ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/ஆரியக் குறும்பு

விக்கிமூலம் இலிருந்து

ஆரியக் குறும்பு!

மிழர்கள் அறியாமையில் மிகுந்திருந்த காலத்திலும், இரக்க உணர்வாலும் கொடைமடத்தாலும் தம்மை அண்டினார் எவராயினும் அவரைக் கரவின்றிப் புரந்து வந்த காலத்திலும், பிராமணர்கள் என்னும் ஆரியப் பார்ப்பனர் தம் பிழைப்புக்காகவும் மேம்பாட்டுக்கு ஆகவும், பொய்யும் புனைகருட்டும் மிடைந்த கதைகளையும், போலி வழக்கங்களையும் புகுத்தி மன, அறிவு, மெய்களால் தமிழரைத் தாழ்த்தி அவர்தம் நலன்களை உழைக்காமலேயே உண்டுவந்தனர் என்பதற்கு வரலாற்று வழியாகவும் வாய்வழிச் செய்தியாகவும் பல சான்றுகள் உள. அத்தகைய ஏமாற்று வேலைகளை ஆரியப் பார்ப்பனர்கள், இவ் விருபதாம் நூற்றாண்டுக் காலத்திலும் கைவிடவில்லை என்பதற்கு இன்று உள்ளுரவும் வெளிப்படையாகவும் நிகழ்ந்துவரும் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக உள்ளன.

பார்ப்பனர்களின் கைக்கேடயங்களாக இன்று விளங்கி வருபவை அவர்கள் நடத்திவரும் செய்தித்தாள்கள், அவர்கள் மேலாண்மை செய்து வரும் வானொலி நிலையங்கள், அரசினர் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் முதலியவை. இவற்றின் வழியாக அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் செய்துவரும் கேடுகள் கணக்கிலடங்காதவை. இவற்றைப் பற்றி எண்ணிப்பார்க்கவும் இடம் வைக்காமல் அவர்கள் விடாது செய்துவரும் மடமைப் பெர்ழிவுகளும், வெளியீடுகளும், நடைமுறைகளும் எதிர்காலத்தில் தமிழ்மொழியையே - தமிழர்களையே அழித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

பொது மக்களுக்குத் தெரிந்த - மிகவும் புழக்கத்திலுள்ள சில சொற்களைக் கூட தமிழில் எழுதாமல் வேண்டுமென்றே வடமொழியிலேயே செய்தித்தாள்களில் எழுதிச் சமற்கிருதத்திற்கு ஆக்கந்தேடுவதும், பார்ப்பனச் சேரியில் குஞ்சுங் குளுவானுமாகவுள்ள விடலைகள் முதல், திக்கொன்றாய்ச் சிதறிக் கிடக்கும் பார்ப்பனப் பாட்டுக்காரர்கள், பேச்சுக்காரர்கள் வரை பார்ப்பன ஆடவரையும் பெண்டிரையும் அவர்தம் அடிமைகளையும் கூட்டிப் பொறுக்கி வானொலிக் கூடத்தில் குழுமவைத்து ‘அருள் வாக்கு’ என்றும், ‘ஸுப்ர பாதம்’ என்றும், ‘மதுரகீதம்’ என்றும், ‘இசை அமுதம்’ என்றும், ‘சங்கீத உபந்நியாசம்’ என்றும், ‘மகிளா மண்டலி’ என்றும், ‘திண்ணைப் பேச்சு’ என்றும், ‘சிறுவர் கதம்ப நிகழ்ச்சி’ என்றும் ‘உரைச்சித்திரம்’ என்றும், ‘ஸம்ஸ்கிருத நிகழ்ச்சி’ என்றும், ‘ஊர்ச்சாவடி’ என்றும், ‘சூரிய காந்தி’ என்றும், ‘மணிமலர்’ என்றும், ‘பெண்ணுலகம்’ என்றும், ‘மெல்லிசை’ என்றும், ‘ஒளி மிகு பாரதம்’ என்றும், ‘விவசாயிகளுக்கு’ என்றும், ‘ஜயபேரி’ என்றும், ‘மாதர் நிகழ்ச்சி’ என்றும், பலவாறாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கற்பனைக் கதைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றிற் கலந்து கொண்டமைக்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அரசினர் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வதும், அரசினர் அலுவலகங்களில் மேலாளராகவும், செயலாளராகவும், தலைமையராகவும், கணக்காளராகவும், ஆய்நராகவும் அமர்ந்துகொண்டு எங்கெங்கெல்லாம் தமக்கும் தம் இனத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டுமோ அங்கங் கெல்லாம் அவற்றைக் கொடுப்பதும், அவ்வழியில் குறுக்கிடும் தமிழர்களைப் பல்லாற்றானும் கெடுப்பதும் நாம் நாள்தோறும் கண்டு மனம்புழுங்கி உள்நடுங்கும் செயல்களாகும்.

‘மேட்டுர் அணைத்தண்ணிர்’ என்றெழுதாமல் ‘மேட்டுர் டாம் ஜலம்’ என்றும் ‘கண்ணிர்ப் புகை யூட்டப்பட்டது’ என்பதைக் ‘கண்ணிர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது’ என்றும் ‘கூட்டம்’ என்பதைக் கோஷ்டி என்றும் வேண்டுமென்றே எழுதித் தமிழைக் கெடுத்துவரும் அவர்களின் கேடயங்களான சுதேசமித்திரன், தினமணி, ஆனந்தவிகடன், கல்கி முதலிய தாள்கள் செய்யும் குறும்புத்தனங்களுக்கோ அளவில்லை. கீழுள்ள செய்தி அவர்கள் தாள்களில் ஒன்றான ‘தினமணி'யில் வெளிவந்தது. அதனை அப்படியே தருகின்றோம்.

“சென்னை ராஜ்யத்தில் வறட்சிப் பிரதேங்களில் ஸர்வே நடத்தி, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சர்வே கோஷ்டியைச் சர்க்கார் நியமித்தது.

இதில் உள்ள 12 சொற்களில் 4 சொற்களே தமிழ்ச் சொற்கள். அவற்றிற்கும் வடமொழிச் சொறக்ளையே போட்டிருக்கலாம். தங்களின் கேடான எண்ணங்களைப் பிறர் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடுமே என்று அவற்றைச் செய்யாது விடுத்தனர் போலும் ! தமிழுக்கு இவ்வளவு கேடு செய்துகொண்டுவரும் நேரத்திலேயே, அவர்தம் மொழிக்கு எவ்வளவு அக்கறை காட்டப் பெறுகின்றது என்பதற்கு, அதே தாளில் அதே நாளில் வெளிவந்த கீழுள்ள செய்தியையும் பாருங்கள்.

“இது மகாரிஷிகளின் சமஸ்கிருதம் - நமது வேதங்கள் அனைத்தும் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டவை. வேதங்கள் உப-வேதங்கள் எல்லாவற்றையும் புதுப்பிக்க இந்த சதஸ் முயல்வது குறித்து சந்தோஷம்” என்று ‘ஸ்ரீவெங்கடேஸ்வர ஆலய சம்ஸ்கிருத சதஸ் ஆண்டு பூர்த்தி விழாவில், பெரிய ஜியர் பூரீரங்கராமானுஜ ஜியர் ஸ்வாமிகள் தலைமையில், ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூர் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் சதஸ்ஸைத் துவக்கி வைத்து அருளுரை நிகழ்த்தினார்”.

எப்படி...? ஒருபுறம் தமிழுக்குக் கேடு, மறுபுறம் ஆரியத்திற்குப் பாடு! இவ்விரண்டு முயற்சிகளுக்கும் பயன்படுவது அரசினர் பணம் அல்லது அரசினர் கை வைக்க இயலாத - தேவையானால் இன்னும் போட்டு நிரப்புகின்ற கோயில் பணம். திருப்பதி கோயில் அதிகாரி கொடுத்த அறிக்கைப்படி மேற்குறித்த ‘ஸ்ரீ வெங்கடேஸ்வர சமஸ்கிருத சதஸ்’ தொடங்கிய மூன்று மாதக் காலத்தில் அவர்களின் திருவிளையாட்டிற்குச் செலவிடப்பெற்ற பணம் நாற்பத்தேழாயிரம் உருபா அழைக்கப்பட்ட பார்ப்பன வேத பண்டிதர்கள் 200 பேர்; ‘வேத பாராயணக்காரர்கள்’ 400 பேர் செய்த பணி பார்ப்பனர்களைத் தேவர்களாக்கும் ஆரியப் பூசல்களைப் பரப்புதல் ! தமிழ்மொழியை அடிமைப்படுத்தும் சமற்கிருதத்தை எழுப்புதல். போதுமா ? தமிழன் துரங்கிக் கொண்டிருக்கிறான் அல்லது அடிமைப்பட்டுக் கிடக்கிறான் என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?

இதோ இன்னொரு பார்ப்பனக் குறும்பு!

நூற்றுக்கணக்கான கோடி உருபாக்களைக் கொட்டி மணலைப் புரட்டிக் கரியைத் தோண்டிய நெய்வேலியின் கைவண்ணமெல்லாம் தமிழன் செய்தவை. அங்கிருக்கும் கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் தமிழரைக் கொண்டு கட்டப்பெற்றன. ஆனால் அங்குக் குடியமர்ந்தவர்களோ கெடுப்பது தமிழ்க்குடிகளை - தமிழ் மொழியை! தொழில் முறையாலும் அதிகார முறையாலும் அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் ஆரியப் பேய்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க

மொழியைப் பொறுத்த அளவில் அவர்களின் கூத்து எப்படித் தமிழன்னையின் முகத்தில் கரிபூசும் வேலை என்பதை இன்றைய அரசியல் 'தமிழர்' கண்ணுான்றிப் பார்ப்பார்களாக மொழிநலம் காப்பதாக வாய்ப்பறை சாற்றிக் கொண்டுள்ள காவலர்களும் நாவலர்களும் கலைஞர்களும் வேள்களும் இவற்றைக் கண்ணுற்ற பின்னும் தம் அரசியல் ஊடாட்டங்களுக்கு ஆரிய மாயைகளைப் பயன்படுத்துவார்களானால், அவர்தம் முயற்சி முற்றும் அரிமாவைக் குறிவைத்து அதன் நிழல்மேல் அம்புவிட்ட பேதையின் வேலையாகவே முடியும்

நெய்வேலியில் வாரும் நிலக்கரியைக் காட்டி ஆரியவேலி கட்டிக் கொண்டிருக்கும் அங்குள்ள பார்ப்பனர்கள் அங்கு ‘வைதீக சமாஜம்’ என்றும் ‘கோகுலம்’ என்றும், ‘தபோவனம்’ ‘மணித்வீபம்’ என்றும் பல அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்க்கும் தமிழர்க்கும் நாளொரு கேடும் பொழுதொரு சூழ்ச்சியும் செய்த வண்ணமாகவே உள்ளனர் என்று அங்குள்ள தமிழர் பலர் மனம் புழுங்கி நமக்கு மடல்கள் எழுதியவாறே உள்ளனர். அண்மையில் வந்த மடல் அங்குள்ள தெருக்களின் பெயர்களைப் பற்றிய ஒரு விளக்கமாக அமைந்திருக்கின்றது. அம்மடலில் உள்ள ஒரு பகுதியை அப்படியே குறிக்கின்றோம். “....... மேற்கண்ட கூட்டத்தினரே(பார்ப்பனரே) அங்குள்ள வேலைகளில் பெருவாரியாக உள்ளனர். தலைமை அதிகாரிகள் அத்தனைப் பெயரும் அவர்களே. அவர்கள் ‘சத்சங்கங்கள்’ கூடி அங்குள்ள தெருக்களுக்குப் புதுமைப்(!) பெயர்களைச் சூட்டியுள்ளனர். அவற்றில் சில வருமாறு: உளுந்து தெரு, துவரைத் தெரு, பாதாம்கொட்டைத் தெரு, பருத்திக் கொட்டைத் தெரு, பிண்ணாக்குத் தெரு, பேனா தெரு, பென்சில் தெரு, பாய் தெரு, தலையணை தெரு, கருங்கல் தெரு, கத்தரிக்காய்த் தெரு, விசிறி சாலை, வளையல் தெரு..... இன்ன பிற. இப் பெயர்களை வேண்டுமென்றே அவர்கள் வைத்துள்ளனர். காரணம் நல்ல அழகிய தமிழ்ச் சொற்களாக வைத்தால் தமிழ்ப்பற்று வளர்ந்துவிடக்கூடும் என்பதும், தாங்கள் தங்கள் உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் பல வேலைகளும் வேலை உயர்வுகளும் வழங்கி வருகின்ற முறை கேடான செயல்களில் தமிழர்க்கு எண்ணம் எழாமல் தடுக்க வேண்டும் என்பதுமே! இவற்றை முன்கூட்டியே கருதித் திட்டமிட்டு வைக்கப்பட்ட பெயர்களாகும் இவை. காந்தியடிகள், நேரு, திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகள் ஆகியவர்கள் பெயர்களையோ, அல்லது தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் புலவர் பெருமக்கள், மன்னர்கள், அமைச்சர்கள், மறவர்கள், வள்ளல்கள் ஆகியோர் பெயர்களையோ வைக்காத காரணம் அறவுணர்வும், தமிழ் உணர்வும் அரசியல் விழிப்பும், நேர்மையும் பற்றி மக்கள் எண்ணிப் பார்க்கவே கூடாதென்ற எண்ணந்தான்”.

இந்த மடலுடன் அங்குள்ள தெருக்களின் பெயர் வரிசை ஒன்றும் வந்துள்ளது. அதில் எள்ளத்தக்கனவும், வருந்தத் தக்கன வுமான பெயர்கள் பல. அவற்றுள் தமிழில் தெருக்களுக்குப் பெயர்கள் வைக்க வேறு பொருள்களோ, ஆட்களோ, இயற்கையறிவோ, வாழ்க்கை அறிவோ தமிழர்களுக்கு அறவே இல்லையென்று அங்குவரும் பிறநாட்டினர் கருதும்படி அமைந்துள்ள பெயர்கள் மிகப் பலவாகும். காற்றாடி, தொப்பி, தொட்டில், சேவல், முயல், குடை, கோழி, கட்டில், நாடா, ஊதி, கஞ்சிரா, கொத்துமல்லி, காக்கைப் பொன், ஒட்டகம், துலை(தராசு), மத்தளம், கண்ணாடி, கூழாங்கல், சீப்பு, கோடரி, நூல், ஊசி, மாடு, மான், அம்பு, கட்டாரி, கிளி, வாள், தாழ்ப்பாள், புறா, வாத்து, கயிறு, கிண்ணம், பாக்கு, பறவை, கம்பளி, கலப்பை, விளக்கு, கரண்டி, குழாய், பனைமரம், தேங்காய், எலுமிச்சை, மயில், பசும்புல், முதலியவற்றின் பெயர்களிலெல்லாம் அங்குத் தெருக்கள் உள்ளன. இதில் என்ன வியப்பு என்றால் இப் பெயர்களுக்கோ அத் தெருக்களுக்கோ எந்தவகைத் தொடர்பும் இல்லை. தேங்காய்த் தெருவில் பெயருக்குக் கூட ஒரு தேங்காயையோ தென்னை மரத்தையோ பார்க்க முடியாது. ஊசித் தெருவில் ஊசி இருக்காது. குடைத் தெருவில் மழைக்கு ஒதுங்கவும் இடமிருக்காது. தச்சர் தெரு என்று ஒரு தெரு அங்குத் தச்சர் ஒருவரும் இலர். ‘தோல்வித் தெரு’ என்று ஒரு பெயர்! இப்படித் தம் மனம்போன போக்கெல்லாம், இவர்களின் வேத மூளைக்கு எட்டியபடி யெல்லாம் ‘தெருப்பொறுக்கியின் கையில் இருப்பூசி’ கிடைத்ததுபோல் மண்டைக்குடுமி உதிர உதிர எண்ணி அவர்கள் இத்தகைய பெயர்களை ஏன் வைத்தல் வேண்டும்? அது தான் ஆரியக் குறும்பு! அதற்குப் பொருள் இல்லாதது போல் தோன்றும்! ஆனால் அதனால் ஓரினமே அழியும்; ஒரு மொழியே குலையும். இது வரலாறு.

இவற்றையெல்லாம் ஒருபுறம் வளரவிட்டுக்கொண்டு ‘தமிழை வளர்க்கின்றேன்; இந்தியை எதிர்க்கின்றேன்' என்று வறட்டுப் பேச்சைக் கூட்டந்தோறும் பேசித் திரிவதில் என்ன பயன் விளையப் போகின்றது? இவற்றைப் பார்க்கையில் நாம் காலங்கருதி இடத்தால் செய்யவிருக்கும் வினையைக், காலங்கருதாமலும் இடம் கருதாமலும் செய்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகின்றதில்லையா? தமிழ்மானம் உள்ளவர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

-தென்மொழி சுவடி : 4, ஓலை : 9, 1966