உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/வடவரும் பார்ப்பனரும், நாமும்

விக்கிமூலம் இலிருந்து

வடவரும் பார்ப்பனரும் நாமும்!

மிழகம் தனிப் பண்பாடும், மக்கள் வரலாறும், உலகிற்கே உயர்ந்த நாகரிகம் கற்பிக்கும் ஒப்புயர்வற்ற ஒரு மொழி வரலாறும் கொண்ட ஒரு நாடு. இஃது இறுதிக் காலத்திலன்றிப் பிறிதோர் இனத்திற்கு எப்பொழுதும் அடிமைப்படாத நிமிர்ந்த அரசியல் வரலாறு கொண்டது. இந்திய வரலாற்றை எழுதிய ஆரியச் சார்பினரும் பிற மேனாட்டினரும் இதன் வரலாற்றைத் தனியே ஆய்ந்தும், நடுநிலையோடும் இதுவரை எழுதவில்லை. எழுதிய சிலரும் வரலாற்றுக்கு அடிப்படையான மொழி, இனம், பண்பாடு, நாகரிகம் என்ற வரலாற்றுப் பாகுபாட்டின் அடிப்படையில் எழுத முற்படவே இல்லை; எனவே இந்தியப் பண்பாடே தமிழகத்தின் பண்பாடாகவும், சமற்கிருதமே தமிழகத்து வழங்கும் மொழிகளுக்கெல்லாம் மூல மொழியாகவும், தமிழினம் ஆரிய இனத்தால் கலப்புற்ற ஓர் இனமாகவும், இதன் நாகரிகம் ஆரிய நாகரிகமாகவுமே காட்டப்பட்டு வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பெரிய சூழ்ச்சியினைக்கண்டு கொள்ளவும், விழிப்படையவும் இதனின்று விடுபடவும் தமிழர் இன்று முற்பட்டு விட்டனர். இனி, இதைத் தடுத்து நிறுத்த உலகத்தின் எந்த ஒரு மாந்த இனத்திற்கும், ஆட்சி வல்லாண்மைக்கும் ஆற்றல் இல்லை. இவை வெறும் சொற்களல்ல. உணர்ந்த உண்மை; முடிந்த முடிவு.

இந்தியாவில் இக்கால் நிலவிவருவது குடியரசாட்சியே என்றாலும், இந்தியு அரசியலை ஆட்டிப்படைக்கும் மாபெரும் ஆற்றல்கள் இரண்டு. ஒன்று வடவரின் அரசியல் வெறி. இரண்டு ஆரியப் பார்ப்பனரின் சமயவெறி, வடவரின் அரசியல் வெறியே

குடியரசு நெறியாக உள்நாட்டினர்க்கும் வெளிநாட்டினர்க்கும் வலிந்து காட்டப்பெற்று வருகின்றது. ஆரிய பபார்ப்பனரின் வேதப் பிராமணணரின் இந்து சமய வெறியே, இந்தியரின் பண்பாட்டுச் சிறப்பாகவும், உயர்ந்த மக்கள் நெறியாகவும் வலியுறுத்திப் பேசப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது. இவர்கள் இருவர் தம்போக்குக்கும் முயற்சிகளுக்கும் ஏற்ற படைக்கருவிகளாக இருப்பன செய்தித்தாள்கள், வானொலி, சமய குலப்பாகுபாடுகள், பகுத்தறிவற்ற பழக்க வழக்கங்கள். அண்மையில் வெளிவந்த செய்திப்படி, இந்தியாவில் ஏறத்தாழ 5000 ‘சாதியமைப்புகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வேறுபாடுகள் அத்துணையும் இயற்கையாகவே ஏற்பட்டன என்று சொல்லமுடியாது. ஆரியப் பார்ப்பனர் வருகைக்குமுன் தமிழர்களைப் பொறுத்த அளவில் தொழில் பாகுபாடுகளே இருந்தன என்றும், அவற்றுள் உயர்வு தாழ்வு வேறுபாடுகள் கிடையாவென்றும் வரலாற்று நூல்கள் குறிக்கின்றன. பார்ப்பனரே இவற்றுள் ‘வருணாசிரம தர்மம்’ என்ற இனவேறுபாட்டு முறையைப் புகுத்தினர் என்பதாகவும் அவை கூறுகின்றன. இவற்றை அவர்கள் புகுத்தியதன் நோக்கம் சிறுபான்மையரான தங்கள் இனத்தைப் பெரும்பான்மையரான தமிழரினம் அழித்து ஒழித்துவிடாமல் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும், சாதி வேற்றுமைகளால் பாகுபாடு செய்யப்பெற்ற அச்சிறு சிறு கூட்டங்களிடையில் தம் செல்வாக்கை வலுப்படுத்தவுமே என்றும் மேனாட்டாசிரியர் சிலர் துணிந்து குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்குப் பயன்படாத ஆட்சியினை எவ்வகையாலும், எவரைக் கொண்டேனும் ஒழித்துவிட வேண்டும் என்பதாகவே, பார்ப்பனர் தம் வேதங்கள், உபநிடதுகள் முதலியன குறிப்பிடுகின்றன. இன்ன ஓரை (இராசி)யில் பிறப்பவன் சூத்திரனாகவே பிறப்பான். அவன் பிராமணர்களுக்குக் கேடுகளையே செய்வான் என்பதாகக் கூட அவர் தம் கணியநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்குக் கல்விக் கண்களைத் திறப்பதே பெரிய கரிசு(பாவம்) என்றெல்லாம் அவர்தம் நெறிநூல்கள் சாற்றுகின்றன. இவற்றிற்கெல்லாம் சான்றுகள், அடிப்படைகள் ஆயிரக்கணக்காக உள்ளன. அவற்றை யெல்லாம், இங்கெடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை ஒரு பெரிய நூலாகவே விரியும்; மேலும் அவைபோன்ற எடுத்துக்காட்டுகள் ஏற்கனவே தென்மொழியில் பலமுறை வெளியிடப் பெற்றுள்ளன.

மேலே கூறப்பெற்ற நெறிமுறைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் பார்ப்பனரால் இன்றும் செவ்வையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவற்றைத் தம் மக்கள் என்றும் மறந்து போகாமல் கடைப்பிடித்து

அவ்வொழுக்கங்களில் சிறிதும் வழுவாது நடைபெற வேண்டும் என்பதற்காகவே காஞ்சிமுதல் காசி வரையுள்ள நூற்றுக் கணக்கான சமய 'பீடங்களும்' மடங்களும், அவற்றின் வெறிபிடித்த தலைமைகளும், அவற்றிற்குரிய கோடிக் கணக்கான சொத்துகளைக் கொண்டும், பொண் வெள்ளி முதலிய மதிப்புள்ள நகைநட்டுகளைக் கொண்டும் ஆயிரக்கணக்கான வேலி விளைச்சல் நிலங்களைக் கொண்டும் வேலை செய்தும், காப்பாற்றியும் வருகின்றனர். இவையும் போதாவென்றும் இராசாசி முதலிய அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்த ஆற்றல்களை முழுவதும் பயன்படுத்தி, அவர்தம் குலங்களுளம் கூறுபாடுகளும் மயிரிழையும் பிறழாது நடைபெற நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வகையாகப் பொருளாலும் அதிகாரத்தாலும்.துணையாக நின்று வருகின்றனர். இவற்றின் பயனாக இவர்கள் எண்ணியது எண்ணியபடி இயங்கவும் இயக்கவும் போதுமான வலிமை மிக்க செய்தித் தாள்கள் இயங்குகின்றன. நீங்கள் படிக்கின்ற இத் ‘தென்மொழி’ ஏட்டை அச்சிடுகின்ற பொறியின் விலை மதிப்பைப்போல் ஏறத்தாழ 2000 மடங்கு விலைமதிப்பும் ஆற்றல் வாய்ந்ததுமான பொறிகளாலேயே, பார்ப்பனர்களின் Indian Express, Mail, தினமணி, மித்திரன் முதலிய நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களும், கல்கி, ஆனந்த விகடன் முதலிய ஆயிரக்கணக்கான கிழமை, மாத இதழ்களும் அச்சிடப்பெற்று வெளிவருகின்றன என்று நீங்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இவற்றுடன் நெய்வேலி, உயிர்முறிக் குழும்பு(L.I.C.) வானொலி முதலிய ஆயிரக்கணக்கான அரசினர் தொழிலகங்களிலும், பிற தனியார் தொழிலகங்களிலும் நூற்றுக்கு 70, 80 புழுக்காடு பார்ப்பனர்களே நீக்கமற நிறைந்துள்ளனர். இவையுமன்றி எங்கெங்குத் தமிழர் திறமையுடன் செயல்படுகின்றனரோ, அவ்விடங்களிலெல்லாம் பார்ப்பனப் பெண்டிர்களும், மேலாளர்களும் திறமையுடன் ஊடுருவல் செய்து அவர்தம் வல்லாண்மைத் திறத்திற்கும் செயற்பாட்டிற்கும் நிலையான தடையிட்டு வருகின்றனர். பெரும் புகழ்பெற்ற புதின ஆசிரியர் ஒருவர் தம்பால், அழகும் இளமையும், கல்வித்திறமும் வாய்ந்த பார்ப்பனக் கன்னிப் பெண் ஒருத்தியை, அவருக்குத் துணையாக மாத இதழ் நடத்தும் பார்ப்பனக் கூட்டம் ஒன்று அனுப்பி வைத்ததும், அப்பெண் அவருக்கே இரண்டாம் மனைவியாக அமர்ந்துகொண்டு அவர் எழுதிவரும் நூல்களிலெல்லாம் கருத்துகளிலெல்லாம் தன் இனத்தின் திருவேலைகளைச் செய்து கொண்டிருப்பதையும், அவ்வடிப்படையில் இயங்கும் தமிழ் எழுத்தாளர் பலர் அறியார்.

இவ்வாறு எங்கும் எத்துறையிலும் அவர்கள் நீக்கமற ஊடுருவி, ஊக்கமுற உழைத்து அவர்தம் இன முன்னேற்றத்தை ஆக்கமுறச் செய்வதைப் பெரும்பான்மைத் தமிழர் இன்னும் உணர்ந்திரார். அவ்வாறு அவர்கள் ஊடுருவி நிற்பதற்கு அவர்களுக்கிருக்கும் சூழ்ச்சி வாய்ந்த மூளைத்திறனும், கலையுணர்வும் கரவும் பொதிந்த நடிப்பும், அன்பொழுகுமாறு பேசும் பேச்சும் தேவையான பொழுது நாணத்தையும் பண்பாட்டையும்கூட கைவிட்டுவிட்டு மேற்செல்லும் வினைத்திறனுமே காரணங்களாகும். இவற்றில் ஒன்றேனும் நம் தமிழரால் இன்னும் செப்பமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை. சூழ்ச்சி நமக்கு எதிராகச் செயல்படும் பொழுதில் நாம் நடுநிலையைக் கையாள வேண்டிய தேவையில்லை. இனி, இவற்றையெல்லாம் இங்கு எதற்காகக் குறிப்பிடுகிறோமென்றால், நம்மைக் கீழறுக்கும் வேலை, எத்துணை ஆற்றலொடும் முடுக்கத்தொடும் இந்திய ஒற்றுமை, தேசியம் என்ற பொன்முலாம் பூசப்பட்ட பெயர்களால் செயற்படுத்தப் பெறுகின்றது என்பதை உணர்த்திக்காட்ட வேண்டியே ஆகும்.

இவ்வாறு, இந்திய ஆட்சி என்பது வெளிப்படையாகக் குடியரசு எனப்பட்டாலும், உள்முகமாகப் பார்ப்பனராலும், வடவராலும் பிற இனங்களை ஆரியத்தால் ஆளப்படுகின்ற ஓர் ஆட்சியாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் மொழி, இன, பண்பாடு முதலிய அடிப்படைக் குமுகாய உரிமைகளை அழித்துக்கொண்டே வாழ வேண்டியுள்ளது. இவ்வடிப்படை உரிமைகளை முற்றும் இழந்துகொண்டு தமிழரினம் வாழ்ந்துகொண்டிருப்பதைவிடத் தன்னுரிமை பெற்றுச் செத்துப்போவது எவ்வளவோ மேலென்று கருதவேண்டி உள்ளது.

தமிழர்களில் ஒரு சாராரும், இந்தியர்களில் பெரும்பான்மையோரும் பேராயக்கட்சி போன்ற பெரிய தேசியக் கட்சிகளில் இருந்து இந்தியாவைக் குமுகாய அளவிலும், அரசியலளவிலும் சீர்திருத்திவிட முடியும் என்பது வெறும் கனவுக் கற்பனைகளாகவே முடியும் என்பது திண்ணம். அவர்கள் எத்துணையளவு சிறந்த கோட்பாடுகளையும் திட்டங்களையும் கொண்டதாகத் தங்கள் கட்சியை அமைத்துக்கொண்டாலும், அத்துணைச் சிறப்பும் வடவரின் அதிகார வெறியாலும் பார்ப்பனரின் சாதிசமய பூசல்களாலுமே சிதைத்தொழிக்கப்படும் என்பதை உண்மை அறிவுடையோர் எவரும் எளிதே கண்டுகொள்வர். குறிப்பாகப் பார்ப்பனர்க்கிருக்கும் படைக் கருவிகளான செய்தித்தாள்கள், வானொலி வாய்ப்புகள், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் சற்றும் பொருந்தி வராத இந்து சமயப் பூசல்கள், வேத புராணப் பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு, அவர்கள் எத்தகைய பெரிய அரசையும் கவிழ்த்துவிட முடியும், எத்தகைய பெரிய குமுகாய அமைப்பையும் மாற்றி அமைத்துவிட முடியும். எவ்வளவு மிகுதியாகக் கற்றவரையும் உருச்சிதைத்துவிட முடியும்; தாங்கள் எவ்வளவு புறக்கணிக்கப் பெற்றுத் தங்களை எத்துணைக் கீழ்ப்படியில் கொண்டுபோய் நிறுத்தினாலும் மேலே கொண்டு வந்து உய்வித்துக்கொள்ள முடியும். பொதுவாக தம் போக்கிற்கு மாறாக உள்ள எவ்வளவு வலிமை மிகுந்த எதிரிகளையும் முறியடித்துவிட முடியும். இவற்றை உடனடியாகச் செய்யமுடியாமற் போனாலும் படிப்படியாகவேனும் அவர்களால் செய்து கொள்ளமுடியும். இனி, இத்தகைய வேலைகளை அவர்கள் நேரடியாகச் செயய் முடியாமற் போனாலும் எதிராளர்களில் உள்ள பேராவற்காரர்களையும், பேதைகளையும், பட்டம், பதவி தசையாளர்களையும், அநுமவீடனப் பிரகலாதன் போன்றவர்களையும், வையாபுரி, முத்துச்சண்முகம், முத்தையன், பக்தவத்சலம், சுப்பிரமணியம் போன்றவர்களையும் கொண்டாவது தங்கள் உளக்கருத்துகளைச் செயற்படுத்திக்கொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்பெற்ற வகைகளிலன்றி, இன்னொரு வகையிலும் தமிழினம் தாழ்த்தப்பட்டும், சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது. அதுதான் பண்பாட்டையும், இனவுணர்வையும், தன்மானத்தையும் தம் உடற்பசிக்கும், வயிற்றுப் பசிக்கும், மனப்பசிக்கும் விலை போக்கிக் கொண்டுள்ள ஆதித்தன் போன்றவர்கள் நடத்தும் கழிசடை இனக்கவர்ச்சி இழிநிலை யிதழ்களால் காசு திரட்டும் கயமைச் செயல்கள். அவர்கள் நடத்தும் தாள்களால் தமிழ்ப்பண்பாடே கெட்டுச் சீரழிந்து குட்டிச் சுவராகிவிட்டது. இவர்களால் ஏற்பட்ட குமுகாய ஒழுக்கச் சீர்கேடுகளை, நூறு குன்றக்குடிகளும், கிருபானந்தவாரிகளும், மூலிகைமணி ஆசிரியர்களும் வந்தாலும், சொல்லாலோ, சமயவுணர்வாலோ மருந்து மனவியல்களாலோ அகற்றிவிட முடியாது என்பதை எல்லாத் தமிழர்களும் தெள்ளிதின் உணர்ந்துகொள்க. ஏனெனில் அவ்வகைத் தாள்களில் எழுதும் எழுத்தாளர்களும் கயவர்களும் தங்கள் தூவல்களைச் சாய்க்கடையிலும், மலக்கரைசல்களிலும் தொட்டு மேனாட்டு கண்ணாடித் துணிகளின் மேலேயே எழுதிவருகின்றனர்.

இவற்றை யெல்லாம் 2000 கற்களுக்கு அப்பால் உள்ள “இந்திய அரசியலில் அக்கறையும் இந்தியர் முன்னேற்றத்தில் நாட்டமும் கொண்ட ஓரிரு நடுநிலையான அமைச்சர்கள் கண்டுகொள்வார்கள் என்றோ, அக்கறை கொண்டு போக்கி விடுவார்கள் என்றோ இங்குள்ள தமிழர்கள் நம்பிக்கை கொள்ளமுடியாது. இவற்றை அரசியல் சட்டத்தாலேயே ஒன்றும் செய்துவிட முடியாது. மவத்தைக் கத்திகொண்டு அகற்றிவிட முடியாது. பார்பயனர்களால் வெட்டப்படும் படுகுழிகளையே தூர்த்து முன்னேறிப் போகமுடியாத தமிழர்கள், இப்படிப்பட்ட தமிழ்க் குமுகாயக் கேடர்களால் போடப்படும் தடைக் கற்களை அகற்ற முடியாமல் திணறிக் கொண்டுள்ளதை உண்மைத் தமிழன்பர் உணரவேண்டும்.

இவ்வாறு தமிழர் இனமே வடவராலும், பார்ப்பனராலும் தமிழ்க் கழிசடைக் கயவர்களாலும் சீரழிக்கப்பட்டு வரும் ஒரு நிலையை யாரிடம் போய்க் சொல்லி அழுவது? அரசியல் சார்பில் வடவனிடமே போய் உரிமை கேட்டு அழவேண்டியுள்ளது; குமுகாய அளவில் பார்ப்பனர்களிடமே போய்ச் சாதியை ஒழி, சமயத்தைச் சமப்படுத்து என்று அவன் உச்சிக்குடுமியையும் பூணுரலையும் பிடித்துத் தொங்கித் தொலைக்க வேண்டியுள்ளது. ஏதாவது எழுதவோ எழுதுகின்ற கருத்து விளம்பரம் பெறவோ வேண்டியிருப்பின் தினத்தந்திக் கூட்டங்களிடமே போய்க் கால்பிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் எந்த அரசியல், பொருளியல், குமுகாயவியல் அறிஞனும் எந்தக் கருத்தையும், உண்மையையும் எடுத்துச் சொல்லி எதனையும் செய்துவிட முடியாதபடி தமிழ்க் குமுகாயமே இருண்டு கொண்டுள்ளது.

ஆகவே இருண்டுள்ள இத்தமிழர் தம் உள்ளங்களில் தன்மான உணர்வை எழுப்ப எங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நாங்கள்'தள்ளப்பட்டு விட்டோம். அதற்கு ஒரே முடிவு இது தான். தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், ஒழிக்கப்பட்டும் வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்தியே ஆகல்வேண்டும். அதற்கு இந்திய அரசின் இணங்கிய தேசிய வுணர்வு தோதாய் அமையவில்லை. ஒருவேளை இப்படிப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டை உருசியனோ, அமெரிக்கனோ, சீனனோ வந்து அமைத்தால்தான் சரிவர அமையுமோ தெரியவில்லை. பூனைகள் என்றைக்கும் எலிகளுக்குத் தலைவர்களாக முடியாது. பாம்புகள் என்றைக்கும் தவளைகளுக்கு வழிகாட்டிவிட முடியாது. கோடரிக்காம்புகள் என்றும் அரியப்படும் கோடுகளையும்,

கொம்புகளையும் காப்பாற்றிவிட முடியாது. வடவர்கள் இந்தியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டே தமிழை வாழவைக்க முடியாது. பார்ப்பனர்கள் தங்கள் மேனிகளில் சுற்றிக்கொண்டுள்ள பூலுரலைக் கழற்றி நீர்ச்சிலை கட்டும் இடுப்புநூலாகப் பயன்படுத்தும்வரை, தங்கள் குடுமிகளைக் கத்தரித்துக் குப்பையில் போடும்வரை, அவற்றிற்கொரு புனிதமும் ‘புராணமும்’ கூறி மக்களை மடயர்களாக ஆக்குவதை நிறுத்தும்வரை, ஆதித்தன் போன்ற தமிழ்ப் பண்பாட்டுக் கேடர்களின் தினத்தந்தி, இராணி போன்ற தாள்கள் ஒழிக்கப்படும்வரை இந்தியாவில் தேசியமும் வளராது; தமிழர்களும் முன்னேறிவிட முடியாது. கடல் வற்றுவது எப்பொழுது கருவாடு தின்பது எப்பொழுது?

எனவே தமிழர்களுக்குள்ள ஒரேவழி தமிழகத்தைத் தனியாகப் பிரித்துக்கொண்டு தாமே ஆண்டுகொள்வதுதான். தமிழன் என்றைக்கும் அடிமையாகவே இருக்க விரும்பவில்லை. அவன் தன்னைத் தானாகவே ஆண்டுகொள்ள எண்ணங் கொண்டு விட்டான். தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எழுந்துவிட்டனர். தமிழக மறுமலர்ச்சி ஏற்பட்டே தீரும் என்று சூளுரைத்துவிட்டனர். பெரியார் ஈ.வே. இரா அவர்களும் தமிழக விடுதலைக்குச் சங்குமுழக்கம் காட்டிவிட்டார். அவர் கூட்டும் படைக்கு ஆயிரம் ஆயிரம் தமிழுணர்வுள்ள இளைஞர்களும், மாணவர்களும் தேவை. அவர்களுள் ‘தென்மொழிப் படை’ முனைமுகத்து நிற்கத் துடிக்கின்றது. முதற்பலியாகவும் தன்னை அணியப்படுத்திக் கொண்டது. இந்த உறுதியைத் தமிழக விடுதலை நோக்கிப் படை நடித்தும் பெரியாருக்கு முதல்படையலாகத் தருகின்றது. “தமிழர் படை வெல்க! தமிழ்த்தாய் அரியணையேறுக” எனக் குரலுயர்த்தித் தமிழரை அழைக்கின்றது. தென்மொழி! எல்லாரும் வம்மின் !

-தென்மொழி சுவடி : 6, ஓலை : 2, 1968