ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/எச்சரிக்கை பகைவர் இருவர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
எச்சரிக்கை! பகைவர் இருவர்!

கை எப்பொழுதும் இரண்டு வகைப்படும். அவை உட்பகை, புறப்பகை உட்பகை உள்முகமாகக் கிளர்ந்து எப்பொழுதும் உள் முகமாகவே புகைந்து கொண்டிருப்பது. புறப்பகை புறமுகமாகக் கிளர்ந்து எப்பொழுதும் வெளிப்படையாகவே கனன்று கொண்டிருப்பது உட்பகை நெருங்கியிருக்கும்; நம்மோடு உண்ணும்; உறவாடும்; நம் நலமே கருதுவது போல் பேசும்; சிலபொழுதில் சிலவற்றைச் செய்தும் காட்டும்; இவைவழி நமக்குத் தான் பகை இல்லை என்பதை ஓரளவு வலியுறுத்தியும் கூறும். புறப்பகையோ நம் நேருக்கு நேர் எதிர்முகமாக, சீனர் இந்திய எல்லைக் கோட்டுக்கு அப்புறமாக இருப்பதுபோல் நின்றுகொண்டிருக்கும்; நாம் முறைத்தால் அதுவும் முறைக்கும்; நாம் கையைத் துரக்கினால் அதுவும் கையைத் துக்கும்; நாம் கையோங்குமுன் அதுவும் கையோங்கும். காலம் வரும்பொழுது நாம் அதனை அழிக்க முனையுமுன், அதுவும் நம்மை அழிக்க முன்வரும். இவ்வாறான இரட்டைப்பகை உலகில் இருந்த, இருக்கின்ற, இருக்கும் எல்லா நாட்டு அரசுக்குமே, இனத்திற்குமே, மக்களுக்குமே எப்பொழுதும் உண்டு. இருப்பினும் பிற நாடுகளில், பிற இனமக்களில் இக்கால் இப் புறப்பகை யுணர்வு என்றும்போல் இருந்து வரினும், இவ்வகப் பகையுணர்வு ஓரளவு குறைந்துள்ளது என்றே கூறலாம். ஆனால் நம் தமிழ்நாட்டிலோ, நம் தமிழ் மக்களிடத்தோ, புறப்பகை பாராட்டும் ஆரியப் பார்ப்பனரும், அகப்பகை பாராட்டும் வீடணத் தமிழரும் முன்போலவே இன்றும் - ஓரளவு கூடுதலாகவே இவ்வகப் புறப் பகைப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாம்.

ஆரியப் பார்ப்பனர் புறத்தே தம் குடுமிகளைப் பெரும்பாலும் களைந்து ஒழுகை(கிராப்) வாரிக்கொண்டிருந்தாலும், எப்படி தம் தம் சட்டைத் துணிக்குள் உடம்போடு உடம்பாக ஒட்டிக்கிடக்கும் பூணுரலை அறுத்தெறியாமல் இருக்கின்றார்களோ, அப்படியே புறத்தே தமிழரைப் போலப் பேச்சிலும் செயலிலும் பண்பாட்டிலும் இருந்து வந்தாலும், உணர்விலும், குருதியோட்டத்திலும், மூளைச் சுணப்பிலும் இன்னும் ஆரியத்தன்மைகளை - பார்ப்பனப் புன்மைகளை - பிராமணர் செருக்கை விட்டுவிடவில்லை. இவர்கள் உடம்பில் பூணூல் புரளுவது போல் நெஞ்சில் இன்னும் வேறுபாடு புரண்டு கொண்டுதான் உள்ளது. நம் முகத்தோடு முகம் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாலும் அகத்தில் நம்மேல் உள்ள வெறுப்புணர்வு கனன்று கொண்டுதான் இருக்கின்றது. பார்ப்பனருள் நன்கு படித்தவரும் சரி; படியாதவரும் சரி; ஆண்களும் சரி; பெண்களும் சரி, எவராயினும் இந்நிலை வேறுபாட்டை நம்மால் அன்றும் பார்க்க முடியவில்லை; இன்றும் பார்க்க முடியவில்லை. பொதுவாக நாம் எப்படி உண்ணுவது, உரையாடுவது, உறங்குவது முதலிய எல்லாவற்றிலும் ஒன்றெனக் கலந்து கொண்டாலும், கொள்வது கொடுப்பது ஆகியவற்றில் நம் பிறப்பு, வளர்ப்பு, சாதி, குலம் முதலிய மலக் குட்டைகளிலேயே குளித்துக் கொள்ள விரும்புகின்றோமோ, அப்படியே ஆரியப் பார்ப்பனனும், தம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் பிராமணக் குருதியில் சூடேறும் வரை நம்மைப் பூணுரல் மேனியுடனேயே கட்டித் தழுவிக் கொள்கின்றான்; ஒட்டி உறவாடுகின்றான். ஆனால் அவன் உட்கணப்பு அவியாத தீ! ஈரம் உலராத களிமண் மனுநெறி மறவாத நெஞ்சம்! எனவே அவனுடைய பகையுணர்வு என்றும் நம் எதிரிலேயே நின்றுகொண்டுள்ளது சீனனைப் போல, ஒருகால் நாம் அமைந்துள்ள பொழுது அவனும் அமைந்துள்ளவன்போலக் காட்டிக்கொண்டாலும், நாம் கைதுரக்கு முன்பே அவன் அடித்துவிடும் மனவுணர்வில்தான் இன்றும் உள்ளான்; என்றும் இருப்பான் என்பதை உண்மைத் தமிழன் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் தெளிவான நம் புறப்பகை!

இனி, நம் அகப்பகையாக என்றென்றும் இருந்து வருகின்ற வீடனப், பிரகலாத, பக்தவத்சல, சுப்பிரமணியன்களைப் பற்றியும் நாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கவேண்டி இருக்கின்றது. இவர்கள் இனத்தால் தமிழரே எனினும் மனத்தால் ஆரியரே! இவர்கள் குடுமி வைத்துக் கொள்ளாத - பூணூல் அணியாத (ஒருவேளை அணிந்திருக்கின்றனரோ, நமக்குத் தெரியாது) பார்ப்பனர்கள். இவர்களுக்கு என்றைக்குமே எதிலுமே தம் தம் பெண்டு பிள்ளை நலன்களே குறி! அதன் பொருட்டு ஆரியப் பார்ப்பனர்க்குத் தொண்டு செய்து வாழ்வதே தம் நெறி. இத்தகையாரே நம்மைக் கடந்த மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனருக்குக் காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்! இவர்களைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் மிகமிக எச்சரிக்கையாகவே இருத்தல் வேண்டும். நாம் கடந்த தேர்தல் காலங்களிலெல்லாம் பேராயக்கட்சியைப் பற்றிப் பேசிய விடங்களில் காமராசரைத் தவிர்த்து இந்த வீடணப் பிறங்கடைப் பக்தவத்சல சுப்பிரமணியன்களைத் தனியே பிரித்துப் பேசியதன் அகக்காரணத்தை இக்கால் அப் பேராயக் கட்சியிலுள்ளவர்களே உணருங்காலம் வந்துவிட்டது. இத்தகைய தமிழ்ப்பகைவர் அரசியலில் மட்டுமன்றிக் கல்வித்துறை, ஆட்சித்துறை, தொழில்துறை முதலிய எத்துறைகளிலும் நீக்கமறக் கலந்து நிற்கின்றனர். இவர்கள் பேச்சும், ஒரளவு எழுத்தும், பெரும்பாலும் நடையும் தமிழர்க்காகவும், தமிழ்நாட்டவர்க்காகவும் அமைவது போலவே இருக்கும். ஆனால் இவர்கள் கொள்கைப்படி தமிழர் எனப்படுவோர் 80 விழுக்காடு பார்ப்பனரும், 15 விழுக்காடு இவரைபோன்ற வீடணத் தமிழரும், 5 விழுக்காடே உண்மைத் தமிழரும் ஆவார். இவர்கள் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ போய்த் “தமிழர்களைக் கண்டு உரையாடினர்” என்றாலோ, “தமிழப் பெண்களால் நெற்றியில் பொட்டிட்டு வரவேற்கப்பட்டனர்” என்றாலோ, உண்மையாக அவர் கண்டு உரையாடியது பார்ப்பனர்களையே என்றும், அவர் நெற்றியில் பொட்டிட்டது அம்மாமிகளே என்றும் நாம் பொருள்செய்து கொள்ளுதல் வேண்டும். இராசாசியைத் தமிழ்க் குல முதியவராகவும், சங்கராச்சாரியைத் தமிழின முனிவராகவும் இவரனையர் கொண்டு பெருமை பாராட்டுவதும், பாதங்களைக் கழுவித் தண்ணிர் குடிப்பது உண்மையான தமிழன் எவனுக்கு வராத மானமிழப்புச் செயல்களாகும்.

இத்தகைய அகப்பகைவும் புறப்பகையும் உண்மைத் தமிழர்க்கு என்றும் இருப்பதால், தமிழின முன்னேற்றம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கைவராத ஒரு கவின்கலையாகவே இருந்து வருவது வருந்தற்குரியதும் உணர்ந்து திருந்தற்குரியதுமான ஒர் உண்மையாகும். தமிழர்க்குள் இன உணர்வை உண்டு பண்ண ஏதேனும் முயற்சி செய்தாலும், அல்லது தமிழ்மொழியை அதன் தாழ்ச்சி யமுக்கங்களினின்று விடுவிக்க முயன்றாலும் இவ்வகப் பகையும், புறப்பகையும் நம்மைத் தலையெடுக்க வொட்டாது தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சிகளே நம் வரலாற்றிலும் இலக்கியங்களிலும், ஆரிய ‘இதிகாசங்'களிலும், ‘புராணங்'களிலும் பெரும்பகுதியாகும். நாம் தலையெடுத்ததும், தலைகவிழ்ந்ததும் ஆரிய நூல்களில் தேவ –அசுரப் போர்களாக எழுதிவைக்கப்பட்டிருக்கும்; தமிழ் இலக்கியங்களில் தமிழ – வடவர் எழுச்சி வீழ்ச்சிகளாகப் பாடி வைக்கப்பட்டிருக்கும். ஆரிய நூல்களில் காணப்பெறும் முனிவரும், அரசரும், ஆடவர் பெண்டிரும் ஆரிய மதர்ப்பு மிக்கவர்களாகத் தோன்றுகின்ற அதேவேளையில், தமிழ் இலக்கியங்களில் உள்ள அரசரும், துறவியரும், ஆடவர் பெண்டிரும் ஆரியர்க்கு அடிமைகளாகவே நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு படைக்கப் பெற்றுள்ளனர். காரணம் கடைக் கழகக் காலத்திலேயே புலவர்களும், அரசர்களும் தொண்ணூறு விழுக்காடு ஆரிய அடிவருடிகளாகவே இருந்துள்ளனர். அவர்கள் அழுத்தி வைக்கப்பெற்ற ஆரியச் சேற்றிலிருந்து தமிழர்களால் இன்னும் தங்கள் இனத்தையும் மொழியையும் மீட்டுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு ஆழத்தில் இவ்வினம் புதைக்கப்படுமாறு துணை நின்றனர் என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இன்றுள்ள தமிழர் கையாள்கின்ற சமயங்கள், சாதிகள், பழக்க வழக்கங்களுளம் பெரும்பாலன ஆரியருடையனவே! பிற்காலச் சமயநூல்களிலன்றிக் கழகக் காலத்துள்ள நூல்களில், தமிழன் சமயத்தளைகளுள் இவ்வளவு கட்டுண்டிருந்தான் என்பதற்கு எவரேனும் ஒரு சான்று காட்ட முடியுமா ? இறைக்கொள்கை இருந்தது; முழு முதல் மெய்ப்பொருளைத் தமிழன் என்றும் மறுக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படையில் இற்றைத் தமிழன் போல் பல்லாயிரக்கணக்கான சமயப் பூசல்களை உண்டுபண்ணிக் கொண்டிருந்தான் என்று எவரேனும் கூறுதல் முடியுமா? இவற்றை ஈண்டு எதற்குக் குறிப்பிட நேர்ந்தது என்றால், தமிழன் எத்துறையில் விழிப்பற்றிருந்தானோ, ஆரியன் அத்துறையில் விழிப்போடிருந்தான்; தமிழன் எங்கெங்கு துரங்கத் தலைப்பட்டானோ, அங்கங்கெல்லாம் ஆரியன் விழித்துக் கொண்டிருந்தான். தமிழன் எவ்வெவரைப் பகைவர்களாகக் கருதினானோ அவரவர்களை யெல்லாம் ஆரியன் நண்பர்களாகக் கருதி வந்துள்ளான். தமிழன் எதில் எதிலெல்லாம் தன் பகுத்தறிவையும் தன்மானவுணர்வையும் இழந்துவந்தானோ அதிலதிலெல்லாம் ஆரியன் தன் அறிவையும், மானவுணர்வையும் செலுத்தத் தொடங்கினான். இந்த நிலை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளது, இனியும் தொடர விருக்கின்றது. தமிழினம் இப்படியே தூங்கிக் கொண்டும், ஏங்கிக் கொண்டும், வீங்கிக்கொண்டுமே இருந்தால், ஆரியவினம் இப்படியே நம் உள்ளுயிரை வாங்கிக் கொண்டும், ஒங்கிக்கொண்டுமே இருக்குமென்பதில் துளியும் ஐயம் இல்லை.

இவ்வுண்மைகளின் அடிப்படையில் எழுந்த சலசலப்புகள் தாம் அண்மையில் தமிழக அரசின்மேல் ஆரியர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள்.

இக்கால் தமிழக அதிகாரத்தையும் ஆட்சியையும் அரசியல் அமைப்புப்படி கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நாம் கூறிவந்த, வருகின்ற சில உயர்நிலை அரசியல் அமைப்பின்படி நடக்க முற்படவில்லையாயினும், இதன் முன்னிருந்த பேராயக் கட்சியின் அரசியல் ஆட்சிமுறைக்கு எவ்வகையிலும் தாழ்ந்து போய்விட்வில்லை என்பது நாம் இவ்வீராண்டுக் காலமாகப் பொறுத்திருந்து கண்ட ஒர் உண்மையாகும். இவ்வீராண்டுக் காலத்தில் இது செய்த அரசியல் திறம்பாடுகளோ, பொருளியல் முன்னேற்ற அடிப்படைகளோ பெரும்பாலும் நம் தமிழ்நாட்டிற்குத் தேவையான அளவில் இல்லை என்றாலும், இது செய்திருக்கின்ற குமுகாயப் புரட்சிக்கு நாம் இதனைப் பாராட்டியே ஆதல் வேண்டும். சென்னைப் பகுதிகளின் பெயர்களைத் தூய தமிழ் வடிவங்களாக மாற்றியது. ‘மதராஜ் என்ற தெலுங்குச் சொல்லினின்று திரிந்து வழங்கிய ‘மெட்ராஸ்’(Madras) என்ற ஆங்கிலச் சொற்பெயர் இத்தமிழ்நாட்டுக் குரிய பெயராக வழக்கிலும் சட்டத்திலும் ஆளப்பட்டு வந்ததை அடியோடு தகர்த்துத் ‘தமிழ்நாடு’ என்ற உரிமை வழக்குப் பெயரைச் சூட்டியது, ஆரியப் புரோகிதன் வேள்வி நடத்திய திருமணங்களே செல்லும் என்ற மனுநெறிவழி இந்தியச் சட்ட அமைப்பை அசைத்து, தமிழ் நெறி முறையில் நடைபெறும் திருத்தத் திருமணங்களும் செல்லும் என்று சட்டமாக்கியது, சாதிகுல முறையொழிப்பின் முதல் முனைப்பாகக் கலப்புத் திருமணங்களை ஊக்கியது, அரசினர் அலுவலகங்களில் எங்கும் தமிழ்மணங் கமழச்செய்தது. அலுவலக அதிகாரங்களில் பார்ப்பனராயிருந்தவர்களின் கொட்டம் ஒடுங்குமாறு அவர்களை மாற்றியும் இறக்கியும் நீக்கியும், அவ்விடங்களில் தமிழர் நலம் நாடும் அதிகாரிகளை அமர்த்தியும் தமிழர் நலம் பேணியது, உலகத் தமிழ் மாநாடு நடத்தி உலகிற்குத் தமிழின் ஏற்றம் உரைத்தது, உணவுப் பொருள் முடக்கும் குமுகாய முதலைகளின் வாயடக்க வயிறு கிழித்து உள்ளொளித்த பன்னூறாயிரம் மூட்டைகளை வெளிக்குக் கொணர்ந்தது. இந்தி யெதிர்ப்புக் கொள்கையை விடாப்பிடியாகத் தலைமேற் கொணர்ந்த தில்லியரசின் கழுத்துநரம்பு தெறித்து விழுமாறு தடுத்து நிறுத்தித் தமிழர்தம் தன்மானம் தலைநிறுத்தியது, மாணவர் பயிற்சிப்படையில் பத்தே பத்து கட்டளைச் சொற்களாயினும் அவை இந்தியில் இருந்தால் அந்தப் படையே தேவையில்லை என்று அற்றைப் பாண்டியனின் நெற்றுக்குரல் ஒலித்து நடுவணரசின் செருக்குக் கொள்கையை எற்றித் தள்ளியது. இன்னோரன்ன இன்னும் வியம்பப்படாதனவும், வெளியிடக் கூடாதனவுமாக தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலந்தேடு செயல்களையும் உணரின், இவ்வாட்சி பேராயக் கட்சியின் ஆட்சிக்கு நூறுபங்கு மேல் என்றே குரலோங்கிக் கூற வேண்டியுள்ளது. இவையன்றி இது செய்திருக்கின்ற சில துணிவான செயல்களைக் கொண்டு, இனிச் செய்யவிருக்கின்ற செயல்களிலும் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை என்றே கருதவேண்டி உள்ளது.

இனி, இவற்றிற்கெல்லாம் முடிவைத்தாற்போல், கல்வி நிலையில் நம் தமிழக அரசு செய்த சில நற்செயல்களும் உண்டு. அவற்றுள் இந்த ஆண்டு பள்ளி இறுதித்தேர்வுக்காக வைக்கப் பெற்றுள்ள தமிழ்ப் பாட நூலின் அமைப்பும், அந்நூற் கட்டுரை வரிசையுள் முதலாம் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ள தனித்தமிழ்த் தலைவர் திரு. மறைமலையடிகளின் தமிழ்த்தாய் என்ற கட்டுரையுமாகும். இக்கட்டுரையில் பயிலப்பெற்ற கருத்துரைகளுக்காகவும், பன்னிரண்டு முறை பயின்றுள்ள ‘ஆரியம்’ என்ற சொல்லுக்காகவும் பார்ப்பனர் ஆடிய ஆட்டமும், குதித்த குதியும், கொதித்த கொதியும், கரைத்த கரைவும், கத்திய கத்தலும், எழுதிய எழுத்தும்... அடடா! தமிழர்க்குத் தாம் எத்துணையளவு தன்மானத்தீயை எழுப்பி விட்டன! இவற்றை யெல்லாம் கண்டுங் காணாது போலிருந்து உடலை அலப்பிக் கொள்ளாமல் வாளா விருந்து தமிழக அரசு எத்துணைப் பெரிய வெற்றிமாலையைச் சூட்டிக்கொண்டது! அடிகளார் எழுதிய தமிழ்த்தாய் கட்டுரைகூட கொஞ்சம் தண்ணென்றிருந்தது. அடிகளாரின் பணிபோன்ற குளிர்மையான செந்தமிழ்ச் சொற்களே இவ்வாரியப் பார்ப்பனர்களை இத்துணை அளவில் சூடேற்றுமானால், ‘தென்மொழி’ ஆசிரியவுரைகளில் பயிலப் பெறும் சொல் நெருப்புத் துண்டங்கள் அவர்களை எவ்வளவு கொதிப்பேற்றுமோ, நாம் அறியோம்? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரியப் பார்ப்பனர்களின் ஒவ்வோரெழுச்சியும் தமிழரில் ஒராயிரம் பேர்களைத் தன்மான வுணர்வுடையவர்களாக்கும் ஆற்றலுடையது. ஆரியன் குருதிச்சூடே அவ்வளவில் தோன்றுமானால் தமிழன் குருதிச்சூடு அளவுமானியை உடைக்குந்தன்மை யது என்பதை ஆரிய இனத்துளார் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஆரியர்தம் உள்ளழும்புகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்களும் அவர்களுக்குத் துணைபோகும். சுப்பிரமணியப் பிரகலாதன்களும் உணர்ந்துகொள்ளுவார்களாக.

திரு. திருவாட்டி என்ற சொற்கள்தாம் இனிப் பயிலப்பெறுதல் வேண்டும் என்று அரசு கட்டளையிட்டிருந்தும், சென்னைத் தினமணிப் பார்ப்பனர் ‘ஸ்ரீ’ என்ற சொல்லை இன்னும் விடாப்பிடியாக எழுதி வருவதுபோன்ற ஆரியப் பிடிகளைத் தளர்த்திக், குமுகாய, மொழி, நாட்டு அமைப்பில் அவர்கள் தம் இன, சாதிப் பூசல்களை அறவே கையை விட்டுத் தமிழர்களுடன் ஒரு பொதுமை உணர்வைக் கைக்கொண்டு வாழ்ந்தாலொழிய, இனித் தமிழகத்தில் அவர்கள் அமைதியையே காணமுடியாத ஒருநிலை வளர்ந்துவிடும் என்று எச்சரிக்கின்றோம். மதுரையினின்று வெளிவரும் தினமணி மட்டும் மதுரைத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் தலையீட்டின்பின் ‘ஸ்ரீ’யைத் தவிர்த்துத் ‘திரு’வையே வாழவைத்துள்ளது. சென்னைக் கல்லூரி மாணவர்கள் இது பற்றி வாளாவிருப்பதால் ஒருவேளை சென்னைத் தினமணி ‘ஸ்ரீ’ரியை சிரிக்க வைத்திருக்கலாம்.)

இனி, தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ‘தெய்வப்பட நீக்கச் சுற்றறிக்கை’ ஆரியர், ஆரியத்தமிழர் ஆகிய இரண்டு திறத்தாரிடமும் எழுச்சியை ஊட்டியுள்ளது. சமய வெறியில் ஆரியத் தமிழரும் ஆரியரும் ஒரே ஆற்றில் ஊற்றுப் பறித்தவரே ஆவர். இவ்வொரு வழி கொண்டே ஆரிய மாயையினின்று தமிழர் இன்னும் விடுபட முடியவில்லை. இறைக்கொள்கையை வீடு, வாசல், முற்றம், தெரு, காய்கறிக்கடை, அலுவலகம், எல்லா இடங்களிலும் இழுத்துக் கொண்டு திரிந்தால்தான் வீடுபேறு எளிதில் கிடைக்குமோ? மலந் தின்னும் பன்றி, சேற்றில் புரளும் எருமை, மூட்டை சுமக்கும் கழுதை, பிணந்தின்னும் கழுகு, உடலைக்கொத்தும் புழு முதலிய எல்லாவகை உயிர்களிடையிலும் வேற்றுமையிலாது விளங்கும். இறைப்பேரருள் அலுவலகங்களில் படப்படைப்பு செய்யாது போனால் அவனை வீட்டுக்கினின்று தலைகுப்புறத் தள்ளிவிட்டு விடுமோ ! எல்லாம் வல்ல மெய்ப்பொருளன் உண்மை உணராத போலிக் கடவுள் கொள்கையரே இத்தகைய குமுகாயத் திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்புக் காட்டுவர். உண்மைத்தமிழர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழில் எப்படி வடமொழிக் கலப்பு ஏற்பட்டு எவ்வாறு மெய்ம்மைத் தமிழையும் அதன் எழிலையும் தமிழன் காணமுடியாது போயிற்றோ, தமிழ் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் எப்படி ஆரியக் கலப்பேற்பட்டு மெய்ம்மைத் தமிழ்ப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அவற்றின் சிறப்புகளையும் தமிழன் அறியமுடியாமற் போயிற்றோ, அவ்வாறே தமிழரின் இறைக்கொள்கை – கடவுட் கொள்கையிலும் ஆரியக் கொள்கை கலப்புற்றுச் சமய ஆரவாரங்களை உண்டாக்கிவிட்டது என்பது மறுக்கவியலாத உண்மை. காலமும் இடமும் வாய்க்கும் பொழுது இவை பற்றியும் அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசுவோம்.

ஈண்டு இவ்வுண்மைகளால் புலப்படுத்த வந்தவை இரண்டு. “தமிழ்த்தாய்”க் கட்டுரை எதிர்ப்பு ஆரியப் பகைவர்களை மட்டும் கொதித்தெழச் செய்வானேன்? “தமிழக அரசின் தெய்வப்பட நீக்கக் கொள்கை” ஆரியப் பகைவர்களையும், வீடணத்தமிழரையும் கொதித்தெழச் செய்வானேன்? இவ்விரண்டு கேள்விகளுக்கான விடைகளில் தாம் தமிழனின் உண்மையான தன் மானம் புதைக்கப்பட்டுக் கிடக்கின்றது. அவன் வரலாறு மறைந்து கிடக்கின்றது. உண்மையான தமிழக மறுமலர்ச்சிக்குப் பாடுபடும் தமிழன் ஒவ்வொருவனும் எண்ணி, ஆராய்ந்து, தெளிய வேண்டிய உண்மைகள் இக்கேள்விகளிலேயே இருப்பதால், அக்கட்டுரை பற்றியும், இப் படநீக்கக் கொள்கை பற்றியும் நாம் விரிவாகப் பேசவில்லை. ஆனால் இவ்விரண்டு கொள்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு தான் எண்ணியதைச் செய்தே தீரவேண்டும் என்றும், எவர்க்கும், எதற்கும் இனி அஞ்ச வேண்டுவதில்லை என்றும், தமிழனின் உள்ளுயிர்ப்பும் தமிழக மறுமலர்ச்சியும் மிக அண்மையிலேயே தோன்ற விருக்கின்றன என்றும் அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

– தென்மொழி, சுவடி : 6, ஒலை : 5–6, 1968