææ