ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/வாரியும் பூரியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
வாரியும் பூரியும்!

விடுதலை பெற்ற ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சட்டமும் வரலாறும் நமக்குக் கூறுகின்றன. ஆனால் உண்மையில் நாம் பலவகையாலும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம் என்று எண்ணி மனங்குமுற வேண்டியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் பற்றியும் உலக ஒற்றுமை பற்றியும் அரசியல் வாணிகர்கள் வானளாவப் பேசுகின்றனர். ஆனால் மக்கள் இன்னும் காட்டு விலங்காண்டிகளாகவே இருந்து வருவதைப் பார்த்து உளம் புழுங்க வேண்டியுள்ளது. ஒருபுறத்தே ஒருமைப்பாட்டின் உளறல்; மறுபுறத்தே குல மதக் கொடுமைகளின் கீழ்மை! மக்களைச் சமநிலைப்படுத்தும் முயற்சி ஒருபுறம்; மக்களுக்கு இழிவுசாற்றி அடிமைப்படுத்தும் தீமைகள் மறுபுறம், மதப் பித்தங்களும் குலவெறிகளும் இவ் விந்திய நாட்டை உலகத்தின் சாய்க்கடையாக மாற்றியிருப்பதைக் கண்டு நாண வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆரியாவர்த்தம், பாரத நாடு, மெய்யறிவுப் பிறப்பிடம் எனப் பெருமையாகப் பேசப்பெறும் இந்நாட்டைப் போல் கேடுகெட்ட நாடு உலகில் வேறு எங்கும் இல்லை என்று கூறும் வகையில் இங்கு ஒழுக்கக் கேடுகளும் வாழ்க்கைப் புரட்டுகளும் மண்டிக் கிடக்கின்றன. ஆரியப் பார்ப்பனர்களின் நச்சுரைகளால் இந்நாடு தூய்மையிழந்து ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளாகின்றன. அவர்தம் பொய்யுரைகளும் புரட்டுச் செயல்களும் இந்நாட்டு மக்களை மீளா அடிமைச் சேற்றிலும் அருவருப்புப் படிகுழியிலும் அழுத்தியிருக்கின்றன. முகமதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள நூல்கள் எதிலுமே குறிப்பிட்டிராத ‘இந்து’ என்ற ‘கற்பனைக் கலவை மதத்’தினால் இந்தியாவே தூய்மை யிழந்து கிடக்கின்றது. மக்களிடையே கலந்த இந்துமதம் என்னும் நச்சாறு துர்க்கப்பெற்று இந்நாடு தூய்மையுறுவது இயலுமா என்று எண்ணிக் கவலையுற வேண்டியுள்ளது. ஆரியப் பார்ப்பனர்கள் வித்திய நச்சு மரங்கள் பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அவர்கள் பின்னிய மதவலைகளும், ‘சாதி'க் கண்ணிகளும் மீண்டும் மக்களிடையே பரப்பப்பெற்று வருகின்றன. ஓயாத பெருமுயற்சி, ஒழியாத அழிவுவேலை, இங்குள்ள கோயில் பார்ப்பான் முதல் தில்லி, அரசியல் பார்ப்பான் வரை வரிந்து கட்டிக்கொண்டு தங்கள் ‘வேத’ ‘புராண’ ‘இதிகாசங்'களை யெல்லாம் காத்தே தீர்வதென்றும், தங்கள் புளுகுரைகளுக்கு எவ்வாறேனும் அரண்கட்டியே முடிப்பதென்றும் முயன்று வருகின்றனர். இத்தகைய முயற்சிகளுக்குத் துணையாக நிற்பவர்களுள் திருவாளர் கிருபானந்தவாரியையும், பூரி – சங்கராச்சாரியையும் பற்றி ஒருசில கூறுவோம்.

வாரியார் தமிழர்; மதப்பித்தர்; ஆரிய அடிவருடி முருகன் பெயரால் ஆரியப் பார்ப்பனர்களின் பொய் புரட்டுகளுக்கு உரமேற்றிக் கொண்டிருப்பவர். ஊர்தோறும் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் கொடுக்கும் பெருஞ்செல்வத்தால் தின்று கொழுத்துத் தெருத் தெருவாய் நின்று கதைபாடி ஊரைக் குட்டிச் சுவராக்கி வருபவர். புனிதக்கதைகள் என்ற பெயரில் ஆரவார அருவருப்புகளை ஒன்றுமறியா ஏழை மக்கள் மனங்கொள்ளுமாறு நயமும் நகைச்சுவையும் தோய்ந்த தழுதழுத்த குரலில் அன்றாடம் சொல்லிச் சொல்லி இத் தமிழகத்து மக்களையெல்லாம் பார்ப்பனப் பயிர்களுக்கு உரமாக்கி வருகின்றவர். இவரைப் போன்ற தமிழர் அரசியல், கலை, வாணிகம், அரசினர் அலுவர்கள். போன்ற எல்லாத் துறைகளிலும் உளர். அவ்வத் துறைகளிலும் வல்ல வீடணப், பிரகலாத, பக்தவத்சல, சுப்பிரமணியன்கள் ஒவ்வொரு நாளும் தந்தத் திணிப் பகைகளை நிரப்பப் பார்ப்பனத் திருவேலைகளை மறவாமல் செய்து வருகின்றனர். பார்ப்பனர்களுக்குத் துணைநிற்கும் இக் காட்டிக் கொடுப்பான்களாலும் குயக்கொண்டான்களாலும் ஆரியம் மீண்டும் தலைதூக்கி வருவது தமிழகத்திற்கு மட்டுமன்றி இவ்விந்திய நாட்டிற்கே பெருங்கேட்டை உண்டாக்கப் போகின்றது. ஆரியப் பார்ப்பனத் தலைவர் இராசாசி ஒன்றிலும் ஈடுபடாமல் பற்றற்ற துறவிபோல் இருந்து இத்தனை முயற்சிகளுக்கும் எருவிடுவோராகவும் இயக்குநராகவும் இருந்து பழந்தமிழ்க் குமுகாயத்தையே அழிக்கக் காலம் பார்த்திருப்பதுடன் இவ்விந்திய நாட்டையே அடிமை கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றார். “வர்ணானாம் ப்ராஹ்மணே குரு” என்றபடி அவர் பார்ப்பனர்க்கு மட்டுமன்றி இந்துமத வெறியர் . எல்லார்க்குமே அரசியல், இனத் தலைவராக உள்ளார். தமிழர்க்கும் . பிற இந்தியர்க்கும் தன்மானம் குன்றி இருப்பதால் அவர்கள் இப் பார்ப்பன நரி ஊளையிடுவதை எல்லாம் ‘வேதம்’ போல் கருதிப் பின்பற்றிவரத் தொடங்குகின்றனர். அரசியல் அதிகாரங்களில் உள்ள தமிழர்களுட் சிலருங்கூட அவர் கருத்துரைகளுக்குப் பெருமதிப்புக் காட்டி வருகின்றனர் என்றால் வேறு கூறுவானேன்?

இனி, வாரியாரைப் போலும் ஆரிய அடிமைகள் ஒருபுறம் தமிழர் உருவில் தமிழர்களையும் பிறரையும் கெடுத்துக் கொண்டிருக்க, பூரி சங்கராச்சாரி போன்ற பச்சைப் பார்ப்பன மடத்தலைவர்களும், ஆரிய நச்சுக் கருத்துகளை உதிர்க்கத் தலைப்பட்டுவிட்டனர். தீண்டாமை பற்றியும், இந்துமதக் கோட்பாடுகள் பற்றியும் அவர் அண்மையில் கூறியவை பார்ப்பணியம் இன்னும் அழிந்துபோக வில்லை; உயிர்த்துக் கொண்டுதான் உள்ளது என்பதை நமக்கு நன்கு நினைவூட்டுகின்றன. ‘சாதி’க் கொடுமைகளை இந்நாட்டில் வித்தூன்றிய இந்துமதமும், அதன் அடிப்படைகளான ‘வேத’ ‘புராண’ ‘இதிகாச'க் குப்பைகளும்ம அடியோடு ஒழிந்து போகதவரை, இந்நாடு விடுதலை பெற்றதாகக் கூறிக் கொண்டிருப்பதில் எள்ளத்துணையும் பொருளில்லை. தீண்டாமை என்னும் கொடுமை இன்று நேற்றன்று, கடந்த பன்னூறு ஆண்டுகளாக இந்நாட்டைச் சீர்குலைத்து வருகின்ற கொடிய தொற்றுநோயாகும். அந் நோயின் நச்சுக் காற்றால் துயருற்ற மாந்தரினம் பலகோடி நிலாத் தரையில் மாந்தன் காலடி பதிகின்ற இவ்வறிவியல் காலத்து, இக் குடியரசு நாட்டில் இந்துமதத்தின் தலைவர் என்று விளம்பரப்படுத்தப்பெறும் ஒருவர் தருக்குற மொழிந்த, சட்டத்திற்குப் புறம்பான இம்மொழிகளைக் கேட்டுக் கொண்டு இங்குள்ள அமைச்சர்களும் மக்களும் வாளாவிருக்கின்றனர் என்று சொன்னால், ஒன்றால் அவர்கள் ஆரிய வல்லடிமைகளாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவர்கள் பெருத்த கோழைகளாக இருத்தல் வேண்டும். குமுகாயக் கொத்தடிமைகள் நிறைந்து விளங்கும் இந்நாடு அரசியல் விடுதலை பெற்றுவிட்டது என்பது எத்துணை இழிவு? எத்துணைப் பேதைமை? இந்துமதப் பூசல்களும் வரணாசிரமப் பாகுபாடுகளும் உள்ளவரை இந்நாட்டில் ஒவ்வொரு குலமும், ஒவ்வொரு கூட்டமும் தனித்தனியான பகையினங்களே.

“வேத காலத்தில் உள்ள ஆரிய ஒழுக்கங்களை அப்படியே இனியும் கடைப்பிடித்து வருவேன்’ என்று பேசும் கொழுப்புரை இவ்விந்தியக் குடியரசின்மேல் இட்ட சமட்டியடியாகும்; மக்கள் நாகரிகத்திற்கிட்ட சூளுரையாகும்; உலக ஒற்றுமைக்கு அடிக்கப்பெற்ற சாவுமணியாகும். பார்ப்பனியத்தின் வலிந்த வேற்றுமைக் கைகளால் பரந்துபட்ட மக்களை ஒன்றாக இணைத்துவிடத் துடிக்கும். நடுவணரசின் அறியாமையை என்னென்பது? வாரியார்களும் பூரியார்களும் செல்வ வலிவுற்று இந் நாட்டு மக்களை மடயர்களாகவும், கொடுமையாளர்களாகவும் ஆக்குகின்ற முயற்சி இந்நாட்டின் முன்னேற்றங்கள் அத்தனையையும் தடுத்து நிறுத்தும் பேரணையாகும். இத்தகைய வல்லணைகளை உடைத்துத் தகர்க்காமல் இவ்வரசாட்சியில் சட்டங்களுக்கு ஒரு கேடா? அமைச்சர்களுக்கு ஒரு தேவையா?

‘தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என் பிறப்புரிமை’ – என்று பேசுமளவிற்கு அவருக்குத் துணிவைக் கொடுத்தவர் யார்? அவர் கடைப்பிடிக்க விரும்பும் தீண்டாமை எத்தகையது? வேதக் காலத்தில் நான்கு வரணத்தார்களும் நான்கு வகையான உடை உடுத்தியிருந்தார்களாமே அத்தகைய வண்ண உடைகளையே பூரியார் உடுக்கச் சொன்னாலும் நாம் வியப்படைவதற்கில்லை. (The Social distinction of Vedic times were those of occupation and of colour (Varna) which implied race, marked also by a difference of dress, white for Brahmins, red for Kshatrias, yellow for Vaisyas and black for Sudras–Short History of India – E.B. Havell)

மநுவினால் கூறப்பெற்ற ஒழுக்கங்களே இனிக் கடைப்பிடிக்கத் தக்கனவாகும் எனப் பூரியார் முழங்குகிறாரா? பொதுவிடங்களில் தீண்டப்படாதாரை நடக்கவிடக் கூடாது என்பது அவர் எண்ணமா? ‘இந்துக்கள்’ நடக்கும் தெருக்களில் வரும் தீண்டப்படாதவர்க்ள் இனிப் பண்டை முறைப்படி கழுத்திலோ மணிக்கட்டிலோ ஒரு கறுப்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் வருதல் வேண்டுமா? பண்டையில் (மிகவும் அண்மைக்காலம் வரை) பூனாவில் உள்ள தீண்டப் படாதவர்கள் தாங்கள் தெருவில் நடக்கும்பொழுது எழும்புகின்ற தூசுகள் பட்டு, இந்துக்கள் தீட்டடையாதிருக்கும் பொருட்டு, தங்கள் முதுகுப்புறங்களில் நீண்ட துடைப்பக் கட்டைகளைச் சுமந்து திரிந்தார்களே, அதுபோலவே இனியும் திரியவேண்டும் என்பது பூரியின் கருத்தா? அவர்கள் துப்புகின்ற எச்சில்களை மிதித்துத் தீட்டுப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்கள் கழுத்துகளில் எச்சில் படிக்கங்களைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு. சென்றார்களே, அவ்வகையில்தான் தீண்டப்படாதவர்கள் இனி நடமாடவேண்டும் என்பது பூரிப் பார்ப்பானின் எண்ணமா? இல்லை மது தன் நூலில் கூறியிருப்பது போல், ‘சண்டாளர்கள்’ ‘பிரதிலோமர்கள்’ ஆகிய ‘பாகிய’ சாதியினர் (தீண்டத்தகாதவர்கள்) நகரத்திற்கு வெளியே சுடுகாடு, மரத்தடி, தோப்பு, மலைப்புழை இவற்றில் குடியிருக்க வேண்டுமா? (மநு 10–50) குடவம்(பித்தளை) முதலிய மாழை(உலோக) ஏனங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தாமல் (மநு : 10–51) உடைந்த மண்சட்டிகளில்தான் (மநு : 10–52, 54) உண்டுவர வேண்டுமா? பிணத்தின் மேலிட்ட ஆடைகளை அணிந்துகொண்டு (மநு : 10–52) நாய், கழுதை முதலியவற்றைத்தான் வளர்க்க வேண்டுமா? மாடு முதலியவற்றை வீடுகளில் வளர்க்கக் கூடாதா? (மநு : 10–5)

இவை தவிர ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஏற்றம் தருகின்ற மது நூலின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றாரா பூரி மடத் தலைவர்? அவ்வாறெனில், “கருவூலம் கொள்ளை போனலும் பிராமணர்க்கு (அரசர்) இடையூறு செய்யக் கூடாது; ஏனெனில் பிராமணரின் வருத்தமும சினமும் அரசனின் படைகளையும் ஊர்திகளையும் அழியச் செய்துவிடும்” (மநு 9–313); “தீய செயல்களுடையவராயினும் பிராமணர்கள் போற்றற்குரியவர்களே” (மநு 9–319); “பூனூல் முதலிய பிராமணர் அடையாளங்களைப் பூணுகின்ற பிறரை அரசன் உறுப்புக் குறைப்பு (அங்கசேதம்) செய்து விட வேண்டும் (மநு : 9–224);” பிராமணர் பிற இனத் தொழிலாளரிடமிருந்து அவர்கள் உடைமைகளை வலிந்து பிடுங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு அப்பொருள்கள் என்றும் உரிமை யுடையன அல்ல” (மநு : 8–415) “பிராமணர்க்குத் தலையை மொட்டை அடிப்பதே உயிர்த்தண்டனை ஆகும்; பிற சாதியார்க்கு உயிரைப் பறித்தே ஆகவேண்டும் (மநு : 8–378); அரசியல் ஒவ்வொரு நாளும் மூன்று வேதங்களையும் ‘தர்ம’ நூல்களையும் கற்றுணர்ந்த பிராமணரின் கருத்துப்படியே நடைபெறவேண்டும் (மநு : 7–37)” என்பவற்றையும் இவை போன்ற பிற ஒருதலையான – கொடுமையான கட்டளைகளையும் அரசினரும் மக்களும் கடைப்பிடித்தொழுகுவதே தக்கது என்பது பூரியாரின் உட்கிடையோ?

பூரி சங்கராச்சாரியின் நினைவில் தீண்டத்தகாதவர்களாகக் கணக்கிடப் பெறுபவர் யார் யார்? வரணாசிரம முறைப்படி சண்டாளனும் (சூத்திரன் ஒருவனுக்கும் பிராமணப் பெண் ஒருத்திக்கும் பிறந்தவன்) க்ஷத்தாவும், (சூத்திரனுக்கு க்ஷத்திரியப் பெண்ணிடத்தில் பிறந்தவன்), அயோகவனும் (சூத்திரனுக்கு வைசியப் பெண்ணிடம் பிறந்தவன்) மேற்கூறிய சண்டாளனும், க்ஷத்தாவும், அயோகவனும் முறையே தந்தம் இனப் பெண்டிரிடத்தும், நால்வரணப் பெண்டிரிடத்தும் பெற்ற பதினைந்து வகையான மக்களும், ஆகப் பதினெட்டுவகைச் சாதியாரே தீண்டப்படாத பாகிய சாதியினர் என்று மது குறிப்பிடுகின்றார். பூரியும் அவர்களைத்தான் தீண்ட மாட்டேன் என்று குறிப்பிடுகின்றாரா? இவர் குறிப்பிடுபவர்களுக்கு என்ன அடையாளங்கள்? பூரி சங்கராச்சாரியின் தாய் இங்குக் குறிப்பிடப்பெற்றிருக்கும் ஓரினத்தானிடமும் அவரைப் பெற்றெடுக்க வில்லை என்பதற்கு என்ன உறுதி கூறிவிட்டுப் போயிருக்கின்றாள்? அல்லது இவர் குறிப்பிடும் தீண்டத்தகாதவர்கள் எல்லாரும் மநு எழுதிவைத்த வகைப்படி பிறந்தவர்கள்தாம் என்பதைக் கண்டுபிடிக்கப் பூரியார் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றார்? இவருக்கு இத்தகைய வேலையைக் கொடுத்த அதிகாரி யார்? ஒருவனைத் தீண்டத்தகாதவன் என்று கூறப் பூரிப் பிராமணனுக்கு எவர் அதிகாரம் கொடுத்தவர்? இந்த ஆளின் மேல் பிழையில்லை. இப்படிப்பட்ட ஒருவரை, சாதி வெறியரை இன்னும் நார் நாராகக் கிழித்தெறியாமல் வைத்திருக்கின்றார்களே அவர்களின் மேல்தான் பிழை ! “தீண்டாமையைக் கடைப்பிடிப்பேன்” என்று கூறிய இவர் வாயில் மநுவின் முறைப்படி, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாலும் குற்றமில்லை. தென்னகத்து மண்ணில் இவர் கால் வைப்பாரானால் ஒருகால் அது நிறைவேறலாம்.

பிராமணீயம் என்றைக்கும் சாகாத ஒரு நச்சுக் கொடி. அது வேருடன் கல்லி யெறியப்பட்டாலொழிய இந்நாட்டிலுள்ள மக்கள் முன்னேறப் போவதில்லை. காந்தியாரின் பெயரைக் கூறிக்கொண்டும் கைந்நூல் நூற்றுக்கொண்டும் இராம வழிபாடுசெய்து பிழைக்கும் அநுமன்கள் இந்நாட்டில் உள்ளவரை பிராமணியம் இருந்துகொண்டு தான் இருக்கும். பேராயக் கட்சியே பிராமணியத்திற்குத் தீனி போடுவது. இராசாசியின் உரிமைக் கட்சியே பிராமண உரிமையைக் கட்டிக் காப்பது. இக் கட்சிகளில் உள்ளவர்களின் துணிவாலேயே வடநாட்டுப் பூரியாரும், தென்னாட்டு வாரியாரும் தம்தம் வினைப்பாடுகளை மிகத் துணிவாகவும், மிக விரிவாகவும் செய்து வருகின்றனர். மற்றப்படி அறிவியலும் மாந்தவுரிமையும் மிகவும் உயர்ந்து விளங்கும் இக்காலத்தில் இவர்கள் இந்த வகை வெறிக் கூத்தும் பேயாட்டமும் ஆடியிரார். தமிழர்கள் இந்நிலையில் ஒன்றைக் கருத்தாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் வடதிசைப் பக்கமிருந்தே வந்துள்ளன. வேதகால ஆரியச் சூழல் இன்னும் அழிந்துவிடவில்லை. சமற்கிருதம் ஒருவேளை இந்திமொழிக்கு மாறாக ஒருமைப்பாட்டிற்குகந்த மொழியென்று வடவாரிய அரசால் கொள்ளப்படினும் கொள்ளப்படலாம். இந்தியத் தலைமையிடத்தை அடுத்தபடி ஒர் ஆரியப் பார்ப்பனன் பெற்றாலும் நாம் வியப்பதற்கில்லை. கூட்டுணர்வோடு ஆரிய பார்ப்பனர்கள் ஆற்றுகின்ற இனப் போராட்டம் மீண்டும் வெற்றி பெறுமானால் தமிழன் தன் இனத்தையே மறந்துபோக வேண்டியதுதான். ஏனெனில் தமிழனின் உள்ளத்தே இன்னும் இனவுணர்வும் மொழியுணர்வு இளமைப் பருவத்திலேயே உள்ளன. அவன் மூளையும் குல மத மயக்கங்களால் நன்றாகச் சிதைக்கப்பட்டு உள்ளது. அவன் மனத்தில் தூவப் பெற்ற வேற்றுமை வித்துகள் அங்கும் இங்கும் முளையிட்ட வண்ணமாகத் தான் உள்ளன. தமிழனிடத்து அவ்வப்பொழுது தலைதூக்கும் ஒற்றுமை உணர்ச்சிகளை ஊடுருவி அழிக்க இன்னும் பார்ப்பனர்கள் முனைந்துகொண்டுதான் உள்ளனர். இந்நிலையில் தமிழன்தான் பார்ப்பானாகிக்கொண்டு வருகின்றானேயன்றி ஒரேயொரு பார்ப்பானோ பார்ப்பனத்தியோ தமிழுணர்ச்சி பெற்றுவிடவில்லை. பார்ப்பன வெறுப்புக் குறைந்துபோன தமிழனைப் பார்க்க முடிகின்றதே தவிரப் பார்ப்பனியப் பற்றுக்குறைந்த ஒருவரையே காண முடியாத பொழுது, தமிழ்ப்பற்று மிகுந்த ஒரு பார்ப்பன உயிரைப் பார்ப்பது மிகவும் அரிதாகின்றது. பார்ப்பனர்தம் இன வழக்கத்தை விடாதவரை பார்ப்பனியம் என ஒன்று இருக்கவே செய்யும்.

எனவே தமிழர் இனவொற்றுமை பெறாமல் நாட்டுக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ வந்த அல்லது வருகின்ற எத்துணைச் சிறிய தீமையையும் அகற்றிவிட முடியாது. தமிழர் இனவொற்றுமை பெற வேண்டுமாயின் அவர்கள் தம்மிடம் உள்ள குலவேற்றுமைகளை அடியோடு களைந்துதானாக வேண்டும். மதச் சுவர்களையும் சாதிச் சுவர்களையும் அப்படியப்படியே வைத்துக்கொண்டு நாம் இன நலத்தைப் பேணிவிட முடியாது. நமக்குள் ஒருவரை யொருவர் பகைத்துக்கொண்டு நம் எதிராளியிடமிருந்து வரும் தீமைகளைப் போக்கிவிடுதல் என்பது அறியாமையாகும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளிச் செயலாகும். நம் சாதிச் சழக்குகளை வேரறக் களைந்தாலன்றி நாம் வெற்றியடையப் போவதில்லை. ஆரியப் பார்ப்பனரின் இனவொற்றுமையையும் அவர்தம் அடிப்படைக் கொள்கைகளையும் பார்த்த பின்னாகிலும் நாம் நம் குல இழிவுகளைப் போக்கிக் கொள்ளாமல் இருப்பது நம்மை எத்தனைக் காலமானாலும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டுக் கொள்ள முடியாமலேயே செய்யும். இதனையுணர்ந்து செயல்படுவோமாயின் நம்மிடை எத்தனை வாரிகளும் பூரிகளும் முளைத்தாலும் அவர்கள் பயனற்றுப் போவார்கள் என்பது திண்ணம். எண்ணிச் செயற்படுவோமாக.

– தென்மொழி, சுவடி : 7, ஒலை : 3, 1969