ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இராசாசி ஓர் அரசியல் ஏரி
இந்தியா தன்னுரிமை பெற்றவுடன், அதற்கு வெள்ளைக்காரன் இட்ட அடிமை விலங்கு தகர்க்கப்பட்டதேயன்றி, இந்தியர்கள் தம்முள் தாமே இட்டுக்கொண்ட பல வகையான அடிமை விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை. இப் பெரிய நிலப்பரப்பில் உள்ள மக்களில் ஒருபுறத்து மக்கள் அரசியல் உரிமையின்றியும், ஒருபுறத்து மக்கள் பொருளியல் உரிமையின்றியும், ஒருபுறத்து மக்கள் குமுகாய உரிமை இன்றியுமே கிடக்கின்றனர். தமிழகத்து மக்களோ குமுகாயம், அரசியல், பொருளியல் எனும் முத்துறையிலும் மூவகை விலங்குகளால் பிணிக்கப்பட்டு, உரிமையின்றிக் கிடக்கின்றனர். இக் கருத்து தமிழர் எனக் கூறப்படுபவர் பலருக்கும்கூட ஒப்புதலையாய் இராது என்பதை அறிவோம். ஆனால் அவ்வாறான ஒரு நிலையே அவர்கள் அவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கு ஒரு பெரிய சான்றாகும். அடிமை தன்னை அடிமை என்று உணராத வரையில் தான் அடிமைப்பட்டுக் கிடப்பதை ஒப்பான் அல்லனோ? அவ்வாறு உணர்கையில்தான் உரிமை உணர்வு முளைக்கின்றது. அதுவே பின் விடுதலை வேட்கையாகக் கிளைக்கின்றது.
தமிழர்களைப் பொறுத்தமட்டில் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய குமுகாய, அரசியல், பொருளியல், விடுதலைகளுக்குத் தடையாக விருப்பவர் முறையே பார்ப்பனரும், வடவரும், அவருள்ளிட்ட பெரும் முதலாளிகளுமே ஆவர். இம் முத்துறையிலும் இம் மூவரும் இன்று பகைவர்களாகவே இருந்து வருகின்றனர். குமுகாய நிலையில் தமிழர்களை அடிமைப்படுத்தியிருப்பன குல, சமயக் கட்டுப்பாடுகளும் அவற்றின் வழியாக வந்த அறியாமையும்
ஆகும். அரசியல் நிலையில் இவர்கள் முழு ஆட்சியுரிமையின்றியும், மொழி உரிமையின்றியும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். பொருளியல் நிலையில் இவர்கள் வடநாட்டுத் தென்னாட்டு முதலாளிமார்களால் நலம் உறிஞ்சப்பட்டு ஏழைமை நிலையுற்றுக் கிடக்கின்றனர். புறத்தே பார்ப்பவர்களுக்கு இம் முத்துறையிலும் இவர்கள் பிற மக்களைப் போலவே உரிமை பெற்றிருப்பதாகத் தோன்றினும், அகத்தே நோக்குவார்க்கே இவர்களின் இரங்கத் தக்க நிலை தெளிவாகத் தெரியவரும். இப்பொழுது அரசியல் கட்சிகள் எல்லாம் சேர்ந்து எழுப்பும் சிக்கல்களுக்கெல்லாம் தனிப்பட்ட எவரும் பொறுப்பாகாதது மட்டுமன்றி, இம் மூன்று வகையான அடிமை நிலைகளே முழுப் பொறுப்பான பெருத்த காரணங்களாகும். மேலே கூறப்பெற்ற இம்மூன்று விடுதலைகளிலும் தமிழர் பெறவேண்டிய முதல் விடுதலை குமுகாய விடுதலையே ஆகும். குமுகாயத்தில் ஓரின மக்கள் சமநிலைப்படுத்தப்பட்டாலன்றி அவர்களாலேயோ, அவர்களைத் தூண்டிவிட்டோ நடத்தும் அல்லது நடத்தப்பெறும் எந்தவகையான அரசியல், பொருளியல் போராட்டமும் நேரடியாக வன்றி மறைமுகமாகவேனும் ஒடுக்கப் பெறும் என்பது வரலாறு நமக்குக் காட்டுகின்ற உண்மை. இதற்கு, வழிவழியாய் ஆங்காங்குள்ள வலிந்த அல்லது பெருத்த சூழ்ச்சிகளைக் கொண்ட ஓரினத்தால் ஆட்டிவைக்கப் பெற்றுக், குமுகாய நிலையில் இன்னும் முன்னேற்றம் கொள்ளாத தமிழர் இனமும், ஆப்பிரிக்க அமெரிக்க நாட்டு நீக்ரோ இனமும் கண்காணும் சான்றுகளாகும்.
இவ்வுண்மைகளை இன்னும் சற்றுத் தெளிவாகப் பார்ப்போமானால், பார்ப்பனரின் வலிந்த சூழ்ச்சியும் வல்லாண்மையும் குமுகாயத் துறையில் மட்டுமின்றி, அரசியலிலும் பொருளியலிலுங்கூட மிகவும் மேம்பட்ட போக்கிலேயே ஊடுருவி நிற்கின்றன. இதற்கு மாறாக இன்று வடநாட்டில் பார்ப்பனரைவிட வடவரே மிக்க அதிகாரமுற்றவர்களாக இருப்பதால், பார்ப்பனரின் போராட்டம் சமயம் என்ற போர்வையிலோ அறம் என்ற பெயரிலோ இக்கால் நடத்தப்பெற்று வருகின்றது.
தமிழர் குமுகாய விடுதலையின்றிக் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்றனர். அதற்கு முன்பு இருந்தே ஆரியப் பார்ப்பனர் அக்கால் இருந்த ஏமாளி அரசர்களையும், இரக்கவுணர்வால் பேதையராக விருந்த பொது மக்களையும் தம்வயப்படுத்தி வேள்வி, கணியம் முதலிய மந்திர மாயங்களாலும், ஏமாற்று அரசியல் நடவடிக்கைகளாலும் தமிழரை முற்றும் அடிமைப்படுத்தினர். தூய்மையுடன் தனித்து வழங்கிய
தமிழ்மொழியையும் கலப்புற்றதாக்கி மொழிக்கலப்பும், கருத்துக் கலப்பும், இனக்கலப்பும் செய்து கையோங்கினர். அன்றிலிருந்து படிப்படியாகத் தமிழர் தாழ்ந்தனர். இவற்றிற்கெல்லாம் அவர்களின் மறைநூல்களிலும் தமிழர் தம் பண்டைய நூல்களிலும் மறுக்கமுடியாச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. அன்று அவர்கள் ஏற்படுத்திய குலச் சேற்றிலிருந்தும், சமயச் சகதியிலிருந்தும் தூய இறைநெறியரான தமிழரை விடுவிக்கப் பல போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் அப் போராட்டங்களின் தோல்விக்கெல்லாம் முற்றும் முழுக் காரணமாயிருந்தவர்கள் தமிழர்க்குள்ளேயே முளைத்த வீடணர்களும், பிரகலாதன்களும் . ஆகிய கோடரிக் காம்புகளே! ‘தமிழ்மொழியினும் தேவமொழியான வடமொழியே உயர்ந்தது’ என்று நக்கீரனிடத்துச் சொற்போரிட்ட குயக்கொண்டான் முதல், ‘சமற்கிருதம் கல்லாமற் போயின் பொறியியல் அறிவை முற்றும் பெற வாய்ப்பில்லை’ என்று இக்கால் திரிபுரை கூறித் திரியும் சென்னைத் தொழில் நுட்பக் கல்லூரி இயக்குநரும், வையாபுரியின் மூன்றாம் பிறங்கடையரும், (முதலிரண்டு பிறங்கடையர் தெ.பொ.மீ.யும், அண்ணாமலை முத்துச்சண்முகமும் ஆவர்) ஆன முத்தையன் இவரைப் பற்றிய செய்திகளும், இவர் கூறும் துணிந்த புரட்டுகளுக்கு மறுப்பும் விரைவில் தென்மொழியில் வெளிவரும்) வரை தமிழையும் தமிழரையும் தாழ்த்திய - தாழ்த்திக் கொண்டிருக்கின்ற கோடரிக் காம்புகளே ஆகும். இப்படித் தமிழரைத் தமிழர்க்குள்ளேயே தோன்றிய ஒரு சிலரைக் கொண்டு ஆட்டுவிக்கவும், அடிப்படுத்தவும் அவ்வக்கால் ஆரியத்தலைவர்கள் பலர் தோன்றிக் கொண்டே உள்ளனர். அவ்வழித் தோன்றி, இக்கால் தமக்கும் தம் வழியினர்க்கும் புறம்பாகப் போகும் இந்திய அரசையே சேற்றிற் புகுந்த எருமை யெனக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆரியத் தலைவரே திரு. இராசாசி அவர்கள்.
திரு. இராசாசியின் அறிவும், வினைப்பாடும் என்றும் ஆரியப் பார்ப்பனர்களின் நலங்கருதியே நிற்கும் காந்த முட்கள்! அவர் காட்டும் வழி ஆரியர் வெட்டிய படுகுழிக்குத் தமிழரையும் பிற இனத்தவரையும் இட்டுச் செல்லக்கூடியதாகவே இருக்கும் என்பதில் எவர்க்கும் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டா. ஐயப்பாடு கொண்டவர் எவராயினும் அவர் தமிழராகவும் தமிழர்நலங் கருதுபவராகவும் இருக்கவே முடியாது. இதற்குக் கடந்த காலத் தமிழகத்தின் அரசியல் வரலாறும், குமுகாய வரலாறுகளுமே சான்று கூறி நிற்கும். தென்னாட்டுக் கலப்பற்ற ஆரியப் பார்ப்பனராகிய அவர் நெஞ்சம் ஆரியர்களின் வேள்விக் களரி. அவர் எழுதும்
ஒவ்வோர் எழுத்தும் ஆரியப் பார்ப்பனரின் வலிந்த ஊடுருவலுக்காக அடிக்கப்பெறும் முளைக்குச்சியே! அவர் பேசித் திரியும் ஒவ்வொரு பேச்சும் ஆரியப் பார்ப்பனர்க்காக உயிர்க்கப்படும் வலிந்த மூச்சே யாகும். அவரிடத்துக் கொள்ளும் எவ்வகையான ஒப்பந்தமும் அவர் பிணிக்கும் கட்டுக்கயிறே ஆகும்! இவற்றைத் தமிழர் கடந்த பன்னூறு ஆண்டுகளாகவும் - இன்றும் உணராமற் போயினும் இனி வரும் எதிர்காலத் தமிழர் கட்டாயம் உணர்வர் என்பதில் துளியும் ஐயமின்று.
திரு. இராசாசியின் உருவில் அல்லது அவர் பேச்சின் உருவில் வெளிவரும் ஆரியச் சாணக்கியம் இந்தியாவையே அடிமை கொள்ளும் திறம் படைத்தது. அவர் அசைக்கும் ஒவ்வொரு விரலசைவுக்கும் ஏற்ற பொருத்தமான பொருளை, பனிமலையிலிருந்து குமரிமுனை வரை ஊடுருவிக் கிடக்கும் பார்ப்பனரே அன்றிப் பிறர் அறிய ஒல்லாது. அவர் கண்ணசைவிற்கும், கையசைப்பிற்கும் தனித்தனிப் பொருள்கள் உண்டு. அவரின் அமைதிக்கும், அவர் சீற்றத்திற்கும், நகைப்பிற்கும்கூடத் தனித்தனிப் பொருள்கள் பார்ப்பனர் தம் அகரமுதலிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சுருங்கக்கூறின் இந்தியப் பார்ப்பான் எந்த உருவில் இருந்தாலும், எந்த இடத்திலிருந்தாலும், எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்கு இராசாசியின் அசைவிற்கும் பெருத்த தொடர்புண்டு. மொத்தத்தில் அவர் இக்கால ஆரியத் தலைவர். அவர் புன்னகை தமிழர் நலத்திற்கு முன் துரக்கப்பெறும் வாள் ஒளி! அவர் பாராட்டு தமிழர்க்கு வெட்டப்பெறும் படுகுழி! இந்தியப் பெரும்பரப்பில் உள்ள ஆரியப் பார்ப்பனரால் தமிழர் பெற்ற தொல்லையையும் துயரத்தையும் போல் வேறு எந்த இனத்தினரும் பெற்றிலர். அவர் தொடர்பால் தமிழர் இழந்த செல்வங்கள் பலப்பல. அவர் இழந்த பண்பாடுகள் பற்பல; நாகரிகங்கள் பற்பல; செப்பங்கள், செம்மாப்புகள், ஒழுகலாறுகள், உயர்வுகள் பற்பல! அவர்தம்மர்ல் தமிழர் வரலாற்றில் ஏறிய கறையை எத்தனை எத்தனை மறைமலையடிகள், திரு.வி.க.கள், பெரியார் இராமசாமிகள், அண்ணாத்துரைகள் தோன்றி அழுத்தி அழுத்தித் துடைத்தாலும் போக்கிவிட முடியாது. இவ்வுலகிலேயே பண்டைய கிரேக்கர், எகுபதியர் முதலிய பழைய நாகரிக மக்கள் பெற்ற பெருஞ்சிறப்புகளைவிடத் தமிழர் பெற்ற சிறப்புகள் ஏராளம் ! கொள்ளையோ கொள்ளை! ஆனால் அத்தனை பெருமைகளும், வளர்ந்து மணம் பரப்பிய அறிவு நிலைகளும் நாகரிக முகடுகளும் ஆரியப் பார்ப்பனர் என்ற நாடோடிக் கூட்டத்தால் சிதைக்கப் பெற்றன. இதனால் உலகமே
தனக்கு முன்னோடியாக இருந்த ஒர் ஒப்புயவர்வற்ற மீமிசை மக்களினத்தை இழந்துவிட்டது என்று சொல்லலாம். இவையெல்லாம் வெறும் கற்பனையோ, கதையோ, கனவுகளோ அல்ல. ஏக்கப் பெருமூச்சுகள்! வரலாற்றுக் குமுறல்கள்! கண்ணிரால் எழுதப்பெற்ற பாவிய வரிகள்! அம்மாவோ இத்துணைச் சிறப்பு வாய்ந்த மக்களின ஒவியங்கள் அத்தனையும் இன்று அழிக்கப்பெற்றன. அவ்வாறு அழித்துவரும் ஒரு வலிமை வாய்ந்த - கரவு வாய்ந்த - ஏமாற்று நிறைந்த ஆரிய இனத்தின் கடைசித் தலைவராக இருப்பவரே இராசாசி! இவரைத் தமிழர்கள் இனங் கண்டுகொள்ள வேண்டுமென்பதற்காகவும், இவர் முயற்சிக்கு என்னருமைத் தமிழர்கள் துணைபோகக் கூடாது என்பதற்காகவுமே இவற்றை இங்கெடுத்துக் கூறவேண்டி வந்தது.
ஆரிய இனத்தின் தனித் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் இராசாசியின் அரசியல் போராட்டங்கள் தனி வடிவம் பெற்றவை. அவர் பொருளியல் போராட்டங்கள் தனி உருவம் சான்றவை. அவர் கூறும் சீர்திருத்தங்களுக்கு அடியில் என்றுமே ஆரிய வேர் கிளைத்துக் கொண்டிருக்கும். இவற்றை மனத்தில் உட்கொண்டே அவர் போக்குக்குப் பொருள் காணவேண்டும்.
இக்கால் இந்தியாவில் எழுந்துள்ள அரசியல் அழுகல்கள் இந் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பேராயக் கட்சியின் தான்தோன்றித் தனமான - முரட்டுத்தனமான போக்கின் விளைவு என்பதை எவரும் எந்நிலையிலும் மறந்துவிட முடியாது. ஆனால் அத்தகைய விளைவையே தங்களுக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொண்டு, குழம்பிக் கிடக்கும் மக்களைத் தங்கள் கொட்டாரத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகளையே நாம் மறக்கமுடியாமல் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது; கண்காணிக்க வேண்டியுள்ளது. குமுகாய உரிமையற்றுக் கிடக்கும் மக்களிடம் குமுகாய விடுதலை நாடகமாடியும், அரசியல் உரிமையற்றுக் கிடக்கும் மக்களிடம் அவர்களுக்குப் புரியாத அரசியல் பாட்டிசைத்தும், பொருளியல் தாழ்ச்சியுற்றுக், காய்ந்த வயிறும் மேய்ந்த நலனுமாக ஒட்டியுலர்ந்து பேசவும் திறனற்ற மக்களிடம் - தங்களுக்குற்ற தேவைகளைத் தாங்களே கேட்டுக் கொள்ளவும் தெரியாத மக்களிடம் - செல்வச் சிறப்புகளை அழகுபெற எழுதிக் காட்டியும் நடித்துக் காட்டியும் ஆட்சி நாற்காலிகளைப் பிடிப்பதற்கு இராப்பகல் காத்துக் கிடக்கும் வேட்டை நாய்களையே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பதவியெனும் பச்சை
அரத்தத்திற்குப் பணம் என்னும் பலிக்கடாக்களைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், அவ்வரத்தம் குடிக்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஆரிய நரிகளை நாம் இனங் காட்ட வேண்டியுள்ளது. அது நாம் நம் தலைமேலே எடுத்துப் போட்டுக் கொண்ட கடமைகளில் தலைமை யானதும், இன்றியமையாததுமாகும்.
ஆரியப் பார்ப்பனர் தம் வேராக நின்று இயங்கும் இராசாசி வேண்டும் மாற்றங்கள் இரண்டு. ஒன்று வழிவழிக் காலமாகத் தம் திருமறைப் பட்டயத்தின் வைப்பூட்டாக இருந்துவரும் தமிழகத்தில், தம் செல்வாக்குக் குறைக்கப்பட்டு வருதலை - குமுகாய நிலையில் விழிப்பேற்பட்டு வருதலைத் தவிர்த்துத் தம் இனத்திற்குக் காப்பேற்படுத்துவது. இரண்டு, தமிழகத்தின் இந்நிலைக்குச் செவி சாய்த்துக் கொண்டு வரும் வடவரின் ஆட்சி வண்டியில் தம் இனத்தை ஏற்றிவைப்பது. இவ்விரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் அடிப்பதற்கே திரு. இராசாசி அவர்கள் காலத்தையும் கருவியையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்.
தமிழர்கள் இந்நிலையில் புரிந்துகொள்ள வேண்டிய சில விளக்கங்கள் இவை. நாம் குமுகாய நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது பார்ப்பனர்க்கு அரசியல் நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது வடவர்க்கு; பொருளியல் நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது அப் பார்ப்பனரும், வடவருமே ஆண்டு நுகர்ந்துவரும் முதலாளித் தன்மைக்கு என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளல் வேண்டும். இதை இன்னுங் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நமக்கு முதல் பகை பார்ப்பனரே! இரண்டாவது பகையே வடவர்! பார்ப்பனரின் பகை உட்பகை. வடவரின் பகை புறப்பகை. பார்ப்பனரின் உட்பகையே நமக்கு இன்று நேற்று ஏற்பட்டதன்று; கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சுற்றிச் சூழ்ந்து வருவது; பின்னிப் பிணித்து வருவது. வடவர் பகை நமக்குக் கடந்த பதினேழு ஆண்டுகளாகவே ஏற்பட்டு வருவது. அன்றைய வடநாட்டுப் பகை வேறு, இன்றைய வடநாட்டுப் பகை வேறு. அன்றைய பகை ஆரியப்பகை; இனப்பகை. இன்றைய பகை ஆட்சிப்பகை. தமிழர்க்கு நலம் பயவாத இந்த இரண்டு பகைகளும் வெட்டிப் புதைக்கப்பட வேண்டியவையே ஆகும். அவ்வாறு செய்யாவிடில் தமிழர் இனம் இன்றிருக்கின்ற நிலையினின்று இன்னும் தாழும் என்பதும், தமிழ்மொழி இன்னும் சிதைக்கப்பட்டு ஒழியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும். இந்த
உண்மைகளைப் புரிந்துகொண்டால், நாம் இந்த இடர்ப்பாடான நேரத்தில் செய்ய வேண்டுவது என்ன என்பது திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.
- தன்துணை யின்றால், பகையிரண்டால்; தானொருவன்
- இன்துணையாக் கொள்கவற்றில் ஒன்று.
பகைத்திறந்தெரிதலில் வருகின்றது இக்குறள். எதிர்க்கப்படுவோன் தான் ஒருவன்; அவன் தனக்குத் தன் இனத்தைத் தூக்கி நிறுத்தும் துணைவன் ஒருவனுமிலன்; அவனுக்கு உற்ற பகையோ இரண்டு. இந் நேரத்தில் அவன் செய்ய வேண்டுவது என்ன? அந்த இரண்டு பகைகளிலும் எந்தப் பகை ஓரளவு இனிய பகை; அல்லது எளிதே களையத் தகுந்த பகை என்பதைப் பார்த்தல் வேண்டும். அவ்வாறு பார்த்து எப்பகை எளிதே களையத் தக்கதோ அப்பகையையே துணையாகக் கொண்டு தனக்கு நெடுநாளைய பகையாகிய, தன் உட்பகையாக இருந்தே நலங்கெடுக்கும் ஒரு பகையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே குறள் நமக்குக் காட்டும் நெறியாகும். இக்காலத் தமிழர்களின் இடர்ப்பாட்டிற்கு, முன் கூட்டியே வழிகாட்டியாக எழுதி வைக்கப்பட்டதாகத் தெரிகின்றது இக்குறள்.
வடவரின் அரசியல் வல்லாண்மையால் நமக்கு நேரடியான - முழுமையான தீங்கு இன்னும் ஏற்பட்டுவிடவில்லை. அவரின் - அல்லது அவர் ஏறியுள்ள பேராயக் கட்சியின் வண்டி இன்னும் நமக்கு எதிர்ப்போக்காக நிறுத்தப்படவே இல்லை. மொழித் துறையிலும் அதன் உட்கிடையான அரசியல் துறையிலும் வடவரின் கை இன்னும் ஓங்கிவிடவில்லை. அப்படியே அஃது ஓங்கினாலும் தமிழர்களின் பெருத்த கிளர்ச்சியால் அவ்வாட்சி வண்டி கவிழப் போவது உண்மை! ஆனால் அவ்வாறு கவிழ்க்கப்படும் ஆட்சி வண்டியில் தமிழனே ஏறவேண்டுமேயன்றி ஆரியப் பார்ப்பனரைத் தப்பித் தவறியும் ஏற்றிக்கொள்ளுதல் கூடாது. அவரைப் பற்றிய ஐயம் தமிழர்க்குத் தீர இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போதல் வேண்டும். அத்துணை அளவில் அவர்களின் நச்சுச் செய்கை தமிழர்களை நிலைகுலைத்திருக்கின்றது. எனவே, தமிழன் தான் கைப்பற்றிய அரசியல் வண்டியில் தானே ஏறத் தகுதி பெறும் வரை - தன்னுணர்வும் தன்னாற்றலும் தன்னாண்மையும் பெறும் வரை, இவன் நமக்கு நன்றாகத் தெரிந்த கொள்ளையனோடு கூட்டுப் போதல் பல்லாற்றானும் தீங்கு பயப்பதே ஆகும். அக்கூட்டு எவ்வகைக் கூட்டாயினும் நமக்குத் தீதே! ‘குடியாட்சி அமைப்பில், தேர்தல் விளையாட்டில் நாம் கலந்துகொள்வதைத் தவிர்த்தல் இயலாது; அப்படித் தவிர்ப்பது அரசியலாகாது’ என்று அரசியலை
மட்டும் பேசிக்கொண்டு தொடைதட்டித் திரியும் தமிழர்கள் ஒருவேளை படைதிரட்டிப் போனாலும், அப்படையில் ஆரியப் பார்ப்பனரின் சாணக்கியத்தனத்திற்கு இடங்கொடுக்கவே கூடாது என்பதே தமிழர்களுக்கு நாம் விடும் எச்சரிக்கை.
அண்மையில் புதுத்தில்லியில் நடந்த தன்னுரிமைக் கட்சி மாநாட்டில் திரு. இராசாசி அவர்கள், “தன்னுரிமை(சுதந்திரா)க் கட்சியினர் பொறுமையுடன் பேராயக் கட்சியின் கொடுங்கோல் ஆட்சியையும் ஊழலையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தை ஓர் அறவழியான போராட்டமாகவும், சமயக் கடமையாகவும் கருதுதல் வேண்டும். இஃது எனக்கு ஒரு கட்சியின் அரசியல் போராட்டம் அன்று; அறவழிப் போராட்டமே”. (அதாவது தர்ம, தார்மீக, மதப் போராட்டமே) என்றும், சென்னையில் நடந்த அவர் பிறந்த நாள் கூட்டத்தில், “பேராயக் கட்சியைக் கவிழ்ப்பதும் நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் நடக்கவே வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்குறிப்பில் அவர் நடத்துவது ஒரு கட்சியினர் அரசியல் போராட்டம் அன்று என்ற குறிப்பிற்கு, இராசாசியின் அகர முதலியில் ‘ஒர் இனத்தின் தன்னுரிமைப் போராட்டம்’ என்றே பொருள். அந்த இனம் பார்ப்பன இனமே! அடுத்து, இரண்டாவது குறிப்பில் உள்ள ‘நல்ல ஆட்சியை ஏற்படுத்துவது’ என்னும் கூற்றுக்குப் பார்ப்பன ஆட்சியை ஏற்படுத்துவது என்பதே. மற்றபடி அவருடன் சேர்ந்துள்ள கட்சிகள் யாவும் அது தான், தானே என்று எண்ணி இறுமாப்பதில் பொருளில்லை. பார்ப்பனர் இந்தியா முழுவதும் - ஏன் உலகம் முழுவதுமே உள்ளனர். வேறு வேறு மொழிகள் பேசிக் கொண்டும் வேறு வேறு உடைகள் உடுத்துக்கொண்டும், வேறு வேறு கொள்கைகளை கூறிக் கொண்டும் இருந்தாலும் அவர்களின் உள்நோக்கமெல்லாம் பிறரைத் தங்கள் காலடிகளில் கிடத்திக் கொள்ள வேண்டும் என்பதே! இங்கு வந்து ஒரு பார்ப்பான் தமிழ் சமற்கிருதத்திலிருந்து தோன்றியதென்பான். உருசியாவுக்குப் போய் ஒரு பார்ப்பான் உருசிய மொழியில் சமற்கிருதச் சொற்களும் இருக்கின்றன பார்த்தீர்களா? என்பான். இப்படி உலகமெங்கும் பரவி, வாய்ப்புக் கிடைத்தவிடங்களிலெல்லாம் தங்கள் வால்களை ஆட்டிக் காட்டும் இனம் பார்ப்பன இனம், திரு. இராசாசி அந்த இனத்தின் தனிப் பெருந்தலைவர். அவர் பேச்சுகளையும் உளக் குறிப்புகளையும் உலகெங்கணும் எடுத்துச் செல்லப் பல்லாயிரக்கணக்கான வாய்ப்பு வகைகளை அவர்களே உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவ் வினத்தால் உலகில் ஏற்பட்ட மாறுதல்களோ எண்ணிலடங்காதவை யாகும். வீழ்ந்த அரசுகள் பல! வீழ்த்தப் பெற்ற பேரரசர்கள்
பலர். உலகத்தின் மாபெரும் மறவன் அலெக்சாந்தரும் அவ்வினத்தின் நச்சுச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டான் எனின், இவ் வடவர்கள் எம் மூலை ? அவர்களால் மூவாயிரம் ஆண்டு ஊடுருவலாலும், போராட்டத்தாலும் முற்றும் வீழ்த்தப்படாத தமிழினத்து அவ்வப்பொழுது தோன்றிய பெருந்தலைவர்களும் பேரறிஞர்களுமே காரணம்! ஆரியர்கள் குடம் குடமாகக் கொட்டிய நச்சுக்குத் திரிந்திடாத உயர்தனிப்பால் தமிழ் மொழியே! இதை நாம் உணர்வாலோ, தமிழ்மேல் வைத்த பற்றாலோ, தமிழர்மேல் வைத்த கரிசனத்தாலோ கூறவில்லை. மெய்யுணர்வோடு, பகுத்தறிவுக் கண்கொண்டு, அரசியல் குமுகாயப் பாடங்கொண்டு கூறும் உண்மைக் கருத்துகளாகும்.
எனவே இந்திய நாட்டு அரசியலில் திரு. இராசாசி அவர்கள் ‘ஓர் அரசியல் நரி’ என்றும், எவர் ஆட்சிமேடை ஏறினும் அவர் ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார் என்றும், தமக்கும் தம் இனத்திற்கும் தக்காரையே அவர் ஆட்சியில்’ அமர்த்த விரும்புவர் என்றும், அல்லது அப்படி அமர்ந்தவரைத் தமக்கும் தம் இனத்திற்கும் நலஞ் செய்வதற்கே ஆட்படுத்துவர் என்றும், இவ்விடர்ப்பாடுகளிலும் இடிபாடுகளிலும் தமிழர் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருப்பதே நன்று என்றும் அறிந்துகொள்க.
- தென்மொழி, சுவடி : 4, ஓலை : 11, 1966